கழுமலப்போர்/களக்காட்சி

5. களக் காட்சி

தேர்க்குடையில் யானைத் தடக்கை

தேர்ப்படையை முன்னிறுத்தி முன்னேறி வந்தது யானைப் படை. பகைவர் படைக் கலங்கள் ஊடுருவ எளிதில் உருக்குலையா உறுதி வாய்ந்தது தேர்ப்படை. அவற்றிற்கு அழகளித்து நின்றன அவற்றின் மீது கட்டப்பெற்ற வெண் கொற்றக் குடைகள், தேர்ப்படைக்குச் சிறப்பளிப்பன அவற்றின் குடைகளே என்பதைப் பகைவர் படை வரிசையில் முன்னிற்கும் வாள்வீரர் கண்டுகொண்டனர். அவர் கையில், களம்பல கண்டு வென்று வீறுபெற்ற விழுச்சிறப்பால் விளக்கம் பெற்ற வாட்படை. உள்ளத்தில் மலையே எதிர்க்கினும் மலைக் காத உரமும் ஊக்கமும். இவற்றை உறுதுணையாக் கொண்டமையால் அவ்வாட்படை வீரர், எதிர்வரும் தேர்ப்படையின் திண்மை கண்டு திகைப்புறது முன்சென்று தாக்கினர். தேர்ப்படை அழிந்தது. தேர்ப்படை அழிவுகண்டும் வீரர்களின் உள்ளம் அமைதியுற்றிலது. அப்படைக்கு அழகளிக்கும் குடைகள்மீது அவர் சினம் சென்றது. குடைகளையும் கொடிகளையும் வெட்டித் துண்டாக்கி வெற்றி நகை நகைத்தனர். நிற்க.

முன் நின்ற தேர்ப்படை அழியவே, அதன் பின்னின்ற களிற்றுப்படை களம் நோக்கி விரைந்தது. வரிகளின் வனப்பு விளங்கும் நெற்றி, ஆடி அசையும் பருவுடல், தொங்கும் துதிக்கை ஆகியன சிறப்பளிக்க, வரிசைவரிசையாக முன்னேறி வந்தது வேழப்படை. தேர்ப்படைப் போரில் சற்றே தளர்ந்திருந்தும், வாள் வீரர், யானைப் படையின் வரவு கண்டு உளம் நடுங்கினாரல்லர். மாறாக, மேலும் ஊக்கம் கொண்டனர். அவை தொலையில் வருங்கால், அசைநடை யிட்டுவரும் அழகைக் கண்டுகளித்தனர்; அது சிறிது பொழுதே; அவை தம்மை நோக்கி விரைந்து முன்னேற முன்னேற, அவர் களிப்பு மாறக், கடுஞ்சினம் கொண்டனர். வந்த யானைப் படை வாள்வீரரைத் தம் வலம் கொண்டு தாக்கின. அதனால் அவர்களும் சிறிதே தளர்ந்தனர். ஆனால், பின்னிட்டாரல்லர். கை வாள்கள் அவர் வீரத்தை ஊக்கின. அதனால் ஓடாது உறுத்து நோக்கினர். அவற்றிற்கு ஆற்றல் அளிப்பன அவற்றின் துதிக்கைகளே என்பதைக் கண்டுகொண்டனர். உடனே தம் வாள்களை ஓச்சி, துதிக்கைகட்குக் குறிவைத்தனர். அவ்வளவே, தொங்கும் அக்கைகள் அற்று வீழ்ந்தன. அவ்வாறு வீழ்ந்த துதிக்கைகளுள் ஒன்று, ஆங்கு அதற்கு முன்பே அழிந்த, தேர்ப் படையின் சிதைந்த வெண் கொற்றக் குடையில் ஒரு பாதியும், மண்ணில் ஒரு பாதியுமாக வீழ்ந்தது.

முன்னணிப் படைகள் இரண்டின் முறிவு கண்டு, களத்தைக் காண முகம் சுளித்த மக்கள், வெண்கொற்றக் குடையில் வெட்டுண்ட துதிக்கை வீழ்ந்துகிடக்கும் காட்சி, வெண்மதியை வாயிற் கௌவிக்கிடக்கும் கரும் பாம்புக் காட்சி போல் தோன்றக்கண்டு, களக்கொடுமையைச் சிறிதே மறந்து களிப்புற்றனர்.

“இருநிலம் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல்
ஆடியல் யானைத் தடக்கை, ஒளிறுவாள்
 ஓடாமறவர் துணிப்பத், துணிந்தவை
கோடுகொள் ஒண்மதியை நக்கும் பாம்பு ஒக்குமே,
பாடார் இடிமுரசின் பாய்புனல் நீர்நாடன்

கூடாரை அட்ட களத்து.”

—களவழி: 22

யானைத் தலையில் தேர் உருளை :

சேரர் யானைப்படையால் சிறந்து விளங்கினர் என்றால், சோழர் தேர்ப்படையால் சிறந்தவர். அவர் தேர்ப்படை பகைவரும் பாராட்டும் பெருமை வாய்ந்தது. அத்தேர்ப் படைப் பெருமையால் ஒரு சோழ மன்னன், உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி எனப் பெயர் சூட்டிப் பாராட்டப் பெற்றுளான். சேர நாட்டு யானைப் படையின் பெருமை கண்ட சோழன் செங்கணான், அதைப் பாழாக்கத் தன் தேர்ப்படையின் துணை வேண்டினான். பகைவர் பார்த்த அளவிலேயே பயந்து பின்னிடச் செய்யவல்ல பேருருவம் காண்பவர் கருத்தைக் குலைக்கும் காட்சி, காற்றெனக் கடுகி ஓடும் விரைவு ஆகிய இவை யத்தனையும் ஒருங்கே வாய்ந்த தேர்ப் படை கொண்டுவந்து சேரரைத் தாக்கினான். ஆனால், தான் அழிவுறாது, பகைவர் படையைப் பாழாக்கவல்ல அத்தேர்ப் படையும், சேரர்களின் களிற்றுப் படையால் நிலை குலைந்தது. முடிவில், சேரர் படை பாழாக, சோழர் படையே வெற்றி கண்டது என்றாலும், சேரரை அவ்வளவு எளிதில் வெற்றி கொள்ள முடியவில்லை சோழரால், சேரரை வெல்ல, சோழர் தம் தேர்ப் படையின் பெரும்பகுதியை இழக்க வேண்டியதாயிற்று. சேரர் களிற்றுப் படைமுன், சோழர் தேர்ப்படை ஆற்றல் இழந்து அழிந்தது. சோழர்க்குத் தோற்ற சேரர்களின் யானைப்படை, தன் ஆற்றலைத் தொடக்கத்திலேயே இழந்துவிடவில்லை. பகைவர் தேர்ப்படையைப் பாழாக்கிய பின்னரே அது அழிந்தது.

சோழர் படையைச் சேர்ந்த தேர்கள் உயர்வும், உறுதியும் விரைவும் உடையவேனும், அவை சேரர் படையைச் சேர்ந்த களிறுகளின் உரம், ஊக்கங்களின் முன் செயலற்றுப் போயின, தம் அரசர் படையைப் பாழ் செய்வது சோழர் தேர்ப்படையே என்பதைக் கண்ட சேர நாட்டுக் களிறுகள், அத்தேர்ப்படையைத் தம் முழு ஆற்றலும் கொண்டு தாக்கி அழிப்பதில் ஆர்வம் காட்டின. தேர்ப் படை அறவே அழிவுற்றது. உருக்குலைந்து உரம் இழந்து வீழ்ந்த தேர்ப் படையின் அழிவைக் கண்ட பிறகும் களிறுகளின் சினம் தணித்திலது. தேர்க்கு உயிர் நாடியாய், அதன் இன்றியமையா உறுப்பாய் விளங்குவன அதன் உருள்கள், தேர்ப்படை தம்மீது, விரைந்தோடி வரத் துணைபுரிவனவும் அவ்வருள்களே என்பதை அறிய அறியக் களிறுகளின் சினம், அவ்வுருள்கள்து சென்றது. அழிந்து வீழ்ந்த தேர் உருள்களைத் தம் துதிக்கையால் பற்றித் தூக்கிச் சுமந்து கொண்டவாறே போர்க்களமெங்கும் அலைந்து வலம் வந்தன.

உருவாலும் நிறத்தாலும் மலைகளை நிகர்க்கும் களிறுகள், வட்டவடிவாய், ஒளி வீசும் பொன்னிறம் வாய்ந்த தேர் உருளைகளைச் சுமந்து திரியும் காட்சியைக் கண்டார் ஒரு புலவர், கண்ட காலம் மாலைக் காலம்; ஞாயிறு மேலை மலையினிடைச் சென்று மறையும் காலம். கரிய மலைகளுக்கிடையே மறையும் பொன்னிற ஞாயிற்றின் காட்சி, புலவர்க்குக் களக் காட்சியை நினைவூட்டிந்து. மலைகளுக்கிடையே ஞாயிறு மறையும் அம் மாலைக் காட்சிக்கும், களிறு தேர் உருளையைச் சுமந்து திரியும் களக் காட்சிக்கும் இடையே உள்ள ஒப்புமை கண்டு மகிழ்ந்தது. அவர் மனம், அம்மகிழ்ச்சியால் களத் காட்சியின் கொடுமை, அவர் மனக் கண்ணின்று சிறிதே மறைந்தது.

உருவக் கடுந்தேர் முருக்கி, மற்று அத்தேர்ப்
பரிதி சுமந்தெழுந்த யானை — இருவிசும்பில்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற, செங்கண்மால்

புல்லாரை அட்ட களத்து

—களவழி. 4

பவளம் சொரியும் பை :

நெடிய பெரிய தேர்ப் படை நிலைகுலைந்ததைக் கண்டனர், சோணாட்டுப் படை மறவர். சேர வேந்தர்களின் வேழப் படையின் வன்மையினை வாய்மொழியாக முன்னரே கேட்டிருந்த அவர்கள், அதைக் கண்ணெதிரே காணவும் நேர்ந்த விடத்து, அவர் நெஞ்சு நடுங்கிற்று. தேர்ப்படையையும் தகர்த்தெறியவல்ல திண்மை அக்களிறுகளுக்கு அவற்றின் பருவுடவால் வாய்த்தமை கண்டு வெம்பிற்று. அவர் உள்ளம் களிறுகளின் பருவுடல் கண்டு பெருமூச்செறிந்த வீரர் அப்பருவுடலைப் பேணுதற்கு வேண்டும் பேருணவைத் தேடியுண்பது அவற்றின் துதிக்கைகள் என அறிந்தவிடத்து அவர் சினம் அத்துதிக்கைகள்பால் சென்றது. எட்டிய மட்டும் நீட்டி, எவ்வளவு திண்ணிய மரங்களையும் முறித்துக் கவளங் கவளங்களாய் வாயிலிட்டு ஊட்டி உயிர்புரக்கும் அவையில்லையேல், களிற்றினம் தம் பருவுடலுக்கு வேண்டும் உணவு பெறாமல் உயிரிழந்துபோம். அவற்றின் உரமும் அற்றுப்போம். அந் நிலை உண்டாகாவாறு பேணிக் காக்கின்றன அவற்றின் தொங்குக் கைகள். அதனால் பெருவலி பெற்ற யானைகள் நெடிய தேர்களையும் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையவாகின்றன. ஆகவே, வேழப்படை வீழ வேண்டுமாயின், அவற்றின் கைகள் அறுபடல் வேண்டும் எப்பாடுபட்டேனும் அவற்றைத் துண்டாடல் வேண்டும், எனத் துணிந்தனர். உடனே, உயிருக்கும் அஞ்சாது வாளேந்தி விரைந்தனர். வேழங்களின் துதிக்கைகளே குறியாக நின்று வெஞ்சமர் புரிந்து, இறுதியில் அவற்றை வெட்டி வீழ்த்தினர்.

