கிழவியின் தந்திரம்/நம்பினோர் கெடுவதில்லை

2. நம்பினோர் கெடுவதில்லை

ங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கை காற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே” என்றாள்.

“அடி பைத்தியக்காரி, கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் தங்களுடைய பாவங்கள். எல்லாம் போகும் என்று நம்புவது இல்லை. புராணம் படிக்கிறாரே, அவருக்குக்கூட இந்த நம்பிக்கை இல்லை. யார் உண்மையாக நம்புகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கைலாச பதவி கிடைக்கும்” என்று இறைவர் கூறினார். உடனே பார்வதிதேவி, “கங்கையில் மூழ்குகிறவர்களில்யார் உண்மையாக நம்பி மூழ்குகிறார்கள் என்றும் யார் நம்பிக்கை இல்லாமல் மூழ்குகிறார்கள் என்றும் எப்படித் தெரிந்துகொள்வது?” என வினவினாள்.

'“நான் உனக்கு அதைக் காண்பிக்கிறேன். வா, போகலாம். நாம் இருவரும் கிழவனும் கிழவியுமாக மாறி, கங்கைக் கரைக்குப் போகலாம்” என்று கூறி இருவரும் கிழ வடிவங்களை எடுத்துக்கொண்டு போனார்கள்.

இருவரும் கங்கையில் மூழ்கி நீராடும் பொழுது கைலாசபதியாகிய கிழவர் நீரோடு போய்விட்டார். பார்வதி தேவியாகிய கிழவி, “என்னுடைய புருஷனை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?” என்று கதறியழுதாள்.

புராணம் படித்த பண்டிதர் அங்கே வந்தார். “அம்மா நான் உங்கள் கணவரைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லிக் கங்கையில் இறங்கினார். கிழவி அப்பொழுது, “ஒரு பாவமும் செய்யாதவராக இருந்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் முடியாது” என்றாள்.

பண்டிதருக்குத் தம்மேலேயே நம்பிக்கையில்லை. தாம் செய்த பாவங்கள் எல்லாம் அவருடைய நினைவுக்கு வந்தன. அதனால் அவர் ஒன்றும் செய்ய முடியாமல் தலை குனிந்து நின்றார். கிழவியின் ஒலக் குரலைக் கேட்டு வேறு சிலரும் அங்கே ஓடி வந்தார்கள். அவர்கள் கிழவரை மீட்கலாம் என்று நினைக்க தொடங்கிய பொழுது கிழவி “ஒரு பாவமும் செய்யாதவர்களால்தான் அவரை மீட்க முடியும்” என்றாள். அதைக் கேட்ட அவர்கள் எல்லோரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி நின்று விட்டார்கள்.



இந்தச் சமயத்தில் முரட்டு ஆள் ஒருவன் அங்கே வந்தான். கிழவியைப் பார்த்து, “ஏனம்மா அழுகிறய்? உனக்கு என்ன கஷ்டம் வந்தது?” என வினவினான். கிழவி எல்லாவற்றையும் சொன்னாள். அதற்கு அந்த முரடன், தான் கிழவரைக் காப்பாற்றுவதாகக் கூறினான். அதற்கு வழக்கம்போல் கிழவி. “ஒரு பாவமும் செய்யாமல் இருந்தால்தான் உன்னால் இயலும்” என்றாள். அது கேட்ட முரடன், “நான் இப்பொழுது தான் பண்டிதர் படித்த புராணத்தைக் கேட்டேன். இந்தக் கங்கையில் ஒரு தடவை மூழ்கினால், எல்லாப் பாவங்களும் தொலையும் என்று சொன்னார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன். என்னுடைய பாவங்கள் தொலையட்டும்” என்று சொல்லி முழுக்கும் போட்டான். பிறகு நீந்திச் சென்று அந்தக் கிழவரை இழுத்துக் கொண்டு, வந்தான்.

உண்மையான நம்பிக்கையோடு இருந்து வந்த முரடனுக்கு முன்னாலே கைலாசபதியாரும். பார்வதி தேவியும் தங்கள் தரிசனத்தைக் காட்டி. ஆசீர்வாதம் செய்தார்கள்.

கைலாசபதி பார்வதிதேவியைம் பார்த்து, “பார்த்தாயா, இத்தனை பேர்கள் இருந்தும் இந்த ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போயிற்று புராணம் படித்த பண்டிதருக்கே நம்பிக்கையில்லையே. “நம்பினோர் கெடுவதில்லை” என்பதை இந்த ஒருவன்தான் நிரூபித்தான். ஆதலால் இவன் ஒருவனுக்குத்தான் கைலாசத்தில் இடம் இருக்கும்” என்று சொன்னார்; பிறகு அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள்.