காற்றில் வந்த கவிதை/பூப் பொங்கல்

பூப் பொங்கல்


பொங்கலோ பொங்கல்! தை பிறந்த முதல் நாள் பெரும்பொங்கல். அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்றாம் நாள் பூப் பொங்கல். தை பிறந்தால் இப்படிக் கிராமங்களிலே ஒரே பொங்கல் மயமாக இருக்கும். பொங்கலோ பொங்கல்!

மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் ஆண்களெல்லோரும் மாலை கோவிலுக்குப் போய்விடுவார்கள். மாலை கோவில் என்பது லிங்க வடிவாகவுள்ள சிவனுக்கு அமைந்துள்ள கோயில். அண்டை என்று வழங்கும் மூங்கிற் குழாயிலே பால் கொண்டு சென்று அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள்.

ஆண்களெல்லாம் மாலை கோவில் சென்ற பிறகு ஊரிலே சிறுமிகளும் பருவமடைந்த மங்கையரும் பூப் பொங்கல் விழாக் கொண்டாடுவார்கள்.

ஊனான் கொடி என்று ஒருவகையான கொடி மைதானத்திலே நீண்டு வளைந்து வளைந்து கரும்பச்சைப்புதராகப் படர்ந்திருக்கும்; வெண்சிவப்பான பூக்கள் கொத்துக் கொத்தாக அதிலே பூத்துக் குலுங்கும். அவற்றை மாட்டுப் பொங்கலன்றே பறித்து வந்து சிறுமிகள் தங்கள் பூக்கூடைகளில் நிரப்பிக் கொள்ளுவார்கள். பூப் பொங்கலன்று அவர்கள் அனைவரும் பூக்கூடைகளுடனும் பலகாரக் கூடைகளுடனும் விநாயகர் கோயிலில் கூடிக் கும்மியடிப்பார்கள். எத்தனை வகையான வண்ணப் பாட்டுகள் அவர்கள் வாயிலே!


பாட்டைத் தொடங்குவாள் ஒருத்தி. அவளைத் தொடர்ந்து அனைவரும் பின்னல் பாடிக்கொண்டு கும்மியடிப்பார்கள். இதோ ஒரு பாட்டைப் பாருங்கள்.


ஒரு மிளகு கணபதியே
ஒண்ணு லாயிரம் சரவிளக்கு
சரவிளக்கு நிறுத்தி வச்சு
சாமியென்று கையெடுத்து
பொழுது போர கங்கையிலே
பொண்டுக ளெல்லாம் நீராடி
நீராடி நீர் தெளிச்சு
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டு டுத்திப் பணிபூண்டு
பாலே ரம்மன் தேரோட
தேருக்கிட்டே போகலாமா
தெய்வமுகங் காண்கலாமா.

பாட்டுக்களெல்லாம் பள்ளிக்கூடத்திலே படித்தவையல்ல. அவை நாடோடிப் பாடல்கள். எந்தக் காலத்திலிருந்தோ தெரியாது, அவை கிராமங்களிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தக் கும்மி அன்று ஊரெல்லாம் நடைபெறும். வீடு வீடாகச் சென்று கும்மியடித்துவிட்டுச் சிறுமிகள் ஆற்றங்கரைக்கும் குளக்கரைக்கும் புறப்படுவார்கள்.


கூடையிலே பட்சணங்கள் இருக்கும். மார்கழி மாதத்திலே நாள்தோறும் வாசலிலே வைத்த பிள்ளையார்கள் இருக்கும். பலவகையான பூக்களும் நிறைந்திருக்கும்.


பிள்ளையார்களை ஆற்றிலோ குளத்திலோ போட்டுத் திரும்ப வேண்டும். அதற்காகத்தான் சிறுமிகள் புறப்படுகிறார்கள்.

அவர்கள் “ஓலையக்காள்' என்ற மங்கையொருத்தி ஆற்றுக்குப் புறப்படுவதாகக் கற்பனை செய்து வேடிக்கையாகப் பாடுவார்கள். ஓலையக்காள் வருணனை முதலிலே வரும். பாட்டிலே ஒரு பகுதியை ஒருத்தி பாடுவாள். மற்ற வர்களெல்லாம் "ஓலே......'"என்று கூறுவார்கள்.


ஓலேயக்கா கொண்டையிலே
ஒருசாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு (ஒ...லே)

மாலைஅ ரைப்பணமாம்
மயிர்கோதி கால்பணமாம்
மாலைகு றைச்சலென்று
மயங்குறானாம் ஓலையக்கா (ஒ...லே)

சேலை.அ ரைப்பணமாம்
சித்தாடை கால்பணமாம்
சேலைகு றைச்சலென்று
சிணுங்குறாளாம் ஓலையக்கா (ஒ.லே)

தான்போட்ட சிந்தாக்கைத்
தான்கழட்ட மாட்டாமல்
தாயுடனே சீராடித்
தான்போருள் ஓலையக்கா (ஒ...லே)

