கவிஞர் பேசுகிறார்/தமிழும் - பாரதியும்

தமிழும் — பாரதியும்

பாரதியார் என்றால் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியாரைத்தான் குறிக்கும். பாரதி என்றால் நமக்கு அவருடைய நினைவு தான் வருகிறது. அல்லது "பாரதியார்" என்று கேட்டாலும் விடை தெரியுமாறு ஆராய்வோம்.

பசி ஏற்பட்ட போது உணவு கிடைத்தது என்று சொல்லும்படியாக தமிழ் நாட்டில் தமிழ் நிலை குன்றியிருக்குங்கால் அறிஞர்கள் எதிர்பார்த்தபடி பாரதியார் தமிழர்களிடையே தோன்றினார். தமிழின் ஆதிகால இடைக்கால நிலைகள் வெவ்வேறாயிருந்தன. கடைக்கால நிலையும் மாறுபட்டேயிருந்தது. ஆனால் கடைக்காலத்தில் தமிழுலகம் பாரதி தேவை தேவை என்று கதறிற்று.


விடை யுகைத்தவன் பாணினிக்
         கிலக்கண மேனாள்
வடமொழிக் கிரைத்தாங்கியன்
         மலயமா முனிக்குத்
திடிமுறுத்தியம் மொழிக்கெதிராக்கிய
        தென் சொல்

மடமகட் கரங்கென்பது வழுதி நாடன்றோ

இது திருவிளையாடற் புராணத்தில் காணப்படுவது.

"சிவபெருமானே தோன்றி, தமிழைச் சொன்னதாயிருந்தால் அதைப் பற்றி நமக்கென்ன கவலை? ஆபத்து வந்தால் அந்த சிவபெருமானே வந்து கவனித்துக் கொள்வார்" என்று தமிழர்கள் நம்பினார்கள். தமிழ் அமானுஷ்யமான காரியங்களையெல்லாம் செய்ய வல்லது. சர்வசக்தியுடையது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்ய வல்லது பரதத்துவம் அளிக்க வல்லது என்றெல்லாம் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. ஓ! அப்படியா? தமிழ் இவ்வள வெல்லாம் செய்யுமா? நிரம்ப ஆனந்தமாயிற்றே! ஆனால் ஒன்றையும் செய்ததாகக் காணோம்!


கண்ணுதற் பெருங் கடவுளுங் கழக
       மோடமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்
       பசுந் தமிழேனை
மண்ணிடைச் சில விலக்கண
       வரம்பிலா மொழி போ
லெண்ணிடைப் படக் கிடந்தது

       வெண்ணவும் படுமோ.

கடவுளே கழகத்தில் வந்திருந்து சீர்திருத்தி விட்டுப்போனதாகப் பாடப் பட்டிருக்கிறது.

தமிழ் இனிமையானது என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தமிழுக்குச் சொல்லப்படும் உயர்வைத் தாம் நாம் ஆட்சேபிக்கிறோம். மனிதன் செயலற்றுப் போகும்படி தமிழின் உயர்வு கற்பித்து எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. பாஷையே முத்தொழிலையும் செய்யவல்ல சக்தியுடைய தென்றால், அந்த பாஷையை நாம் சீர் திருத்த முயலுவானேன் என்று தமிழன் நினைத்தான். ஒரு கதை சொல்லுகிறேன். ஒரு அரசன் வீட்டில் பலர் திருடினர். திருடின சொத்துக்களை அலமாரியும் பூமிக்கடியிலும் வைத்திருந்தனர். கோயில் பூசாரி சுவாமியின் கழுத்தைத் திருகி அதன் தொந்திக்குள் திருட்டுச் சொத்தைப் போட்டு விட்டார். அரசனது ஆட்கள் மற்ற இடங்களிலிருந்த சொத்துக்களைக் கண்டு பிடித்து விட்டனர். ஆனால் சுவாமியின் வயிற்றுக்குள்ளிருந்ததைப் பார்க்கவில்லை. அய்யர் திருடி கடவுளின் வயிற்றில் வைத்து வைப்பாரென்று மக்கள் நினைப்பார்களா? இல்லை கடவுள் பெயரால் அமைக்கப்பட்ட சிலையில் திருட்டுச் சொத்து வைக்கப்பட்டிருக்கும் என்று காவலாளிகள் நினைக்கவில்லை,

அப்படி நினைப்பது-சிலையை எடுத்துப் பார்க்க எண்ணுவது பக்தியாளர்களுக்கு விரோதமானதெனக்கருதி விட்டனர். இதனாலேயே பார்க்க முடியாமற்போய் விட்டது. எவ்வளவு மரியாதை செய்யலாமோ அதற்குமேல் லட்சம் மடங்கு சொல்வது ஆபத்தில் தான் முடிகிறது.

