குண்டான உடம்பை குறைப்பது எப்படி/ஐய வினாக்களும் மெய்யான பதில்களும்

4. ஐய வினாக்களும் மெய்யான பதில்களும்


1. கவர்ச்சியான உடலமைப்பு என்கிறார்களே? அது என்ன?

இந்த உடலமைப்புக்கு ஆங்கிலத்தில் Ideal shape என்று பெயர். அதாவது அளவான அமைப்பு.

இந்த அமைப்பை அடி வயிற்றுக்கு (Abdomen) மார்புக்கும் (Chest) உள்ள சரியான அளவு என்று நாம் சொல்லலாம்.

ஆண்கள் என்றால், அடி வயிற்றுக்கும் மார்புக்கும் உள்ள அகல அளவு 6 அங்குலம் வித்தியாசம் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு அடி வயிற்றின் அளவு 32 இருந்தால் மார்பளவு 38 இருந்தால் கசர்ச்சியான அளவு. 6.அங்குலத்திற்கும் மேலாக இருந்தால் அது காண்பவரைக் கவர்கின்ற கட்டான உடலமைப்பாக இருக்கும்.

பெண்களின் அழகு அளவு என்று இப்படி கூறுவார்கள். 25-35-25 என்று. அதாவது 25 அங்குலம் இடை அளவு 35 அங்குலம் பின்னளவு, 35 அங்குலம் முன்னளவு, ஆமாம். மார்பு அளவுக்கும் அடி வயிற்றின் அளவான இடை அளவுக்கும் 10 அங்குலம் வித்தியாசம் இருக்க வேண்டும்.

உலக அழகிகளின் உடலமைப்பை, இப்படிக் குறைந்தது 10 அங்குல வித்தியாசத்தையே அளவுகோலாக வைத்துத் தீர்மானிக்கின்றார்கள்.

ஆனால், மக்களுக்கு எல்லாம் எப்போதும் வாயால் வரும் பிரச்சனை தான். வயிற்றுப் பிரச்சனையாகும்.

வாயை வளர்த்தோம். வயிற்றை வளர்த்தோம். வாழ்க்கையை வளர்த்தோம் என்பதில் தான் எல்லோரும் குறியாக இருக்கின்றார்கள்.

வாய் என்றால் வழி என்று அர்த்தம். அது உணவை வயிற்றுக்கு அனுப்பும் வழியாகவே இருக்கிறது. வாய்க்குள்ளே தீப்பொறி போல நாக்கு இருக்கிறது. நா என்றால் தீச்சுவாலை என்றும் கூறுவார்கள்.

நாக்கிலே 9000 சுவை நரம்புகள் இருக்கின்றன. (Taste Buds). இந்த ஒன்பதாயிரம் சுவை நரம்புகளும் பாதிக்கின்ற பண்டங்களை எல்லாம் சுவைத்துப் பார்க்கத் தூண்டி விட்டு, மனதை மயக்கி, ஆசையை விரட்டி, துடியாய் துடிக்கச் செய்து பாடாய் படுத்தி விடுகின்றன.

பிறகு, நாசுவைக்க, வாய் அசை போட்டு வேகமாக வயிற்றுக்குத் தள்ள, அதை வாங்குகின்ற வாய்ப்பைப் பெற்ற இரைப்பைக்கு எக்கச்சக்கமான கனம் ஏறிவிடுகிறது.

வல்லமையுள்ள தோல் பையாக இருக்கும் வயிற்றுப் பை, சோற்றுப் பொருட்களை செரித்துச் செரித்துச் சோர்ந்து, தோல் பையாக இருந்தது தொல் பையாக நலிந்து போகின்றது.

தொல் பை என்றால் நலிந்த பை, தொன்மையான பை, சரிந்த பை, கவிழ்ந்த பை என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

தோல் பையானது நாளாவட்டத்தில், காலக் கிரமத்தில் பலமிழந்து பழசாகி தொல் பை ஆகிவிடுகிறது. தொல் பையை அழைக்கிறவர்களது உச்சரிப்பு - தொல் பையானது தொற்பையாகிறது. அதுவே நாளடைவில் தொப்பையாகிவிட்டது.

ஆகவே, தொப்பை என்றால் முன் பக்கம் சரிந்தும், பக்க வாட்டின் இருபுறமும் விரிந்து, கவிழ்ந்து போய்க் கிடக்கும் வயிறு என்று அர்த்தம் ஆகிறது.

