காக்கை விடு தூது/காக்கை விடு தூது

தமிழ்த் தாய் வாழ்க

சென்னை மாநில முதலமைச்சர்

ச. இராச கோபாலாச் சாரியாரவர்களிடத்து

வெண்கோழி யுய்த்த

காக்கை விடு தூது


[இத்தூது புறப்பொருள் பற்றிய தூதாகும். அண்டங்காக்கையென்பது காக்கையையன்றி இரட்டுறமொழிதலால் அரசனையுங் குறித்தபெயராகக் கருதப்படுதலால் அப்பெயருடைமை பற்றி இவண் தூது சென்றார் பறவையரசராய காக்கையார் எனக்கொள்க. அரசரிடத்துப் பார்ப்பார் தூது சேறல் பழைய வழக்காகவும் அதற்குமாறாக இற்றைஞான்று பார்ப்பாரிடத்து அரசர் தூதுசெல்லும் இன்றியமையாமை நேர்ந்ததென்பதனை இத்தூது கொண்டு தெளிக.]

வானுயரும் புள்ளாகி மாநிலத்தோர் அன்பு செயத்
தானமரும் நல்ல தனுப்படைத்து — மேன்மையாற்
பெற்றகரு மேனிகொடு பேருலகம் எங்கணும்
உற்றுயிர்கா வென்ற வுரையளித்து — வெற்றிகொண்
டெல்லார்க்குங் கோவாய் இருந்தமிழே பேசியுல
கெல்லாங் தமிழ்கூறும் ஏற்றத்தாற் — பல்லோருந்
தாமுண்ணு முன்னர்த் தனைநினைந்தவ் வின்னடிசில்
ஏம முடனேற்க என்றுரைக்கும் — சேமமுற்றுத்
தாமரையான் மாயன் தலைவரிவர் போற்றவுடன்

வாம மயில்வைத்த வள்ளலுமொத் - தேமமாய்த்
தன்னினத்தை யெல்லாமூண் தானுண்ணும் வேளையில்
இன்னுரையா லேயழைத் தின்பூட்டித் - தன்னுடனே
ஒக்கவழைத் துத்தமிழர் ஒப்புர வீதென்னத்
தக்க செயலாற் றலைநின்று - மிக்கவைசெய்
தெந்நாட்டினுக்கும் இயற்கையின் முற்றோன்றும்
முன்னாடு தென்னாடாம் உண்மையும் - அந்நாடொட்
டிந்நாட்டா ரென்றும் இயம்பும் மொழிதமிழென்
றிந்நா நிலத்தோர் இசையவே - எந்நாளும்
அம்மா வெனவழைக்கும் ஆன்கன்றும் மற்றதனைத்
தம்மாசை ஊற்றொடரும் தாயும்பார்த் - தெம்மவர்கள்
ஆவி யுருகா ரணுவளவு மென்றவரை
மேவி வெகுளியான் மெய்கருவிப் - பாவியீர்
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் - ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே - மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் - ஆர்த்த
கடலுண் குறுமுனிவன் கையகத்துக் கொண்ட
குடநீர் தனைக்கவிழ்த்துக் கொட்டித் - தடமண்டு
காவிரியா றாக்கிக் கருணையாற் செந்தமிழர்
ஆவியளிக்கும் அருமருந்தே - தேவர்கோன்
வானுலகத் தன்னை வளர்த்திடுவா னாயினும் நீ
தானருள்நீ ராலே நகைபெற்றான் - தேன்போன்ற
வண்டமிழைக் காக்கும் மரபானும் மாநிலத்தோர்
அண்டங்காக் கையென்ன ஆயினாய் - மண்டு
நிறத்தைக் கருதாது நின்பெருமை நின்னை
யுறவே கருங்காக்கை யென்பர் - திறல்சேர்
கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே - உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் - தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி



அரிதின் உலகம் அளிக்கும் - இருகண்கள்
உற்ற வுனக்கொருக னேயென் றுலகத்திற்
குற்ற முடையார் குறிப்பரால் - மற்றதுவும்
ஒப்பற்ற கண்ணுடையா ரென்றிடுமிவ் வுண்மையைச்
செப்பிடுவ தென்றறிஞர் செப்புவரால் - இப்புவியில்
மக்கள் தமைவருத்த வன்சனியோ டுற்றுறையும்
ஒக்க லெனவே யுனைப்பழிப்பர் - மிக்கவன்றான்
மாந்தர் தமைவருத்த வல்விரைந்து செல்லாமுன்
எந்தவன்றன் ஊர்தியாய் எய்தியே - தேர்ந்துனது
தந்திரத்தி னாலவனைத் தாறுமா றாயிழுக்கும்
இந்த விரகறிவார் யாவரோ - விந்தையுறக்
காலை யெழுந்து கரைந்து துயிலுமுயிர்
மாலை யகற்ற வருமணியே - சீலத்தால்
விந்த வுடலை விரும்பும் விரதியுயிர்
சார்ந்த வுடலூண் தவிர்தல்போல் - சேர்ந்தவுயிர்
மாண்ட வுடலை பயின்று வளர்ந்துலகில்
வேண்டு முயிரளிக்கும் மேதகையாய் - ஈண்டுன்
பெருமையெலாம் சாற்றப் பிறங்குயிரா லாமோ
உரிய துனக்கொன் றுரைப்பன் - இருநிலத்துக்
'கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே யெவ்வுயிர்க்கும்
முற்றோன்றி மூத்த குடி' நிலைத்துப் - பிற்றோன்றும்
பேரறிவுக் கெல்லாம் பிறப்பிடமாய் முன்னரே
சாரும் பெரிய தகவுடைத்தாய்ப் - பாரின்கண்
மக்களெலாந் தோற்றி மறைகுமரி கண்டந்தன்
தெற்கண் அமைந்த சிறப்பினைப்பெற் - றொற்கா
வடவெல்லை வேங்கடமா மன்னிய கீழெல்லை
தொடுகடலாத் தொன்றுமுதிர் பெளவம் - அடலரணாம்
மேலெல்லை யாக விரிந்தொளிருந் தென்னாட்டில்
சால்புங் குனனுந் தகப்பெற்ற - மேன்மக்கள்
இன்னுசெய் யாமை இயல்வ பரிந்தளித்தே
ஒன்னாரை யும்போற்றும் ஒட்பம்பெற் - றிந்நிலத்தில்
ஆதரவற் றிங்கண் அடையுமவர் தங்களைக்
காதலாற் போற்றுங் கருத்தினால் - ஓதுலகில்
எவ்வூரும் எம்மூரே யாவரும் எம்மவரே

செவ்விதிற் றெய்வமும் ஒன்றேகாண் — அவ்வப்
'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யானென்னும் — மெய்யுரையைப்
பொன்னேபோற் போற்றவுடன் புத்துணர்வைத் தந்தொளிரும்
தன்னே ரிலாத் தமிழே தம்முயிரா — மன்னிய
வாழ்வி னுயர்வெல்லாம் வண்டமிழாற் றம்மிடம்
சூழ வருவ தெனச்சூழ்ந்தே — ஆழ்கடலிற்
போந்த பெருநாட்டைப் பொருட்படுத்தா திந்நிலத்திற்
றீந்தமிழே தத்தஞ் செவிமாந்தப் — போந்திருந்து
மூவேந்தர் போற்றவுயர் முச்சங்கப் பாலூட்டித்
தேவ ஏறியாத் திறமளித்து — மேவரும்
தாயெனவே போற்றுந் தனித்தமிழை முன்னாளிற்
றூய்மைபெறா ஆரியர்தாம் துன்னியே — வாயினால்
‘ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டிருந்தும் — சீரிய
நக்கீரர் தாமிலரால் நாமெதையுஞ் செய்வோமென்
றொக்க வுரைத்துரங்கொண் டாரியத்தின் — மிக்க
சிதைவுமொழி யாம்அம்பைச் சிந்தித் தமிழிற்
புதையம்பிற் புண்படுத்தி னார்கள் — அதுநிற்க
செந்தமிழ்சேர் சேலத் தினையடுத்த வூரின்கண்
முந்தையங் கார்தம் முதன்மரபில் — வந்தே
இராசகோ பால னெனும்பெயர்பெற் றியாரும்
பரவுமோர் ஆச்சாரியார்தாம் — இரவும்
பகலும் உழைத்தே படித்தாங் கிலத்தில்
தகவார் வழக்கறிஞ ராகி — மிகவும்
உலகமதில் இந்தியநா டிவ்வெள் ளையரால்
பலவும் இடுக்கட் படுமோர் — நிலையுணர்ந்தே
நெஞ்சமுளைந் தந்நிலைமை நீக்க நினைந்துளத்தே
அஞ்சாமை பூண்டோர் அறிவுரையை — எஞ்சாமல்
இந்தியருக் கெல்லாம் எடுத்துரைத்து வெள்ளையர்கள்
வந்த வழிபோம் வகையதுவே — சிந்திக்குந்
தன்னாட்சி மன்றத்தார் தம்முடனே கூடியதால்
தென்னாட்டுக் காந்தியெனச் செப்பப்பெற் — றிந்நாட்டில்
சாதி யுரங்கொள் தனிக்குடியில் தான்பிறந்தும்

