கலைக்களஞ்சியம்/இந்திரன்

இந்திரன் இந்து வேத காலத் தெய்வங்களுள் முதன்மையானவன். வாயு மண்டல நிகழ்ச்சிகளுக்குத் தேவதை. இடி இவனது படைக்கலம். இவன் மின்னலால் இருளைப் பிளந்து வெல்பவன்; உலக முழுவதையும் ஆள்பவன்; எல்லாவற்றையும் காண்பவன், கேட்பவன். மக்களுடைய உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும், நெஞ்சில் மேன்மையான தூண்டல்களையும் எழுப்புபவன். போரில் என்றென்றும் வெற்றி பெறுபவன். பகையை வெல்லுவதற்குத் தன்னை வழிபடும் மக்களுக்குத் துணை செய்பவன். ஒளிமிக்க பொன் தேரிலே ஊர்பவன். சோமபானத்தில் பெருவிருப்பமுடையவன். புராண வரலாற்றின்படியும் தேவர்களுக்கு அரசனாக அமராவதியில் வசிப்பவன். ஆயினும், பிரமன், விஷ்ணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்குத் தாழ்ந்தவன். கிழக்குத் திக்குக்குக் காவலன். இடியையே படையாகக்கொண்டு அசுரருடன் போர்புரிபவன். ஆயினும் வேத காலத்திற்போல வெல்வதேயன்றித் தோல்வியும் அடைகின்றான். இவன் ஒழுக்கத்தினின்றும் விலகுகின்றான்; அகலியையிடம் நெறிதவறினான். இராவணனுடைய மகன் மேகநாதனிடம் தோல்வியுற்றான். கிருஷ்ணனோடு சண்டையிட்டு அவனால் செருக்கடங்கினான். இவன் மனைவி இந்திராணி. அவளுக்குச் சசியென்றும் பெயர். இவன் மைந்தரில் ஒருவன் சயந்தன். இந்திரன் ஊர்வது ஐராவதம் என்னும் யானை.