கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கிரேக்கர்களின் வீரக் கதைகள்

17. கிரேக்கர்களின் வீரக் கதைகள்

உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற முறையிலே நடக்கின்ற விளையாட்டுப்போட்டிகளை, ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக நாடுகளில் விரும்பி ஏற்று நடத்த விரும்புகின்ற ஒரு நாட்டில், பதினாறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற போட்டிகள் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

விளையாட்டு வீரர்களின் விழுமிய புகழுக்கு முத்தாய்ப்பான வாய்ப்பை வழங்கும் ஒலிம்பிக் பந்தயங்களை, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கின்றார்கள்.

அப்படியென்றால், பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்ற சுவையான சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா!

ஆமாம்! பழைய ஒலிம்பிக் பந்தயங்களை பிரபலமாக நடத்திப் பெருமை பெற்ற நாடாகத் திகழ்ந்தது கிரேக்க நாடாகும். உடல் வலிமைக்கும், வனப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதனை மத விழாவாக, வீர விழாவாக நடத்தி வெற்றிகரமாக வாழ்ந்திருந்த நாடு கிரேக்க நாடாகும்.

ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கு பெறுவதற்காக உவப்புடன் முன் வந்த வீரர்களை, விழா நடத்தும், விழாக் குழுவினர் எத்தகைய கடுமையான விதி முறைகளுடன் வரவேற்றனர், வழிப்படுத்தினர், விளையாட அனுமதித்தனர், கொடுமையாகத் தண்டித்தனர் என்றெல்லாம் அறிகின்ற பொழுது, கிரேக்கர்கள் நடத்திய கீர்த்தி மிகு விழாவான ஒலிம்பிக் பந்தயங்களை, தங்கள் உயிரினும் மேலாக நேசித்தனர் என்பதையே நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்புகின்ற வீரன் ஒருவன், கலப்பற்ற தூய கிரேக்கனாக இருக்க வேண்டும் என்பது முதல் விதி.

அவன் திருமணம் ஆகாதவனாக, எந்த குற்றவாளிப் பட்டியலிலும் இல்லாதவனாக, இருக்கவேண்டும் என்பது அடுத்த விதி, அதிலும், அவன் பந்தயங்களில் கலந்து கொள்ள விரும்பி மனுச்செய்து கொண்ட பிறகு, கலே நாடிகை எனும் குழுவால் பரிசீலிக்கப்பட்டுத் தேர்ந் தெடுக்கப்பட்டான். பின்னரே ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டான் என்றும் வரலாறு விரித்துரைக்கின்றது.

வெற்றி பெற்ற வீரன் ஒருவன் கிரேக்கத்திலேயே சிறந்த வீரனாகக் கருதப்பட்டான். அவனை வளர்த்து ஆளாக்கிய நாட்டில் அவன் ஒரு குட்டி தேவதை பெறுகின்ற அத்தனைச் சிறப்பினையும், வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டான். அவன் அழகை சிலை வடித்தார்கள். பொன்னையும் பொருளையும் பரிசாக அளித்தார்கள் அந்த நாட்டினர்.

எல்லோரும் சென்று வருகின்ற கோட்டை வாயிலில் அவனை சென்று வரவிடாது. கோட்டைச் சுவரை இடித்து அவனுக்கு எனத் தனிவழி அமைத்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். வாழ்த்தினர். வணங்கினர் என்று வரலாறு புகழ் பாடுகின்றது.

புனித ஒலிம்பியா மலையில் வளர்ந்த ஆலிவ் மரத்தின் மலர் கொடிகள் வளையங்களாக, வெற்றி வீரன் தலையிலே அணியப் பெறும் பொழுது, அவன் பிறந்ததன் பெரும் பயனை அடைகின்றான் என்ற அளவில், ஆரவாரத்துடன், அளவிலா ஆனந்தத்துடன் பழைய ஒலிம்பிக் பந்தயங்களை கிரேக்கர்கள் நடத்தினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கிரேக்கர்கள் நடத்திய ஒலிம்பிக் பந்தயங்கள் கீர்த்தியின் உச்ச நிலையை அடைந்திருந்தன. வரலாற்றாசிரியர்கள் ஆராய்ச்சி குறிப்புக்கும் எட்டாத காலத்திலேயே, அவர்கள் வாழ்க்கை முறையில் செம்மாந்த நிலையில், செழிப்பார்ந்த நாகரிகக் கலைகளில் நாளெலாம் நடமாடித் திளைத்திருந்தனர்.

