கழுமலப்போர்/போரின் பொதுவியல்பு

கழுமலப் போர்

1. போரின் பொதுவியல்பு

லக வாழ்வில், போர் ஓர் இன்றியமையா நிகழ்ச்சியாக உருவெடுத்து விட்டது. உள்ளத்தில் இயல்பாக ஊறி எழும் பல்வேறு உயிர்க் குணங்களுள் போர் உணர்வும் ஒன்று. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையா உணவுப்பொருள்களை உளவாக்கி உயிர்களுக்கு வாழ்வளிப்பது நிலம், அந்நிலவுலகின் இயல்பு. எங்கும் ஒரே தன்மைத்தாக அமையவில்லை. இயற்கை வளம் மிக்க காடாய்க் காட்சி அளிக்கிறது ஒரு பால், நீர்வளம் மிக்க நன்செய்யாய் நலம் பெற்றுளது ஒரு பகுதி. ஒரு பகுதி மலைவளம் மிக்க மேடாய் மாண்புற்றுளது. ஒரு பகுதி கடல் வளம் கொழித்துக் கவின்பெறக் காண்கிறோம். அம்மட்டோ! ஒரு பகுதி, ஒன்றிற்கும் உதவா உவர் நிலமாய் உளது. மற்றொரு பகுதி மணல் பரந்து மாட்சி இழந்துளது. இயற்கை நிகழ்ச்சியாலாம். இவ்வேற்றத் தாழ்வுகள், நிலவளவோடு நின்றுவிடவில்லை, அவை அந்நிலத்தில் வாழும் மக்கள் வாழ்விலும் இடம் பெற்றுப் பெரும் புரட்சிகளை உருவாக்கியுள்ளன. நிலங்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்ப, அந்நிலத்து மக்கள் வாழ்விலும் ஏற்றத் தாழ்வுகள் இடம் பெற்று விட்டன.

நன்செய் போலும் நிறைபயன் நல்கும் நிலப்பகுதிகளில் வாழும் வாய்ப்பினைப் பெற்றவர், பேரின்பப் பெருவாழ்வு பெற்று மகிழ்ந்தனர். வன்னிலம் போலும் வளம் நல்கா நிலப் பகுதிகளில் வாழ்ந்தவர், வறுமையுற்று, வாழ்வின் வளம் பெறமாட்டாது வருந்தினர், வாழ்வும் வறுமையும், இவ்வாறு வாழும் நிலத்தின் வளம், வளமின்மைகளின் விளைவாகவே உண்டாயின, எனினும், அதை உணர்ந்து உள்ளம் அடங்கும் அத்துனை உயர்ந்த பண்பு மக்களுக்கு உண்டாகவில்லை, வள மார் வாழ்வில் விடப்பெற்றவர், அவ்வாழ்வு தம் முயற்சியினாலேயே வந்தது என எண்ணித் தருச்கினர்; தாழ் நிலையில் உள்ளாரைக் கண்டு எள்ளி நகைத்தனர். இல்லாமையால், இயல்பாகவே மாறாக, வறுமையில் உழன்று, வாழ்வின் பயன் இழந்து கிடந்த மக்கள், வளங் கொழிக்கும் நிலத்தாரின் செல்வ வாழ்வைக் காணுந்தோறும் சிந்தை நொந்தனர். அத்தகு பெருவாழ்வு தமக்கும் வேண்டும் என ஆசை கொண்டது அவர் உள்ளம். அவ்வாசையை நிறைவேற்றிக் கொள்ள, அவர். எதற்கும் துணிந்து நின்றனர். ஆனால், அவ்வின்ப வாழ்வை அவர்க்கு அளிக்க மேனிலையில் வாழ்வார் முன்வந்திலர். அதனால் இருதிறத்தார்க்குமிடையே மன வேறுபாடு வளர்ந்தது. அது வளர்ந்து பகையாக மாறிற்று. இறுதியில் அது அவர்க்கிடையே போராய் உரு வெடுத்தது.

இவ்வாறு உருவெடுத்த போரை, அப்போர்க்காம் காரணம் கருதி நான்கு வகையாகப் பகுத்து விளக்கியுள்ளார், தமிழ் மக்களின் தலையாய ஒழுக்கங்களை வரையறுத்து விளக்கிய ஆசிரியர் தொல்காப்பியனார், அவை: வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை.

நிலம், ஆங்காங்குப் பெற்றிருக்கும் இயற்கை நிலைகளுக்கேற்ப, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாகப் பிரிக்கப் பெறும். மலையும் மலை சார்ந்த இடமும், குறிஞ்சி. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை, மலையென்றே காடு என்றோ துணிந்து கூறமாட்டாது சிறு மலையும், குறுங்காடும் கலந்து தோன்றும் பகுதி பாலை. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம். கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல். நிலப் பகுதி, இவ்வாறு ஐவ்வகையாகப் பகுக்கப் பெறும் எனினும், அவற்றுள் குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாம். “கல் தோன்றி மண் தோன்றாக் காலம்” எனப் பழந் தமிழ் நூல் ஒன்று பகர்வதும் காண்க.

நிலங்களுள், குறிஞ்சி நிலமே முதற்கண் தோன்றிய நிலமாதலைப் போன்றே, மக்கள் முதன் முதலில், தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இடமும் அம்மலைநாடே ஆம். மக்கள், தங்கள் வாழ்க்கையினை ஆண்டே தொடங்கியதற்கு, அது முதற்கண் தோன்றியது என்பதினும், அம்மக்களுக்குத் தேவையாம் உணவுப் பொருள்கள் அனைத்தையும், அவர் உழைப்பை எதிர் நோக்காமலே அளித்தது அந்திலம் என்பதே பொருந்தும் காரணமாம். முயற்சியின்றியே பெறலாகும் காயும், கனியும், கிழங்கும் அந்நிலத்தில் நிறையக்கிடைத்தன. உண்ணு நீர்ச்சுனைகளும் ஆங்கேயிருந்தன. காயும், கனியும், கிழங்கும் அருகிய காலத்தில், ஆண்டுவாழ் மக்களுக்கு உணவாகிப் பயனளிக்கும் உயிரினங்களும் ஆங்கே வாழ்ந்திருந்தன.