தொங்கும் துதிக்கை இடையே துண்டிக்கப் பெற்று வீழ்ந்தது. வெட்டுண்டு விழுப்புண் பெற்ற பகுதியினின்றும் ஒண்ணிறக் குருதி குபுகுபுவென வெளிப்பட்டுக் கொட்டத் தொடங்கிற்று. அக்காட்சி, கண்ணால் காணமாட்டாக் கொடுமையுடையவேனும், அது, பொன்னும் நவமணியும் விற்கும் பெருவணிகர் வீதியில், பவள வாணிகர், தம்மிடம் வாணிகம் புரிய வருவார்முன், வகைவகையான பவளங்களை இட்டுக் கட்டி வைத்திருக்கும், நீண்ட பையைக் கட்டவிழ்த்துத் தூக்கிக் கொட்ட, அப்பையினின்றும் செந்நிறப் பவளங்கள் சரசரவெனச் சொரியும் காட்சியைக் கண்முன் கொணர்ந்து காட்ட, களக்கொடுமை மறந்து சிறிதே களிப்பில் ஆழ்ந்தனர்.

“கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்
பவளம் சொரிதரு பைபோல்—திவள் ஒளிய
ஒண்செங்குருதி உமிழும், புனல்நாடன்

கொங்கரை அட்ட களத்து”

—களவழி : 14

குளத்து மதகில் குருதி வெள்ளம் :

போர் தொடங்கிவிட்டது. போர் தொடங்கிவிட்டது என்பதைத் தெரிவிக்கவும், படை வீரர்க்கு ஊக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உண்டாக்கவும் முரசு முழங்கிற்று. முரசொலி உரம் ஊட்ட வீரர்கள் வெறிகொண்டு வெஞ்சமர் புரியத்தொடங்கினர். வீரர்களின் ஆற்றலும் ஆண்மையும் கண்டு அஞ்சிய பகைவர்கள், அவர்க்கு உரம் ஊட்டுவது, முரசொலியே என உணர்ந்து, அதைப் பாழாக்க முனைந்தனர். போரில் தம் வெற்றிக்குப் பெருந்துணை புரிவது முரசொலியே என உணர்ந்த வீரர்களும், முரசினைச் சூழ்ந்து காத்து நின்றனர். அதனால் முரசழிக்கும் போரில் பலர் உயிரிழந்தனர். பல உயிர் இழந்தும், பலரை உயிரிழக்கப் பண்ணியும், பகை வீரர் இறுதியில், முரசினை அழித்தனர்; அதன் தோலைக் கிழித்தனர். இடிபோல் ஒலித்துத் தம் படை வீரர்க்கு ஆண்மையும், பகைப்படை வீரர்க்கு அச்சமும் ஊட்டிய முரசு அழிந்தது. தோல் கிழிந்து தொழில் இழந்துபோன முரசினைக் காப்பதில் இனிப் பயனில்லை எனக் கருதி, அதற்குரியார், அதைக் களத்தே கைவிட்டுச் சென்றனர். கைவிடப்பட்ட முரசு, களத்தின் ஒருபால் உருண்டு கிடந்தது.

முரசழிவைக் காணக் காண, வீரர்க்கு ஆத்திரம் அதிகமாயிற்று. ஆற்றலெல்லாம் காட்டி அமர் செய்யத் தலைப்பட்டனர். கடும் போர் புரிந்து களத்தைப் பாழாக்கும் அவரை அழிக்க வேண்டுமாயின், அதற்குத் தன் களிற்றுப் படையின் துணை வேண்டும் எனக் கருதினான் பகை வேந்தன். களிற்றுப் படை களம் புகுந்தது. பாய்ந்து வரும் போர் மறவர்களைத் தாக்கி அழித்தது. பலர் உயிரிழந்து வீழ்ந்தனர். ஆனால், வீழ்ந்த வீரர்கள் வாளா இறந்தாரல்லர். தம்மைத் தாக்கி அழித்த அக்களிறுகளில் சிலவற்றை அவர்களும் கொன்று அழித்தனர். இப்போரின் விளைவால், களம் இரத்தக் காடாயிற்று, செந்நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடிற்று, வீரர் வாள் பட்டு உயிரிழந்த களிறுகளில் ஒரு களிறு, தோல் இழந்து உருண்டு கிடக்கும் முரசுமீது வீழ்ந்தது. களத்தின் குறுக்கே ஓடிய குருதி வெள்ளம், யானைகள் வீழ்ந்தமையால் ஓடமாட்டாது தடையுற்றது. அவ்வாறு தடையுற்றுத் தேங்கிய குருதி வெள்ளம், இறுதியில், யானையின் உடற்கீழ் அகப்பட்டுக் கிடக்கும் முரசின் ஊடே நுழைந்து பாய்ந்தோடிற்று.

கார் காலத்தில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைத்துக் கோடைக் காலத்தில் பயன் கொள்ளும் குளங்கள் பல ஆங்காங்குள, ஆங்குக் கார்காலத்துப் புதுமழை பெய்யப் பெருகிப் பாயும். பெருவெள்ளம், மண்ணின் செந்நிறம் ஏற்றுக் குருதிபோல் சிவந்து ஓடி, மலைபோல் உயர்ந்த கரைகளுக்கு அடியில் அமைத்திருக்கும் மதகுகளின் ஊடே புகுந்து, குளத்தில் நிறையும் காட்சியைக்கண்டு களித்தோர் பலராவர். அக்காட்சியைக் கண்டு களித்த கண்களால், குளத்து மதகின் வழியே பாய்ந்தோடும் செம்மண் வெள்ளம் போல், யானையின் உடலுக்கடியில் அகப்பட்ட இரு தலையும் தோல் கிழிந்து போன முரசின் வழியே, இறந்து வீழ்ந்த வீரர்களின் இரத்த ஆறு பாய்வதைக் காண, நேர்வார், கண்கள் நீர் மல்கக் கலங்குவர் அல்லரோ?

“ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம்சேர் யானைக்கீழ்ப்
போர்ப்பு இல் இடிமுரசின் ஊடுபோம் ஒண்குருதி
கார்ப்பெயல் பெய்தபின் செங்குளக் கோட்டுக்கீழ்
நீர்த்தூம்பு நீர் உமிழ்வ போன்ற, புனல்நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து.” —களவழி: 2

முக்கோட்டுயானை :

சேரநாட்டு மன்னனை வென்று சிறைகொள்ள வேண்டுமாயின், அவன் கொண்டுவந்துள்ள வேழப் படையை வலி விழ்க்கப் பண்ணுதல் வேண்டும். ஆனால் அவ்வேழப் படையோ, எளிதில் அழிந்து போகக்கூடியதன்று. அதை வெற்றி கொள்வது வாட்படை வீரரால் இயலாது. வேழங்களை நெருங்கிய பின்னரல்லவோ வாள்கள் தொழிற்படும். வேழங்கள் தாம் வீரர் தம்மை அணுகுவதற்கு முன்பே தம் நீண்ட கைகளால் அவரை அழித்துவிடுகின்றனவே. அதனால் வாட்படை, வேழப் படையை வென்றழிக்கும் என எதிர்பார்த்தற்கு இடம் இல்லை, வில் வீரர் துணையால் வீழ்த்தலாம் எனிலோ, அதுவும் இயலாது. வீரர் ஏவ வில்லினின்றும் விரைந்து புறப்படும் அம்புகள், வேழங்களின் பருவுடலில், எங்கோ ஒரு பகுதியில் பாய்ந்துவிடுகின்றன. தம் உடம்பில் அம்பேறுண்டது என்ற உணர்வு தானும் வேழங்களுக்கு உண்டாவதாகத் தெரிந்திலது. ஆகவே வேழங்களை வில் வீரர் வென்று அழிக்கார். வேழங்களை அணுகுவதும் கூடாது வாள் வீச்சால் விளையும் விழுப் பண்போலும் பெரும் பெரும் புண்களை உண்டாக்குவதும் வேண்டும், வாள் வீரராலும், வில் வீரராலும் முடியாத அதை வேல் வீரர் முடிப்பார் என அறிந்தான் சோணாட்டு மன்னன். உடனே வேற்படை வேழப் படை முன் சென்று நின்றது.

வேழங்களை எதிர்த்து நின்ற வேல் வீரர்கள், பகைவர் அரணைப் பாழாக்கவல்ல திண்மை வேழங்களுக்கு அவற்றின் கோடுகளினால் உண்டாவதைக் கண்டனர். அவை, தம் கோடுகளால் அரணை முட்டி அழிப்பதைத் தடுக்க வேண்டு மேல், அக்கோடுகளைப் பயனிழக்கப் பண்ணுதல் வேண்டும். அவற்றைப் பயனிலவாக்க வேண்டுமேல், இரு கோடுகளுக்கு மிடையே, பருவேல் ஒன்றைப் பாய்ச்சுதல் வேண்டும். தந்தங்கள் அரண் மதிலைத் தாக்குவதன் முன், அவ்வேல் அம் மதிலைத் தாக்குதல் வேண்டும். அப்போது அது தைத்துப் பண்ணிய புண் பெரு நோய் அளிக்கும். அந்நோய் மிகுதியால் வேழங்கள், தம் அழித்தல் தொழிலை மறந்துவிடும் என உணர்ந்தனர். உடனே, ஆற்றல் கொண்ட மட்டும் தம் தோள்களை ஓச்சி, கை வேலைக் களிறுகளின் நுதலிற் குறி வைத்து வீசி எறிந்தனர். எதிர்பார்த்தவாறே, வேல்களும் விரைத்து சென்று வேழங்களின் நுதலில் ஆழப்பதிந்தன. அரசிலை போலும் முனையும் அடித்தண்டின் ஒரு பகுதியும் உள்ளே அழுந்திக்கொள்ளக் காம்பின் கடைப் பகுதி மட்டும் இருகோடுகளுக்கிடையே வெளிப்பட்டு நின்றது. இருகோடுகளுக்கிடையே வேலேறுண்ட அவ்வேழங்கள் முக்கோட்ட வேழங்கள் போல் தோன்றிக் காண்பவர் அகத்தில் அழுகையும் நகையும் ஒருங்கே தோன்றுவித்தன.

