கழுமலப்போர்/போர்ப்படைத் தலைவர்கள்

3. போர்ப் படைத் தலைவர்கள்

ழுமலப் போரில் கலந்துகொண்ட இருதிறத்துப் படைத் தலைவர்கள் எழுவராவர். அத்தி, ஏற்றை, கங்கன், கட்டி, நன்னன், பழையன், புன்றுறை என்பன அவர்தம் பெயர்கள், இவருள் பழையன் ஒருவனே சோழர் படைத் தலைவனாய்ப் பணியாற்றினான். ஏனைய அறுவரும் சேரர்படை முதல்வர்களே. சேரர் படைத் தலைவர் அறுவரே என்றாலும், அவருள் வரலாறு உணரத்தக்க சிறப்புடையான் கட்டி ஒருவனே. எஞ்சிய ஐவர் குறித்து, அவர் தம் பெயரும், அவர்கள் கழுமலப்போரில் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியும் தவிர, வேறு எதையும் அறிந்து கொள்வதற்கில்லை. அத்தி, நன்னன் இருவரைக் குறித்து மட்டும் மேலும் சில கூறலாம்.

அத்தி என்பது சேர இனத்தவரைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று. அத்தி எனும் அப்பெயருடையான் ஒருவன், சோழன் கரிகாற் பெருவளத்தானின் செல்வக் குமரியும், சிறந்த புலமையுடையாரும், புலவர்களாலும் புகழத்தக்க பெருமையுடையாருமாகிய ஆதிமந்தி என்பாரை மணந்திருந்தான். ஒருகால், காவிரியில் புது வெள்ளம் வரக் கண்டு சோணாட்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் விழாவில் கலந்துகொண்டு புனலாடினான் அவன். அவனைக் காவிரி வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டது. ஆதிமந்தி அவனைத் தேடித்தேடி அலைந்து, ஆறாத்துயருற்றாள். எங்கும் அவன் அகப்பட்டிலன். இறுதியில், காவிரி கடலோடு கலக்குமிடமாகிய கழார் நகரில் வாழ்ந்திருந்த மருதி என்பவள், அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தாள். ஆனால் அம்முயற்சியில், அவள் தன் உயிரை இழந்தாள். அவனுக்குரிய அத்தி என்ற பெயரையே இவனும் பூண்டிருந்தானாதலின், இவன் சேரர் இனத்தைச் சேர்ந்தவனாவன் என்பதே, அத்தி குறித்து அறியத் தக்கதாம்.

நன்னன் என்ற பெயர் நல்லோன் ஒருவனுக்குரிய பெயராகவும், தீயோன் ஒருவனுக்குரிய பெயராகவும் சங்க நூல்களில் வழங்கப்பெற்றுளது. தொண்டை நாட்டின் இருபத்து நான்கு கோட்டங்களுள் பல்குன்றக் கோட்டம் என்ற பகுதியில், மலையிடை மாநகராகிய செங்கண்மா என்ற சிறந்த ஊரை அரசிருக்கையாகக் கொண்டு, வள்ளல் பெருந்தகையாய், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகன் என்ற பெயர் மிக்க புலவரால், மலைபடுகடாம் என்ற பாட்டில் வைத்துப் பாராட்டப் பெற்றவனான நன்னன் சேய் நன்னன் என்பான் ஒருவன். கொண்கான நாட்டில் வேளிர்க்குரிய விழுநிதி வைத்துக் காக்கப்பெற்று, அதனால் பற்பல போர்களுக்கு நிலைக்களமாகிவிட்ட பாழி என்ற அரண் மிக்க பேரூரில் வாழ்ந்து, தனக்குரிய மாவின் கனியைத் தின்றுவிட்டாள் என்பதற்காக, ஒரு கன்னிப் பெண்ணைக் கொன்று, அதனால் “பெண் கொலை புரிந்த நன்னன்” எனப், பெரும் புலவர் பரணரால் பழிக்கப்பட்டவனான நன்னன் வேண்மான் இரண்டாமவன். அவ்விருவர்க்குரிய நன்னன் என்ற பெயரையே இவனும் பெற்றிருந்தான். பின்னர்க் கூறிய நன்னன் வேண்மான், நன்னன் உதியன் எனவும் அழைக்கப்பெறுவான். உதியன் என்ற பெயர், சேரரைக் குறிக்கவரும் பெயர்களுள் ஒன்று. ஆகவே, அந்நன்னன் ஒரு வகையில் சேரர் இனத்தைச் சேர்ந்தவன் என்பது வெளிப்படுவதால், நன்னன் என்ற இச்சேரர் படைத் தலைவனும் சேரர் இனத்தைச் சேர்ந்தவனே என்பது ஒன்றே, நன்னனைக் குறித்து அறியத் தக்கதாம்.

