கவிபாடிய காவலர்/பாலை பாடிய பெருங் கடுங்கோ
1. பாலை பாடிய பெருங் கடுங்கோ
பாலை பாடிய பெருங் கடுங்கோ என்னும் அரசர் ஒரு புலவரே. இவர் அரசர் என்பதற்கு அறிகுறியாக இவரது பெயரின் ஈற்றில் கோ என்னும் சொல் நின்று சிறப்பிப்பதே காரணமாகும். கோ என்னும் சொல் அரசர் என்னும் பொருளைத் தந்து நிற்கும். இம் மன்னர் சேரர் குடியினர் என்பதைச் சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்று குறிப்பிடப்படுவதினின்றும் உணரலாம். இவர் போரில் பகைவர் முன்னே கடுமையாக இருத்தல் பற்றிக் கடுங்கோ என்று அழைக்கப்பட்டனர் போலும்! அக்கடுமையும் சிறிதாக இராமல் பெரிதாகவே இருந்தது பற்றிப் பெருங் கடுங்கோ என்றே பேசப்பட்டார் என்றும் கருதலாம். "படுகளத்தில் ஒப்பாரி ஏது?" ஆனால், போர்க்களத்தில் பகைவர் முன்பு தான் இந்தக் கடுமை இருந்ததே அன்றி, இரவலர் முன்பு இந்தக் கடுமையினைக் காண முடியாது. ஏனெனில், இவரைப் பற்றிப் பேய் மகள் இள எயினி என்னும் புலவர் பெருமாட்டியார் பாடுகையில், மகளிர் சிற்றில் இழைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பதுமைகட்கு மலர்களைப் பறித்துத் தந்தவர் என்றும், தம்மைப்பாடிய பாடினுக்கு அணி கலம் ஈந்தவர் என்றும், பாணனுக்குப் பொன் தாமரையும் வெள்ளி நாரும் கொடுத்தவர் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆகவே, இவர் வீர நெஞ்சினர் ஆயினும், கூடவே ஈர நெஞ்சும் உடையவர். இத்தகைய வீரமன்னர் அரசப் பொறுப்பினை ஏற்று நடத்தியதோடு இன்றி, அவ்வப்போது அருங்கவிபாடி அகம் மகிழ்பவராகவும் காணப்பட்டார். அப்படிப் பாடும் பாவில் பாலை நிலத்தின் இயல்பினை நன்கு பாடிய காரணத்தால் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்று அடை மொழியும் பெற்ற புலவராயினர்.
இவர் பாடியுள்ளனவாகப் புறநானூற்றில் ஒன்றும், குறுந்தொகையில் பத்துச் செய்யுட்களும், நற்றிணையில் பத்துப் பாடல்களும், அகநானூற்றில் பதினென்றும், கலித்தொகையில் முப்பத்தைந்தும் ஆக அறுபத்தேழு செய்யுட்கள் காணப்படுகின்றன. இவ்வாறு பாடல்கள் பல பாடியுள்ள நிலையினைக் கருதும் போது, இவர் பெரும் புலவர் என்பதனைக். கூறவும் வேண்டுமா? வேண்டா அன்றே! புறநானூற்றில் இவர் வீரன் ஒருவனைப் பற்றிப் பாடி அவ்வீரனது மேம்பாட்டினைப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார். அவ்வீரன் பகைவர்கள் முன்பு எதிர்த்து நின்று, பகைவர் எய்யும் படைகளைத் தன் உடம்பு முழுதும் ஏற்றும் பின் வாங்காது போர் இட்டானம். அதனல் அவன் உடம்பு தோன்றப் பெருது படைக் கலங்களால் மறையுண்டு கிடந்ததாம். இங்ஙனம் போரிட்டு வீர சுவர்க்கம் புகுந்த காரணத்தால்தான் அவன் புலவர்களால் பாடும் புகழ் பெற்று விளங்கினான் என்பதை,
"சேண்விளங்கு நல்இசை நிறீஇ
என்று பாடி முடித்துள்ளார்.
