கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/வரலாறு வளர்கிறது
1. வரலாறு வளர்கிறது
கீர்த்திமிக்க ஆட்டம்
கீர்த்திமிக்க ஆட்டமாக, இன்று கிரிக்கெட் விளங்குகிறது. ஒலிம்பிக் பந்தயங்களுள் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இடம் பெறாவிட்டாலும், உலக அரங்கிலே உன்னதமான ஓரிடத்தைப் பெற்று, பெருமை மிகு ஆட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
ஐந்து நாட்களும் போட்டி நடக்கிறது என்றாலும், பகல் முழுவதும் இயற்கையின் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஒரே இடத்தில் உட்காரவைத்து, உணர்ச்சிப்பிழம்பான நிலையில் அவர்களை அமர்த்தி, மகிழ்ச்சியில் பேரின்ப நிலையில் நிறுத்திவைத்திருக்கும் பண்பினால்தான், கிரிக்கெட் ஆட்டம் அன்றும் இன்றும் ஒரு கீர்த்தி மிக்க ஆட்டமாக விளங்கி வருகிறது.
கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் போன்று ஒருவரால் உருவாக்கப்படாமல், வளைகோல் பந்தாட்டம், கால்பந்தாட்டம் போன்று வரலாற்றுக்கு அகப்படாத, ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட நிலையில் கிரிக்கெட் உலாவருகிறது. ஆராய்ச்சி நிபுணர்களும் ஆட்ட அறிஞர்களும் கூட கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து போயிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் ஆட்டம் எங்கு தோன்றியது, எப்பொழுது தோன்றியது என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் சுற்றிவளைத்துச் சொல்கின்ற அளவிலேதான் ஆராய்ச்சியாளர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, கிரிக்கெட் ஆட்டத்தின் தோற்றமானது என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. ஆனாலும், இங்கே தான் இந்த ஆட்டம் தோன்றியிருக்கக்கூடும் என்ற அபிப்ராயங்களை பல ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். அதற்கும் மறுப்பும் எதிர்ப்பும் என்று பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன.
பிரான்சில் பிறந்திருக்கலாம்
ஒரு சில சரித்திர ஆசிரியர்கள் கிரிக்கெட் எனும் இந்த ஆட்டம் கிராகெட்(Croquet) என்று அழைக்கப்பட்ட ஆட்டத்திலிருந்து பிறந்தது என்றும், அந்த ஆட்டம் பிரான்சு நாட்டில் மிகவும் பிரபலமாக ஆடப்பட்டு வந்தது என்றும் அபிப்ராயப்படுகின்றார்கள்.
பிரான்சு நாட்டில் ஆடப்பெற்றுவந்த கிராகெட் எனும் ஆட்டம், திருத்தமடையாத ஒருவிதத் தொடக்க நிலையில், இருந்ததாகவும், அதை பிரெஞ்சு மக்கள் மிகவும் பிரியத்துடன் ஆடி மகிழ்ந்திருக்கலாம் என்றும், கிராகெட் ஆட்டத்திலிருந்தே தற்பொழுது அழைக்கப்படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டுப் பிரிவது போல உருமாறி வந்திருக்கலாம் என்றும், இந்த இனிய ஆட்டத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் ஆட்டத்தின் அமைப்பையும் கருத்தையும் ஏற்று இங்கிலாந்துக்குக் கொண்டு வந்து, திருந்திய ஆட்டமாகப் பொலிவுபெற அமைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அப்பொழுது நெருக்கமான அரசியல் பிணைப்பும், மண உறவும், இருந்து வந்த காரணத்தால். இந்த அடிப்படையில் வைத்து மேற்கூறிய கருத்தைக் கொண்டிருக்கலாம்.
அத்துடன் நில்லாமல், கிரிக்கெட் என்ற சொல்லானது பிரெஞ்சு மொழியில் கிரிக்கே (Krickkay) என்று உச்சரிக்கப்படுவதன் திரிபாக சொல்லை மாற்றி, உச்சரித்து ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றும், இதனால், பிரான்சு தேசமே கிரிக்கெட் ஆட்டத்தின் பிறப்பிடம் என்று கருத இடமுண்டு என்று கூறுவோருக்கு, ஆதாரப் பூர்வமாக வேறுபல சான்றுகளைக் காட்டி மறுப்புரை பகர்வோரும் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.
இங்கிலாந்து என்பாரும் உண்டு
பிரான்சு நாட்டில் கிரிக்கெட் பிறந்தது, பிரபலமாக இருந்தது என்ற அடிப்படை கருத்தையே தகர்ப்பதுபோல, இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டம் சிறந்ததொரு இடத்தைப் பெற்று, மக்கள் மத்தியிலே பவனிவந்த நேரத்தில், பிரான்சு நாட்டினர் கிரிக்கெட் பற்றியே தெரிந்திருக்கவில்லை என்று கூறி ஓரு சாரார் மறுப்பினைத் தொடங்குகின்றனர்.
கி.பி.1478ம் ஆண்டுவரை, கிராகெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் தோற்றமடையவோ, இடம்பெறவோ இல்லை என்றும், 1478ம் ஆண்டுக்குப் பிறகே இங்கிலாந்தில் ஆடப்பெற்றுவந்த இந்த ஆட்டம் பற்றி விளக்குவதாக இந்த கிராகெட் எனும் சொல் பிரெஞ்சு மொழியில் தோன்றியிருக்க வேண்டும் என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மேற்கூறிய கருத்தினை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்ற சரித்திர ஆசிரியர்கள், இங்கிலாந்தில் எப்பொழுது கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது. எங்கே தோன்றியது என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட இயலாது திண்டாடிப் போகின்றார்கள். ஆனாலும் இலைமறைகாய்களைப் போன்று இங்குமங்குமாக ஒரு சில குறிப்புக்கள் வரலாற்றுப் பின்னணியிலே ஆங்காங்கு மறைந்து கிடப்பதை சுட்டிக் காட்டி. இப்படியும் இருக்கலாம் என்கின்ற தங்களது குறிப்பினையும் கூறிக்கொண்டிருக்கின்றனர். மலர்களும் மாலையும்
கிரிக்கெட் ஆட்டமானது யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுதுளி பெருவெள்ளமாக உருவெடுப்பது போல, பல மலர்கள் சேர்ந்து மாலையாவதுபோல, பல விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து, இவ்வாறு ஒரு சிறப்பான ஆட்டமாக உருவெடுத்து இருக்கிறது என்பதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் பிறப்பினைப் பற்றிக் கூறும் விளக்கமாகும். மலை உச்சியிலிருந்து கீழே உருளத் தொடங்கிடும் ஒரு சிறு பனிக்கட்டி, கீழே உருண்டு வரும் பொழுதே பனித்துகள்களின் மீது படிந்து படிந்து தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு, கீழே விழும் பொழுது பெரிய பனிக்குன்றாக விழும் என்று காவியம் ஒன்று உருவாவதை விளக்குவதற்கு உதாரணமாகக் கூறுவார்கள். சிறுகதையாகத் தோன்றிய ஒரு கதை, பலரது வாயில் புகுந்து, கற்பனையில் மிதந்து விளக்கமாக வெளியேறும்பொழுது, நிகழ்ச்சிகளில் பெருகி பெருங்கதையாக, காவியமாக மாறும் என்பது போலவே, கிரிக்கெட் ஆட்டமும் சிறு ஆட்டமாக அதுவும் பொழுது போக்கு ஆட்டமாகத் தோன்றி வளர்ந்து வளர்ந்து, இன்று உலகப் புகழ்பெற்ற ஆட்டமாக விளங்கியிருக்கிறது என்றும் கூறுவார்கள்.
அப்படியானால் சிறுதுளி போல, நறுமலர்போல, உருளத் தொடங்கும் சிறு பனிகட்டி போல, மூலம் ஒன்று கிரிக்கெட் ஆட்டத்திற்கும் இருந்திருக்க வேண்டும். அந்த மூலம் எதுவாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டு பிடிக்கவும் பல ஆராய்ச்சியாளர்கள் முயன்றிருக்கிறார்கள்.
மூலமும் காலமும்
கிளப் பால் (Club Ball) என்பதாக ஒரு ஆட்டம் இங்கிலாந்தில் முன்னாளில் ஆடப்பட்ட ஒரு ஆட்டமாகும். பிரபலமாக ஆடப்பட்டு வந்த கிளப்பால் ஆட்டத்திலிருந்து கிளைவிட்டு பிரிந்து, சிறப்பாகத் தோன்றிய ஆட்டமே கிரிக்கெட் என்பதாக ஸ்ரட் (Srutt) என்பவர் குறிப்பிடுவதாக ஆர்கி ரிச்சட்சன் (H. Arche Richardson) எடுத்துக்காட்டுகிறார். ஆனாலும், கிளப் பால் எனும் ஆட்டம் பற்றிய குறிப்பும், எந்த விதமான விவரமும் இன்னும் தெரியாமலே இருக்கிறது என்பதால், இதைப் பற்றி ஒரு முடிவெடுக்காத நிலையில் நின்று போகவேண்டியிருக்கிறது.
அடுத்ததாக, ஸ்காட்லாந்தில் ஆடப்பட்டுவந்த கேட் அண்ட் டாக் (Cat and Doug) என்ற ஆட்டத்தின் அடிப்படையில் தான் கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் அமைந்தது என்பாரும் உண்டு. ஆனால், கேட் அன்ட் டாக் ஆட்டமானது டிப்கேட் (Tip Cat) என்ற ஆட்டத்தின் வழி வந்தது என்றும் கூறப்படுகிறது. அந்த டிப்கேட் ஆட்டமானது 1688ம் ஆண்டுக்குப் பிறகே நன்கு தெரிய வந்தது என்றும், அதற்கு முன்னரே, கிரிக்கெட் ஆட்டம் இங்கிலாந்து நாட்டில் குடியிருந்த மக்களால் ஆடப்பட்டு வந்திருந்தது. அதற்கான பெயரும் இருந்தது என்று கூறி, கேட் அண்ட் டாக் ஆட்டத்தின் கிளை ஆட்டம் அல்ல இது, என்று மறுதலிப்பாரும் மறுந்துரைப்பாரும் உண்டு.