கட்டி ஒரு வட நாட்டுத் தலைவன். தமிழ் நாட்டின் வடவெல்லையாகிய வேங்கட மலைக்கு அப்பால், வடுகு மொழி என்ற வேற்று மொழி பேசும் வடுகர் என்ற மக்கள் இனத்தவர் வாழும் நாட்டில், நல்ல வளம் மிக்க ஒரு சிறு நிலப் பகுதியை ஆண்டிருந்தவன் இக்கட்டி வேற்படைத் துணையால் வெற்றிபல பெற்றவன்.

தமிழகத்தின் எல்லைக்கண் வாழ்ந்திருந்தமையால், கட்டி தமிழ் நாட்டின் வளத்தை நன்கு அறிந்திருந்தான். வறண்ட வடநாட்டு வாழ்வை வெறுத்து வளங் கொழிக்கும் தமிழகத்து வாழ்வில் வேட்கை கொண்டான்; தமிழகத்துள்ளும், ‘சோறுடைத்து’ என்ற சிறப்பு வாய்ந்த சோணாட்டு வளம் அவனைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், அச்சோணாட்டைக் கைப்பற்றி ஆள விரும்பினான். அக்கால, சோணட்டைத் தித்தன் வெளியன் என்பவன், உறந்தைமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருந்தான். தித்தன் எனவும், தித்தன் வெளியன் எனவும் அழைக்கப்பெறும் அவன், சிறந்த கொடை வள்ளலும், பெரிய போர் வீரனுமாவான், அரிய போர் செய்யும் அவன் ஆற்றலையும், அவனுக்குத் துணை செய்யும் பெரிய படையையும், சினம் மிகுந்து போர் செய்யும் அதன் சிறப்பினையும் புலவர்கள் பலர் பாராட்டியுள்ளார்கள். பெரிய படையும் பேராண்மையும் உடைய அவன், தன் தலை நகராம் உறந்தையைத் தலைசிறந்த அரண் உடையதாக ஆக்கியிருந்தான். நாற்புறமும் நீண்டு உயர்ந்த மதில்கள் இடம்பெற, அவற்றைச் சூழ, சிறுசிறு மலைகளை இடை இடையே கொண்ட அடர்ந்த காவற்காடு வளர்க்கப்பட்டிருந்தது; பாய்ந்து வரும் பகைவர் படைக்கு இடையூறு பல விளைத்து, புறங்காட்டி ஓடப்பண்ணும் அதன் பெருமையும் புலவர்களால் பாராட்டப்பெற்றுள்ளது.[1]

உறையூர் அரசியல் உரிமையைக் கைப்பற்றக் கருதிய கட்டி, அவ்வுறந்தையை ஆளும் தித்தனது பெருமையை அறிந்தான். அவ்வளவு பெரும்படையும் பேராண்மையும் உடைய அவனைத் தனியே சென்று தாக்குதல் இயலாது; தக்க ஒருவனின் துணையோடே சென்று தாக்குதல் வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறு எண்ணியவன், தனக்கேற்ற துணைவனைத் தேடிக் காண்பதில் சிறிது காலம் தாழ்த்த வேண்டியதாயிற்று.

கட்டியின் நாட்டிற்கு அண்மையில் உள்ள நாட்டில் பாணன் என்பானொருவன் அரசாண்டிருந்தான். அந்நாடும் கட்டியின் நாட்டைப்போலவே நலம் பல பெற்று விளங்கிற்று. கட்டியைப் போலவே பாணனும் பெருவலியுடையனாய் விளங்கினான்; பெரிய வேற்படையின் துணையையும் பெற்றிருந்தான். இவை அனைத்திற்கும் மேலாக, மற்போரிலும் வல்லனாய் வாழ்ந்தான். இவ்வாறு படைவலியும் உடல் வலியும் பெற்றிருந்தமையால் பகைவர் நாட்டுப் பசு மந்தைகளைக் கவர்ந்து வருவதில் கருத்தினைச் செலுத்தியிருந்தான். ஆனிரை மேய்ந்து கொண்டிருக்கும் இடம் மிகச் சேய்மைக் கண் இருப்பினும் தயங்கான். மீண்டுவர நாள் பல ஆகும் என அறிந்து, ஆங்கு வேண்டும் உணவை மூங்கில் குழாய்களில் இட்டுச் செல்வன். பரல்கற்கள் நிறைந்த படுவழிகளைக் கடக்கக் காலில் செருப்பணிந்து செல்வன்; பகைவர் நாட்டுள் புகுந்ததும், ஆனிரைகளைக் காத்து நிற்கும் அந் நாட்டுப் படைவீரர் தங்கியிருக்கும் காட்டரண்களைத் தாக்குவதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பன். தக்க சமயம் வாய்த்ததும் சிறிதும் தயங்காது வெளிப்பட்டுத் தாக்கி, அவரைத் துரத்தி விட்டு, ஆங்குள்ள ஆக்களையும், ஆனேறுகளையும் ஓட்டிக்கொண்டு வந்து சேர்வன். தன் நாடு


“நொச்சிவேலித் தித்தன்
உறந்தை கல்முதிர் புறங்காட்டன்ன

பல் முட்டு”
–அகநானூறு ; 122.
வந்து சேர்ந்தவுடனே, வெற்றிக்குத் துணை புரிந்த வேல் வீரர்களுக்கு விருந்தளித்துச் சிறப்புச் செய்வன். அவனிடம் இவ்வளவு ஆற்றலும் அறிவும் இருந்தமையால், அவன் வாழ்நாளில் ஒருமுறை கூடப் போரில் தோற்றுப் புறங் காட்டியது இல்லை.[2]

பாணன் பெருமைகளைக் கட்டி அறிந்திருந்தான். அதனால் அவன் துணையை நாடினான். கட்டியின் வேண்டுகோளுக்குப் பாணன் இசைந்தமைக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. பாணன் ஒரு பெரிய மல்வீரன். தன் மல்வீரத்தைத் தமிழகத்தில் விளக்கி வருதல் வேண்டும் என்ற வேட்கையுடையவன் அவன். இப்படையெடுப்பு அதற்கும் துணைபுரியும் என்று நம்பினான். அதற்கு ஏற்ற வாய்ப்பினைத் தேடித் தருவதாகக் கட்டியும் வாக்களித்திருந்தான். ஆக, இருவரும் ஒருவர்க்கொருவர் துணைபுரியவும், அதே நிலையில் தத்தம் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் விரும்பித் தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டனர்.