தொப்பையின் அளவு 40 அங்குலம் என்றால். அப்பொழுது மார்பின் அகலம் 46 அங்குலமா இருக்கும். வயிற்றின் அளவை விட மார்பின் அளவு குறைந்து காணப்பட்டால், அந்த உடல் எப்படி அழகாக இருக்கும்? கவர்ச்சியாக இருக்குமா? காணச் சகிக்காததாகத் தானே தோற்றமளிக்கும்.

ஆகவே, உடல் சீராக, சிக்கென இருக்க வேண்டுமானால், அளவான உடையுடன், கச்சிதமான அளவு என்றுதான் இருக்க வேண்டும்.

2. சராசரி எடை என்று எப்படி கணிக்கப்படுகிறது?

இவ்வளவுதான் ஒருவருக்கு எடை இருக்க வேண்டும். இருந்தால் நலம் பயக்கும் என்று, அறிவியல் பூர்வமாகக் கணிக்கப்படும் எடைப் பட்டியல், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிற கணக்கெடுப்பின் மூலமாகவே நடைபெற்று வருகிறது.

எடை அதிகமுள்ள ஆண்கள், பெண்கள் என்று அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து, அவர்களின் எடையிலே இருக்கிற சராசரியைக் கண்டு பிடிக்கின்றார்கள்.

அப்படிக் கண்டு பிடிக்கப்படும் சராசரி எடையின் அளவு, சில சமயங்களில் வேறு படலாம். மாறுபடலாம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.

மனித உடலமைப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பதில்லையே உயரமான, அகலமான உடலமைப்பு, குள்ளமான, குண்டான உடலமைப்பு, நேராக, சீராக அமைந்துள்ள நடுத்தர உடலமைப்பு என்று உடலமைப்புகள் இருப்பதால்தான், எடைப்பட்டியல் சராசரியும் ஒன்றாக அமைவதில்லை.

அதனால் பெற்றோர்களைப் போலவே, பிள்ளைகளும் பிறந்து விடுவதால், ஏற்படுகிற வேறுபாடுகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

3. உடல் எடை எப்போதும் ஒரே சீராக இருக்க முடியுமா?

மக்களில் பலர் தங்களது உடல் எடையை, தங்கள் வாழ் நாள் முழுவதும் ஒரே சீராக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வயதாக ஆக, உடல் எடை கொஞ்சம் கூடுதலாகும் என்றாலும், ஒரளவுதான் அதிகரிக்குமே ஒழிய, திடீரென்று தேவைக்கு அதிகமாகக் கூடி விடாது.

இதற்கும் உடல் அமைப்பு ரீதியாக ஒரு காரணம் உண்டு. மனித மூளையின் ஒரு பகுதியாக விளங்கும் ஹைப்போதலமஸ் (Hypothalamus) எனும் உறுப்பில் பசி உண்டாக்கும் மையம் என ஒன்று இருக்கிறது. அதை Appetite centre என்று கூறுவார்கள்.

எவ்வளவு ஒருவர் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும்? என்பதை இந்த மையம்தான் தீர்மானித்து அனுமதிக்கிறது. இதில் எப்போதாவது தடுமாற்றம் ஏற்படுகிறபோது, உண்ணும் அளவும் சற்று மாறுபடுகிறது.

உண்ணுகிற ஒரு வாய் அளவு சோறு கூட உடலின் எடையை அதிகப்படுத்தி விடுகிறது. இப்படி அளவுக்கு அதிகமான ஒரு வாய் அளவு சோற்றை தினம் தினம் சேர்த்து கொள்கிற காரணத்தால், ஒரு மாதத்தில் 1½ பவுண்டு எடை அதிகமாகி விடுகிறது என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள்.

ஒரே சீராக உடல் எடை அமைய வேண்டும் என்றால், 'கையடக்கம் வாயடக்கம்' என்பார்களே அது அவசியம் வேண்டும்.

4. ஒருவருக்கு கூறுகிற உடல் எடையால் பிரச்சினைகள் எப்போது ஏற்படும்?

உடல் எடை ஒருவருக்கு அதிகம் என்று குறிப்பிட்டுக் காட்டுகிற சராசரி எடைக் கணக்கால், இது முடிவு செய்யப்படுவதில்லை. காட்டியிருக்கும் எடைப் பட்டியலில் மேலும் கீழும் உள்ள அளவில், பவுண்டு எடை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். காட்டியிருக்கும் பட்டியலுக்கு 10 பவுண்டுக்கு மேலாக இருக்கிறபோதுதான், அதிகமான உடல் எடை என்கிற நிலையும், அதற்கான பிரச்சினைகளும் ஆரம்பமாகி விடும்.