அக்காலத்தில் கையாளப்பட்ட பொருள்கள், வாழ்க்கை இவைகளை அனுசரித்து இலக்கணம் செய்யப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் முன்னிருந்தது போலவே இருக்கவேண்டுமென்று சொல்வது சரியா ? காலதேச வர்த்தமானத்துக்கேற்ப இலக்கணமும் இலக்கியமும் மாற்றியமைக்கத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அழிந்து போகும். தெய்வத் தன்மை பொருந்திய தமிழ்தானே சீர்திருந்திக்கொள்கிறதா? இல்லை. சீர்திருத்த வேண்டுமென்றால் கோபம் வருகிறது.

முன்னிருந்தோர் மதங்களைப்பற்றியே பாடிப்பாடி உயர்ந்த பக்தி நிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றவைகளைப்பற்றி அவர்கள் பாடக்கூட நினைத்ததில்லை

முதல்நூல், வழிநூல், சார்பு நூல், இந்த மூன்றையும் தவிர வேறு வகையில் ஏதாவது செய்தால், அந்தக் காலத்தில் ராஜாக்களிடமிருந்து கவிப்பெரு மக்கள் காதையோ மூக்கையோ அறுத்து விட உத்தரவிட்டுவிடுவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள சம்மந்தத்தைப்பற்றிப் பாடாத வேறு நூல்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கடவுளையே பாடவேண்டிய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பிய சிலர் கடவுளை நாயகனாக வைத்துக் கவியியற்ற ஆரம்பித்தார்கள். கடவுளைப்பற்றிப் பாடினால்தான் நல்லவன்! இல்லாவிட்டால் கவிஞன் அல்ல. இப்படி யிருந்தால் பாஷை எப்படி விருத்தியாகும்? வெற்றி கிடைத்தால் கடவுளினால், தோற்றுப் போனால் அது விதி.

30 வருடத்துக்கு முன் ஒருவர் ஒருநாவல் எழுதினார். இது வழி நூலா சார்பு நூலா என்றெல்லாம் கேட்கத்தலைப்பட்டு விட்டார்கள். சுதந்தரமாக நினைத்ததை எழுத தைரிய மில்லாதிருந்தது அக்காலத்தில். இந்த நிலையில் அயர்லாண்டு தன் பாஷையை அபிவிருத்தி செய்து சுதந்திரம் பெற்றது, ஆங்கிலேயர் ஆண்டுதோறும் இலக்கணத்தை மாற்றி யமைக்கின்றனர்; இதனால் இலக்கியம் வளருகிறது என்ற செய்தியைக் கேட்கிறோம். இங்கிலீஷ் புத்தகசாலையில் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் சொப்பு செய்யும் வகை காணப்படுகிறது; தமிழ் புத்தகசாலையில் ஒன்றை எடுத்தால் 'அங்கிங் கெனாதபடி' என்றுதான் ஆரம்பிக்கும். முந்தி இருந்தது பழைய பதிப்பு. இப்பொழுதிருப்பது புதிய பாக்கெட் சைஸ் பதிப்பு. இவ்வளவு தான் வித்தியாசம்! உலகத்தில் வேறு கருத்துக்கள் இல்லையா? கவி காண்கிற பொருள்களிலெல்லாம் கவனம் செலுத்துவான்; தான் இன்பத்தை நுகர்வான், பாடுவான், பிறர் படிப்பர், அவர்களுக்குப் புரியும், இன்பத்தை அனுபவிப்பர், இப்படிச் செய்ய வல்லவன் கவி. இந்த சமயத்தில் யாருக்கும் பயப்படாத சுதந்தரம் என்றால், என்ன என்பதை எளிய நடையில் சொல்லித்தர ஆள் தேவை. பிறந்தார் பாரதியார்! அவருக்கு எதிர்ப்பு இருந்ததா? அவர் அனுபவித்தது போன்று வேறுயாரும் அவ்வளவு சிரமங்களை அனுபவித்ததில்லை.