மேற்படியைத் தட்டிவிட்டு
வெத்திலைக் காம்பைக் கிள்ளிவிட்டு
மேனுட்டு ஒலையக்கா
மேற்கே குடிபோருள் (ஒ.லே)

நாழிநாழி நெல்குத்தி
நடுக்களத்தில் பொங்கல் வைத்து
பொட்டென்ற சத்தங் கேட்கப்
போருளாம் ஒலையக்கா (ஒ.லே)

தளிஞ்சிச் செடியடியே
தாய்க்கோழி மேய்கையிலே
தாய்க்கோழிச் சத்தங்கேட்டுத்
தான்போருள் ஒலையக்கா (ஒ...லே)

பொரும்பிச் செடியடியே
பொறிக்கோழி மேய்கையிலே
பொறிக் கோழிச் சத்தங்கேட்டுப்
போருளாம் ஓலையக்கா (ஒ...லே)

ஒலையக்கா கொண்டையிலே
ஒரு சாடு தாழம்பூ
தாழம்பூச் சித்தாடை
தலைநிறைய முக்காடு (ஒ...லே)

ஆற்றுக்குச் சென்ற பிறகு மறுபடியும் பூப் பறிப்பார்கள். பெண்களுக்குப் பூவென்றால் ஒரே ஆசை. எத்தனை பூக் கிடைத்தாலும் ஆசை அடங்காது. இறைவனுக்குப் பூப் பறிப்பதிலே ஒரு தனி ஆர்வம் அவர்களுக்கு உண்டு.

ஆத்துக்குள்ளே அந்திமல்லி
அற்புதமாய்ப் பூ மலரும்
அழகறிந்து பூ வெடுப்பாய்
ஆறுமுக வேலவர்க்கு
சேத்துக் குள்ளே செண்பகப்பூ
திங்களொரு பூ மலரும்
திட்டங்கண்டு பூ வெடுப்பாய்
தென்பழநி வேலவர்க்கு

இப்படிப் பாடிக்கொண்டு பூப் பறிக்கும்போது ஆடவர்களும் அந்த இன்பப் பணியிலே உதவி செய்ய வருவார்கள். அவர்களும் விளையாட்டாகப் பாடுவதாகப் பல பாடல்கள் வரும்.

பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக் கொடுத்தால் ஆகாதா?
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூச்சொரிந்தால் ஆகாதா?
பறித்த பூவையும் பெட்டியிலிட்டுத்
தொடுத்த மாலையும் தோளிலிட்டுப்
பூப்பறிக்கிற பெண்டுகளே
பூக்கொடுத்தால் ஆகாதா?

இந்தக் கேள்விக்குப் பெண்கள் பதில் சொல்லுவார்கள்.

பூப் பறிப்பதும் இன்னிக்குத்தான்
பெட்டியிலிடுவதும் இன்னிக்குத்தான்
அதிசயமான இந்த ஊரிலே
அள்ளி இறைப்பதும் இன்னிக்குத்தான்
(பூவோ...பூவு)

நெல்லுவிளையுது நீலகிரி
நெய்க்கும்பம் சாயுது அத்திக்கோடு
பாக்கு விளையுதாம் பாலக்காடு
பஞ்சம் தெளியுதாம் இந்தஊரில்
(பூவோ... பூவு)


பிறகு பலவகையான பழங்களைப் பறிக்கத் தொடங்கு வார்கள். அங்கேயும் பாட்டுத்தான்.

ஏரிக்கரையோரம் இலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்குங்கப்பா-எனக்கிளைய தம்பிமாரே
பார்த்துப் பொருக்குங்கம்மா- ஒயிலன்னமே
பசுங்கிளியே தங்கைமாரே-ஒயிலன்னமே

ஆத்தங்கரையோரம் அத்தி பழுத்திருக்கும்
அடிச்சு உலுக்குங்கப்பா-அன்புள்ள தம்பிமாரே
அள்ளிப் பொருக்குங்கம்மா-ஒயிலன்னமே
அன்புள்ள தங்கைமாரே-ஒயிலன்னமே


குளத்தங்கரையோரம் கொய்யாப் பழுத்திருக்கும் குலுக்கி உலுக்குங்கப்பா-குணமுள்ள தம்பிமாரே குணிந்து பொருக்குங்கம்மா-ஒயிலன்னமே
குணம் நிறைந்த தங்கைமாரே-ஒயிலன்னமே

இவ்வாறு ஆண்களும் பெண்களும் மாறிமாறிப் பாடுவ தாகப் பாடல்கள் ஆற்றங்கரையில் ஒலிக்கும்.

பிள்ளையார்களை இனி ஆற்றிலே போடவேண்டும். பிள்ளையாரை வழியனுப்பவும் பாடல்கள் உண்டு. மார்கழியிலே பிடித்து வைத்த பிள்ளையார்களை வட்ட வட்டமாகத் தட்டிக் காய வைத்திருப்பார்கள் அல்லவா? அந்தப் பிள்ளையாருக்குப் பாட்டு.