5. சராசரி எடைக்கும் குறைவாக உடல் எடை இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை குறைவாகத்தான் இருக்கிறதா என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். இப்படி எடை குறைவாக அமைவது அவரவர் பரம்பரைத் தொடர்பாக ஏற்படுகிற குறையாகக்கூட இருக்கலாம். அல்லது அவரது செயல்பாடுகளில் ஏற்படுகிற தவறுகளால் கூட இருக்கலாம்.

உடல் எடை குறைவாக இருக்கிறது; குறைந்து கொண்டே வருகிறது என்றும் தெரிகிறபோது, அதற்காக ஆதங்கப்படவோ அலட்டிக் கொள்ளவோ அவசியமில்லை. உடனே உங்களது வைத்தியரை அணுகி, எடை குறைகிற காரணத்தைக் கண்டுபிடித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

6. உடல் எடை குறைவாக உள்ளவர்கள், சராசரி எடை அளவிற்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

குறைவாக எடை உள்ளவர்கள் எல்லாம், எனக்குத் தெரியும் என்று, தானே அடாவடியான காரியங்களைப் பண்ணிக் கொள்ளக்கூடாது. அதற்கெனப் படித்த பயிற்சி பெற்ற, பக்குவம் அடைந்த, உடல்நல மருத்துவர்களை முதலில் சென்று சந்திக்க வேண்டும்.

எதனால் உடல் எடை குறைந்திருக்கிறது. என்ற அடிப்படையான காரணங்களை கண்டறிய வேண்டும்.

சிலருக்கு எடை குறையக் காரணம் அவர்கள் தங்களுக்குள்ளே கடுமையான விரதப் போக்கைக் கடைப்பிடிப்பது. கோப தாபத்தால், கொந்தளிப்பால், பிறரைப் பயமுறுத்துவதற்காக தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்வதற்காக பட்டினி கிடப்பது என்று பல விஷயங்கள் உண்டு.

நாம் குண்டாகி விடுவோமோ என்ற கற்பனை பயத்தில், உண்ணும் அளவைக் குறைத்துக் கொள்வதும்;

பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்பதற்காக், சாப்பாட்டு அளவைக் குறைத்து உண்பது.

இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இளம் பெண்களிடம் தான் அதிகமாகக் காணப்படுகிறது.

இதற்கு ஆங்கிலத்தில் அனோரெக்சியா நெர்வோசா (Anorexia Nervosa)என்று பெயர். இதை மனச்சிதைவு நோய் என்றும் கூறலாம்.

தன் உடல் குண்டாகி விடுமோ என்ற அச்சத்தாலும், அநாவசியமான கற்பனை எதிர்ப்பாலும், தங்களின் உணவைக் குறைத்துக் கொண்டு விடுவது இந்த நோய் தரும் சிறப்பு விஷயமாகும்.

இவர்களை உண்ணுமாறு கட்டாயப் படுத்தினாலும், சாப்பிட்ட பிறகு சர்வ சாதாரணமாக வாந்தி எடுத்து விடுவார்கள்.

இன்னும் சிலர், தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்தபடி தங்களைப் பயங்கரமான திறமைசாலிகளாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற வெறியுடன், உணவை மறந்து சில சமயங்களில் உணவைத் தவிர்த்து வெறுத்து ஒதுக்கி விடுவார்கள்.

புதிய நண்பர்கள் அறிமுகமாகும்போதும், காதலில் புதியவர்களிடம் பழகும்போதும், இப்படிப்பட்ட மனச்சிதைவு முன்னதாக வந்து, உணவில் குளறுபடியும் நேரும். கிளறுபடியும் ஏற்படும்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் உடல் எடை குறையும். பெண்களுக்கு மாதவிடாய் நின்று விடுகிற போதும் உடல் எடை குறையும்.

மனச்சிதைவு நோயால் தேவையான உணவை உண்ணாதபோது, உடல் உறுப்புக்கள் தங்களுக்குப் போதிய போஷாக்கு கிடைக்காத காரணத்தால், தங்கள் தசைகளில் உள்ள புரோட்டின் சத்துக்களை எடுத்துக் கொண்டு தின்று விடுவதால், எடை குறையும். அதோடு, இதயத்தின் இயக்க லயமும் ரிதமும் மாறிப் போக, மாரடைப்பு கூட வந்து விடும்.

இந்த நோயாளர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது கஷ்டம்தான். அவர்கள் சந்தோஷமாக இருப்பது போல் தான் தெரிவார்கள். உள்ளுக்குள்ளே குண்டாகி விடுவோமோ என்ற பயம் காரணமாகவே, தங்களை அறியாமல் அந்தத் தவறைச் செய்வார்கள்.

