காளிமுத்துப் புலவர் பாடல்கள்

காளிமுத்துப் புலவர்
7 பாடல்கள் 8
நூலில் பக்கம் 67 & 68
செய்தி உரை - செங்கைப் பொதுவன்

பாடல்கள் கோவை நூல்களில் காணப்படுவது போன்ற அகப்பொருள் பாடல்கள்.
குழந்தை என்னும் வள்ளலைப் போற்றிப் பாடியவை
கட்டளைக் கலித்துறையால் ஆனவை,

பாடல்கள் 1-4

தொகு
நெல்லைச்சொன் னாபரணத்தைக் கைம்மாவை நிதநிதமும்
வெல்லச்சொன் னாவலர்க் கீயுங்குழந்தை விசயநின்பாற்
செல்லச்சொன் னாளென்னை யிப்போதென் மையலைத் தீர்த்திடென்று
சொல்லச்சொன் னாளந்தமின்னாள் பன்னாண் மலர்ச்சோலையிலே. (1)
குழந்தை விசயன் என்பவன் ஒரு வள்ளல். அவன் நெல்லையும், (இனிய) சொல்லையும், அணிகலன்களையும், யானைகளையும் ஒவ்வொரு நாளும் வெல்லம் போல் சொல் பெய்து பாடும் நாவலர்களுக்கு வழங்கும் கொடையாளி. மலர்ச்சோலையில் பார்த்த அந்த மின்னல் கொடி போன்ற பெண், என் ஆசையைத் தீர்த்துக்கொள்வதற்காக இப்போதே உன்னிடம் செல்லலும்படி சொன்னாள். (அதனால் வந்துள்ளேன்)
பழுத்தான் மரத்திற் பறவையைப் போலநற் பாவலர்க்குக்
கொழுத்தான் வழக்குங் குழந்தையென் கொங்கையைக் கூருகிரால்
அழுத்தாத வேளையில் வெந்நீர் பன்னீர் மதியும் மழல்சேர்
கொழுத்தான் மதனுங் கொழுத்தான் பருவக் குறிப்பறிந்தே. (2)
குழந்தை என்னும் அவன் பழுத்த மரத்தை நாடும் பறவைகள் போல, பாவலர்க்கு அவர் கொழுக்கும்படி வழங்குவான். அவன் என் கொங்கையைத் தன் கூரிய விரல்களால் அழுத்தி நகத்தால் கீறாத வேளையில் மன்மதன் கொழுத்துப்போய் என்னோடு விளையாடுகிறான். வெந்நீரோ, பன்னீரோ, நிலவோ எதுவாயினும் என்னைச் சுட்டெரிக்கின்றன.
பொன்னார் மருமத்தன் பூம்பாவை வேலப்ப பூபனருள்
மன்னா குழந்தைக் குருநாத நீத வரோதயனே
பன்னாண் மலர்க்குழற் பின்னா ளென்னாளும் பரிந்தணைய
நன்னா ளிந்நாள் வரச்சொன்னாண் மின்னாண் மணநாளென்னவே. (3)
வேலப்ப பூபன் அருள் நிலைபெறாது போன மகன் குழந்தை. (வள்ளல் குழந்தையின் தந்தை வேலப்ப பூபன் காலமானதால் அவன் மகன் 'குழந்தை' என்பவனுக்குத் தந்தையின் அருள் நிலைபெறாமல் போய்விட்டது என்க) வள்ளங் குழந்தை தலைவிக்குக் குருநாதன் என்னும் முருகனைப் போன்றவன். நீதம் என்னும் வெண்ணெய் போன்றவன். வரம் தரும் தயாளன். பல நாள் மலர் சூடிய என் தலைப் பின்னலை இழுத்து விளையாடியவன். அவனுக்கு இன்று நல்ல நாள். மணநாள். - எனச் சொல்லி அந்த மின்னாளு வரச்சொன்னாள்.
மாகமழைக் கரன்பூம்பாவை வேலப்பன் மைந்தன் மின்னார்
மோகன் குழந்தைக் குருநாதன் வெற்பினின் மோடிவைத்துப்
பாகமொழிக் குழன்மாதே விரித்துப் படமெடுக்கும்
நாக மறைத்துக் குழல்நமக் கீதல் நலமல்லவே.((4)
வேலப்பன் மைந்தனும், பட்டொளி வீசும்பவனுமான 'வேலப்பன் குழந்தை' என் குருநாதன். அவன் மலையில் ஒரு பூம்பாவை உலவுகிறாள். வானத்தில் மேயும் மழைமேகம் போன்ற தன் கூந்தலைக் கையில் தாங்கிக்கொண்டு உவாவுகிறாள். நாகம் என்னும் மழையை மறைத்து உலாவும் மழைமேகம் போல (நாகம் என்னும் மெல்லிய துணியாடையைப் போர்த்திக்கொண்டு) உலாவுகிறாள். இப்படி தன் குழலில் முகத்தை மறைத்துக்கொண்டு அவள் உலாவுவது எனக்கு நலம் தருவதாக இல்லை. (என்செய்வேன் என்று தலைவன் தன் தோழனிடம் (=பாங்கனிடம்) கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)

