காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்/செறிவான செய்யுட்கள்

7.செறிவான செய்யுட்கள்

இந்தப் பகுதியிலே விளங்கும் பாடல்கள் பலவும், கவிஞர் தனித்த சமயங்களிலே தனிப்பட்ட செய்திகளையும் மனிதர்களையும் போற்றியும் பழித்தும் பாடியவையாகும். இவற்றுள் கவிஞரின் சிறந்த புலமை நலத்தினையும் சொற்சுவையோடு பொருட்சுவையும் பொருந்தக் கவியியற்றும் திறத்தினையும் காணலாம்.

விழி வேல்

தாசி கமலாட்சி என்பவள் கவிஞருக்கு வேண்டியவளாக இருந்தாள். ஒரு சமயம் அவளுக்கு மருந்து வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றார் காளமேகம். கடைக்காரச் செட்டியின் பெயர் பெற்றான் செட்டி. அவன் கடையடைப்பித்துத் தன்னைப் பாடினால்தான் மருந்து தருவதாகச் சொல்லக் கவிஞர் அப்போது பாடியது.



முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும்
கற்றான்பின் சென்ற கருணைமால்-பெற்றான்றன்
ஆலைப் பதித்தா ரளகத்தி யாட்கயனார்
வேலைப் பதித்தார் விழி. (170)

"என்றும் முடிவு பெறுதல் என்பதில்லாத காஞ்சிபுரத்திலும், காட்டுப் பகுதியான முல்லை நிலத்திலும், பாலை நிலத்தினும் கற்றான் பின்னே சென்ற கருணையினை உடையவன் திருமால்."

"அவனைப்போன்ற கருணையுள்ள, இந்தக் கடற்கரைப் பட்டினத்தே யுள்ளவனான இந்தப் பெற்றான் செட்டியின் நீண்ட கூந்தலையுடைய மனைவிக்குப் பிரமதேவர் வேலாயுதத்தினையே கண்ணாகப் படைத்துள்ளனரே! என்னே சிறப்பு அது!"

'கற்றான்' என்ற சொல்லுக்குப் படித்தவன் எனவும், கன்றையுடைய பசுவெனவும், முனிவன் எனவும் பொருள் 'கற்றான்' பின்சென்ற திருமால்' என்பதனை இம்மூவகைப் பொருள்களுடனும் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.

காஞ்சியிலே திருமால் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு திருமழிசையாரின் பின்னாகச் சென்றதையும், காட்டிலே கண்ணபிரானாகப் பசு மேய்த்தவனாகச் சென்றதையும், பாலையிலே விசுவாமித்திரனைப் பின்தொடர்ந்து இராமனாகச் சென்றதனையும் இவை குறிக்கும். அளகம் - கூந்தல், தார் அளகம் - தாரையுடைய அளகமும் ஆம்; தார் - பூமாலை.

சரிந்த தனம்!

பெற்றான் செட்டியின் மனைவிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அப்போது கவிஞர் பாடிய செய்யுள் இது.


கஞ்ச முகையும் களிற்றானை யின்கொம்பும்
அஞ்சுமுலை நாலுமுலை யானதுவும்-மிஞ்சுபுகழ்
பெற்றான்தன் மாலை பிறர்களித்த துங்குதலை
கற்றான் பிறந்தபின்பு காண். (171)

"தாமரையின் மொட்டும், களிற்று யானையின் கொம்பும், தாம் உருவினாலே ஒப்பாக மாட்டோம் என் அஞ்சி ஒதுங்கி நிமிர்ந்த இவளின் கொங்கைகள் தொங்கு முலைகளாக மாறிப் போயினதும், நிறைந்த புகழுடைய பெற்றான் செட்டி தன் ஆசையைப் பிறருக்கு அளித்ததும் எல்லாம், மழலை கற்றவனாகிய இந்தக் குழந்தை வந்து பிறந்ததன் பின்னரே என்று அறிவாயாக."

கஞ்சம் - தாமரை முகை - மொட்டு தாமரை மொட்டும், களிற்றுயானைக் கொம்பும் நிமிர்ந்த இளங் கொங்கைகட்கு உவமையாயின. மகன் பிறந்ததனால் முலை தொங்கிப் போன தன்மையினை, 'நாலு முலை' என்றனர்.

அவன் வேற்றுப் பெண்ணைச் சுற்றித் திரிவதைக் கண்டு பாடியது இதுவெனவும் கொள்ளலாம். அல்லது, அவனுடைய புதிய வேசையுறவினைக் குறித்து எச்சரித்துப் பாடியதும் ஆம்.

கழுதைக் குரல்!

நாகையிலே, ஒரு தாசி மிகவும் கர்ணகடூரமான குரலிலே பாடினாள். சகிக்க முடியாத அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த கவிஞரிடம், 'பாடல் எப்படி?' என்று ஒருவர் கேட்டுவிட்டார்! அப்போது பாடியது இது.


வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள்-நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண் டேனென்று
பழுதையெடுத் தோடிவந்தான் பார். (172)

"வாழ்வு சிறந்த அழகிய நாகைப் பட்டினத்திலே, உடற்கட்டுள்ள இந்தத் தாசியானவள், தன் பாழான குரலினாலே உரக்கப்பாடினாள். நேற்றுத் தன் கழுதையைப் போக்கடித்துவிட்ட வண்ணான், "கண்டேன்! கண்டேன்" என்ற சொல்லியவனாக, ஒரு தடியையும் கையில் எடுத்துக் கொண்டவனாக, இவ்விடத்திற்கு ஓடோடியும் வந்தான். இந்த வேடிக்கையைப் பாருங்கள்.

'அவளுடைய குரல் கழுதையின் கத்துதலுக்குச் சமமாயிருந்தது' என்று சாதுரியமாகப் பழித்தனர் கவிஞர். அவள் வெட்கித் தலை கவிழ்ந்தாள். கவிஞரை அபிப்பிராயம் கேட்ட வரும் அவளைத் தொடர்ந்தனர்.

நான்கு வகை நயனம்

மதுரையிலே, 'கூத்தாள்' என்றொரு தாசி இருந்தாள். கவிஞரிடத்தே மிகவும் அன்பு கொண்டவள் அவள். அவள் கண்களையும், அவள் தமக்கை, தாய், பாட்டி ஆகியோரின் கண்களையும் இப்படிக் கூறிச் சிறப்பிக்கிறார் கவிஞர்.


கூத்தாள் விழிகணெடுங் கூர்வேலாம் கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்-மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம் ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண் டம்பு. (173)

கூத்தாள் என்பவளின் விழிகள் இரண்டும் நெடிதான கூரிய வேல்முனையைப் போன்றன; கூத்தாளுடைய மூத்தாளின் விழிகள் முழுநீலத் தன்மையுடைய நீலோற்பல மலர் போன்றன; மூத்தாளின் ஆத்தாளுடைய கண்கள் தாமரைப் பூப் போன்றவை; அந்த ஆத்தாளின் ஆத்தாளுடைய கண்களோ இரண்டு அம்புகளைப் போன்றவை.

கோட்டானைக் கொடு!

தெருவில் நின்ற ஒரு சிறுவனைக் கவிஞர் அன்புடன் பார்க்க, அச்சிறுவனின் தாயாருக்குத்தன் மகன்மீது திருஷ்டி, தோஷம் பட்டுவிடப்போகிறதே என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது. 'உன்னைக் கொடுக்க' என்ற, அவள் கைந் நெறிக்கக் கவிஞர்சினங் கொண்டு இவ்வாறு பாடுகின்றார்.


என்னைக் கொடுத்தா லிரக்கமுனக் குண்டாமோ
வன்னக் கமலமுக வல்லியே-துன்னுமதக்
காட்டானைக் கோட்டுமலைக் காரிகையே நீபயந்த
கோட்டானைத் தானே கொடு. (174)

"அழகிய தாமரை மலரினைப் போன்ற முகத்தினை உடையவளே! மிக்க மதம் பொழியும் காட்டு யானையின் கொம்பினைப் போன்ற தனங்களையுடைய அழகியே! என்னைச் சாகக் கொடுப்பதனால் உனக்கு எத்தகைய இரக்கமும் என்னிடத்தே உண்டாகுமோ? அதனால், நீ பெற்ற கோட்டான் இருக்கிறதே, அதனையே எமனுக்குக் கொடுப்பாயாக, அப்போது தான் உன் செருக்கு அடங்கும்."

'திருஷ்டி தோஷம் பட்டால் சிறுகுழந்தைகள் நோயுற்று மடிந்துவிடும்' என்றொரு நம்பிக்கை. அந்தத் திருஷ்டிக்கு உடையவரைக் குறித்து கைநெறித்தால் அந்தத் தோஷம் அவரைத் தாக்கி அழித்து விடும், குழந்தைக்கு ஆபத்தில்லை என்பதும் ஒரு நம்பிக்கை. இவற்றினால் வந்துற்றதே தாயின் கைந்நெறிப்பும் சொல்லும் ஆகும். அவள் பேதைமையைச் சுட்டிக்கவிஞர் பாடிய செய்யுள் இது. கோட்டான் - கோட்டான் போன்ற பிள்ளை எனவும் பால் குடித்துக் கொண்டிருக்கும் பாலன் எனவும் பொருள்படுவதாகும்.

மாதம் காதவழி

ஆயக்காரனான விகடராமன் என்பவன், தன் குதிரையைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டிருந்தான்! அவனையும் அவன் குதிரையையும் ஏளனஞ் செய்து கவிஞர் பாடியது இச் செய்யுள்.


முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்கப்
பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள-எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை
மாதம்போம் காத வழி. (175)

"முன்புறத்திலே கடிவாளத்தைப் பற்றி மூன்றுபேர்கள் இழுத்துக்கொண்டு போகவும், பின்புறமாக இருந்து இரண்டு பேர்கள் தள்ளிக்கொண்டு போகவுமாக எப்பொழுதும் வேதஒலி வெளிப்படும் வாயினனான விகடராமனின் குதிரையானது, ஒரு மாதத்தில் காதவழியினைக் கடந்து விடும் வேகத்தை உடையதாகும்." காதம் - பத்து மைல்"

ஏற்ற மா!

வேங்கட்டன் என்பவர் ஆமூரில் இருந்தவர். அவருடைய குதிரையைப் புகழ்ந்து பாடியது இச்செய்யுள். இவர் முழுப்பெயர் திருவேங்கட முதலியார் ஆகும்.