மூன்றாவதாக, கிரிக்கெட் ஆட்டம் தோன்றுவதற்கும், ஆட்ட அமைப்பு உருவாவதற்கும் ஸ்டூல்பால் (Stool Ball) தான் காரணமாக இருந்தது என்றும் கூறுகின்ற ஆசிரியர்களும் உண்டு. ஆனால், ஸ்டூல்பால் ஆட்டமானது கிரிக்கெட்டுக்குப் பின்னால்தான் தோற்றம் கொண்டது என்றும், கிராமப்புற சிறுவர்கள் ஆடி வந்த ஒருவாறான ஆட்டத்தை ஆட முடியாத பெண்களுக்காக, மென்மையான வடிவில் அமைக்கப்பட்டதே ஸ்டூல்பால் என்றும், ஆகவே, கிரிக்கெட்டிற்குப் பின்னரேதான் ஸ்டூல்பால் தோன்றியது என்றும் கூறி, எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் சில ஆசிரியர்கள். நான்காவதாக, ஹேண்ட் இன் அல்லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) என்ற ஆட்டத்தின் மறுவடிவுதான் கிரிக்கெட் என்பதாகவும் சிலர் கூறுவார்கள்.
ஆனால் இங்கிலாந்தில் லண்டன் நகரத்தில் உள்ள அரசர்கள் நூலகத்தில் (Kings Library) இருந்த படங்களுள் ஒன்றினைக் காட்டிக் குறிப்பிட்டு, கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ம் ஆண்டே எழுதப் பெற்றிருக்கிறது என்று சான்று காட்டுவார்கள். அந்தத்திரை ஒவியத்தில், ஒருவர் பந்தை எறிபவராக (Bowler) நிற்க, இன்னொரு ஆட்டக்காரர் பந்தாடும் மட்டையை (Bat) கையில் வைத்துக்கொண்டு, எறிகின்ற பந்தை அடித்தாடத் தயாராக நிற்பது, பந்தாடும் மட்டையை கீழே தரையில் ஊன்றி, இப்பொழுது ஆட்டக்காரர்கள் நிற்பது போன்ற நிலையிலே நிற்பதால், அப்பொழுதே ஆட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது என்பார்கள்.
அதனால் 1344ம் ஆண்டில் வரையப்பெற்ற திரை ஓவியத்தைக் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இங்கிலாந்தில் சிறப்பான வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படி பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்தாழ 12 அல்லது 13வது நூற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
சட்டம் கண்ட ஆட்டம்
இவ்வாறு பெரும் வளர்ச்சியுற்றதினாலோ என்னவோ, இந்த ஆட்டம் 1365ம் ஆண்டு அரசாள்வோருக்கு அதிருப்தியை உண்டுபண்ணும் வகையில் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி இருந்தது. வில்வித்தைப் பயிற்சியில் மக்கள் விருப்பமுடன் ஈடுபடாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட் ஆட்டத்திலும், கிரிக்கெட் ஆட்டத்திலும், அதிகமாக ஈடுபடுவதால், வில்லாற்றலில் மக்கள் தேர்ச்சி பெறாமல் போகின்றனர். ஆகவே நாட்டின் பாதுகாப்புக்கு உரிய கலையான வில் பயிற்சியைக் கற்கும் பொருட்டும், அதனைக் காக்கும் பொருட்டும், மேலே குறிப்பிட்ட இரண்டு விளையாட்டுக்களையும் மக்களை ஆடவிடாமல், தடைச்சட்டத்தை நான்காம் எட்வர்ட் என்பவர் இயற்றித் தடை செய்தார்.
மக்கள் இந்த ஆட்டங்களை ஆடக்கூடாது என்று சட்டம் போட்டு தடைவிதித்ததல்லாமல், மீறியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்றும் குறிப்பிட்டிருந்தார். தடைச்சட்டத்தை மீறி விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு 50 ஷில்லிங் அபராதத்துடன், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் நில்லாமல், விளையாடுவதற்கு இடம் தருகின்ற (மைதான) உரிமையாளருக்கு 100 ஷில்லிங் அபராதமும், மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் கொடுக்கப்படும் என்றால், யார்தான் இடம் தருவார்? எவர் வந்து தடையை மீறி விளையாடுவார்? இவ்வாறாக, 185 ஆண்டுகள் தடை போட்ட சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாமல் இந்த இரண்டு ஆட்டங்களும் முடங்கிக் கிடந்தன. அடங்கிக் கிடந்தன.
ஆயுள் காலம் வரை தடைபோட்டவாறே ஆட்சியை முடித்துக் கொண்ட நான்காம் எட்வர்ட் மன்னருக்குப் பிறகு, தொடர்ந்து அரியணை ஏறியவர்கள் அனைவரும் இவ்வாறே தடை போட்டனர் என்பதால், ஹேண்ட் இன் ஹேண்ட அவுட் ஆட்டத்துடன் கிரிக்கெட்டும் இணையாகவே இருந்தது என்பதும், அதனால் கிரிக்கெட் ஆட்டத்தின் முன்னோடி என்று இதனைக் கூற முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஏறத்தாழ 1300ம் ஆண்டில் முதலாம் எட்வர்ட் மன்னர் (Kind Edward) அரண்மனை செலவு கணக்குப்பட்டியலைப் பார்க்கும் பொழுது, வேல்ஸ் இளவரசன் அதாவது எட்வர்ட் இளவரசன் பற்றிய செலவுக்கணக்கு வருகிறது. அதன் வழி ஆராய்ந்து பார்த்தால், நியுவெண்டன், கெண்ட் மாகாண சுற்றுப்புறங்களில் கிரிக்கெட் ஆட்டம் பரவலாக விளையாடப்பட்டு வந்தது என்பதற்குரிய ஆதாரமாக அக்குறிப்பு அமைந்திருக்கிறது.
அப்பொழுது பழக்கத்தில் இருந்த வந்த . பேச்சுவழக்கான இலத்தின் மொழியில் எழுதிய குறிப்பின்படி, குறிப்பிட்ட ஒரு தொகையை இளவரசனுக்காக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும், இளவரசனின் இறகானது (Feather) சரே பகுதி (Surrey) அடையாளச் சின்னமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் அறிய இடம் தருகிறது. ஆகவே, 1300ம் ஆண்டு காலத்திலேயே, கிரிக்கெட் சிறந்த வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று நம்மால் உணர முடிகின்றது. என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
மேலும் ஒரு சான்றினைக் கூறி, கிரிக்கெட் ஆட்டம் சிறு பையன்களால் அதாவது கில்ட்போர்டில் (GuildFort) இருந்த இலவசப்பள்ளியில் பயின்ற பையன்கள் ஆடியதாகவும், ஆண்டு ஏறத்தாழ 1550ம் ஆண்டு என்றும் கூறுகின்றார். கில்போர்டு என்பவர், 1550 ம் ஆண்டு எழுதிய "கில்போர்டு வரலாறு" என்பதில், 'கிரிக்கெட் ஆட்டம்' மீண்டும் பொது மக்களின் பொழுது போக்கு ஆட்டமாக மாறியிருக்கிறது! என்பதையும் குறித்திருக்கின்றார். அவர் கிரிக்கெட் ஆட்டம் என்ற பெயரை முதன் முதலாகக் குறிப்பிடுவது தான் மிகவும் முக்கியம் என்று பெயர் விளக்கத்திற்கும் சான்று காட்டுவார்கள்.
அதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று, இன்னும் ஒரு சான்றினையும் காட்டுவார்கள். ஜான் டெர்ரிக் என்பவர் தரிசு நிலம் ஒன்றைப் பற்றிய வழக்குக்காக நீதிபதி முன்னே வாதாடும் பொழுது, தன்னைப் பற்றிய உதாரணம் ஒன்றைக் கூறி வாதிட்டார். வாதாடிய ஆண்டு 1493ம் ஆண்டு. நான் பள்ளியில் மாணவனாக இருந்த பொழுது, என் சகமாணவர்களுடன் அந்த நிலத்தரையின் மீது, கிரிக்கெட்டும் இன்னும் மற்ற விளையாட்டுக்களையும் விளையாடி இருக்கிறேன். என்று குறிப்பிடுகின்றார். ஆகவே, இங்கிலாந்தில் கிரிக்கெட் தோன்றியது. அங்கே தான் இந்த பெயரும் இடம் பெற்றது என்றும் கூறவே இந்த சான்றுகளைக் காட்டியிருக்கிறார்கள்.
இனி, மெரிலிபோன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் செயலராக விளங்கிய ரெயிட் கெர் (Rait Kerr) என்பவர் எழுதிய குறிப்பின்படியும், இங்கிலாந்தில் தான் கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது, வளர்ந்தது. பெரும் ஆட்டமாகப் பெருகி பரவியது என்ற குறிப்புக்களையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
கிராமப்புற ஆட்டம்
கிரிக்கெட்டின் வரலாறு, ஆராய்ச்சியாளர்கள் குறிப்புக்களுக்கு எட்டாத ஒன்றாகும். 1744ம் ஆண்டில் தான் ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு சில விதிமுறைகள் உருவாயின. அதற்கு முந்தைய காலங்களில், கிரிக்கெட் எந்த முறையில், எந்தவிதமான விதிகளுடன் எப்படி ஆடப்பெற்றது என்பதே தெரியாத இருண்டகாலமாக இருந்தது. ஆனால் குறிப்புக்கள் எல்லாம் அச்சுப்பிரதிகள், எழுத்தோவியங்கள் இவற்றின் அடிப்படையில் கற்பனை சேர்ந்த கலவையாகவே வெளிவந்தன. ஆனால், ஒன்று மட்டும் உண்மையாக உலவியது. அது, கிராமப்புறத்தில்தான், கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது என்பது தான்.
அது, இங்கிலாந்து நாட்டில் கென்ட் மாகாணத்தில் உள்ள வீல்டு கிராமம்,மற்றும் சரே (Surrey) சசக்ஸ் (Sussex) போன்ற பகுதிகளில், கிராமப்புற மக்களுக்கு ஒரு வகை பொழுது போக்கு ஆட்டமாகத் தொடங்கியது என்கிற கருத்தை, எல்லா ஆராய்ச்சியாளர்களுமே மனப் பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். கி.பி.1550ம் ஆண்டுக்கு முன்னர், அந்தப் பகுதிகளின் சிறுவர்கள் ஒடியும், ஆடியும், ஆடுவதற்கு வசதியாகக் கிடைத்த இடங்களில் எல்லாம் ஆடிமகிழ்ந்திருந்தார்கள் என்று ஜான்டெரிக் என்பவர் எழுதியிருக்கின்றார்.
ஒரு சிலர் இக்கருத்தை மறுத்துரைத்தாலும், ஒவ்வொரு மாகாணத்தில் வசித்தவர்களும், இந்த கிரிக்கெட் விளையாட்டை அவரவர்க்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை அமைத்துக்கொண்டே விளையாடி வந்தனர். ஒருவர் பந்தை எறிவதும் மற்றொருவர் பந்தை மட்டையைக் கொண்டு அடித்து ஓட்டுவது என்பதும் தான் ஆட்டத்தின் அடிப்படைத் தத்துவமாக இருந்ததாம். அவர்கள் இந்தக் கருவை மையமாக வைத்து, வேண்டியவர்களுக்கு வேண்டிய வகையில் விதிகளை அமைத்துக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனர் என்பதற்கு எந்தவிதமான குழப்பமும் யாரிடையிலும் எழவே இல்லை.
