குடும்பப் பழமொழிகள்/விருந்து

விருந்து

வீட்டிலிருக்கும் விருந்தாளி கடவுளுக்கு நிகரானவர்.

-ஸெக்

வருகிற விருந்தினரை வரவேற்று, போகிறவரை விரைவில் வழியனுப்பு. -போப்

விருந்தும் மருந்தும் மூன்று நாள். - தமிழ்நாடு

மருந்தே யாயினும் விருந்தோடு உண். -( , , )

முதல் நாள் விருந்தாளி, மறுநாள் தொந்தரவு. - இந்தியா

அம்மான் வீடானாலும், ஏழு நாட்களுக்குத்தான் வசதியாயிருக்கும். -( , , )

விருந்தென்றால், வீடு நிறையக் கூட்டம்; உபவாச மென்றால், உலகமே திரும்பிப் பார்ப்பதில்லை. -சீனா

விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கௌரவிக்க வேண்டும். -அரேபியா

அழைத்து வந்தவனை விட, அழையாமல் வந்தவன் மேல்.
- கால்மிக்

விருந்துச் சாப்பாடு கடனாக அளிக்கப்படுவது.

- ஆப்கானிஸ்தானம்

[நாமும் திரும்ப விருந்தளிக்க வேண்டும்.]

நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன். -பல்கேரியா

வீட்டு அம்மாளின் விருந்தாளி பாக்கியசாலி, வீட்டுக்காரனின் விருந்தாளி பாக்கியமற்றவன் -ஃபின்லந்து

விருந்தாளியின் பார்வை கூர்மையானது. -ஐஸ்லந்து

முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி - போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம். -லிதுவேனியா

விருந்தாளி அதிகாலையில் எழுந்திருந்தால், இரவில் அவன் நம்முடன் தங்க விரும்புகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். -ரஷ்யா

விருந்தினரின் முதுகுப்புறம்தான் அழகு. - ஸ்பெயின்

விருந்தினர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை மறந்து விடக்கூடாது. -சுவீடன்

புது விருந்தை வீட்டினுள் அழையாமலிருத்தல் கேவலம், வந்த விருந்தை வெளியேற்றுவது அதைவிட மோசம்.

-லத்தீன்

அதிக உபசாரம் அபசாரத்திற்கு அறிகுறி. -சீனா

கடன் வாங்கி விருந்துகள் நடத்தி ஆண்டியாக வேண்டாம். -அபாகிரைஃபா

மற்றொருவர் மாளிகையில் விருந்து நன்றாகத்தான் இருக்கும். -ஹாலந்து

விருந்து முடிந்த பிறகு மனிதன் தலையைச் சொறிகிறான். -ஃபிரான்ஸ்

விருந்து நடத்திக் கொள்ளக் காலம் இருக்கிறது. -( , , )

மூடர்கள் விருந்து நடத்துகிறார்கள், அறிவாளிகள் அதை அநுபவிக்கிறார்கள். -இதாலி

இன்று விருந்து, நாளை உபவாசம். - லத்தீன்

பெரிய விருந்தும் சிறிது நேரம்தான். -யூதர்

விருந்தினால் வைத்தியர்களுக்கு வேட்டை. - இங்கிலாந்து

விருந்து நடத்தினால் நண்பர்கள் கிடைத்து விட மாட்டார்கள். -( , , )