கவிஞர் பேசுகிறார்/தமிழ்த் தொண்டு

தமிழ்த் தொண்டு

மிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவ வேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத் தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டுமானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும்.

புலவர் புலமை என்றால் புதுப்பிப்பவர் புதுமை என்று பொருள். இங்குள்ள புலவர்கள் எதைப் புதியதாக எழுதினார்கள்? புது வெளியீடுகள் எத்தனை வெளியிட்டார்கள்? கவிஞன் என்பவன் ஓர் மலை, ஆறு, தடாகம், இயற்கை, சோலை, முதலியனவற்றைத்தனது கவிதாத் திறமையால் எழுதுபவன். இங்கு எத்தனைப் புலவர்கள், எவ்வளவு வெளியீடுகள் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இல்லை, கம்பராமாயணத்தை மொழி பெயர்ப்பதும், கம்பராமாயணத்தைச் சுருக்கி எழுதுவதும், பெரிய புராணத்தை வசன நடையில் சுருக்கி எழுதுவதும், புதுப் புது உரை எழுதுவதும் ஆகிய இதிலேயே தங்களுடைய வாழ் நாளை அறிவைக் கழிக்கின்றனர்.

ஓர் புலவன், ஓர் புத்தகத்தை வெளியிட்டால் அதைக் கிறிஸ்தவன், முகம்மதியன், ஆங்கிலேயன், மற்ற உலகிலுள்ள எல்லா மக்களும் ஆவலுடன் படிக்கும் வகையிலே இருக்க வேண்டும். அதை விடுத்து தலைப்பிலேயே "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டிற்கும் இறைவா போற்றி,” 'சிவமயம்' என்று மிக மிகக் குறுகிய மனப்பான்மையிலேயே இருந்தால், எப்படி நமது மொழியை எங்கும் பரப்ப முடியும் என்பதைச் சிந்தியுங்கள்.

நான் தோழர் சி. என். அண்ணாத்துரை அவர்கட்கும், தோழர்கள் சேதுப்பிள்ளை, சோம சுந்தர பாரதியார், ஆகியோர்களுக்கும் நடந்த விவாதங்களைக் கவனித்தேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு 'செந்தமிழ்ச் செல்வி" எனும் புத்தகத்திலே எழுதிய பாரதியார் தலைகீழாய்ப் புரட்டி, மனமார தன்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக மாறிப் பேசுகின்றார். ராவணன் ஆரியன் என்றும்: ராமன் திராவிடன் என்றும், உலகம் சிரிக்கும் வண்ணம், பிறர் ஒப்பா வண்ணம் பேசுகிறார்.

சேலத்திலே பாரதியார் அவர்கள் ராமாயணத்தில் ஊழல்களிருக்கின்றன, ஆனால் கலையாயிற்றே கலையை அழிக்கக்கூடாது என்று கூறினாராம். கலை என்றால் என்ன புலவர்களால் இயற்றப்படுவது தானே. நாம் எவ்வளோ இயற்றிக் கொள்ளலாமே. பாரதியார் முயன்றால் முடியாதா? அல்லது பண்டிதர்கள் பிழைப்புக்கும் செல்வாக்குக்கும் இதுதான் வேண்டுமா? சொல்லட்டும் ஒப்புக்கொள்வோம். ஆனால், ஏன் மக்களிடம் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி தங்களுடைய வாழ் நாளை வீணாளாக்கிக் கொள்வதால் தன் நாட்டையும், தமிழ் மக்களது முன்னேற்றத்தையும், தமிழ் மொழி அபிவிருத்தியையும், தங்களது மிகக்குறுகிய நோக்கங்களால் கெடுக்கின்றன. இதைக்கண்டு பிறநாட்டார், நம்மைப் பரிகசிக்க மாட்டார்களா?

நமது நாட்டில் டாக்டர் பட்டம், மற்றும் பட்டங்கள் எல்லாம் எப்படி? மேல் நாட்டில் டாக்டர் பட்டம் எப்படி? இவற்றை ஆராய வேண்டாமா? நாம் முன்னேற, நமது மொழி முன்னேற வழி தேட வேண்டாமா?

தமிழ் மொழி எல்லா பாமர மக்களும் மிக எளிதில் புரித்து கொள்ளும் வகையிலே, எல்லா மதத்தினர்களும், உலகமக்களனைவரும் தமிழ் மொழியை விருப்புடன் படிக்கும் வகையிலே இயற்ற வேண்டும்.

🞸