வடவர் படை, வேங்கடமலையைக் கடந்து, பொன்முகரி, பாலாறு முதலாம் ஆறுகள் பாயும் தொண்டை நாட்டையும், பெண்ணையாறு பாயும் மலையமா நாட்டையும் கடந்து சோணாடு புகுந்தது. உறையூர்க் கோட்டையை விரைந்து கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டி விரும்பினும், உடன் வந்திருக்கும் பாணன், பகைவர் சோர்ந்திருக்கும் காவம் பார்த்தே பாய்ந்து தாக்குதல் வேண்டும் என்ற போர் முறை அறிந்தவனாதலின், இருவரும் உறந்தையைச் சூழ்ந்திருந்த காவற்காட்டில் சின்னாள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

தித்தனைத் தாக்கி வெல்ல, ஏற்ற காலத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கக் காத்திருக்கப் படையெடுப்பு முயற்சியைக் கைவிட்டுப் போவதே நன்று என்ற நினைப்பு இருவர் உள்ளத்திலும், தோன்றி வலுப்படத் தொடங்கிற்று.

ஒவ்வொரு நாள் காலையிலும், இசைவல்ல பாணர்களும், இன் தமிழ்ப் புலவர்களும், போர் வல்ல வீரர்களும், வேறு பலரும் உறையூர்க் கோட்டைக்குள்ளே வரிசை வரிசையாக நுழைவதையும், சிறிது நாழிகைக்கெல்லாம், அரசன் அரியணை அமர்ந்த அரசியல் பணிகளை ஏற்றுக் கொள்வதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு முழங்குவதையும், உடனே உள்ளே புகுந்தவர்கள் ஆங்குத் தித்தன் அளித்த பரிசுப் பொருள்களாய, யானை மீதும், குதிரைமீதும், தேர்மீதும் அமர்ந்து வெளிப்படுவதையும், அவர்வாய், வாரி வழங்கும் அவன் வள்ளன்மையை வாயார வாழ்த்துவதையும் காணலாயினர். வந்த சில நாட்களுக்கெல்லாம், உறந்தை நாடு வற்றாவளம் உடையது; வெண்ணெல் வயல்களை நிறையக் கொண்டது; ஆகவே, முற்றுகை எவ்வளவு நாள் நீடினும் நின்று வருந்தாது என்பதை அறிந்துகொண்டார்கள்; உறையூர்க் கோட்டையின் உறுதிப்பாட்டினை நேரில் பார்த்துவிட்டார்கள். அவ் விரண்டுமே, அவர்கள் ஊக்கத்தை ஓரளவு நிலை குலையச் செய்திருந்தன. அந்நிலையில், தித்தனின் இந்நாளோலக்கச் சிறப்பு அவர் நினைப்பை அழிக்கத் தொடங்கிவிட்டது; மக்களால் இவ்வளவு மதிக்கப்படும் ஒரு மன்னனை வெல்வது அவ்வளவு எளிதில் இயலாதே. அவனுக்கு ஒரு ஊறு நேர்ந்தால், மக்கள் தம் உயிரையும் மதியாது அவனைக் காக்க முன் வந்துவிடுவரே. ஆகவே, இவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுவதே நன்று என்று துணிந்தனர். அவ்வளவே, அத்தனை நாட்களாகக் காவற்காட்டில் பாடிக் கொண்டிருந்த பெரும்படையை மறுநாட்காலை பார்க்க முடியவில்லை. வெற்றி ஆர்வத்தோடு சோணாடு புகுந்த பெரும்படை, வெற்றாரவாரம் செய்துகொண்டே சேரநாடு நோக்கிச் சென்றுவிட்டது. போரிட வந்த கட்டி, போரிடாமலே புறமுதுகு காட்டி விட்டான்.[3]

போர் புரியாமலே புறமுதுகு காட்ட நேர்ந்ததே என்ற நினைப்பு நெஞ்சை வருத்தச் சேரநாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த கட்டியை, அந்நாட்டிலிருந்து வந்த நல்ல செய்தி ஒன்று வரவேற்றது. சேர நாட்டை அப்போது கணைக்கால் இரும்பொறை என்ற சிறந்த வீரன் ஒருவன் ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கு சோணாட்டாட்சியைக் கைப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற கருத்து இருந்தது. அதற்காகவே, இருநாடுகளுக்கும் இடைப்பட்ட இடமாகிய கழுமலம் என்ற நகரில் பெரிய கோட்டை ஒன்று அமைத்து, படைத் தலைவர் பலர் இருந்து நடத்திச் செல்லக்கூடிய பெரிய படையோடு அதில் காத்திருக்கிறான் என்பதை அறிந்தான். உடனே அவன் நட்பையும் நன்மதிப்பையும் பெற்றுவிட்டால் தன் நினைப்பு நிறைவேறிவிடும் என்று கருதினான். அவன் நட்பைப் பெறப் பெரிதும் விரும்பினான்.

