குடும்பப் பழமொழிகள்/கணவன்

கணவன்

கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை. -ஜெர்மனி

தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு, பெண்ணின் நன்மை கணவன். -மலாய்

மனையாளின் குற்றங்களுக்குமணவாளனே பொறுப்பு; குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி.
-இங்கிலாந்து

ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்குக் கவலையே யில்லை. -( ,, )

அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிறான், அதிருஷ்டமில்லாதவன் குதிரையை இழக்கிறான். - ஜியார்ஜியா

மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான். -லத்தீன்

கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை. -ரஷ்யா

ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது. - ருமேனியா

ஏழு வருடங்கள் கழியுமுன்னால் உன்மனைவியைப் புகழாதே. -ரஷ்யா

அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது, அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது. - செர்பியா

மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது. -( ,, )

அடுப்படியிலேயே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன். - ஸ்பெயின்

உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னால், 'கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!' என்று பிரார்த்தனை செய்து கொள்.

-ஸ்பெயின்

மனிதன் தலை, பெண் தொப்பி. -சுவீடன்

பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு மூன்று நாள் ஓய்வு கொடுத்து, தானும் மூன்று நாள் பட்டினியிருப்பான். - சுவிட்சர்லந்து

உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள். -யூதர்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால், கணவனுக்கு அமைதி கிடைக்கும். -ஆப்பிரிக்கா

கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள், அவர்களுக்கு எதிராகக் கொடுமையாக இருக்கவேண்டாம்.
-பு. ஏற்பாடு
நல்ல கணவனானால், மனைவியும் நல்லவளாயிருப்பாள்.
- இங்கிலாந்து

நல்ல மனைவியால் கணவனும் நல்லவனாவான். -( ,, )

செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி-இந்தத் தம்பதிகள் இன்பமா யிருப்பார்கள். -( ,, )

கணவர்கள் வானுலகம் சென்ற பிறகே மனைவியின் ஏச்சு நிற்கும். -( ,, )

கணவனுக்கு வேண்டியது அறிவு, மனைவிக்கு வேண்டியது அடக்கம். -( ,, )

கணவர்கள் அடங்கிப் போவதால்தான், மனைவியர் வெறி அதிகமாகின்றது. -( ,, )

புருடன் இறந்ததும், அண்டைவீட்டுக்காரர்கள் அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்பதை அறிகிறார்கள். -( ,, )

சக்கரவர்த்திகளும் தங்கள் மனைவியருக்கு வெறும் கணவர்களாகவே தோன்றுவர். -பைரன்

ஒரு மகனோடு இருப்பதைவிட, ஒற்றைக் கண்ணுடைய கணவனுடன் வாழ்வதே மேல். - ஸ்பெயின்

கணவனைத் தெரிந்துக்கொள்ள மனைவியின் முகத்தைப் பாருங்கள். -ஸ்பெயின்

கணவன் விதிக்கும் தளைகளால் தழும்பு உண்டாகாது.

-ரஷ்யா

அன்பில்லாத கணவன் பொறாமையுள்ள கணவனைவிட மேலானவன். -இதாலி

தன் குடும்பத்திற்கு நேரும் அவமானத்தைக் கடைசியாகத் தெரிந்து கொள்பவன் கணவன். -லத்தீன்