சூரியனை தினம் பார்க்கின்றான். கும்பிடுகிறான். சூரியனைப் பார்த்தானா அவன்? இல்லை; அவனுக்குக் கண் இல்லை; கவி பார்க்கிறான்; அதே சூரியனை இன்பத்தை — அழகை அனுபவிக்கிறான். எடுத்துச் சொல்லுகிறான். பிறகு அனைவரும் பார்க்கின்றனர். முன்பார்த்த அதே சூரியனை இப்பொழுது பார்த்து முன் காணாத இன்பத்தை இப்பொழுது காண்கின்றனர். குமரியை எல்லோரும் தான் பார்க்கிறார்கள். குமரியைப்பற்றிக் கேட்டால் அது முக்கோணமாக அமைந்திருக்கிற தெனச் சொல்வார்கள். ஆனால் கவி என்ன சொல்கிறார்.


நீலத்திரைக் கட லோரத்திலே — நின்று

நித்தத் தவஞ்செய் குமரி யெல்லை

அங்கே ஒரு குமரி யிருந்து தவம் செய்கிறாளாம். இது கவிஞனின் உள்ளம்.

பாரதியார் புதுவைக்கு வருமுன் தேசீய கீதமும் நாட்டு வாழ்த்தும் பாடினார். தேசீயப் பாட்டு என்றால் எப்படியிருக்க வேண்டும்? "நான் வாழும் தேசம்" என்னுடையது. நான் ஒருவனே இருந்தாலும் அந்தத் தேசம் என்னுடையது தான். என் வகுப்பார் உயர்ந்தவர்கள். இப்படிப்பட்ட கருத்துக்களை நிரப்பியிருப்பது "தேசீயக் கவி." ஆனால் நமது அன்பர்கள் பலர் தினமும் தேசிய கீதம் எழுதுகிறார்கள்!

பாரதியார் தேசீயகீதம் ஒன்றை எழுதி என்னிடம் காண்பித்து, பிரஞ்சுக் கவி எவ்வளவு வீரமாக எழுதியுள்ளான்; எனக்கு அவ்வளவு வருமா என்று சொன்னார். தாம் எழுதியதுகூட அவ்வளவு உயர்ந்ததல்ல என்று நினைத்தார்.

தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்—இவள்

என்று பிறந்தவ ளென்றுண ராத
இயல் பின ளாமெங்கள் தாய்

முப்பது கோடி முகமுடை யாளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள்

முப்பது கோடி மக்களையுடையது எங்கள் நாடு. ஆனால் உயிர் ஒன்றுதான். இன்னும் "உங்கள் நாட்டில் பதினெட்டு பாஷைகள் இருக்கின்றனவே, நீங்கள் எப்படி முன்னேறப் போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் என்ன சொல்வது? பாடுகிறார்.

... .... ... ... ... இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்

சிந்தனை யொன்னுடையாள்
எங்களிடம் ஒற்றுமையில்லை யென்று என்னை ஏமாற்றாதே, சிந்தனை ஒன்று தான் என்று கூறுகிறார்.

ஜாதி—இது முன்னிருந்ததில்லை, பின்னுமிருக்க வேண்டாம் என்றார் பாரதியார். இதற்கு முன் கபிலர் சொன்னார், அவருக்குப் பெரிய ஆசாமிகள் கூடச்சொன்னார்கள், அவைகளெல்லாம் மூலையில் கிடக்கின்றன. ஆனால் பாரதியாருடையதை அப்படித்தூக்கி மூலையில் எறிந்துவிட முடியுமா? மற்றவர்கள் முன்னேறு வதைக்கண்ட தமிழனுக்குப்பசி ஏற்பட்டிருக்கிறதே, இருதயத்தைக் குலுக்கிச் சுடச் சுடச் கொடுத்தால் மூலையில் போட வருமா?

பாரதியின் கீர்த்தியைத் தொலைத்தார்கள். அவருக்குப் பணம் வராமல் தடுத்தார்கள், பெரியவர்க ளென்போரெல்லாம் எதிர்த்தார்கள்,

... ... ... ...வெள்ளைப்
பரங்கியைத் துரை யென்ற

                                      காலமும் போச்சே

என்று பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்! ஆனால் அதற்கு முன்னாலே இன்னொன்றைச் சேர்த்த்தில் தான் கசப்பு!