பந்தயமும் பணக்காரர்களும்
பொழுது போக்குக்காக விளையாடிய கிராமத்தார்கள், தங்களுக்கு இடையே ஆட்டம் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் அமைய வேண்டும் என்ற ஆசையில், பந்தயம் கட்டிக் கொண்டும் விளையாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்களுக்குப் பணவசதி ஏது? அதனால் குறிப்பிடத் தக்கப் பந்தயத் தொகை அதிகமாக எதுவும் இல்லை. அவர்களுக்கு என்ன கிடைக்குமோ, கையில் இருக்குமோ அதையே பணயமாகக் கட்டி ஆடினார்கள்.
அவர்கள் கட்டிக் கொண்டு ஆடிய பந்தயப் பொருட்களின் பட்டியலைப் பாருங்கள். வெல்லும் ஆட்டக்காரர்களுக்கு அரைகிரௌன் நாணயம். ஆனால் பரிசுப்பொருட்கள் தான் அதிக அளவில் இருந்தன. அதுவும் ஆட்டக்காரர்களை மதித்து கௌரவிப்பதற்காகவே! கரடித்தோல் கையுறைகள் (Gloves) ; தங்கம் அல்லது வெள்ளி சரிகையிட்ட குல்லாய்கள்; சிறிய கால்சட்டைகள்; அல்லது கொடுக்கப்பட்ட கையில்லாத மார்புச் சட்டைகள் (Waistcoat) இவையெல்லாம் பரிசாகப் பணம் வைத்து ஆடியவை. எல்லாமே விளையாட்டுக்குத் தேவையான பொருட்களே.
ஆனால், விளையாட்டையே பந்தயப் பொருளாகவும், விளையாட்டு மைதானத்தையே சூதாட்டக் களமாகவும் மாற்றிய பெருமையும் திறமையும் அந்தப் பகுதியில் உள்ள செல்வாக்கு மிக்க செல்வந்தர்களுக்கே உரிமையாக அமைந்திருந்தது. ஆமாம்! அந்த சூதாடும் பழக்கம் அவர்களது பரம்பரை உரிமையாக, பாரம்பரியச் சொத்தாக அமைந்திருந்தது போல, அவர்கள் எப்பொழுதும் பந்தயம் கட்டியே பழகிப்போய், பைத்தியமாகத் திரிந்த நாட்களில்தான், கிரிக்கெட் அவர்கள் கையில் சிக்கிக்கொண்டது.
செல்வந்தர்கள், பிரபுக்களின் குடியில் பிறந்தவர்கள், தங்களது பொழுது போக்குக்காக ஆடி வந்த சூதாட்டங்களில் பிடிப்பிழந்து அலுத்துப் போய் இருந்த வேளையில், மாற்றாக ஒரு விளையாட்டு வேண்டுமென்று கோயில் மாடாகத் திரிந்த போதுதான் கிராமத்து மக்கள் ஆடி மகிழ்ந்த கிரிக்கெட் ஆட்டம் அவர்கள் கண்களிலே பட்டது. கருத்தினைத் தொட்டது. பிறகு, விட்டோமா பார் என்று முற்றுகையிட்டது போதாதென்று, விடாப் பிடியாகத் தங்களுடன் கடத்திக் கொண்டே போய்விட்டார்கள்.
ஆமாம்! வரலாறு அப்படித்தான் விரித்துரைக்கின்றது. கிரிக்கெட் ஆட்டம் கிளர்ச்சியூட்டும் ஆட்டமாக அவர்களுக்குத் தெரிந்தது. நெடுநேரம் ஆடுவதால், நேரம் போவதும் எளிதாக, இனிதாக இருந்தது. ஆகவே, பந்தயம் கட்டி ஆடுவதற்கும், பேரின்பமாகப் பொழுதைப் போக்குவதற்கும் கிரிக்கெட் அவர்களுக்கு வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்துவிட்டிருந்ததால், முற்றிலுமாக, கிரிக்கெட்டைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் முற்பட்டார்கள்.
பட்டணத்திற்குப் பயணம்
பந்தயம் கட்டிக்கொண்டு, பார்த்து ரசித்துக் கொண்டு, பிரபுக் குடியினரால், பணக்கார இளைஞர்களால், எத்தனை நாள் வீல்டு கிராமத்திலே இருக்கமுடியும்? அவர்கள் அடிக்கடி இலண்டன் மாநகரம் போய் வந்ததுபோல, இந்த விளையாட்டையும் எடுத்துக்கொண்டு சென்றனர். பட்டிக்காட்டு பொழுது போக்கு ஆட்டம் பட்டணம் சென்று, பணக்காரர்களின் பாசறையிலே படம் காட்டத் தொடங்கியது.
பட்டணம் வந்த விளையாட்டு பணக்காரர்களுடனே தங்கி விட்டது. பரந்து விரிந்த இடம் விளையாடுவதற்கு பட்டிக்காட்டுப் பகுதிகளில் கிடைத்தது இயற்கைதான்.
கிராமத்தில் தான் இந்த விளையாட்டு ஆடப் பெற்றது. அதுபோல, இங்கே இலண்டன் மாநகரத்தில் எப்படி கிடைக்கும்? இங்கே பின்ஸ்பரி என்ற இடம். அதில் ஆர்டிலரி மைதானம் (Artillery Ground). செங்கற்களால் எழுப்பப்பட்ட உயர்ந்த சுவர்களால் சுற்றி வளைக்கப்பட்ட மைதானமாக அந்த இடம் இருந்தது. ஆடுகளத்தின் பெருமையை ஹோவ் (Howe) எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். "இது ஆர்டிலரி கம்பெனியாருக்கு உரிமையான இடமாகும். இந்த மைதானமும் இதனை அடுத்து இருக்கின்ற மைதானமும் பார்ப்பதற்கு அருவெறுப்பு நிறைந்த பகுதிகளாகும். சுற்றிலும் அசிங்கமானவைகள் சூழ்ந்து கிடக்க, எப்பொழுதும் துர்நாற்றம் உடையதாக விளங்கும். இதன் வழியே செல்லும் பயணிகளுக்கும் அதன் அருகாமையில் வாழ்கின்ற மக்களுக்கும் தொற்று நோயைப் பரப்புவதற்குரிய தன்மையில், துன்பம் தரும் நிலையில் இருப்பதால், உடனே இந்த மைதானத்துக் கதவுகளை மூடிவைத்து விடுமாறு ஆணைபிறப்பித்தும் விட்டார்கள்' என்றால் பாருங்களேன்.
அசிங்கமான இடம், நாற்றம் வீசும் இடம், அதற்குள்ளே யாரையும் உள்ளே அனுமதிக்கலாகாது என்று ஆணை பிறப்பித்து விட்டால், அதற்காக கலங்கியா விடுவார்கள்? அதே இடத்தில் ஆட்டம் நடக்கத்தான் நடந்தது. அதிகாரத்தை மீறி, காவல்காரனையும் மீறி ஆட்டம் தொடர்ந்தது.
ஜார்ஜ் ஸ்மித் என்ற மைதான நிர்வாகியை மடக்கிப் பிடித்துத் தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள் விவேகமுள்ள ஆட்டக்காரர்கள். எப்படி? அவன் விரும்பிய வண்ணம், இரண்டு பென்ஸ் நாணயம் முதல் 6 பென்ஸ் நாணயம் வரை (லஞ்சமாக) கொடுத்துவிட்டு, அந்த மைதானத்திற்குள் அவர்கள் ஆட்டத்தைத்தொடங்கினர். தொடர்ந்தனர்.
இந்த ஆடுகள மைதானமே பெரிய பெரிய போட்டிகளின் நிலைக்களமாக, விளைநிலமாக விளங்கியது. அங்கே ஆயிரக்கணக்கான ரூபாய்களை பார்வையாளர்கள், பணக்காரர்கள் பந்தயம் கட்டிக்கொள்ள, அதற்கான போட்டிகள் நடைபெற்றன. பணம் கட்டி சூதாட்டம் போல ஆடும் பொழுது, பிரச்சினைகள் எழாமலா இருக்கும்?
பிரச்சனைகளில் பிறந்த விதிகள்
அவ்வாறு பூதாகரமாக பிரச்சினைகள் தோன்றும் பொழுது அவற்றிற்கு எப்படி பொருத்தமாக முடிவுகள் எடுப்பது என்பதென்று பல சமயங்களில் அவர்களுக்கிடையே தீராத சிக்கல்களாக முளைத்தன. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு. விளையாடுகின்ற இருகுழுவினரும் தங்களுக்குள்ளே இணங்கிப் போகும் அளவுக்கு இணக்கமான விதிமுறைகளை முதலில் வகுத்துக்கொண்டனர். அதாவது ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்த விதிகள் தாம் (Articles of Agreement) இந்த ஆட்டத்தை குழப்பம் நேராமல் ஆட் கொண்டு காத்தருளின.
பக்லி (Buckley) என்பவர் இதுபோன்று பல்வேறு இடங்களில் போட்டியிட்ட குழுக்கள் ஏற்றுக்கொண்ட இணக்கமான ஒப்பந்த விதிமுறைகளையெல்லாம் தேடி ஆராய்ந்து தொகுத்து, ஒரு முடிவினைக் கூறியிருக்கிறார். அதாவது, 'அவ்வாறு தோன்றிய ஒப்பந்த விதி முறைக்ள எல்லாம் பந்தயத்திற்காகக் கட்டியிருந்த பணத்தையே அடிப்படையாகக்கொண்டு அமைந்திருந்தனவே தவிர, ஆட்டம் சீராக அமையவேண்டும், சிறப்பாக மெருகேற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல், எப்பொழுதாவது அபூர்வமாகவே (விதி முறைகளில்) குறிப்பிட்டிருந்தன.'
அதிலும், எந்த இடத்தில் ஆட்டம் நடைபெறுகின்றதோ, அந்த இடத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்த விதிமுறைகளையும் ஏற்று, ஒரு மாதிரியாக சமாதானப்படுத்துவது போன்றே மாற்றங்களை உண்டுபண்ணி, பழமை விதியினையும் புதிய முறையையும் ஒருமைப்படுத்தும் தன்மையிலேயே விதிகளை அமைத்துக்கொண்டிருந்தனர்.