வட்ட வட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
உண்ணுண்ணு புள்ளாரே
ஊமத்தங்காய்ப் புள்ளாரே
கண்ணென்று சொல்லட்டுமா
கண்ணான புள்ளாரே
வட்டவட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
வார வருஷத்துக்கு
வந்துவிட்டுப் போவாயோ?
போன வருஷத்துக்குப்
போய்விட்டு வந்தாயோ?
வட்டவட்டப் புள்ளாரே
வாழைக்காய்ப் புள்ளாரே
உண்ணுண்ணு புள்ளாரே
ஊமத்தங்காய்ப் புள்ளாரே

இந்தப் பிள்ளையாரை வழியனுப்புவதற்குப் பாடும் பாடலிலே அவர்களுடைய சோகமும் கலந்திருக்கும், 

போறாயோ போறாயோ போறாயோ புள்ளாரே?
வாராயோ வாராயோ வருவாயோ புள்ளாரே?
போறாயோ புள்ளாரே போறாயோ புள்ளாரே?
வாராயோ புள்ளாரே வருவாயோ புள்ளாரே?


சிந்தாமல் சிதராமல் வளர்த்தினேன் புள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே சிந்துகிறேன் புள்ளாரே(போ)

வாடாமல் வதங்காமல் வளர்த்தினேன் புள்ளாரே
வாய்க்காலுத் தண்ணியிலே விட்டேனே புள்ளாரே(போ)

பூவோடு போறாயோ போயிட்டு வாராயோ
பூவோடு வாராயோ பெண்களைப் பாராயோ (போ)


பிள்ளையாரை வழியனுப்பிவிட்டு மறுபடியும் கும்மி விளையாட்டு.


ஒரு செடியாய் ஒரு சிமிறாய்
ஒண்ணாயிரம் செண்பகப்பூவாய்
செண்பகப்பூவைப் பறித்தெடுத்துச்
சிலம்புச் சித்திரக் கோலமிட்டு
இடி இடித்து மழை பொழிய
இருகரையும் பெருகிவர
பெருகிவரும் தண்ணியிலே
பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர் குளித்து
நீலவர்ணப் பட்டுடுத்தி

கடலாடிக் கடல்குளித்து
காஞ்சீவரம் பட்டுடுத்தி
பட்டுடுத்திப் பணி பூண்டு
பரமனுக்குப் பூப்போடு

இந்தப் பாட்டு முடிந்ததும் வேறொரு வகையான பாட்டும் கும்மியும்.


ஒண்ணாம் படிகடந்து
ஒருவகைப் பூவெடுத்து
பூவெடுத்துப் பெட்டியிட்டுப்
போய்ச் சேர்ந்தோம் கன்னிமலை

கன்னி கடந்தமலை
கைலாச வீரமலை
வீரமலைக் கோவிலிலே
விளையாடப் பெண்கள் வந்தோம்

ரண்டாம் படிகடந்து
ரண்டுவகைப் பூவெடுத்து
பூவெடுத்துப் பெட்டியிட்டுப்
போய்ச் சேர்ந்தோம் கன்னிமலை

கன்னி கடந்தமலை
கைலாச வீரமலை
வீரமலைக் கோவிலிலே
விளையாடப் பெண்கள் வந்தோம்

மூணாம்படிகடந்து
மூணுவகைப் பூவெடுத்து
பூவெடுத்துப் பெட்டியிட்டுப்
போய் சேர்ந்தோம் கன்னிமலை

கன்னி கடந்தமலை
கைலாச வீரமலை
வீரமலைக் கோவிலிலே
விளையாடப் பெண்கள் வந்தோம்

இந்த சமயத்திலே கிருஷ்ணனுடைய லீலைகளை நினைத்துப் பாட்டும் கும்மியும் தொடங்கும்.


உரியிலே வெண்ணையிருக்கோ-கிருஷ்ணன்
உறிஞ்சிக் குடித்தாரு
சட்டியிலே வெண்ணையிருக்கோ-கிருஷ்ணன்
சாய்த்துக் குடித்தாரு
(உரியிலே)

பாக்குமரத்திலே-கிருஷ்ணன்
பந்து விளையாட
தேக்கு மரத்தடியே-கிருஷ்ணன்
தேன் மொழியாளைக் கண்டார்
(உரியிலே)

செண்பகச் செடியடியே-கிருஷ்ணன்
செண்டு விளையாட
செண்பகப் பூவாலே - கிருஷ்ணன்
செண்டு முடிந்தாரு
(உரியிலே)

அரசமரத்தடியே-கிருஷ்ணன்
அம்புவிளையாட
அரசியைக் கண்டதுமே-கிருஷ்ணன்
அம்பை விடுத்தாராம்
(உரியிலே)

இவ்வாறு கும்மியும் பாடலும் நெடு நேரம் நடக்கும். பிறகு பட்சணக் கூடைகள் காலியாகும். கூடியிருந்தவர்களுக்கெல்லாம் நிறையக் கிடைக்கும்.

இவ்வாறு சிறுமிகளின் பூப் பொங்கல் இன்பமாக முடியும்.