அதற்கேற்ற சூழ்நிலையும் அவனுக்கு வாய்த்தது. அக்கணையனிடம், ஆரியப் பொருநன் என்ற மற்றொரு வட நாட்டு மல்வீரன் இருப்பதாகவும், அவனைப் பேணிப் புரக்கும் அக்கணையன், ‘தன் மல்வீரனை எவராலும் வெல்ல முடியாது’ என வீம்பு பேசித் திரிவதாகவும் அறிந்தான். அவனுக்கு ஓர் எண்ணம் உண்டாயிற்று. தன் உடன் வரும் பாணனைக் கொண்டு அவ்வாரிய மல்லனை வென்றுவிட்டால், அவன் நண்பனாகிய கணையனுக்கு, இப்பாணன் நண்பனாகிய இக்கட்டிமீது மதிப்பு ஏற்படும்; அதை வைத்துக் கொண்டு அவன் படைத்துணை பெற்று, தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான். தன் மற்போர்த் திறத்தை விளக்கமுறச் செய்யவேண்டும் என்ற பாணன் வேட்கையும் அதனால் நிறைவேறும் என்று நினைத்தான்.

உடனே கட்டியும், பாணனும் கழுமல நகர் புகுந்து கணையனைக் கண்டனர். கட்டி தன் நண்பன் பாணனின் மற்போர்ப் பெருமையைப் பாராட்டினான். கணையன் தன் நண்பன் ஆரியப் பொருநனின், அரிய திறத்தை அவனுக்குக் கூறினான். இருவரும், இவ்வாறு வீணே புகழ்ந்து கொள்வதைக் காட்டிலும், எவர் ஆற்றல் சிறந்தது என்பதை நேரில் பார்த்து அறிந்துகொள்வதே நன்று என்ற முடிவுக்கு வந்தனர். உடனே இருவரும் தம் நண்பர்களோடு மற்போர்க் களம் புகுந்தனர்.

பாணனும், ஆரியப் பொருநனும் மேடை புகுந்தனர். போர் தொடங்கிவிட்டது. கட்டியும் கணையனும், கண் இமையாது, கவலையோடு கண்டு நின்றனர். போர் நெடும் பொழுது நடைபெற்றது. இறுதியில் பாணன், ஆரியப் பொருநன் தோள்களைத் தன் மார்போடு தழுவி இறுகப் பிடித்துக்கொண்டான். பாணன் பிடித்திருக்கும் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, பொருநன் தன் ஆற்றல் முழுவதையும் காட்டிச் சமர் புரிந்தான். ஆனால், பற்றிய பிடியினைப் பாணன் விட்டிலன். அதனால், பாணன் பிடிக்குள்ளேயே பொருநன் தோள் இரண்டும் கிடக்க, அவன் உடல் மட்டும் தனித்து வெளிப்பட்டு வீழ்ந்தது. அந்தோ! ஆரியப் பொருநன் உடல் அழிந்தது; அவன் உயிர் பிரிந்தது.[4]


வெல்ல வல்லார் இல்லை என வீறு பேசிய நண்பன் மறைவு கண்டு மன்னன் மனம் கலங்கினான். வந்தோன் நண்பன் வெல்ல, வேந்தன் நண்பன் உயிரிழப்பதா என்று எண்ணி நாணிற்று அவன் நல் உள்ளம். கணையன் ஒரு சிறந்த வீரன், சிறந்த வீரனை மதிக்கும் உயர்ந்த உள்ளம் உடையவன். அதனால், தன் நண்பன் உயிர் போக்கியவன் இப்பாணன்; அவன் உடன் வந்தவன் இக்கட்டி என அவர்மீது சினம் கொள்ளாது, என்னால் மதிக்கப் பெற்ற ஒரு மாபெரும் மல்வீரனை வெல்லும் பேராற்றல் பெற்றவன் இப்பாணன்; இப்பாணனைத் தன் நண்பனாகப் பெற்ற பெருமையுடையவன் இக்கட்டி என அவர்களை மதித்து வரவேற்றுச் சிறப்புச் செய்தான்.

