கால்டுவெல் ஒப்பிலக்கணம்/004-033

௩. திராவிட மொழிகள்—தமிழ்

" திராவிடம்” என்ற சொல் பிராகுவி[1] என்ற மொழி நீங்கலாக, கீழ்வரும் பன்னிரண்டு மொழிகளை உட்கொண்டதாகும்.

திருந்திய மொழிகள்


1. தமிழ் 4. கன்னடம்
2.மலையாளம் 5. துளு
3. தெலுங்கு 6. குடகு அல்லது கூர்க்கு

திருந்தா மொழிகள்

1. துதம் [2]  4. கந்தம் அல்லது கு [3]
2. கோதம்[4]  5. ஒராவோன்
3. கோண்டு[5]  6. இராஜ்மகால்
தமிழ் பேசப்படுமிடம்

கிராவிட மொழி யினங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த திருந்திய மொழி தமிழேயாம். அது சொல்வள மிகுந்தது; பண்டைச் சொல்லிலக்கணத் தொல்வடிவங்களிற் பெரும்பாலனவற்றை இகவாதுகொண்டு மிளிர்வது. இதனாலேயே மேற்கண்ட பட்டியில் தமிழுக்குத் தலைமையிடம் அளிக்கப்பட்டது. தமிழ்மொழி செந்தமிழ், கொடுந்தமிழ் என இருவகைத்து. செந்தமிழ் என்பதைப் பண்டைத் தமிழ் என்றும், இலக்கிய வழக்குத் தமிழ் என்றும் கூறலாம்; கொடுந்தமிழ் என்பதை இன்றைத் தமிழ் என்றும், பேச்சு வழக்குத் தமிழ் என்றுங் கூறலாம். இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடுகள் மிகப் பல. அவ் வேறுபாடுகளை நோக்க இவ்விரண்டும் இருவேறு தனி மொழிகள் என்று கூடக் கூறிவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், வங் காள விரிகுடாவிற்கும் இடைப்பட்டதாய், பழவேற்காடு முதல் குமரிமுனை வரையிற் பரந்து கிடக்கும் பெருநிலப் பகுதியாகிய கருநாடகத்திற் பேசப்படுவது தமிழ். தென் திருவாங்கூர்ப் பகுதியிற் குமரிமுனை தொடங்கித் திருவனந்தபுரம் வரையிலும் தமிழ் பேசப்பட்டு வருகிறது. ஈழத்தின் வடமேற்குப் பகுதியிலும் அது வழங்குகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் ஈழஞ் சென்று குடியேறினர் என்பதற்குச் சான்றுகள் உள. ஈழத்திலுள்ள காப்பித்தோட்டக் கூலிகளிற் பெரும்பாலோர் தமிழர்களே. கொழும்பு நகரிற் பொருள் திரட்டும் வணிகர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சென்னை மண்டிலத்தின் பற்பல பகுதிகளிலுறையும் ஐரோப்பியப் பெருமக்களின் வீட்டு வேலைக்காரர்களும், பணியாளர்களும் தமிழர்களே. இதனாலேயே தென்னிந்தியக் கோட்டங்கள் பலவற்றிலும் வழங்கும் மொழி எதுவாயிருந்தாலும் ஆங்காங்குப் படை மக்கள் உறையும் பகுதிகளிலெல்லாம் தமிழே வழங்கி வருகிறது. மலையாள காட்டுக் கண்ணனூரிலாதல், கன்னட நாட்டுப் பெங்களூரிலாதல், தெலுங்கு நாட்டுப் பல்லாரியிலாதல், இந்துஸ்தானி நாட்டுச் சிக்கந்தராபாத்திலாதல் ஆங்காங்குத் தமிழ்மொழி பயிலக் காண்பதும் இதனாலேயாம்.

பெகு, பினுங்கு, சிங்கப்பூர் முதலிய கீழைநாடுகளிற் காணப்படும் கலிங்கர்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. மோரீசுக்கும் மேலை யிந்தியக் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றுள்ள கூலிமக்களிற் பெரும்பாலோர் தமிழர்களே. சுருங்கக்கூறின், பொருள்திரட்டும் வழியமைந்துள்ள இடங்களிலெல்லாம் தமிழர்களைக் காணலாம்; சோம்பேறிகளாய், நகத்தில் அழுக்குப்படாமல் வாழவிரும்புஞ் செல்வர்கள் இருக்குமிடங்களிலெல்லாம் தமிழர்களை அணியணியாய்க்