தமக்கு வேண்டும் உணவுப் பொருள்கள், இவ்வாறு தம் முயற்சி ஒரு சிறிதும் தேவைப்படாமலே, எங்கும், எப்பொழுதும், கிடைத்தமையால், நாளைக்கு வேண்டும் என ஈட்டி வைக்க வேண்டிய இன்றியமையாமை, அக்குறிஞ்சி நில மக்களுக்கு உண்டாகவில்லை. ஆனால், அந்நிலை நெடிது நாள் நிற்கவில்லை, நாள் ஆக ஆக, மக்கள்தொகை பெருகிக்கொண்டே வந்தது. ஆனால், அம்மக்கள் வளர்ச்சிக்கேற்ப, உணவுப் பொருள்கள் பெருகவில்லை. மக்கள் தொகை நாள்தோறும் பெருகிக் கொண்டேயிருந்தமையாலும், மக்கட் பெருக்கத்திற்கேற்ப, உணவுப் பொருள்கள் பெருகாமையோடு, மக்கள் அவற்றைத் தொடர்ந்து தின்றுகொண்டே வந்தமையால், அவை சிறுகச் சிறுக அற்றுக்கொண்டே வந்தமையாலும் மக்களுக்கு உணவுக் குறைபாடு உண்டாயிற்று.

அதனால் அம்மக்களுள் ஒரு சிலர், தாம் வாழ்ந்த அக்குறிஞ்சி நிலத்தின் நீங்கி, அந்நிலத்தைச் சேர்ந்துள்ள பாலையுள் சென்று தங்கினர். பாலை, குறிஞ்சி போல் வளம் நிறைந்தது அன்று. ஆகவே, ஆண்டுச் சென்றவர், ஆண்டே வாழ்தல் இயலாது போயிற்று; அப்பாலையையும் கைவிட்டு, அதை அடுத்துள்ள முல்லை நிலத்தில் வாழிடம் தேடினர்.

முல்லை, பாலை போல் வளமற்ற வன்னிலமாகாது, வாழ்வதற்கு ஓரளவு வாய்ப்பளிக்கும் நிலமாக விளங்குவது கண்ட அம்மக்கள், அந்நிலத்தில் நிலையாக வாழத் தலைப்பட்டனர். காடுகளை அழித்துப் பயிரிடவும் பழகினர். விலங்குகளோடு வாழ்ந்து பழகிய பழக்கத்தின் விளைவால், அவ்விலங்குகளுள் ஆடு, மாடு, எருமை போன்றன உடன் வைத்துப் பேணத் தக்கன; பெரும்பயன் தருவன என உணர்ந்தனர். அதனால், அவற்றைப் பெருமளவில் வைத்துப் போற்றினர். அவற்றையே, அவர், தம் செல்வமாகக் கருதினர். அவர் செல்வ வாழ்வை அளந்து காணும் அளவுகோலாக அவை கொள்ளப் பட்டன. அவற்றை நிறையக் கொண்டார் செவ்வ வாழ்வினராவர் எனவும், குறையக் கொண்டார் வறுமையால் வாடுவோர் எனவும் மதிக்கப் பெற்றனர். இவ்வாறு ஆனிரைகளைப் பேணிப் பெருக்கி வாழ்ந்தமையால், முல்லை நிலம்புக்க மக்கள் வாழ்வு ஓரளவு அமைதியுடையதாயிற்று. நிற்க.

வாழ்க்கையைக் குறிஞ்சி நிலத்தில் தொடங்கிய மக்கள் அனைவருமே முல்லையுள் குடி புகுந்து விட்டாரல்லர். ஒரு சிலர் அக்குறிஞ்சியிலேயே தங்கிவிட்டனர். ஒருசிலர் இடைவழியில் உள்ள பாலை நில வாழ்க்கையிலேயே பழகிவிட்டனர். ஆனால், பாலை, குறிஞ்சி நிலத்தின் மலைவளமோ, முல்லை நிலத்தின் காட்டுச் செல்வமோ வாய்க்கப் பெறாத வன்னிலமாதலின், ஆண்டுத் தங்கியவர்கள், வாழ்க்கைக்காம் வழிகாணது வருந்தினர். வயிற்றுப் பசி, அவர்கள் உள்ளத்தில் வற்றாச் சினத் தீயை மூட்டிற்று. பழிபாவங்களை அவர்கள் எண்ணிப் ராயினர். பாலை நிலத்தைக் கடந்து வருவார் போவார் கொண்டு செல்லும் பொருள்களைக் கொள்ளையடித்துண்ணும் கொடியராயினர், பாலையில் ஆறலைத்து வாழும் வாழ்வினராய் மாறிய அம்மறவர், தமக்கு வேண்டும் பொருளை அவ் வழியில் பெற இயலாக் காலத்தில், பாலையை அடுத்துள்ள நிலங்களுட் புகுந்து கொள்ளையிட்டு மீளும் வாழ்க்கையினை மேற்கொண்டனர். பாலையை அடுத்து ஒரு பால் குறிஞ்சியும், ஒரு பால் முல்லையும் உளவெனினும், குறிஞ்சி, ஆண்டு வாழ்வார்க்கு வேண்டும் பொருள்களைத் தருவதே அரிது; ஆகவே ஆண்டு உறைவார் ஈட்டி வைக்கும் பொருள் எதுவும் இராது என்பதை அக்குறிஞ்சியில் ஒருகாலத்தில் இருந்து வாழ்ந்தமையால், அம்மறவர் அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் தமக்குப் பொருட் குறைபாடு உண்டான காலத்தில், குறிஞ்சி நிலக் குறவர்பால் செல்லக் கருதவில்லை. முல்லை நிலத்து ஆயர்கள், ஆடு மாடுகளைப் பழக்கி, ஒன்று பலவாகப் பெருக்கிப் பயன் கொண்டு வாழ்கின்றனர் என்பதை அறிந்து, அம் மறவர் தமக்கு உணவுக் குறை உண்டாந்தோறும் முல்லை நிலம் புகுந்து. ஆயர்களின் ஆனிரைகளைக் களவாடி வருதலை வழக்கமாகக் கொண்டனர்.

