கிழவியின் தந்திரம்/மாற்றிய பாட்டு



3. மாற்றிய பாட்டு

வெகு காலத்திற்கு முன் மதுரை என்ற நகரத்தில் பராக்கிரம பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். அவனிடம் அடிக்கடி தமிழ்ப் புலவர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவனும் அந்தத் தமிழ்ப் புலவர்களிடமும் மிகவும் அன்பு கொண்டு உபசாரம் செய்வான், தமிழ் நாட்டுப் புலவர்களில், அவனிடம் சென்று பரிசு பெறாத புலவர்களே இல்லை என்று சொல்லி விடலாம்.

சார்வ பௌமர் என்ற புலவர் அந்த அரசனைப் பார்த்துப் பழகும் வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தார், அவர் பாண்டியனைக் காண வேண்டும் என்ற ஆவலோடு மதுரையை நோக்கிப் புறப்பட்டார். பல காலமாகப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருடைய உள்ளத்தில் இருந்தமையால் அங்கே போனவுடன் அங்கே என்ன என்ன நடக்கும் என்று பலவாறாகக் கற்பனை செய்து பார்த்தார். பாண்டியன் ஓடி வந்து தம்மை வரவற்பான் என்றும், தம்முடைய கவிகளைக் கேட்டுப் பாராட்டி, பலவகைப் பரிசுகள் அளிப்பான் என்றும் அவர் கற்பனை பண்ணினார்.

சார்வ பௌமர் மதுரையை அடைந்தார். அப்போது பாண்டிய மன்னன் பிற நாட்டு மன்னவன் ஒருனோடு போர் புரிவதைப் பற்றித் தன்னுடைய மந்திரிகளோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.

புலவர் அரண்மனையை அடைந்ததும் அவரை இன்னார் என்று அறிந்து கொண்டு அதிகாரி ஒருவர் அவரை ஓர் இடத்தில் தங்கச் செய்து, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். மாமன்னனைக் காண வேண்டும் என்ற ஆவலோடு வந்த புலவர், “மன்னரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார்.

“நீராடி, உணவு கொண்டு இருங்கள். மன்னரைப் பார்க்கும் சமயம் தெரிந்து சொல்கிறேன். அப்போது போய் காணலாம்” என்று அதிகாரி சொன்னார்.

புலவர் கட்டியிருந்த மனக் கோட்டை தளர்ச்சியை அடைந்தது. ‘புலவர்கள். எல்லாம் பாண்டியனை வானளாவப் புகழ்ந்தார்களே! அப்படியே ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று சொன்னார்களே; இங்கு நடப்பது வேறு விதமாக அல்லவோ இருக்கிறது?’ என்று அவர் எண்ணினார். ‘என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என்று அவர் பொறுத்திருந்தார் அன்று முழுவதும் பாண்டிய மன்னரை அவரால் முடியவில்லை.

அதிகாரி, இதோ பார்க்கலாம். மிகவும் முக்கியமான ஆலோசனையில் மன்னர் ஈடுபட்டிருக்-கிறார். கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி வந்தார்.

இப்படியாக இரண்டு நாட்கள் கழிந்தன. புலவருடைய ஆர்வம் தளர்ந்தது; சிறிது கோபம் கூட வந்தது.

உண்மை என்னவென்றால் அதிகாரி பாண்டியனுக்கு அந்தப் புலவர் வந்த செய்தியையே தெரிவிக்கவில்லை. மிகவும் இரகசியமாக மந்திராலோசனை நடந்தமையால் அரசனைக் காண முடியாது என்று அவர் நினைத்தார். அன்றியும் அதிகாரிக்கு மந்திராலோசனையை விடப் புலவரைப் பார்ப்பது பெரிதாகத் தோன்றவில்லை.

புலவருக்கு நடந்த உபசாரங்களில் குறைவில்லை ஆனால், அவர் வெறும் சோற்றுக்காகவா அங்கே வந்தார்? ‘இனிமேல் நாம் காத்துக் கொண்டிருப்பது பேதமைச் செயல்; புறப்பட வேண்டியதுதான்’ என்று அவர் தீர்மானித்தார்.

அதிகாரியிடம், “உம்முடைய மன்னனைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காது என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்களைத் தெய்வமாகப் போற்றுகிறவர் அவர் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆனால் இங்கே வந்த பிறகு எனக்கு உண்மை விளங்கி விட்டது. சரி, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்றார், அதிகாரி அப்போதுதான். தம் குற்றத்தை உணர்ந்தார். உடனே அந்த அதிகாரி அரசனிடம் புலவர் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கச் சென்றார்.


