கவிஞர் பேசுகிறார்/நூலறிவும் - உணர்வும்

நூலறிவும் - உணர்வும்

னிதன் அறிபவன், மனிதனுக்கு அறிவுண்டு. மனிதன் எவற்றையும் அறிபவன். எவையும் அறிவுக்கு உட்பட்டவை.

உண்மை என்பது உள்ளத்தின் தன்மை. அதாவது உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்) யின் தன்மை. அதாவது மேற்புறத்தின் இயல். கடலின் மேற்புரம் கண்டோன் கடலின் மெய்மை கண்டோனாவான். கடலின் உள்ளியல் கண்டோன் கடலின் உண்மை கண்டோனாவான்.

மனிதன் அறிபவன். தன்னுண்மை, தனது மெய்மை, உலகுண்மை உலகின் மெய்மை, அடங்கல் உண்மை ஆகிய அனைத்தையும் அறிபவன் (அடங்கல் - எல்லாம்)

அறிவு என்பது உண்மை, மெய்மைகளை அறிதல் என்பதனோடு அனைத்தையும் அறிதல் என்பதும் ஆகும்.

அறிவின் நோக்கம் பெரிது! அறிபவனாகிய மனிதன் தான், இல்லம், ஊர், நாடு, கண்டம், உலகம்,வானம், வானுள்ள கோளங்கள் ஆகியவை உள்ளிட்ட பெரும் புறம் அனைத்தின் உண்மையையும், மெய்மையையும் அறியும் நோக்கமுடையவன்.

இப்பெரு நோக்கமுள்ள மனிதனின் நிலையோ சிறிது. தொட்டாலன்றி உணர முடியாத உடல், கூப்பிடு தூரத்தில் உள்ள உருவத்தைக் காண முடியாத சிறு கண்கள், சிறிய காதுகள், சிறிய வாய், சிறு மூக்கு ஆகிய இவற்றையுடையவன், அனைத்தின் உண்மை மெய்மைகளை அறிதலான தனது நோக்கத்தை அவன் எவ்வாறு நிறைவேற்றுவான்! இதனால் அவன் கல்வி கற்றல் அவசியமாகிறது.

கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள். கல்லல் கல்வி, கற்றல் கற்பு அனைத்தும் ஒரு பொருட் சொற்கள். சூரியன் பல்லாயிர அடி உயரத்தில் இருக்கிறது; ஒளியால் வெப்பத்தால் அது அறியப்படுகிறது. இதுவன்றி அதன் உட்புறத்தின் தன்மை வெளிப்புறத்தின் தன்மை அறியப்படவில்லை. ஆயினும் அறிஞர் ஆக்கிய நூற்களில் அச் சூரியனது விஷப் பெயர்ப்பு உண்டு. சூரியனால் எதிரி பார்த்த அறிவு அதைப்பற்றிய விஷயப் பெயர்ப்புள்ள கல்வியால் நிரம்பலாம்.

அறிவு என்பதற்கும், நூலறிவு அல்லது கல்வியென்பதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு உண்மை மெய்மைகளை மாத்திரம் ஆதாரமாக உடையது, நூலறிவு அல்லது கல்வி என்பது உண்மை மெய்மை பொய்மை மடமை முதலியவைகளை ஆதாரமாக உடையது. கேள்வியறிவும் இவ்வாறே.

ஒருவனுக்கு தன்னிலையில் உள்ள அறிவானது விவாதத்துக்குரிய நூலறிவால் பெருகிவரும் காரணத்தால் பொதுவாக மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும் அறிவு தார்க்கீகத்துக்கு உட்பட்டதேயாகும். அறிவினால் எதிர்பார்க்கும் பயன் இன்பவாழ்வு பெறுவதாகும். உண்மையும், மெய்மையும் உடைய இவ்வறிவால் இன்பவாழ்வு பெறுதல் நிச்சயம். பொய்மை மடமைகளையும் உடையதான தார்க்கீக ஞானத்தால் இன்ப வாழ்வு கிட்டுதல் நிச்சயமாகுமா?