“இடை மருப்பின் விட்டெ றிந்த எஃகம்கால் மூழ்கிக்
கடைமணி காண்வரத் தோற்றி—நடைமெலிந்து
முக்கோட்ட போன்ற களிறெல்லாம், நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து.” களவழி: 19

நிலம் உழும் யானை :

கழுமலக் கோட்டையைத் தகர்த்து, அதைக் காத்து நிற்கும் கொங்கு நாட்டுப் படைத் தலைவர்களைக் கொன்று அவர் வேழப் படையை வீறிழக்கப் பண்ணிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறை செய்துகொண்டு போதல் வேண்டும் என்ற வேட்கை, சோழன் செங்கணான் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்துவிட்டது. அதனால் அதை நிறைவேற்றிக் கொள்ளத் தன் படைபலம் முழுவதையும் பயன் கொள்ளத் துணிந்தான். வாட் படை, விற்படை, வேற்படை முதலாம் பல்வகைப் படைகளும் போர்க்களம் புகுந்தன. படை மறவர்க்கு ஊக்கம் அளிக்க, போர்ப்பறை ஓயாது ஒலித்துக்கொண்டேயிருந்தது. மாரிக்காலத்து மழைத் தாரைகளென, அம்புகள் வில்லினின்றும் வரிசை வரிசையாக வெளிப்பட்டுக் களமெங்கும் விரைந்து மொய்த்தன. வேற்படை பலவும் ஒன்றுகூடி நின்று உரம் கொண்டு போரிட்டன. களம் குருதிக் காடாய்க் காட்சி அளித்தது.

சோணாட்டு வாட்படைக்கே வலியிழந்து போன சேர நாட்டு வேழப்படை, வில்வீரர்களும் வேல் வீரர்களும் கூடிச் செய்யும் தாக்குதலைத் தாங்க மாட்டாது தளர்ந்தது. உடலெல்லாம் அம்புகள் தைக்க, மார்பிலும் நுதலிலும் வேல்கள் ஊடுருவ, வேழங்கள் நிற்கவும் மாட்டாது சோர்வுற்றன; தளர்ந்து தள்ளாடி, வரிசை வரிசையாக முகம் கவிழ்ந்து மண்ணில் சாய்ந்தன. அவை மண்ணில் சாயவே, அவற்றின் கோடுகள், குருதி தேங்கும் களத்து மண்ணில் ஆழப்புதைந்து கொண்டன.

நிலை குலையா மலைகளென நின்று காட்சி தரும் களிறுகள், வலியிழந்து, வெண்கோடுகள் மண்ணுள் புதைந்து மறைய முகங்கவிழ்ந்து சாய்ந்து கிடக்கும் காட்சி, காண்பவர் கருத்தைக் கலக்கும் கொடுமையுடையதேனும், கீழே குருதிநீர் தேங்க, அதனிடையே களிறுகள் கவிழ்ந்து கிடக்கும் அக்காட்சி, களிறுநிகர் காளைகள், வெள்ளியால் புனையப்பெற வெண்ணிறக் கலப்பைகளை ஈர்த்து, தண்ணீரால் ஈரம்பட்ட, செந்நிலத்தை உழும் காட்சிபோல் தோன்றிக் களக் கொடுமையைச் சிறிதே மறைத்துக் காட்டிற்று.

“வெள்ளி வெண்ணாஞ்சிலால் ஞாலம் உழுவனபோல்
எல்லாக்களிறும் நிலம் சேர்ந்த—பல்வேல்
பணைமுழங்கு போர்த்தானைச் செங்கண் சினமால்
கணைமாரி பெய்த களத்து.” —களவழி: 40

குருதிப்புனலுள் களிற்றுடம்பு :

கணைக்காலிரும் பொறையின் களிற்றுப் படையைச் செங்கணான் வெற்றி கொண்டான். ஆனால், அவ்வெற்றி எளிதில் வாய்த்துவிடவில்லை. களம்பல கண்டு, நாடு பல வென்று, வேந்தர் பலரின் வீறுகளை அழித்துப் புகழ் மாலை சூடிய அவன் வேற்படை களம் புகுந்த பின்னரே வெற்றித் திருமகள், தன் அருள் நோக்கை அவன்பால் திருப்பினாள். களம் புகுந்த அவ் வீரர்களும், புகுந்தவுடனே வெற்றி கண்டாரல்லர். வேழப் படையுடன் நெடும்பொழுது வெஞ்சமர் புரிந்தனர். வெற்றி வாய்ப்பதாகத் தோன்றவில்லை. களிறுகள் முன், கால் கடுக்க நின்றும், கால் வலிக்க விரைந்து ஓடியும் போரிடின், பல நாளாயினும் போர் முடிவுறாது. களிறுகள் எட்டாவுயரத்தில், அவை விரைந்து துரத்தினும் அவற்றால் பற்றப் பெறாது, பின்னோக்கியும் முன்னோக்கியும் விரைந்தோடவல்ல தேர்மீது இருந்து போரிட்டாலல்லது அவற்றைப் புறங்காண்டல் இயலாது என உணர்ந்தனர். உடனே, வேற்படைக்குத் துணையாகத் தேர்ப்படை களம் புகுந்தது. களிறுகள் பல கூடிப் பலமுறை தாக்கினும் தகர்ந்து அழிவுறாத் திண்மை வாய்ந்த தேர்கள் எண்ணிலாதன வேல் வீரர்களை ஏற்றிக் கொண்டு வேழப்படை நோக்கி விரைந்தன. வன்மையிற் சிறந்த வேல்வீரர்கள், தேர்மீதிருந்தவாறே, தம் கைவேலை உரங்கொண்டளவும் ஓங்கி, வேழங்களின் முகம் நோக்கி எறிந்தனர். வேல்களும், குறி பிழையாமல் விரைந்து, வேழங்களின் நுதலில் பாய்ந்து, அவற்றைப் பிளந்து புண்ணாக்கின. அக்கணமே, களிறுகள், உயிரிழந்து வீழ்ந்தன. ஆனால், வீழ்ந்த களிற்றின் உடல்கள், களத்து மண் மீது வீழ்ந்தில், களிற்றுப்போர் முடிவுறுதற்கு முன்பே களம் குருதி வெள்ளத்தில் ஆழ்ந்து மறைவுற்றிருந்தது. போரில் உயிரிழந்து வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் உடல்களினின்றும் பெருகிய செந்நீர், களமெங்கும் நிறைந்து தேங்கிக் கிடந்தது. அதனால் களிற்றின் உடல்கள், களத்து மண்ணில் வீழாமல், குருதி வெள்ளத்தில் வீழ்ந்து மிதந்தன.

களமெங்கும் செக்கச் செவேலெனப் பரந்த, செந்நீர் வெள்ளத்தின் இடையிடையே களிறுகளின் கரு நிறப் பருவுடல் மிதக்கும் அக்காட்சி, அந்திக் காலத்துச் செவ்வானின் இடையிடையே, நீர்க்கொண்ட கருமுகில்கள் காட்சியளிக்கும் கவின் மிகு காட்சியைக் காட்டிக் களிப்பூட்டிற்று.

“எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து
நெய்த்தோர்ப் புனலுள் நிவந்த களிற்றுடம்பு
செக்கர்கொள் வானில் கருங்கொண்மூப் போன்றவே
கொற்றவேல் தானைக் கொடித்திண்தேர்ச் செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.” —களவழி: 23

குதிரை உதைத்த குடை :

கழுமல நகர்க்கோட்டை, பகைவர்க்குப் பாதுகாப்பளிக்கும் காவற்கூடமாய் இருக்கும்வரை, சோணாடு, வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரிப் பாய்ச்சலால், வளங்கொழிக்கினும் அமைதி நிலவும் நல்வாழ்வைப் பெறாது என உணர்ந்தான் செங்கணான். அதனால் அவ்வரணை அழித்தல் வேண்டும். அதனுள் படைகொண்டிருக்கும் பகையரசர்களைப் பாழ்செய்தல் வேண்டும் எனத் துணிந்தான். அவன் உள்ளத்தில் அத்துணிவே தலை தூக்கி நின்றமையால், நாற்படையால் நிறைவுற்ற சோணாட்டுப் படையின் சீரழிவு குறித்து அவன் சிந்தித்தானல்லன். தன் படையனைத்தையும் கழுமல நகர்க் களத்திற்குக் கொண்டு சென்றான்.

சோணாட்டுப் படைத் தலைவன் செருக்குமிக்குச் சமர் புரிந்தான்; அவன் படை ஆற்றல் மிக்கு அமர்புரிந்தது. அதனால், பகைவர் பலர் கூடி நின்று எதிர்த்தும், இறுதியில் அழிவுற்றனர்; அவர்களைக் காத்து நின்ற கழுமலக் கோட்டை அழிவுற்றுப் பகைவன் கைப்பட்டது. சேரநாட்டுத் தேர்ப் படை சிதைவுற்றது, உருள் ஒருபால், குடை ஒருபால், கொடி ஒருபாலாகக் கவிழ்ந்து உருக்குலைந்தது. பகைவர்க்குப் பெருமையளித்த அவர் தேர்ப்படை பாழான பின்னரும், சோணாட்டுப் படை சோர்வுற்றிலது. பகைவர் அழிவைக் காணக் காண, அது மேலும் உரங்கொண்டு அமர் புரிந்தது. சோணாட்டுப் படை வரிசையில், குதிரைப்படை சிறந்து விளங்கிற்று. காற்றெனக் கடுகிப் பாயும் அக்குதிரைகள், பகைவரின் தேர்ப்படை அழிந்து பாழுற்ற களத்தைத் தாண்டிச் சென்று சமர்புரியத் துடித்தன; அவை அவ்வாறு பாய்ந்தோடுங்கால், ஆங்கு ஒடிந்து வீழ்ந்து கிடக்கும் பகை வேந்தர்களின் வெண்கொற்றக் குடைகள், அக்குதிரைகளின் கால்களால் இடருண்டு, தலைகீழாக உருண்டோடி வீழ்ந்தன. தன் படையின் முன் வரிசைக்கண் தேர் மீதமர்ந்து, அக்களக் காட்சியைக் கண்ணுற்றிருந்த செங்கணான், குதிரைகளின் கால்பட்டுக் குடைகள் தலைகீழாகப் புரண்டுவிழும் அக்காட்சி கார்காலத்தில், ஆங்காங்கே முளைத்துக் கிடக்கும் காளான்கள் புல்லுணாவுண்ணும் ஆர்வம் பெருக, காடு நோக்கி விரைந்தோடும் ஆனிரைகளின் கால்பட்டு, சிதைவுற்றுச் சீரழியும் கவின் மிகு காட்சியை நினைவூட்ட, தன்னாட்டு நில நீர்வளங்களையும், தன் நாற்படையின் பேராற்றற் பெருமையினையும் எண்ணி இறும்பூதெய்தினான்.

