கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/பந்தயம் பிறந்த கதை
கிரேக்க நாட்டிலே கடவுளுக்குக் குறைச்சல் இல்லை, வீரத்தில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைவிட, மதத்தில் அவர்கள் ஆழ்ந்த பற்றும், அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார்கள். அதனாலேயே, அழகு என அவர்கள் ரசித்ததற்கும், அலங்கோலம் என்று அருவெறுப்பு அடைந்ததற்கும்கூட உருவம் அமைத்தனர். அவற்றையெல்லாம் வல்லமை உள்ள கடவுள் என்று வணங்கினர். அந்தக் கடவுளர்களுக்குத் தலைமை தாங்குவதுதான் சீயஸ் என்னும் பெயரமைந்த கடவுள்.
சீயஸ், கரானாஸ் என்ற இரண்டு தலைமைக் கிரேக்கக் கடவுளர்கள், பூமியை யார் ஆள்வது என்று போட்டியிட்டனர். அந்த்ப் போட்டியில், சீயஸ் தன் பகைவனான கரானாசைக் கொன்று வெற்றி கண்டதற்காகவே இம்மாபெரும் போட்டியினைத் தொடங்கி வைத்தார். என்பது ஒரு புராண வரலாறு, பந்தயம் தோன்றியதைப் பற்றி பிண்டார் என்ற புலவரும், மற்றவர்களும் மேற்கூறிய கதையைப் பாடிவைத்துச் சென்றிருக்கின்றனர்.
மதம் வாழ்க்கைக்கு முகம் போன்றது என்று வாழ்ந்து வந்த கிரேக்க மக்களிடையே, ஒரு காலத்தில் மன வேற்றுமை எழுந்தது. மதக் குழப்பம் மிகுந்தது. இவ்வாறு குழப்பத்தால் துன்புறுகின்ற நேரத்தில் பிளேக் என்ற கொடிய நோயும் மக்களிடையே பரவி அழித்தது, வதைத்தது. அலறிப்புடைத்த மக்கள் ஆண்டவனைத் தொழுதனர். அந்நாளில், வானத்தில் இருந்து அசரீரீ ஒன்று எழுந்தது. அந்த ஆணையின் படியே, அந்நாட்டை ஆண்ட அரசனான இபிடஸ் என்பவன் ஒலிம்பிக் பந்தயத்தைத் துவக்கினான்.
இப்படி ஒரு கதையை, கிரேக்கப் புராணம் கூறுகிறது. கதை என்றால் வளரும் அல்லவா! இன்னொரு புராணக் கதையும் ஒலிம்பிக் பிறப்பிற்கு உண்டு.
ஹிராகிலிஸ் என்ற அரசனுக்கும், அகஸ் எனும் அவனது பகைவனுக்கும், மல்யுத்தப் போட்டி ஒன்று நடந்தது. அந்தப் போட்டியில், அகஸை, ஹிராகலிஸ் வென்றதோடல்லாமல், கொன்றும் விட்டான். அந்நிகழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்வதற்காக, தனது தந்தை சீயஸ் என்பவருக்கு ஒலிம்பியா என்ற இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டினான். அந்தக் கோயிலின் முன்னே, விளையாட்டுப் பந்தயங்கள் நடக்க விளையாட்டு அரங்கம் ஒன்றைத் தானே அளந்து கட்டி முடித்தான்.
மேலே கூறிய புராணக் கதையைவிட, பொருத்தமான அதே சமயத்தில், சுவைமிக்க இன்னொரு நிகழ்ச்சியும் உண்டு. அதையும் கீழே காண்போம்.
கி.மு. 9-ம் நூற்றாண்டு, கிரேக்க நாட்டிலே ஓடும் கீர்த்தி மிக்க நதியான ஆல்பியஸ் கரையில் அமைந்த, அழகான பகுதியான ஒலிம்பியாவில் உள்ள பிசா (Pisa) எனும் நாட்டை, ஓனாமஸ் (Opnomaus) என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகும் அறிவும் நிறைந்த பெண் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் ஹிப்போடோமியா. அவளைத் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் விரும்பினர். அடுத்தடுத்து முயன்றனர். மங்கையோடு மகுடமும், மன்னர் பதவியும் அல்லவா சேர்ந்து வருகிறது! தன் கண்ணான மகளின் கரம் பிடிக்க வந்த கட்டிளங் காளையர்க்கெல்லாம் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தான் மன்னன். இது விசித்திரமான கட்டளை மட்டுமல்ல கொடுமையானதுங்கூட.
