காற்றில் வந்த கவிதை/கரகம்

கரகம்

ரக ஆட்டம் ஒரு சிறந்த நாடோடி நடனம். பூவால் அணி செய்யப் பெற்ற கரகம் தலையிலே இருக்கும். அதன் உச்சியிலே மயிலைப்போன்றும் அன்னத்தைப்போன்றும் செய்யப்பட்ட உருவம் ஆடிக்கொண்டிருக்கும். கரகமெடுப்பவன் பாட்டிற்கும் தாளத்திற்கும் ஏற்றவாறு பலவிதமான ஆட்டங்கள் காட்டுவான். எவ்வளவு வேகமாக ஆடினலும் எத்தனை விதமாக உடலை வளைத்தாலும் கரகம் தலையை விட்டுக் கீழே விழாது. அப்படி விழாதபடி ஆடுவதிலேதான் கரகக்காரனின் சிறப்பிருக்கிறது.

மாரியம்மன் திருவிழாவிலே கரகம் ஒரு முக்கியமான அம்சம். பம்பைக்காரன் கனகனவென்று வாத்தியம் முழக்குவான். அந்த வாத்தியத்தின் ஜதிகளுக்கேற்றவாறு பாட்டிருக்கும். பாட்டிற்கேற்றவாறு கரக ஆட்டம் நடக்கும்.

கரக ஆட்டத்தின்போது பலவகையான பாடல்களைப் பாடுவார்கள். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றை இப் பொழுது பார்க்கலாம்,

ஒன்னாங் கரகமடி-கன்னீ
ஒகோ-என் தாயே!
ஒடியாந்து பூசை வாங்கு இப்போ-தாயே

ரண்டாங் கரகமடி-கன்னீ
ஒகோ-என் தாயே!
ரண கரகம் பொன்னாலே இப்போ-தாயே

மூன்றாம் கரகமடி-கன்னீ
ஒகோ-என் தாயே!
முத்தாலே பொன் கரகம் இப்போ-தாயே

நாலாங் கரகமடி-கன்னீ
ஒகோ-என் தாயே!
நாடி வரும் பூங்கரகம் இப்போ-தாயே

அஞ்சாங் கரகமடி - கன்னீ
ஒகோ-என் தாயே!
அசைந்தாடும் பொன் கரகம் இப்போ தாயே