ஓது புகழ்பெற் றொளிரவே — வேத
நெறிகடந்து, தான்பெற்ற நேரிழையைக் காந்தி
பெறுமகனார்க் கீந்து பிறங்கி — அறுதொழிலை
அறவே மறந்துபோந் தாங்கிலர்கள் தம்மை
இறையி லொழிப்பதற் கேற்ற — முறையுன்னிச்
சட்டங் கடக்கத் தமிழர்களைத் தூண்டியே
கட்டப் படுத்துங் கடுஞ்சிறையில் — விட்டுடனாய்த்
தானுஞ் சிறைபுகுந்து தம்மவரைக் காத்தளிக்கும்
மேன்மைக் குணமே மிகப்படைத்திங் — கானாத
வெள்ளையர்கள் தம்மை விரட்டி யடிப்பதுடன்
எள்ளி யவரீந்த இழிவரசைக் — கொள்ளத்
தாகத வகையாம் தகர்த்தெறிந்து மற்றோர்
புகாத வழியாற் புரக்க — மகாத்துமா
காந்தியெமை ஏவினார் காங்கிரசார் யாமென்னச்
சூழ்ந்த வுரைகள் பலசொல்லி — மாந்தர்களை
மஞ்சளெனும் பேரால் மயக்குறுதீப் பெட்டியினில்
வஞ்சனையால் வாக்களிக்க வைத்ததனால் — விஞ்சியே
தந்திரத்தி னாலே தமிழர்களை ஏய்க்க முதல்
மந்திரியாய்ச் சென்னைமா காணத்தே — வந்தமர்ந்து
சக்ரவர்த்தி யென்று தனையுலகோர் கூறுதலால்
தக்க அரசாய்த் தனைநினைந்து — மிக்க
உழைப்பும் உரனும் உடையதமிழ் மக்கள்
தழைக்க வமருமிடத்தே — பிழைப்பினால்
எல்லைகடத் தப்பெற்ற ராசனெனுந் தம்மவரைக்
கொல்லைப் புறவழியே கொண்டுவந்தார் — வல்லவெழிற்
சீருஞ் சிறப்புமுடைச் செந்தமிழை இந்நாட்டோர்
ஆர்வ முறப்பயிலா தாங்கிலமாம் — பேர்சொல்
பிறர் மொழியைத் தத்தம் பிழைப்புள்ளிக் கற்றே
அறவே தமிழறியாராகி — உறுதமிழிற்
கட்டாய மின்மையாற் கண்ணூற்றுவர்களுள்
எட்டுப்பேர் கூட எழுத்தறிய மட்டிகளாய்த்
தங்க ளுணர்வின்றித் தமிழர் நிலைகுன்றி
எங்கும் அடிமைகளாய் வாழ்நாளில் — இங்குத்
தமிழெனவொன் றில்லையேல் தம்மடியின் கீழே