கணைக்கால் இரும்பொறையின் அன்பைப் பெற்ற கட்டி, தன் வரலாற்றையும் விருப்பத்தையும் அவனுக்கு அறிவித்தான். கட்டி விருப்பமும் தன் விருப்பம் போலவே சோணாட்டரசைக் கைப்பற்றுவதே என அறிந்தான் கணையன். மேலும் அக்கட்டி ஒரு பெரிய படையோடு வந்திருப்பதையும் பார்த்தான். அவனாலும், அவன் படையாலும் தன் கருத்தும் நிறைவேறும் என்று நம்பினான். உடனே கழுமலக் கோட்டைக் காவலர்களாக விளங்கும், அத்தி, ஏற்றை, கங்கன், நன்னன், புன்துறை என்ற படைத் தலைவர்களோடு இவனையும் ஒன்றுபடுத்தி உயர்வு செய்தான். சேரர் படையில் சேர்ந்து பணியாற்றும் பேறு கட்டிக்குக் கிடைத்தது.

சேரநாட்டின் உட்புகுந்து, அச்சேரர்க்குரிய கழுமலக் கோட்டையைக் காத்து நின்ற படைத் தலைவர் அறுவரையும் வென்று, அவர் படைகள் ஆறினையும் அழித்து வெற்றி கண்ட சோழர் படைமுதலி பழையன் என்பவனாவன். சோழ நாட்டிற்கு வாழ்வும் வளமும் அளிப்பது காவிரியாறு. அக்காவிரியாற்றின் கரைக்கண் தோன்றிப் பெருமை பெற்ற பேரூர்கள் பல. அவற்றுள் ஒன்று போஓர் என ஒவிக்கப் பெறும் போரூர். ஆங்கு ஓடும் காவிரியின் ஆழத்தை அளந்து காணமுடியாது. ஓடக்கோலும் ஆழ்ந்து போகும் அவ்வளவு ஆழம் உடையது அவ்வாறு. பெருகி ஓடும் அக்காவிரியாற்று நீரை அவ்வூர் மக்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். காவிரியாற்றிலிருந்து கால்வாய்கள் பல வெட்டி வைத்திருந்தார்கள்; எங்கு நோக்கினும் நீர் நிறைந்து ஓடும் மதகுகளே காட்சி தரும். இவ்வாறு காவிரியாற்றுப் புனலைப் பயன் கொண்டமையால், அவ்வூரைச் சூழ எங்கும் தென்னஞ் சோலைகளும் வாழைத் தோட்டங்களுமே காட்சி அளித்தன.

இத்தகைய வளமிக்க போரூரில் வாழ்ந்திருந்தான் பழையன். பழையன் ஒரு பெரிய வீரன்; பெரிய படைக்குத் தலைவனுமாவன். அவன் ஒரு சிறந்த வில்வீரன்; அவன் கை வில்லிலிருந்து அம்புகள் மழைத் தாரைகளென, மளமளவென வெளிப்பட்டு, பகைவர் படையைச் சிதறடிக்கும் சிறப்புடையன. வேல் ஏந்திப் போர் புரிவதிலும் அவன் வல்லவன், வலக்கையில் வேலும், இடக்கையில் பகைவர் ஏவும் படைக்கலங்களைத் தடுக்கும் தோலும் ஏந்திக் களம் புகுந்துவிட்டால் அவன் வெற்றி பெறாது வீடு திரும்பான். அவன் வீசும் வேல், சிறிதும் குறிதவறாது சென்று பாய்ந்து பகைவர் உயிரைப் பாழ்பண்ணும். அவ்வளவு சிறந்த போர்ப்பயிற்சி பெற்றிருந்தான் அவன். இவ்வாறு பெரிய வீரனாய் விளங்கிய அவன், பெரிய யானைப் படையொன்றையும் பெற்றிருந்தான்.[5]