அவ்வாறு விதிகள் தோன்றியதன் காரணமாகவே, பிற்காலத்தில் ஆட்டத்திற்குரிய செம்மையான விதிகளை உண்டுபண்ணக் கூடிய வழியினை உருவாக்கிடும் தன்மையையும் எளிதாக ஏற்படுத்தின என்றே ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
கிரிக்கெட் ஆட்டம் பற்றி பின்னர் பல நூல்கள் வெளிவந்தன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் நுல்களையும் அந்த ஆசிரியர்களின் கருத்துக் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் உணர்ந்து ஆராய்ந்த R.S. ரெய்ட்கொ என்பவர். தன்னால் முடிந்த அளவுக்கு ஒப்பந்த விதிமுறைகளைப் பற்றி ஓர் உண்மை முடிவினை மேற்கொண்டு ஒரு நூலையும் எழுதினார். அதில் கூறியிருப்பதாவது.
1. பந்தயம் கட்டிக்கொண்டு ஆடுகின்ற ஆட்டங்களில் அச்சான விதிமுறைகள் ஏதும் இல்லாமல் இருந்தாலும், பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த விதிமுறைகள் எல்லாம், பலரால் சில சமயங்களில் பின்பற்றப்படாமல் போனாலும், அவையும் சில மாற்றங்களுடன் இடங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. அவர்கள் விருப்பம் போல் விதிகளை ஏற்று மாற்றி ஆடினர்.
2. இந்த ஆர்டிலரி மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றபொழுது, கையால் எழுதித் தயாரிக்கப்பட்ட விதிமுறைகள் தாம் பெரிய பெரிய போட்டி ஆட்டங்கள் நடைபெற்ற போது பின்பற்றப்பட்டன. அதுவும் இலண்டன் மாநகருக்கு ஆட்டம் வந்தபோது, முக்கியமான விதிமுறைகள் எல்லாம், ஆர்டிலரி மைதான ஆட்டத்தில் பின்பற்றப்பட்டு வந்தவையே பெரும்பாலானவையாக அமைந்திருந்தன.
3. கிரிக்கெட் ஆட்டத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக 1744ம் ஆண்டு ஏற்பட்ட விதிமுறைகளையே குறிப்பிடுவார்கள். அவ்வாறு ஏற்பட்ட விதிகள், 1700க்கும் 1755க்கும் இடையே பின்பற்றப்பட்ட பழைய விதிகளின் பிரதியே தவிர வேறல்ல.
ஆனால், ஹம்ப்ரோ பயன்படும் கைக்குட்டைகளில் எழுதப்பட்ட விதிகளே, முதன்முறையாக கிரிக்கெட் விதிகள் அச்சில் ஏறியவை என்றும், அதன்படியே 1752ல் வந்தது என்றும் கூறுகின்றார்கள். எனவே, ஒப்பந்த விதிமுறைகளே உண்மையான விதிமுறைகளுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துவிட்டன. ஆடினால் தண்டனை
பந்தயம் கட்டிக்கொண்டு சூதாட்டம் போல கிரிக்கெட் மைதானத்தில் ஆடப்பட்டு வந்த ஆட்டம், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு மேலேயும் தொடர்ந்திருக்கிறது என்பார்கள்.
பதினாறாம் நூற்றாண்டின், காலகட்டத்தில் கிரிக்கெட் வெகுவேகமாக வளாச்சி பெறவில்லை. மாறாக பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலே முன்னேற்ற நடைபோட்டது. கடுமையான தண்டனைகளையும் ஆட்டக்காரர்கள் ஏற்கக்கூடிய சூழ்நிலைகளில் வளர்ந்தன. 1620ம் ஆண்டு அயர்லாந்தில் ஆலிவர் கிராம்வெல் என்னும் வீரர், பழி சுமத்தப்பட்டு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடினார். ஆட்டத்தில் பங்கு பெற்றார் என்பதற்காக, பலரறிய பழித்துக் கூறப்படும் அவல நிலைக்கும் ஆளானார். அயர்லாந்து முழுவதும் கிரிக்கெட் பந்துகளையும், விக்கெட் குறிக்கம்புகளையும் எரித்துவிட வேண்டும் என்று சட்டம் போடப்பட்டது.
1623ம் ஆண்டு சாக்ஸ் மாகாண கோயிலின் திடலில் கிரிக்கெட் ஆடிய 6 பேர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.
மெய்ட்ஸ்டோன் என்ற நகரத்தில், பல இளைஞர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாடினார்கள் என்பதால், அந்த நகரத்தை தூய்மையற்ற நகரம் என்றும் இழித்துரைத்தார்கள். இது 1030ம் ஆண்டின் நிலை.
இப்படியாக எதிர்ப்பு நிலை, அடக்கு முறை எழுந்து வந்தபோதிலும் கிரிக்கெட் ஆட்டம் வளர்ந்து கொண்டே தான் வந்தது.
மகிமை பெற்ற ஆட்டம்
மக்கள் மனதிலே கிரிக்கெட் பற்றிய பெருமையான எண்ணமே நின்று நிலைத்தோங்கியது, இங்கிலாந்து நாட்டின் விதிகளுக்கு மேலாக கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடியவர்கள், வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எண்ணினார்கள், மதித்தார்கள். ஆகவே சூதாடுவதுபோல பணம் பந்தயங்கட்டுவதையம், இந்த சட்டத்திற்கு மாறானதுதான் என்பதையும் தவிர்த்துவிட்டு, கிரிக்கெட் ஆட்டத்தின் லயிப்பிலும் ரசிப்பிலும் முன்னோக்கிச் சென்றனர்.
ஆட்டத்திற்கிடையே பந்தயத்தில் தோற்றவர்கள், பணத்தை இழந்தவர்கள் பலர் சேர்ந்து கலவரம் செய்கின்ற கூட்டத்தைப்பற்றி முடிவெடுக்க முனைந்த நீதிபதிகள்கூட. அவர்களிடையே அலசி ஆராய்ந்து, பெருந்தன்மையின் பெயரில் விட்டுவிடுவதாகவே முடிவு செய்தனர் என்றால், ஆட்டத்தின் மேன்மையான வளர்ச்சிக்கு வேறு ஆதாரம் என்னதான் வேண்டும்.?
அரச குடும்பத்தினரும் கிரிக்கெட் ஆட்டத்தில் மனம் ஈடுபட்டு இலயித்து ஆடியதுடன், அரிய பொழுதுபோக்கு ஆட்டமாகவும் இதனை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
செயிண்ட் அல்பன்ஸ் என்னும் இடத்தில் 1666ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியானது, அரசவையினரும் அரசரும் கிரிக்கெட் ஆட்டத்தில் மெய்மறந்து ஈடுபட்டிருந்ததற்கு மெய்யான சான்றாக விளங்குகிறது. இலண்டனிலே பெருத்த தீவிபத்தொன்று நேர்ந்தபொழுது, இரண்டாம் சார்லஸ் மன்னரும், அவரது குடும்பமும் மற்றும் அரசவையாளரும் தப்புவதற்காக இலண்டனைவிட்டுக் கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள். அப்பொழுது அவர்கள் செயிண்ட் அல்பன்ஸ் (St. ALBANS) என்ற இடத்தில் வந்து தங்க நேர்ந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் அவர்களுக்கு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிக்காட்ட, அவர்கள் தங்கள் துயர நிலையையும் மறந்து சந்தோஷம், அடைந்த தாகவும் வரலாற்றுக் குறிப்பொன்று கூறுகிறது. அதையும்விட, இன்னொரு நிகழ்ச்சியையும் அறிந்து கொண்டோமானால், அரசர்கள் எந்த அளவுக்குக் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபாடு காட்டினார்கள் என்பதும் நமக்கு நன்கு புரியும். வேல்ஸ் இளவரசன் என்று அழைக்கப்பட்ட பிரடரிக் என்பவர், கிரிக்கெட் ஆட்டத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். எந்த கிரிக்கெட் போட்டி நடந்தாலும், அதில் போய் பங்கு பெறும் ஆர்வம் நிறைந்தவர். 1750ம் ஆண்டு ஒரு முறை அவர் பந்தாடிக்கொண்டிருந்தபோது, காலில் கிரிக்கெட் பந்து தாக்கவே, அதுவே பின்னாட்களில் அவரது மரணத்திற்கு மூல காரணமாக அமைந்தது என்றும் கூறுவார்கள்.
அரசனின் மரணத்திற்கு கிரிக்கெட் பந்தடிதான் காரணம் என்று பலர் பலவாறு கூறினாலும், அவரது அரசு வாரிசுகள் அதனைப் பொருட்படுத்தவே இல்லையாம்.
அவரது மகன்கள் மூன்றாம் ஜார்ஜ், நான்காம் ஜார்ஜ், ஆகியவர்கள், தந்தையின் கிரிக்கெட் ஆர்வத்திற்கும் கொஞ்சமும் குறையாதவர்களாயும், சிறந்த ஆட்டக்காரர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள்.
மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பார்களே! அதுபோல, அரச பரம்பரையும், பிரபுக்கள் குடும்பமும், பணக்கார வம்சத்தினரும் கிரிக்கெட்டைப் போற்றும் பொழுது, கிரிக்கெட் எப்படி வளராமல் இருக்கும்.!
பரபரப்பான பந்தயங்கள்
பந்தயம் கட்டியல்லவா ஆட்டத்தைத் தொடங்கினார்கள்! அப்படி என்றால் ஆட்டம் எப்படி நடைபெறாமல் போகும்? பந்தயப் பணம் குறைந்தது ஒரு ஆட்டத்திற்கு 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய் வரை வைத்து ஆடியிருக்கிறார்கள். 1750ம் ஆண்டிலிருந்து 1790ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், பந்தயத்தின் தொகை 40,000, ரூபாயிலிருந்து ரூபாய் 80,000 வரை ஏறியிருந்தது என்றால் பணக்காரர்களின் பேய் தனமான சூதாட்ட வெறிதான் காரணமாக அமைந்திருந்தது!.
இவ்வாறு பணம் கட்டி ஆட, சோம்பேறிகளான சூதாடிகள் பலர் ஒரு கூட்டமாகவே இருப்பார்களாம். அந்த பயங்கர சூதாடிகள், தாங்கள் நேரில்போய் ஆடுவதற்குக் கூட இயலாமல் சோம்பல்பட்டு, கூலிக்கு ஆட்களை அமர்த்தி, போய் பந்தயம் கட்டி ஆடச் செய்வார்களாம். பெருந்தன்மைமிக்க பிரபுக்கள் பலர் இப்படி ஆட்களை அமர்த்தி ஆடும் பழக்கம் கொண்டவர்களாகவும் விளங்கியிருக்கின்றார்கள்.