காட்டில் மேய்ந்துகொண்டிருந்த தம் ஆனிரைகளைப் பாலை நிலத்து மறவர் கவர்ந்து செல்கின்றனர் எனக் கேட்ட முல்லை நிலத்து ஆயர், செய்யும் தொழிலையும் மறந்து, காடு நோக்கி விரைந்து ஓடுவர். மறவர் கவர்ந்து செல்லும் ஆனிரை, அவர்க்குரிய பாலை நிலத்து ஊர்களை அடைந்துவிடுமாயின், அவை அவர்க்குள்ளாகவே பகுத்துக் கொள்ளப்படுமாதலாலும், அம் மறவர்க்கு அவர் ஊர்க்கண் ஆற்றல் மிகுந்துவிடுமாதலாலும், அவர்கள் ஆனிரைகளோடு காட்டைக் கடவா முன்பே சென்று, ஆயர்கள் அவர்களை மடக்கிப் போரிட்டு வென்று துரத்திவிட்டுத் தம் ஆனிரைகளை மீட்டுக் கொணர்வர், இவ்வாறு பாலை நிலத்து மறவார் கவர்ந்து சென்ற தம் ஆனிரைகளை மீட்டுக்கொணர ஆயர் அம் மறவரோடு செய்யும் போரே வெட்சிப் போராம். ஆனிரைகளைக் கவர்தலும், மீட்டலும் குறித்து நிகழ்ந்த போர்கள் பல தமிழ் நூல்களில் கூறப்பெற்றுள்ளன. [1]நிற்க.

பாலை நிலத்து மறவர் களவாட, முல்லை நிலத்து ஆயர் மீட்டுவரும் இம்முறை, காலம் செல்லச் செல்லச் சிறிது மாறுதலாயிற்றது. ஆனிரைகளுக்கு அண்டை நிலத்தவரால் அவ்வப்போது இடையூறு உண்டாவதைக் கண்ட ஆயர், தம் பொருளையும் தம்மையும் காக்கவல்ல தலைவன் ஒருவன் தேவை என உணர்த்தனர். தம்முள்ளே தக்கான் ஒருவனைத் தேர்ந்து தலைவனாக்கினர். கோலினத்தைக் காக்கும் கடமை மேற்கொண்டு கோன் எனப் பண்டு அழைக்கப் பெற்றவனே, பிற் காலத்தில் அரசன் என அழைக்கப் பெற்றான். நிற்க ஆனிரைக் குரியவர், தமக்குள்ளே அரசளைத் தேர்ந்து கொண்டயை கண்ட மறவரும் தமக்குள்ளே ஒரு தலைவனைத் தேர்ந்து அரசனாக்கினர். இந்நிலை உண்டான பின்னர்ப் போர் முறையில் புதுமைகள் இடம் பெற்றன, பகைவர், தம் ஆனிரைகளைக் கவர்ந்து செல்கின்றனர் என்ற செய்தி கேட்டும், ஆயர், பண்டேபோல் தாயே சென்று மீட்டு வருதலைக் கைவிட்டுக், காவலன்பால் சென்று நிகழ்ந்தது கூறுவர். அரசன், தன் நாற்படையோடு சென்று, அப்பகைவரை வென்று ஆயர்களின் ஆனிரைகளை மீட்டுத் தருவன். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற சேர வேந்தன் ஒருவன், தன்னாட்டு ஆயர்க்குரிய ஆடுகளைத் தண்டகாரணியத்தில் வாழ்வார் சிலர் வந்து கவர்ந்து சென்றார் எனக் கேட்டுப் படையோடு சென்று அவ்வாடுகளை மீட்டுக் கொணர்ந்து உரியவர்பால் ஒப்படைத்தான்; அவனாற்றிய செயலின் அருமை அறிந்து, அக்கால மக்கள், அவ்வெற்றிச் சிறப்பை அவன் பெயரோடு இணைத்துப் பெருமை செய்தனர்.

பண்டு பசியால் வருந்திய பாலை நிலத்து மறவர், தம் அண்டையில் வாழ்வார் நிலத்துள், அவர் அறியாவாறு புகுந்து, அவர்களின் ஆனிரைகளைக் களவாடிக் கொணர்ந்து, கொன்று உண்டு வாழ்ந்த கொடிய ஒழுக்கம் நாள் ஆக ஆக, நாட்டு மக்கள் உள்ளத்தில் நாகரீகமும் நற்பண்பும் வளர வளர, படிப்படியே மாறி, இறுதியில் ஒரு நாட்டின் மீது, படை தொடுக்க விரும்பும் அரசன் ஒருவன், அந்நாட்டு ஆனிரைகள், தன் படையால் பாழுறா வண்ணம் காத்தற் பொருட்டும், ஒரு நாட்டின் மீது, அந்நாட்டார் அறியாத நிலையில் படை தொடுத்தல் அறமாகாது என உணர்ந்து, அந்நாட்டின் மீது தான் படை தொடுக்கப்போவதை முன் அறிவித்தற் பொருட்டும், அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொணர்த்து பாதுகாக்கும் நல்லொழுக்கமாகி விட்டது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பேரரசன் ஒருவன், பகை நாட்டின் மீது படை தொடுக்கும் முன், “பகை நாட்டு ஆனிரைகளே! ஆவின் இயல்புடைய அந்தணர்களே! பெண்களே! பிணியுற்றவர்களே! மக்கட் பேறுபெறாத மாவீரர்களே! யாம் விரைந்துவந்து விவ்வனைத்து அம்பு ஏவுவம்; ஆகவே, நீவிர் அரண்மிக்க இடம் தேடி அடையுங்கள்” எனப் பறையறைந்து அறிவித்துவிட்டு பின்னர்ப் போர் புரியும் அறவழி நின்று அரசு புரிந்தான் எனப் புறநானூறு கூறுகிறது. [2]நிற்க.