“ஓஓ! உவமன் உறழ்வின்றி ஒத்ததே;
காவிரிநாடன் கழுமலம் கொண்டநாள்
மா உதைப்ப மாற்றார் குடை யெலாம் கீழ்மேலா
ஆ உதை காளாம்பி போன்ற, புனல்நாடன்
மேவாரை அட்டகளத்து.” —களவழி: 36.

கருடன் வாயில் கை :

வீரர்க்கும் வீரர் அவ்வீரர்களே அவர்கள் புகமுடியாத இடம் அப்போர்களத்தில் எதுவும் இல்லை. அவர்கள் விரும்பினால், அவர்களைத் தடுத்து நிறுத்த வல்லவர் பகைவர் படை வரிசையுள் ஒருவரும் இவர். ஆண்மையும் ஆற்றலும் அத் துணை மிகுதியாகப் பொருந்தியிருந்தமையால், அவர்கள் களமெங்கும் புகுந்து புகுந்து கடும் போரிட்டனர். அம்மட்டோ! அவ்வீரர்கள், போர்க்கள நிலையையும், போர் முறைகளையும் தெளிவாக உணர்ந்திருந்தனர். அதனால், படை வரிசையில் படைக்கு உயிரளிப்பது நாற்படையுள் எப்படை என்பதை நன்கு அறிந்திருந்தனர். நால்வகைப் படையுள், களிரும், தேரும், குதிரையும் பகைவரைப் பாழ் செய்வதில் பெருந்துணை புரிவனவேயாயினும், அவை தாமே இயங்கா. அவற்றை இயக்கக் காலாட் படையின் துணைவேண்டும். அது இயக்கினா வல்லது அவை இயங்கா. ஆகவே, அம்முதற் படை மூன்றினும் வீரர் படையே, படை வரிசைக்கு வேராம். ஆகவே, அவற்றை அழிப்பதினும் அவற்றை இயக்கும் வீரர் படையை அழிப்பதே வெற்றிக்கு வழியாம்; குடம் உடையான் வீழக் குடமும் வீழ்தல்போல், வீரர் அழியின், அவர் இயக்கும் அவையும் அழியும். அம் முறையால் காலக்கேடும், உயிர்க்கேடும் குறையும் என்ற போர் நுணுக்கத்தை அறிந்திருந்தமையால் அவ்வீரர்கள் பகை வேந்தனின் நாற்படையுள், காலாட் படையைத் தேர்ந்து கடும் போரிட்டனர். வீரர்களின் வாள் பட்டு, பகைவரின் காலாட் படை வன்மை இழந்தது. தலை இழந்தும், தோள் இழந்தும், காலற்றும் கணக்கற்றோர் வீழ்ந்தனர். அறுபட்ட தலைகளும், துண்டிக்கப்பெற்ற தோள்களும், முடம்பட்ட கால்களும் களமெங்கும் காட்சி அளித்தன.

பார்க்குமிடமெங்கும் பிணமலைகளே காட்சி அளிக்கக் கண்ட பறவைக் கூட்டம், அக்களத்தைப், பல கூடி அடைந்து வான வீதியில் வட்டமிட்டுப் பறந்தன. அவற்றுள், பெரிய வலிய பருந்தொன்று, துணிந்து களம் புகுந்து ஆங்கு அறுபட்டு வீழ்ந்து கிடந்த கைகளுள் ஒன்னறக் கௌவியெழுந்து பறந்தோடிற்று, ஐவிரல்களோடும் கூடிய கையை வாயிற் கௌவிக் கொண்டவாறே விண்ணில் பறக்கும் பருந்தின் தோற்றம் தன் இனத்தின் பகையினத்தைச் சேர்ந்த ஐந்தலை நாகத்தைக் கொன்று, கொன்ற அவ்வெற்றிப் புகழ் விளங்க, அதைத் தன் கால் விரல்களுக்கிடையே பற்றி விண்ணிற் பறந்து திரியும் கருடன் காட்சியை நினைவூட்டக் கண்டு, களம்காண்பார், களத்தின் கொடுமையைச் சிறிதே மறந்து, மகிழவும் செய்தனர்.

“எவ்வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கைவாயில் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல்
ஐவாய் வயநாகம் கவ்வி, விசும் இவரும்
செவ்வாய் உவணத்தில் தோன்றும், புனல்நாடன்
தெவ்வரை அட்டகளத்து.” —களவழி : 26

கையைக் கவ்வி ஓடும் குறுநரி :

சோணாட்டு வாட்படை வீரர்களின் தாக்கு தலைத் தாங்கமாட்டாது, சேர நாட்டு வீரர்கள் தளர்ந்தனர். சோணாட்டாரை வென்று துரத்துவது தம்மால் இயலாது என்பதை அறிந்து கொண்டதும், கொங்கு நாட்டார் தம் போர் முறையை மாற்றிக் கொண்டனர். சென்று தாக்குவதைக் கைவிட்டு நின்று தாக்க முனைந்தனர். சோணாட்டு வீரர்களின் வாட்படையை வலியிழக்கப் பண்ணுவதில் கருத்தினைச் செலுத்தினர். அதனால் அவர் வாள் வீச்சிகளாத் தளராது தாங்கி நிற்கும் வண்ணம் துணைபுரியவல்ல பெரிய கேடயங்களைக் கையில் ஏந்திக் களம் புகுந்தனர். அதனால் வென்று துரத்துவதல்லது தோற்று ஓடுவதை அறியாத சோணாட்டு வாள்வீரர், பிறகளங்களில் எளிதில் வெற்றி கண்டதுபோல், கழுமலக் களத்தில் வெற்றிகாண மாட்டாது கலங்கினார். அதனால் கடுஞ்சினம் கொண்டனர். போர்வெறி தலைக்கேறியது. களம் பல கண்டு வாகை சூடிய வாள்களைத் தேர்ந்தெடுத்து, கைக் கொண்டு களம் புகுந்தனர். சோணாட்டார் முன்னேறித் தாக்கினர். சேரநாட்டார் எதிர்நின்று தாங்கினர். வெற்றி தோல்வி காணமாட்டாத போர் நெடும் பொழுது நிகழ்ந்தது. இறுதியில் தம் வாட்படை வலியிழந்து வீணாவது, பகைவீரர் பற்றி நிற்கும் கேடகத்தால் என்பதை சோணாட்டு வாள் வீரர் உணர்ந்துகொண்டனர். உடனே அவர் நோக்கம் அது ஏந்திய இடது கையில் சென்றது. குறிபார்த்து, அவ்விடது கைகளை வெட்டி வீழ்த்தினர். சேர நாட்டு வீரர் இடக்கைகளை இழந்தனர். ஆனால், அந்நிலையிலும் அவர் ஆற்றல் குன்றவில்லை, கைகள் அற்று வீழ்ந்தனவேனும் அவை தாம் பற்றிய கேடகங்களை, அப்போதும் நழுவவிட்டில. அவற்றை இறுகப் பற்றியவாறே இற்று வீழ்ந்தன.

போர் ஒருவாறு ஓய்ந்தது. போர் ஆரவாரம் அடங்கிற்று. களத்தில் வீழ்ந்து கிடக்கும் பிணங்களினின்றும் எழுந்த நாற்றம் நால்வேறு திசையிலும் சென்று வீசிற்று. அந்நாற்றத்தை நுகர்ந்த நரிக் கூட்டம் நல்ல விருந்து கிடைத்தது எனும் நினைவால், நாக்கில் நீர் ஊறக் களத்தை அடைந்தன. அந்தரிகளுள் ஒன்று, கேடகத்தைப் பிடித்த பிடிதளராமல் அறுந்து வீழ்ந்து கிடக்கும் கையை வாயில் கௌவிக் கொண்டு காடு நோக்கி விரைந்தது. அக்காட்சி காணக் கூடாக் கொடுமையுடையதே யெனினும், கை, கேடகத்தைத் தூக்கிப் பிடிக்க, அக்கையைக் கௌவி ஓடும் நரி, அரசர் பெருங்கோயிலிலும், செல்வர் மாளிகைகளிலும், பெருங்குடி மகளிர் காணக் கையில் கண்ணாடியேந்தி விரையும் பணி மகளிர்போல் தோன்றக் களக் கொடுமையைச் சிறிதே குறைத்துக் காட்டிற்று.

“ஓடாமறவர் உருத்து மதம்செழுகிப்
பீடுடை வாளர் பிறங்கிய ஞாட்பினுள்
கேடகத்தோடு அற்ற தடக்கை கொண்டோடி
இகலன் வாய்த்துற்றிய தோற்றம் அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரிற் றோன்றும், புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து." —களவழி : 28

பவளத்தூள் பரந்தது :

போர், ஞாயிறு தோன்றுவதற்குமுன்பே தொடங்கி விட்டது. வீரர்களின் போர்வெறி, பொழுது புலரும் வரை பொறுத்திலது. இருள் எதிர் வருவாரை மறைக்குமே முன் வருவார் யாவர்? பகைவரோ அல்லது பரிவுகாட்டத்தக்க நண்பரோ என்பதை அறிதற்கும் வாய்ப்பில்லையே என எண்ணி வாளாக்கிடக்க மறுத்தனர்! போர்வாள் வீசும் பேரொளியே போதும். ஒன்னார் யார் உற்றார் யார் என்பதை அறிய எனத் துணிந்தார்போலும். வாளேந்திக் களம் புகுந்து விட்டனர்.

இருதிறப் படை வீரர்க்கு மிடையே வாட்போர் தொடங்கிவிட்டது. சேரநாட்டு வீரரின் வாளுக்குச் சோணாட்டு வீரர் பலர் இரையாயினர். அவ்வாறே சோழவீரரின் வாள்பட்டு சேர வீரர் பலர் உயிரிழந்து வீழ்ந்தனர். வாள், வீழ்ந்தாரை வறிதே வீழ்த்தவில்லை. அவை, அவர் உடலில் முழுதும் மறையுமாறு பல முறை ஆழமாகப் பதிந்து பதித்து, அவ்வுடல்களைச் சல்லடைக் கண்களெனத் துளைத்த பின்னரே, வீரர்கள் வீழ்ந்து மடிந்தனர். வாள் ஒரு முறை பட்டதும், உயிரிழந்து வீழ்ந்துவிட, அவ்வீரர்கள், ஆற்றல் இழந்தவரல்லரே!

வீழ்ந்த வீரர் உடல்களில் வாள்பட்டு உண்டான விழுப் புண்களினின்றும், குருதி, குபுகுபுவென வெளிப்பட்டு, ஆறு எனப் பெருக்கெடுத்தோடிற்று. குருதி வெள்ளத்தால், போர்க்களம், செங்களமாய் மாறிக் காட்சி அளித்தது. இவ்வளவும் ஞாயிறு தோன்றுவதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது. அவனும் தோன்றிவிட்டான். இருள் அகல, ஒளி பரவிற்று செங்களக் காட்சிக்கும், ஞாயிறு தோன்றும் செவ்வானத்திற்கும் வேற்றுமையே தோன்றவில்லை. அத்துணைச் சிவந்திருந்தது போர்க்களம்.