[6] காணலாம். இஃதொன்றைக் கருகின் தமிழர்களைக் கீழைத்தேய கிரேக்கர்கள் அல்லது ஸ்காட்ச்கள் என்று கூறலாம் போலும்! இந்துக்கள் என்று அழைக்கப்படும் பெருங்திரளான மக்களிடையே குருட்டு நம்பிக்கைகள் மலிந்து காணப்படும் என்று கூறுவதுண்டு. ஆயினும் அக்குருட்டு நம்பிக்கைகள் மிகவும் குறைந்த அளவிற்கானப்படும் ஒரு பகுதியினர் அவர்களுள்ளும் இருக்கின்றனர் என்றால் அவர்கள் தமிழர்களேயாம். பொருளீட்டும் பெருமுயற்சியும் பேருழைப்பும் வாய்ந்தவர்கள் தமிழர்களே. தெலுங்குமொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டிற் பத்தில் ஒரு பங்கு காணப்படலாம். அவர்களையும் முகம்மதியர்களையும் நீக்கிக் கணக்கிடின் தமிழ் மொழி பேசுந் தமிழ்மக்களின் தொகை ஏறக்குறைய 220 இலட்சங்களாகும்.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையே; அதுவே தென்னிந்திய மண்டிலத்திற்கும் தலைநகரமாகும். தமிழ்மக்கள் அந்நகரைச் சென்னபட்டினம் என்றே வழங்குவர். சந்திர கிரித் தெலுங்கரசர்க்குக் கப்பங்கட்டி வந்தவரும், செங்கற்பட்டு நாயக்கரின் மாமனுருமான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து ஆங்கிலேய வணிகக்குழாத்தினர் ஒரு சிறு கோட்டையைப் பெற்று, அதனே அவர்கள் அரண் அமைந்த தொழிற்சாலையாக மாற்றியமைத்துக்கொண்டனர். மதராஸ் (மதராஸ்பட்டினம்) என்று ஆங்கிலேயர்களால் அஃது அழைக்கப்பட்டு வந்தமைக்குச் சரியான காரணந் தெரியவில்லை. ஒருகால், தமிழ்ச் சொல்லான “மதில்” என்பதற்கு நேரான தெலுங்கு மதுரு (கோட்டையின் மதிற்சுவர்) என்ற சொல்லின் அடியாக அப்பெயர் பிறந்ததுபோலும் மதராஸ் நகருக்கு அண்மையில் சதராஸ் என்று ஓர் ஊரும் உள்ளது. இவ்விரு ஊர்களின் பெயரொலிகளில் ஒற்றுமை யிருப்பது காணப்படும். “சதுரங்கம்“ என்ற சொல் சதுரையாகக் குறுகி ஆங்கிலேயரால் சத்ராஸ் என்று திரித்து வழங்கப்பட்டது போலும். இனி மந்தராஜ்பட்டினம் என்பதன் திரிபே மதராஸ் என்று கூறுவோரின் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

தமிழ்

தமிழ் என்பதிலுள்ள ழகர வொற்றை ளகர வொற்றாகத் திரித்துத் “தமிள்“ என்று ஒருசிலர் வழங்குவர். ஐரோப்பியர் முதலில் அதைத் “தமூல்“ என்றே புகன்று வந்தனர். பிரெஞ்சுக்காரர் இவ்வாறாகவே எழுதிவைத்தனர். ஆனால் அவர்களுக்குமுன் போந்த போர்த்துகேசியர்கள் தமுல் என்றோ தமிள் என்றோ கூறாமல் “மலபார்” என்றே தமிழ்மொழியைக் குறித்துவந்தனர். புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு அரசாங்க ஆட்சியாளரான டியூப்ளேயின் திவானாகவிருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை என்பார்; அவருக்குப்பின் திவானாகவந்த அவ் ஆனந்தரங்கப் பிள்ளையின் மருகருக்கு, கி. பி. 1766-ஆம் ஆண்டில் பிரான்சு மன்னர் பதினான்காம் லூயி என்பார் “மலபார் (தமிழ்த்) தலைவர்“ என்ற பட்டத்தை வழங்கியது போர்த்துகேசியர் வழக்கை யொட்டியே போலும்.

இதனையே “சமஸ்கிருத பிராகிருதமொழி ஆராய்ச்சி“ எழுதிய கோல்புருக் என்பவர், “சென்னை மண்டிலத்தின் மொழி தமிழ்மொழியே; ஆனால் அதனை ஐரோப்பியர் ‘மலபார்' என்று கூறுகின்றனர்“ எனக் குறித்துள்ளார். கி. பி. 1577 அல்லது 1579-ல் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காடு என்ற ஊரில் முதன்முதலாக அச்சிடப்பட்ட தமிழ்நூலின் மொழியை அந்நூலுக்குடையார் "மலவார் அல்லது தமிழ்” என்றே குறித்துள்ளனர். இதனாலும் தமிழ் என்பதே சரியான மொழிப்பெயர் என்று எளிதில் ஊகிக்கப்பெறும்.