ஆறும் பதினாறு மாமூரில் வேங்கட்டன்
ஏறும் பரிமாவே யேற்றமா-வேறுமா
வெந்தமா சும்மா வெறுமா களிகிளற
வந்தமா சந்துமா மா? (176)

"ஆற்றுப் பாய்ச்சலும், பதினாறு பேறுகளும் மலிந்துள்ள ஆமூரிலே, வேங்கட்டன் என்பவன் ஏறிச் செலுத்துகின்ற குதிரையே மிகவுஞ் சிறந்த குதிரையாகும். வேறு குதிரைகள் எல்லாம் வெந்த மா, சும்மா, வெறுமா, களி கிளற வந்த மா என்ற சொற்களிலே பயின்று வரும், 'மா' என்ற சொல் எங்ஙனம் குதிரையைக் குறிக்காதோ, அதுபோலவே குதிரைகளாகக் கூறத் தகுந்தன வாகா"

பதினாறு பேர்கள்!

"பதினாறும்பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாய்" எனப் பலரும் வாழ்த்துகிறார்கள். அவை எவை என்பதனைக் கூறுவது இச் செய்யுள்.


துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம்
அதிதானியஞ் செளபாக்கியம் போக - வறிவழகு
புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது
பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபானே. (177)

மதுரைப் பராபரனே - மதுரைப் போரூரிலே கோயில் கொண்டிருக்கின்ற பரம்பொருளே! துதி - புகழ் (1) வாணி - கல்வி (2), வீரம் - மனவுறுதி (3), விசயம் - வெற்றி (4), சந்தானம் - மக்கட்பேறு (5), துணிவு - தைரியம் (6), தனம் - செல்வம் (7), அதி தானியம் - அதிகமான தானியவளம் (8), செளபாக்கியம் - சிறந்த இன்பம் (9), போகம் - நல்ல அனுபோகம் (10), அறிவு - ஞானம் (11), அழகு-பொலிவு (12), புதிதாம் பெருமை-புதுவதாக வந்து நாளுக்கு நாள் சேர்கின்ற சிறப்பு (13), அறம்- அறஞ்செய்யும் பண்பு (14), குலம் - நல்ல குடிப்பிறப்பு (15), நோவகல் பூண்வயது - நோயில்லாமையோடு கூடியமைந்த நீண்ட ஆயுள் நலம் (16) என்ற பதினாறு பேறும் - என்று சொல்லப் படுகின்ற இந்தப் பதினாறு பேறுகளையும், தருவாய் தந்து எனக்கு அருள் செய்வாயாக,

அறிவிப்பார் இல்லையே!

தெருவிலே கீரை விற்றுக் கொண்டு போனாள் ஒருத்தி. அவளின் அழகினை வியந்து கூறிய செய்யுள் இது.


வெள்ளை யானேறும் விமல ரடிபணியும்
பிள்ளையான் வாழும் பெருந்தெருவில்-வள்ளை
இலைக்கறிவிற் பாண்மருங் குலிற்றுவிடு மென்று
முலைக்கறிவிப் பாரிலையே முன். (178)

"வெள்ளையான காளையின்மீது எழுந்தருளுகின்ற விமலனார் சிவபெருமான். அச் சிவபிரானின் திருவடிகளைப் பணிகின்றவன் பிள்ளையான். அவன் வாழுகின்ற பெருந்தெருவிலே, வள்ளைக் கொடியின் இலையைக் கறி சமைப்பதற்காக விற்கிறவள் இவள். இவளுடைய இடையானது சுமை தாளாமல் இற்றுவிடும் என்று, இவளுடைய பருத்த தனங்களுக்கு இவள் முன்னே போய் எடுத்துச் சொல்லுபவர் இவ்விடத்தில் எவரும் இல்லையே?"

பிள்ளையான் - பிள்ளையன், காவை வடமலையப்ப பிள்ளையன் என்றாற்போலத் தலைமைப் பட்டம்.

இரவு பட்ட பாடு

தமிழறியாத தாசி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றதனைப் பற்றி வேடிக்கையாகக் கவிஞர் கூறிய செய்யுள் இது.


ஏமிரா வோரியென்பா ளெந்துண்டி வஸ்தி யென்பாள்
தாமிராச் சொன்ன வெல்லாம் தலைகடை
தெரிந்ததில்லை
போமிராச் சூழும் சோலைப் பொருகொண்டைத் திம்மிகையில்
நாமிராப் பட்டபாடு நமன்கையிற் பாடுதானே. (179)

'ஏமிரா வோரி' (என்னடா, அடே) என்பாள், 'எந்துண்டி வஸ்தி' (எங்கிருந்து வருகின்றாய்) என்பாள், இரவு அவள் இப்படிச் சொன்னதெல்லாம் தலை கடை எதுவும் நமக்குத் தெரிந்தவாக இல்லை. கழியும் இரவு சென்று அடர்கின்ற சோலையினைப் போன்றதாக விளங்கும் கொண்டையினையுடைய திம்மி என்பவளிடத்திலே, நாம் இவ்வாறாக இரவெல்லாம் பட்டபாடு, எமனிடத்திலே சிக்கினவர் படுகின்ற பெரும்பாடு போன்றதே யாகும்.

வீறாப்பு ஏன்?

கிழத்தாசி ஒருத்தி, காளமேகத்தை இழிவாகப் பேசினாள். அப்போது அவர் சொன்னது இச் செய்யுள்.


இந்து முடிக்கும் சடையாளர்
        இருக்கும் தொண்டை வளநாட்டில்
சிந்து படிக்கக் கவிபடிக்கத்
        தெரியா மடவா யுன்றனுக்குக்
கெந்தப் பொடியேன் பூமுடியேன்
         கிழமாய் நரைத்து முகந்திரைந்தும்
இந்த முறுக்கேன் வீறாப்பேன்
         எடுப்பே னுன்னைக் கெடுப்பேனே. (180)

"சந்திரனைத் தரித்த சடையினரான சிவபிரான் கோயில் கொண்டிருக்கும் இத் தொண்டைவள நாட்டிலே, சிந்து படிக்கவும் கவிபடிக்கவும் அறியாத மடமையினை உடையவளே! உனக்கு வாசனைப் பொடிதான் எதற்காக? பூ முடிப்பும் எதற்காக? கிழமாக நரைத்து முகமும் திரைந்து போன பின்பு இந்த எடுப்பும் எதற்காக? உன்னை யான் அழித்தே விடுவேன். அதனையும் காண்பாயாக!"

கலகம் தெளிந்தபின்

ஒரு தாசி வீட்டிற்குச் சென்றனர் கவிஞர். அவள் கதை சொல்லும்படியாகக் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தனள். அப்போது இப்படிக் கூறுகின்றார் கவிஞர்.


சேரமான் புறப்படத் தென்றலும் வீசத் தூயிலொழிய
யாமங்க டோறும் குயில்வந்து கூவிடவந் நேரத்திலே
நாமும் பிழைத்து மனிதர்முன் பேசிட நாமுமுண்டாய்க்
காமக்கலகந் தெளிந்தபின் னானும் கதை சொல்வனே.
(181)

"நிலவும் வானத்தே எழுந்து தோன்றத் தென்றலும் வந்து வீசத், துயிலும் இல்லாமற்போக யாமங்கள்தோறும் குயில் வந்து கூவிக்கொண்டிருக்க, அந்நேரத்திலே நானும் அவற்றால் எழும் விரகவேதனைக்குத் தப்பிப் பிழைத்து மனிதர்கள் முன்பாகப் பேசுவதற்கு ஏற்றபடி வாழ்ந்தும் இருந்தால், இந்தக் காமக்கலகம் தெளிவுற்ற பின்னர், யானும் நினக்குக் கதை சொல்லுகின்றேன்."

பொழுதை வீணடிக்க அவள் புரிந்த சாகசத்தை உணர்ந்துகொண்டவர் கவிஞர், அதனால் இவ்வாறு கூறி, அவள் எண்ணத்தைத் தாமும் அறிந்த வகையைக் காட்டினர் என்க.

சோமியின் அழகு

ஆற்றூரிலே 'சோமி' என்றொரு தாசி இருந்தாள். அவள் அழகு மிகுந்தவள். அவளுடைய அழகை வியந்து, கவிஞர் கூறிய செய்யுள் இது.


ஆராயு முத்தமிழாற் றூரிற்சோமி யழகுகண்டு
நாராயணனெடு மாலாகினான் மற்றை நான்முகனும்
ஓராயிரமட லூர்ந்தான் வின்மார னுருவழிந்தான்
பேரான வானவர் கோனும்கண் ணாயிரம் பெற்றனனே. (182)

"இயலிசை நாடகமென்ற முத்தமிழையும் ஆராய்கின்ற சிறப்புடையது ஆற்றுார். அந்த ஆற்றுாரிலேயுள்ள சோமி என்பவளின் அழகினைக் கண்டதும் நாராயணன் நெடுமாலாக ஆகினான்! அஃதன்றி நான்முகனும் ஓராயிரம் மடல் ஊர்ந்தான்: கருப்பு வில்லியான மாரனோ தன் உடனே அழியப் பெற்றான். புகழ்பெற்ற வானவர் கோமானோ ஆயிரங் கண்களைப் பெற்றவனானான்."

நெடுமால் - நீண்ட மேனி: பெரிதான மயக்கம். ஓராயிரம் மடல் ஏறல் - ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையிலே வீற்றிருத்தல்: ஆயிரமுறை மடலூர்தல், உருவழிதல் - உடல் மெலிதல்:சாம்பராதல்.

'தேவர்களையும் நனியச்செய்த பேரழகினை உடையவள் அவள்' என்று பாராட்டுகின்றனர் கவிஞர்.

இரு பாகற்காய்!

இஞ்சிகுடி என்னும் ஊரிலே ஒரு தாசி இருந்தாள், அவள் பெயர் கலைச்சி. அவள், கவிஞரைப் பாராட்டாது ஏளனஞ் செய்ய அவர் பாடிய வசை இச்செய்யுள்.


ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய்
வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே-தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. (183)

"தேய்ந்த குழல் முக்கலச்சிக்கும் பிடிக்கும் மூதேவியாள் - பாறிப்போன தலைமயிரிலும் முக்கலம் அளவிற்குச் சிக்குப் பிடித்திருக்கும் மூதேவி போன்றவளான தன்மையுடையவள்; கமலைக் குக்கல் இச்சிக்கும் கலைச்சிக்கு - திருவாரூர்த் தெருநாய் மட்டுமே விரும்பி அணுகக் கூடியவள்: அத்தகையவளான இந்தக் கலைச்சி என்பவளுக்கு, ஏய்ந்த தனங்கள் இரண்டும் இரு பாகற்காய் - அமைந்த தனங்கள் இரண்டுமோ என்றால், இரண்டு பாகற்காய்களைப் போன்று ஒட்டித் தொங்குவனவாம்: வாய்ந்த இடை செக்கு உலக்கை மாத்திரமே - பொருந்திய இடையோவென்றால் செக்கு உலக்கையின் அளவேயாகும்?"