பந்தயம் கட்டிக் கொண்டவர்கள், தங்கள் ஆட்டத்தின் முடிவுக்காகக் காத்திருக்காமல், தங்கள் பக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேண்டாத வழிகளையும், குறுக்கு முறைகளையும், தந்திர யுக்திகளையும் கையாண்டதாக பல குறிப்புக்கள் வரலாற்றில் சுவையாகக் கூறிச்செல்கின்றன.
ஒரு சமயம், ஒரு குழுவின் சிறந்த ஆட்டக்காரரை, அன்று அந்தக் குழுவில் ஆட விட்டுவைத்தால், அவர் குழு வென்று, தன் குழு தோற்றுவிடும் என்பதை உணர்ந்த ஒரு பந்தயம் கட்டிய சூதாடி, அந்த ஆட்டக்காரரின் மனைவி இறந்து விட்டாள் என்ற பொய் சேதியை அவருக்குத் தெரிவிக்கச் செய்து ஆடவிடாமல் செய்ததாகவும் ஒரு குறிப்பு உரைக்கின்றது!
இவ்வாறு, குதிரைப் பந்தயத்திலும், குத்துச்சண்டைப் பந்தயத்திலும் பணங்கட்டி ஆடுவதைப் போல, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் இடையே கிரிக்கெட் ஆட்டம் சிக்கிச் சீரழிந்தது. பல இடங்களில், ஒரே சமயத்தில் போட்டி ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன. தெரிந்தோ தெரியாமலோ, போட்டிகள் பல இடங்களில் ஒரே சமயத்தில் நடைபெற்றதால், எந்த இடத்திற்கு போவது என்பதிலும் குழப்பம் கொள்ளத் தொடங்கினர் சூதாடிகள். இதற்கிடையிலே 1790ம் ஆண்டு பந்தயப்பணம் கட்டும் நிலையில் சற்று இறக்கம் காணத் தலைப்பட்டது. பெருந்தன்மையுள்ளவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள்ளே முடிவு கட்டிக்கொண்டது போல, ஒரு ஒப்பந்த நிலைக்கும் வந்தனர்.
பந்தயத்தில் தோற்றாலும் ஜெயித்தாலும் அதற்காக முணுமுணுக்கவோ, மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவோ கூடாது என்பதுதான். ஏற்கனவே பந்தயம் கட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்ததும், பந்தயம் கட்டி ஆடுபவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் வந்ததும், பேராசைக்காரர்களிடம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டம், பெரிய மோசடித்தனத்திலிருந்து தப்பி வெளியேறி வரமுடிந்தது.
வளர்ந்த விதம்
இவ்வாறு பந்தயம் கட்டி ஆடப்பெற்ற காலத்தில் கிரிக்கெட் ஆட்டம், கீழ்நிலைக்குப் போகாமல் என்னென்ன முறையில் வளர்ச்சி பெற்று வந்தது என்கின்ற குறிப்புகளையும் இனி காண்போம்.
1706ம் ஆண்டு, ஒரு கிரிக்கெட் ஆட்டப் போட்டியினைப் பற்றி வில்லியம் கோல்டுவின் என்பவர், இலத்தீன் மொழியிலே கவிதை ஒன்றை எழுதினார். அதுவே பல குறிப்புக்களைத் தருகின்ற குறிப்புப் பெட்டகமாக அமைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பல மாகாணங்களில் மக்கள் பெருமையாக விளையாடத் தொடங்கிவிட்ட காரணத்தால், இரண்டு மாகாணங்களுக்கிடையே போட்டிகள் அதாவது கவுண்டி மேட்ச் (County Match) என்ற பெயரில் நடைபெறலாயின. முதன் முதல் மாகாணத்திற்கிடையிலான போட்டிகள் 1709ம் ஆண்டு இலண்டன் நகரத்திற்கும் கெண்ட் மாகாணத்திற்கும் இடையே சிறப்பாக நடை பெற்று, சரித்திரத்தில் சிறப்பான இடத்தை வகித்துக் கொண்டது.
இதன் பலனாக, மாணவர்களிடையிலும் கிரிக்கெட் ஆட்டம் பிடிப்புற்று, பேரளவில் பரவிக்கொண்டது. அதன் பயனாக, பல்கலைக்கழகங்களில் கிரிக்கெட் பிரதான இடத்தையும் பிடித்துக்கொண்டது. அவ்வாறு வளர்ந்த சூழ்நிலையில் தான் 1729ம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திற்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் முதல் போட்டி ஒன்று நடைபெற்றது.
இதைவிட பெரும் போட்டி ஒன்று 1744ம் ஆண்டு நடைபெற்றது. அந்த ஆண்டுதான் கிரிக்கெட் ஆட்ட மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பொன்னாளாகும். கென்ட் மாகாணத்திற்கும் இங்கிலாந்திலுள்ள ஆட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போட்டி என்பதனால் மட்டுமல்ல, கிரிக்கெட் ஆட்டத்திற்கான புதிய விதிகளை உருவாக்கிய ஆண்டும் 1744ம் ஆண்டு தான்.
இவ்வாறு முதன் முதலாக அமைக்கப்பட்ட விதிமுறைகளை இலண்டன் சங்கம் ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட்டது. அந்த சங்கத்தின் தலைவராக இருந்து நடத்தியவர், அப்பொழுது வேல்ஸ் இளவரசராக இருந்த பிரடெரிக் லூயிஸ் என்பவர். இந்த விதிமுறைகள், மற்ற புதிய விதிமுறைகள் தோன்றிட மூல காரணமாகவும், கிரிக்கெட்டுக்கு என்று தெள்ளத் தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன என்று சொல்லிக் கொள்ளத் தக்க வகையிலும் தோன்றிய சில முறைகள் என்பதாகவும் விளங்கின. ஹேம்பிள்டன் கிளப்
1760ம் ஆண்டு, ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுவே, இங்கிலாந்து நாட்டின் சிறந்த சங்கமாகவும் செயல்பட்டது. 'கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தத் தொட்டில்' என்பதாகவும் அழைக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் மெக்கா என்றும் புகழப்பட்டது. அதுவே ஹேம்பிள்டன் கிளப் (Hambledon Club) என்பதாகும்.
ஹேம்பிள்டனைச் சேர்ந்த சிறு ஹேம்ப்ளியர் கிராமப்புற பண்பாளர்கள் ஒன்று கூடியே இந்த ஹேம்பிள்டன் சங்கத்தை நிறுவினார்கள். அதற்குப் பெரிதும் உதவியாளராக இருந்து உதவியவர் நிலக்கிழாராகத் திகழ்ந்த ரிச்சர்டு நைரன் (Richard Nyren) என்பவராவார். அவர் தந்த அளவிலா உற்சாகமும், அன்புசால் ஆதரவுமே இந்த ஹேம்பிள்டன் சங்கம் தோன்றிட உறுதுணையாக விளங்கின. நைரனும் அவரது குமாரர் ஜான் நைரன் என்பவரும், இதில் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபட்டதால்தான், கிரிக்கெட் ஆட்டம் மேலும் செழிப்புறும் வழிகண்டது. ஆரம்ப நாட்களில் விக்கெட் என்றால். இரு சிறு குழிகள் தான் புல் தரையில் தோண்டப்பட்டு இருந்தன. பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஓடி வந்து கோட்டைத் தொடுவதற்கு முன், குழியில் பந்தை உருட்டிவிட்டால், அவர் ஆட்டமிழந்து போவார். குழிகளுக்கும் கோட்டிற்கும் இடையிலுள்ள தூரம் 46 அங்குலமாகும்.
விக்கெட்டுகளாக குறிக்கம்புகள் 1700ம் ஆண்டு முதல் தான் உருவெடுத்தன. அதன் பின் இரண்டு கம்புகள் நடப்பட்டு, அதன் மேல் குறுக்குக் கம்பம் ஒன்றை வைத்திட, அது சிறுகதவு போலத் தோற்றமளித்தால்தான், விக்கெட்டு என்ற பெயரையும் பெற்றது. ஆனால், பந்தானது விக்கெட்டிற்கு இடையிலேயே சென்று, விக்கெட்டை வீழ்த்தாது போன ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு, மூன்றாவது குறிக்கம்பு (stump) ஒன்று வேண்டும், அதுவும் நடுவிலே வைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அந்த முடிவினை எடுத்து நிறைவேற்ற மூல காரணமாக அமைந்தது ஹேம்பில்டன் சங்கமே ஆகும். அந்த ஆண்டு 1775 ஆகும்.
1774ம் ஆண்டு தான் கிரிக்கெட் ஆட்டத்திற்கான புதிய விதிமுறைகளை அமைக்க, பழைய விதிமுறைகளை ஏற்றும் மாற்றியும், திருத்தியும் உருவாக்கினார்கள். அந்த விதிகளே இன்னும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒரு சிலவே மாற்றம் பெற்றிருக்கின்றன.
புதிய விதிகள் உருவாக்கப்பட்டாலும், முக்கியமான ஒன்றை, விதியமைத்த விற்பன்னர்கள் கவனியாது விட்டு விட்டனர். அதாவது ஒரு குழுவிற்கு எத்தனை ஆட்டக்காரர்கள் இருந்து ஆடவேண்டும் என்பதைத்தான். 1884ம் ஆண்டு வரை இந்நிலை நீடித்து வந்தது. 1884ல் மீண்டும் ஒருமுறை எல்லா விதிகளையும் கவனத்துடன் பரிசீலித்துப் பார்க்கையில், விடுபட்டுப்போன இந்த நிலையை உணர்ந்தனர். 11 அல்லது 12 ஆட்டக்காரர்கள் ஒரு குழுவில் இருக்கலாம் என்று ஆடியதையும், அடித்தாடுபவர்கள் (Batsmen) 11 பேர் இருந்தால், தடுத்தாடுபவர்கள் 22 பேர் இருந்து ஆடலாம் என்கின்ற நடைமுறை விதிமுறையையும் மாற்றித் தெளிவாக அமைத்தார்கள்.
இது போன்ற செயல்முறைகளினால் ஹேம்பிள்டன் சங்கம் மக்கள் மத்தியிலே பெருமைமிகு சங்கமாக மதிக்கப்பட்டது. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதனால், கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்திடும் உரிமையுடன் சங்கம் முன்னேற்ற நடை போட்டது. ஏறத்தாழ முப்பதாண்டுகள் ஹேம்பிள்டன் சங்கம், இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டத்தைக் கட்டிக் காத்தது. கவனித்துக் கொண்டு பீடு நடைபோடச் செய்தது.