திருமணம் செய்துகொள்ளத் தயாராக வரும் இளைஞன், அந்த அளவரசியின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளைக் கவர்ந்துதன் தேரில் ஏற்றிக் கொண்டு நாட்டின் எல்லையைக் கடந்துத் தப்பி ஓட வேண்டும். பின்னால் துரத்தி வரும் மன்னன் கைகளில் அந்த இளைஞன் தப்பி விட்டால், திருமணம். சிக்கி விட்டால் மன்னன் கையிலுள்ள கூர் ஈட்டி அவன் மார்பில் பாயும், மணம் அல்லது மரணம் இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பரிசு.
பாராண்டவன் போட்ட நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பதின்மூன்று காளையர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பாதி வழியிலே பிடிபட்டு, பரலோகம் சென்றனர். ஆமாம்... ஈட்டியை வீசி எறிவதில் எமனையும் விடக் கொடியவன் மன்னவன், போட்டியில் கலந்து கொண்டோர் அனைவரும் பயங்கரமாகக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மக்கள் இதயத்தில் மயக்கம் சூழ்ந்தது. இளவரசியை மணக்க இனி யாரும் துணிய மாட்டார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு இளைஞன் வந்தான். விளக்கினைத் தேடி வருகின்ற விட்டில் பூச்சியாக அவன் வருவதைக் கண்டு, பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். அவன் பெயர் பிலாப்ஸ்.
அவன் வாலிபன்மட்டுமல்ல. கட்டுடல் கொண்டவன், கூரிய மதியும் வீரிய செயலும் கொண்டவன் போலவே தோன்றினான். இல்லையேல், பூக்காடு என்று எண்ணிக் கொண்டு சாக்காட்டை நோக்கி வேகமாக வந்திருக்க மாட்டானல்லவா?
போட்டி தொடங்கி விட்டது. பேரழகி ஹிப்போடோமியா பக்கத்தில் இருக்க, தேரிலே புறப்பட்டு விட்டான் பிலாப்ஸ், எல்லையைக் கடக்கப் போகிறானா? அல்லது ஈட்டியால் கொல்லப்படப் போகிறானா? இறைவனுக்கே வெளிச்சம்.
போட்டி பயங்கரமாகத் தொடங்கி விட்டது. தேர், புழுதி மீற புறப்பட்டது. புயல் வேகத்தில் போகிறது அவனது தேர், பின் தொடர்கிறது மன்னன் ஒனாமஸின் அழகுத் தேர். கையிலே ஈட்டி, கண்களிலே கொடுரம். முகத்திலே கர்வம். ஏன்? உலகில் உள்ள குதிரைகளிலே நம் குதிரைகள் தான் ஒப்பற்றவை. வலிமையுள்ளவை. விரைவாக ஓடக் கூடியவை என்பது அவன் நம்பிக்கை அவனுடைய ஈட்டி தான் அகில உலகிலும் கூர்மையானது, குறி தவறாதது என்ற ஓர் ஆணவ எண்ணம். குதிரைகள் பாய்கின்றனவா. பறக்கின்றனவா என்றவாறு மன்னன் தேர் முன்னேறி, முன்னே போகும் தேரை விரட்டிப் பிடிக்க, இரு தேர்களுக்கும் இடையேயுள்ள தூரம் குறைய, இதோ பிடிப்பட்டான் பிலாப்ஸ் என்ற நிலையிலே!
திடீரென ஓர் சத்தம்... ஆமாம்! மடமடவென்று அச்சாணி முறிந்தது. படபடவேன்று சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு பறந்தோடின. மமதையோடு தேரோட்டிய மன்னன், முகம் குப்புற மண்ணிலே விழுந்தான். கழுத்து முறிந்து இறந்தான் பழி வாங்கப் பாய்ந்துவந்த மன்னன், பாதி வழியிலே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானான். விதிதான் அவனை வீழ்த்தியதா? இல்லை... சதியா? ஆமாம் பிலாப்ஸின் சதி.