குறுந்தொகையில் இவர் பாடியுள்ள பாடல்கருத்துக்கள் இனிமை தரவல்லனவாக உள்ளன. பெண்யானையின் பசியினைப் போக்க ஆண் யானை யா என்னும் மரத்தின் பட்டையினை உரித்து அதன் நீரைப் பருகச் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றோர் இடத்தில் ஆண் மக்களுக்குத் தொழில் புரிதல் உயிர் என்பதையும் பெண்டிர்க்குக் கணவன்மார் உயிர் என்பதையும்,
"வினையே ஆடவர்க்கு உயிரே ; வாள் நுதல்
என்ற அடிகளில் காட்டியுள்ளார். இவர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றால் இவர்க்குக் கொடையில் உள்ள மனப் பண்பு நன்கு தெரிகிறது. ஒரு தலைமகன் தலைமகளுக்குக் கூறும் வார்த்தையாகக் குறிப்பிடுகையில்,
என்று கூறுகிறார். இதனால், இவ்வாறான நாட்கள் வருதல் ஆகாது என்பது குறிப்பு.
முன்னோர் தேடிய செல்வத்தைப் பின்னோர் செலவழிப்பின் அவர்கள் செல்வர் ஆகார் என்றும், தாமாகச் சம்பாதித்த பொருளைக் கொண்டு வாழாதவர் இரந்துண்டு வாழ்வாரினும் இழிந்தவர் ஆவர் என்றும் தாம் கருதிய கருத்துக்களை,
"உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு"
என்ற அடிகளில் எத்துணை அழகுறக் கூறியுள்ளார் பாருங்கள் !
நற்றிணையில் இவர் கருத்தாக உள்ளனவற்றைக் காண்போமாக : ஒருவன் தன் மனத்துக்கு உகந்த மணாட்டியைப் பெற்றது தான் வழிபடும் தெய்வத்தைக் கண்ணெதிர் வரப்பெற்றது போலும் என்ற கருத்தினை,
"அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாங்கு"
என்னும் அடிகளில் கூறி நம்மைக் களிக்கச் செய்கின்றார் புலவர். அகநானூற்றில் காணப்படும் பாடல்களால் இப்புலவர் பெருமானின் அருங்கருத்துக்கள் பல புலனுகின்றன. செல்வத்தின் சிறப்பினைப் புலப்படுத்த வேண்டிப் "பாவத்தில் படாத வாழ்க்கையினைப் பெறுதற்கும், பிறர் வாயில்படி சென்று பிச்சை எடுத்து வாழாமல் வாழும் வாழ்க்கையினைப் பெறுதற்கும் செல்வமே காரணம்” என்பதை,
"அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும்"
என்னும் அடிகளில் கூறி விளக்கியுள்ளார்.
இப்பெரும் புலவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்பதற்கு மிக மிகப் பொருத்தமுடையவர் என்பது, இவரால் பாடப்பட்ட கலித்தொகைச் செய்யுட்களில் பாலை நிலத்தின் கொடுமையினைத் தெரிவித்திருப்பதிலிருந்து நன்கு உணரலாம். பாலையில் நீர் இன்றி மக்கள் துன்புற்றுக் கண்ணீர் சிந்தினர் என்றும், அங்ஙணம் சிந்திய கண்ணிரையே தம் நெஞ்சினை நனைத்துக்கொள்ள உண்ணீராகக் கொண்டனர் என்றும் தம்மகத்துக் கொண்ட கருத்தினை,
"உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குதி
தண்ணீர் பெருஅத் தடுமாற்று அருந்துயரம் கண்ணிர் நனைக்கும் கடுமைய காடு"
என்ற அடிகளில் அமைத்துப் பாலையின் கடுமையினைக் குறிப்பிடுவாராயின், இதனிணும் கடுமையாகப் பாலையின் கொடுமையினைக் கூற இயலுமோ ? சிந்தித்துப் பாருங்கள்.
இன்னோரன்ன கருத்துக்கள் பல இப்புலவர் வர்க்கில் நிறைந்திருப்பதல்லை, அவற்றை அவர் கவிகளில் கண்டு மேலும் இன்புறுவீர்களாக.