இதனால், கலைச்சியின் அழகை எல்லாம் இழித்துப் பழித்தனர் என்க.

பாணம் தொடுப்பானோ?

கவிஞர் பாடிய வகையினைக் கேட்டனள் கலைச்சியின் தாயார். அவள் அதனால் வருத்தமும் அடைத்தாள். தன் மகளைக் கடிந்ததுடன், அவளை மன்னித்தருளவும் கவிஞரை வேண்டிக் கொண்டாள். கவிஞரும் அப்போது கலைச்சியின் சிறப்பை வியந்து இப்படிப் பாடுகிறார்.


நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னிலும்வந் தெய்வானோ-விஞ்சு
முலைச்சிகரத் தாலழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தாலணைந்தக் கால். (184)

"விஞ்சுமுலைச் சிகரத்தால் அழுத்தி முத்தமிட்டு - பருத்துப் புடைத்த தன் தனக்காம்புகளினாலே அழுத்தி முத்தமிட்டு, கலைச்சி கரத்தால் சற்றே அணைந்தக்கால் - கலைச்சி என்பவள் தன் கரங்களாலே சற்று நேரம் அணைத்த விடத்து, மதன் - மன்மதனானவன், நஞ்சு எடுத்துகுடி கொண்ட கணை நாலுந் தெரிந்து இஞ்சுகுடி தன்னிலும் வந்து எய்வானோ?" - நஞ்சினை நிலையாகக் கொண்டிருக்கும் மலரம்புகள் நான்கினையும் ஆராய்ந்தெடுத்து இஞ்சிகுடி என்கின்ற இவ்வூரிலும் வந்து என்மீது எய்வானோ?” அங்ஙனம் எய்யவேண்டிய வேலை அவனுக்கு இல்லை என்பது கருத்து.

தாமரை முல்லை மா அசோகம் நீலம் என்னும் ஐந்து மலர்க் கணைகளுள் நெஞ்சில் அரவிந்தமும், நீள்குதம் கொங்கையினும், துஞ்சும் விழியில் அசோகமும், சென்னியிலே முல்லையும், அல்குலிலே நீலமுமாக எய்வது மாரனின் மரபு. 'நாலும்' என்றதனால், ஐந்தாவதான நீலத்தை எய்தலை நாடி, அவளைக் கூடுதலையும் விரும்பினார் கவிஞர் என்க.

சத விகரம்

பெண்ணைப் பற்றிய ஒரு சண்டையிலே, சகோதரர் சிலர் மாண்டுவிட, அவர்களின் அறியாமைக்கு இரங்கிக் கவிஞர் கூறிய செய்யுள் இது.


வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும்-சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவு மையோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு. (185)

'வாலி' என்பவன் முன்னாளிலே மடிந்ததுவும், வல்லமையுள்ள அரக்கர்கள் அந் நாளிலே இறந்ததுவும், அழகிய முடி மன்னர்கள் பலர் போரிலே வெட்டுண்டதுவும், மிகுந்த அறிவினையுடையவரான துரியோதனாதியர் மாண்டதுவும் எல்லாம், ஐயோ! சதவிகரத்தால் (சதியால் - பெண்ணைப் பற்றிய செயலால்) வந்துற்ற வீழ்ச்சியே!

துரியோதனாதியர் நூற்றுவரே என்னும், நூற்றொருவர் என்கிறார் கவிஞர். இது குந்தி புத்திரனான கர்ணனையும் சேர்த்துச் சொல்லியது.

சத விகரம் என்பது சகரம் எனவும், தகர இகரம் பிரிவுபடும். ஆதலால் சதி என்றனம்! மதியுடைய என்ற சொல், சிறந்த ஆன்றோரைத் துணையாகவுடைய எனவும் பொருள்படும். 'நூற்றுவர்கள் மாண்டதுவும்' எனவும் பாடம்; சதி விரகம் - பிறருடைய மனைவிமேற் கொள்ளும் காமம்.

புனத்தோடு இரங்கல்

தலைவி, இல்லத்தினரால் இற்செறிக்கப்பட்டனள், அதனை அறிந்த தலைவன் புனத்தினை நோக்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இது.


கம்பத்தா னைக்கடையிற் கட்டினான் கால்சாய
அம்பைத்தா வித்தான்கா லானதே-வம்புசெறி
இவைகாள் கிள்ளைகள் பூங்குயில்கா ளன்றில்காள்
பாவையா ளாண்ட பதி. (186)

'புதுமைச் செறிவுடைய பூவைகளே! கிளிகளே! அழகிய குயில்கள்! அன்றில்களே! பொற்பாவை போன்ற என் காதலியாள் ஆட்சி செய்துகொண்டிருந்த இந்த இடமானது-

பத்துத் தலையினையுடைய இராவணனைத் தன் வாலிலே கட்டியவனான வாலியானவன் காலற்றுச் செத்து விழுமாறு அம்பைச் செலுத்தின இராமனின் பாதமாக (அரிதாளாக) ஆகிவிட்டதே? இனி என்ன செய்வேன்?"

தினையறுத்த பின்னர் அவள் வரவும் நின்றது; அந்தத் தினைப்புனத்திலே விளங்கிய அரிதாளைக் கண்டு இப்படி நோகின்றான் தலைவன்: அரிதாள் - கதிர் அரியப்பட்ட பின் விளங்குகின்ற தாள். காலற்று - மூச்சற்று.

வெறி விலக்கல்

ஒரு பெண் காதல் நோயினாலே உடல் மெலிந்தாள். அவள் தாய் தெய்வக் குற்றம் என்று அதனைக் கருதினாள், தெய்வத்துக்கு பலியிட்டுப் போற்றவும் முற்பட்டாள். அப்போது, மகள் தோழியிடத்திற் கூறுகிற பாங்கிலே அமைந்த செய்யுள் இது.


முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில்
ஒன்றரிந்தா லாகுமோ ஓஓ மடமயிலே
அன்றணைந்தான் வாராவிட் டால்! (187)

"முந்நான்கில் ஒன்று உடையான் - பன்னிரு இராசிகளிலே ஒன்றான மீனைத் (மகரம்) தன் கொடியாக உடையவனான மன்மதன், முந்நான்கில் ஒன்றெடுத்து - பன்னிரு இராசிகளிலே ஒன்றான (தனுசு) வில்லினை எடுத்து, முந்நான்கி லொன்றின்மேல் மோதினான். பன்னிரு இராசிகளில் ஒன்றாகும் கன்னியாகிய என்றன்மீது மோதி விட்டனன், ஓஓ! அழகிய மயிலனைய தோழியே! அன்றணைதான் வாராவிட்டால் அந் நாளிலே என்னைத் தழுவிய என் காதலன் வாராவிட்டால், முந் நான்கில் ஒன்று அரிந்தால் ஆகுமோ? - பன்னிரு இராசிகளுள் ஒன்றான மேடத்தை (ஆட்டை) அரிந்து பலியிட்டால் மட்டும் என் நோய் நீங்கிப் போகுமோ? நீங்காது என்பது கருத்து.

குட்டிச் செட்டி!

குட்டிச்செட்டி என்றொருவன் கவிஞரை அவதூறாகப் பேசி ஏளனம் செய்தபோது, அவன் சொல்லிய ஆயிரம் யானை என்ற சொல்லை அமைத்து, அவனை அவமானப் படுத்தும் வகையிலே, கவிஞர் செய்த செய்யுள் இது. எட்டிகுளம் கிராமத்து அதிபதியான ஒரு பிரபு, புலவர்க்குக் கொடுக்கும் பரிசினைக் குட்டிச் செட்டி என்பவன் மறுத்துத் தனக்கும் பாகந் தராமையால், அப்புலவர்களுக்கு விரைவில் பரிசளிக்காமல் துன்புறுத்தி வந்தான். அதனைப் புலவர்கள் உரைக்கக் கேட்டுக் கவிஞர் இச்செய்யுளைச் சொன்னார். சொன்னதும், அந்தக்குட்டிச் செட்டியின் மகள் துன்பத்துக்கு உள்ளாக, அவன் நடுங்கிப் பணிந்து புலவர்களைப் போற்றினான். அவன் மகள் துயரமும் நீங்கியது. இது இச்செய்யுளின் வரலாறாகக் காணப்படுவது.


எட்டி குளத்திலிருந்து சரக்கு விற்கும்
குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய்-நொட்டுதற்கே
ஆயிரம் யானை யெழுநூறு கூன்பகடு
பாயும் பகடேண்பத் தைந்து. (188)

இதன் பொருள் வெளிப்படை, அவன் தன் மகளையே கெடுத்த கொடியவன் என்று பழிக்கிறார்.

ஒருத்தி போட்டாளே!

கும்பகோணத்திலே, ஒரு சமயம் ஒரு பெரிய சோறுட்டு விழா நடந்தது. அந்தச் சோறுட்டு விழாவிற் காளமேகமும் கலந்து கொண்டார். பந்தி பந்தியாக அமர்ந்து அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நிகழ்ச்சி நடந்தது.

தலையின் முன்புறத்திலே குடுமிவைக்கும் வழக்கமுடைய ஒருவன், கவிஞருக்கு அருகிலேயே இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய குடுமிதிடுமென அவிழ்ந்து இலையிலும் போய் விழுந்தது. தன் தலைமயிரை எடுத்து அவன் உதறவே, எச்சிற் பருக்கைகளுள் சில காளமேகத்தின் இலையிலேயும் போய் விழுந்தன. அதனால் அவனை இப்படிப் பாடி நிந்திக்கிறார் கவிஞர்.


சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா புலையா-திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய். (189)

"கட்டவிழ்ந்து போன முன் குடுமியினையுடைய சோழியனே! சோற்றுப்பொருக்கு காய்ந்து அகலாதே ஒட்டிக் கொண்டிருக்கும் வாயனே! இழிந்தவனே! திருக்குடந்தை நகரின் கோட்டானே! நாயே! குரங்கே! ஒருத்தி, வேறு வேலையற்றுப் போய் உன்னையும் ஒரு பிள்ளையாகப் பெற்றுப் போட்டாளே? அவளை எப்படி நொந்து கொள்வது?"

சுருக்கு-தலைமுடியை அள்ளிச் செருகும் தன்மை. பொருக்கு - காய்ந்துபோன பருக்கைகள். கோட்டான் - ஆந்தை.