பொழுது புலரக் கள நிலைகண்டனர் காவலர் இருவரும்; கண்டும் அவர் போர் வெறி தணியவில்லை. வாள் வீரர் வலியிழந்து போகவே, தத்தம் களிற்றுப் படைகளைக் களம் நோக்கி விட்டனர். களம் புகுந்த களிறுகள், எதிர் வரும் எப்பொருளையும் அழித்து மதம் கொண்டு திரிந்தன, கீழே குருதி வெள்ளம்; போர் வெறியால் அதையும் பொருட்படுத்தவில்லை. களம், களிறும் தேரும் கடுக ஓடுமாறு உரம் வாய்ந்த வன்னிலமே ஆயினும், குருதி, வெள்ளம் போல் பாய்வதாலும், அவ்வெள்ளத்திலும் விரைந்து பாய்ந்து போர் புரியும் களிறுகளின் கூட்ட மிகுதியாலும், அவ்வன்னிலமும் சேறுபடத் தொடங்கிவிட்டது. அந்நிலத்தைச் சேறாக்கவுதவிய நீர், செந்நீராதலின், பட்ட சேறு, செஞ்சாந்துக் குழம்பெனச் சிவந்து காட்டிற்று.

காலையில் சேறுபடத் தொடங்கிய களம், ஞாயிறு உச்சிப் பொழுதை அடைவதற்குள் பெருஞ்சேறுபட்டுவிட்டது. களிறுகளையும் கால் வழுக்கப் பண்ணும் பெருஞ்சேறாய் மாறிவிட்டது. அந்நிலையிலும் போர் ஓயவில்லை, களிறுகள், கால் வழுக்கக் கண்டும். தளரவில்லை. களம் முற்றும் உழன்று உழன்று போரிட்டுக்கொண்டே யிருந்தன. ஞாயிறும், வெப்பம் மிக்க கொடிய கதிர்களை வீசிக் காய்ந்தான். களிறுகள் பல முறை மிதித்து மிதித்து உழக்குவதாலும், ஞாயிற்றின் வெப்ப மிகுதியாலும், சேறு, சிறிது சிறிதாக ஈரம் புலர்ந்து உலரத் தொடங்கிவிட்டது. ஞாயிறு மேலைத் திசை அடைவதற்குள், களத்தில் ஈரம் அறவே புலர்ந்து விட்டது. ஈரம் அற்ற அக்களத்தைவிட்டு, களிறுகள் அந்நிலையிலும் அகலவில்லை. கால்களைத் தளைத்த சேறு அற்றுப் போனமையால், அவை, முன்னிலும் மிகுதியாக விரைந்தோடி அமர் புரிந்தன. அதனால் களத்தில் புழுதிப்படலம் எழுந்து படர்ந்தது.

களத்தில் சிந்திய செந்நீரின் ஈரம் புலர்ந்துவிட்டது. ஆனால் அக்குருதியின் செந்நிறத்தைக் களத்து மண் இழக்கவில்லை. அதனால், அக்களத்தில், எழுந்த புழுதி செந்நிறப் புழுதியாய், ஞாயிறு மறையும் செவ்வானம் என எழுந்து எங்கும் பரந்தது. ஆங்கு எழுந்த அப்புழுதிப்படலம், பவளத்தை இடித்துப் பொடியாக்கிக் காற்றில் பறக்க விட்டாற் போலும் காட்சி அளித்தது.

“நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள்மாய் குருதி, களிறு உழக்கத்—தான்மாய்ந்து
முன்பகலெல்லாம் குழம்பாகிப், பின்பகல்
துப்புத் துகளில் கெழூஉம், புனல் நாடன்
தப்பியார் அட்டகளத்து.” —களவழி : 1.

களிற்றுக் கோட்டால் குருதிச் சேற்றைக் கடத்தல் :

கழுமல நகரில் பாடிக் கொண்டிருந்த சேரநாட்டுப் பெரும் படைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தனர் செங்கணான் படை வீரர்கள். ‘மேதக்க வேழம் உடைத்து மலை நாடு’ எனப் பாராட்டப்பெற்ற மலை நாட்டு மன்னனாதலின், சேரன் படையில் யானைகள் அதிகமாய் இருந்தன. அவ் யானைப்படையை அழித்து அமர் வெல்வது அவ்வளவு எளிதன்று ஆயினும், அக்களிற்றுப்படை கண்டு, சோணாட்டுப் படைவீரர் கலங்கினாரல்லர்; கையில் வாளேத்திக் களம் புகுந்து களிறுகள் கணக்கற்றனவற்றைக் கொன்று குவித்தனர். களிறுகளின் பிணக்குவியல் பெருமலையெனக் காட்சி அளித்தது. அக்களிறுகளின் பருவுடல்களிலிருந்து பெருகி ஓடிய குருதி வெள்ளத்தால், களம் சேறுபட்டது. சேற்று நிலத்தில் மெல்ல அடியெடுத்து வைப்பதும் இயலாதாயிற்று; அந்நிலையிலும் சோணாட்டு வீரர்கள் சோர்ந்துபோகவில்லை. ஆற்றல் மிகுந்து ஓடி ஓடிப் போரிட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் அவர் ஆற்றல் குறைந்திலது என்றாலும், களத்தின் குருதிச் சேறு அவர் கால்களைத் தளைக்கத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் கால்கள் தளர்வுற்றன. வீரர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்தனர்; அதனால் அவர் உடலும் தளர்ந்தன; ஆனால், அந்நிலையிலும் அவர்கள் உள்ளத்தில் உரம் மிகுந்தே விளங்கினர். போர் வெறி அவர் உள்ளத்தை விட்டு அகலவில்லை. மேலேறிச் சென்று தாக்கி, மேலும் பல களிறுகளைக் கொன்று குவிக்க விரைந்தது அவர் உள்ளம்; ஆனால் கால்கள் தளர்ச்சியுறுவதை அவர்கள் உணர்ந்தார்கள். செய்வதறியாது சிறிது திகைத்தார்கள்; அந்நிலையில், களத்தில் அவர்கள் கொன்று வீழ்த்திய வேழங்களின் வெண்கோடுகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது அவர் கண்ணில் பட்டது; ஊன்று கோலாய் உதவுமளவு நீண்டு வளர்ந்திருந்த அக்கோடுகளைக் காணவே அவர் கலக்கம் அகன்றது. அக்கோடுகளையே ஊன்று கோலாகக் கொண்டு குருதிச் சேற்றைப் பொருட்படுத்தாது, முன்னேறிச் சென்று தாக்கி வென்றனர். என்னே அவர் வீரம்.

“ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்
இழுக்கும் களிற்றுக்கோடு ஊன்றி எழுவர்;
மழைக்குரல் மாமுரசின் மல்குநீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து” —களவழி : 3.

உருவிழந்த கருங்காக்கை :

கழுமலக் களத்தில் எதிர் எதிர் நின்று போரிடும் சேரர் சோழர் ஆகிய இருதிறப் படையிலும் சிறந்திருந்த வில் வீரரும் வேல் வீரரும் தத்தம் அமர்த் திறத்தை அதிசயிக்கும் வகையில் காட்டிப் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவர் வீசி எறிந்த வேற்படைகளும், அவர் கைவில்லிலிருந்து விரைந்து வெளிப்பட்ட அம்புகளும் எதிர்வரும் வீரர் உடல்களிலும் களிறுகளின் உடல்களிலும், குதிரைகளின் உடல்களிலும் ஆழப்பதிந்து, அவ்வுடல்களில் பெரிய பெரிய புண்களை உண்டாக்கிவிட்டன. அப்புண்களிலிருந்து கொப்புளித் தொடங்கிற்று குருதி.

எங்கே குருதிவாடை வீசினும், ஆங்குத் தம் இனத்தோடு சென்று குடரையும், குடரிலிருந்து சொரியும் குருதியையும் உண்டும் குடித்தும் உயிர் வாழும் இயல்புடைய காகங்கள், குருதி ஆறு பாயும் அக்களத்தில் வந்து குவிந்தன. காக்கைகளின் குருதிவேட்கை, அக்குருதி, புண்களிலிருந்து வெளிப்பட்டு விழும்வரை காத்திருக்க விரும்பவில்லை. புண்களை விட்டுப் புறப்படும்போதே குடிக்கத் துடித்தன. அவ்வாறே வீரர் மார்பிலும் தோளிலும், விலங்குகளின் உடல்களிலும் உண்டான விழுப் புண்களைக் குத்திக் குடிக்கத் தொடங்கின. போர்வெறி மிகுதியால் மெய்ம் மறந்து போரிட்டுக் கொண்டிருந்தமையால், வீரர்களும், விலங்குகளும், காகங்கள் புண்களில் வாய்வைத்துக் குருதி குடிப்பதைப் பொருட்படுத்தினாரல்லர். அதனால் காகங்கள் குருதியை அமைதியாகக் குடித்துக்கொண்டிருந்தன.

அங்ஙனம் குடிக்கும் போது, அப்புண்களிலிருந்து புறப்படும் குருதி வேகமாக வெளிப்படுவதால், அது அக்காகங்களின், உடலை நனைக்குமளவு எழும்பி எழும்பி வீழ்ந்தது. குருதி குடிப்பதால் காகங்களின் அலகுகள் கருநிறம் இழந்து செந்நிறம் பெற்று விளங்க, கொப்புளித்து விழும் குருதியால் நனைந்து உடல்களின் கருநிறமும் மறைந்து போகச் செம்மேனி பெற்றன. அந்நிலையில், அவற்றைக் காண்பவர் எவரும், அவற்றைக் காக்கை எனக் கருதார். அலகை நோக்க மீன் குத்திப் பறவையோ எனச் சிலர் மயங்க, உடலை நோக்கச் செம்போத்துப் பறவையோ எனச் சிலர் மயங்கக், கருநிறக் காக்கைகள் நிறம் மாற உருமாறிக் காட்சி அளித்தன. அவை அந்த அளவு ஆகுமாறு, அன்று நடந்த அமரில், விற்படை வேற்படை வீரர்கள் வெறிகொண்டு போரிட்டனர்.

“தெரிகணை, எஃகம் திறந்த வாயெல்லாம்
குருதி படிந்து உண்ட காகம்—உருவுஇழந்து
குக்கில் புறத்த; சிரல்வாய; செங்கண்மால்
தப்பியார் அட்ட களத்து.” —களவழி : 5

செம்பஞ்சுக் கூடை :

போர் நெடும்பொழுது நடைபெற்றுவிட்டது. அதனால், அன்றைய போரை அந்த அளவோடு நிறுத்திக்கொள்ளக் கருதினார்கள் படைத் தலைவர்கள். உடனே இருதிறப் படை முனைகளிலிருந்தும் போர் நிறுத்த முரசுகள் முழங்கின. அது கேட்டனர் படை வீரர்கள். படைத்தலைவர் ஆணைக்கு அடங்கிப் பாசறை புக விரும்பினார்கள் அவர்களும், ஆனால், அவர் ஆண்மையும் ஆற்றலும், அதற்குள்ளாகவே போர்க்களம் விட்டுப் போக மறுத்தன. அவ்வுணர்வுகளுக்குக் கட்டுப்பட்டமையால், அவர் கால்களும் கட்டிப் போட்டனபோல் களத்திலேயே நின்றுவிட்டன. போரிடுவதிலேயே கருத்தினைப் போக்கினார்கள் போர் வீரர்கள்.

