கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல்கள்
21 பாடல்கள்
பக்கம் 60 முதல் 63
குறிப்புரை - செங்கைப் பொதுவன்
இந்தப் புலவரைப் பேணிய வள்ளல் அபிராமன் (பாடல் 5)
அபிராமன் வாழ்ந்த ஊர் சீர்காழி (பாடல் 3)
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
1-5
தொகு- தேன்பொழிந்த வாயான் திருவேங்கடத் துடனே
- ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே – வான்சிறந்த
- சீதேவியாருடனே செய்ய திருப்பாற் கடலில்
- மூதேவியேன் பிறந்தாள் முன். (1)
- 'திருவேங்கடம்' தேன் போல் இனிமையாகப் பேசுபவன். அவனோடு பிறந்த அவனது அண்ணன் 'கண்ணுக்கினியான்'. (இவன் சிடுமூஞ்சசி) இனிய திருவேங்கடத்தானோடு எரிமூஞ்சி கண்ணுக்கினியான் ஏன் பிறந்தான்? பாற்கடலில் திருமகளுக்கு முன் மூதேவி பிறந்தாளே அப்படித்தான்.
- இம்பர் வானெல்லை யிராமனையே பாடி, என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி
- வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள், மாதங்க மென்றேன் யாம்வாழ்ந்தேம் என்றாள்
- பம்புசீர் வேழமென்றேன் றின்னு மென்றாள், பகடென்றே னுழுமென்றாள் பழனந்தன்னைக்
- கம்பமாமா வென்றே நற்களியா மென்றாள், கைம்மா வென்றேன் சும்மா கலங்கினாளே. (2)
- இராமன் என்பவன் மழை போலக் கொடை வழங்கும் வள்ளல். இந்தப் புலவர் பாணர் குடியில் பிறந்தவர். அவனைக் கண்டு பாடினார். அவன் புலவருக்கு யானை ஒன்றைப் பரிசாகத் தந்தான். புலவர் யானையுடன் வீடு திரும்பினார். அவரது மனைவி பாணி 'என்ன கொண்டுவந்தாய்' என வினவினாள். புலவர் யானையைக் குறிக்கும் சொற்களை ஒவ்வொன்றாகச் சொல்ல மனைவி அதனை வேறு வகையாகப் புரிந்துகொண்டு பேசுகிறாள். (இந்தப் பாடலில் யானையைக் குறிக்கும் சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன) புலவர் களபம் (யானை, சந்தனம்) என்றார். மனைவி பூசிக்கொள் என்றாள். புலவர் மாதங்கம் (யானை, மா தங்கம்) என்றார். மனைவி (இனி நமக்குக் குறைவு ஒன்றும் இல்லை) வாழ்ந்தேம் என்றாள். புலவர் வேழம் (யானை, கரும்பு) என்றார். மனைவி தின்னும் என்றாள். புலவர் பகடு (யானை, எருது) என்றார். மனைவி ஏரில் பூட்டி உழவு செய்க என்றாள். புலவர் கம்பமா (யானை, கம்பு மாவு) என்றார். மனைவி களி கிண்டி உண்ண உதவும் என்றாள். புலவர் கைம்மா (கையை உடைய விலங்கு) என்றார். மனைவி (நமக்கே உணவு இல்லாதபோது யானைக்கு உணவு வழங்குவது எப்படி என்று எண்ணிக்) கலங்கினாள்.
- இல்லெனுஞ் சொல்லறியாத சீகையில் வாழ், தன்னைப்போ யாழ்ப்பாணன் யான்
- பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும், பழந்தூசும் பாலியாமற்
- கொல்ல நினைந்தே தனது நால்வாயைப், பரிசென்று கொடுத்தான் பார்க்குள்
- தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு, மிரையெங்கே துரப்புவேனே. (3)
- இல்லை என்னும் சொல்லையே அறியாத வள்ளல் ஒருவன் (இராமன்) சீகை என்னும் சீர்காழியில் வாழ்ந்து வந்தான். பாணனாகிய இந்தப் புலவர் அவனிடம் சென்றார். 'யான் யாழ் மீட்டும் பாணன்' என்று சொல்லிப் பல்லைக் காட்டிக் கெஞ்சி இரந்தார். கொஞ்சம் சோறும் பழந்துணியும் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். அவனோ அவற்றைக் கொடுக்காமல் தொங்குகின்ற வாயை உடைய யானை ஒன்றைக் கொடுத்தான். எனது ஒருவாய்க்குச் சோறி இல்லாத நான் (நாலு வாய்க்கு - சிலேடைப் பொருள், நால் = தொங்கு வாய், யானை) நால்வாய்க்கு இரை தர என்ன செய்வேன். கொடை தந்து கொல்கிறான். - என்று பாடுகிறார் புலவர்.