இந்தச் செய்யுள் அடியிற் கண்டபடியும் வழங்கும்.


சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தை
நாயா நரியாவுன் னாய்முகமும் சேய்வடிவும்
தாயார்தான் கண்டிலளோ தான்? (189அ)

சத்திரத்துச் சாப்பாடு

நாகப்பட்டினத்திலே காத்தான் வருணகுலாதித்தன் சத்திரம் ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. இப்படிப் பாடுகின்றார்.


கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும்-குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும். (190)

"ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிலிற் சென்று மறைகின்ற பொழுதிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்; (இதுவும் ஒரு சத்திரமோ?' என்பது குறிப்பு.)"

இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன்செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடமும் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்கின்றார்.

குமுறுகின்ற கூழ்!

வீரசென்னன் என்பவனின் நாட்டிலே ஒரு வடுகன் வீட்டிலே உண்ட கூழினைப்பற்றிக் கவிஞர் சொல்லிய செய்யுள் இது.


ஏழாளை யடித்தபுலி தனையடித்தான்
        வீரசென்ன னென்றே காட்டில்
வாழாமற் சிறுபுலிக ளீப்புலியோ
        டெலிப்புலியாம் வடிவங் கொண்டு
பாழாகிக் காடெல்லாம் பரிதவிக்க
        வடுகரடுப் படயில் வந்து
கூழாகி வயிற்றினிற் போம் பொழுது
        குணம் போகாமற் குமுறுந் தானே! (191)

"ஏழு ஆட்களை அடித்துவிட்ட புலியினை வீரசென்னன் என்பவன் அடித்துவிட்டான் என்று கேட்டுப் பயந்து, தாமும் காட்டிலே வாழாமல், சிறிய புலியளெல்லாம் ஈப்புலியாகவும் எலிப்புலியாகவும் வடிவங்கொண்டு வந்து, காடெல்லாம் பாழ்பட்டுப் போய்ப்பரிதவிக்க, வடுகர்களின் அடுப்படியிலே வந்து கூழ்வடிவமாயின. என் வயிற்றினில் போகும்பொழுது மட்டும் தம்குணம் முற்றவும் போகாமல் அவை இரைச்சலிடுகின்றன (குமுறுகின்றன.)"

கூழ் உண்டதனால் வயிறு இரைச்சலிடக் கவிஞர் அதனை இப்படிக் கூறுகின்றார்.

மறவாத சாப்பாடு

ஸ்ரீரங்கத்திலே, ஒரு வீட்டிற் சாப்பிட்ட கவிஞருக்கு, அந்த மனவேதனையினைத் தாங்கவே முடியவில்லை. அந்த சாப்பாட்டின் தன்மையை நினைத்து இப்படிப் பாடுகிறார்.


நீச்சாற் பெருத்திடுங் காவேரி யாற்றை நிலைநிறுத்திச்
சாய்ச்சா ளிலைக்கறிச் சாற்றையெல் லாமது தானுமன்றிக்
காய்ச்சாப் புளியும்நற் கல்லுடன் சோறும் கலந்துவைத்த
ஆச்சாளை யான்மறவேன் மறந்தான் மன மாற்றிடுமோ? (192)

"வெள்ளத்தினாலே மிகுந்திடும் காவேரியாற்றைத் தடுத்து நிறுத்திக் கீரைச்சாற்றினை வெள்ளமாக என் இலையிலே சாய்த்தாள்; அதுவும் அல்லாமல் அந்தக் கீரைச் சாற்றிலிட்ட புளி கொதிக்கவும் இல்லை; அத்துடன் நல்ல கற்களோடு சோற்றையும் சிறிதே கலந்து இலையிலேயும் வைத்தாள். இப்படி எனக்கு உணவளித்த அந்த அம்மையை, யான் எந்நாளும் மறக்கவே மாட்டேன்; அப்படி நான் ஒருவேளை மறந்தாலும், என் மனம் அதனை என்றாவது மறந்திடுமோ?" மறவாதென்பது கருத்து.

பட்டரின் ஈகை

திருப்பனந்தாளிலே ஒரு பட்டர் இருந்தார். அவருடைய சோற்றுக் கொடையினைச் சிறப்பித்து இப்படிப் பாடுகிறார் கவிஞர்.


விண்ணிரும் வற்றிப் புவிநீரும் வற்றி
        விரும்பி மழைத்
தண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற
        காலத்திலே
உண்ணீ ருண்ணீரென் றுபசாரஞ் சொல்லி
        யுபசரித்துத்
தண்ணீரும் சோறுந் தருவான் திருப்பனந்
        தாட் பட்டனே. (193)

"வானத்திலிருந்து பெய்கின்ற மழைவளமும் இல்லாமற் போய், நிலத்தினின்று கிடைக்கும் ஊற்று நீரும் வெளிவராமல் வற்றிப்போய், புலவர்கள் உணவற்றுத் தவிக்கின்ற காலத்திலே, மனம் விரும்பி, உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று உபசார வார்த்தைகளைச் சொல்லி உபசரித்துத், தண்ணீரும் சோறும் அவர்களுக்குத் தருபவன், திருப்பனந்தாள் பட்டவன் ஒருவனே யாவான்."

விண்ணீர் - ஆகாய கங்கை எனவும் உரைப்பர்.

அமராபதியார் விருந்து

அமராபதிக் குருக்கள் என்பவர், ஒருநாள் கவிராயருக்குப் பலவகைக் கறிகளுடனே சிறந்த விருந்து ஒன்றினை நடத்தினார். விருந்தின் சிறப்புக் கவிஞரின் செய்யுளாக இப்படி மணக்கிறது.



ஆனை குதிரைதரு மன்னைதனைக் கொன்றகறி
சேனை மன்ன ரைக்காய்துன் னீயவரை-பூநெயுடன்
கூட்டியமு திட்டான் குருக்களம ராபதியான்
வீட்டிலுண்டு வந்தேன் விருந்து. (194)

"குருக்கள் மரபினைச் சேர்ந்தவரான அமராபதியார் என்பவரின் வீட்டிலே இன்று விருந்து உண்டு வந்தேன். ஆனை - அத்திக்காய்: குதிரை - மாங்காய்; தருமன்னை தனைக்கொன்ற கறி - வாழைக்காய்; சேனை - சேனைக் கிழங்கு; மன்னரைக்காய் - நெல்லிக்காய்; அவரை - அவரைக்காய், ஆகியவற்றால் துன்னீ உண்பதற்கான கறிவகையினைச் செய்து, பூநெயுடன் - மணக்கும் நெய்யுடன், கூட்டி அமுத்திட்டான் - சேர்த்து எனக்கு அவன் அமுது இட்டனன்".

மேலெழுந்தபடி பார்த்தால், "ஆனைக் கறியும், குதிரைக் கறியும், பெற்ற தாயைக்கொன்ற கறியும், படைமன்னரைக் கொன்ற கறியும், பூனைக் கறியுடனே சேர்த்து உணவளித்தான்" என்று தோன்றும் நயத்தினை அறிக.

பூசுணிக்காய் கறி

கொண்டத்தூரிலே ஒரு வீட்டிலே உணவருந்தினார் கவிஞர். பூசுணிக்காய்க் கறி மிகவும் சுவைகேடாயிருக்க, அதனைப் பழித்து இப்படிப் பாடுகிறார்.


கண்டக்காற் கிட்டுங் கயிலாயங் வைக்கொண்டுட்
கொண்டக்கால் மோட்சம் கொடுக்குமே-கொண்டத்தூர்
தண்டைக்கா லம்மை சமைத்துவைத்த பூசணிக்காய்
அண்டர்க்கா மீசருக்கு மாம். (195)

"கொண்டத்துரிலே இருக்கும், தண்டை அணிந்த கால்களையுடைய இந்த அம்மை சமைத்து வைத்த பூசுணிக்காய்க் கறியினைப் பார்த்த பொழுதிலோ கயிலாயத்தை அடைவதாகத் தோன்றும்; கையிலெடுத்து உண்டுவிட்டாலோ மோட்சத்தையே கொடுத்து விடும்; இது தேவர்களுக்கும் ஈசர்க்குமே பொருத்தமானதாகும்."

"பார்த்தாலே உயிர் போய்க் கொண்டிருப்பதுபோன்ற பிரமை ஏற்படும்; உண்டாலோ உயிரே போய்விடும்; தேவர்கள் பாற்கடலை விரும்பிக் கடைய, அங்கே ஆலக்கால விஷம் எழுந்தது; அதனால், அவர்கட்கு ஒருவேளை இது பிடிக்கலாம்; அந்த நஞ்சை உண்டானே ஈசன். அவனுக்கும் இது பிடிக்கலாம்" என்பது கருத்து. கறியை வியந்து பாடியதாகவும் சிலர் இதற்குப் பொருள் கொள்வதுண்டு.

மா வடுவே

ஒரு மரத்திலே ஏராளமான மாவடுக்கள் விளங்கினதைக் கண்ட கவிஞருக்கு, மாவடு ஊறுகாயின்மேல் மனம் செல்லுகிறது. இப்படிப் பாடுகிறார்.

திங்க ணுதலார் திருமணம்போ லேகீறிப்
பொங்குகட லுப்பைப் புகட்டியே-எங்களிட
ஆச்சாளுக் கூறுகா யாகாம லாருக்காக்
கர்ச்சாய் வடுகமாங் காய். (196)

"வடுக மாங்காய் - வடுகாக விளங்கும் மாங்காயே! பிறையனைய நெற்றியினையுடைய பெண்களின் அழகான மனத்தைப் போலக் கீறி, பொங்கும் கடலினின்றுங் கிடைத்த உப்பினைப் புகட்டி, எங்களுடைய ஆச்சாளுக்கு ஊறுகாயாக ஆகாமற்படிக்கு வேறு யாருக்காகவோ நீ இப்படிக் காய்ந்திருக்கின்றாய்?"

ஆச்சாள் - ஆத்தாள் என்ற சொல்லின் சிதைவு. அன்றி, ஒருத்தியின் பெயரும் ஆம் பெயரென்று கொண்டால், ஆச்சாள் படைத்த ஊறுகாயை வியந்து மாவடுவைக் கண்டபோது பாடியதாகக் கொள்க.

சட்டி பானை

சட்டி பானைகளைச் செய்து கொண்டிருக்கும் ஓர் இடம்: கவிஞர் அங்கே சென்று விசாரிக்கிறார்; அவள் தப்பாக புரிந்து கொண்டாள். அந்தக் கருத்தில் எழுந்த வெண்பா இது.