தமிழ் என்னுஞ் சொல்லுக்கு.நேர் வடமொழிச் சொல் திராவிடம் என்பதாம். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒருங்கே குறிப்பதாகும். தமிழ் என்ற சொல்லின் ஒலிவடிவிற்கும் திராவிடம் என்ற சொல்லின் ஒலிவடிவிற்கு மிடையே எத்துணையோ வேறுபாடு காணப்படினும், இரண்டும் ஒரே வேரிலிருந்தே பிறந்ததாகக் கருதுவதற் கிடமுள்ளது. இக் கருத்து ஒப்புக்கொள்ளப்படின், தமிழ் என்ற சொல்லே பின்னர் திராவிடம் எனத் திரிபுற்றது என்று கூறுவதைக் காட்டிலும், திராவிடம் என்ற சொல் தான் தமிழ் என்று பின்னர்த் திரிபுற்றது என்று கூறுதல் எளிதும் நேரிதுமாம்.[7]இந்திய நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் ஒரு மக்கட் பகுதியினர் தங்களையே குறிப்பதற்குக்கூடத் தமிழ் மொழியை யொழித்து வடமொழியாகிய திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டிருப்பர் என்றோ, அன்றி அவர்தம் நண்பர்களான அயல்நாட்டினரும் அவர்களை அப்பெயராலேயே குறித்திருப்பர் என்றோ கொள்ளுதல் பிழைபாடுடையதாகத் தோற்றக்கூடும். தமக்கெனத் தம் மொழியிற் பெயரொன்றில்லாது பிறமொழிப் பெயரொன்றைத் தேடி அமைத்துக் கொண்டார் ஒரு மக்கட் பகுதியினர் எனின் யார்தான் முதலில் எளிதில் நம்ப ஒருப்படுவர்! ஆனல் இதுவே உண்மையென்று கருதவேண்டியதாக வுள்ளது. திராவிட நாட்டின் தென்பகுதிக்குப் பாண்டியநாடு என்ற பெயருள்ளது. அப்பெயர் வடமொழிப் பெயரே. இன்னும், சோழம், கேரளம், ஆந்திரம், கலிங்கம் என்ற எல்லாம் வடமொழிச் சொற்களாகவே தோற்றுகின்றன. கருநாடகம் என்ற ஒரு சொல்மட்டும் தனித்தமிழ்ச் சொல்லாகக் கொள்ளப்படும். மேற்குறித்த பெயர்களெல்லாம் வடமொழி அகராதிகளிற் காணப்படினும் அவற்றின் வேர்ப் பொருள் என்ன என்பது அவ்வகராதிகளிற் குறிக்கப்பட வில்லை. இதனால் அப்பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்கள்,தான் என்று துணிந்து கூறுவதற்கு மியலாதிருக்கின்றது. எனவே, இவை வடமொழிப் பெயர்களாகவே தோற்றுகின்றன என்ற அளவில் இவ்வாராய்ச்சி நின்றுவிடுகிறது. இனி,ஆந்திரம் என்ற சொல் பிராமணங்கள் ஒன்றனுள் எடுத்தாளப்பட்டிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. ஆயினும், அந்தச் சொல்லின் உண்மைப் பொருள் என்ன என்பது யாண்டும் விளக்கப்படவில்லை. வேதங்களுட் காணப்படும் பல பெயர்களுக்குப் பொதுவாகவே பொருள் விளங்குவதில்லை. ஆதலால் இப்பெயர்களெல்லாம் வடமொழிக்கு முற்பட்ட ஒரு வடஇந்திய மொழியினின்று பெறப்பட்டனவோ என்று ஐயுறவேண்டியதாகவு மிருக்கின்றது. திராவிடம் என்ற சொல்லின் முதலிலுள்ள திரா என்ற பதத்திற்கு நேர் வடமொழி த்ர் என்பதாகும். இது திராவிட மொழி யியல்புக்கே அப்பாற்பட்ட ஒரு கூட்டொலியாம்.

திராவிடம் என்ற சொல் திரமிடம் என்று பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. திராவிடம் என்பது திரவிடம் எனக் குறுகி, திரவிடம் திரமிடம் என்றாயிற்று என முடிபு செய்தல் ஒருவாறு பொருந்தும். இந்த இரு சொற்களும் தமிழில் வழங்குகின்றன ; எனினும் திரமிடம் என்ற சொல்லே தமிழ் நிகண்டுகளில் முதலிடம் பெறுகின்றது. இனி, வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் திராவிடம் என்ற சொல் திராவிடம் என்பதற்கு மாறாகப் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது என 1டாக்டர் கெர்ன் என்ற அறிஞர் கூறுகிறார். இந்தத் திரமிடம் என்பதே திரமிளம் என்பதாக, 2இந்தியாவில் புத்தமத வளர்ச்சி’’ என்று கி. பி. 1573-ல் தாரநாதர் என்பவரால் திபேத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிற் காணப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள புராணங்களில் இவ்வுருவமே காணப்படுகின்றதென 3டாக்டர் குண்டெர்ட் என்பவர் குறித்துள்ளார். "மகாவமிசத்திலுள்ள பாலி யில் திரமிளம் என்பது தமிளோ என வழங்கப்பட்டுள்ளது. சிரமணம் என்ற வடசொல் சமணம் என்று திரிந்துள்ளது ஈண்டு நோக்கற்பாற்று. இத் தமிளோ என்பதே தமிழ் என்றாயிற்று என்று எளிதில் ஊகிக்கலாம்.