மெர்லிபோன் கிரிக்கெட் சங்கம் (MCC)
இப்பொழுது இஸ்லிங்டன் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில் ஒய்ட் கன்டியூட் கிளப் (White Conduit Club) என்ற சங்கம் ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பிக்கப்பட்டு, ஆர்வத்துடன் செயல்பட்டு, பல போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், அதிலிருந்து மேலும் ஒரு சங்கம் 1787ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பெற்றது.
கிளைத்தெழுந்த புதிய சங்கத்திற்கு மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் (Marrlybone Cricket Club) என்னும் பெயர் வைக்கப்பட்டது. இந்தச் சங்கத்தை தோற்றுவிக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்களில் எட்டாம் வின்செல்சியும், சார்லஸ் லினாக் என்பவரும் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் ஆடும் மைதான இடத்தையும் அளித்து உதவியவர் தாமஸ் லார்டு '(Thomas Lord) என்பவராவார். இன்று இங்கிலாந்தில் உள்ள லார்டு மைதானம் இவரது பெயரால்தான் விளங்குகிறது.
மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் ஆரம்பித்தவுடன் அதற்கு என்று ஒரு மைதானம் தேவைப் படவே, டார்செட்ஸ்கொயர் என்னும் இடத்தில் உள்ள தனது மைதானத்தை தாமஸ் லார்டு வழங்கினார். அந்த மைதானத்தை அவர்களும் பயன்படுத்தி ஆடி வந்தார்கள். அதன் பயனாக விளைந்த போட்டியானது, இந்த எம்.சி.சி. (M.C.C.) ஆட்டக்காரர்களுக்கும் ஒயிட் கன்டியூட் கிளப் ஆட்டக்காரர்களுக்கும் நடைபெற்றது. இதில் எம்.சி.சி.அணியினரே 83 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டனர் ________________
கிரிக்கெட் ஆட்டத்தின் கதை 31 இந்த லார்டு மைதானம் உருவாவதற்குள், அதன் அங்கத்தினர் கள் பலமுறை அச்சுறுத்தல்களுக்கும் அவதிகளுக்கும் ஆளாயினர். ஒவ்வொரு முறையும் அவர்கள் தப்பித்திணறி வெளிவந்து வெற்றிகொள்ளும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றனர் என்பது ஒரு சுவையான கதையாகும். இந்த மைதானத்தை 18,000 ஷில்லிங் கொடுத்து மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம் வாங்கிக்கொண்டது, வெற்றிக்கண்டது என்பதும் அவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் கொண்டிருந்த பேரன்பையும் பிடிப்பையுமே காட்டுகிறது. இவ்வாறு வாய்ப்பிலும் வசதியிலும் எம்.சி.சி. பெருகிக் கொண்டே வந்தது. ஏற்கனவே சிறந்த பரந்த இடத்தைப் பெற்று வந்த ஹேம்பிள்டன் கிரிக்கெட் சங்கத்தை விட புகழிலும் பெருமையிலும் அதிகமாகி, இங்கிலாந்திலேயே வலிமையும் திறமையும் நிறைந்த சங்கம் எம்.சி.சி. தான் என்ற மகோன்னத நிலையை அடைந்து நின்றது. அதனால் ஹேம்பிள்டன் சங்கத்திற்கு முன்போல மக்களிடையே விளங்கிய மதிப்பு, கொஞ்சங் கொஞ்சமாக குறையலாயிற்று, கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எம்.சி.சி யையே தங்களது கிரிக்கெட் ஆட்டத்தின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாயினர். எந்தத் தகராறு ஏற்பட்டாலும், அதனைத் தீர்த்து வைக்கின்ற தகுதியும் திறமையும் உடையவர்களாக எம்.சி.சி. நிர்வாகிகள் உயர்ந்தனர். அதற்கும் உதவுவது போல் ஒரு சூழ்நிலை அந்த நேரத்தில் உருவாகியது. பந்தை எந்த முறையில் எறிவது? ஆரம்ப நாட்களில் பந்தைக் கீழாகக் கையை வீசி உபயோகப்படுத்தியே (Under Arm Bowling) எறிந்து வந்தார்கள். இவ்வாறு எறிவதிலும், மிகவும் வேகமாகவும் விக்கெட்டை நோக்கிக் குறிபார்த்து எறிவதிலும் வல்லவர்களாகவும் பலர் விளங்கினார்கள். அதில் ஜான் நைரன், வில்லியம் கிளார்க், டேவிட் ஹேரிஜ் என்பவர்கள் முக்கியமானவர்கள்.
ஆனால், ஹேம்பிள்டன் கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் பந்தைக் கீழாகக் கொண்டு வந்து எறியும் முறையை விட்டுவிட்டு, கையை சுழற்றி எறிகின்ற (RoundArmBowling) முறையைப் பயன்படுத்தி எறிந்தார்கள். அதற்கும் பலர் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். இதுவே பெரும் பிரச்சினையாகப் பேசப்பட்டது. குழப்பங்களை உருவாக்கின. ஆட்டத்தின் சூழ்நிலையையே மாற்றுவது போல், ஆட்டக்காரர்கள் இடையே தகராறு மலையாக நிற்கவே, அப்பொழுது அதிகார பீடத்தில் இருந்த மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம், இதனை தீர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
அதன் முடிவு, 'பந்தை கை சுழற்றி எறியக்கூடாது, முன்போல கீழாகக்கொண்டு வந்தே எறியவேண்டும்.' என்பதாக அமைந்தது. 1816ம் ஆண்டு எம்.சி.சி. நிர்வாகம் இந்தத் தீர்ப்பினை வழங்கியது என்றாலும், கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஜான் வில்லிஸ் (John Willies) என்னும் ஆட்டக்காரர் தொடர்ந்து கை சுற்றி எறியும் முறையையே மேற்கொண்டு எறிந்தார். அவர் எறிந்த பந்துக்களையெல்லாம் முறையற்ற பந்தெறி (No Ball) என்றே நடுவர்கள் கூறினார்கள்.
இதனால் வெறுப்படைந்த ஜான் வில்லிஸ், ஆட்டத்தின் மீது வெறுப்படைந்தார் என்று வரலாறு கூறுகிறது. இவ்வாறு இவர் கை சுற்றி எறியும் முறையை தனது சகோதரியான கிறிஸ்டினா என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம். (பந்தெறி முறை என்ற பகுதியில் விரிவாகக் காணலாம்.
அதாவது வீட்டில் கிரிக்கெட் பயிற்சிக்காக ஆடும் பொழுது, அவரது தங்கை இதுபோல்தான் கை சுற்றி எறிவது பழக்கமாம். ஏனென்றால், கிறிஸ்டினா அணிந்திருந்த கவுன், முழங்கால் பகுதிக்குக் கீழே குடை ராட்டினம்போல விரிந்த அமைப்புள்ள தன்மையில் தைக்கப்பட்டிருந்ததால், கீழாக எறியும்பொழுது கவுன் தடுத்ததால், கையை மேலே தூக்கி எறிந்து ஆடினாராம். அந்தப் பழக்கத்தையே ஜான் வில்லிஸும் பின்பற்றினார்.
ஒரு முறை போட்டி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஜான் வில்லிஸ் எறிந்த பந்தையெல்லாம் முறையிலா பந்தெறி என்று நடுவர் கூறவே, வேகமடைந்த வில்லிஸ் கோபத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறி, குதிரை மேலேறி போயேவிட்டார். அவர் ஆட்டத்தை விட்டுமட்டுமல்ல, கிரிக்கெட்டையே விட்டு விலகிக்கொண்டார்.
அதன்பின் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவே இல்லை . 1822ம் ஆண்டு அவர் அகால மரணமடைந்தார். ஆனாலும், அவர் தான் கொண்ட கொள்கையை, மேற்கொண்ட இலட்சியத்தை விடவில்லை . அதாவது, அவர் தனது கல்லறையில் கீழ்க்காணும் குறிப்புக்களைப் பொறிக்கச் செய்தார்.
'இங்கே துயில் கொள்ளும் ஜான் வில்லிஸ் என்பவர் ஆண்மையுள்ள ஆட்டத்தின் ஆதரவாளராக எப்பொழுதுமே விளங்கியவர். கிரிக்கெட் ஆட்டத்தில் கை சுற்றி எறியும் முறையை முதன்முதலில் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியவர்' என்பதாக எழுதச் செய்தாராம்.
இவ்வளவு புரட்சிகரமாக இருந்து, அமரரான ஜான் வில்லிசின் கனவு 1828ம் ஆண்டு நினைவாகியது. ஆமாம். கைசுற்றி எறியும் முறை ஆட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அமுலாகியது. அதன் பின்னர் 1864ம் ஆண்டு இது பற்றி ஆராய்ந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், கை உயர்த்தி எறிந்திட ஆட்டக்காரர்கள் தொடங்கினர். அதுவும் பல பிரச்சினைகளை எழுப்பி எரிமலையாய் புகைந்தது. இப்படியாக ஆட்டத்தில் ஒவ்வொரு நுணுக்கமும் மலர்ந்து மலர்ந்துவர, ஆட்டம் மெருகேறிக்கொண்டே வந்தது. பந்தின் கனம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற நியதியை உண்டாக்கி, பந்தானது 51/2 அவுன்சுக்கும் 53/4 அவுன்சுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்கள்.
பந்தாடும் தரையில் (Pitch) ஆடுகள் மேய்ந்து தரையை நாசம் விளைவித்ததும் பல காரணங்களுள் ஒன்றாயின. அதனால் பந்தாடும் தரையை உருட்ட வேண்டும், அதுவும் கனமான இரும்பு உருளையால் (Heavy Roller) உருட்ட வேண்டும் என்று தீர்மானித்து, அதனை முதன்முதலாக லார்டு மைதானத்தில் 1870ம் ஆண்டு செய்தனர். அதுவே முறையான பழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன் பின்னர், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் பந்தாடும் தரையை பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து, 1872ம் ஆண்டு, லார்டு மைதானத்திலேயே சோதனையாகச் செய்து பார்த்தனர். அதுவும் வெற்றிகரமாக செயல் படவே, அதுவும் விதிமுறையாக்கப்பட்டது.
ஒரு பந்தெறித்தவணைக்கு (Over) 4 முறை பந்தெறியலாம் என்ற முறையை மாற்றி, 5 முறை எறிந்து கொள்ளலாம் என்ற புதுவழியைப் புகுத்தினர். 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்த நான்கு முறை பந்தெறிவதை இங்கிலாந்தில் 5 முறை என்று உயர்த்தினாலும், 1900ம் ஆண்டு ஆறு முறை எறியலாம் என்று மீண்டும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.
