கவிபாடிய காவலர்/சேரமான் கணக்கால் இரும்பொறை
2. சேரமான் கணைக்கால் இரும்பொறை
மக்கட்கு அமைய வேண்டிய பண்புகளில் மானமும் ஒன்று, மானமாவது எக்காலத்தும் நிலையில் தாழாமையும், அங்கனம் வரவேண்டிய தாழ்வு ஊழ் காரணமாக வந்த போது, உயிர் வாழாமையும் ஆகும். இதனை வள்ளுவர் ' மானம் ' என்ற அதிகாரத்தில் அமைத்து மானத்தைக் கைவிடாதே என்ற கருத்தினை அழுத்தந் திருத்தமாகப் பேசியுள்ளார். அவர், “ தம் குடிப் பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக்கவேண்டும். யார் தமது மானத்தினின்று விலகி வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்கள் தலையினின்று. கீழே மழித்து நீக்கப்பட்ட மயிருக்குச் சமானமானவர். குன்று போன்ற தோற்றமுடையவராயினும், குன்றி மணி போன்ற மானம் சிதைக்கும் செயல் புரிந்தால் அவர் குன்றிப் போவர். மானம் குறைந்த வர்க்குப் புகழ் ஏற்படாது. நல்ல மானியாக இருப்பவர் மானம் கெடும் நிலை ஏற்பட்டால், தன் ஒரு மயிர் இழக்க நேரும்போது உயிர் விடும் கவரிமான் போல் மானத்தைக் காக்க உயிரையே இழப்பர்” என்றெல்லாம் கூறிப் போந்தார்.
"உயிரை விட்டேனும் மானத்தைக் காப்பது தான் சிறப்பு ” என்று வில்லியார் கூறுவர். "மானம் இழந்து உலகில் வாழும் வாழ்க்கையின் வசை எழு பிறப்பும் நீங்காது" என்பர் கந்தபுராண ஆசிரியர். " மானம் அழியாது உயிர் விடுகை சிறந்தது" என்னும் நல்வழி. "மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே" என்னும் இனியவை நாற்பது. "தம் மானம் போகும் வகையில் வானகமே வந்தாலும் சிறந்த மானிகள் அதனை விரும்பமாட்டார்" என்னும் நாலடியார். "மானம் அழிந்து வாழ்வதினும் மரணம் அடைவது உத்தமம்" என்னும் சாதாரணப் பழமொழியும் உலகில் வழங்கி வருகிறது. இத்தகைய மானத்தின் பெருமையினை நிலை நாட்டித் தம் உயிரையும் விட்ட மன்னரே, சேரமான் கணைக்கால் இரும்பொறையாவார். இவர் மன்னரானலும் மதி மிக்க புலவராயும் இருந்த காரணத்தால் கவியும் பாடிய காவலர் ஆவார்.
சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பார், இயற் பெயரை நாம் அறிதற்கு இல்லை. இவரது கால் திரண்டு வீரக்கழல் புனைதற்கு ஏற்ற பொலிவுடன் இருந்த காரணம் பற்றிக் கணக்கால் என்று சிறப்பிக்கப்பட்டு, இவரது சேரர் குடிக்கே சிறப்புப் பெயராக அமைந்த இரும்பொறை என்பதையும் இணைத்துக் கணக்கால் இரும்பொறை என்று கூறப்பட்டார் போலும் இவர் சேரர் மரபினர் என்பதைத் தெற்றத் தெளிய உணர்த்தச் சேரன் கணைக்கால் இரும்பொறை என்று அழைக்கப்பட்டனர். அரசர்கள் அமைதியாக வாழ இயலாது. அவர்கள் அடிக்கடி அமர் செய்ய நேரிடும். அந்த முறையில் சோழன் செங்கணானுக்கும் சேரன் கணைக்கால் இரும் பொறையாகிய இவருக்கும் போர் மூண்டது. போரும் மிக்க வீரத்துடன் நடந்தது. இப்போரின் சிறப்பினைப் பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் நூலால் நன்கு அறியலாம். போரின் முடிவு சோழன் செங்கணான் வெற்றி மாலை புனையவும், சேரன் கணைக்கால் இரும் பொறை பையுள்மாலை (துன்பமாலை) சூடவும் நேர்ந்ததே. கணைக்கால் இரும்பொறை சோழனால் பற்றப்பட்டுச் சிறை செய்யப்பட்டார். சேரர் சிறையில் இருந்தபோது, நீர் வேட்கை மிக்கமையின் சிறைக் கோட்டத்தினைக் காவல் புரியும் காவலரை நோக்கித் தமது வேட்கை தீர நீர் தருமாறு கேட்டனர். சிறைப்பட்டவர்கள் மன்னரேயானாலும், சிறைப்பட்டிருக்கும் காரணத்தால் சிறைக் காவலர் மன்னரது வேண்டுகோளை உடனே நிறைவேற்ருது அசட்டையாக இருந்து தாமதம் செய்து, பின்பு நீரைக் கொணர்ந்து நீட்டினர். அப்போதுதான் சேரமான் கணைக்கால் இரும் பொறைக்கு மானத்தின் மேன்மை கருத்தில் உதித்தது. இனி ஒருக் கணமும் உயிருடன் இருத்தல் கூடாது என்று முடிவு கட்டினர். தமது அரசர் மரபின் மேம்பாடும், தாம் உற்றுள்ள சிறுமையும் குறித்துப் பாடி விட்டு
இறக்கத் துணிந்தார். "அரசர் குடியில் பிறந்தவர் தாம் போர் முகத்தைப் பாராது இறக்க நேரின், வீர சுவர்க்கம் புகுதற்கு இயலாது என்ற காரணத்தால் இறந்தவர் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் போழ்ந்து, 'போரில் இறந்தவர் அடையும் கதியினை இவர் அடைக' எனக் கடவுளை வேண்டி அடக்கம் செய்வர். இம்மரபில் பிறந்தவர் குழவிப் பருவத்தில் இறந்தாலும், அல்லது முழு வடிவு உருத மனை போல் ஊன் வடிவுடன் பிறந்தாலும், அவ்வுடல்களை மேற்கூறியவாறு வாளால் வெட்டிய பின்பே அடக்கம் செய்வர். அத்தகைய வீரர் மரபினர் மன்னனானயான், சிறைக் காவலர் தம் இருப்புச் சங்கிலியால் பிணைத்து நாய்போல் இழுத்துச் சிறையில் அடைக்க இனியும் என் வயிற்றுத் தீத் தணிய நீரை உண்டு உயிர் வாழேன்' என்று பாடி உயிர் நீத்தார்.
இவரன்றே மானமுடைய மன்னர் ! அரசர்க்கு மானத்தின் மிக்க அறனும் இல்லை, பொருளும் இல்லை, இன்பமும் இல்லை என்பன வற்றை விளக்கியவீரர் அல்லவோ இவர் ? சிறைக் காவலர் இவரைச் சங்கிலி கொண்டு பிணித்துச் சிறைப்படுத்திய நிலையினை உவமையாய்க் கூறிய, "தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள்அல் கேளிர் " என்னும் அடியினைப் படிக்கும்போது அது நாம் இரக்கப் படத்தான் செய்கிறது.