இனி, 5பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற பெயரால் உரோம நிலப்படங்கள் சில வழங்குகின்றன. அவற்றுள் காணப்படும் இந்தியப் பகுதி, "ஆந்திர இந்தி என்றும் தமிரிசி என்றும் இரண்டு பெயர்களாற் குறிக்கப்பட்டுள்ளது. இவை தெலுங்கு நாட்டையும் தமிழ் நாட்டையுமே குறித்தனவாம். சில நூற்றாண்டுகட்குப் பின் வந்த குமாரிலபட்டர் என்பவரால் ஆந்திரர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தெளிவாகக் குறிக்கப்படுவது கொண்டு இது விளங்கும். தமிரிசி என்ற பகுதியில் 7மொதுரா என்ற நகரம் ஒன்று இருந்ததாக 8இராவென்னா என்ற நில நூலாசிரிய ரொருவர் குறித்துள்ளமையால் தமிரிசி என்பது தமிழையே குறிப்பதாகும் என்பது வலியுறுத்தப்படும். இன்னும் 9ஹியூன்-சியாங் என்னும்


1. Dr. Kern. 2. Taranatha’s “Tibetan History of the Propogation of Buddhism in India.” 3. Dr. Gundert. 4. The Pali of the Mahawanso. 5. The Peutinger Tables. 6. Andre Indi and Damirice. 7. Modura, 8. Ravenna. 9. Tchi-mo-lo of Hieun-Tsang. சீன யாத்திரிகர், ட்சி-மோ-லோ என்று குறித்துள்ளதும் தமிழ் என்ற சொல்லையேதான்.

இதுகாறுங் கூறியவாற்றால் திராவிடம் என்பதுதான் தமிழ் எனத் திரிந்தது என்பது ஒருவாறு விளங்கும். எனினும், இதில் ஒரு வியப்பென்னவென்றால், எடுத்ததெல்லாம் வடமொழியிலிருந்துதான் பிறந்தது என்று சாதிக்க முயலும் தமிழ்ப் புலவர்கள் இந்தத் ”தமிழ்” என்ற சொல்மட்டும் வடமொழியிலிருந்து பிறந்ததாகவோ, வடமொழிச் சொல்லே திரிந்ததாகவோ கொள்ள முன்வருகின்றர்களில்லை என்பதே. ”இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று தனிப்பட்ட ஒரு விளக்கத்தை அவர்கள் தமிழ் என்ற சொற்குக் கொடுத்து வலியுறுத்துகின்றனர். செம்மைசான்ற உயர்மொழியாகிய தமிழ்மொழியின் ஒலிச் சிறப்புநோக்கி இந்த வரையறையை ஒப்புக்கொள்ள எவரும் மறுக்கமாட்டார். ஆயினும் இதன்கண் அதன் பிறப்புண்மையும் பொதிந்து கிடக்கின்றது என்பதைமட்டும் எளிதில் ஒப்புக் கொள்வதற்கில்லை.

பாண்டியர்:- ”மகா வமிச” த்திற் றெகுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள வரலாற்றுக் குறிப்புக்களில், ஈழ நாட்டின் முதன் மன்னன் விஜயன் என்பவனே என்றும், அவன் பாண்டிய நாட்டு மன்னன் ஒருவன்றன் மகளை மணம் புரிந்தானென்றும், அவன் மகனுக்கு அதனாலேயே பாண்டு வமிச தேவன் என்று பெயரிடப்பட்டதென்றுங் காணப்படுகின்றன. மகா பாரதத்திற் பாண்டவர்கள் ஐவருள் ஒருவனாகிய அருச்சுனன் பாண்டிய மன்னனொருவன் மகளை மணந்தானென்றுங் காணப்படுகிறது. [8]பிளைனி என்னும் உரோம வரலாற்றாசிரியர் காலத்தில் மலையாள நாட்டில் ஒரு பகுதி பாண்டியர்களின் ஆட்சிக்குள் இருந்ததாக உறுதியாகத் தெரிகிறது. ஆகவே, இவற்றாற் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் நெடுந்தொலை பரவியிருந்ததென்பது எளிதில் ஊகிக்கப்படும்.

