காக்கை விடு தூது/ஆட்சியாளர்க்கு ஒரு வேண்டுகோள்



ஆட்சியாளர்க்கு ஒரு வேண்டுகோள்

பதினான்கு மொழிகளைத் தேசிய மொழிகளாக் கொண்ட நம் பாரத நாட்டில் சில மாநிலத்தவர்கட்கு மட்டும் தாய் மொழியாகிய இந்திமொழி ஆட்சிமொழியாகப் பாராளுமன்றத்திற் சட்டமாக்கப் பெற்றுவிட்டது. தமிழ் மாநிலத்தார் முதலியோர் அதனை வன்மையாக எதிர்த்தனர். இந்திய நாட்டின் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தி மொழியுடன் ஆங்கிலமும் மக்கள்விரும்பும் வரை ஆட்சிமொழியாகத் தொடர்ந்திருக்கும் என உறுதி மொழியளித்தார்கள். ஆயினும் அவ்வுறுதிமொழிக்கு மாறாக இந்திமொழியைப் பிறமாநிலங்களில் வலிதிற்புகுத்தும் சூழ்ச்சி செயற்பட்டு வருகின்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மாநில மொழிகளைக் கீழ்ப்படுத்தி இந்திமொழியே மீதுர்ந்துவருகின்றது. நடுவண் அரசிலிருந்து அவ்வப்பொழுது இந்திமொழியின் கட்டாயம் குறித்து வெளியிடப்படும் அறிக்கைகள் தமிழக மாணவர்களின் கல்விப் பயிற்சியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதனால் ஆண்டுதோறும் தமிழகத்திலே இந்தி யெதிர்ப்புக்கிளர்ச்சி தோன்றிக் கல்விநிலையங்கள் பல நாட்கள் மூடப்பட வேண்டிய தொல்லை நேர்கின்றது.

மக்களாற்பேசப்படும் தாய்மொழி அவர்கட்கு விழியெனத் தகும் சிறப்புடையதாகும். மொழிவழியாக அமைந்த மாநிலங்களில் தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி முடியத் தாய்மொழியே பயிற்று மொழியாதல் வேண்டும் என்பது இயல் பான நியதியாகும். மக்களுக்கு இன்றியமையாத மொழியுரிமை யின்றி நாட்டுரிமை பெற்றோம் என எண்ணுதல் ஆடை யின்றி அணிகலன்களையணிவோர் செயல் போன்று வெறுக்கத் தக்கதாகும். எனவே இந்திய நாட்டின் தேசிய மொழிகளாகிய எல்லாமொழிகளும் அவ்வம்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மாநிலங்களைப் பொறுத்தவரையில் அரசியல் ஆட்சிமொழிகளாகவும் கல்வி பயிற்று மொழிகளாகவும் அமைதல்வேண்டும் என்பதிற் சிறிதும் ஐயுறவுக்கு இடனில்லாதவாறு விழிப்பாக இருத்தல் மாநில அரசின் கடமையாகும்.

தேசிய மொழிகளாகிய மாநில மொழிகள் யாவும் இந்திய நாட்டின் மொழிகளாகக் கொள்ளத்தக்கனவே. இந்திய மொழிகளுள் ஒன்றாகிய இந்திக்குமட்டும் முதலிடம் தந்து ஏனைய மொழிகளை இரண்டாந்தர மொழிகளாகக் கீழ்ப்படுத்தாமல் இந்திமொழியின் வளர்ச்சிக்கு உதவிவருவது போன்று ஏனைய மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் வாய்ப்பினையமைத்தல் நடுவணரசின் கடமையாகும். இந்தியநாட்டின் தேசியமொழிகளில் ஒன்றாகிய இந்திமொழியின் வளர்ச்சி பிற மாநில மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாயிராதவாறு இந்திய நாட்டின் அரசியல் ஆட்சி மொழிபற்றிய சட்டத்தினை ஐயுறவுக்கு இடந்தராதபடி திருத்தியமைத்தல் இந்தியநாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆக்கந்தரும் நற்பணியாகும்.

இந்தியநாடு உரிமைபெறவுழைத்த பெருந்தகையும் நாடு விடுதலைபெறும் நிலையில் இந்திய அரசின் தலைமை ஆளுநராகத் திகழ்ந்தவரும் ஆகிய மூதறிஞர் இராசாசியவர்கள் இந்திமொழியாளரது ஆதிக்கவெறியினைக் கண்டு அஞ்சி இந்திமொழியொன்றே இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்குமானால் இந்தியநாடு பலகண்டங்களாகச் சிதைவுறும் என்பதனையுணர்ந்து இந்திமொழியாதிக்கத்தைத் தமது வாழ்நாளின் இறுதிவரை விடாது கண்டித்துவந்தார். இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பொதுவாகப் பயிலும் பயிற்சி வாய்ந்ததும் இந்நாளில் வளர்ந்துவரும் அறிவியற் கலை நூல்கள் பலவற்றுக்கும் நிலைக்களமாகத் திகழ்வதும் ஆகிய ஆங்கில மொழியினையும் நடுவண் அரசின் ஆட்சிமொழியாக்குதல் தேசிய ஒருமைப்பாட்டுக்குத் துணை புரிவதாகும் என்பது மூதறிஞர் இராசாசி அவர்களின் தெளிவான நம்பிக்கையாகும்.


இந்தியநாடு விடுதலைபெறாதநாளில் சென்னைமாகாண முதலமைச்சராயிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி அவர்களைக்குறித்துப் பாடப்பெற்றதே காக்கைவிடு தூது என்னும் இப்பனுவலாகும். இந்திமொழியைக் கட்டாயமாகப் பிறமாநிலங்களில் திணித்தல் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைப்பதாகும் என்பதனையே இந்திய நாடு விடுதலை பெற்றபின் மூதறிஞர் இராசாசி அவர்கள் உணர்ந்து வெளியிட்டமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

ஆட்சி மொழி இந்தியொன்றே யாயின்இந் நாட்டொருமை
வீழ்ச்சியுறும், ஆங்கிலமும் வேண்டுமென-மாட்சியுறும்
மூதறிஞர் ராசாசி முன்மொழிந்தார் அம்மு றையே
ஏதமிலாச் சட்டமியற் றீர்.

என இந்திய அரசினை வேண்டி நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் மாநிலமொழிகளின் பாதுகாப்புக்கும் அவற்றின் கலை வளர்ச்சிக்கும் அரண்செய்யும் முறையில் தமிழக அரசும் நடுவண் அரசினை அணுகி ஆவன செய்தல் வேண்டும் எனத்தூண்டும் நோக்குடன் காக்கைவிடுதூது என்னும் இச் சிறுநூல் இரண்டாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது.