கால்டுவெல் ஒப்பிலக்கணம்/024-033

கஉ. ஆரியருக்கு முற்பட்ட திராவிட நாகரிகம்



பண்டைத் திராவிடரை எவ்வகையாலும் காட்டு மக்களாகவோ, கீழ்ப்பட்டவர்களாகவோ கருதுதற்கில்லை. காட்டுப் பழங்குடி மக்கள்தம் நாகரிக நிலையாதாயினும், திராவிட மக்களைப் பற்றியவரை அவர்கள் ஆரியப் பார்ப்பனர் வருமுன்னரேயே நாகரிகத்தின் முதற்படியிலிருந்தனர் என்பது தெளிவு.

இன்றைய தமிழ்மொழியிலிருந்து வடசொற்களை அறவே அகற்றிப் பார்த்தால் மிகுந்துள்ள பண்டைத் திராவிடச் சொற்கள் ஆரியச் சார்பற்ற திராவிட நாகரிகத்திற்கு ஒரு சான்று ஆகும். அவ்வாறு வட சொற்களையகற்றிப் பண்டைத் தமிழ்மொழிச் சொற்களை மட்டும் ஆராய்ந்து கண்ட தமிழ்மக்களின் உள்ளநிலை, பழக்க வழக்கங்கள், சமய உண்மைகள் முதலியவற்றைக் கீழே தருகிருேம்.

திராவிடர்களிடை அரசர் வன்மை மிக்க அரண்களில் வாழ்ந்து நாட்டில் கோட்டங்களை ஆண்டு வந்தனர். விழாக் காலங்களில் அவர்களிடையே பாணர்கள் பாட்டுகள் பாடி மகிழ்ந்தார்கள். மக்கள் ஏட்டில் எழுத்தாணியால் எழுத்து எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைகள் பல சேர்ந்த கட்டுக்குச் சுவடி என்று பெயர். அவர்கள் கடவுளைக் கோ என்று உரிமைப் பெயரிட்டழைத்தனர். வழிபடும் இடங்களும் (கோ+ இல்) கோவில்கள் ஆயின. அவர்களுக்குச் சட்டங்களும் முறைகளும் இருங்தன. ஆயினும் வழக்குரைஞரோ, வழக்கறிஞரோ இல்லை. அவர்கள் மணவாழ்க்கை முறையைப் பின்பற்றினர்கள். ஈயம், வெள்ளீயம், துத்தநாகம் ஒழிந்த ஏனைய ஒண்

பொருள்களின் பயனை அவர்கள் அறிவார்கள். பழங்கால மக்களுக்குக் தெரிந்த கோள்களில் சனி, புதன் நீங்கலாக எனைய கோள்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. மருந்து, சிற்றுார், படகு, குடைமரம், கப்பல் ஆகியவை தெரிந்திருந்தன. இலங்கையைத் தவிர்ந்து, கடல் கடந்து அவர்கள் வேற்றுநாடு சென்றதில்லை. இலங்கைகூட அக்காலம் கால்நடையாய்க் கடந்து செல்லும்படி கிடந்திருக்கலாம் போலும் ! தலைநிலம் [1], தீவு [2] என்ற சொற்கள் அவர்களிடை இல்லை. உழவும், போரும் அவர்கள் நாள்முறை வாழ்வு. வில், அம்பு, ஈட்டி, வாள் இவை போர்க் கருவிகள். வாழ்க்கைக்கு வேண்டிய நூற்றல், நெய்தல், சாயமிடல் முதலிய தொழில்கள் யாவும் அவர்களிடை மேம்பட்டிருந்தன. மட்பாண்டம் வனைதலில் அவர்கள் தலைசிறந்து விளங்கினர்.

பண்டைத் திராவிட மக்களிடை நாகரிகம் சிறந்து பரவியிருந்ததற்கு இதைவிட வேறு சான்றும் வேண்டுமோ?





1. Continent. 2. Island. |

  1. 1
  2. 2