வரலாற்றாசிரியர்களின் குறிப்புக்கள் எது சரியான வருடமென்று ஒன்றுக்கொன்று வழக்காடிக் கொண்டிருக்கின்றன என்றாலும், ஒரு ஆண்டினை மட்டும் சரியான தென்று எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு முன்னரே பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் கோலாகலமாக கொண்டாடப் பட்டிருக்கின்றன. என்றால், வரலாற்றுக் குறிப்புக்கு வடிவம் கொடுத்த ஆண்டு என கி.மு.776ஆம் ஆண்டையே அவர்கள் குறித்துக் காட்டுகின்றனர்.

அந்த ஆண்டு, முதன் முதலாக நடந்த ஒட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் எனும் புகழைப் பெற்றிருப்பவன், அதிலும் முதன் முதல் ஒலிம்பிக் வெற்றி வீரன் எனும் அழியாப் புகழைப் பெற்றிருக்கும் வீரன் கரோபஸ் என்பவன். சமையற் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தியவன், எத்தனை சாதுர்யமும், சாமர்த்தியமும், சக்தியும் நிறைந்தவனாக வாழ்ந்திருக்கிறான் பார்த்தீர்களா!

வரப்போகின்ற வீரக் கதைகளில் பல, புராணக் கதைகள் போல வருணிக்கப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொழுது, இவைகளெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா இல்லையா என்று நீங்கள் சந்தேகத்தில் சலனம் அடையாமல் படித்தால் வியப்பூட்டும் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்கத்தில் நடைபெற்றன என்பது உண்மை என்று, எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், இப்படி நம்ப முடியாத பலகதைகள் எப்படி உருவாயின என்றால், இது உண்மையிலே நடந்தனவா அல்லது வரலாற்றாசிரியர்களின் வளமார்ந்த கற்பனையா என்பதை நாமே ஊகித்து உணர்ந்து கொள்ள வேண்டியதுதான், வேறு வழியில்லை.

வீரக் கதைகளின் கதாநாயகர்களாக விளங்குபவர்கள் எல்லோரும், பழைய ஒலிம்பிக் பந்தயங்களிலே பங்கு பெற்றவர்கள், பாங்குடன் வெற்றி பெற்றவர்கள், பலராலும் பாராட்டப்பட்டவர்கள் என்பதற்கு எள்ளளவும் ஐயமின்றி, ஆதாரங்களுடன் பல குறிப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதும் உண்மைதான். ஆனால், வாழ்க்கையிலே உண்மையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வருணிக்கும் பொழுது, நம் நாட்டில் உலவும் புராணநாயகர்களான அர்ச்சுனன், பீமன், கர்ணன், இராமன், கண்ணன் போன்றவர்களையும் மிஞ்சிப் போய் விடுகின்ற அளவில் தான் இந்தவீரக் கதைகள் அமைந்திருக்கின்றன.

ஆகவே தான், விளையாட்டு உலகில் வளமாக வாழ்ந்த வீரர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, வீரக் கதைகள் என்ற தலைப்பிலே வடித்துத்தந்துள்ளேன். இக் கதைகளிலே வரும் இனிய அவ் வீரர்கள், தங்கள் தேகத்தை எந்த அளவில் தரமும் திறமும் உள்ளனவாக வளர்த்துக் கொண்டிருந்தனர் என்ற ஒரு கனிவான உண்மைதான் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்.

வலிமையையும் திறமையையும் அவர்கள் பொல்லாத செயலுக்குப் புறம் போக்கிவிடாமல், நல்லவைக்ளைக் காக்க, நாட்டுக்கு உழைக்க அவர்கள் எவ்வாறு பயன்படுத்திப் புகழ் பெற்றார்கள் என்ற பேருண்மையை நாம் அறியும்போது, அவர்களின் செம்மாந்த வாழ்வின் நோக்கம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

சக்தி ஒருவரது தேகத்தில் மிக மிக, பக்தியும் பண்பாடும் மிகுதியாகும் என்பது பெரியோர்களின் கருத்தாகும். அத்தகைய பேருண்மையை வெளிப்படுத்தும் சான்றுக் கர்த்தாக்களாக அமைகின்ற வீரர்களின் கதையை அறிவதின் மூலம், புத்துணர்ச்சியும் பேரின்ப எழுச்சியும் பெறுவோம் என்ற எண்ணத்தில், இனி வீரர்கள் உலகைக் காண்போம் வாருங்கள்!