தமிழரெலாஞ் சார்வரென் றுன்னி — இமிழ்திரைநீர்
சூழ்ந்த வுலகின்கண் தூய்மையிலாச் சொற்களைப்பெற்
றேய்ந்தா ரியத்தின் இழிசொல்லாய் — வாய்ந்த
உருதுமுதற் பன்மொழியி லுற்றிடுசொற் பெற்றுக்
கருதும் இலக்கியக் கண்ணற் — றொருபொழுதும்
இந்நாட்டாா்க் கேலா திழிவுதரும் இந்தியைத்
தென்னாட் டவர்தம் சிறுமகார் — முன்னான
அங்கிலத்தி னோடே யவசியமாய்க் கற்றற்குத்
தங்கியதோர் திட்டந் தனைவிதித்தார் — இங்குற்
றருந்தமிழ ரெல்லாரும் அஞ்சியொன்று கூடிப்
பொருந்து பல்கிளர்ச்சி செய்தே — வருந்துமிந்தி
எம்மைந்தர்க் கென்றும் இளவயதி லேறாதால்
அம்மைத் தமிழும் அழியுமால் — செம்மையிலா
இத்திட்டஞ் செந்தமிழா்க் கேற்புடைத்தன் றென்றரற்ற
அத்தகையோர் தம்மை அறிவிலியென் — றெத்திறத்தும்
தன்னேரிலாப் பெரியோர் தம்மை யிழித்துரைத்தே
எந்நாளும் மாறா வசையுரைத்தும் — உன்னாது
தான்கொணர்ந்த கட்டாய இந்தி தனையெதிர்க்கும்
மேன்மைத் தமிழர்களை வெஞ்சிறையிற் — றான்வைத்தார்
சாதிப் பிரிவைத் தகர்த்தும் எனவுரைத்தோர்
மேதினியில் அப்பிரிவை மேலாக்க — மேதக்க
தச்சரெலாம் ஆச்சாரி சார்விசுவ பார்ப்பனரென்
றுச்ச நிலைப்பெயரை ஓதாமல் — நிச்சலும்
ஆசாரி கர்மாவென் றாரு முரைக்கவே
பேசப் படுவதுவே பெற்றியெனக்[1] — கூசாது
திட்டப் படுத்திஅவர் சீற்றங் கொளஅஞ்சிக்
கட்ட மடைந்ததனைக் கைவிட்டும் — ஒட்டாத்
தமிழ வழக்கறிஞர் தம்மவரோ டொத்து
மகிழு முயர்நிலையின் மன்னா — தமிழவே