இனி, அகஸ்டஸ் என்ற உரோம் நாட்டு மன்னனுக்கு இந்தியாவிலிருந்து தூதனுப்பியவன் வடநாட்டுப் போரஸ் அல்லனென்பதும், அவன் தென்னாட்டுப் பாண்டியனே என்பதும் உறுதியே. சென்னைப் பொருட்காட்சிச் சாலையில், கிளாடியஸ் என்னும் உரோம் நாட்டு மன்னன் பிரிட்டன் காட்டை வென்றதற்கு அறிகுறியாக வெளியிட்ட காசு ஒன்று மதுரைக் கோட்டத்திற் கிடைத்ததாக எடுத்துச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஏரியன் முடி மன்னர்களில் ஒருவரான [9]வேலன்ஸ் என்பானின் காசு ஒன்று வைகையாற்றிற் கிடைத்ததாக [10]சர். எம். இ. கிராண்ட் டஃப் என்பார் எழுதியுள்ளார். இவற்றால் பாண்டிய நாட்டிற்கும் ஐரோப்பாவிற்கும் பண்டைக் காலத்திற் றொடர்பு இருந்துவந்ததென எளிதிற் புலப்படும்.

வடமொழிப் பாண்ட்ய என்ற சொல் தமிழிற் பாண்டியன் என்று எழுதப்படுகிறது. இதுவே குறுகிப் பாண்டி என்றும் எழுதப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கும் பண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டியம் என்ற சொற் பிறந்திருக்கக்கூடும் என்று கொள்வதற்கில்லை. பாண்டவர் தந்தையின் பெயரான பாண்டு என்னும் வடமொழிச் சொல்லடியாகவே இது பெறப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் தமிழாராய்ச்சியறிஞர்களெல்லாம். இது பண்டு என்னும் தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தொன்றாகவே வற்புறுத்திக் கூறுகின்றனர். பாணினிக்குப் பின்வந்த [11]காத்தியாயனர் என்பார் பாண்டுவின் வழியினரே பாண்டியர் என்று கொண்டிருப்பதாகப் [12]பேராசிரியர் மாக்ஸ்முல்லர் குறிப்பிடுகிறார். பாண்டியர்களின் முதல் தலைநகரம் பொருநைக் கரையிலிருந்த கொற்கை என்பதாகும்; இரண்டாந் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில், [13]மட்ரா என்று காணப்படுவதும், ஆங்கிலக்கில் [14]மதுரா என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் [15]மெதொரா என்று குறிக்கப்படுவதும் இத் தமிழ் மதுரையேயாம். பாரதப் பெரும்போர் முடிந்த பின்னர் பாண்டியர்களின் ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இம் மதுரையேயாம். ஆனால், வடமொழி நூலாகிய [16]ஹரி வமிசத்தில் இது தென் மதுரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழ நாட்டில் ஒரு [17]மதுராவும், கீழை இங்கியத் திட்டுகளில் ஒரு மதுராவும் இருக்கின்றன. இம் மதுரை மன்னர்களைப் பாண்டியர்கள் என்றும், சிற்சில இடங்களிற் பாண்டு என்றும் சிங்கள மகாவமிச நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதனாலும், இப் பெயருக்கும் வடமொழிப் பாண்டு என்ற சொல்லுக்கும் தொடர்பிருந்ததாகக் கருதிக் கோடல் பிழையாகாது. பாண்டியர் என்பது அரசுரிமை பூண்ட ஒரு முதுகுடியின் பெயராகவே முதற்கண் இருந்திருத்தல் வேண்டும்.

இனி, [18]மெகாஸ்தெனீஸ் என்பவர் தம்முடைய வரலாற்று நூலிற் [19]பண்டையீ என்ற இந்திய நாடொன்றைக் குறித்து எழுதியுள்ளார். அந்நாட்டிற்கு அப் பெயர் இந்திய வீமனாகிய கிருஷ்ணன் என்பவனுடைய ஒரே மகளின் பெயரைப்பற்றி இடப்பட்டதாகும் என்று அவர் குறித்துள்ளார். அவர் குறித்துள்ளது பாண்டிநாட்டையே என்பது பற்றி எட்டுணையும் ஐயமின்று. [20]அந்தாரீ” ”கலிங்கீ” என்ற பெயர்களைக் கேட்டறிந்துள்ள அவர் பாண்டியர்களைப்பற்றிக் கேட்டிராதிருந்திருக்க முடியாது; ஆனால், கேட்டவற்றைப் பிறழ உணர்ந்து ஒன்றைவிட் டொன்றாக மாற்றிக் கூறியிருத்தில் கூடும். எனினும், அவர் பாண்டிய நாட்டைப் பாணடுவோடு பொருத்திக் கூறியிருத்தல் ஒப்பத் தகுந்த தேயாம். மகாபாரதக் கதை இக்காலை யுள்ள விரிவான நிலையில் அக்காலை இருந்திருக்கக் கூடும் என்று உறுதி கூறுதற்கில்லை. அவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டால், அதன்கண் காணப்படும் வரலாற்றுக் குறிப் பொன்றையே மெகாஸ்தெனீசும் குறித்துள்ளார் என்று எளிதில் நம்பலாம். ஐம் பெரும் பாண்டவர்களுள் ஒருவன் அருச்சுனன்; அவன் கிருஷ்ணனின் சிறந்த நண்பன். அவன் “தீர்த்த யாத்திரை” செய்து வந்த காலத்துப் பாண்டியன் ஒருவன் மகளை மணந்துகொண்டான். இது மகாபாரதக் கதை. மெகாஸ்தெனீஸ் கூறியுள்ள நாட்டு வளமெல்லாம் இப்பாண்டியன் நாட்டிற்கே முற்றிலும் பொருத்தமாக உள்ளது. அதிலும் முத்துக் கொழிக்கும் நாடு என்று அவர் கூறியிருப்பது கொண்டு பாண்டிய நாடுதான் அஃது என்பது உறுதியாகக் கொள்ளப்படும்.

