கால்டுவெல் ஒப்பிலக்கணம்/009-033
VI. குடகு
குடகுக்கு இலக்கியம் இல்லை. துளுவை ஒப்பக்கூட இதனைப் பண்பட்ட மொழி என்று சொல்ல முடியாது. எனவே, முதற்கண் இதனைத் தனி மொழியாகக் கணக்கிடாமல் கன்னடத்துள் அடக்கிக் கூறப்பட்டுவந்தது. இதன் உறவைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தெளிவு பெறவில்லை. டாக்டர் மோக்லிங்[1] என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் இது கன்னடத்தைவிடத் தமிழ் மலையாளம் இவற்றுக்கு அண்மையானது என்று கூறினர். திராவிடக் குழுவில் இஃது எதனுடன் நெருக்கமான உறவுடைய தென்று தெளிவாகத் தெரியவில்லை யாயினும், மேற்படையாக நோக்கின், இது பழங் கன்னடத்திற்கும் துளுவிற்கும் இடைப்பட்ட தெனத் தோற்றுகிறது. இம் மொழியின் இலக்கண மொன்றும் சில பாட்டுக்களும் மேஜர் கோல்[2] என்பவரால் வெளியிடப்பட்டுள்ளன.
“நீலகிரியிலுள்ள பண்டைக் குடிகளின் மொழிகளைப் போன்று இம் மொழியும் (குடகு) தன் தொன்மைப் பண்பு மாறாமல் இருந்து வருகிறதென்பதில் ஐயமில்லை. இஃது இம் மக்கள் பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்து வருவதனாலேயே யாகும். குடகு மக்கள் பண்டைக் காலத்திலேயே மேற்கு மலைத்தொடரிற் குடியேறிவிட்டனர் என்பது அவர்களிடையே இன்றும் ஒரு பெண் பல ஆடவர்களை மணந்து கொள்ளும் வழக்கமிருந்துவருவதனாற் புலப்படும். இவ் வழக்கம் பண்டைத் திராவிடர் வழக்கமாகும். இவர்களுக்கு இலக்கியமில்லை; பார்ப்பனர் பழக்க வழக்கங்கள் இன்றளவும் இவர்களிடைப் புகவில்லை” என்று பர்னெல்[3] எழுதியுள்ளார்.
இதுகாறும் விரித்துரைத்த ஆறு மொழிகளும் திராவிடக் குழுவினுள் திருந்தியவையாகக் கொள்ளக் கிடப்பன. இனிக் கூறப்போகும் ஆறும், இவற்றிற்கு மாறாகத், திருந்தாதன; அதாவது எழுத்தும் இலக்கியமும் இல்லாதன.