பிலாப்சின் சதியல்ல... மதி. அவனது மதி செய்த சதி மன்னனது தலைவிதியை நிர்ணயித்தது. போட்டியிட வந்த பிலாப்ஸ், வீரத்தை மட்டும் பயன்படுத்தவில்லை. விவேகத்தையும் பயன்படுத்தினான். பேரழகியைப் பெறுகின்ற இந்த உயிர் போகும் போட்டியில் தான் வெற்றி பெற்றால், தான் பெறப் போகின்ற ராஜ்யத்தில் பாதிப் பங்கு தருவதாக மன்னனது தேரோட்டியான மிர்டிலாஸ் என்பவனிடம் கூறி, தனது சதிக்கு உடந்தையாக்கினான். சதிக்கு உள்ளான தேரோட்டி, மன்னன் போட்டிக்குப் புறப்படுவதற்கு முன்னர், தேரின் அச்சாணியைக் கழற்றி விட்டு பாதி ராஜ்யம் பெற பகற் கனவு கண்டு கொண்டிருந்தான்.
இந்த சாரதியின் சதியால் தான், தேர் கவிழ்ந்தது மன்னன் மடிந்தான். மங்கை, பிலாப்சுக்கு மாலையிட்டாள். மணாளனாக மாறிய பிலாப்ஸ், மன்னனாகவும் மாறிவிட்டான். மாமனாரைத் தான் இந்தப் போட்டியில் இழந்தானே தவிர, மகுடத்தை அவன் இழக்கவில்லை. வெற்றி பெற்ற வேகத்தோடு, அரச பாரத்தைச் சுமந்த மன்னன், அடுத்து ஒரு பெரும் பழியையும் சுமந்து கொள்ள ஆயத்தமானான். அதுதான் சதிக்குக் கிடைத்தப் பரிசு, மிர்டிலாசை ஆசை காட்டிக் கூட்டிச் சென்று, மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி அவனையும் கொன்று விட்டான் பிலாப்ஸ்.
வெஞ்சினத்தால் வீர இளைஞர்களைக் கொன்ற மன்னனை வஞ்சனையால் கொன்றான், வஞ்சத்தால் எஜமானனைக் காட்டிக் கொடுத்தக் கயவனை, கபடத்தால் கொன்றான். மண்ணும் பெண்ணும் கிடைத்த மாபெரும் மகிழ்ச்சியை, மக்களுக்கு உணர்த்த வேண்டாமா? ஆகவே, பிசா எனும் நகரத்திற்கு சில மைல் தூரத்திற்கு மேற்கே, ஹெலாஸ் என்ற அழகான பகுதியின் அருகே இருக்கும் எல்லிசில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியான ஒலிம்பியாவில், அந்தப் புனிதமான இடத்தில், தான் பெற்ற வெற்றியைக் குறிக்க விளையாட்டுக்களை ஆரம்பித்தான், அதோடு மத விழாவாகவும் கொண்டாடினான்.
இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உண்டானதன் காரணத்தை பல்வேறு கதைகள், புராணங்கள் பலபடக் கூறுகின்றன என்றாலும், நம் கண் முன்னே காணுகின்ற ஒலிம்பிக் பந்தயம் போலவே, அந்நாளில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றிருக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் நிறைய உள்ளன.
கிரேக்கர்கள், நாகரிகம் மிகுந்தவர்களாக வாழ்ந்த போதிலும், சிந்தையிலே தெய்வ பக்தி நிறைந்தவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தெய்வம் போற்றி, சுவை மணம் மிகுந்தப் பொருட்களைப் படைக்கும் நம்மவர் பழக்கத்திற்கு பதிலாக, விளையாட்டுப் பந்தயங்களை விமரிசையாக நடத்தி வந்தனர். ஆண்டவன் பேரால் மட்டுமல்ல ஆண்மையுள்ள வீரனின் வெற்றித் திரு நாளிலும், வீர மரணம் எய்திய பெருநாளிலும் கூட, பந்தயங்கள் நடந்திருக்கின்றன.