இனி மெகாஸ்தெனீசுக்குப் பின் வந்த பிளைனி என்பார் இந்தியாவிலுள்ள பலவகுப்பு மக்களுக்குள் ஒரு வகுப்பினர் [21]பாண்டி என்னும் பெயரினர் என்றும், அவ் வகுப்பினர் இராணிகளால் ஆளப்பட்டு வருகின்றனர் என்றும் குறித்துள்ளார். மலையாள நாட்டில் மருமக்கள் தாயம் இன்றுகாறும் வழங்கி வருவது கொண்டு பிளைனி கூறியது மலையாள நாட்டைத்தான் என்று கொள்ளலாகாதோ எனின், அம் மலையாள நாட்டிலும் தம் காலத்திற் பாண்டியர் ஆட்சி பல இடங்களிற் பரவி யிருந்தது என்று அவரே கூறியுள்ளமையால், அவரும், அவருக்கு முன் வந்த மெகாஸ்தெனீசும் குறிப்பிட்டது [22]பாண்டிய நாட்டையே என்பது பொருந்தும்.

சோழர்:- சோழர் என்ற பெயர்க் காரணம் நன்கு புலப் படவில்லை. அசோகர் கல்வெட் டொன்றில் அது. [23]சோட் என்று காணப்படுகிறது. சாளுக்கிய மரபினரின் தெலுங்கு, கல் வெட்டுகளிலும் அஃது அவ்வாறே காணப்படுகின்றது. தெலுங்கர் அதைச் சோளர் என்று மொழிகின்றனர். இந்நாட்டை ஹியூன் சியாங் என்ற சீன யாத்திரிகர் “சோழிய நாடு” என்று குறிக்கின்றனர். இஃது எவ்வாறு சோழ நாட்டோடு பொருந்தும் என்பது விளங்கவில்லை[24]. ஆனால் கி. பி. பதினோராம் நூற்றாண்டில் வடசர்க்கார்க் கோட்டங்கள் சோழர் அரசாட்சியின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடற் பாற்று. சோழர்களின் பழைய நாடு காவிரிக் கரையிலுள்ள செழுமை வளம் நிறைந்த தஞ்சை திருச்சிக் கோட்டப் பகுதிகளாகும். பின்னர் அவர்கள் காவிரிக்கு வடக்கேயுள்ள தமிழ் நாடு முழுதையும் ஒருகாலத்திற் கட்டி ஆண்டுவந்தனர். அவர்களுடைய தலைநகரம் முதலில் உறையூர்ப் பதியாம். உறையூர் உறைவிடம் என்றே பொருள்படுதற் காண்க. இவ் வூருக்குக் கோழி யென்றும் ஒரு பெயருண்டு. கி. பி. பதினோராம் நூற்றாண்டிற் சோழராதிக்கம் உச்ச நிலையி லிருந்தது. அவர்கள் தமிழ்நாடு முழுதிலுமே யன்றிப் பாண்டிய நாடு, சேர நாடு, ஈழ நாட்டின் வட பகுதி, தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஆகியவற்றிலும் ஆணை செலுத்தி வந்தார்கள்.

சேரர் :-சோழர் மொழிக்கும் பாண்டியர் மொழிக்கும் வேறுபாடில்லை. எட்டாம் நூற்றாண்டிற்டிற்குரிய சிரிய, யூதியக் கல்வெட்டுக்களின் உதவி கொண்டு நோக்குமிடத்துச் சேரர் மொழியிலும் வேறுபாடிருந்ததாகக் காண்பதற்கில்லை. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகிய மூவரும் திராவிடர்களே. அவர்கள் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்ற ஒரே பெயராலேயே வழங்கப்பட்டு வந்துள்ளனர்.