பார்ப்பானை ஐயரென்ற
         காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரை யென்ற

         காலமும் போச்சே

பாரதியார் மகள் சிறு குழந்தை, அக்காலத்தில். அந்தப் பெண் இப்பொழுது பாரதியாருடைய சரித்திரத்தை எழுதுகிறது. அந்தப் பெண்ணுக்குப் பாரதியாரைப் பற்றி என்ன தெரியும்? அவர் புதுவையிலிருந்து மைலத்திற்குப் போனதாக எழுதுகிறாள் அந்தப் பெண். அவ்வளவும் அபத்தம் பக்கத்தை நிரப்ப அதையும் பத்திராகாசிரியர் வெளியிடுவதா? கவிஞனைப்பற்றி உண்மையை எழுத வேண்டும். பொய்யை எழுதிப் பொய்யென்று கண்டு பிடிக்கப் பட்டால் மற்றவையும் பொய்யென்று கருதப்பட்டுவிடும்.

பாரதியார் புதுவையிலிருந்து 'சுதேச மித்திர' னுக்கு ஒருநாள் வியாசமும், மறு நாள் பாட்டுமாக எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு சமயம் ஆனந்த மேலீட்டால் இரண்டு நாளும் பாட்டுக்களே எழுதியனுப்பி விட்டார். அதற்குப் பத்திரிகாசியரிடமிருந்து பதில் வந்தது, சமாசாரப் பத்திரிகையில் கவிக்கு இடமில்லை யென்று. பிறகு வியாசமேயெழுதத் தொடங்கினார், பாட்டைப் பாட்டு என்று உணரவில்லையே என்று பாரதியார் வருந்தினார். அப்பொழுது சென்னையில் வி. வி. எஸ். ஐயர் ஆங்கிலக் கவிகளைத்தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவ்வளவு அழகாக எழுதக்கூடிய கவி தற்காலம் தமிழுலகில் இல்லை என்று அபிப்பிராயம் எழுதினார். இதைப் பார்த்த பாரதியார் மிகவும் வருத்தப்பட்டார். நம்மைத்தாங்கி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று ஏங்கினார்.

அப்பொழுது சென்னையிலிருந்து ஒரு வெள்ளைக்காரன் பாரதிக்குக் கடிதம் எழுதியிருந்தான். "நான் யார் தெரியுமா? தாகூரின் கவிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவருக்கு உலகத்தில் கீர்த்தியை வாங்கிக் கொடுத்தானே அவனிடமிருந்தவன் நான். சிறந்த தமிழ்க் கவி என்று கேள்விப்பட்டேன். உம்முடைய கவிகளை நமக்கு நீர் எழுதியனுப்பவும் என்று எழுதியிருந்தான். பாரதியார் எழுதினார்:


வேண்டுமடி யெப்போதும் விடுதலை -- அம்மா!
தூண்டு மின்பவாடை விசுதுய்ய தேன்கடல்
சூழநின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழராகி எம்மோ டமுத
                                                              முண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய

நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ

இரண்டு நிமிடத்தில் எழுதினார். இரண்டு தினங்களில் இங்கிலீஷ் கவி வந்தது. பாடினார். ஆஹா! அதே உருவத்தில் அமைத்து விட்டானே கவியை என்று பாராட்டினார். அந்தக் கவி இங்கிலீஷ் பத்திரிகைகளில் வெளிவந்தது. பெரியவர்கள் ரசித்தனர். அப்பொழுது 'சுதேச மித்திரன்' ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "நீங்கள் அடிக்கடி கவி எழுதுங்கள்" என்று. தமிழ் நாட்டின் நிலை அப்படி யிருந்தது. தமிழ்ச் சுவையை இங்கிலீஷால் அறிய முடியுமா? தமிழ்ப் பாட்டின் இனிமை தமிழனுக்குத் தெரியவில்லை; இங்கிலீஷ்காரன் தமிழ்ப்பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொன்ன பிறகு தான் தமிழனுக்குத் தெரிகிறது.

நமக்குப் பிடித்ததை மட்டும் தான் கவி எழுத வேண்டுமென்று விரும்புவது தவறு. யாருடைய விருப்பத்துக்காகவும் கவி பாட முடியாது. "கவிஞன் இஷ்டம்போல் பாட வேண்டும். எல்லாருக்கும் பொதுவாயிருக்க வேண்டும்; எதிலும் சேரக்கூடாது" என்றெல்லாம் சொல்வது தவறு.

எதைப்பற்றியும் கவி பாடலாம். எல்லாருக்கும் இன்பத்தை ஊட்டலாம். எளிதாகச் சொல்லலாம். உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாக்கலாம் என்பவைகளை நிரூபித்துக் காட்டினவர் பாரதியார்.

