கலைக்களஞ்சியம்/இந்திய ஊழியர் சங்கம்

இந்திய ஊழியர் சங்கம்12–6–1905-ல் கோபாலகிருஷ்ண கோகலேயால் பூனாவில் நிறுவப்பட்டது. இதன் அங்கத்தினர்கள் தமக்கெனப் பொருளீட்டும் வேலையில் ஈடுபடாமல், இச்சங்கம் அளிக்கும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, இந்தியாவிற்கு ஊழியம் செய்வதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காகச் சட்ட வரம்பிற்குட்பட்ட வழிகளில் தங்கள் ஆயுட்காலம் வரை தொண்டாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் நோக்கமும் உள்ளவர்களே இச்சங்கத்தில் அங்கத்தினராகச் சேரலாம். இதன் தலைமைக் காரியாலயம் பூனாவில் உள்ளது. சென்னை, பம்பாய், அலகாபாத், நாகபுரி முதலிய இடங்களில் கிளைக் காரியாலயங்கள் உண்டு. இச்சங்கத்தின் ஆதரவில் பூனா சேவாசதனம் முதலிய சமூகத் தொண்டாற்றும் நிலையங்கள் ஏற்பட்டுள்ளன. மலையாள நாட்டில் இச்சங்கம் செய்துள்ள சேவை சிறப்பானது. சாதி வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத சமூக ஊழியச் சங்கமாக இது விளங்குகிறது. இது ஹிதவாத என்னும் ஆங்கிலப் பத்திரிகை யொன்றை நாகபுரியினின்றும் வெளியிடுகிறது.