எனினும், ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் மேலும் ஒரு படி முன்னேறி, ஒரு பந்தெறித்தவணைக்கு 8 முறை எறியலாம் என்று விதியமைத்துக் கொண்டு ஆடியிருக்கின்றார்கள். இப்படியாக ஆட்டம் ஒவ்வொரு ஆட்டத்திறன்களிலும், ஆடும் முறையிலும், அடிப்படைவிதிகளிலும் மாற்றங்களும் நுணுக்கங்களும் பெற்று மறுமலர்ச்சி அடைந்து வரும் வேளையிலே, ஆங்காங்கே ஆயிரக்கணக்கான கிரிக்கெட் குழுக்கள், கழகங்கள் நாடெங்கிலும் தோன்றத் தொடங்கின.
இங்கிலாந்து முழுவதும் இவ்வாறு பெருவளர்ச்சி பெற்றதன் காரணமாக, பூரண மலர்ச்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டம் பிறநாடுகளுக்கும் பயணம் செய்யத் தொடங்கியது. அதனை அவ்வாறு எடுத்துச்சென்று இங்கிதமாகப் பரப்பிய பெருமையைப் பெற்றவர்கள் இராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆவார்கள்.
இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் கடற்படை வீரர்களும், எந்த நாட்டிற்கு எந்த இடத்தில் சென்று தங்குகிறார்களோ, அந்த இடங்களில் ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம், கிரிக்கெட் ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிடுவார்கள். பொழுதினை இன்பமாகப் போக்கி உல்லாசம் பெறுவார்கள். அத்துடன் நில்லாமல், இரு குழுவினராகப் பிரித்துக்கொண்டு போட்டி ஆட்டமும் முனைந்துவிடுவார்கள்.
இவ்வாறு போட்டி ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு பெற்ற உள்ளூர்வாசிகளும் (Inhabitants), மற்ற வழிப்போக்கர்களும், இராணுவ வீரர்களுக்கு உதவி செய்கின்ற வேலையாட்களும், உதவியாளர்களும் இந்த ஆட்டத்தின் மேல் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்கள். பிறகு ஆடத் தொடங்கினார்கள். அதன் பின் ஆட்டத்துடன் ஒன்றியும் போய்விட்டார்கள்.
கப்பற்படை வீரர்களும், கலம் ஏறிப் பயணம் சென்ற மாலுமிகளும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற தேசங்களில் கிரிக்கெட் ஆட்டத்தைக் காலூன்றச் செய்த பெருமையைப் பெற்றார்கள். இராணுவ வீரர்கள் இந்தியத் துணைக்கண்டம், மற்றும் தென் அமெரிக்கா முதலிய இடங்களில் ஆட்டத்தைப் பரப்பிடும் பேற்றினையும் புகழையும் பெற்றுக்கொண்டார்கள்.
அத்துடன் நில்லாமல், கனடாவிலும், வட அமெரிக்கப் பகுதிகளிலும் கிரிக்கெட் ஆட்டம் பரவியது என்றாலும், அவ்வளவாக ஏற்றம் பெறாமலேயே இருந்து போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
கிரிக்கெட் ஆட்டத்தின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் அஸ்திவாரமாகவும், தளமாகவும் அமைந்த மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம், ஆட்டம் வெளிநாடுகளுக்குப் பரவிப் போய்விட்டது என்று அறிந்து பெருமையுற்றுப் பேசாமல் இருந்துவிடவில்லை. 1859ம் ஆண்டு, கனடாவுக்கு இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவை அனுப்பி ஆடச் செய்து, போட்டி நடத்தி, ஆட்டத்தின் வளர்ச்சிக்கு அடிகோலியது. புகழுக்கும் வழி வகுத்தது.
கனடாவுக்கு இங்கிலாந்துக் குழு பயணம் செய்து ஆட்டங்கள் ஆடியதை கேள்விப்பட்டவுடன், ஆஸ்திரேலியாவும் 'ஆகா' அற்புதம்' என்று பாராட்டிவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை. மெல்பர்ன் நகரத்திலுள்ள தொழிலகத்தின் பண உதவி மூலமாக, 1861-62ம் ஆண்டில் ஆஸ்திரேலியா குழுவும் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றிகரமாக பவனி வந்தது. அந்த சுற்றுப் பயணம் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து நாடுகள் வரை சென்றது.
அதன் பின்னர், ஆஸ்திரேலியா, மற்றும், தென்னாப்பிரிக்கா நாடுகள் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் ஆட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டன.
சுற்றுப்பயணமாகச் சென்று கிரிக்கெட் ஆட்டம் ஆடிய முதல் முயற்சியின் விளைவாக, வேறுபல மாற்றங்களும் தோன்றத் தொடங்கின. 1876 வரை இப்படியே சென்று கொண்டிருந்த பயணமும் போட்டியும் என்ற நிலையில் மேலும் ஒரு புதிய எழுச்சி பிறந்தது. ஆமாம். இரண்டு நாடுகளுக்கிடையில் பெரும் போட்டி ஆட்டம் போல் நடத்தப்படவேண்டும் என்பதாக டெஸ்ட் போட்டியை (Test Match) 1877ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் தொடங்கினர். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்று இணையாகத் தங்கள் வலிமையைக் காட்டி மகிழ்ந்தனர்.
இவ்வாறு நாடுகளுக்குள்ளே நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகள் முதன் முதலாக வரலாற்றுக் குறிப்பேட்டில் பொறிக்கப்பட்டன. கிரிக்கெட் ஆட்டத்திற்கு இங்கிலாந்துதான் தாயகம் என்பதால், இங்கிலாந்தில் இருந்துதான் டெஸ்ட் போட்டிக்காகப் புறப்பாடு முதலில் நடந்தது.
மேற்கிந்தியத் தீவினருடன் முதல் டெஸ்ட் போட்டியானது 1928ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கி, நடைபெற்றது.
நியுசிலாந்துடன் முதல் டெஸ்ட் பந்தயம் 1929ம் ஆண்டும், இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி 1932ம் ஆண்டும், பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி 1954ம் ஆண்டும் நடைபெற்றது. இவ்வாறாக, உலக நாடுகளுக்கிடையே டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரலாயின. வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில்தான் கிரிக்கெட் ஆட்டம் முதலில் பரவ ஆரம்பித்தது. காமன்வெல்த் நாடுகள் என்று அவை அழைக்கப்பட்டன. முதலில் இங்கிலாந்து நாட்டின் எம்.சி.சியின் அரவணைப்பில் இருந்த கிரிக்கெட், 1909-ம் ஆண்டிலிருந்து புதிய அமைப்பின் கீழ் வளரத் தொடங்கியது.
அகில உலகக் கிரிக்கெட் சங்கம் என்பதாக இங்கிலாந்தில் 1909ம் ஆண்டு இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் ஒன்றைத் தொடங்கினர். அதில் முதலில் மூன்று நாடுகள் அங்கம் வகித்தன. அவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவாகும். அதன்பின் 1926ம் ஆண்டு இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1952ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு அங்கத்தினராக இணைக்கப்பட்டது.
இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் என்ற அமைப்பில் இருந்த நிலையை மாற்றிக்கொள்ள அங்கத்தினர்கள் விரும்பினர். முனைந்தனர். அத்துடன், காமன்வெல்த் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளையும் இணைத்து ஆடவேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக, அந்த அமைப்புக்கு 1965ம் ஆண்டு இண்டர் நேஷனல் கிரிக்கெட் கான்பரன்ஸ் என்று பெயர் மாற்றினர்.
அதன் விளைவாக காமன்வெல்த்தை சேராத பிறநாடுகளான அமெரிக்கா, ஹாலந்து, டென்மார்க்கு, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், ஜிப்ரால்டர், நியூஜினியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் அங்கத்தினர்களாகும் வாய்ப்புக்களைப் பெற்றன.
1930ம் ஆண்டு, இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற போட்டியானது, நான்கு நாட்களாக இருந்தன. 1963ம் ஆண்டு குறிப்பிட்ட பந்தெறித்தவணை (Limited Overbasis) ஆட்டம் வேண்டும் என்று ஆரம்பித்து அதற்கான கில்லர் கிரிக்கெட் கோப்பை ஒன்றையும் ஏற்படுத்தினர். அதுபோலவே 1975ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான (World Cup) குறிப்பிட்ட பந்தெறித்தவணைப் போட்டியும் தொடங்கி நடத்தப் பெற்றது.
இந்தியாவில்..ரஞ்சிக் கோப்பை (Ranji Trophy)
நியூசிலாந்தில்...பிளங்கட் கேடயம் (Plunket Shield)
ஆஸ்திரேலியாவில்..ஷெபீல்டு கேடயம் (Shefield Shield) தென் ஆப்ரிக்காவில்...கூரி கோப்பை (Currie Cup) மேற்கிந்தியத்தீவில்...செல் கேடயம் (Shell Shield) பாகிஸ்தானில்...கோயாடி ஆசாம் (Quad-E-Azam)
பிரபல ஆட்டக்காரர்கள் ஆண்டுதோறும் மிகவும் ஆர்வத்துடன் தங்கள் தங்கள் நாடுகளில் போட்டியிடுகின்ற மிகவும் புகழ்பெற்ற வெற்றிக் கேடயங்களாகும்.
இந்தியாவில் கிரிக்கெட்:
இந்தியாவில் கிரிக்கெட் ஆரம்பம் ஆன ஆண்டு என்று 1721ம் ஆண்டினைக் குறிப்பிடுவார்கள். இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு இது என்ற குறிப்பினை விஸ்டன் (Wisden) என்பவர் குறித்து வைத்திருக்கிறார்.
இந்தியத் துணைக் கண்டத்திற்கு வந்து குடியேறிய பெருந்தனக்காரர்களாலும், இராணுவ வீரர்களாலும் தான் கிரிக்கெட் இங்கே காலூன்றியது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கப்பலில் பயணம் செய்து வந்து இறங்கிய மாலுமிகளும், கப்பற்படையில் பணியாற்றிய வீரர்களும் முதன் முதலில் இந்த ஆண்டில் தான் பம்பாய் (Bombay) நகரில் விளையாடினார்கள்.