ஆண்டி குயவா வடாவுன்பெண் டாட்டிதனைத்
தோண்டியொன்று கேட்டேன் துரத்தினாள்-வேண்டியிரு
கைக்கரகம் கேட்டேன் காலதனைத் தூக்கியே
சக்கரத்தைக் காட்டினாள் தான். (197)

"ஆண்டி என்னும் பெயரினையுடைய குயவனே! உன் பெண்டாட்டியினைத் தோண்டி ஒன்று கேட்டேன்; அவள் என்னைத் துரத்தினாள். மீண்டும் வேண்டிக் கொண்டவனாக, 'இருகைக் கரகம்' கேட்டேன்; அவளோ, தன் இரு கால்களைத் தூக்கியவளாகச் சக்கரத்தைக் காட்டினாள்! இது ஏனோ?"

தோண்டி - அல்குலையும் குடத்தையும், கைக்கரகம் - தனங்களையும், கலசங்களையும், சக்கரம் - பானைவனையும் சக்கரத்தையும், மறைவிடத்தையும் குறிப்பன.

நீர் மோர்

மோர் விற்பவள் ஒருத்தி, நீரிலே சிறிது மோரையும் கலந்து மோரென்று கூறி விற்று வந்தாள். அந்த மோரின் தன்மையைக் கண்ட கவிஞர் பாடியது இது.



காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையா ராய்ச்சியர்கை வந்ததற்பின்
மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே. (198)

"வானத்தை அடை யும்போது நீ 'மேகம்' என்ற பெயரினைப் பெற்றனை! நெடிதான தரையிடததே வந்ததன் பின்னர், 'நீர்' என்ற பெயரினையும் பெற்றனை. கச்சுப் பொருந்திய மென்மையான முலைகளையுடைய ஆய்ச்சியர்களின் கையிடத்தே வந்ததன் பின்னால், நீ 'மோர்' எனவும் பெயர்பெற்றனை! நீரே, நீ இப்படி மூன்று பெயர்களையும் பெற்று விட்டனையே! நின் சிறப்புத்தான் என்னே?"

வதை செய்தால்

மகளின் காதல் மெலிவை அணங்கு தாக்கியதென்று எண்ணி, வெறியாடலுக்குத் தாய் ஏற்பாடு செய்ய, அப்போது மகள் சொல்லுகிறதாக அமைந்தது இச் செய்யுள்.


போலநிற மாவார்க்குப் பூணார மாவாரை
ஏலவதை செய்தால் இயல்பாமோ-சாலப்
பழிக்கஞ்சுந் தென்மதுரைப் பாவையிரு நான்கு
விழிக்கஞ்சன் சோமனலை வேந்து. (199)

"மிகுதியாக எழுந்த ஊரலரான பழிக்கு அஞ்சுகின்ற, தென்மதுரையிலிருக்கும் பாவைபோன்ற என் தோழியே! எட்டு விழிகளையுடைய பிரமதேவன், சந்திரன், கடல் தெய்வமாகிய வருணன் ஆகிய இவர்களைப் போன்ற பெண்களுக்கு, ஆடு முதலியவற்றைப் பலியிடுவதனால் மீண்டும் மேனி பழைய தன்மையினை அடைந்து விடுமோ?"

பிரமன் வெண்ணிறத்தோன்; சந்திரன் நாளுக்கு நாள் உடல் தேய்ந்து போகின்ற தன்மையுடையவன்; வருணன் கருநீல நிறத்தவன். பிரிவினாலே உடல் வெளுத்தும், தேய்ந்தும், பசலைபடர்ந்தும் போயின நிலைமையை இப்படிக் கூறினர். சோமன், சிவனும் ஆம்; அப்போது உடலின் கொதிப்பைக் குறித்ததாகக் கொள்க.

பழிகாரா!

கயற்றாற்றிலே கருட உற்சவம் நடந்து கொண்டிருந்தது. விழாவைக் கண்டு மகிழ்ந்திருந்த கவிஞரைக் கோயிலார் வற்புறுத்திச் சப்பரத்தைச் சுமக்குமாறு செய்தனர். அந்த வேதனையைத் தாளாத அவர், இவ்வாறு பாடிப் பழிக்கின்றனர்.



பாளைமணம் கமழுகின்ற கயற்றாற்றுப்
        பெருமானே பழிகா ராகேள்
வேளையென்றா லிவ்வேளை பதினாறு
        நாழிகைக்கு மேலா யிற்றென்
தோளை முறித் ததுமன்றி நம்பியா
        னையுங்கடச் சுமக்கச் செய்தாய்
நாளையினி யார் சுமப்பா ரெந்நாளும்
        உன்கோயில் நாசந் தானே! (200)

பாளையின் மணம் கமழுகின்ற கயற்றாறு என்னும் ஊரிலே கோயில்கொண்டிருக்கும் பெருமாளே! பழிகாரனே! யான் சொல்லும் இதனையும் கேட்பாயாக; வேளை என்றால் இவ்வேளை இரவு பதினாறு நாழிகைக்கும் மேற்பட்டதாக ஆகிவிட்டது. நின் வாகனத்தைச் சுமக்கவைத்து என் தோள்களை முறியச் செய்ததும் அல்லாமல், இந்த நம்பியானையும் நின்னோடு கூடச் சுமக்கும்படியாக என்னைச் செய்துவிட்டாய். இனிமேல், நாளைக்கு உன்னை எவர் சுமக்கப் போகிறார்கள்? உன் கோயில், இனி எந்நாளுமே நாசந்தான்."

இதற்குப் பின்னர் கயற்றாற்றுக் கோயிலில் திருவிழா நெடுங்காலம் நின்றுவிட்டது என்பது வரலாறு.

ஏரி உடைதல்!

ஏரி உடையுமாறு கவிஞர் பாடிய செய்யுள். இது ஏரியின் பெருக்கினால் ஊரும்செய்யும் பாழாகாமற் செய்ய வேண்டிய முறைகளைக் கூறுகிறார்.


கலங்கற் றுறையதனிர் காராளர் போதத்
தெலுங்கப்ப நாரணன் தெண்டிக்கச் - சலம்பெருகி
நட்டாற கொண்டுகரை நன்றா யுடைந்துநீர்
கட்டா தொழிதல் கடன். (201)

"காராளர்கள் கலங்கல் துறையினிடத்தே செல்லவும், தெலுங்கப்ப நாராணனானவன் வெட்டிவிடவும், எங்கணும் நீர்ப்பெருக்கெடுத்து, நட்டாற்று வெள்ளமாக எங்கும் பெருகிக் கொண்டு கரையும் நன்றாக முற்றவும் உடைந்து போக, ஏரியில் கட்டுப்பட்டிராமல் முற்றவும் நீர் வடிந்து போதலே செய்தற்கான முறையாகும்."

கடையர்கள்

வணிகத்தில் ஏராளமான பொருளைச் சம்பாதித்தும், அதனை நல்லோர்க்கு உதவும் மனமற்றுத் தீய வழிகளிலேயே செலவிட்டு வருகின்ற சிலரைப்பற்றிப் பழித்துக் கூறிய செய்யுள் இது.



கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் கடையிற்சுற்றி
வருந்திக் குடவற்கும் தாட்டிகுங் கொத்திட்டு மாய்வதல்லலால்
கரந்தைக ளாண்டி லொருக்கால் வருவது கண்டிருந்தும்
அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் பிழைப்ப தரிதென்பரே. (202)

"கருந்தலையெனவும் (கால்), செந்தலை எனவும் (அரைக்கால்), தங்கான் எனவும் (அரை), திருக்கால் எனவும் (முக்கால்) வருத்தப்பட்டுக் கடையிலே பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, அப்படிச் சேர்த்ததைப் பரத்தைக்கும் கூத்திக்குமாகப் பங்கிட்டு அழிவதல்லாமல் - கரந்தைகள் ஆண்டிற்கு ஒருமுறை வருவதனைத் தெரித்திருந்தும், 'அம்புக்கும் கொத்துக்கும் வந்துவிட்டார்கள்; இனி நாங்கள் கடைவைத்துப் பிழைப்பதே அரிது' என்பார்கள் இந்தக் கடைக்காரர்கள்.

கரந்தைகள் - அரசாங்க வரி வாங்குவோர்.

பாவிகள்!


தண்டாங்கூர் மாசனங்காள் சற்குணர்நீர் என்றிருந்தேன்
பண்டங் குறையவிற்ற பாவிகாள் - பெண்டுகளைத்
தேடியுண்ண விட்டீர் தெருக்க டெருக்கடொறும்
ஆடிமுத லானிவரைக் கும். (203)

தண்டாங்கூர் என்ற ஊரிலே, ஓர் ஒருந்தாயக் காலத்திலே, வியாபாரிகள் பண்டங்களை அநியாயமான விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு மனம் வெதும்பிப் பாடியது இது.

'தண்டாங்கூர் என்னும் ஊரிலே இருக்கின்ற மிகவும் பெரிய - மனிதர்களே! நீங்கள் அனைவருமே நல்ல குணம் உடையவர்கள்; என்று நான் இதுவரை எண்ணியிருந்தேன்.

பண்டங் கறைய விற்ற பாவிகாள் - பொருள்களைப் பெற்ற விலையின் அளவுக்கேற்பக் கொடாமல் அளவைக் குறைத்து விற்ற பாவிகளே! ஆடி முதல் ஆனிவரைக்கும் - அதாவது ஆண்டு முழுவதும் பெண்களைத் தேடியுண்ண விட்டீர் - பெண்களைப் பொருள் தேடி உண்ணுமாறு கைவிட்டீர்களே? (நீங்கள் உருப்படுவீர்களா?)"

அகவிலை அதிகரித்ததால் பெண்கள் உணவுக்காகப் பொருள் தேட முனைந்த கொடுமையை எடுத்துக் காட்டிக் கடைக்காரர்களைப் பழிக்கிறார் கவிஞர், 'கொள்ளை இலாபம்' வைத்து விற்கும் பெரிய பெரிய மனிதர்களும், பதுக்கல்காரர்களும் இச்செய்யுளை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

நாராயணன்

கம்பர் பெருமான், செய்யுளின் சந்தத்தை நோக்கி 'நாராயணன்' என்ற சொல்லை, 'நராயணன்' என்றனர். அவர் செயலை ஏளனஞ் செய்யும் கவிஞர் இப்படிப் பாடுகிறார்.


நாராயணனை நராயணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன வுறுதியால் - நேராக
வாரென்றால் வர்ரென்பென் வாளென்றால் வள்ளென்பேன்
காரென்றாற் கர்ரென்பேன் யான். (204)

"கம்பன் சற்றும் ஆராயாமல், 'நாராயணன்' என்ற சொல்லை, 'நராயணன்' என்று சொன்ன அதே நெஞ்சின் உறுதியினாலே, அதற்கு ஒப்பாக, யானும் இனிமேல் 'வார்’ என்றால் 'வர்' என்பேன், 'வாள்' என்றால் 'வள்' என்பேன், 'கார்' என்றால் 'கர்' என்பேன்."

