கால்டுவெல் ஒப்பிலக்கணம்/031-033

௫. திராவிட மொழிகள் II



தமிழ் :

தமிழ்மொழி தென்னிந்தியாவெங்கணும் பரவியுள்ளது. அதனை ‘அரவ’ மென்று மழைப்பர். மேற்கே மைசூர், மேற்குத் தொடர்ச்சி மலைகள்வரை அம்மொழி பயின்றுவருகின்றது. வடக்கே சென்னைப்பட்டினம் முடியவும் அதற்குச் சற்று அப்பாலும் அது பயின்று வருகின்றது. ஈழமென்னும் இலங்கையின் வடபகுதியிலும் தமிழ்மொழியே நாட்டு மொழியாக இருந்துவருகின்றது. 1901-ஆம் ஆண்டு எடுத்த குடிமதிப்புக் கணக்குப்படி அப்பகுதியிலிருந்த தமிழரின் தொகை 953,535. தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள தொழிலாளர்கள் கூலி வேலைக்காரர்கள்மூலம் ஈழத்தைக் கடந்தும் பல பகுதிகளில் தமிழ்மொழி பயின்று வருகின்றது. இன்னுங் கூறப்புகின், வீட்டு வேலை செய்யும் வேலைக்காார்கள் மூலம் தமிழ்மொழி இந்தியாவெங்கணுமே பேசப்பட்டு வருவதைக் காணலாம். திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவுஞ் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம் மொழியாகும்; சொல்வள மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக் காலமுதற் பயின்று வருவது. வகையும், தொகையும், தனியுமாகக் கணக்கற்ற இலக்கியங்கள் இம்மொழியில் இலங்குகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை யெல்லாம் மிகவுந் திருந்திய செந்தமிழ் நடையானியன்றவை; வழக்காற்றிற் பேசப்பட்டு வரும் கொடுந்தமிழ் நடையானியன்றவையல்ல.

13

மலையாளம் :

மலையாளம் என்பது தமிழிலிருந்து கி. பி. 9-ஆம் நூற்றாண்டிற் கிளைத்துப் பிறந்த புதுமொழியாகும். மேற்குக் கடற்கரையிலுள்ள மலையாள நாட்டிற் பயின்றுவருவது இம்மொழியே. எழுத்து வழக்கில்லாத ஏரவம் என்ற ஒரு மொழி இம்மலையாளத்திலிருந்து கிளைத்துக் குடகு நாட்டின் ஒரு பகுதியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. மலையாள மொழியில் இக்காலத்திற் பெருவாரியாக வட சொற்கள் கலந்து விட்டன; பால் விகுதிகளைப் பயன்படுத்திவரும் முறையை மலையாள மொழி ஏறக்குறையப் புறக்கணித்து விட்டதென்றே சொல்லலாம். இம் மொழியிலும் நூல்கள் எண்ணிறந்தன எழுதப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிற் பண்டு வடமொழியை எழுதக் கற்பித்துக்கொண்ட கிரந்த எழுத்துக்களையே மலையாளமொழி கையாண்டுவருகிறது.

கன்னடம்:

மைசூரிலும், அதனை யடுத்த மலைப் பகுதிகளிலும், பம்பாய் மண்டிலத்தின் தென் மூலையிலும் கன்னட மொழி பேசப்பட்டு வருகிறது. பண்டைப் பெருநூல் வளம் அதற்குமுண்டு. அந் நூல்கள் தெலுங்கு எழுத்துக்களுக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவகை எழுத்துக்களால் இயன்றவை. எழுத்து வழக்கில்லா வடகு, குறும்பு என்ற இரு மொழிகள் இக் கன்னடத்திலிருந்து கிளைத்துள்ளன. இவ் விரண்டும் நீலகிரிப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன. குடகு நாட்டிற் பயின்றுவரும் குடகு மொழியும் இதன் கிளை மொழியேயென்று கூறுவாருமுளர். துளுவ மொழி பயிலும் தென் கன்னடக் கோட்டத்திற்கும், மைசூர்ப் பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இக் குடகுமொழி பயின்று வருகிறது. துதம், கோதம் என்ற இரு திருத்தமில்லா மொழிகள் நீலகிரியைச் சேர்ந்த பகுதிகளிற் பேசப்பட்டு வருகின்றன. இவை சொற்றொகுதிகள் என்று சொல்லுந் தரத்தனவே யன்றி மொழிகள் எனக் குறிப்பிடற் கேற்றவையாகா.