தேர்வுநிலை மாற்றிச் சீறி யவர்வரவே
ஆர்வங் குறைந்தே அடங்கியும் — பார்மேல்
மதிப்பிழந்த விந்தமுதன் மந்திரியார் நெஞ்சங்
கொதிக்கும் வகைகொடுமை செய்ய — விதிர்ப்புற்றுக்
கண்ட துறவியருங் கன்றி மிளகியுளம்
விண்டு கடுஞ்சிறையில் மேவினார் — தொண்டர்கள்
பன்னூற் றுவரும் பகர்புலவ ருஞ்சிறையிற்
றுன்னி யழிந்து துளங்குகின்றார் — இந்நிலையில்
தாய்மார்க ளெல்லோரும் தத்தம் உளம்பொறார்
சேயோ டடைந்து சிறைபுக்கார் — தாய்மொழியிற்
காதல்மிகப் பெற்றதனாற் கன்னி யிளந்தமிழ்நன்
மாதர் மழலைக் குழவிகளோ — டோதுலகிற்
சிறைபெற்ற இந்நிலமை செந்தமிழர் என்போர்
அறியப் பெறார்இன் றறிந்தார் — மறைகற்றுப்
பஞ்சாங்கஞ் சொல்லிப் பொருள்பறிக்கும் பார்ப்பார்தம்
நெஞ்சங் கருங்கல்லோ நீள்மரமோ — வஞ்சகத்தில்
ஆக்கி யுருக்கும் அரமோ அருளதனைத்
தாக்குங் கொடிய தனிவாளோ — யார்க்கும்
உரைசெய்ய வொண்ணாதென் றொண்டமிழ ருள்ளங்
கருகி முனிந்து கனல்வர் — மருவியநற்
காக்கைப்பிள் ளாய்யாம் காயமுதன் மந்திரியைப்
பார்க்கப் பலரை அனுப்பினோம் — போக்குமவர்
தம்முரைகொள் ளாது தருக்கினிவர்ந் திட்டதனால்
செம்மைத் தமிழர் சிராப்பள்ளி — வெம்மைப்
படைகள் திரட்டிவந்து பைந்தமிழர் நற்போர்க்
கொடிக ளுயர்த்திக் குழாமாய் — நொடியதனில்
வாகை கொளவே வழிக்கொண்டார் ஆயினும்
ஓகை யுறவேதம் ஒன்னார்பாங் — கேக
விடுதூதொன் றேவி வினையியற்ற நின்றார்
ஒடியா வுளத்தின் குறுநீ — நெடிதுநினைந்
தெண்டிசைதேர்ந் தந்த இராசகோ பாலரை
அண்டி அவரை யணுகியே — “தொண்டீர்
பிறரடிமை போக்கப் பிறந்துழைத்தேன்" என்னுந்
திறல்பெற்ற தந்திரியே தேர்ந்த — மறையவரே



யானும் ஒருதமிழன் என்றுரைத் தெங்கட்டுத்
தேனேய் மொழிபகர்ந்து தித்திக்கத்-தான்வந்து
பேசு பெரியீர் பெரும்பதவி பெற்றதனால்
ஆசை மறைக்க அறிவழிந்தீர்-நாசமுறு
சாதி யுரங்கொள் தகையுடையீர் இந்நான்கும்
பேதம் அறியாத் தமிழன்பை-ஓதுலகில்
குட்டிக் கதையாய்க் குறைத்துப் பழந்தமிழைக்
குட்டிச் சுவராக்கிக் கூறிட்டு-வெட்ட
வெளியாய் விளக்கிடுநல் வீரரே நுந்தம்
ஒளியா வுளத்தை யுணர்ந்தோம் - தெளிவிலீர்
உம்மவர்கள் வாழவுளத் துன்னினீ ராயினுடன்
எம்மவர்கள் வாழ இடமுரைமின்-உம்மையே
நூலால் உலகம் நொடியில் அழியுமென
மேலோர் உரைத்த விதியறிவோம்-மால்கொண்டே
இந்தியெனுந் தீயாள் இன்பத் தினைவிழைந்து
செந்தமிழ்த் தாயின் திருவுடற்குத்-தந்திரத்தால்,
தீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது
தேங்கா தவரைச் சிறையகற்றி-ஓங்குபெரும்
அச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே
மெச்சு மவர்முன் விரைந்தடைந்து-கைச்ச
மொழி யுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி
அழியா வுளத்தன்பு பெற்றுப்-பழிபோக்கி
உங்குலத்தார்ப் போற்றி ஒளிர்சென்னை மாநகரில்
தங்கு முதலமைச்ச ராயமர்ந்-தெங்கும்
வசைநீங்கி யாரும் வழுத்து மரபால்
இசைபரப்பி வாழுமின் இன்றேல்-நசையினால்
உள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற
ஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச்-செல்லவே
வெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து
வண்போர்க்குக் கைவழங்கி வா.

(க.வெ)

இந்திமொழியின் கட்டாயம் ஒழிக.


  1. "பேசப்படல் வேண்டுமென்றதனை" என முன்னர் அச்சிடப்பட்ட தொடர், என் ஆசிரியப்பெருந்தகை நாவலர் ச.சோ.பாரதியாரவர்கள் பணித்தவண்ணம் மேற்கண்டவாறு திருத்தப் பெற்றது.