சார்வ பௌமர் என்ற புலவர் வந்து மூன்று தினங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்' என்ற செய்தி மாமன்னன் காதில் விழுந்தது. தன்னுடைய அவைக்களத்திற்கு அதுகாறும் வராத புலவர் அவர் என்பதை அவன் உணர்வான். “அவரை வந்த உடனே என்னிடம் அழைத்து வருவதற்கு என்ன?” என்று கேட்டான்.

“மன்னர்பிரான். மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தமையால்...” என்று அதிகாரி சமாதானம் சொல்ல வந்தார். ஆலோசனையைச் சிறிது நேரம் கழித்துச் செய்யலாம். ஆனால் புலவரைக் காத்திருக்க வைக்கலாமா?” என்று கோபத்துடன் அரசன் கேட்டான்.

“சரி, இவ்வளவு நாள் காத்திருக்கும்படிச் செய்த குற்றத்திற்கு நானே அவர் உள்ள இடத்திற்குச் சென்று அவரைப் பார்ப்பேன். தமிழுக்கு நான் செய்த அவமானத்திற்கு இப்படிச் செய்வதுதான் பரிகாரம்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான் பாண்டியன்.

அங்கே புலவர், “இன்னும் அதிகாரி வந்து சேரவில்லையே என்றுகாத்திருந்தார். சார்வபௌமகம் தம்முடைய கோபத்தைப் பாட்டிலே காட்டத் தொடங்கினார்.

“இவன் தமிழ் நூல் அறிவில் அகத்தியன் என்று சொல்வதெல்லாம் அறியாமை, உண்மையல்ல” என்று சொல்ல ஆரம்பித்தார்.

அதற்கு முன்பே பாண்டியன் புலவரைக் காணப் புறப்பட்டுவிட்டான். பாட்டு முடிவதற்குள் அரசன் புலவரை நாடி வருகிறான் என்பதை அதிகாரி ஓடி வந்து சொன்னார். புலவருக்கு வியப்பு உண்டாயிற்று. ‘இவ்வளவு நாள் காக்க வைத்த அரசன் நேரே வருவதாவது இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என்று நினைத்தார், அதற்குள் அதிகாரி தாம் அரசனிடம் புலவர் வரவை இதுவரையில் தெரிவிக்காத குற்றத்தை ஒப்புக்கொண்டு, “நீங்களே என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று புலவர் காலிலே விழுந்தார்.

புலவருக்கு உண்மை விளங்கி விட்டது. மன்னன் தம்மைப் பார்க்க வருவதை எண்ணிய போது அவர் உடம்பு புளகம் போர்த்தது. அவர் மன்னனை எதிர் கொண்டு வரவேற்கப் புறப்பட்டார்.

பாண்டியனும் புலவரும் சந்தித்தார்கள். “புலவர் பெருமானே, என் பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று அரசன் கூறினான். புலவர் “நான் முதலில் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு மாற்றம் அடைந்தேன். என் கவியும் மாற்றம் அடைந்தது” என்றார்.

“கவி மாற்றம் அடைந்ததா” என்று ஆவலோடு கேட்டான் அரசன்.

புலவர் தாம் தொடங்கிய பாட்டை முடித்து விட்டார். ஆரம்பித்தபோது இகழ்ச்சியாகப் பாட எண்ணியே ஆரம்பித்தார். பாட்டு முடிவதற்குள் உண்மை தெரிந்த பிறகு அந்தப் பாட்டைப் பாண்டிய மன்னனுக்கு உரிய புகழைச் சொல்வதாக அடையுமாறு சொல்லி முடித்தார்.

“அகத்தியன் என்று இவனைச் சொல்வது அறியாமை, உண்மையன்று” என்றல்லவா தொடங்கினார்? இப்போது அந்த அகத்தியன் இவன் கால் கழுவிய நீரைக் குடித்தல்லவா தமிழ் கற்றான்? அப்படி இருக்க, இவனை அகத்தியன் என்று சொல்லாமா?” என்று பொருள் தோன்று மாறு பாட்டை முடித்தார்.

பாண்டியன் பாட்டைக் கேட்டுக் பிரமித்துப் போனான். “நான் செய்த பிழைக்கு அகத்திய முனிவர் அல்லவா இகழ்ச்சியைப் பெற்றார்?” என்றான்.

புலவர் உடனே, “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே! பழங்காலத்தில் இருந்த கடல் வடிம்பலம் நின்றவன் என்ற பாண்டிய மன்னனுடைய திருவடிகளைக் கடலானது அலம்பியது. அந்தக் கடல் நீரை அகத்திய முனிவர் ஆசமனியம் செய்தார்” என்ற வரலாற்றைக் கூறினார்.

பாண்டியன் மேலே ஒன்றும் சொல்ல இயலாபால் அன்பும் வியப்பும் தோன்றப் புலவரைப் பார்த்தாள்.