போர் நிகழ்ச்சிகளைக் கூறும் தொல்காப்பியரும் பிற ஆசிரியர்களும் போர் இத்தனை வகைப்படும் என்றுதான் கூறுகின்றனரே அல்லது, போர் நிகழ்வதன் முன் வெட்சியும் கரந்தையும், அதாவது ஆனிரை கவர்தலும், ஆனிரை மீட்டலும் நிகழ்ந்தேயாதல் வேண்டும் என்று கூறவில்லை. போர் பல காரணங்களை முன்னிட்டு எழும், பொன்னாசையால் எழும் போர், மண்ணாசையால் எழும் போர், பெண்ணாசையால் எழும் போர், புகழாசையால் எழும் போர் என அது பலவகைப்படும். அவற்றுள் இது பொன்னாசையின் ஒரு பகுதியாய்ப் பகை நாட்டுப் பொருளை எல்லாம் பெறவேண்டும் எனப் பேராசை கொள்ளாது, அவர்களுடைய ஆனிரைகளை மட்டும் பெற்றால் போதும் என்ற ஆசை காரணமாய் எழுந்த போரும் அதன் பின் விளைவுமாம் என அறிக.

நிரை கவர்தலும், நிரை மீட்டலும் முறையே சென்று தாக்குவாராலும், நின்று தாங்குவாராலும், தம் போர் நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சிகளாக மேற்கொள்ளப் பெறுவனவே. அந் நிகழ்ச்சிகள், அவ்வரசர்கள் மேற் கொள்ளும் பிற போர்களோடு தொடர்புடையன ஆகா. நிறைகவர்தல் போரிலும், நிரை மீட்டல் போரிலும் தொழிலாற்றும் படைகள், இருதிறத்தார்களின் எல்லைக் கண் நிற்கும் படைகளே. இரு பேரரசர்களோ, அவர்களின் நாற் படைகளோ, ஈடுபடுவதில்லை.

வாழ்க்கைத் தரம் உயர உயர, ஒருவன் ஆசைகளும் பலவாம். ஆசைகள் பலவாம் எனினும், அவற்றைப் பொன் ஆசை, மண் ஆசை, பெண் ஆசை என்ற முப்பெரும் பிரிவினுள் அடக்கிவிடலாம். ஆகவே, அரசன் ஒருவன், பகைவர் நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு வரவும், பகைவர் நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளவும், அந்நாட்டு அரசன் மகளை மணம் செய்து கொள்ளவும் ஆசை கொண்ட வழியே படை எடுத்துச் செல்வான். இவற்றுள், பகைவர் நாட்டுச் செல்வங்களைக் கருதிப் போருக்கு எழுதல் முதற்படியாகும். அது பாலை நிலத்து மறவர் செயலைக் காட்டிலும் சிறிதே வேறு படும். பகைவர் நாட்டுப் பசுநிரைகளை மட்டுமே கவர்ந்து வரச் செல்லுதல் முதல் நிலை; பகை நாட்டுப் பெரும் பொருள் அனைத்தையுமே கைப்பற்றி வரச் செல்லுதல் முடிந்த நிலையாம். பொருளைக் கவர்ந்து வரப் போருக்கு எழும் வழக்கத்தை மேற்கொண்ட வேந்தன், காலம் செல்லச் செல்ல, பொருள் வேண்டும்போதெல்லாம் படையெடுத்துச் செல்வதைக் காட்டிலும், பொருள்வளம் மிக்க அந்நாட்டையே கைப்பற்றித் தனதாக்கிக்கொள்வது நன்று என நினைப்பான். நினைத்தவாறே, பகைதாட்டை வென்று கைப்பற்ற போருக்கு எழுவான்; இது இரண்டாம் நிலை. நல்ல நாடும், அதனால் நிறைபொருளும் பெற்று வாழும் அரசனுக்கு, இன்ப நுகர்வில் நாட்டம் உண்டாதல் இயல்பு. ஆகவே, அந்நிலையில், அவன், வேற்றரசர்பால் அழகுள்ள மகளிர் வாழக் கண்டு அவரை மணந்து வாழ மனங் கொள்வதும், அதற்கு அவ்வரசர் மறுத்தால், அவர்மீது படையெடுத்துப்போவதும் நிகழும், இது மூன்றாம் நிலை.