அவர்கள் ஓடிய விதமும், ஆனந்தமாகக் கூடி ஆடிப் பொழுதை கழித்த சுகமும், பார்வையாளர்களாகிய இந்தியர்களை மிகவும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்தியர்கள் ஆட்டத்தின் தன்மைகளை அறிந்து கொண்டதுடன், அந்த ஆட்டத்தின் நுணுக்கங்களைக் கிரகித்துக் கொண்டதுமல்லாமல், ஜீரணித்தும் கொண்டார்கள். அதன் விளைவாக, கிரிக்கெட் ஆட்டம் அவர்களிடையில் விமரிசையாக, சொல்லிலும் செயலிலும் வளர்ச்சி அடையத் தொடங்கியது. முதலில் ஒரு போட்டி, அதுவும் வரலாற்றில் குறிப்பிடும்படியான ஒரு போட்டி, ஒல்டு எடோமன்ஸ் (Old Etomans) குழுவிற்கும் இந்திய நாட்டு பார்சியர்களுக்கும் (Parsees) 1784ம் ஆண்டு நடைபெற்றது. அதுவே, இந்தியர்களின் விழிப்புணர்ச்சியை இந்த ஆட்டத்தில் விரைவுபடுத்தும் தூண்டுகோலாக அமைந்தது.
1712ம் ஆண்டு கல்கத்தா நகரில். கல்கத்தா, கிரிக்கெட் கிளப் என்றொரு சங்கத்தை உருவாக்கினார்கள். சங்கம் தோன்றியதற்குப் பிறகு கல்கத்தா நகரில் மட்டுமல்ல, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் கூட இந்திய மக்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பெருவாரியான அளவில் விளையாடத் தலைப்பட்டார்கள். அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கத்தான் இருந்தது.
ஆங்கிலேயர்களுடன் அதிக நெருக்கமும் இணைப்பும் கொண்டிருந்த பணக்கார இந்தியர்களும், சமஸ்தான இளவரசர்களும், இளைஞர்களும் இந்த ஆட்டத்தை அதிகமாக விரும்பி ஆடியதால், அவர்களைச் சார்ந்தவர்களும் தொடர்ந்து துணையிருந்து உதவியதால், இந்திய துணை கண்டமெங்கும் இந்த ஆட்டம் வளர்பிறையென்று வளர்ந்து கொண்டது. வளர்ச்சி கண்டது.
அத்துடன், 1804ம் ஆண்டு அதே ஒல்டு எடோமன்ஸ் குழுவினர் , அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களுடன் ஒரு கிரிக்கெட் போட்டி ஆட்டத்தை ஆடினார்கள். அது கல்கத்தா நகரில் உள்ள ஏடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதன்பின் பல சங்கங்கள் ஆங்காங்கே தோன்றத் தொடங்கின.
பம்பாயில் 1841ம் ஆண்டு பார்சியர்களால் கிரிக்கெட் சங்கம் ஒன்று தோற்றுவிக்கப் பெற்றது. இது மத சம்பந்தமான அபிமானிகளால் உருவான ஒன்று என்றாலும், கிரிக்கெட் ஆட்டம் இந்தியாவில் வளர்ந்திட, பேருதவி புரிந்திருக்கும் அமைப்பு என்றும் புகழப்பட்டிருக்கிறது.
இந்த மத அபிமானத்தைத் தழுவி, இந்துக்களும் ஒரு கிரிக்கெட் கிளப்பைத் தொடங்கினர். அது 1886ம் ஆண்டு நடைபெற்றதாகும். அதற்கு முன்னதாக 1883ம் ஆண்டு முகமதியர்கள் ஒரு கிரிக்கெட் கிளப்பை ஆரம்பித்தாள்கள் என்று வரலாறு கூறுகிறது.
மனத்தாலும் மதத்தாலும் ஆட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு தொடர்ந்து மக்களிடையே இருந்ததால், ஆட்டம் இந்தியாவில் மகோன்னத நிலையை எய்தியது. ஏற்கனவே, பார்சியர்களால் ஆட்டம் சிறப்புற வளர்ச்சி பெற்றிருந்தது என்று குறித்திருந்தோம். அதையும் இங்கே காண்போம்.
பார்சியர் குழுவானது 1886ம் ஆண்டு இங்கிலாந்துக்கு விஜயம் செய்து விளையாட்டில் பங்குகொண்டது. அவர்கள் மொத்தம் 28 முறை போட்டிகளில் பங்கு பெற்றார்கள். அதில் 19 போட்டிகளில் தோற்றாலும், பயணம் பயனுள்ளதாகவும், அனுபவம் நிறைந்ததாகவும், ஆட்டக்காரர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
அதுபோலவே இங்கிலாந்தில் இருந்து ஒரு குழுவும் 1889-90 ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு விஜயம் செய்து, ஆடிய 13 போட்டிகளில் பார்சியர் குழுவிடம், ஒரு முறை தோற்றது என்றால், இந்திய ஆட்டக்காரர்களின் ஆட்டவளர்ச்சியின் வேகத்தை நம்மால் காண முடிகிறதல்லவா!
ஆனால், இந்தியாவின் சார்பாக முதன்முதலாக ஒரு குழு இங்கிலாந்துக்கு 1911ம் ஆண்டுதான் அனுப்பப்பட்டது. இவ்வாறு நாடுகளுக்கிடையே கலாச்சார குழுவினர் சென்று பரிவர்த்தனை செய்து கொள்வது போல, கிரிக்கெட் குழுக்களை அனுப்பி, பல நாடுகள் தங்களது நேச உறவையும், ஆண்மைப் பெருக்கையும் வெளிப்படுத்தி அன்பு பாராட்டிக் கொண்டன.
இவ்வாறு நாட்டு மக்களிடையே கிரிக்கெட் ஆட்டம் நனிசிறந்த முறையில் வளர்ச்சி பெற்றது. கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றிப் பேசுவதும், அதைப் பார்ப்பதும், காதோரத்தில் ரேடியோ வைத்து ஆட்ட வருணணையைக் கேட்பதும், படித்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சூழ்நிலையை மக்கள் மனதிலே உருவாக்கும் அளவுக்கு மக்கள் மன்றத்திலே செல்வாக்கு நிறைந்தாக செழிப்புடன் விளங்கியது.
1892-93ம் ஆண்டுகளில் ஒரு மாகாணத்திற்குள்ளே என்று பல போட்டிகள் நடைபெற்று வந்த நிலைமாறி, மூன்று மாகாணங்கள் சேர்ந்து, தங்களுக்குள் விளையாடும் மும்முனைப்போட்டி ஆட்டங்களை நடத்தி மகிழும் அளவுக்கு 1907-1908ம் ஆண்டுகளில் நிலைமை தெளிவும் பொலிவும் பெற்றோங்கியது. அதன்பின், நான்கு மாகாணங்களுக்குள் நடைபெறும் போட்டி என்று 1912-1913ம் ஆண்டிலும் ஐந்து மாகாணங்களுக்கிடையே போட்டிகள் 1937-38ம் ஆண்டிலும் நடைபெற்றன. மாகாணங்களுக்கிடையே கிரிக்கெட் வளர்ச்சியுறுவதைக் கண்டு, தேசிய அளவுப் போட்டி ஒன்றை நடத்திவிட வேண்டும் என்று தெளிந்தனர் ஆட்ட வளர்ச்சியில் அக்கறை கொண்ட பெரியவர்கள்.
எல்லா இளவரசர்களிடத்திலும் நன்மதிப்பும் கெளரவமும் பெற்றிருந்த A.S. டிமில்லோ (A.S. Demello) என்பவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால், 1934-35ம் ஆண்டு தேசிய கிரிக்கெட் பெரும்போட்டி ஒன்று தொடங்கப்பெற்றது. அதற்குரிய வெற்றிக்கோப்பையாக பாட்டியாலா மகாராஜா ஒரு கேடயத்தை வழங்கினார். அது ரஞ்சித்சிங்ஜி என்பவரைப் பெருமைப் படுத்துவதற்காக, ரஞ்சிக்கோப்பை (Ranji Trophy) என்று பெயர் சூட்டினார்கள். இப்பொழுது மாகாணங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளுக்கு ரஞ்சிக் கோப்பைதான் பரிசாகத் தரப்படுகிறது. மிகவும் கெளரவம் வாய்ந்த இப்பரிசினைப் பெற, ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு ஆண்டும் முயல்கிறது. அதனால் கிரிக்கெட் ஆட்டம் பேரளவில் வளர்ச்சியடைகிறது. மக்களிடையே உன்னத நிலையை எய்திடும் வண்ணம் உயர்நிலையையும் ஆட்டக்காரர்களுக்கு அளிக்கிறது.
இந்தியாவிலே கிரிக்கெட் வளர்ந்திருக்கும் நிலையினைப் பார்த்தால், நமது தேசிய ஆட்டமாக விளங்குகிற வளைகோல் பந்தாட்டத்தைவிட, ஒருபடி மேலே சென்று, உலக அரங்கிலே உன்னத இடத்தை வகிக்கும் பெருமையுடன் விளங்குகின்றது. உண்மையிலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற ஆட்டமாகத்தான் கிரிக்கெட் இன்று விளங்குகிறது.
ரஞ்சிக்கோப்பைக்கான போட்டியைப் போலவே, வேறு பல முதல்தரமான போட்டிகளும் ஒவ்வொரு புகழ் பெற்ற கோப்பைக்காகப் போட்டியிடும் வகையிலே சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது.
துலிப்கேடயம் (Duleep Trophy): இரானி கேடயம் (Irani Trophy); டியோதர் கேடயம் (Deodhar Trophy), போன்றவை முக்கிய போட்டிகளுக்கான கேடயங்களாகும்.
அதுபோலவே கூர்பிகார் கேடயம் (Cooch-behar Trophy), சி.கே.நாயுடு கேடயம் (C.K. Nayudu Trophy) ரோகிண்டன் பாரியர் கேடயம் (Rohinton Baria Trophy) விஸ்ஸி கேடயம் (Vizzy Trophy) போன்ற கேடயங்கள் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையே நடைபெறும் போட்டி ஆட்டங்களுக்குரிய கேடயங்களாகப் பரிசளிக்கப்படுகின்றன.
கிரிக்கெட் ஆட்டம் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆட்டமாகும். மிகவும் அமைதி வாய்ந்த, கொந்தளிப்பற்ற, கோலாகலமாக நடைபெறுகின்ற, பண்பாட்டை வளர்க்கின்ற ஆட்டமாகவும் திகழ்கின்றது. ஆழ்ந்த பொறுமையையும் அதிகத் திறமையையும், சிறந்த திறன் நுணுக்கங்களையும் சீரிய கலை நுணுக்கமான ஆட்டமுறைகளையும் தன்னகத்தே அடக்கி வைத்திருக்கின்ற கிரிக்கெட் ஆட்டம், உலகிலேயே ஓர் உன்னத இடத்தையும், உயர்ந்த கெளரவத்தையும் பெற்று விளங்குகிறது என்றால், அது பெருமை மட்டுமன்று. அதுவே உண்மை என்றும் கூறலாம்; மகிழலாம்.