காற்றில் வந்த கவிதை/ஆயன் பெருமாள்

ஆயன் பெருமாள்

பெருமாளின் அருள் கிடைத்தால் பிறகு வாழ்க்கையில் ஒருவிதமான துன்பமும் இராது. அவருடைய கடைக்கண் பார்வை போதும் இகபர சுகங்கள் எல்லாம் கிடைக்கும். ஆழ்வார்கள் அற்புதமான தெய்வப் பாடல்களால் திருமாலின் அருள் வேண்டிப் பாடியிருக்கிறார்கள். அவருடைய அருளால் கிடைத்த பெரியதோர் இன்பத்தைப் பற்றியும், ஆன்ம அனுபவத்தைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள்.


பெருமாளின் அருளை வேண்டும் நாடோடிப் பாடலும் உண்டு. சேகண்டியையோ மணியையோ அடித்துக்கொண்டு ஆயன் பெருமாள் அருள் தர வேண்டுமென்று ஆசீர்வதித்துப் பாடிக்கொண்டு வருகின்றவனுக்குக் கிராமங்களிலே தாராளமாகப் பிச்சை கிடைக்கும். பாடுகின்றவன் யாராக இருந்தாலும், அவளால் பாடப்படுகின்ற பெருமாள் கருணாமூர்த்தி யல்லவா? அவருடைய கருணை கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.


ஆடுமாடு-பெருகவேணும்-ஆயன் பெருமாளே
ஆதீனங்கள் பெருகவேணும்-ஆயன் பெருமாளே

பட்டிமாடு பெருகவேணும்-ஆயன் பெருமாளே
பால்பானை பொங்கவேணும்-ஆயன் பெருமாளே
வாரணம்போல் வளரவேணும்-ஆயன் பெருமாளே
வாயிலெல்லாம் சந்நிதிபோல்-ஆயன் பெருமாளே
மக்கள்மனை வாழவேணும்-ஆயன் பெருமாளே
மகிமையெங்கும் வளரவேணும்-ஆயன் பெருமாளே
செய்யும் தர்மம் கூடவரும்-ஆயன் பெருமாளே
செல்வமெல்லாம் கூடவருமோ-ஆயன் பெருமாளே
திருப்பதி பகவான் அருள் கொடுப்பார்-ஆயன்
பெருமாளே
சீரும் சிறப்பும் பெருகவேணும்-ஆயன் பெருமாளே

பெருமாளே மாடு மேய்க்கும் ஆயன். ஆதலால் ஆடு, மாடு பெருக வேண்டும் என்று அவனிடத்திலே கேட்பது மிகப் பொருத்தமல்லவா?

ஆயன் பெருமாளிடம் வரங் கேட்கும் இந்தப் பாடலிலே வேறொரு பெரிய உண்மையும் பேசப்படுகிறது. பிச்சை கேட்க வருகிறவன் புத்திசாலிதான். ஆதலால் அவன் இந்த உண்மையையும் இடையிலே நினைவூட்ட விரும்புகிறான். அதனால் அவனுக்கும் லாபம்: கேட்கிறவனுக்கும் லாபம்.

வாழ்க்கை முடிவடைகின்ற காலத்திலே செல்வமெல்லாம் கூட வராது: ஒருவன் செய்த தர்மங்களே அவனுக்குத் துணையாக வரும். ஆதலால் வாழ்க்கை வசதியிருக்கும்போதே தருமம் செய்து கடைவழிக்கு நல்ல பலமான துணை தேடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உண்மையை ஆயன் பெருமாள் பாட்டுக்காரன் எடுத்து ஓதுகிறான். இதை அவன் உபதேசம் செய்வதுபோலச் சொல்ல வில்லை. ஆயன் பெருமாளிடம் வரம் கேட்கும் அதே பாங்கில் இதையும் கூறிவிடுகிறான். அவன் கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை.