காட்டு வழிதனிலே/மெளனப் பெரும் பேச்சு
மௌனப் பெரும் பேச்சு
ஆழ்ந்த உணர்ச்சி ஒன்று உள்ளத்திலே பொங்கி எழுகின்றது. அழகையெல்லாம் வடித்தெடுத்து உருவாக்கியது போன்ற அழகு ஒன்று கண் முன்பு தோன்றுவது அதற்குக் காரணமாக இருக்கலாம். எல்லையற்ற இன்பமோ அல்லது துன்பமோ அதை விளைவித்திருக்கலாம். காதலென்னும் தேன்நெருப்பு அந்த உணர்ச்சியின் அடிப்படையாக நிற்கலாம். காண்டற்கரிய இறைவனுடைய தோற்றங் கண்டு பெற்ற பரவச நிலையிலே அது கிளர்ந்தெழலாம். இவ்வாறு பலவேறு நிலைகளில் தோன்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளை ஒருவன் தன் உள்ளத்தில் உணருவது. போன்றே பிறரும் முழுமையாக உணருமாறு செய்ய முடியுமா? எவ்வகையிலாவது பிறருக்கு எடுத்துக் காட்ட இயலுமா? ஓரளவிற்கு இது சாத்தியமாகலாம். ஆனால், அந்த அளவிற்கு ஓர் எல்லையுண்டு. அதற்கு மேலே ஆழ்ந்த உணர்ச்சிகளை உள்ளத்தால் உணரலாமே யன்றி முற்றிலும் எடுத்துரைப்புதென்பது இயலாத செயல். அணி அணியாக ஆயிரம் ஆயிரம் அலைகள் எழுந்து சுருண்டு முல்லை மலர் நிகர்க்கும் வெண்ணுரை மகுடம் தாங்கிக் கரையில் மோதும் நீலக்கடலின் காம்பீரியத்தையும், விண்ணில் முட்டி வெள்ளிப் பனிமுடி சூடி அசைவில்லாத மோனத் தவத்திருக்கும் இமயப் பெருமலையின் சாந்தியையும், கோடி கோடிப் பொற்கிரணக் கைகளை நீட்டி உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தழுவிப் புத்துயிர் கொடுத்துத் தகதக வென்று மேலே கிளம்பும் இளங் கதிரவனையும், வெண்மதுக் கதிர்களால் நிவவுலகைச் சொக்கி மயக்கிப் புன்னகை பூத்துத் தழைக்கும் தண்ணிலவையும், குழந்தைச் சிரிப்பினில் குழையும் இனிப்பையும், மாறாக் காதல் வெற்றியெய்துங் காலத்தில் பிறக்கும் களிப்பையும் துய்ப்பதுபோலப் பிறருக்குக் கூற முடியுமா? அடைய முடியாததை அடைந்த இன்பம்-பிரியமுடியாதவர்களைப் பிரிந்த துன்பம்- இவற்றைப் பேச முடியுமா? இன்ப வாரிதியாகிய இறைவனைக் கலந்த நிலையில் உதிக்கும் உயரின் பத்தைச் சொல்லில் சிறைப்படுத்தலாகுமா?
இவற்றையெல்லாம் கலைஞன் மற்றவர்களைவிட நுட்பமாக உணர்வதோடு தன் அற்புத வல்லமையினால் பிறருக்கும் தோன்றும்படி செய்ய முயல்கின்றான். அவனுடைய முயற்சிக்கு ஓய்வே இல்லை. ஆதிமனிதன் தன் உணர்ச்சிகளைப் பலவகையான ஒலிகளால் வெளிப்படுத்த முயன்றான்; குகைகளில் படம் வரைந்து காண்பிக்க விரும்பினான். அன்று முதல் இந்த முயற்சி நடந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு பெருங்கலைஞனும் ஒவ்வொரு துறையில் - அவ்வுணர்ச்சிகளை எடுத்துக்காட்ட ஆர்வங்கொள்ளுகிறான். சிற்பி கல்லிலே வடிக்கப்பாடுபடுகிறான். ஓவியன் வண்ணங்களிலே கட்டிப் பிடிக்க முயல்கிறான். இசை வாணன் நாதத்திலே எட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். கூத்தன் அவிநயத்திலே மின்னும்படி செய்ய முயல்கிறான். கவிஞன் சொல்லிலும் அரவவனப்பிலும் தவழுமாறு திறமை காட்டுகிறான். இப்பெரு முயற்சியிலே கலைஞன் தன் ஆற்றலுக்கேற்றவாறு சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, வெற்றி பெறுகிறான். ஆனால், உள்ளத்தில் உணர்வதைப்போன்று எடுத்துக் காண்பிப்பது யாருக்கும் முழுமையாகக் கைகூடுவதில்லை. தலைசிறந்த கலைஞர்களின் கலை மந்திரக்கோலுக்குப் பிறருள்ளத்தில் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் வல்லமை உண்டெனினும், அது கலைஞனின் சொந்த உணர்ச்சி எல்லையை அணுகும் திறனுடையதல்ல.
உணர்த்த முடியாத உணர்ச்சிகளே மற்றவர்களுக்கு உணர்த்துவதில் கலைகளெல்லாவற்றிலும் நாட்டியமே முதல் இடம் பெறுகிறது. உணர்ச்சிகளைச் சொல்லாமல் சொல்லுவது அக்கலை; மெளனமே அதன் உயிர். உள்ளத்துடிப்பை உடலுறுப்புக்களால் காட்டி, அது பிறர் உள்ளத்திலும் புகுந்து மலரும்படி செய்யப் பரதம் முயல்கிறது. அபிநயவாயிலாக உள்ளத்தோடு உள்ளம் உணர்ச்சிகளைத் தொட்டுக் கொள்கின்றது; அங்கே பேச்சிற்கு இடமில்லை.
உள்ளத்தில் எழும் அலைகளின் கொந்தளிப்பை வெளிக்காட்டுவதில் இரண்டாவதாக இசையைத் தான் சொல்லவேண்டும். ஒரு பண்ணை ஆளத்தி செய்யும்போது கேட்போரின் சித்தக் கடலிலே உணர்ச்சிகள் அலைமோதுகின்றன. இராக சஞ்சாரத்தில் ஒரு பகுதியை விஸ்தரித்து நிறுத்திவிடும் போது ஏற்படும் மோனத்திலே உணச்சிகள் மிதந்து வந்து மனத்திலே படிகின்றன. அந்த மோனத்திலே இராகத்தின் துடிப்பு அந்தரங்கமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கும் நாட்டியக் கலையிற்கண்ட மெளனத்தின் ஆற்றலே வெளியாகின்றது.
ஓவியத்தின் குரலே மெளனம், வர்ண ஜாலங்களே உணர்ச்சிகளைப் பேசுகின்றன. ஓவியன் யாதானுமொரு உணர்ச்சியைத் தோற்றுவிக்கத் தீட்டிய காட்சி அதிற் காண முடியாத ஆழத்தையெல்லாம் மெளனக் குரலினால் நம் உள்ளத்திலே தட்டி எழுப்ப முயல்கிறது. கல்லிலும் மற்ற உலோகங்களிலும் வடித்தெடுத்த சிற்பம் அந்த மெளனத்தின் பேச்சை உள்ளத்திலே ஒலிக்குமாறு செய்ய எழுந்த கனவடிவாகும். உலகம் போற்றும் தில்லைக் கூத்தனது திருவடிவக் காட்சி அவனுடைய திருநடனத்தின் ஒரு நிலையைக் காண்பித்து மற்ற நிலைகளையெல்லாம் நமது கற்பனையிலே உருக்கொள்ளத் தூண்டி மெளனமாய் நிற்கிறது.
கவிதை என்னும் அருங்கலையிலே மேலே கூறிய மற்றக் கலைகளெல்லாம் கலந்து இணைந்திருக்கின்றன. அது சொல்லென்னும் ஒலிச் சேர்க்கையினால் நாட்டியமும் சிற்பமும் காட்டும் உணர்ச்சிக் கோலங்களையும், ஓவியத்தின் வர்ணக் கலவைகளையும் உள்ளத்திரையிலே மின்னும்படி செய்கிறது. சொல்லிலும், சொற் கூட்டத்திலும் எழுகின்ற அந்த இசை ஊற்றும் அதற்கு உறுதுணையாய் நிற்கிறது. ஆகவே முன்பே கூறியது போல உணர்ச்சிகளை முற்றிலும் எடுத்துக் காட்ட அக்கலைகளுக்குள்ள திறமையின் எல்லை இங்கும் தோற்றமளிக்கிறது. உணர்ச்சியை உணர்ந்தது போன்றே காட்டும் ஆற்றல் கவிதைக்கும் இல்லை. அதுவும் ஓரளவு கூறி அதற்கு மேல் மெளனத்தின் வாயிலாகவே உணர்த்த வேண்டும்.
பெறுதற்கரிய சமாதி நிலையடைந்து பேரின்பம் பெற்றுத் திரும்புபவனும் அவ்வின்ப உணர்ச்சியை எடுத்துக்கூற வார்த்தை யகப்படாது ஏமாற்றமடைகிறான். அவ்வின்பத்தைத் தேடித் திரிந்தபோது குறை குடம் தளும்புவதுபோன்று என்னென்னவோ வியாக்கியானம் செய்தவன் தன் முயற்சி கைவந்த போது நிறை குடம்போல மெளனியாய்விடுகிறான். பலவிதமான உபமானங்களால் பேரின்ப உணர்ச்சிகளை விளக்க முயன்றவர்களும் முடிவிலே தங்கள் சக்திக் குறைவை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சொல்லுகைக்கில்லாத நிலை என்றே அதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆகவே, ஆழ்ந்த உணர்ச்சிகளை உணர்வதுபோல முற்றிலும் உணர்த்துதல் இயலாது. கலைகள் அம் முயற்சியில் பெரியதோர் வெற்றியை எய்தினாலும் அவைகளும் தாம் வெளிப்படையாகக் கூறியவற்றோடு, கூறாது மெளனமாய் உள்ளத்தின் கற்பனைக்கு விட்ட பாகத்தின் பேருதவியை எதிர் பார்த்தே இருக்கின்றன. ஓரளவிற்கு உணர்ச்சிகளை உணர்த்தலாம்; அதற்கு மேல் எல்லாம் மெளனமே. அந்த மெளனத்தின் பேச்சினிலேதான் உணர்ச்சியின் உள்ளம் பூரணமாய்த் துடித்துக்கொண்டிருக்கிறது.