தமிழ்ப் பண்டைய வரலாற்றின்படி சேர, சோழ, பாண்டியர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் சிறுகதை யொன்றுண்டு : சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் உடன்பிறந்தோர்கள். அவர்கள் முதலில் கொற்கை என்னுமிடத்தில் அரசுப புரிந்து வந்தனர். இக்கொற்கை தாமிரபர்ணி ஆற்றின் கரையில் உள்ளது. அவ் வாற்றின் கரையிலேயே தென்னிந்திய நாகரிகக் கலை வளர்ந்ததாகக் கூறலாம். உடன்பிறந்தோராகிய அம் மூவர்களும் பிரிய வேண்டிய காலம் வந்தது. பாண்டியன் கொற்கையிலேயே தங்கினன். சேரனும், சோழனும் வெளியிற் புறப்பட்டனர். இருவர்களும் முறையே சேர சோழ அரசுகளை நிலைநிறுத்தினர். இக் கதையினை யொத்த கதைகள் பல வடமொழி நூல்களிலுங் காணப்படுகின்றன. ஹரி வமிசத்தில், பாண்டியன், கேரளன், கோலன், சோழன் என் பவர்கள் ஆக்ரீடன் என்பவனுடைய பிள்ளைகளாவர் என்று குறிப்பிடப்படுகின்றனர். துஷ்யந்தனின் பிள்ளைகள் அவர் கள் என்று கூறுவாருமுளர். கோலர் என்ற இப் புதிய குடி யினர் யாவர்? கருநாடர்களே அவர்கள் என்று புராணங்கள் சில கூறும்; ஆயினும் அவர்கள் கோலேரிய மரபினரே என்று கொள்ளுதலே சால்புடைத்தாம். தமிழ்:

தமிழை ’அரவ’ மென்பதேன்? தக்காணத்திலுள்ள முகம்மதியர்களும், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழ் மொழியை ’அரவம்’ என்றே அழைப்பர். அஃதேன்?.

’டாக்டர் குண்டெர்ட் என்பவர் அரவம் என்ற சொல்லை அறவம் என்று கொண்டனர்: கொண்டு, தமிழலக்கியமே ஏனைய மொழி இலக்கியங்களைக் காட்டினும் அற நூல்களும் அறத்துறைகளும் நிறைந்ததாகக் காணப்படுகின்றதாதலின், அறம் மலிந்த அம் மொழி அறவம் என்று அழைக்கப்பட்டது போலும்’ என்று வகுத்துரைத்தார். இதன்படி அறவர் என்ற சொல் அறம் மலிந்த கொள்கையினரையே குறிக்கும். புத்தர் பெருமானுக்கு அறவன் என்ற பெயரொன்றுங் காணப்படுதல் ஈண்டுக் குறிப்பிடற்பாலது. அதனால் அரவம் என்பது புத்தர்களையே குறிப்பதாகாதோ என்று ஐயம் நிகழ்தல் கூடும். இடையின ரகாங் கொண்டியலும் அரவம் என்ற சொல்லை வல்லின றகர முடையதாகக் கொண்டு இப்பொருள் கூறுதல் ஆகுமோ என்று கேட்கலாம். தமிழ் வல்லின றகரம் தெலுங்கிலும் கன்னடத்திலும் இடையின ரகர மாகக் திரிதல் இயல்பு. ஆதலின் அக் கேள்விக்கு விடை எளிது. தமிழ் அறம் என்ற சொல் கன்னடத்தில் அரவு என்றாதல் காண்க.

இனி, அரவம் என்ற சொல் அறிவு என்ற சொல்லடியாகப் பிறந்த தென்று கொள்வர் ஒருசாரார். தென்னாட்டிலுள்ள மக்க ளினத்தாருள் தமிழ்மக்களே அறிவிற் சிறந்தவர்களாகப் பண்டுதொட்டு யாவரானுங் கொள்ளப் பட்டு வந்துள்ளமையின் இக் கருத்துத் தோன்றியது போலும்!

இனி, செந்தமிழ் சேர் எதமில் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளுள் அருவா என்பதும் ஒன்று. அருவா என்ற அச் சொல்லின் திரிபே அரவம் என்று கொண்டார் மற்றொரு சாரார்.