பழையன் இவ்வாறு பெருவீரனாய், பெரும்படை பெற்றவனாய் விளங்குவதை, அப்போது சோணாட்டை ஆண்டுவந்த செங்கணான் அறிந்தான். கொங்கு நாட்டுக் காவலனாகிய கணைக்கால் இரும்பொறையை வென்று கைப்பற்ற வேண்டும், அவனுக்குரிய கழுமலக்கோட்டையைப் பாழ்செய்தல் வேண்டும், இருவரும் செயல்களால் சோழர்களின் வெற்றிப் புகழை விளங்கக் காட்டுதல் வேண்டும் என்ற ஆசையுடையவன் அச்செங்கணான். அவ்வாசை கொண்ட அவன், அதை முடிக்க வேண்டுமேல், பகைவனின் பெரிய படைகளையும், படைத்தலைவர் பலரையும் வெல்ல வல்ல வீரன் ஒருவனே தன் படைக்குத் தலைவனாய் அமைதல் வேண்டும் என்று உணர்ந்தான்! அதனால், போரூர் சென்று பழையனைத் தன் படைக்குத் தலைமை தாங்குமாறு வேண்டிக் கொண்டான். அவனும் அதற்கு இசைந்து, தன் யானைப் படையோடு வந்து சோழர் படைத் தலைமையை ஏற்றுக்கொண்டான்.

  1. “போர் அரும் தித்தன்” –புறநானூறு:80
    “சினங்கெழு தானை தித்தன் வெளியன்” –அகநானூறு; 152.

  2. “வடாஅது
    நல்வேல் பாணன் நல்நாடு” —அகநானூறு : 325.

    “கல்பொரு மெலியாப் பாடின்நோன் அடியன்,
    அல்கு வன்சுரைப் பெய்த வல்சியன்,
    இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
    ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பில்
    குவைஇமில் விடைய வேற்றுஆ ஓய்யும்
    கனை இரும் சுரூணைக் கனிகாழ் நெடுவேல்
    விழவு அயர்ந்தன்ன கொழும்பல் திற்றி
    எழாஅப் பாணன் நன்னாடு” — அகநரனூறு : 113.

  3. “வலிமிகு முன்பின் பாணனொடு, மலிதார்த்
    தித்தன் வெளியன் உறந்தை நாளவைப்
    பாடின் தெண்கிணைப் பாடுகேட்டு அஞ்சிப்
    போர்அடு தானைக் கட்டி
    பொராஅது ஓடிய ஆர்ப்பு”

    —அகம் : 226
  4. பாணன்
    மல்லடு மார்பின் வலியுற வருந்தி
    எதிர்தலைக் கொண்ட் ஆரியப் பொருநன்
    நிறைத்திரள் முடிவுத்தோள் வையகத்து ஒழிந்த
    திறன்வேறு கிடக்கை நோக்கி, நற்போர்க்
    கணையன் நாணியாங்கு" —அகநானூறு : 386.

  5. “வென்வேல்,
    இழை அணி யானைச் சோழன் மறவன்
    சுழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்
    புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
    பழையன் ஓக்கிய வேல்போல்
    பிழையல.” —அகநானூறு : 326

    “வென்வேல்
    மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
    காவிரி வைப்பின் போஒர்.” —அகநானூறு : 186

    “கொற்றச் சோழர், கொங்கர்ப் பணீஇயர்
    வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
    பழையன் வேல்வாய்த்தன்ன, நின்
    பிழையா நன்மொழி” —நற்றிணை : 10