தார்க்கீகமாவது இது சரியா? சரி அன்றா? "இது சரியா? சரி அன்றா? சரி என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! பிழை என்பதற்கு அறிகுறி இதுவல்லவே! வினைபயன் எதுவாயிருக்கலாம்! தீமையோ! நன்மையோ!" என ஒருவன் தனக்குள் தர்க்கம் புரிவதாகும். தார்க்கீக ஞானமானது செயலில் இரங்கத் தீவிரப்படுத்தாது. ஒன்றைப்பற்றி நிச்சயிப்பதற்கும், தயங்குவதற்கும் காரணத்தைத் தானே கண்டுபிடித்திருக்கும் நூலறிவு தார்க்கீகத்துக்குக் குரியதே.

அநுபவஞானம் என்பதொன்று உண்டு. அது உணர்வு, உணர்ச்சி எனவும் சொல்லப்படும். உணர்வு என்பதைச் சிறப்பித்து "உணர்வு எனும் பெரும் பதம்" என்றார் ஆழ்வாரும்.

தார்க்கீக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு.

நெப்போலியன், நூலறிவால், தார்க்கீக ஞானத்தால் காரியம் செய்யவில்லை எனவும், அவனது வெற்றி அனைத்தும் உணர்வின்பயனே எனவும் சொல்வர் பாரதியார்.

நமது நாட்டில் விவாதத்துக் குரிய நூலறிவும், கேள்வியறிவும் மிகுதியாகும். இதனால்தான் நம்மவர் செயலற்று கிடக்கின்றனர். பட்டறிந்ததின் பயனாகவாயினும் உணர்ச்சிபெறவில்லை.

உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழை படுவதில்லை அது உண்மை. மெய்ம்மைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவும் செயலும் அன்றோ! அந்தோ உணர்வு பெறாதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள், நூலறிஞர்கள்.

கடவுட் பைத்தியம், மதப் பூசல், சாதி யிறுமாப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பட்ட தொல்லை பல. பெரும் பாரதம்! இவைகளைத் தொலைக்க வேண்டும் என்பதை உணராதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள்! அந்தோ இவ்விஷயத்தில் இவர்கள் உணர்வு கொள்ளாதிருத்தலேயன்றி ஏழு ஆண்டுகளாகக் குடியரசு செய்து போந்த கிளர்ச்சியின் பயனாக உணர்ச்சி ஏறிவரும் பெருமக்களை, சுயமரியாதைகாரரை - அறிவியக்கத்தினரைப் பார்த்து ”இவர்கள் நூலறிவற்றவர்” என்றும், ”ஆராய்ச்சியற்றவர்” என்றும் சொல்லி உணர்ச்சிக்குத் தடை போடவும் முயல்கின்றனர். இவ்வறிஞர் செயல் தார்க்கீகப் பெரியார் செயல் இரங்கற் குரியதாகும்.


ஓ புராண அறிஞர்களே! இதிகாச அறிஞர்களே! கடவுளறிஞர்களே! மத அறிஞர்களே! சாதி அறிஞர்களே! மூடப் பழக்க வழக்க அறிஞர்களே! நூலறிஞர்களே! தார்க்கீக அறிஞர்களே! கண்ணைத் திறந்து பாருங்கள் உணர்வு என்னும் பெரும்பதம் நோக்கி மக்கள் அபரிமிதமாக ஓடுகின்றனர். நீங்கள் இருந்த இடத்தினின்று அசையாமலிருக்கின்றீர்களே! உங்கள் நிலை என்னாகும்?

நான் கல்வி, நூலறிவு வேண்டியதில்லை என்கின்றேனா? இல்லை யில்லை. உண்மை, மெய்மைகளை ஆதாரமாக உடைய பகுத்தறிவு, நுண்ணறிவு, உணர்வு, நுண்ணுணர்வுகளை யுடையார் ஆக்கிய நூற்களைக் கொள்ளுமாறு கூறுகிறேன். தார்க்கீகத்தை வளர்க்கும் நூற்களைத் தள்ளுமாறு கூறுகிறேன்

நல்வாழ்வுக்கு, சுதந்திர வாழ்வுக்கு - சமத்துவமான வாழ்வுக்கு. சகோதரத்துவ வாழ்வுக்குரிய வகையில் உணர்வுகொள்ள வேண்டுமென்பதே எனது கோரிக்கை.