கால்டுவெல் ஒப்பிலக்கணம்/033-033

எ. வட இந்திய மொழியினங்கள்


ஆரியர் வருகையால் இந்தியப் பொருநாட்டிற் பண்டு பயின்றிருந்த உள்நாட்டு மொழிகள் பல்வேறு மாறுதல்களை யடைந்தன. அவற்றை யெல்லாம் ஆராய்ந்து சீர்தூக்கி இனம்வகுத்த மேனாட் டறிஞர்கள் ஐம்பெரு மொழியினங் களாக அவற்றைப் பிரித்து முடிவுகட்டினர். ஆரியம், திராவிடம், முண்டா, மான்குமேர், திபேத்தோ-சீனம் என்பனவே அவை. அவற்றுள் மிகவும் தொன்மைவாய்ந்ததாகக் கருதப்படுவது முண்டா மொழியினமே. ஈண்டு ஆரியத்தைப் பற்றிய சில குறிப்புக்கள் தரப்படுகின்றன:

ஆரியம் என்பது, கன்றுகாலிகளை மேய்த்துக்கொண்டு ஊரூராய், நாடு நாடாய்த் திரிதந்து வாழ்க்கையை நடத்தி வந்த ஒரு பெருங்குழுவினரின் திருந்தா மொழியாகும். அக் குழுவினர், பின்னர், வட இந்தியாவினுட் புகுந்து பரந்து தங்கியபோதுதான் அவர்களுடைய மொழியும் திருத்த முற்றுச் சீர்படுவதாயிற்று. அஸ்ஸாமின் கீழைப் பகுதி தொடங்கி பம்பாயை யடுத்த வடகன்னடம் வரை அவர்கள் மொழி பெருகியும் அருகியும் வழங்குவதாயிற்று. தாந்தாம் உறையு மிடங்களிலிருந்த பண்டைய இந்திய மக்களுடன் கலந்து உறவாடிய முறையில் அவர்கள் தங்களுடைய குழூஉச் சிறப்பியல்புகளை ஒருவவிட்டுவந்தாலும், தங்கள் மொழிப்பற்றை மட்டும் அவர்கள் கைவிட்டதில்லை. அதனால், அவ்வத் தொன்மக்களுடைய சொந்த மொழிகள் வழக்கிழந்து போக, இவ்வாரிய மக்கள்தம் மொழியே மேம் பாடுறுவதாயிற்று. திருந்திய ஓர் ஆரிய மொழியுடன் பண்டைய இந்திய உள்நாட்டு மொழி யொன்று தொடர்புற்றுக் கலக்கநேரிட்ட போதெல்லாம், பின்னையதாகிய உள்நாட்டு மொழியே தன் தனிச்சிறப்பிழந்து கேடுறுகின்ற தென்பது மொழி நூலுண்மைகளுள் ஒன்றாகும். வங்தேறிகளாய ஆரியர்கள் உள்நாட்டுப் பண்டை மொழிகளைக் கற்றுப் பேச எளிதில் முன்வருவதில்லை. உள்நாட்டுத் தொன்மக்களோ வெனில் இயல்பான தாராள மனப்பான்மையாலும், கொள்வனே கொடுப்பனைகளினால் நேருங் கட்டாயத்தினாலும் அரையுங்குறையுமாக வந்தேறிகளின் மொழியைப் பேசப் பழகிக் கொள்வார்கள். காலமேறவேற இந்த அரைகுறைப் பயிற்சியே திருத்தமுற்று ஏறக்குறைய முதன் மொழியோடு ஒப்பிட்டுக் கூறத்தக்க நிலையை அடைகின்றது. இந்நிலையில் பண்டைய உள்நாட்டுமொழி சிறிதுசிறிதாகப் புறக்கணிக்கப் பட்டு மங்கி மடிந்து மாய்ந்தொழிகிறது. நன்கு திருத்த முற்றுக் கலையுரம் பெற்றுச் செம்மொழிகளாக வழங்கும் தொன்மொழிகள் நிலவும் தென்னிந்தியப் பகுதி யொன்றில் மட்டுமே ஆரியம் வெற்றிபெற முடியாது தனித்து நின்று தயங்குவதாயிற்று. இது பண்டைய வரலாற் றுண்மையாகும். எனினும், பண்டைய இந்திய மொழியொன்று ஆரிய மொழி வழங்கு மிடத்திற் பரவிக்கலப்புற்று அதனை வழக்கிழக்கச் செய்தது என்பது யாண்டு மில்லை.