பகையரசனுக்குரிய பெரிய படை தன் நாட்டின் எல்லைக்குள் புகுந்துவிட்டது. இப்போது படையெடுத்து வரும் அவன் கருத்து ஆனிரை கவர்தல் அன்று. தன் நாட்டுப் பெரும் பொருளையோ, அல்லது தன்னாட்டின் வளமிக்க பகுதியையோ, அல்லது தன் மகளையோ கருதியே அவன் வருகிறான். ஆகவே, அதற்கேற்பப் பெரும் போர் புரியத்தக்க நாற்படைகளுடனேயே வருகிறான் என அறிந்த அந் நாட்டரசன், பாய்ந்துவரும் பகைவர் படையால் பாழுற்றுப் போகாதபடி நாட்டைக் காப்பான்கருதித், தன் படைகளோடு விரைந்து, அப்படை தன் நாட்டுள் புகுந்துவிடாதபடித் தடுத்து நிறுத்திப் போர் புரிவன். இவ்வாறு, இம்மூவாசை கருதிப் படையெடுத்து வந்தவனை வென்று துரத்தும் வேந்தன் செயல்களை வஞ்சிப் போர் எனப் பெயரிட்டுப் பாராட்டியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார்.[3] போர் தொடுத்தலும், அடித்துத் துரத்தலுமாகிய இந்நிகழ்ச்சிகளெல்லாம், வந்த வேந்தனுக்குரிய எல்லைப் பகுதியும், வென்று துரத்திய வேந்தனுக்குரிய எல்லைப் பகுதியும் ஆகிய இரு நாட்டுப் புற நாடுகளில் நிகழும் நிகழ்ச்சிகளே ஆம். படைதொடுப்பதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள், புகுந்த அரசன் நாட்டெல்லையில் நிகழும். அடித்துத் துரத்துவது போன்ற போர் நிகழ்ச்சிகள், துரத்திய அரசன் நாட்டெல்லையில் நிகழும்.

மண்ணாசையால் படை கொண்டு வந்த அவனை, அடித்துத் துரத்திய இவன், அவன் படையெடுத்து வந்தான் என்பது ஒன்றைக்கொண்டே எதிர்க்கக் கருதினவனாவன். ஆகவே, இவன் வினை, அவனை வென்று ஓட்டுவதோடு முடிந்துவிடும். அவன், தன் நாட்டு எல்லையைக் கடந்து ஓடிவிட்டான் என்பதை அறிந்தவுடனே, இவன் மீண்டுவிடுவன். அவனை மேலும் துரத்திச் சென்று, அவன் நாட்டைக் கைப்பற்றக் கருதான். அவன் நாடு, இவன் நாட்டைக் காட்டிலும் வளம் செறிந்த நாடன்று. மாறாக வளம் குன்றிய நாடு அது. வளமார் நாட்டில் வாழ்வார் எவரும், வளம் குன்றிய நாட்டினைக் கைப்பற்றி ஆளக்கருதார். அதனால் அவர்க்குக் கேடல்லது ஆக்கம் உண்டாதல் இல்லை.

ஒரு நாட்டை, அரசன் ஒருவன் கவர்ந்துகொள்ள விரும்புகின்றான் என்றால், அந்நாடு அவன் நாட்டைக் காட்டிலும் சிறந்து விளங்கும் நாடாதல் வேண்டும். “பெரும் பொருளால் பெட்டக்க”, நாடுகளையே பகைவர் பற்றிக் கொள்ள விரும்புவர். நிறைபொருளும், மிகுவளனும், உடைமையால் சிறப்புற்று விளங்கும் நாடுடையான் ஓர் அரசன், தன் அண்டைநாடும், தன் நாட்டைப் போலவே நிறை பொருளும் பெறுவளமும் பெற்றுளது என்பதற்காகவே, அந்நாட்டின் மீது படை எடுக்க எண்ணான். அண்டை நாட்டைக் காட்டிலும் வளம் குன்றி வறுமையுற்று வாடும் நாடுடையவரே, அவ்வண்டை நாட்டின்மீது படையெடுத்துச் செல்வர். இது உலகோர் அறிந்த உண்மை.

ஆகவே, அவன் இவன் நாட்டின் மீது படையெடுத்து வந்தான் எனவே, அவன் நாடு, இவள் நாட்டைக் காட்டிலும் வளம் குறைந்த நாடு என்பது பெறப்படும். படவே வளம் குறைந்த அந்நாட்டின் மீது, இவனுக்குக் காதல் உண்டாகாது என்பதும் பெறப்படும். காதல் இல்லா நாட்டைக் கைப்பற்றக் கருதார் எவரும்; ஆகவே, இவன் கடமையாகக் கருதப்படுபவை அனைத்தும், இவன் நாட்டு எல்லைக்குள் நிகழும் நிகழ்ச்சிகளே ஆகும். இவன், அவன் நாட்டுள் புகுந்து போரிடுவது இலன். தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தவனை எதிர்த்துத் துரத்தும் தற்காப்புப் போரே இவன் செய்யும் போர். பகை நாட்டுள் புகுந்து மேற்சென்று தாக்கும் போர் அன்று. வந்த அவன், தன் நாட்டு எல்லையைக் கடந்து அவன் நாட்டுள் ஓடிப் புகுந்து கொண்ட பின்னரும், விடாது துரத்திச்சென்று போரிடுவது கூடாது. இவன் அவ்வாறு போரிடக் கருதுவனாயின், மண்ணாசைக் குற்றம் இவனுக்கும் கற்பிக்கப்படும். ஆகவே, இவன் செயலெல்லாம், இவன் நாட்டு எல்லைக்குள்ளேயே நின்று விடும்; இவன் அவன் மண்ணில் காலடி எடுத்து வைப்பதும் கூடாது.