நாராயணன் என்பது, திருமாலின் திருநாமம்; இதற்கு, ஜலத்திலே இருப்பவன் என்பது பொருள். நராயணன் என்றால், மனிதரில் இருப்பவன் என்பது பொருளாகிறது. இப்படிப்பொருள் முற்றவும் வேறுபடுகிறதனால் கவிஞர் கம்பரின் போக்கினைக் கண்டித்து உரைக்கின்றனர்.

பாம்பு கொண்டதோ?

தென்றல் வருகின்ற காலத்தே, ஒரு சமயம் தென்றற் காற்றையே காணவில்லை. திருச்செங்காட்டிலிருந்த கவிஞர், அப்போது இவ்வாறு பாடினார்.


அம்பேந்து கையா னவன்பதியி லைம்மாவைக்
கொம்பேந்தி தந்தைபணி கொண்டதோ-அன்பா
வரிந்த மகவை யமுதுக் கழையென்
றிருந்தவன்றன் செங்காட்டி லே. (205)

"சிறுத்தொண்டன் சிவனடியார்க்கு அமுதிடுகின்ற பேரன்பிலே அரிந்த சிறுபிள்ளையை, 'உடனிருந்து அமுது உண்பதற்கு அழைப்பாயாக' என்று சொல்லி வீற்றிருந்தவன் சிவபிரான். அவன் கோயில் கொண்டிருக்கின்ற திருச்செங்காட்டிலே, கமண்டலத்தை ஏந்தியிருக்கும் கையினனான அகத்தியனின் பொதியமலையினின்று வருகின்ற தென்றற் காற்றினை, கொம்புகளைச் சுமந்திருக்கும் விநாயகப் பிரானின் தகப்பனுடைய ஆபரணமான பாம்புகள் தாம் இப்போது உண்டுவிட்டனவோ?"

அம்பு - கமண்டலமும் எழுகடலும் ஆம். கொம்பு ஏந்தி - ஒற்றைக் கொம்பினைக் கையிலே ஏந்தியிருப்பவனும் ஆகும். பணி - ஆபரணம்; பாம்பு, 'பாம்பு காற்றைக் குடித்ததோ?' என்று வினவும் நயத்தினை அறிக.

ஆமூர் முதலியார்

முன் ஒரு செய்யுளிலே, ஆமூரிலுள்ள திருவேங்கட முதலியாரின் குதிரையைச் சிறப்பித்த கவிஞரின் செய்யுளை அறிந்தோம். அவருடைய கொடைச் சிறப்பைப் புகழ்ந்தது இது.


உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி
வெள்ளங்கா லந்திரிந்து விட்டோமே-உள்ளபடி
ஆமூர் முதலி யமரர்கோ னிங்கிருப்பப்
போமூர் அறியாமற் போய். (206)

"ஆமூரின் முதலியாகிய அமரர்கோமான் போன்றவன் இங்கே இருக்கவும், போவதற்குரிய ஊர் இதுவென முதலிலேயே அறியாதபடி பல ஊர்கட்கும் நடந்துபோய், உள்ளங்காலிலே வெள்ளெலும்பு தோன்றும்படியாக, ஒரு கோடி வெள்ளங்காலம் வீணாகப் பலவூரும் சுற்றி அலைந்து விட்டோமே!"

“ஆமூர்க் களப்பாளனைப் பாடிய செய்யுளெனவும் இதனைச் சொல்வார்கள். ஒருகோடி வெள்ளம் - பன்னெடுங்காலம்; கோடி என்பதும் வெள்ளம் என்பதும் பேரெண்கள் ஆகும்.

பண்பின் தகுதி

பண்புடையவர் பண்பற்றவர், பாவிகள் பாவஞ் செய்யாதவர், நண்பர் நண்பரல்லார் இவர்களை நாம் கொள்ளவேண்டிய முறைமைகளைப் பற்றிப் பாடிய செய்யுள் இது. இது, மதுரையிற் சொல்லியது.


பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கா னாற்காலி-திண்புவியை
ஆள்வார் மதுரை யழகியசொக் கர்க்கரவம்
நீள்வா கனநன் னிலம். (207)

"பண்புள்ளவர்களுக்கு ஓர் பறவை (அது ஈ - கொடு); பாவத்திற்கு ஓர் இலக்கம் (அது அஞ்சு - பாவத்திற்கு அஞ்சி ஒதுங்க வேண்டும் என்பது கருத்து); நண்பில்லாதவரைக் கண்டால் நாற்காலி - (அது விலங்கு - விலகிப் போய்விடு) என்பது பொருள்.

செறிவுற்ற நிலத்தினை எல்லாம் ஆட்கொள்பவராகிய மதுரை நகரத்து அழகிய சொக்கநாதப் பெருமானுக்கு நிலையாகப் (அரவம் வாகனம் நன்னிலம் என்க) பணிவிடை செய்."

பண்பாளர்க்குக் கொடுத்தும், பாவத்திற்கு அஞ்சியும், பகைவரிடத்திலிருந்து விலகியும், சொக்கநாதப் பெருமானுக்குப் பணிவிடை செய்தும் வாழ்வாயாக என்பது கருத்து.

'ஓர் பறவை' என்பதனை, 'ஒப்பற்ற பறவை' எனப் பொருள் கொண்டால், 'அன்னம்' என்றாகிச் சோறிடுதலைக் குறித்ததாக அமையும்.

வாழ்க! வாழ்க!

ஒரு திருமண வீட்டிலே திருமாலடியார்களும் சிவனடியார்களும் குழுமியிருந்தனர், மணமக்களை வாழ்த்துகிறார் கவிஞர். இரு சாராரின் மனமும் புண்படாதபடி உரைக்கின்ற சிறப்பினைக் காண்க.


சாரங்க பாணியா ரஞ்சக்கரத்தல் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த உகிர்வாளர்-பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதும் காண். (208)

சிவ பரமாக: சாரங்கபாணியார் - மானேந்திய கையினர்; அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொருபமானவர்; கஞ்சனை முன் ஓரங்கம் கொய்த உகிர்வாளர் - தாமரை வாசனாகிய பிரமனை முன்காலத்திலே ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்; பார் எங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகமெல்லாம் போற்றுகின்ற உமையம்மையைத் திருமேனியிற் பாதியாகக் கொண்டிருப்பவர்; இவரும்மை எப்போதும் காத்திடுவர் காண் - இத்தகைய ஈசர் உங்களை எந்நாளும் காத்திடுவாராக 'காண்', அசை.

திருமால் பரமாக: சாரங்க; பாணியர் - சாரங்கம் ஆகிய வில்லினைக் கைக்கொண்டவர்; அஞ்சக்கரத்தர் - அழகிய சக்கரப் படையினை உடையவர்; முன் ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் - மாமனாகிய கஞ்சனை முன்னாளிலே ஒப்பற்ற உடலைக் கிழித்த நகத்தினையுடையவர்; பார் எங்கும். ஏத்திடும் மையாகர் - உலகெங்கும் போற்றிடும் கரிய திருமேனியுடையவர்; திருமாலாகிய இவர் உம்மை எப்போதும் காத்திடுவாராக!

இருவகையினரும் உவக்குமாறு பொருளை விரித்துரைத்துக் காளமேகம் அவர்களை மகிழ்வித்தனர் என்க.

மதுரைக்கு எவ்வாறு சென்றீர்!

'ஞானவரோதயர்' என்பவர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கேயுள்ள வயலூர் என்னுமிடத்தில் வாழ்ந்த சிவசமயத் துறவியாராவார். தமிழ் வடமொழி என்னும் இரண்டினும் வல்லவராகவும், சித்தாந்த புராண நூல்களுள் ஆழ்ந்த புலமையும் தெளிவும் உடையவராகவும் இவர் விளங்கினார்.

கந்த புராணத்தைக் கச்சியப்ப முனிவர் தமிழ்ச் செய்யுளாற் பாடினார். அதன் பிற்பகுதியாக உபதேச காண்டத்தைப் பாடுமாறு, தம் ஆசிரியராகிய ஆறுமுக சுவாமி ஆணையிட, இவர் அதனை 2600 செய்யுட்களால் பாடினார் என்பர். இந்த ஞானவரோதயரைக் 'காளமேகத்திற்கு ஆசிரியர்' என்று, உயர்திரு. மு. இராகவையங்கார் போன்ற ஆராய்ச்சிப் பெரியோர்கள் கருதுவர்.

இந்தப் பெரியார், ஒரு சமயம் மதுரை நகருக்குச் சென்று வந்தனர். இப்பொழுது, இவரைக் கண்டு தரிசித்த காளமேகப் புலவர், இவருடைய பெருமையை வியந்து கூறிய செய்யுள் இதுவாகும்.


முதிரத் தமிழ்தெரி நின்பாடல் தன்னை முறையறிந்தே
எதிரொக்கக் கோப்பதற் கேழேழு பேரில்லை இன்றமிழின்
பதரைத் தெரிந்தெறி கோவில்லை யேறப் பலகையில்லை
மதுரைக்கு நீ சென்ற தெவ்வாறு ஞான வரோதயனே! (209)

"ஞான வரோதயப் பெருமானே! முதிர்ந்த சுவையோடு தமிழினிமை புலப்படும் தங்களது பாடல்களை முறையாக அறிந்து, எதிரேயிருந்து கோத்து ஒழுங்கு செய்து வைப்பதற்கு, நாற்பத்தொன்பதின்மராகிய சங்கப் புலவர்களும் இப்போது இல்லை; இனிதான தமிழிடத்தே கலந்து கிடக்கும் பதர்களைத் தெரிந்து கழித்துப் போடுதற்குறிய தலைவனான பிள்ளைப் பாண்டியனும் இப்போது இல்லை; சங்கப் பலகையில் ஏறித் தங்களின் புலமையை நிலைநாட்ட வென்றால், அந்தப் பலகையும் இப்போது இல்லை. இருந்தும், தாங்கள் மதுரைக்குச் சென்றது தான் எதற்காகவோ? அதனைச் சொல்வீர்களாக" என்பது இதன் பொருள்.

இதனால், ஞானவரோதயரின் ஒப்பற்ற புலமைச் சிறப்பை உளமுவந்து போற்றுகின்றார்.

விதி விடங்கா!