இனி, ஆரியமென்பது இந்திய ஐரோப்பிய மொழி யினத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும். அஃது இந்திய-ஆரியமென்றும், ஈரானியமென்றும் இரு பிரிவினது.

ஈரானிய மொழிகள் பேசும் பகுதியினர் பாரஸீகம், பலூச்சிஸ்தானம், ஆப்கானிஸ்தானம் என்னும் நாடுகளில் தங்கி உறைவராயினர். அவ்வாறு பரந்துறைய நேர்ந்தமை காரணமாக அவர்கள் பேசிய மொழிகள் பெர்ஸிக் என்றும், மீடிக் என்றும் இரு பிரிவாகத் தொகுக்கப் பெற்றன. பெர்ஸிக் என்பது இக்காலப் பாரசீக மொழியின் பண்டைப் பெய ராகும். இதுவே முஸல்மான்களின் தாய்மொழி. மீடிக் என்பதோ அவெஸ்தா இனத்தாருக் குரியதாகும்; பஷ்டோ, வேளாக் என்ற இருபெரு ஈரானிய மொழிகளும் அதனுடைய கிளைமொழிகளேயாம்.

இனி இங்கிய—ஆரியத்தை நோக்குவாம். வடமொழி நில நூற்படி இந்தியா “மத்திய தேசம்” அல்லது நடுநாடு என்றும், இதரதேசம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ”மத்திய தேசம்” என்பதே வடமொழி நூல்களில் அடிக்கடி ஆரியர்களின் இந்தியத் தாயகமாகப் போற்றப்பட்டுள்ளதாகும். இதர தேசமாகிய பிறபகுதிகளிலெல்லாம் காட்டுமிராண்டிகள் வசித்து வந்தார்களெனவே “மத்தியதேச” ஆரியர்கள் கருதிவந்தனர். இந்த “மத்திய தேசம்” என்பது வடக்கில் இமயத்தையும், தெற்கில் விந்தியத்தையும், மேற்கில் கீழைப் பஞ்சாபையும், கிழக்கில் கங்கை யமுனைக்கூடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு பெரும் பகுதியாகும். இப்பகுதியினர் பேசிவந்த மொழி செளரசேனி என்ற பண்டைப் பாகதமாகும். இச் செளரசேனி இந்தி மொழியின் பெரும்பகுதியாகிய மேலை இந்திக்குத் தாய் மொழியாம். இந்திய-ஆரிய மொழியினத்தைச் சேர்ந்த இச்செளரசேனியே பின்னர் “மத்திய தேசத்” திருந்திய ஆரிய மொழியாக மாறுதலடைந்தது. அதுவே, மேலும் மேலும் செம்மை செய்யப்பட்டு முறையான இலக்கண அமைப்புடையதாகப் பின்னர் மாறியதன் காரணத்தால், சமஸ்கிருதம் (அல்லது செம்மை செய்யப்பட்டது) என்று பெயர் பெறுவதாயிற்று. இச்செம்மைப்பாடு கி.மு. 300-ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பாணினி இலக்கணத்தில் உருப்பெற்றது. எனவே, கற்றோரால் இலக்கண முறைப்படி திருத்திச் செம்மை செய்யப்பெற்ற ஆரியப் பாகதங்களே “சமஸ்கிருதம்” என்பது ஒருவாறு விளங்கும். அன்றியும், பண்டைய ஆரியமொழிகளும், பண்டைய இந்திய உள்நாட்டு மொழிகளை யொப்பத் திருந்தா மொழிகளே யாம் என்பதும் விளக்கமுறும். இதனால் திருத்தஞ் செய்யப்பெற்றுப் புத்துருக் கொண்ட ”சமஸ்கிருத” மொழியி னின்றும் வேறெம் மொழியுங் கிளைத்திருக்க முடியா தென்பது தெளிவு; குறிப்பிட்ட ஒரு மொழியும் வடமொழியாகிய ”சமஸ்கிருத” மும் ஒரே பண்டைய மொழியி லிருந்து பிறந்து பிரிந்தவை என்று வேண்டுமானால் வலிந்து கூறிக்கொள்ளலாம்.