அவர்களை அன்புடன் நடத்தி, உணவு உண்ணும் பழக்கத்தில், அளவை அதிகப்படுத்தி விடுகிறபோது எடை கூடும். அதேசமயத்தில், மனதில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை நீக்கும் வண்ணம் மருத்துவரிடமும் கலந்தாலோசித்து சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

7. சிலர் அதிக எடை போட்டு குண்டாகிப் போவது ஏன்?

சிலர் உண்பதில் அதிக உற்சாகம் கொள்வார்கள். அதிக ஆர்வமும் காட்டுவார்கள்.

தங்களால் இவ்வளவுதான் ஜீரணிக்க முடியும் என்று தெரிந்திருந்தாலும், அதற்கும் மேலே, ஆர்வம் காரணமாக, புகுந்து விளையாடி விடுவார்கள்.

அதனால் ஒன்றும் தவறில்லை, ஜீரணிக்கப்படுவதன் காரணமாக, உணவுப் பொருட்கள் எரிந்து போய் உடலுக்குச் சக்தியை அளிக்கின்றன. எரிக்கப்படாமல் தேங்கிவிடுகிற உணவானது. தேவைக்கு மேலே இருப்பதால், அவை தேகத்தில் கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகின்றன.

உடல்நிலை கோளாறு காரணமாக சிலருக்கு அதிக எடை ஏற்பட்டு விடுகிறது.

கட்டாயமாக சாப்பிட்டாக வேண்டும் என்ற சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, உண்ணுவதால் அதிக எடை வந்து விடுகிறது.

மன அழுத்தத்தின் காரணமாக, மனச்சோர்வு காரணமாக, பலர் தங்களை அறியாமலேயே அதிகமாகச் சாப்பிட்டு விட அதன் காரணமாக அதிக எடை வந்து விடுகிறது.

ஒருவர் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டாலும் அதனாலேயே உடலில் எடை கூடிவிடுகிறது.

8. சிலருக்கு மற்றவர்களை விட, சீக்கிரமே உடலில் எடை சேர்ந்து விடுகிறதே? அது ஏன்?

இதற்கான சரியான விடையை யாராலும் கண்டு பிடித்துச் சொல்ல முடியவில்லை, காரணம் என்ன என்பதை மேற்கூறிய பதில்களில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் ஒன்று. உண்ணும் உணவை உடலுக்குள் உயிர்ச்சத்தாக மாற்றி விடுகிற உயர் செயல் (Metabolism) சரியான முறையிலே செயல்படுகிறபோது, எடை சேர்ந்து கூடிவிடுவதில்லை.

அந்த உணவுச் சத்து எரிந்து சத்தாக மாறாதபோது தான், கொழுப்புச்சத்தாகத் தேங்கி எடை கூடி விடுகிறது.

குழந்தைகளுக்கு அதிகமான உணவுப் பண்டங்களைக் கொடுத்து, தின்னச் சொல்லி தொந்தரவு படுத்துகிறபோது, அந்த உணவுப் பொருட்கள் எரிந்து போகாமல், தேங்கிவிட அந்தக் குழந்தை தானாகவே குண்டாகி விடுகிறது. அந்த குண்டுத் தோற்றம் வாலிப காலத்திலும் வளமாகத் தொடர்ந்து விடுகிறது.

சிலருக்கு பிறப்பாலும், பரம்பரை ஜீன்ஸ் அமைப்பாலும் எடை கூடிய உடல் அமைப்பும் ஏற்பட்டு விடுகிறது.

9. சில உணவுப் பண்டங்கள், ஒரு சிலருக்கு குண்டான உடம்பை உண்டாக்கி விடுகிறது என்கிறார்களே? அது உண்மையா?

உண்மை தான். மாவுச்சத்து உணவைவிட கொழுப்புச்சத்து கூடுதலாக உள்ள உணவுகள் ஒரு சிலரின் உடம்பைக் குண்டாக்கி விடுகிறது.

இன்னும் ஒரு குறிப்பை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்குப் போதும் என்ற உணர்வு வந்து விடுகிற பொழுதே, உண்பதை நிறுத்திவிட வேண்டும்.

அடுத்தவர்களின் அன்புக்காக; தன்னுடைய தீராத ஆசைக்காக; மீண்டும் கிடைக்காதே என்ற வெறிக்காக, தேவையை மீறிய திருப்திக்காக, தேவையில்லாமல் உண்ணுகிற பழக்கமே, உணவில் அதிகமான கலோரிகளை சேர்த்து விடுகிறது. அந்த உணவு செரிமானம் ஆகாத காரணத்தினால் தான் சேர்த்து வைக்கப்பட்டு, கொழுப்புப் பிரதேசத்தை உடம்பில் கூட்டிவிடுகிறது.