திருவாரூர்த் தியாகேசப் பெருமானுக்கு வீதி விடங்கன் என்பதும் ஒரு திருப்பெயர். உளியாற் செதுக்கி அமைக்கப் பெறாது, தானே கிளைத்த விடங்கம். பெருமானின் திருமேனி என்பது ஐதிகம். திருவாரூர்ப் பெருமானைத் தரிசிக்கச் சென்ற கவிஞர், பெருமானின் சிறப்பை இவ்வாறு பாடுகின்றனர்.


சேலை யுடையழகா தேவரகண் டாகழுநீர்
மாலை யழகா மணிமார்பா-வேலை
அடங்கார் புரமெரித்த வாரூரா வீதி
விடங்கா பிரியா விடை. (210)

"மாதொரு பாகனாகி அதனால் ஒரு பாகத்தே சேலையும் உடையாக விளங்க வீற்றிருக்கும் அழகனே! தேவர்களாலும் அளந்து அறிதற்கு ஒண்ணாத பெருமானே! செங்கழு நீர் மாலையை அணிந்திருக்கும் அழகனே! அழகிய மார்பகத்தை உடையோனே! கடல் போன்று அடக்கமின்றி ஆர்ப்பரித்துத் திரிந்த முப்புரத்து அசுரர்களின் கோட்டைகளைச் சிரித்தே எரித்தருளிய சிவபிரானே! திரு ஆரூரனே! வீதி விடங்கனே! நின்னைப் பிரியாமல் என்றுஞ் சுமந்திருக்கும் பேறு பெற்றது நின் இடபம் அல்லவோ!" என்பது பொருள்.

மாவலி வாணா

மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. அப்பொழுது, இவர்களுள் ஒருவன், தன்னைப் பற்றிச் செருக்குடையோனாகத் திகழக் காளமேகத்தின் நெஞ்சத்தின்கண் வேதனை பெருகுகின்றது.

புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன்' என்ற விருதையும் சூடிக்கொண்ட வாணனை அவர் வெறுப்புடனேயே கருதுகின்றார். அவனை இகழ்ந்து சொல்லிய செய்யுள் இது.


சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன்னவிழ்த்த
பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ-மிக்க
கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம்
அரசரணா மாவலிவா னா! (211)

இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.

மாவலிவாணனே! சொக்கேசப்பெருமான், அந்நாளிலே தம் தொண்டரான வாதவூரடிகளின் பொருட்டாக, மதுரை நகரிற் கொண்டுவிட்ட பொய்க்குதிரைகள், போர்க்களத்திற்குப் போகக் கூடியவையோ? அவை போகாவன்றே! அது போலவே,

பருத்த காலுங் கையுங்கொண்டு உருவால், பெரிதாக விளங்குபவனே! விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று திரியும் இழிதொழிலாளர்க்கு அரசனே! நீதான் இந் நாட்டு மக்களைக் காத்துப் பேணுதற்கு ஏற்ற அரசாகிய அரணாவாயோ? 'நீ ஆக மாட்டாய்' என்பது கருத்து.

கடுகி வரவும்

காளமேகப் புலவர், தமிழினிமையை விரும்பிப் போற்றியது போலவே, அழகின் இனிமையை ஆராதிப்பதிலும் ஆர்வம் உடையவராக இருந்தார். இதனால், திமிருவானைக்கா மோகனாங்கியைப் போல, வேறு சிலருடைய தொடர்பும் இவருக்கு இருந்து வந்தது. இவர்களுள் ஒருத்தி 'தொண்டி' என்பவள்.

இவள், திருநள்ளாற்றைச் சேர்ந்தவள், காளமேகம் நாகைப்பட்டினம் சென்றிருந்தபோது, இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே அளவிறந்த பாசமும் உண்டாயிற்று.

நாகையிலிருந்து, காளமேகம் குடந்தைக்குச் செல்ல நினைத்தார். அப்போது, தொண்டியும் திருநள்ளாற்றுக்குப் போக நினைத்தாள். இருவரும், தத்தம் விருப்பப்படி சென்றனர்.

குடந்தைக்கு வந்தபின், தொண்டியைப் பிரிந்திருக்க முடியாமல் காளமேகம் வருந்தினார். தம்முடைய ஆராத காமத்தை நயமாக எடுத்தெழுதி, அவர் அனுப்பிய ஓலை இதுவாகும்.


நள்ளாற்றுத் தொண்டிக்கு நல்வரதன் தீட்டுமடல்
விள்ளாமல் எத்தனைநாள் வெம்புவேன்-கள்ள
மதனப் பயலொருவன் வந்துபொருஞ் சண்டைக்கு
உதவக் கடுகிவர வும். (212)

'நள்ளாற்றினளான தொண்டிக்கு நல்லவனாகிய வரதன் தீட்டும் ஓலை, கள்ளனாகிய மதனப்பயல் என்னும் ஒருவன் வந்து என்னுடனே பொருதுகின்றான். வெளியிலே சொல்லாமல் உள்ளேயே போரிட்டு எத்தனை நாளுக்கு நான் வெந்து கொண்டிருப்பேன்? அதனால், அவனோடு சண்டையிட்டு அவனை வெல்வதற்கு, எனக்குத் துணையாக நீயும் விரைந்து வருவாயாக’ என்பது பொருள்.

'உதவக் கடுகி வரவும்' என்ற அழைப்பிலேயே கவிஞரின் உள்ளத்தை நாம் காணலாம்.

ஊறல் அமிர்தம்

காளமேகத்தின் ஓலையைப் பெற்ற தொண்டியும், அவர் விரும்பியபடியே, விரைந்து குடந்தைக்கு வந்து சேர்ந்தாள். இருவரும் ஆராத காம மயக்கத்தில் ஆழ்ந்து திளைத்தனர். அப்பொழுது, அவளை வியந்து சொல்லிய செய்யுள் இது.



தேற லமிர்தம் தெவிட்டிடி னுங்கனிவாய்
ஊற லமிர்தம் உவட்டாதே-வீறுமதன்
தன்னாணை நள்ளாறர் தம்மாணை யும்மாணை
என்னாணை தொண்டியா ரே! (213)

தேன் கலந்த பாலாகிய அமுதம் உண்ணத் தெவிட்டினாலும், உன்னுடைய கோவைக் கனிபோன்ற வாயிதழ்க் சுடையிலே ஊறிவரும் அமுதம் உண்ணஉண்ணத் தெவிட்டாத இன்பத்தைத் தருவதாயிருக்கிறது. வீறு மதனின் ஆணை! நள்ளாற்றிலே கோயில் கொண்டிருக்கும் பெருமான் மீது ஆணை! உன்மீது ஆணை! என்மீது ஆணை! தொண்டியாரே எம்மைக் கைவிடாதேயும் என்பது பொருள்.

சாகலானான்

வேளாளன் ஒருவன் வீட்டிற்குக் காளமேகம் சென்றார். வேளாளர்கள் விருந்தினைப் பேணுகின்ற பண்பு கொண்டவர்கள். ஆனால், அந்த வேளாளனோ பண்பற்றவனாக இருந்தான். வீட்டில் இருந்துகொண்டே, மனைவி மூலம், 'வீட்டில் கணவர் இல்லை' என்று சொல்லிக் கவிஞரை அனுப்பிவிட முயன்றான். அவனுடைய செயல் கவிஞரை வருத்த, அவர் பாடிய செய்யுள் இது.


பாலலகை யன்று பரிந்தளித்த கோத்திரத்துக்
காலமென வந்த அடைக்கலவன் - சூலந்
திருக்கையி லேயேந்தும் சிவனிருக்க வேளான்
இருக்கையிலே சாகலா னான். (214)

"ஒருபால் உடலைத் தாங்கி நின்றே பேயாக உருமாறிய காரைக்கால் அம்மையார், அக்காலத்தே பரிவுடன் பேணிக் காத்த சிவனடியார் கூட்டத்திலேதான் வாழுதற்கான காலபேதம் என்ற ஒன்றைக் கருதியே வந்து சேர்ந்திருக்கின்றான் இந்த வேளாளன். எமனது பாசத்துட்படாது அடைக்கலம் தருபவனாகிய, சூலத்தைத் திருக்கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் இருக்கவும், இவன் உடலில் 'உயிர் இருக்கையிலேயே இல்லாமற்போய்ச் சாகிறவன் ஆகின்றானே!' என்பது பொருள்.

இருந்தும் இல்லையென்பதனால், அவனை இல்லாதவனாகவே கொண்டு, 'சாகலானான்' என்கின்றார் கவிஞர். இதன்பின், அவன் தன் செயலுக்கு நாணியவனாகக் கவிஞரைப் பணியக் கவிஞரும் அவனை மன்னித்து, அவனாலே உபசரிக்கப் பெற்று மகிழ்ந்தனர்.

நம்பிமார் மீன் தின்றார்

'நம்பிமார் என்பவர்கள், திருமால் கோயில்களிலே பணி செய்கின்ற சிறப்பினை உடையவர்கள். மிகவும் ஒழுக்க சீலராகவும், சிறந்த பக்தியாளராகவும், ஆழ்ந்த ஞான சீலராகவும் இவர்கள் விளங்குவார்கள். எனினும், திருக்கண்ணமங்கை நம்பிமார்களுள் சிலர், காளமேகத்திடம் ஏதோ தாறுமாறாக நடந்திருக்கின்றனர். காளமேகத்தின் சைவச் செலவால், அவர்கள் மனக்கசப்பு அடைந்தும் இருக்கலாம். எனவே, அவர்களை நிந்தித்துக் காளமேகம் இப்படிப் பாடுகின்றார்.


தருக்குலவு கண்ணமங்கைத் தானத்தார் எல்லாம்
திருக்குளத்து மீனொழியத் தின்னார்-குருக்கொடுக்கும்
நம்பிமார் என்றிருந்தோம் நாட்டில் அழிகூத்தி
தம்பிமா ராயிருந்தார் தாம். (215)

"திருக்கண்ணமங்கைத் தானத்தாராகிய நம்பிமார்களை எல்லாம் பெருமை கொடுப்பதற்குரிய சிறந்தவர்கள் என்று இதுவரை நாம் எண்ணியிருந்தோம். ஆனால், மரங்கள் செறிந்திருக்கும் கண்ணமங்கையிலுள்ள நம்பிமார்களோ, கோயில் திருக்குளத்து மீன்களுள் ஒன்று விடாமல் தின்று விட்டார்கள். இந்தச் செயலால், நாட்டின் அழிவுக்குக் காரணமாகும் கூத்தியரின் தம்பிமாராகவே இவர்களைக் கருதுதல் வேண்டும்" என்பது இதன் பொருள்.