நாடு இன்று காட்சி அளிப்பது போல் அன்று காட்சி அளிக்கவில்லை. இன்று எங்கு நோக்கினும் நகரங்கள் மலிந்த நாடே. காட்சி அளிக்கிறது; காட்டைக் காண்பதும் அரிதாகி விட்டது. பண்டைய நிலை இதுவன்று. அன்று எங்கு நோக்கினும் மரங்கள் செறிந்த நாடே காட்சி அளித்தது; நகர் வளம் மிக்க நாட்டை, அரிதாகவே காணல் கூடும். அக்கால அரசர்கள், காடுகளைச் சிறிது சிறிதாக அழித்து நாடு கண்டு வந்தனர். அப்பணியை பெரும் அளவில் புரிந்து வெற்றி கண்ட கரிகாற் பெருவளத்தானை, “காடுகொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி” எனப் புலவர்கள் வாயார வாழ்த்தியுள்ளமை காண்க. ஆகவே, அக்கால நாடு ஒவ்வொன்றும் தன்னைச் சூழப், பரந்த காட்டுப் பகுதிகளைக் கொண்டிருந்தது என்பது உண்மை. ஆகவே, இரு நாடுகளுக்கிடையே, இரு நாடுகளுக்கும் உரிய காட்டுப்பகுதிகளே இடம் பெறும். ஆக, நாடு பிடிக்க விரும்புவான் ஒருவன், முதற் கண், தன் அண்டை நாட்டானுக்குரிய காட்டுப் பகுதியையே கைப்பற்றுவன். ஆகவே, நாடு கவர்தல் குறித்தும், அதைக் காத்தல் குறித்தும் நிகழும் போர், அக்குறுங் காடுகளிலேயே நிகழும்.

மண்ணாசை கொண்டு மாற்றனொடு போரிடப் போந்த ஒரு வேந்தன், அப்போரை விரும்பி மேற் கொண்டவனாதலின், தன்வலி, மாற்றான் வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, பகைவன் நாட்டுள் புகுந்து போரிட்டு வெற்றி பெறக்கூடிய பெரும் படையோடு, தனக்கு ஏற்ற காலத்தில் திடுமெனப் புகுந்திருப்பன். ஆனால், அவன் பகைவன். அவ்வாறு வந்தவனல்லன். பகையரசன், படையோடு புகுந்து, தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதறிந்தவுடனே விரைந்து வந்தவனாவன். அந்நிலையில் பகைவன் படை பலம் யாது? தன் படைபலம் யாது என்பன பற்றியோ, அக்காலம், தன் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் காலம் தானா என்பதையோ எண்ணிப் பார்த்தல் இயலாது. உள்ள படையைக்கொண்டு, உடனே புறப்படவே அவன் உள்ளம் துடிக்கும். தனக்குத் துணைபுரிவாரைத் தேர்ந்து, அவரை உடன் அழைத்துப் போகவும் ஒண்ணாது. இக்காரணங்களால், அவன் படைதொடுத்து வந்தானை வெல்லமாட்டாது, தோற்றுப் போதலும் உண்டு.

தோல்வியுற்றது அவன் படை என்பதனாலேயே அவன் பணிந்து போக வேண்டும் என்பது வேண்டியதில்லை. சிறிது காலம் கழியின், வந்தவனை அவனால் வென்று ஓட்டுவதும் இயலும். அதற்குள் அவன் போரிடற்கு ஏற்ற காலமும் வந்து வாய்க்கும். அவனோடு நட்புடைய அரசர் சிலர், அவனுக்குப் படைத்துணை அளிப்பதும் செய்வர். ஆகவே, அக்காலத்தை எதிர் நோக்கும் அவன், அதுவரை பகைவனுக்குப் பணியாமலும், அவனால் அழிவுறாமலும் தன்னையும் தன் படையையும் காத்துக் கொள்ளுதல் வேண்டும். அதுவே, தலையாய போர் முறையாம். ஆகவே, அவன், அவன் நாட்டில் தக்கதோர் இடத்தில் அமைத்து வைத்திருக்கும் அரணுள் புகுந்து கொள்வன்.

மேலும், பகைத்துப் படையெடுத்து வந்திருக்கும் வேந்தன் தங்கியிருப்பது பகைவன் நாட்டில். அவனை ஆங்கு நெடிதுநாள் தங்கவைப்பின், அவன், தன் பெரும் படைக்குத் தேவையான உண்பொருள் முதலாயின பெற மாட்டாது வருந்த வேண்டி நேரிடும். அந்நிலை பெற்று அழிந்து போவதை விட, கருதி வந்த வெற்றியைக் கைவிட்டுப் போய் விடுதலும் கூடும். இதைக் கருதியும், தோற்ற அந்நாட்டு அரசன் அரணுள் புகுந்து வாழ்வது வழக்கம்.

நிலம் விட்டு நிலம் சென்று, நாடோடி வாழ்வினராய அலைந்திருந்த மக்கள், நிலைத்த வாழ்வினராகி, நிலத்தை உழுது பயன் கொள்ளத் தொடங்கிய காலத்தில், அவர்களிடையே செல்வமும் சேரத் தொடங்கிற்று. நிலத்தில் விளைந்த பொருள்களோடு அவற்றுள் தமக்கு வேண்டியன போக எஞ்சியவற்றை அவை கிடைக்காத நாட்டாருக்கு அளித்து ஆங்குக் கிடைக்கும், தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று வந்த வாணிக வாழ்வின் வழிவந்த பொருள்களும் அவர்பால் குவிந்தன. குவியவே, அவற்றைக் கேடின்றிக் காக்க வேண்டிய கருத்து உண்டாயிற்று. அந் நிலையிலேயே அரண் அமைக்கும் அறிவினை அவர்கள் பெற்றனர். இந்நிலை உண்டானது, வயல் வளமும், வாணிகவளமும் வளர்தற்கு வாய்ப்பளிக்கும் மருத நிலத்து மாநகர்களிலேயே ஆகும். ஆகவே, அரண் அமைந்த அம்மாநகர்களே, அரண் கருதிய போர்களின் நிலைக்களமாய்க் காட்சி அளித்தன. நிற்க.

அரசனும், அவன் பெரும் படையும் அரணுள் புகுந்து கொள்வராயின், அவர் படையுள் ஒரு பிரிவினர், அரணிற்கு வெளியில் இருந்து கொண்டே அரணை முற்றியிருக்கும் பகைவர் படையினை அவ்வப்போது தாக்கியும், அப்படையால் தம் அரண் அழிந்து போகாதபடிக் காத்தும் நிற்பர். புறத்தான் அயர்ந்திருக்கும் சமயம் நோக்கி, அகத்தார் திடுமெனப் புறம் போந்து பகைவர் படையுள் ஒரு பகுதியைப் பாழ் செய்துவிட்டு மீண்டும் அரணுள் புகுந்து அடங்கிவிடுவதும் ஒரோ வழி நிகழும்.