போர் புரிந்து கொண்டிருக்கும் அவர் கண்களில் பகையரசர்களின் வெண்கொற்றக் குடைகள் புலப்பட்டன. இவ் வெண்கொற்றக் குடையுடையானாகிய வேந்தன்மீது கொண்டுள்ள அன்பினால் அவ்வவோ, அவ்வேந்தன் படையாளர் பேராற்றல் காட்டிப் போர் புரிகின்றனர் என்ற ஆத்திரம் ஒருபாலும், எம் வேந்தனுக்குரிய வெண்கொற்றக் குடைக்கு நிகராக விளங்குவதோ. வேற்றரசர் தம் வெண்கொற்றக் குடையும் என்ற பொறாமை ஒருபாலும் உருக்கொண்டு எழ, இருதிறப் படைவீரரும், எதிர் எதிர் வரிசைகளில் விளங்கிய வெண்கொற்றக் குடைகள் மீது உரங்கொண்டு பாய்ந்தனர்.

பகையரசன் குடைமீது பாயுங்கால், பகைவர் படை வீரர், தம் அரசன் குடைமீது பாய்ந்து வருவது கண்டனர். அதனால் ஒரு சிலர் மேலே செல்வதை விடுத்துத் தம் வெண்கொற்றக் குடையினைக் காத்து நின்றனர். இதன் விளைவால் கடும் போர் மூண்டது. ஆயினும், இரு திறத்தவர் உள்ளத்திலும், ஊக்கமும், உரமும் உருத்தெழுந்து நின்றமையால் அவர் கருதியது நிறைவேறிவிட்டது. சோணாட்டு வெண்கொற்றக் குடையினைச் சேரநாட்டு வீரர்கள் வெட்டி வீழ்த்தினர். சேரநாட்டு வெண்கொற்றக் குடையினைச் சோணாட்டார் வெட்டி வீழ்த்தினர். ஆனால் அதே நிலையில், அவ்வெண் கொற்றக் குடைகளின் அருகே நின்று அவற்றைக் காத்திருந்த வீரர் பலர், இரு திறத்திலும் உயிரிழந்து வீழ்ந்தனர்.

காம்பற்றுத் தலைகீழாக வீழ்ந்து கிடக்கும் வெண் கொற்றக் குடைகளில், இறந்து வீழ்ந்த வீரர்களின் சரிந்த குடர்கள் நிறைந்திருந்தன. அக்காட்சி, பருத்திப் பெண்டிரின் மனை முன்றில்களில், அடித்துக் கொட்டை போக்கிய செம்பஞ்சினை இட்டு வைத்திருக்கும் கூடைகள் போல் காட்சி அளித்தது. அமைதியான வாழ்வு பெற்றுக் கண்ணுக்கினிய அக்காட்சிகளைக் காட்ட வேண்டிய நாடு, மன்னர்களின் போர் வேட்கையால், அமைதியிழந்து கண்கலங்கும் இக்கொடுங் காட்சியைக் காட்டுவது கண்டு கலங்கிக் கண்ணீர் சொரிகின்றார் புலவர் :

“மைந்து கால்யாத்து மயங்கிய ஞாட்பினுள்
புய்ந்து கால் போகிப் புலால் புகுந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற; புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.” —களவழி: 29

நெய்தல் இடையே வாளை பிறழும் வெள்ளம்

சோணாட்டு வாள் வீரரும் வேல் வீரரும் களம் புகுந்தனர். வாள் வீரர் குதிரைகள் மீது அமர்ந்து சென்றனர். குதிரைகள் நல்ல குதிரைகள். அவற்றின் தொழில் நலம், பிடரி மயிர் அழகாகக் கத்தரித்து விடப்பட்டிருந்த அவற்றின் தோற்ற நலத்திலேயே நன்கு புலப்பட்டது. அத்தகைய குதிரைகள் மீது அமர்ந்து செல்லும் வீரர் கையில் மின்னும் வாள்களும் வெற்றி பல கண்ட விழுச் சிறப்புடைய; பகைவர் உடல்களைப் பல்லாயிரக் கணக்கில் வெட்டி வெட்டி வீழ்த்தினமையால் பெற்ற அவற்றின் வெண்மை நிறம், அவர்கள் அவற்றை வலமாகவும் இடமாகவும் மாறிமாறித் திருப்புத்தோறும் விட்டு விட்டு ஒளி வீசிற்று. வேற்படையாளர் தேர் ஏறிச் சென்றனர். அத்தேர்களின் உச்சியில் சோணாட்டுப் புலிக் கொடி பெருமிதத்தோடு பறந்துகொண்டிருந்தது. சேரநாட்டு வேழப் படையின் தாக்குதலைத் தாங்க வல்ல திண்மை வாய்ந்திருந்தன அத்தேர்கள். அவற்றின் மீது அமர்ந்து செல்ல வீரர் ஏந்திய வேல்கள், பகைவர் படையைச் சேர்ந்த யானைகள் எண்ணிலாதனவற்றின் மீது, எண்ணற்ற முறை எறியப்பெற்றமையால், முனைகள் மிகமிகக் கூர்மைய வாய் மின்னின.

இவ்வாறு ஏற்ற ஊர்திகளில் ஏற்புடைய படைக் கலங்களோடு களம் புகும் அவ்வீரர்களுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. வளம் மிக்க அவர் சோணாட்டில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாயும் கார்காலத்தில், ஏரி குளம் முதலாம் நீர் நிலைகளில் நீர் அளவிற்கு மேல் நிறைந்து போவதால், அவற்றின் கரைகள், அந்நீர்ப் பெருக்கைத் தாங்க மாட்டாமல் உடைந்துபோகும். அவ்வுடைப்புக்களின் ஊடே பாய்ந்து வெளிப்படும் செம்புனல் வெள்ளம், நன்செய்களை யெல்லாம் நீர் மயமாக்கி விடும். அவ்வாறு தேங்கி நிற்கும் செந்நீரின் இடையிடையே நெய்தல் மலர்கள் தலைகாட்ட வெள்ளம் கண்டு துள்ளும் வாளைகள் அவற்றைச் சூழ்ந்து சூழ்ந்து வரும். அவர்கள் நாட்டில் கண்டு மகிழ்ந்த அக்காட்சியை அக்களத்திலும் காணவேண்டும் என்று விரும்பினார்கள். வாள் கொண்டும், வேல் கொண்டும் கடும் போர் புரிந்தார்கள். கணப்பொழுதில் களிறுகள் பல உயிரிழந்து வீழ்ந்தன. வீழ்ந்த அவ்வேழங்களின் உடல்கள், பொய்கைக் கரைகளாக, அவற்றின் உடல்களிலிருந்து விழுகி ஒன்று கலந்து தேங்கிப் பாயும் குருதி வெள்ளம், பொய்கையிலிருந்து புறப்பட்டுப் பாயும் புதுப் புனலாக, போரில் முறிந்து வீழ்ந்த வேல் முனைகளும் வாள் முனைகளும், நெய்தல்மலரும் வாளைமீனுமாக, களம் அவர்கள் காண விரும்பிய காட்சியைக் காட்டி விட்டது.

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாயெல்லாம்
நெய்தல் இடைஇடை வாளை பிறழ்வன் போல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளிவாள் தாயினலே
கொய்சுவல் மாவின், கொடித் திண்தேர்ச் செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.” —களவழி. 33

மலையில் பாய்ந்தேறும் புலி

யானைப் படையால் பெருமையுற்றது சேரர் படை. அப்படையைக் கொன்று களம் கொள்வது அவ்வளவு எளிதன்று. பகைவர் படை வீரர் எவ்வளவுதான் ஆரவாரம் செய்து கொண்டு வரினும் அது கண்டு அஞ்சாது அவ்வேழப் படை. பகைவர்களின் போர் முரசு எவ்வளவுதான் முழங்கினும் அது கேட்டு நடுங்காது அது. காற்றாலோ, மழையாலோ, கடும் இடியாலோ சிறிதும் கலங்காது மலைபோல், நிலை கலங்காது நின்று போரிடும் பேராண்மை வாய்ந்தது அவ்வேழப் படை.

பகைவனின் இப்படைப் பலத்தை அறிந்திருந்தான் செங்கணான். அதனுல், அவ்வேழப் படையின் வலி கெடுக்கும் ஏற்பாடுகளோடு வந்திருந்தான். வேழப் படையை வென்று அழிக்கக் கூடியது, அது எதிர் பார்க்காத நிலையில், கண்மூடிக் கண் திறப்பதற்குள், விரைந்து பாயவல்ல குதிரைப் படைகளே என்பதை அறிந்திருந்தான் அவன். அதனால் குதிரைகளைப் பெருவாரியாகக் கொண்டு வந்திருந்தான். அதிலும் உள்ளத்தில் ஊக்கமும், உடம்பில் உரமும் மிக்க குதிரைகளையே தேர்ந்துகொண்டு வந்திருந்தான். அம்மட்டோ! குதிரைகள் சிறந்தனவாய் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. அக்குதிரைகளைச் செலுத்தும் வீரரும், அவற்றைப் போரின் போக்கறிந்து செலுத்த வல்ல அறிவுடையராதல் வேண்டும். அவர்பால் அவ்வாற்றல் இல்லையேல், அக்குதிரைகளின் ஆற்றல் பயன் அற்றுப்போம் என்ற இப்போர் நுணுக்கங்களை அறிந்து அக்குதிரைகளின் விரைவினைத் தாங்கிக் கொண்டு, களத்தின் நிலைமையையும் கருத்தில் இருத்தி, கைப்படைகளைக் கையாளும் திறத்திலும் சிறந்த வீரர்களையே தேர்ந்து, அவர்கள்பால் அக்குதிரைகளை ஒப்படைத்திருந்தான்.

போர் தொடங்கிவிட்டது. மலைநாட்டு வேழப் படை, பாய்ந்து வரும் சோழப் படை ஒரு சிறிதும் மேல் நோக்கி வராதபடி, மலை வரிசைபோல் நின்று தடுத்துவிட்டது. அந்நிலை உண்டான உடனே, சோணாட்டுக் குதிரைப் படை விரைந்து களம் புகுந்தது. களம் புகுந்த குதிரைப் படை, ஊக்கமும் உரமும் மிகுந்து, ஊர்ந்து வரும் வீரர்களின் குறிப்பறிந்து விரைந்து சென்று, வேழங்களின் மத்தகத்தின் மீது, பாய்ந்து ஏறிற்று. அது எதிர்பாராது நிகழ்ந்துவிடவே, வேழங்கள் வெருண்டோடின.