பாரதி ஜாதியை ஒழிக்கிறான், அனுஷ்டானமற்றவன், ஆசாரமற்றவன், என்றெல்லாம் அப்பொழுது தூஷித்தார்கள். அவருடைய மனைவியிடம் "எல்லாப் பெண்களும் நகை போட்டிருக்கிறார்களே உனக்கில்லையே, உன் புருஷனைக் கேள்" என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். இம்சை பொறுக்கமாட்டாமல் தாமே தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பது இந்த மடையர்களின் முடிவு. காரைக்குடியில் அன்பர்கள் பாரதியார் திட்டத் திட்ட அதைப் பொறுத்துக் கொண்டு உபசாரம் செய்து அவருக்கு வேண்டியதையெல்லாம் அளித்தார்களென்றால் அதை மறக்க முடியுமா! மூன்று லட்ச ரூபாய்களைக் கொடுத்து அழகான வீட்டில் உட்காரவைத்து ஐந்து ஆட்களை அமர்த்தி நூலாக எழுதித்தள்ளு என்றல்லவோ சொல்லியிருக்க வேண்டும் பாரதியிடம். இல்லை. அவர் தெருத் தெருவாக அலைந்தார். எனக்குத் தெரியும். விரிந்த உள்ளமில்லாமல் அவருடைய குலத்தினரே அவரைத் தூஷித்தார்கள் செத்துப்போன பின்னர் பாரதி நாமம் வாழ்க என்கிறார்கள்.

காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தார். அதை எதிர்த்து எழுதியது "சுதேச மித்திரன்." பத்திரிகை விற்பனையாகவில்லை. பிறகு பாரதியைக் கூப்பிட்டார்கள். அவர் காந்திஜிக்கு விரோதமாக எழுத மாட்டேனென்று சொல்லி விட்டார். "உங்களிஷ்டம் எப்படி வேண்டுமானுலும் எழுதுங்கள்" என்றார்கள். இதற்கென்ன அர்த்தம்?

பாரதிக்கு எல்லா மதமும் ஒன்று, கூடுமானால் மதமே இல்லை யென்றாலும் பரவாயில்லை. ஜாதி இல்லை யென்பது அவருடைய அகராதியில் தீர்ந்த விஷயம். "மூட நம்பிக்கைகளை ஒழித்தவர் பாரதியார். இந்த தேசம் உருப்பட வேண்டும். தமிழர்கள் சுதந்தரத்துக்கு லாயக்கானவர்களாக ஆக்கப்பட வேண்டும். தமிழினால் தான் தமிழர்கள் வீரர்களாக முடியும். தமிழ் வளர்ந்தால் தமிழன் உயர்வான்” இதுதான் அவரது மதம், அவர் முகமது, கிறிஸ்து, முத்துமாரி, சக்தி, எல்லாவற்றையும் பற்றிப் பாடியிருக்கிறார். தமிழில் இனிமையாக எதைப்பற்றியும் பாட முடியுமென்பது அவர் கருத்து. பாரதி முத்து மாரியம்மனைப் பற்றி பாடியிருக்கிறாரோ என்று ஒருவர் கேட்டால் தாராளமாக அவருக்கு அதை எடுத்துக் காட்டலாம்.

பாரதியார் பாட்டு யாருக்கு விளங்காது? அவர் இறையனார் அகப் பொருளைத் தான் பாடினார். ஆனால் இறையனார் அகப் பொருளை எடுத்துப்பார்த்தால் ஒன்றுமே விளங்காது. வித்வான் களெல்லாம் "உயர்ந்த பதமில்லையே இதற்கு வசனமாக எழுதி விடலாமே" என்பார்கள். எளிய நடையில் எழுதத் தானே முடியாது.

பக்தியினாலே - இந்தப்

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடி!

கவி நேரே போய் நேரே வரவேண்டும். அதை விட்டு ப-க்-தி-யி-னா-லே என்று இழுத்துத் தாளங்களை எண்ணிப் போட்டுப்பாட வேண்டியதில்லை. இப்படிப் பாடினால் அர்த்தம் விளங்காது. காதலையும் கலையையும் பரிகசிக்கக்கூடாது. அவைகளை வளர்க்க வேண்டும். பத்திராகாசிரியர்கள் தாய் தந்தைக்கொப்பானவர்கள்

விமரிசனம் என்ற தலைப்பில் துளிர்விட்டு விளையும் பயிர்களைக் கிள்ளி யெறிந்து விடக் கூடாது. அவர்கள் இவைகளை வளர்க்க முற்பட வேண்டும்.