பாடல்கள் 5-7

தொகு
போதத்தை மேவுமயிலைக் குழந்தைக்குப் போர்மதன்செய்(கு)
ஏதத்தையுங் குயினா தத்தையுந் தனக்கிண்ணத்தினால்
மோதத்தையுந் துயிலா தத்தையும் மயன்மூட்டு தென்றல்
வாதத்தையுந் தரியா தத்தையுஞ் சொல்லி வாதத்தையே. (5)
போதம் என்னும் ஞானத்தை விரும்பும் மயிலைக் (மயிலம்) குன்றில் வாழும் குழந்தை என்னோடு போரிடும் மனமதன் செய்யும் துன்பம், கூவிக் காமம் மூட்டும் குயிலின் நாக்கு, (நான் சொன்னதைக் கேட்டுப் பின்னும் பின்னும் அவன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கும்) தூங்காத என் வளர்ப்புக் கிளி (தத்தை), மயன் மூட்டும் தென்றல் (தீ), என்னோடு வாதம் செய்யும் என்னைச் சேர்ந்தவர்கள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த ஆணையிட்டுச் சொன்னால் நல்லது.
வண்டாங் கிசைபயின் மாலையன் வேலப்பன் மைந்தனிதி
கொண்டான் கிளையை வளர்த்தான் குழந்தைக் குவட்டின் மின்னே
பண்டாங் கிசையினண் மால்கொண்டு பாம்பன்குளத்தினடுக்
கண்டாங்கியைக் கிழித்தாலென்ன பாவம் கருதுவதே. (6)
வண்டு ஆங்கு இசை பயிலும் மாலை அணிந்தவன் வேலப்பன் மைந்தன். அவன் நிதியம் மிகுதியாகக் கொண்டவன். அந்த நிதியால் தன் சுற்றத்தாரை வளர்த்தவன். அவனுடைய மலைக் குன்றில் திரியும் மின்னல் கொடியாளே என் வாய்பாட்டில் வரும் இசையினள் (பண் தாங்கு இசையினள்) அவள் மீது எனக்கு ஆசை. அங்குள்ள பாம்பன் குளத்தின் நடுவே அவளைக் கண்டேன். (அவளை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அதனால் துன்புறுகிறேன். என்னைத் துன்புறுத்தும் என் நெஞ்சைக்) கிழித்தால் என்ன பாவம் வரப்போகிறது. (ஒன்றுமில்லை)
வனக்குத் தளவஞ்சி பூஞ்சோலைத் தஞ்சி வளருமிரு
தனக்குன்று செய்யுந் தொழில் சொல்லவோ தமியேனைக் கண்டாற்
கனக்கும் புளகிக்கும் பாரிக்கும் பூரிக்குங் கண்கறுக்குஞ்
சினக்குந் தனக்கு மெனக்கு முண்டாக்குந் தினஞ் சண்டையே. (7)
அவள் என்னை வாட்டி வனக்கும் (வாடச்செய்யும்) தளமாகிய கொங்கைகளை உடைய வஞ்சிப்பெண்ணாகிய பூஞ்சோலைத் தழிஞ்சி (தஞ்சி). அவளிடம் வளர்வது இரண்டு தன(முலை)க் குன்றுகள். அவை செந்நும் தொழிலைச் சொல்லவோ? அவை தனியே இருக்கும் என்னைக் கண்டால் மேலும் கனதியாகும். புகாங்கிதம் கொள்ளும். பருமனாகும். பூரிக்கும். தன் கண்முனை கறுக்கும். என்மீது சினம் கொள்ளும். அதற்கும் எனக்கும் ஒவ்வொரு நாளும் சண்டைதான்.