பெண்களுக்கும் மேலே கூறியது பொருந்தும் என்றால், குடிக்கும் ஆண்களுக்கு, இன்னும் கூட கொஞ்சம் கூடுதல் உடல் பெருக்கத்தை உண்டாக்கி விடுகின்றது. மதுவகைகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதாலும், அவை ஜீரண மண்டலம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் அதிக சேதாரம் விளைவிப்பதாலும், உண்டான உடம்பு குண்டாகி விடுகிறது.

10. குண்டான உடம்பு இருப்பதால் உடலுக்கு ஏதாவது கோளாறுகள் ஏற்படுமா?

ஆமாம். அதிக எடை உள்ளவர்களுக்கு, எப்போதும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.

உடம்பு கட்டாக இருந்தால், இரத்தம் இறைக்கும் இதயத்திற்கு வேலையில் கடுமை இருக்காது. அதிகமான குண்டாக இருந்தால், அங்கெல்லாம் இரத்தம் போய்ச் சேர்ந்தாக வேண்டுமல்லவா? அதற்காக இதயம், கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு முறை இதயம் சுருங்கி விரிகிறபோது, இதயத்திலிருந்து இரத்தம் உடம்பு முழுவதும் ஓடிப் போய் சேர வேண்டும். அப்படி ஒரு முறை சுருங்குகிறபோது, 2 பவுண்டு எடையை ஒரு அடி உயரம் தூக்க எவ்வளவு சக்தி வேண்டுமோ, அவ்வளவு சக்தி இதயத்திற்குத் தேவைப்படுகிறது.

நெல்லுக்குப் பாய வேண்டிய தண்ணீர், புல்லுக்குப் பாய்வதையே வீண் என்கிறபோது, தேவையான செல்களுக்குச் சேரவேண்டிய இரத்தம், தேவையில்லாத இடங்களுக்கும் போகிறபோது, இதயத்தின் வேலைப் பளு அதிகமாகிறது அல்லவா!

அதனால், இதயவலி ஏற்படுகிறது. இரத்தக் குழாய்களில் இரத்தக்கட்டு (Thrombosis) ஏற்படுகிறது. அதனால் இதயத்திற்கு அதிர்ச்சி (Stroke) ஏற்படுகிறது. இரத்தச் சிறு குழாய்களில் இறுக்கம் ஏற்பட்டு, இரத்த ஓட்டம் தடைபட நேரிடுகிறது.

சிலருக்கு நீரிழிவு நோய் உண்டாகிவிடுகிறது. சாப்பிட்ட சோறு ஜீரணமாகமல் போவதும்; ஜீரணிக்க உதவும் இன்சுலின் என்ற சுரப்பி பாதிக்கப்படுவதுமே நீரழிவுக்கு முக்கிய காரணமாகும்.

சாப்பாடு, சாப்பாடு என்று மக்கள் அலைகின்றர்களே சாப்பாடு என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

சப்பாடு என்றால் மரண அடி என்று அர்த்தம். உடலுக்கு நல்லது, மனதுக்கு திருப்தி தருவது சாப்பாடு என்பது எப்போது தெரியுமா? அளவுடன் இருக்கும் போதுதான், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?

சா+பாடு என்று நாம் சாப்பாட்டைப் பிரிக்கலாம். சா என்றால் சாவது. பாடு என்றால் அவஸ்தைகள். அதாவது, மரண அவஸ்தையை உண்டு பண்ணுவதற்கு சாப்பாடு என்று பெயர்.

சாப்பாடு அளவை மீறி, எல்லையைக் கடந்து விட்டால், சந்தோசம் தரவேண்டிய சாப்பாடு, சாவுக்கு இழுத்துக் கொண்டு போய், சந்தி சிரிக்க வைத்துவிடுகின்றது.

நீரிழிவிலிருந்து, எலும்புச் சக்தி இழந்து போகிற நோய்க்கு ஆளாகி, தவறி விழுகிற விபத்துக்களும் அதிகமாகி, பிறகு மூட்டு வலி, முழுங்கால்வலி, இடுப்பு வலி, கணுக்கால் வலி என்று இன்னும் பல கூட்டு வியாதிகளும் படையெடுத்துப் பாழாக்கும். பேரிழப்பையும் அதிக உடல் எடை உண்டு பண்ணி விடுகிறது.

பிறகு, அறுவைச் சிகிச்சைக்கும் ஆளாக நேரிடும். இப்படியெல்லாம் எழுதி, உங்களை பயப்படுத்தவில்லை. உங்களது மனதை பின் விளைவுகளைக் காட்டி பக்குவப்படுத்துகிறேன். வாயை கட்டுப்படுத்தி வயிற்றை மட்டுப் படுத்த முயற்சிக்கிறேன்.