அரணுட்புகுந்து அடங்கவிரையும் தம் அரசனையும் படையையும் பகைவர் படை பின்பற்றிச் சென்று அழிக்காதபடி அப்பகைவர் படையினைத் தடுத்து நிறுத்துதல் வேண்டுமாதலின், பாய்ந்து வரும் பகைவர் படையினை எதிர்த்து வீரர் சிலர் போரிடுவதும், அவருள் சிலர் உயிரிழப்பதும் உண்டு. அரணைச் சுற்றி அமைந்திருக்கும் மதிலுக்குப் பேரரண் புரிந்து நிற்பன அகழியும், அகழியைச் சூழ உள்ள காவற்காடுமாம். ஆகவே, அரண் அழியாமையை விரும்புவார், அவ்விரண்டினையும் அழிய விடாமல் காத்தல் வேண்டும். ஆகவே அரண் புறத்தே விடப்பட்ட அந்நாட்டுப் படையாளர் சிலர், காவற் காட்டினை அழித்தும், கிடங்கினைத் தூர்த்தும் அரண் அழிக்கும் பகைவர் படையினைப் பாழ் செய்வதும், அப்போரில் உயிர் துறப்பதும் உண்டு. காவற்காட்டையும், கிடங்கையும், அழிப்பதில் வெற்றி கண்ட பகைவர் படை, பின்னர், அரண் மதிலை அழிக்க முனையும். அப்போது, அரண் அகத்தே அடங்கியிருக்கும் படையாளர், அம் மதில் தலையில் இருந்தவாறே புறத்தாரோடு போரிட்டு அம்மதிலைக் காக்க முனைவர். அப்போரிலும் சிலர் உயிரிழந்து போவர். பகைவர் பெரும் படை கொண்டு பலகாலும் தாக்குவதால், மதிலின் ஒரு பகுதி அழிந்து போவதும், அதன் ஊடே, பகைவர் படை அரணுள் புகுதலும் உண்டு. அவ்வாறு நுழையும் அப்படையினை, அரணகத்துப் படையினைச் சேர்ந்த சிறந்த வீரர் ஒன்று கூடி உரங் கொண்டு தாக்கித் துரத்துவர். இவ்வாறு ஒருவன் அரணை வளைத்துக் கொள்வதும், வளைத்துக் கொள்ளப்பட்டவன் வளைத்துக் கொள்வோனை வென்று துரத்தி விட்டு அரணைக் காப்பாற்றிக் கொள்வதுமாகிய இப்போர் நிகழ்ச்சிகளை, உழிஞை எனப் பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார்.[4]

ஒருவனுக்கு மண் பொன் பெண் என்பனவற்றின் பால் எவ்வளவு ஆசை உண்டோ, அவ்வளவு ஆசை புகழின்பாலும் உண்டு. “தோன்றின் புகழொடு தோன்றுக” என்றார் வள்ளுவப் பெருந்தகையார். புகழ் பெரும் வழிகளாகக் கல்வி, செல்வம், கொடை எனப் பல உளவேனும், கொற்றத்தால் பெரும் புகழையே வெற்றி வீரர்கள் விரும்புவர். ஆகவே, பரந்த நாடும் சிறந்த செல்வமும், நிறைந்த இன்பமும் பெற்று, வாழும் பேரரசன் ஒருவன், தன் ஆண்மையை, ஆற்றலை அனைத்துலகமும் அறிய வேண்டும், அங்கெல்லாம் தன் வன்மையை நிலைநாட்டி வருதல் வேண்டும் என விரும்பி, வேற்று நாடுகள் மீது படையெடுத்துப் போவதும் உண்டு. அத்தகைய பேராற்றல் வாய்ந்த அவனுக்குரிய நாட்டிற்கு அண்மையில் உள்ள நாடுகள் எல்லாம் அவன் ஆட்சிக்கு உட்பட்டுக் கிடக்குமாதலின், அவன் தன் ஆற்றலை நிலைநாட்ட மிக மிகச் சேய்மைக்கண் உள்ள நாடுகளுக்கே செல்லுதல் வேண்டும். பெரும் பாலும் கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று செய்யும் போரையே பெரிதும் விரும்புவன். கரிகாற் பெருவளத்தான் ஈழநாட்டில் பெற்ற வெற்றியும், இராச இராசனும், இராஜேந்திரனும் கடாரம் முதலாம் கீழை நாடுகள் மீது கொண்ட வெற்றியும், இவ்வகையைச் சேர்ந்தனவே. காவிரிக் கரையோனாகிய கரிகாலன், கங்கைக் கரையில் பெற்ற வெற்றியும், கிரேக்கமாவீரன் அலெக்சாந்தர் இந்திய மண்ணில் பெற்றவெற்றியும் அத்தகையவே. கரிகாலன் என்ற இயற்பெயருடையோனாகிய திருமாவளவன், தமிழகம் அனைத்தையும் வென்று கைக்கொண்டு விட்டமையால், தன் தோளாற்றலை நிலை நாட்டவல்ல பெரும் போரை, அங்கு மேலும் நிகழ்த்த வாய்ப்பில்லாமை கண்டே வடநாடு நோக்கிப் போர் விரும்பிப் புறப்பட்டான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.[5]

கடல்கடந்த பிற நாடுகளுக்குத் தமிழ் அரசர் சென்று தம் ஆற்றலை நிலை நாட்டியது போலவே, பிற நாட்டு அரசர் சிலர், தமிழ் நாட்டிற்கு அவர் ஆற்றலைக் காட்ட வந்திருத்தலும் கூடும். அவ்வாறு வந்த அரசர்களைத் தமிழ் அரசர் வென்று துரத்தியிருத்தலும் கூடும். பிற நாட்டு அரசர்கள், இந்நாட்டு ஆனிறைகளைத் தம் நாடுகளுக்குக் கொண்டு செல்வதோ, இந்நாட்டை வென்று இந்நாட்டிலேயே இருந்து ஆளுவதோ இயலாது ஆதலின், அவர்களின் போர் நோக்கம் எல்லாம் ஆற்றலை நிலைநாட்டுவது ஒன்றே ஆகும்.