குறுக்கம் அல்லது ஒராவோன்[1] :

சோட்டா நாகபுரியிலுள்ள திராவிட மக்கள் பேசுவது ஒராவோன் என்று அழைக்கப்படும் குறுக்க மொழியே. அது சோட்டா நாகபுரியை யடுத்துள்ள மத்திய மண்டிலப் பகுதிகளிலும் பயின்றுவருகின்றது. தொன்மைசான்ற தமிழ்மொழியுடனும், பழைய கன்னடமொழியுடனும் அதற்குக் தொடர்பிருக்கிறதாகக் கூறலாம். இவ்விரண்டையுந் தவிர்ந்து, திராவிட மொழியினத்தைச் சார்ந்த வேறெம் மொழியுடனும் அதற்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அம்மொழி பேசும் மக்களே தாங்களும், மாலர் என்ற இனத்தாரும் கன்னட நாட்டிலிருந்து வந்து அங்குக் குடியேறியதாக இன்றுஞ் சொல்லிக்கொள்கின்றனர். மாலர்கள் பேசுவது மால்டோ என்ற மொழியாகும்.

மால்டோ :

ஒராவோனினத்தைச் சேர்ந்த இவர்கள், இக்காலை, கங்கை யாற்றின் கரையிலுள்ள இராஜமகாலருகில் அதன் வட பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஒராவோன், மால்டோ ஆகிய இரண்டு மொழிகட்குமே எழுத்து வடிவோ, இலக்கியமோ கிடையா. கோண்டு :

மத்திய இந்தியாவிலுள்ள மலைநாடுகளிற் கோண்டு மொழி பயின்று வருகின்றது. எனினும், அம்மக்களிற் பெரும்பாலோர் ஆரிய மொழியைப் பின்னர் பயின்று அதனையே பேச்சு வழக்கிற் பெரிதுங் கையாண்டு வருகின்றனர். எனவே, உண்மையாகக் கூறுமிடத்துக் கோண்டு மொழி யென்பதைக் திராவிட மொழிக்கும், ஆரிய மொழிக்கும் இடைப்பட்டதொரு கலப்பு மொழியாகவே கூறுதல் வேண்டும். இதன்வழிக் கிளைத்தனவாக எண்ணிறந்த மொழிகளுள; எனினும், அவற்றுள் ஒன்றற்கேனும் எழுத்து வடிவோ, இலக்கணமோ கிடையா.

தெலுங்கு :

தெலுங்கு மொழியே ஆந்திர மொழியினத்தின் தலை சிறந்த மொழியாகும். சென்னை தொடங்கி ஒரிஸ்ஸா வரையிலுள்ள சென்னை மண்டிலத்தின் கீழைப் பகுதி யெங்கணும் தெலுங்கு மொழியே பேச்சு வழக்கிலிருந்துவருகின்றது. நிசாம் நாட்டிலும், மத்திய மண்டிலத் தென்கோடியிலும், பீரார் பகுதியிலும் இஃது ஒருவாறு பயின்றுவருகின்றது. பரந்த இலக்கியவளம் படைத்ததொரு பெருமொழி. தேவ நாகரியையொத்த தனிப்பட்ட வரிவடிவில் இஃது எழுதப் பட்டு வருகின்றது.

கந்தம் :

ஒரிஸ்ஸா மலைகளிலுள்ள கந்தர் பேசுவது கந்த மொழி. இது திருந்தியதொரு மொழியன்று. இதற்குக் கோலாமி என்றதொரு திருந்தாத கிளைமொழியுமுண்டு. இக் கிளைமொழி பீரார்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஒரு சிலரால் பேசப்பட்டு வருகிறது. பிராகுவி :

பிராகுவி ஒரு திருந்தா மொழி. பலூச்சிஸ்தானத்தின் நடுவிலுள்ள மலைப்பகுதிகளில் இது பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறு நெடுந்தொலைவில், தனித்த நிலையில், வந்து தங்க நேர்ந்தமையால் இஃது ஒருசிறிது தடைப்பட்ட தனி வளர்ச்சியை யடைந்துள்ளது. இம்மொழி பேசும் மக்கள் இக்காலத்தில் திராவிட மக்கட்குரிய குழுஉக்குறிகள் யாதொன்றையுங் கொண்டுள்ளவர்களாக வெளிப்படையாகக் காணப்படுகின்றிலர்; எனினும், இவர்கள் திராவிட மக்களினத்தைச் சேர்ந்தவர்களே என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. கலப்பியல்பற்ற பண்டைக் திராவிடர்களாகக் கணக்கிடற்குரியோரில் பிராகுவி மொழி பேசும் இவ்வினத் தாரையே தலைசிறந்தவர்களாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது மொழியாராய்ச்சியாளர்தந் தேர்ந்த முடிபாகும்.

  1. ஆழ்ந்து நோக்கின் ஒராவோன் அல்லது உராவோன் என்பது தமிழ்மொழிக்கு ஒரு பெயராய அரவம் என்பதன் திரிபேபோலும் , அரவம், உரவம், உரவன், உராவன் என்றின்னணம் கொள்க.