- முன்னா ளிருவர்க்கும் யாக்கை யொன்றாக முயங்கினமால்
- பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் பேசலுறும்
- இந்நாட் கொழுநன் மனைவி யென்றாயின மின்னமுமோர்
- சின்னாளி லெப்படியோ வையநீயின்று செப்புகவே.(4)
- புலவர் தன் மனைவியோடு பேசுவதாக அமைந்துள்ள இந்தப் பாடல் நிலையில்லாத வாழ்க்கைப் பருவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. முன் நாளில் (களவு காலத்தில்) ஒருவருக்குள் ஒருவராக நம் உடம்பைப் புகுத்திக்கொண்டு ஓருடம்பாய்க் கிடந்தோம். பின்னர் நான் பிரியன் என்றும் நீ பிரியை என்றும் ஆனோம். இப்போது கணவன் மனைவி என்று வாழ்கிறோம். சில நாள்களுக்குப் பிறகு (ஒருவர் காலமானால்) நம் வாழ்வு என்ன ஆகுமோ?
- வாழுமிலங்கைக் கோமானில்லை மானில்லை
- ஏழுமரா மரமோ வீங்கில்லை- ஆழி
- அலையடைத்த செங்கை யபிராமா வின்று
- சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு. (5)
- வள்ளல் இராமனை இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டுப் பாடிய பாட்டு - நீ இலங்கைக் கோமான் இல்லை. நீ மானை அனுப்பி ஏமாற்றவில்லை. ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு மற்றொருவனைக் கொல்லவில்லை. உன் பெயர் அபிராமன். கடல் அலை பெருகி வந்தபோது தடுப்புச் சுவர் அமைத்துக் காப்புச் செய்தாய். அந்தக் கையில் சிலையை (= வில், கல், கற்சிலை, மலை) எடுக்கலாமா, சொல்.
6-10
தொகு- செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்
- பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே – விஞ்சு
- விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட
- பரதனையும் ராமனையும் பார்.. (6)
- அபிராமன் தன் தம்பிக்கு எதிராகப் போருக்கு எழுந்தபொது தடுத்து நிறுத்திய பாடல் - தம்பியருக்கு எதிராக வில் ஏந்திய கன்னன்(சூரியனின் மகன்), இராவணன், அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு வில்லைக் கையில் எடுக்காதே. பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும், இராமன் பாதுகையை அரியணை ஏற்றி வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனைய்ம் எண்ணிப்பார். (அண்ணன் தம்பியரிடையே போர் வேண்டாம்)
- வடவைக்கனலைப் பிழிந்துகொண்டு மற்றுமொரு கால்வடித் தெடுத்து, வாடைத்துருத்தி வைத்தூதி மறுக்காய்ச்சிக் குழம்புசெய்து
- புடவிக்கயவர் தமைப்பாடிப் பரிசுபெறாமற் றிரும்பிவரும், புலவர்மனம் போற்சுடு நெருப்பை புழுகென் றிறைத்தாற் பொறுப்பாளோ
- அடவிக்கதலிப் பசுங்குருத்தை நச்சுக்குழலென் றஞ்சியஞ்சி, அஞ்சொற்கிளிகள் பஞ்சரம்விட் டகலாநிற்கு மகளங்கா
- திடமுக்கட வாரணமுகைத்த தேவேதேவ சிங்கமே, திக்குவிசயஞ் செலுத்திவரு செங்கோனடாத்து மெங்கோனே.(7)
- மாதரணி மென்முலை தோய்மாரா சிதம்பரபூ
- மாதரணி ராசர்மகிழ் மாவசன- மாதர்
- மறுகிடத்தே யம்பொன் மடவார் பழிக்கநெஞ்ச
- மறுகிடத் தேங்குந்துரைப் பெண்வா.(8)
- சொல்லு மல்லும் பகலுஞ் சோருங் கிடைகிடக்குங்
- கல்லு முருகக் கனிந்தரற்றும் –புல்லியணை
- விண்கலக்குங் கீர்த்திவேள் சிதம்பரக்கு முணா