நிலை கலங்காது நின்ற யானைகளின் அணிவகுப்பு மலை. வரிசைபோல் தோன்ற, உரமும் ஊக்கமும் கொண்டு விரைந்து பாய்ந்த குதிரைகள், மலைமீது விரைந்து ஏறும் வேங்கைப் புலிகள்போல் காட்சி அளித்தன. மலைமீது புலி பாயும் காட்சியை நினைவூட்டும் அந்நிகழ்ச்சி, மலை நாட்டானாகிய சேரனைப் புலிக்கொடியானாகிய சோழன் வெல்வான் என்பதை முன்னறிவிக்கும் நிமித்தமாம் போலும்!

“பரும இனமாக் கடவித் தெரி மறவர்
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும்புலி போன்ற, புனல்நாடன்
வேந்தரை அட்ட களத்து.” —களவழி: -15

மண்மகள் செம்மேனி :

சோழன்செங்கணான் செங்கோல் நெறி நின்று நாடாண்டிருந்தான். அவன் ஆட்சியில், என்றும் அறம் பொய்த்துப் போனது இல்லை. அதனால் அவன் நாட்டு மக்கள் அவனுக்கு மலர்மாலை சூட்டி வாழ்த்தினார்கள். அவன் அரண்மனை வாயிலில், மும்முரசுகளும் எக்காலத்தும் முழங்கின. நல்லாட்சியின் பயனாய் நாடு நிறைந்த மழைபெற்று நலம் உற்றது.

சோணாட்டின் இச்சிறப்புக்களை அறிந்தனர், சேரனும், அவன் படை முதல்வரும். அவர்க்கு அந்நாட்டின் நல்வாழ் வைக் காணக் காண, மனத்தில், பொறாமைத் தீ மூண்டது. காழ்ப்புணர்வு கிளைத்துப் படர்ந்தது. செங்கணான் நாட்டுச் செல்வ வாழ்வு கண்டு காய்ந்தனர். அதன் பயனாய்க் கழுமலப் போர் மூண்டது.

களத்தில் கணக்கற்ற உயிர்கள் மாண்டன. உயிரிழந்து வீழ்ந்த உடல்களிலிருந்து பெருகி ஓடிய செந்நீர் வெள்ளத்தால் கழுமலக்களம் செங்களமாய் மாறிக் காட்சி அளித்தது. அக்களக் காட்சியையும், அக்களப்போர்க் காரணத்தையும் காண்பவர் உள்ளத்தில் ஓர் உயர்ந்த கருத்து உருப் பெறச் செய்தது களத்தின் அச்செந்திறம்.

சோணாடு வளம் பெற்றுளது. சோணாட்டு மன்னன் வாழ்த்தப்பெறுகிறான் என்பது உண்மை. அந்நிலை அவன் நாட்டு மண்ணுக்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பன்று. அது எந்நாட்டு மண்ணுக்கும் உண்டு. ஆனால் அது அம்மண்ணின் நலத்தால் மட்டும் வந்ததன்று. அது அவன் அரசியல் அற வாழ்வால் வந்தது. அந்நாட்டு மக்கள் தங்கள் கடமையுணர்ந்து தொழிலாற்றுவதால் வந்தது. சேரர், இதைச் சிந்தையில் இருத்திச் செயல் புரிந்திருந்தால், அவர் நாடும் அந்நலம் பெற்றிருக்கும். அவர் நாட்டு மண்ணும் அம்மாண்பு பெற்றிருக்கும். ஆனால் நாட்டு மண்ணிடத்தில் மட்டும் நலம். இருந்து பயன் இல்லை, நாட்டு மக்கள் நினைப்பிலும் நலம் இருத்தல் வேண்டும். அந்நலத்தை இழந்துவிட்டார்கள் சேரர். சோணாட்டின் நலம் கண்டு காய்ந்தனர். இறுதியில் உள்ள நலமும் போயிற்று. சேரரின் இந்நினைப்புக் கேட்டால், இருவர் நாட்டு தலங்களும் நலிவுற்றன.

இதைக் கண்டாள் நிலம் என்னும் நல்லாள். “நலம் அளிக்க நான் இருக்க, என்பால் நல்லற நெறி நின்று தொழிலாற்றிப் பயன் பெறாது, காய்தலைக் கருத்தில் கொண்டு களம் புகுந்து, அந்தோ தாமும் கெடுகின்றனர்; பிறரையும் கெடுக் கின்றனர்; என்னே இவர்தம் கெடுமதி!” என்று எண்ணினாள். அவரைக் காணவும் நாணினாள் ஒருபுறம்; மாறாச் சினம் கொண்டாள், மறுபுறம். உடனே நெந்நிறப் போர்வை ஒன்றை எடுத்துத் தன் உருத்தெரியாவாறு போர்த்துக்கொண்டாள். அக்காட்சியே, களக் காட்சியைக் காண்பவர் கருத்தில் தோன்றிற்று.

“மை இல் மாமேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள்—பொய்தீர்ந்த
பூந்தார் முரசின் பொருபுனல் நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து,” —களவழி : 32

குன்றின் மேல் குருவிக்கூட்டம் :

கொம்புள்ளவற்றிற்கு ஐந்தும், குதிரைகளுக்குப் பத்தும் என்றால், யானைகளுக்கு ஆயிரம் முழம் இடைவெளி வேண்டும் என்று கூறுவார்கள் அறிந்தவர்கள். நன்கு பழக்கப் பெற்றும் நாட்டு மக்களிடையே கலந்து வாழக் கற்றுக்கொண்ட யானைக்கு, அதுவும், அது மதம் படாத காலத்தில் கூறிய வரையறை இது. அது மதம் பட்டுத் திரியும் காலத்தில் ஓராயிரம் ஆறயிரமாக நீளவேண்டி நேரிடும். போர்க்களம் புகாத யானைக்கே இது என்றால், போருக்கு என்றே பழகிய யானைகளுக்கு, போரில் பேராற்றல் காட்டிப் போரிட வேண்டும் என்ற கருத்தோடு, வெறியூட்டி விடப்பட்ட நிலையில், அவற் றின் கண்ணில் படாத இடத்தில் இருப்பதே நன்று. போர் யானை ஒன்றிற்கே இல்நிலை என்றால், அத்தகைய யானைகள் எண்ணிலாதன களம் புகுமாயின், பகைவர் படை எங்கே நிற்கவேண்டும் என்று அறிந்து கூறவே முடியாது. அவ்வளவு நெடுந்தொலைவில் அது நிற்பதே நலம் பயக்கும்.

சேரநாட்டுப் படையில் யானைகளே அதிகம். படை வரிசையின் முன்னிலையில் அவைகளே அணிவகுத்து நிற்கும். இதை அறிந்தும் சோழர் படைக் களம் புகுந்துளது. களம் புகுந்த படை நெடுந்தொலைவில் நின்று தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும்; சேரரின் யானைப் படை நிற்கும் அணியை அணுகாமல், பிற படை நிற்கும் இடம் சென்று போரிட வேண்டும். என்று கருதிற்றோ என்றால் அதுவும் இல்லை.

சேரனைச் சிறைபிடிக்க வேண்டுமாயின், அவன் வேழப் படையையே முதலில் வெற்றிகொள்ளுதல் வேண்டும். அதனால் சோணாட்டுப் படை, அவ்வேழப் படை வரிசையினையே வளைத்துக்கொண்டது. சோழர் படையாளர்க்கு அவ்வளவு நெஞ்சத்துணிவு உண்டானதற்குக் காரணம், அப் படை தன் அங்கமாக, விற்படை அணி ஒன்றைப் பெற்றிருந்ததேயாகும். வேழங்களை அணுக வேண்டியது இல்லாமலே, அவை நிற்கும் இடத்திற்கு நெடுந்தொலைவில், அவற்றில் கேடு விளைவிக்கக்கூடிய எல்லைக்கு அப்பால் இருந்தவாறே, தம் வில்லாற்றலால், அவ்வேழப் படையைக் கொன்றழிக்கவல்ல வில்லாளர் பலர். அப்படையில் இடம் பெற்றிருந்தனர் அதனால் சோழர் படை, சேரர் வேழப் படை கண்டு அஞ்சாமல் களம் புகுந்தது.

களம் புகுந்த வில் வீரர், விற்களை வளைத்து, அம்புகளை மழைத்தாரைகளென மளமளவென ஏவினர். விற்களிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் விரைந்து சென்று, வேழங்களின் உடலில் குறி தவறாமல் ஆழப் புதைந்தன, ஓர் அம்பாலோ; ஈர் அம்பாலோ வேழங்களின் உரம் அழிந்துவிடாது என்பதை வில்வீரர் அறிந்திருந்தமையால், எண்ணிலா அம்புகளை எடுத்தெடுத்து ஏவிக்கொண்டே இருந்தனர். யானைகளின் உடலில் இனி இடம் இல்லை எனக் கூறுமளவு அவற்றின் உடல்களில் அம்பு தைக்குமளவு ஓயாது ஏவிக்கொண்டே இருநதனர். இனியும் நின்று போரிடுவது இயலாது என்ற நிலை பெற்று, நிலைகுலைந்து ஒன்றின் உடல் ஒன்றுமீது சாயும்வரை அம்பேவிக்கொண்டே இருந்தனர்.

இறுதியில் அம்பேறுண்ட யானைகள் நிலைகலங்கி அழிந்தன. ஒன்றையொன்று அடுத்து நிற்கும் மலைக்குன்றுகள் போல் காட்சியளிக்கும்படி, ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்து இறந்து கிடந்தன. அம்புகளின் முன்பாதி அழுந்திக் கிடக்க, பறவைகளின் இறகுபோலும் மறுபாதி புறத்தே வெளிப்பட்டுத் தோன்றிக் கிடக்க, யானைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சி, காண்பவர் உள்ளத்தில் மலை நாடாகிய சேர நாட்டில், மாலைப்பொழுதில் மனை திரும்பிய குருவிக்கூட்டம், எள்விழ இடம் இல்லாதபடி நெருங்க அமர்ந்திருக்கும் நெடிய மலைக் காட்சியை நினைப்பூட்டுவதாய்த் தோன்றிற்று. தோன்றவே, மனம் மகிழும் அம்மலைக் காட்சியைக் கண்டு களித்த கண்களால், கலங்கிக் கண்ணீர் சொரியவேண்டிய இக்கொடுங்காட்சியைக் காண நேர்ந்ததே என எண்ணிக் கண்ணீர் சொரிந்தனர்.