11. அப்படியென்றால் உடல் எடை அதிகம் உள்ள மனிதர்கள், எப்படி எடையை குறைக்கவேண்டும்?

பின்வரும் பகுதிகளில், இதுபற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அதற்கு முன்னதாக, ஆர்வத்துடன் கேட்கப்பட்ட கேள்வியைத் தவிர்க்காமல், சுருக்கமாக சொல்லலாம் என்று பதில் தருகிறேன்.

தனது வயதுக்கும், உயரத்திற்கும் ஆண் அல்லது பெண் என்கிறபோது, இவ்வளவு தான் எடை இருக்க வேண்டும் என்கிற ஒரு கணக்கு இருக்கிறதல்லவா?

அதற்கு மேலாக, 20 சதவிகிதம் எடை, அதிகமாக இருந்தால், (100 பவுண்டு தான் இருக்கலாம் என்கிறபோது, 120 பவுண்டு இருப்பது போல) உடனே இதற்கான மருத்துவரைப் போய் பார்ப்பதுதான் நல்லது.

அக்கம் பக்கம் சொல்கிறார்கள்; கேட்டவர்கள் யோசனை தருகிறார்கள் என்று மானாவாரியாக மனதில் பயந்து கொண்டு, தானே முயன்று, தன்னிஷ்டம் போல, எடையைக் குறைக்க முயற்சித்தால், எடை குறைவது போல குறையலாம்.

அப்படி நேர்கிற நிலைமையில் தேகத்திற்கு களைப்பு (Fatigue) நேரலாம். முழுச்சோர்வும் (Exhaustion) ஏற்படலாம். இது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது. காரணம், வைட்டமின் சத்துக்களும் வரம்பு மீறி இல்லாமல் குறைந்து போவதுதான்.

ஆக, எப்படி உடல் எடையைக் குறைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறதல்லவா!

ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 பவுண்டு எடையை குறைக்கலாம். ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 10 பவுண்டு எடை குறைந்தால், அதுதான் சீரான முறை, சிறப்பான நிலை என்று சொல்லலாம்.

அளவான மாவுச்சத்து உணவு, கோதுமைப் பண்டங்கள், உயர்ந்த அளவு புரோட்டின் உள்ள உணவுகள், புத்தம்புதிய பச்சடி (Salad) உணவுகள் என, மருத்துவர் காட்டுகிற வழிமுறையோடு, உண்ண வேண்டும். (உணவுப் பகுதியில் விரிவாகக் காணலாம்)

(சீரான உடல் எடைக்கு சிறப்பான உடற்பயிற்சிகள் என உண்டு. அவற்றையும் உடற்பயிற்சிப் பகுதியில் காணலாம்)

12. மருந்து மாத்திரைகளால் உடல் எடைகளை குறைக்க முடியுமா?

மனிதர் வாழ்வில், உணவு, உடை, உறையுள் என்று மூன்றும் தான் முக்கியத் தேவைகள் என்றனர்.

கல்வி, ஒழுக்கம், பண்பாடு என்ற மூன்றும் முக்கியம் என்பதைப் பெரியவர்கள் சொல்ல மறந்தனர்.

பணம், பதவி, காமம் இவைதான் இன்றைய வாழ்க்கை லட்சியம் என்பதை செயல் மூலமாக இளைஞர்கள் காட்டி வருகின்றனர்.

அதனால் மனிதர்களுக்கிடையே, அநியாய சாவுகள். பெயர் தெரியாத புதுப்புது நோய்கள்; சமுதாயத்தையே சாகடிக்கும் சகலவிதமான மனப் பாதிப்புகள் எல்லாம் மலிந்து போய் கிடக்கின்றன.

வந்த புது நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முயற்சிக்கும் போதே, வேறுபல புதுநோய்கள் வீறு முகம் காட்டி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வருகின்ற புது நோய்கள் எல்லாம் மனிதர்களை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சகல வேதனைக்குள்ளேயும் கொண்டு சென்று நையப்புடைக்கின்றன.

ஆகவே, மருந்தை நம்பித்தான் மனித இனம் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. மகேசன் பெயரை மறந்து விடுகிற அளவுக்கு மருந்தின் பெயர்கள் மக்கள் மனதிலே மாய்மாலம் பண்ணிக் கொண்டிருக்கின்றன.

எனவே, மருந்து என்று நீங்கள் கூறியவுடன், என் சிந்தனைகள் எல்லாம், சமுதாயத் தெருக்களுக்குள் ஓடி ஒரு வட்டமடித்து வந்து நிற்கின்றன.

ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனிதப்பழக்கம் இப்படி இருந்தது.

உணவு, உடற்பயிற்சி, மருந்து என்று இருந்தது.

நாகரிகம் பெருகப் பெருக:

உணவு, மருந்து, உடற் பயிற்சி என்று மாறிப் போயிற்று.

நாகரிகத்தின் நலிவுகள் பெருகப் பெருக:

மருந்து, உணவு, உடற்பயிற்சி என்று மாறி வந்தது.

இப்பொழுது நோய்கள் முதலிடம் வகிப்பதால்,

மருந்து, உடற் பயிற்சி, உணவு என்று அடிப்படையே மாறியது.

இன்னும் நோயின் வேகம் தணியாமல், பேயின் வாயில் பிடிப்பட்ட பாதகர்களைப் போல, வாழும் நிலைமை மாறியதால் இப்போது தலை கீழ் மாற்றம் பெற்றது.

உடற்பயிற்சி, மருந்து, உணவு என்று ஆகிவிட்டது. இருந்தாலும், மருந்துக்குத்தான் முதல் மரியாதை என்ற நிலை இன்னும் மக்களிடையே மாறவில்லை.

13. மருந்து மாத்திரைகளால் எப்படி எடையைக் குறைக்க முடியும்?

உடல் தனது அமைப்பை மாற்றிக் கொண்டு, எடை மிகுந்து குண்டாகிப் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும். கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பில் ஏமாற்றம் போன்ற காரணங்களாலும் (Anxiety), மற்றும் மனச்சோர்வு மனத்தாழ்வு (Depression) போன்றவற்றாலும் உடல் குண்டாகிப் போவதுண்டு.

அதற்காக, மனச்சோர்வு நோயை அகற்றுகிற மருந்தையும் மனப்பாதிப்பு தரும் கவலை, ஏக்கம் போன்றவற்றையும் மாற்ற மனதுக்கு மாற்றம் நல்குகிற மருந்துகளையும் தருகிறபோது, பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக உண்ணுகிற காரியத்தையும், பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றலாம்.

சிறுநீர் கழிக்கும் உணர்வினைத் துண்டுகிற மருந்துகளை (Neuretic drugs) த் தந்தாலும் இரண்டு அல்லது மூன்று பவுண்டு எடையைக் குறைக்க உதவுமே தவிர, அதிகமாக எடையைக் குறைத்து விடமுடியாது. சிறுநீர் அடிக்கடி, அதிகமாக கழிப்பதால், உடலில் உள்ள நீரானது கொஞ்சம் குறைகிறது, அவ்வளவுதான்.

பசியைக் குறைக்கிற மருந்துகளைச் சாப்பிட்டால், சிறிதளவு பயன் கிடைக்கலாம். உணவைக் குறைக்கலாம். ஆனால் அதுவே நிரந்தரத் தீர்வு ஆகிவிடாது. ஏனென்றால், எடை குறைக்கும் மருந்துகளை எப்படி உண்பது, எவ்வளவு உண்பது என்கிற புதுவழிகளை, பத்திய வகைகளையாரும் கற்றுத் தர முடியாதே!

இப்படிப் பலப்பல முறைகளில் மருந்துகளைச் சாப்பிடுகிறபோது, உடல் எடை குறைந்து போவதுபோல ஒரு மாயா தோற்றமும் மனதுக்குள்ளே ஒரு மாரீச நம்பிக்கையும் உண்டாகலாம். அவர்கள், தாங்கள் உண்ணுகிற மருந்தை நிறுத்தி விடுகிறபோது, மீண்டும் உடல் எடை கூடிப் போகிறது என்பதுதான் உண்மை நிலை.

உறுப்புக்களைத் தூண்டி செயல்படச் செய்கின்ற ஹார்மோன்கள் அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட தைராய்டு பில்ஸ், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் குறைந்த அளவே பயன் கிடைக்கும். அதுபோலவே (Pep pills) கிளர்ச்சியூட்டித் தெம்பூட்டும் மாத்திரைகளும் உண்டு. இவற்றால் பசியைக் குறைக்க முடியும். ஆனால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படும். இரத்த அழுத்தத்தின் மீதும், சிந்தனை மற்றும் மன ஓட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஆகவே, மருந்தால் எடை குறையாது என்கிற உண்மையை மட்டும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

14. உணவில் விட்டமின் சத்துக்களை சேர்த்துக் கொள்வதால், பாதிப்புகள் நேராமல் பயன் கிடைக்குமா?