”மத்திய தேச”த்திற்கு மேற்கிலும் தென்மேற்கிலும் வந்துறைந்த ஆரியர்கள் பேசிவந்த மொழிகள் காஷ்மீரி,[1] கோஹிஸ்தானி[2], லஃண்டா[3], சிந்தீ[4] என்பனவாம். இவ்விரு திறத்தாருக்கு மிடையே வசித்துவந்த மக்கள் இம்மொழிச் சொற்களைத் தத்தம் சொந்த மொழிகளுடன் கலந்து பேசி வந்தனர்; அதனால், அம்மொழிகள் பின்னர்த் தனியுருவேற்றுத் தனிப் பெயர் பெறுவவாயின. இராஜஸ்தானி[5], பஹாரி[6], குஜராத்தி[7], பஞ்சாபி[8] என்பன அம்மொழிகளாம்.

இனி, தொகை மிகுதியாலும், மண்ணசையாலும் ”மத்திய தேச”த்திலும், அதன் மேலைத் திசையிலுமிருந்த ஆரிய மக்கள் கிழக்கிலும், தென்கிழக்கிலும் நாளாவட்டத்தில் பரவி அங்குள்ள மக்களுடன் உறைவாராயினர். அதனால் ஆங்காங்கிருந்த மொழிகள் ஆரியமொழிக் கலப்புற்றுத் தத்தம் தனிச் சிறப்பைச் சிறிதுசிறிதாக இழக்கலாயின. மேற் கூறியாங்கு ஆரிய மொழித் தாக்கை நேரே எதிர்த்துநின்று தம் தலைமை இழவாமலிருந்த மொழிகள் தென்னிங்கியத் திராவிட மொழிகளேயாம். அதிலும் இன்றளவும் புறங் கொடுக்காது உயர்தனிச் செம்மொழியென்று மொழியாராய்ச்சி வல்லுநராற் புகழ்ந்து போற்றப்பெறும் பெருமையுடன் திகழ்வது முன்னைப் பழைய மொழிகட்கும் முன்னைப் பழைய மொழியாகிய சீர்சால் தமிழ்மொழியொன்றே!

இந்திய ஆரிய மொழியினத்திற்குரிய புள்ளி விவரங்கள் பின்வருவனவாம்:-

பேசுபவர் தொகை (1901-ஆம் ஆண்டு)

I "மத்தியதேச" மொழி:
மேலை இந்தி

40,714,925

II இடைப்பட்ட மொழிகள்:
(i) ”மத்திய தேச” மொழித் தொடர்புடையன:
இராஜஸ்தானி

10,917,712

பஹாரி மொழிகள்

3,124,681

குஜராத்தி

9,439,925

பஞ்சாபி

17,070,961

(ii) மத்தியதேச மொழித்தொடர்பு அருகியன:
கீழை இந்தி

22,136,358

III ”பிறதேச” மொழிகள்

22,136,358

(i) வடமேற்குத் தொகுதி:

22,136,358

காஷ்மீரி

1,007,957

கோஹிஸ்தானி

36

லஃண்டா

3,337,917

சிந்தீ

3,494,971

(ii) தென் தொகுதி :
மராத்தி

18,237,899

(iii) கீழைத் தொகுதி:
பிஹாரி 

34,579,844

உறியா

9,687,429

வங்காளி

44,624,048

அஸ்ஸாமீஸ்

1,350,864


மொத்தம்

||

219,725,509


  1. Kashmiri
  2. Kohistani
  3. Lahnda
  4. Sindhi
  5. Rajasthani
  6. The Pahari
  7. Gujarati
  8. Panjabi