இவை யெல்லாம் அரவம் என்ற சொல் ஒரு மொழியையோ, அம் மொழி பேசும் மக்க ளினத்தாரையோ குறிக்க எழுந்த தமிழ்ச் சொல்லாகக் கொண்டு இடர்ப்பட்டுக் கூறியனவேயாம். அப் பொருளில் அரவம் என்ற சொல் தமிழ் மொழியில் யாண்டும் வழங்கப்பட்டதில்லை. தெலுங்கர்களும், கன்னடர்களும், தக்காணிகளும் அவ்வாறு அழைக்கின்றனர் என்று றேற்கூறினமையால், அச் சொற்பொருள் தமிழொ ழிந்த ஏனைய மொழிகளிலேயே தேடக் கிடப்பதாம். தெலுங்கு மொழி வல்ல பண்டிதர்கள் பலர் அரவம் என்பது திராவிட மன்று, வடசொல்லே என்று யாப்புறுத்துக் கூறுகின்றனர். அ+ரவ என்பதே அரவம் ஆகி, ஒலியற்றது என்று பொருள் கொடுக்கும் என அவர் கூறுவர். ஹ என்பது போன்ற மூச்சொலிகள் இன்மையால் தமிழ் இப்பெயர் பெற்றது என்பது அவர்கள் கருத்துப் போலும். இந்திய மொழிகள் பலவற்றுள்ளும் தமிழ்மொழி யொன்றில் மட்டுமே இவ் வொலிகள் இல்லை. அதனால் அம் மொழி இழுக்குடைய தொன்றாகக் கருதப்பட்டது. ஆனால் இத்தகைய ஒரு காரணத்தைக் கொண்டு பெறப்பட்ட ஒரு பெயரைத் தமிழ் மக்கள் தாமாகவே சூட்டிக்கொண் டிருப்பார்கள் என்று கருதுதல் அறிவுடைத்தாகாது.

ஒசையற்ற மொழி என்பதைக் குறிக்க அரவ-மு என்று மொழிக்குப் பெயர் சூட்டிய தெலுங்கர் அம் மொழி பேசுவோரை ’அரவா-ளு’ என்று அழைத்ததும் இயல்பே. தெலுங்கில் அரவம் என்ற சொல் ஓசையற்றது என்று பொருள் பட்டது; தமிழிலும் அரவம் என்ற சொல் வழங்குகிறது; ஆனால், அச்சொல், ஒலி என்று பொருள்படுகிறது. இப்பொருள்படும் இச்சொல்லை ரவ என்ற வடசொல் திசைச் சொல்லிலக்கண முறைப்படி அகர வொலியை முதலிலேற்று அரவ என்று தமிழிலும் வந்துள்ளது என்று கூறுதல் கூடாது. ஏன்? வடமொழி ரவ என்ற சொல் பேரொலியைக் குறிப்பது; தமிழிலுள்ள அரவம் என்ற சொல்லோ மெல்லிய ஓசையையே குறிக்கு மாகலின்.

இனி, [25]சோழ மண்டலக் கரையிலுள்ள நெல்லூர்ப் பகுதியில்[26] அர்வர்ணி என்ற மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்று[27] டாலிமி என்ற கிரேக்க நில நூலாசிரியர் வரைந்துள்ளமையும் ஈண்டு குறிக்கற்பாலது.

எனவே, தமிழை “அரவம்” என்றை முப்ப தற்கு உண்மைக் காரணம் என்ன என்பது இன்னும் ஆராய்ச்சிக்கே இடனாக உள்ளது.

  1. 1. Brahui. 2. Tuda 3. Kota 4. Gond 5. Khond
  2. 2. Tuda.
  3. 5. Khond
  4. 3. Kota
  5. 4. Gond.
  6. 1. Districts.
  7. கால்டுவெல் துரைமகனாரே சங்காலத்திலிருந்த தமிழ்ப் புலவர்கள் இம் முடிபை ஒப்புக் கொள்ளவில்லை என்று பின்னர்க் கூறியுள்ளார். இக் கால - ஆராய்ச்சிப் புலவர்களும் இதனை ஒப்புக்கொள்ள முன்வராமை வியப்பன்று.
  8. Pliny
  9. The Arian Emperor Valens
  10. Sir M. в. Grant Duff
  11. Katyayana
  12. Professor Max Muller
  13. Mutra
  14. Madura
  15. Methora
  16. Harivamsa
  17. Matura
  18. Megusthenes
  19. Pandaii
  20. The Andarae and Calingae
  21. Pandie
  22. அருச்சுனன் பாண்டி நாட்டரசி அல்லியை மணந்ததும், அல்லி பாண்டிநாட்டு ஆட்சி நடத்தி வந்ததும் ஈண்டுக் குறிப்பிடற் பாற்று
  23. Choda
  24. சோழ நாட்டு மக்கள் சோழியர் எனப்படுவர். வேளாள வகுப்பினர் சோழநாட்டிற் சோழிய வேளாளர் என்றும், பாண்டிய நாட்டிற் பாண்டிய வேளாளர் என்று பெயர் பெறுவர். “முன் குடுமிச்சோழியா” என்ற காளமேகப் புலவரின் வாக்கையும், நோக்குக.
  25. 1. Coromandel coast.
  26. 2. The Arvarni.
  27. 3. Ptolemy.