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் நல்ல உடல் நலத்துடன் தானே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நலமான நிலையில் அதிகமாக விட்டமின்கள் வேண்டும், என்பது அவசிய மில்லை. விட்டமின் என்பது (Vita) விட்டா என்ற சொல்லுக்கு உயிர் என்று பொருள். அதுவே உணவில் உயிர்ச்சத்தாக விளங்குகிறது. சமநிலையான சத்துணவு சாப்பிடுகிறபோதே தேவையான உயிர்ச்சத்தும் கிடைத்து விடுவதால், தனியாக உயிர்ச்சத்தை சாப்பிட வேண்டும் என்பது தேவையில்லை, அவசியமும் இல்லை.

15. சிலருக்கு உடல் எடை தேவையான 'அளவு' இருந்த போதிலும், அவர்கள் உடல் அமைப்பு திருப்தி அளிக்கவில்லையே?

தினந்தோறும் தவறாமல், ஒழுங்காக உடற்பயிற்சி செய்கிறபோது, உடல் எடையும் உரிய அளவுக்கு வரும். உடற்பயிற்சி மூலம் தசைகளுக்கு வேண்டிய விசைச்சக்தி (Muscle Tone) ஏற்படுகிறது. உடல் உறுப்புக்களின் இயக்கத்தாலும், இடுப்புப் பகுதியை நன்கு இயக்குவதாலும், இடுப்புச் சதைகள் கரைந்து போகின்றன. அதனால் இடையின் அளவு சுருங்க, நல்ல தோற்றம் தெரிகிறது. தொடைச் தசைகளில் கொழுப்பு குறையக் குறைய, கரையக் கரைய, நிற்பதிலும் நடப்பதிலும் ஓர் அழகு ஏற்படுகிறது. உடற்பயிற்சியினால் தசைகளின் அமைப்பில் சற்று கூடுதலான விரிவுகள் வந்தாலும், உடல் பார்க்க அழாகாகவே தோற்றம் அளிக்கும்.

16. நோயாளிகளுக்கு உடல் எடையும் குறைகிறது. உடல் அமைப்பும் தோற்றமும் குறைவதற்குரிய காரணங்கள் யாவை?

நீங்கள் கூறுவது உண்மைதான். நீண்ட காலமாக நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் (அதாவது நெஞ்சுருக்கிநோய், நீரழிவு நோய் புற்றுநோய் மற்றும் வருகிற தொண்டைநோய் வகைகளைக் கூறலாம்). அதனால், எடையை அதிகமாக இழக்கலாம்.

அவற்றால் ஏற்படுகிற காய்ச்சல், செய்யப்படுகிற அறுவை சிகிச்சை அல்லது விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுகிறவர்களின் உடலுக்குள்ளே ஏற்படுகிற செல் பிரிந்து வளர்கிற செல்களின் வளர்ச்சி விகிதம் (Metabolism) தொடராமல் நின்று போகின்றன.

அந்தச் சூழ்நிலையில், புதிய செல்கள் பிரிந்து தோன்றாததும், பழைய திசுக்களே வேகமாக அவசரம் கருதி எரிந்து சக்தியைத் தருவதும், எரிந்த திசுக்களுக்குப் பதிலாக புதிய திசுக்கள் தோன்றதாததுமே உடல் எடை இழப்புக்கு முக்கிய காரணமாகிறது.

இன்னும் சில நேரங்களில், அளவுக்கு அதிகமாகவே செல்களும் திசுக்களும் எரிந்து பாதிக்கப்படுவதும், அதிகமாகவே எரிந்து போவதும் முக்கிய காரணமாகும். இதை Hyper Thyroidism என்பார்கள்.

17. நோய்கள் வந்தால் நிச்சயம் எடை குறையும் என்றீர்கள். சில நோய்களால் எடை அதிகமாகும் என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன?

நீங்கள் சொல்வதும் நடப்பதுதான். இதயநோய், சிறுநீரகப்பை நோய், ஈரல் குலை நோய் இவைகளால் பாதிக்கப்படுகிறபோது, உடலில் உள்ள ஊரல் நீரானது (Fluid) வெளிப்படாமல், உள்ளுக்குள்ளேதேக்க முற்றுப் போவதால் உடல் எடை கூடுகின்ற துயரநிலை ஏற்பட்டு விடுகிறது.

சரியாகச் செயல்படாமல் போகிற தைராய்டு சுரப்பியின் காரணமாக, உடல் எடை கூடிப் போகிறது.

மனநோய்க்காக தரப்படுகின்ற மாத்திரைகளால் ஏற்படுகிற விளைவுகளால், மூளையின் ஒரு பகுதி (Hypothalamous) பாதிக்கப்படுவதாலும் உடல் எடை கூடி குண்டாகி விடுகின்றது.