ஆரம்ப நாட்களில், ஒலிம்பிக் பந்தயங்களை பிசா நாட்டினர் மட்டுமே நடத்தி வந்தனர்; ஏனெனில், தொடக்கத்திற்கான தகுந்த கதையின் கருவே அந்நகரில் தானே அமைந்து இருக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல, அந் நாட்டின் அருகாமையில் வாழ்ந்த எல்லிஸ் நகர மக்கள் அவர்களுக்குத் துணை போயினர். சேர்ந்து பந்தயங்களை நடத்தினர். பந்தயத்தின் மகிமை பெருகப் பெருக ஸ்பார்டா எனும் நாட்டினரும் பங்கு பெற்றனர், இவ்வாறாக, ஒலிம்பிக் பந்தயங்களில் உள்ளம் ஈடுபட்ட நாட்டினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆனால், பங்கு பெறுவோர் அனைவரும் கிரேக்க நாட்டினராகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாய விதியும் கூடவே இருந்தது. கட்டாயமாகவே தொடர்ந்து வந்தது.
நாடுகளுக்குள்ளே எழுந்த போட்டி மனப்பான்மையும், தலைமைத் தன்மையும், பந்தயம் நடக்கவும், பலமான உடல் பெறவும் காரணமென்று முன்னரே குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம், இருந்தும், எவ்வாறு பகைநாடுகள் கூடி, பந்தயங்களை நடத்தின என்றும் நீங்கள் கேட்கலாம்?
போர் என்பது அவர்களுக்குப் பொழுதுபோக்குப் போல, எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது யுத்தம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதற்காக, பந்தயங்களே நிறுத்தி வைத்துவிட முடியுமா? ஆகவே, அவர்களுக்குள்ளே ஓர் ஒப்பந்தமும் உடன்படிக்கையும் செய்து கொண்டனர்.
ஒலிம்பிக் பந்தயம், கிரோமினியா என்ற மாதத்தில் மட்டுமே நடைபெறுவதால், அந்த மாதத்தில் யாருமே போர் செய்யக்கூடாது. யுத்தத்தை நிறுத்திவிட வேண்டும். அமைதியாக இருந்து, ஆற்றல் மிகுந்த பந்தயக் களத்தில் பங்கு பெற்றிட வேண்டும். சண்டைபோடும் நாடுகள் பந்தயம் நடக்கும்போது சமரசமாகவே இருக்க வேண்டும் என்ற சபதத்தை கி.மு. 884-ல் எடுத்துக் கொண்டதாகவும், அந்த விதி 1278 ஆண்டுகள் தொடர்ந்து வந்ததாகவும் சரித்திரச் சான்றுகள் பகர்கின்றன.
இந்த அடிப்படையிலேதான் அனைத்து நாடுகளும் போட்டிகளில் கலந்து கொண்டன, போட்டியிட்டன, ஆனால், போர் புரியும் கருவிகளுடன் யாரும் பந்தயத்திடலுக்குள் நுழையவே கூடாது. அவ்வாறு, போர்க் கருவிகளுடன் ஒலிம்பியாவுக்குள் வர நேர்ந்தால், அவர்கள் எல்லிஸ் என்ற இடத்திற்குச் சென்று, கருவிகளைப் பத்திரமாகக் கொடுத்து வைத்துவிட்டு, பந்தயம் முடிந்த பிறகு மீண்டும் போய் எடுத்துக் கொள்ள்வேண்டும். பகைவர்களோடு கலந்துறவாடவும், நெருங்கி நிற்கவும், பேசவும் போன்ற நிலைமை ஏற்படும். என்றாலும், நண்பர்களாகவே பழகவேண்டும், எந்தவிதமான அசம்பாவித நிகழ்ச்சிகளும் நடக்கக்கூடாது என்று அவர்கள் கட்டுப் பாட்டோடு இருந்தபோதிலும், சில சமயங்களில், எல்லை மீறிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடந்து இருக்கின்றன.
இருந்தாலும், கிரேக்கர்கள் சத்தியத்திற்கும், சம்பிரதாயத்திற்கும் கட்டுப்பட்டே, சண்டையின் வெறியை மறந்து, சமதானத்தோடு பந்தயங்களில் கலந்துகொண்டு பேரின்பம் அடைந்தார்கள்.
எதிரிகளாக இருந்தாலும் எதிரிகளுடனே பந்தய வீரராகப் போரிட்டாலும் அமைதி காத்தனர். ஆங்காரத்தை நீத்தனர், அழகும் ஆண்மையும் பண்பாடும் பந்தயக் களத்திற்குப் பெருமை சேர்த்தனர்.