கவிஞர் பேசுகிறார்/தமிழும் - இசையும்
தமிழும் இசையும்
கவிதையில் தெய்வத் தன்மையிருக்கிறதென்கிறார்கள். அது வேண்டாம்; மனிதத் தன்மையிருந்தால் போதும். தெய்வத்தன்மையென்று சொல்லிக் குட்டிச் சுவராகப் போய்விட்டோம். சிவபெருமான் அகஸ்தியருக்குத் தமிழைச் சொன்னார். எது போல்? பாணினிக்கு வடமொழியைச் சொன்னதுபோல். எடுக்கும்போதே கலகம் மூட்டி விட்டார்கள். தமிழன் ஆதியைப்பற்றி புராணங்கள் சொல்கின்றன். தமிழ் உண்மையிலேயே உயர் நிலையிலிருந்தது. "கண்ணுதற் பொங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெளிந் தாய்ந்த பசுந்தமிழ்" என்றதனால் சிவபெருமான் கூடச் சங்கத்தில் ஒரு மெம்பராக இருந்து தமிழை ஆய்ந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து சிவபெருமானுக்கு முன்னாலேயே தமிழும் தமிழரும் இருந்தார்கள் என்று சொல்லவேண்டும். தமிழர்கள் பல நூற்றாண்டுகளாகத் தூங்கிக்கொண்டிருந்து விட்டார்கள். உயர்ந்த இடம் கோவில் என்று மதிக்கப்படுகிறது. ஆனால் அங்கு தமிழுக்கு என்ன இடம் கிடைக்கிறது? மானங்கெட்டுப்போய்தான இருக்கிறோம். தமிழுக்கு ஏற்ற இடம். அந்தஸ்துகொடுக்கப்படவில்லை. பழங்கதைகள் பேசுவதால் பயனில்லை. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் அச்சம் காரணமில்லாத அச்சம் காணப்படுகிறது. அதற்கு மடமைதான் காரணம். பாரதியார் எடுத்த எடுப்பிலேயே "அச்சந்தவிர்" என்றார்.
தமிழ் இசையைப்பற்றிச் சொன்னார்கள். தமிழ் இசையைக் கெடுத்தவை ஹார்மோனியமும், தியாகராஜய்யர் கீர்த்தனமும் என்று பாரதியார் சொன்னார். தியாகராஜர் ஒரு இசைப்புலவர்; மொழிப் புலவரல்ல. நல்ல கவிதைக்கு மொழிப்புலமையும் வேண்டும்; வெறும் இசைப்புலமை மட்டும் போதாது. தியாகராஜர் ஏன் மொழிப்புலவரல்ல என்று சொன்னார்? அவரது பாடல்களிலே பல பிழைகள் இருக்கின்றனவென்று தெலுங்கர்களே சொல்லுகிறார்கள். அவர் பாடியிருப்பது ஒரு நாடோடி பாஷை, தெலுங்கு அல்லாத, தமிழ் அல்லாத ஒரு பாஷை. "நானும் தமிழன் தான். ஆனால் தெலுங்குப் பாட்டு வேண்டாமென்று சொல்லக்கூடாது. ஒரு சில பாட்டுகளைத் தமிழில் பாடினால் போதும்” என்று சொல்கிறவர்கள் பத்து வருஷத்துக்கு முன் தமிழ்ப் பாட்டு சிலவற்றையாவது இடையிடையே பாடிவைக்கக்கூடாதா? சில்லரையென்று சொல்லி ஏன் இழிவு படுத்தினார்கள்? எதற்கும் அடிமைத்தனம் மாறவேண்டும், பக்தியென்ற முட்டாள் தனத்தினால் தான் அடிமைத்தனம் உண்டாகின்றது, என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். உயர்ந்த கவிதைகள், கலைகள் என்றால் அவை பகுத்தறிவுக்கு ஏற்றவையாக இருக்கவேண்டும்; உயர்ந்த எண்ணங்களையும் நோக்கங்களையும் பரப்புபவையாக இருக்கவேண்டும். குறுகிய நோக்கம், கொள்கை, லட்சியம் இவற்றைப் புகட்டும் கவிதைகளை உயர்ந்தவை யென்று சொல்வதற்கில்லை. அவற்றைப் படிப்பதால், போற்றுவதால் ஒரு சமூகம் முன்னேற முடியாது.