இவ்வாறு ஆற்றல் காட்டவந்த அரசர்களையும் வென்று துரத்தவல்ல வேந்தர்களும் தமிழ்நாட்டில் இருந்தனர். அவ்வாறு துரத்துங்கால், வந்த வேந்தன், மரக்கலங்களை விட்டு, கடற்கரை மண்ணில் காலிட்டவுடனே. கடும் போர் இட்டு அடித்துத் துரத்துவதும் உண்டு. அவன் வருகையை முன் அறிந்து கொள்ள முடியாத வகையில், அவன் திடுமென வந்து விடுவதும் உண்டு. அதனால் அவன் தொடக்கத்தில் கடற்கரையையும், காட்டையும் கடந்து அகநாடுவரை வெற்றிக் கொடிகளை நாட்டி விடுவதும் உண்டு. அவன் வருகையை அந் நிலையில் அறிந்து கொள்ளும் இந்நாட்டரசன் அவன ஆங்கு மடக்கிப் போரிட்டு வெல்வதும், வெல்வதோடு அமையாது, அவன் கலம் ஏறிக் கடல் புகும் வரையில் துரத்திச் செல்வதும் உண்டு. இதனால் வந்தவனை வென்றழிக்கும் போர், பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளிலேயே நடைபெறும். மேலும் வந்தவன், தன் ஆண்மையை நிலைநாட்ட வந்தவனாதலின், அவன்பால் பேராற்றலும் பெரும் படையும் இருக்கும், ஆகவே, அத்தகையானை வென்று துரத்தக் கடும் போரிட நேரிடும். அதற்கு மரங்கள் நிறைந்த காடோ, வயல்கள் நிறைந்த நாடோ, வாய்ப்புடைய இடமாகா. மணல் நிறைந்து பரந்து கிடக்கும் கடற்கரையே சாலவும் சிறந்த இடமாம். ஆகவே, அவனை வென்று அழிக்க விரும்பியவன், அவனை எவ்வாறேனும் அக்கடற்கரைக்குக் கொண்டு சென்றே போரிட்டு அழிப்பன். இவ்வாறு தன் ஆற்றலை நிலை நாட்டுவதையே முன்னிறுத்திப் போர் தொடுத்து வருவோனை வென்று துரத்தும் போரைத் தும்பைப் போர் எனப் பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார்.[6]

ஆக, இதுகாறும் கூறியவற்றால், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆனிறைகளை மீட்கவும், பகைவர் கைப்பற்றிக் கொண்ட தம் நாட்டை மீட்டும் பெறவும், பகைவரால் வளைத்துக் கொள்ளப்பட்ட தம் கோட்டைகளைக் காக்கவும், தன் ஆற்றல் காட்டவந்து அழிவு விளைக்கும் அயல் நாட்டானை அடித்துத்துரத்தவுமே தமிழர்கள் படையெடுத்தனர். ஆகவே அவர் போரெல்லாம் தற்காப்புப் போரே; தமிழர் வலியச் சென்று பிற நாடுகளைத் தாக்கியவரல்லர்; ஆனால் வலிய வந்த போர்களை விடாது வெற்றி கண்டனர் என்ற உண்மைகள் புலனாகி, போர்க்களத்திலும் அறம் பிறழாத் தமிழர்களின் தலையாய நாகரிகம் நிலை நாட்டப்பட்டதாம். மேலும் தமிழ் நாட்டுப் போர்கள், இயற்கையின் தேவையை அடிப்படை யாகக் கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்து இடம்பெற்ற முறையும் விளங்கி நிற்றல் அரிக.

  1. “வேந்து விடு முனைஞர், வேற்றுப் புலக் களவின்
    ஆதந்து ஓம்பல் மேவற்றாகும்.”

    -தொல். பொருள், புறம் 1 2.

  2. “ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
    பெண்டிரும், பிணி உடையிரும், பேணித்
    தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போல் புதல்வர்ப் பெறா அதீரும்
    எம் அம்பு கடி விடுதும், நும்மரண் சேர்மின் என

    அறத்தாறு நுவலும் பூட்கை”

    —புறநானூறு 1 9.

  3. “வஞ்சிதானே, முல்லையது புறனே”
    “எஞ்சா மண்நசை வேந்தனை, வேந்தன்
    அஞ்சுதகத் தலைச் சென்று அடல்குறித் தன்றே”

    —தொல் பொருள். புறம் 1 6, 7.

  4. “உழிஞை தானே மருதத்துப் புறனே.”
    “முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும்
    அனைநெறி மரபிற்று ஆகும் என்ப,”

    —தொல்: பொருள்: புறம்: 9, 10.

  5. “இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
    செருவெம் காதலின் திருமா வளவன்
    வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
    நாளொடு பெயர்த்து, நண்ணார்ப் பெறுக
    இம் மண்ணக மருங்கின் என்வலிகெழுதோள் எனப்
    புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்.”

    –சிலப்பதிகாரம்1 51 89-94

  6. “தும்பை தானே நெய்தலது புறனே”

    “மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
    சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப,”

    –தொல்: பொருள்1 புறம்: 14–15.