'திருக்குளத்து மீன் தின்னார்' என்பதைத் 'திருக்கு உளத்து மீன் தின்னார்' எனப் பகுத்துக்கொண்டு, மயங்கித் திரியும் உள்ளத்து நினைகளாகிய மீன்களை அடக்கி ஆட்கொண்டனர்' எனவும் பொருள் கொள்ளலாம். ஆனால், கண்ணபுரத்தைப் பற்றி இவர் பாடியிருக்கும், 'கண்ணபுரமாலே' என்னும் நூற்றுமுப்பத் தேழாவது செய்யுளை நோக்கினால், இவர் நம்பியார்கள்மீது வசைபாடியதாகவே கொள்ள இடமேற்படுகின்றது. மற்றும் 'கண்ணபுரம் கோயிற் கதவடைத்து' என்ற செய்யுளும் இதனை வலியுறுத்தும்.

தீர்த்தாள்

கம்பர் பாடியதாகக் 'கந்தமலர்ப் பிரமன்' எனத் தொடங்கும் வெண்பா ஒன்று வழக்கிலிருக்கிறது. இதனைக் கம்பர் பாடல்கள் என்னும் நூலிற் காணலாம்.


கந்த மலர்ப்பிரமன் கன்னிமட வார்க்கெல்லாம்
அந்தவிள நீரை முலை யாக்கினான்-சுந்தரஞ்சேர்
தோற்றமிகு வல்லிக்குத் தோப்பைமுலை யாக்கினான்
ஏற்றமிதில் யார்தான் இயம்பு. (216)

எள்பது அந்தச் செய்யுள். அதன்கண், தன்னுடைய பருவ முதிர்ச்சியை ஒப்பனைகளால் மறைத்துக்கொண்டு மினுக்கிக் குலுக்கி வந்த ‘வல்லி’ என்னும் தாசியைக் கம்பர் பெருமான் நகையாடியதைக் கண்டோம்.அந்தச் செய்யுளைப் போலவே, தமிழ் நாவலர் சரிதையுள், காளமேகம் பாடியதாகவே ஒரு செய்யுள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதனை நாம் இங்கே காண்போம்.

திருக் கண்ணபுரத்திலே காளமேகத்திற்கு எங்கும் எதிர்ப்பாகவே இருந்ததை அவரது செய்யுட்கள் பலவும் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வூர்த் தாசியருள் ஒருத்தி தீர்த்தாள் என்பவள். அவளுடைய வனப்பை இகழ்ந்து கவிஞர் பாடிய வசை இது.


கந்த மலரயனார் கண்ணபுர மின்னாருக்
கந்தவிள நீரை முலை யாக்கினார்-சந்ததமுந்
தோற்றமுள தீர்த்தாட்குத் தோப்பைமுலை யாக்கினார்
ஏற்றமெவர்க் காமோ வினி? (217)

“தாமரை வாசராகிய பிரமதேவர், திருக்கண்ணபுரத்திலே வாழ்பவரான பிற பெண்களுக்கெல்லாம், அழகிய தென்னங் குரும்பைகளை மட்டுமே மார்பகங்களாகப் படைத்தனர் ஆனால், எப்போதும் கவர்ச்சியாகத் தோற்றும்படி வருகின்ற இந்த தீர்த்தாளுக்கோ, அவர் தென்னந்தோப்பையே மார்பகங்களாக்கி விட்டனர். இனி, இவர்களுள் சிறப்பு எவர்க்கு ஆகும்? சிறந்த தீர்த்தாளுக்குத்தான் என்பது போலத் தோன்றினாலும், 'தோப்பை' என்ற சொல்லைத் 'தோற்பை' எனப்பகுத்து, 'தோலா கிய பை' எனப் பொருள் கண்டு, அவளை இகழ்ந்து பாடியதாகவே கொள்ளல் வேண்டும்.

குடவாசல் விண்ணாள்

திருக்குடவாசல் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள ஓரூர். இவ்வூரிலே வாழ்ந்திருந்த விண்ணாள் என்பவள் மிகவும் குறும்புக்காரி. காளமேகப் புலவரிடம் சென்று தன்னைப்பற்றியும் ஒரு வசைகவி பாடுமாறு கேட்டாளாம். அவள் அழகுள்ளவள், அவள் மீது அன்புடையவர் கவிஞர். என்றாலும் அவளுடைய வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியவில்லை. அதனால், இந்தச் செய்யுளைப் பாடினர்.


செக்கோ மருங்குல் சிறுபய றோதனஞ் சிக்கலிதம்
வைக்கோற் கழிகற்றை யோகுழி யோவிழி வாவிதோறும்
கொக்கேறி மேய்குட வாசல் விண்ணாள் வரைக் கோம்பி யன்னீர்
எக்கோ படைத்தது நீரே நெருப்பில் எரிந்தவரே! (218)

'சிவபெருமானின் நெற்றிக் கண் நெருப்பிலே பட்டு எரிந்துபோன காமகேவரே! இவள் இடையோ செக்குப் போலப் பருத்திருக்கிறது. இவள் மார்பகங்களோ சிறு பயற்றின் அளவாகச் சிறுத்துள்ளன. சிக்குப் பிடித்த இவள் கூந்தல் வைக்கோற் கற்றைக் கழித்துப் போட்டாற் போலத் தோன்றுகின்றது. விழிகள் இருக்க வேண்டிய இடத்திலே குழிகள் விளங்குகின்றன. குளங்கள் தோறும் கொக்குகள் சென்று மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும் குடவாசல் நகரத்திலே இவ் விண்ணாளும் இப்படித் தோன்றுகின்றாள். மலையகத்துக் காணப்படும் ஓணானைப் போன்றவரே! எதற்காகத்தான் இவளையும் பெண்ணென்று படைத்தீரோ?

செய்யுளைக் கேட்டதும் விண்ணாள் சிரித்துவிட்டாள். அழகிற் சிறந்த அவளுக்குக் கவிஞர் பாடிய வசைப்பாடல் வேடிக்கையாகவே இருந்தது.

புலிக்குட்டிச் சிங்கன்

புலிக்குட்டிச் சிங்கன் என்பவன் ஒரு செல்வனாக இருந்திருக்கவேண்டும். இத்துடன் தான் புலவன் என்று செருக்கியும் திரிந்தான். இவன் காளமேகத்தை மதியாது போக, அதனாற் கவிஞர் அவன்மீது வசையாகப் பாடிய செய்யுள் இது.புலிக்குட்டிச் சிங்கனைக் காதலித்து, அவனுடன் போய் விடுகின்றாள் ஒரு பெண். அவனுடைய இழிந்த மனத்தை அறியாது, தன் பேதைமையால் அறிவிழந்த அவள், சில நாட்களில் அவனாற் கைவிடப் பெற்றுத் தாய் வீட்டிற்குத் திரும்புகின்றாள். அவளுடைய உருக்குலைந்த தோற்றத்தைக் கண்டதும் அவளுடைய தமையனின் மனம் கொதிக்கின்றது. புலிக்குட்டிச் சிங்கனின் ஈனத்தனத்தை அறியாமல், சொன்னாலும் கேளாமல் சென்று மானமிழந்து வந்து நிற்கும் தங்கையைக் கண்டதும் அவன் குமுறுகின்றான், இந்தப் பாங்கிலே செய்யுள் நடக்கிறது.

போன போன விடந்தொ றுந்தலை
பொட்டெ ழப்பிறர் குட்டவே
புண்ப டைத்தம னத்த னாகிய
பொட்டி புத்திர னத்திரன்
மான வீனனி லச்சை கேடனொ
ழுக்க மற்றபு ழுக்கையன்
மாண்ப னாம்புலிக் குட்டிச் சிங்கன்
வரைக்கு ளேறியி றங்குவீர்
பேணு மீருமெ டுக்கவோ சடை
பின்னி வேப்பெணெய் வார்க்கவோ
பிரிவி ழிக்கரி யெழுத வோவொரு
பீறு துண்டமு டுக்கவோ

கான கந்தனில் வைக்க வோவிரு
கால்வி லங்கிடு விக்கவோ
கற்க ரங்கொடு சாட வோவொரு
காரியத்தினை யேவுமே. (219)

தான் போன இடங்களில் எல்லாம் அவமானப்பட்டுத் தலையில் பொட்டு எழத்தக்க வகையில் பிறராற் குட்டப் பட்டுப் புண்படைத்தவன் புலிக்குட்டிச் சிங்கன் என்பவன். அத்தகைய இழிந்த மனத்தவனாகிய அவன் அறிவற்ற மூடன் பெற்ற புதல்வனும் ஆவான். அவன் அம்பு செலுத்துபவன் என்றும் கூறிக்கொள்வான். மானங்கெட்டவன்! வெட்கங்கெட்டவன்! ஒழுக்கங்கெட்டவன்! மிகக் கேவலமானவன் அவன்!

அத்தகைய சிறப்புடைய புலிக்குட்டிச் சிங்கனின் எல்லைக்குள் சென்றுவிட்டு, இறங்கி வருகின்ற பெருமை யுடையவரே!

உம் கூந்தலில் நிறைந்திருக்கும் பேனையும் ஈரையும் எடுக்கவோ? சடை பின்னி வேப்பெண்ணெய் வார்க்கவோ? அவனைப் பிரிந்து வாடும் தங்கள் கண்களுக்கு மை எழுதவோ? அல்லது உமக்குக் கிழிந்த கந்தலை உடுத்து விடவோ?

காட்டில் கொண்டு விட்டுவிடவோ? அல்லது காலில் விலங்கிட்டு வைக்கவோ? அல்லது, கையில் கற்களை எடுத்து உம்மீது எறிந்து உம்மைக் கொன்றுவிடவோ? இவற்றுள் எதனைச் செய்யலாம்? அதனை நீரே கூறுவீராக என்பது பொருள்.

காமத்தைக் காதலென மயங்கி அறிவிழந்து கண்டவன் பின்னே சென்ற பெண்களுள் பலர் இந்த நிலைக்கே ஆளாவர். அவள் அடைந்துவிட்ட அவல நிலையும், அதைக் கண்டு கொதித்து, அவளுடைய உறவினர் கொள்ளும் ஆவேசவுணர்வும் இச் செய்யுளிற் காணப்படும்.

குடும்பத்தின் தகுதிக்குக் குறைவு ஏற்படும்போது அன்பு காட்டியும் அருமை பாராட்டியும் வளர்த்து ஆளாக்கிய குலக்கொடியையே வெறுத்து ஒதுக்கும் மனநிலையையே மக்கள் பெரும்பாலும் கொள்வர். அந்த மனநிலையின் விளக்கமாகவும் இதனைக் கொள்ளுக.

♦♦♦