“யானை மேல் யானை நெரிதர, ஆனாது
கண்நோ கடுங்கணை செய்ம்மாய்ப்ப—எவ்வாயும்
எண்ணரும் குன்றில் குரீஇயினம் போன்றவே
பண்ணார் இடிமுரசின் பாய்புனல் நீர்நாடன
நண்ணாரை அட்ட களத்து.” —களவழி : 8

புயல் புகுந்த பனந்தோப்பு :

படையால் பெருமை பெற்றனர் சோழர். அவர் படைப் பெருமையைப் பாராட்டவந்த ஒரு புலவர், “முன்னே தேர்ப்படை செல்ல, எல்லாவற்றிற்கும் இறுதியில், வில்வீரரும், வாள் வீரரும், வேல்வீரரும். ஆகிய வீரர்கள் செல்ல, இவ்வாறு வரிசை வரிசையாகச் செல்லும் அப்படை, இடைவழியில் ஒரு பனந்தோப்பைக் கடந்து செல்ல வேண்டி வந்தால், படைக்குத் தலைமை தாங்கிச் செல்வோர், அப்பனந் தோப்புள் நுழையும் காலத்தில், நுங்குக் காலமாய் இருந்து, அவர்கள் நுங்குத் தின்று சென்றால், படையின் இடை நிலையில் உள்ளார் அத்தோப்பைக் கடக்கும் காலம் பழக் காலமாய் மாறிவிடும் ஆதலின், அவர்களுக்கு நுங்குக் கிடைக்காது; பழமே கிடைக்கும்; படையின் கோடியில் வருவார் ஆங்கு வரும் காலத்தில், பழமும் அற்றுப்போய்க் கிழங்குக் காலமே வந்துவிடும் ஆதலின், அவர்கள் கிழங்கே தின்பர்” என்று கூறியுள்ளார். அவர் கூறியதை வைத்து நோக்கினால், படையின் முன் வரிசையில் செல்வார் கடந்து சென்ற ஓர் இடத்திற்குப் படையின் இறுதியில் இருப்பவர் வந்து சேரக் கிட்டதட்ட ஒன்பது திங்கள் ஆகும. அங்ஙனமாயின், சோழர்படை எவ்வளவு பெரிது என்பது புலனாம்.

அப்படை அளவால் மட்டும் பெரிதன்று. ஆற்றலாலும் பெரிது அப்படை. இயல்பாகவே மறவர் குடியில் பிறந்தவர்களையே கொண்டது அது. தேரில் அமர்ந்தும், யானையைச் செலுத்தியும், குதிரை ஊர்ந்தும் களம் கலங்க ஓடியும் போரிடும் அம்மறவர் அனைவரும் பெரிய பெரிய படைக் கலங்களைத் தளராது தாங்கிப் போரிட வல்ல திண்மை வாய்ந்த தோள் படைத்தவராவர். அத்தகையார்களைக் கொண்ட சோழர் பெரும் படையே கழுமலப் போரில் கலந்து கொண்டது.

சோழர் படை வீரர்க்கு ஓர் ஆசை. அவர்கள் கழுமல நகர் நோக்கி வருங்கால், இடை வழியில் நுழைத்து வந்த பனந்தோப்பில் புயல் காற்றுப் புகுந்து கடுமையாக வீச, அதன் கடுமைக்கு உள்ளாகிய பனை மரங்கள் பேயாட்டம் ஆடிக் காய்களைப் பறிகொடுக்க, உதிர்ந்த காய்கள் அத்தோப்பு நிறைய உருண்டு கிடந்த காட்சியைக் கண்டு வந்தார். போலும், அதனால் அது போலும் காட்சியைக் களத் திலும் காண வேண்டும் என்று எண்ணிவிட்டார்கள். அவ்வளவே, வாள் எடுத்துக் களம் புகுந்தார்கள். சேரநாட்டு வீரர் தலைகளை வெட்டி உருட்டினார்கள். தலை இழந்த முண்டங்கள், பனை மரங்கள் போல் ஆங்காங்கே அசைவற்று நிற்க, கரிய மயிர் முளைத்த தலைகள், காய்கள்போல் களமெங்கும் உருண்டு கிடந்தன. அக்காட்சி, அப்பனந்தோப்புக் காட்சியை அப்படியே காட்டிவிட்டது.

நுங்காகவும், பழமாகவும், கிழங்காகவும் பயன்பெற வேண்டிய காய்களைக் கொடிய காற்றுக் குலைத்துக் கெடுத்தது போல், பாடுபட்டும் பயன் விளைக்க வல்ல வீரர் தலைகள், அந்தோ! கொன்னே கொய்யப் பெற்றன. என்னே கொடுமை!

“திண்தோள் மறவர் எறியத், திசைதொறும்
பைந்தலை பாரில் புரள்பவை—நன்கு எனைத்தும்
பெண்ணை அம் தோட்டம் பெருவெளி புக்கற்றே,
கண்ணார் கமழ்தெரியல் காவிரி நீர் நாடன்
கண்ணாரை அட்ட களத்து.” —களவழி : 24

கந்தில் பிணித்த கோணாய் :

கழுமலக் கோட்டைக்கான இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டுளது. இரு திறத்துப் படைவீரரும் இரண்டறக் கலந்து கடுமையாகப் போரிட்டுக் கொண்டுள்ளனர். தேரோடு தேர் போராடித் தீர்த்தது. களிற்றுப் படையைக் கொன்று தீர்த்தது குதிரைப்படை. குதிரைப் படையும் கள வெற்றியைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. இறுதியில் எஞ்சியுள்ள இருபடை வீரர்களும் போரிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களும் வில்லாற்றல் வாளாற்றல்களை யெல்லாம் காட்டிப் போரிட்டுக் கடைசியில், வேலேந்திப் போரிடத் தொடங்கினர்.

களத்தில் வீசிய பிணவாடை கழுமல நகரை அடுத்திருந்த காட்டில் வாழும் குள்ள நரிகளை விருந்துக்கு அழைத்ததுபோல் ஆகிவிட்டது. ஒரு பெரிய கூட்டம் வந்து களத்தைச் சூழ்ந்து கொண்டது. போர் எப்போது ஓயும், பிணங்களைப் பிடுங்கித் தின்னலாம் எனக் காத்துக் கிடந்தது. அந் நிலையில் போரும் ஒருவாறு ஓய்ந்தது. சோணாட்டு வீரர்கள் வீசிய வேற்படைகள், சேரநாட்டு வீரர்களின் உடலில் பாய்ந்தன. அவர் குடர்களைச் சரித்துவிட்டு அங்கேயே அசைக்க முடியாதபடி ஆழமாகப் பதிந்துவிட்டன. அதற்கு மேலும் எதிர்த்து நிற்கமாட்டாத சேரர் படை புறமுதுகிட்டது.

உடனே களத்தில் புகுந்தன குள்ளநரிகள். அவற்றுள் சில, வேல் தைத்து வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் சரிந்த குடர்களைக் கவ்வி இழுத்தன. வீரர்களின் உடல் உரம் மிக்க உடலாதலின், அக்குடர்கள் எளிதில் அறுபடவில்லை. ஆயினும் அவற்றை விடாது பற்றி ஈர்த்துக்கொண்டே யிருந்தன குள்ள நரிகள்.

அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, சேரமான் கணைக்கால் இரும்பொறையின் கைகளில் விலங்கை மாட்டி, அச்சங்கிலியைத் தேர்க்கம்பத்தில்கட்டினார்கள் சில, வீரர்கள். அதைக் கண்ட சிலர்க்கு, அந்நினைப்பே அவர் நெஞ்சில் நிலை பெற்றுவிட்டமையால், வேற்படைகள், தம் காம்புகள் வெளியே தோன்றும்படி தைத்திருக்க, அவற்றால் சரிந்த குடர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் குள்ள நரிகள், வேட்டை விரும்பும் வீரர் மனைக்கம்பங்களில், கழுத்தில் சங்கிலி மாட்டி வரிசை வரிசையாகக் கட்டி வைத்திருக்கும் வேட்டை நாய்கள் போல் காட்சி அளித்தன. என்னே களக் கொடுமை!

“இணரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர்இலங்கு எஃகம் எறியச்; சோர்ந்து உக்க
குடர்கொண்டு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோணாய் புரையும், அடர்பைம்பூண்
சேய் பொறாது அட்டகளத்து” —களவழி : 34

மருண்டோடும் மயில் கூட்டம் :

சோணாட்டுத் தலைநகரை அடுத்த ஒரு மலர்ச் சோலையில், ஒரு நாள் மாலை, சோழன் செங்கணான் உலவிக் கொண்டிருந்தான். அம்மலர் வனத்தின் வனப்புக்களைக் கண்டு மகிழ்ந்து வந்தவன் ஓரிடத்தில் மயிற்கூட்டங்கள், தம் தோகைகளை விரித்து ஆடிக்கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். கார் மேகத்தின் வரவு கண்டு பெற்ற களிப்பால் அம்மயில்கள் ஆடும் நடனத்தில் தன் நெஞ்சைப் பறிகொடுத்து விட்டான். அது சிறிது நேரமே. சிறிது நாழிகைக்கெல்லாம் ஒரு பெரும் புயற்காற்று எழுந்தது. மரக்கிளைகள் மளமளவென ஒடிந்து வீழ்ந்தன. ‘ஓ’ என்ற பேரிரைச்சல் எழுந்தது. அவ்வளவே, மயில்களின் மகிழ்ச்சி எங்கோ மறைந்து விட்டது; அவற்றின் உள்ளத்தில் அச்சம் குடிபுகுந்து கொண்டது; உடனே மூலைக்கு ஒன்றாக ஓடத் தொடங்கி விட்டன.

மயிலின் ஆட்டம் கண்டு மகிழ்ந்த மன்னவன், அவற்றின் ஓட்டம் கண்டு உள்ளம் துடித்தான். அந்நிலையில் ஓடோடி வந்தான் ஓர் ஒற்றன், கழுமலக் கோட்டையில் சேரர் படை திரட்டுவதைத் தெரிவித்தான். சோழன் சினம் கொண்டான்; அவன் கண்கள் சினத்தால் சிவந்தன; அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது ஒரு வஞ்சினம். “என் மீது படை கொண்டு எழுந்த மலை நாட்டு மாவீரரின் மனைவியர், புயல் கண்டு அஞ்சி ஓடும் இம்மயிற்கூட்டம்போல், தம் கணவரை இழந்த கொடுமை கண்டு அலறித் துடித்து அழும்படி செய்யேனாயின், என் அரசு அழிக” என அறிவித்து விட்டு, அன்றே சேரநாடு நோக்கிப் படையைச் செல்ல விட்டான்.

கழுமலக் கோட்டையை வளைத்துப் போரிட்டான். கணக்கற்ற வீரரை வீழ்த்தினான். வெற்றி கண்டான். எடுத்த சூளையும் முடித்தான். கணவரை இழந்த சேர நாட்டுச் செல்வியர் சிந்தை நொந்து, செய்வதறியாது, அலறிப் புடைத்துக்கொண்டு ஓடோடி வந்து, களம் புகுந்து ஓலம் இட்டனர். அக்காட்சி கண்டு களித்தது செங்கணான் உள்ளம். என்னே அப்போர் வெறி!

“கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல்—நாற்றிசையும்
கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
சினமால் பொருத களத்து” —களவழி: 29

"https://ta.wikisource.org/w/index.php?title=கழுமலப்போர்/களக்காட்சி&oldid=1377033" இலிருந்து மீள்விக்கப்பட்டது