- பொன்கலக்கங் கொண்டுநின் றன்பேர். (9)
- வந்தனந்த மென்பூமணந் தோய்ந்து பாயப்பா
- வந்தனம் விம்மிச் சோர்ந்தாள் வாகோடி – வந்தனங்கல்
- அன்னமனங் கொள்ளாமலாள் சிதம்பரக்கு முணா
- அன்னமனங் கொண்டுயவே யாங்கு. (10)
11-15
தொகு- மாவாரிமுத்த வெண்பன் மாதுமயலைத் தணிசோ
- மாவாரிமுத் தனித்தவை போகா – மாவுச்
- சிதம்பர வையா நீதிக்குளுயர் பூமா
- சிதம்பர வையா நீதிக்கு. (11)
- பங்கஜ மேன்மேவிய சௌபாக்கிய சுபமானளித்த
- அங்கஜவேள் வெங்கணையா லாவிநொந்த- எங்களிட
- மாரஞ் சிதம்பர வுமாதினையாள் கோடிநமஸ்க்
- காரஞ் சிதம்பர யோகா. (12)
- இன்னங் கலைமகள் கைமீதிற் புத்தக மேந்தியந்தப்
- பொன்னம் பலந்தனிற் புக்கிருந்தா ளென்ன புண்ணியமோ
- கன்னன் களந்தைக் கவிவீர ராகவன் கச்சியிலே
- தன்னெஞ் சமேடெனக் கற்றானொரு முத்தமிழையுமே. (13)
- முன்னாட்டுத் தவமுனியுஞ் சேடனும் வான்மீகனுமுன் முன்னில்லாமற்
- தென்னாட்டு மலையிடத்தும் பாரிடத்தும் புற்றிடத்துஞ் சென்றுசேர்ந்தார்
- இந்நாட்டுப் புலவருனக் கெதிரிலையே கவிவீர ராகவாநீ
- பொன்னாட்டுப் புலவருடன் வாதுசெய்யப் போயினையோ புகலுவாயே. (14)
- கோளரவேந் துலகிலிந்தப் புதுமையுண்டோ வெனமொழிந்த குமுணாகேளாய்
- ஆளரைவர் தமைத்தோய்ந்த கற்புடைய பாஞ்சாலி யணைந்தவீமன்
- வாளரிபோ லருகிருக்க மலையவெற்பி லிருந்துவந்த மாமனாரைச்
- சாளரவா சலைத்திறந்து வரவழைத்து முலையாரத் தழுவினாளே. (15)
16—21
தொகு- பணியாரந் தோசையிலக் கொங்கை தோய்ந்திடப் பார்ப்பர்பல்லி
- பணியாரந் தோசையிலாச் செந்துவாய்ப் பிறப்பார்க ளென்னோ
- பணியாரந் முன்னோனுக் கிட்டேத்திப் பழனிச் செவ்வேள்
- பணியாரந் தோசைவராகா ரன்னோர்க் கென்ன பாவமிதே. (16)
- வீரஞ்சொரி கின்றபிள்ளா யுனக்குப் பெண்வேண்டு மென்றால்
- ஆருங்கொடா ருங்களப்பன் கபாலி யம்மான் திருடன்
- ஊருஞ்செங் காடுநின்றன் முகம்யானை யுனக்கிளையோன்
- பேருங்கடம்ப நின்றாய்நீலி நிற்கும் பெருவயிறே. (17)
கட்டுச்சோற்றைப் பறிகொடுத்தபோது பாடியது
- சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
- பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
- நாராயண னுயிர்வாகன மாயிற்று நம்மைமுகம்
- பாரான் மைவாகனன் வந்தே வயிற்றினிற் பற்றின்னே. (18)
- பாண்டியன் மாலைகண்டாய் மகளேநினைப் பார்த்தவர்க்கு
- வேண்டிய வின்பமிக வருமோ வெண்ணையே திருடித்
- தாண்டிக் குதித்தநற் கோதண்டராமன் றடவரைமேல்
- ஆண்டி யருப்பிடந் தாந்தனி ருப்பிடமான பின்னே. (19)
- சோனையுங் காத்து நல்லாளையுங் காத்துத் துரோபதைதன்
- தானையுங்காத் தடைந்தானையுங் காத்துத் தடத்தகலி
- மானையுங்காத் தனுமானையுங் காத்து மடுவில்விழும்
- ஆனையுங்காத் தவனேயெனைக் காப்பதரி தல்லவே. (20)
- பொய்யருக்குப் பொய்யுரைத்தால் வெற்றியா மவருக்குப் பொய்யாகாத
- மெய்யருக்குப் பொய்யுரைத்தாற் றேய்பிறைபோற் றவங்குறையு மிடியுண்டாகும்
- தய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால் வறுமைபிணி தொலையாவென்றும்
- உய்யவரு டேசிகற்குப் பொய்யுரைத்தா னரகமது வுண்மை தானே. (21)