குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/அழுக்காற்றை அகற்றுவது எப்படி?

4


அழுக்காற்றை அகற்றுவது எப்படி?


திருவள்ளுவர் இனியவை கூறலுக்கு இலக்கணம் வகுத்தவர். ஆயினும் அவர் வகுத்துக் கூறிய விதிமுறைகளுக்கு ஓர் இடத்தில் தாமே கட்டுப்படமுடியாமல் திட்டி விடுகிறார். "அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுக்காற்றினைத் திட்டுகிறார்! ஆம்! அழுக்காறு அவ்வளவு கொடுமையானது. அழுக்காறு என்றால் என்ன? அழுக்காற்றினால் விளையும் தீமைகள் என்ன? அழுக்காற்றினை அகற்ற முடியுமா? அழுக்காற்றினை அகற்றும் வழிகள் எவை எவை? என்றெல்லாம் சிந்தித்தல் பயனுடைய சிந்தனையாகும்.

அழுக்காறு என்ற தீமை மக்கள் மத்தியில் மக்கள் மொழியில் பொறாமை என்று வழங்கப்படுகிறது. அதாவது தம்மையல்லாத பிறிதொருவர் அடைந்து அனுபவிக்கும் புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. பொறாமை ஒரு தீய பண்பு. அத்தீய பண்பே இயங்கும் நிலையில் அழுக்காறு என்று பெயர் பெறுகிறது என்று கருதலாம். அதாவது மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க, தட்டிப் பறிக்க, அல்லது பழிதூற்றச் செய்யும் முயற்சிகள் அழுக்காறு ஆகும். அழுக்கு ஆறு அழுக்காறு அசுத்தமானது; துய்மையில்லாதது. நெறியல்லாத நெறி. பேறுகள் அடைந்தாரைப் போலத் தானும் அடையவேண்டும் என்னும் எண்ணம் அழுக்காற்று நெறியில் தோன்றும்; ஆர்வமும் முயற்சியும் தலையெடுக்காது. அழுக்காறுடையார் தேளின் கொடுக்கு போலத் தனக்குத்தானே விஷமிட்டுக் கொண்டு அழிவது உறுதி. அதனால் தாம் அடைய முடியாததை அடைந்திருப்பவர்களைப் பார்த்துப் பழிகறி, இயன்றால் பறிக்க முயற்சி செய்வது அழுக்காற்றின் இயல்பு. அழுக்காறுடையார் உயர்ந்ததாக உலக வரலாற்றில் சான்றே இல்லை. ஆயினும், அழுக்காறு என்ற இயல்பை அறிந்து உணர்தல் வேண்டும். அழுக்காற்றின் வாயில்களைக் கண்டறிந்து அகற்றுதல் வேண்டும். அழுக்காற்றிலிருந்து விடுபெறுதல் ஒரு தற்காப்பு முயற்சி மட்டும் அல்ல; வளர்ச்சிக்குரிய வித்துமாகும்.

அழுக்காறு இரண்டு களங்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் அமைத்துக் கொண்டு தோன்றும். அவற்றுள் சமுதாய அமைப்பு முறையில் உள்ள உடையார்-இல்லாதார் என்ற நிலை. வாய்ப்புக்கள் அனைவருக்கும் உரிமையாக்கப்படாமை ஆகியன அழுக்காற்றைத் தோற்றுவிப்பதில் முதன்மையான களங்கள். மேலும் பேறு பெற்றோரின் அடக்கமின்மையும் எளிமையின்மையும் அழுக்காறு வளர, எரி நெருப்புக்கு எண்ணெய் போலத் துணை செய்யும். நமது நாட்டில் அன்றாடத் தேவைகளாகிய உணவு, உடை, உறையுள் இன்னமும் எல்லாருக்கும் கிடைக்கவில்லை. பலர் ஒருவேளை உணவுக்குக்கூட அல்லலுறுகின்றனர். வாய்ப்புக்கள் அனைத்தும் வாழ்வோர் பக்கமே! வாழ் விழந்தோர் மேலும் மேலும் வாய்ப்புக்களை இழக்கின்றனர். அழுக்காறு எங்கும் எல்லாரிடத்திலும் வளர்ந்து வருகிறது. மட்டுமல்ல. பணம், பதவிகளைப் பெற்றவர்கள் . சமுதாயத்தில் செருக்குடன் நடந்து கொள்கின்றனர். இல்லாதவர்களுக்கு எளிதில் அவை கிடைப்பதில்லை. இதனால் அழுக்காறு வளர்ந்து எங்கும் குற்றங்காணும் படலங்களே சுறுசுறுப்பாக இயங்குகின்றன! நாலு பேர் கூடும் சமுதாயக் கச்சேரிக் கூடங்கள், மேடைகள் எங்கும் பழிதூற்று காதையே அரங்கேற்றம்! நுகர்வில் ஏற்பட்ட வித்தியாசம், கம்யூனிஸ்டுகளிடம் ஆள்வோர் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட இறுமாப்பு ஆகியனவே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயின. உடுத்த முடியாமலும் உண்ணமுடியாமலும் அல்லலுறும் நிலையில், மற்றவர் வயிறார உண்ணுவதை, உடலார உடுப்பதைக் காணும் மனிதரில் தாழ்ந்தோர் அழுக்காறு கொள்வர். இதனைத் திருக்குறள்,

“உடுப்பது உம் உண்பதுரஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்”

(1079)

என்று கூறி விளக்குகிறது. ஆதலால், அண்ணல் காந்தியடிகள் கூறியதைப் போல, மக்களுக்கிடையில் நுகர்வில் 20 விழுக்காட்டுக்கு மேல் வித்தியாசமில்லாமல் கட்டுப்படுத்தினால் அழுக்காற்றைத் தவிர்க்கலாம். அதுபோல எல்லாருக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடிய சமுதாய நடைமுறை வேண்டும். அப்பொழுதுதான் அழுக்காற்றைத் தோற்றுவிக்கும் சமுதாயம் இல்லாது ஒழியும். இந்த நெறிமுறை உருவாக “எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான” சமுதாய அமைப்பு தவிர்க்க இயலாததும் கட்டாயமானதும் கூட! அதோடு பேறு பெற்றார் - செல்வம் பெற்றார் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புநராகவும் பணிவுடையவராகவும் இன்சொல்லினராகவும் வாழ்ந்திடின் அழுக்காற்றினைத் தவிர்க்கலாம்.

அடுத்து, மனிதன் எந்தச் சூழ்நிலையில் அழுக்காற்றுக்கு இரையாகிறான்: அழுக்காறு கொள்வோரின் பெரும்பாலோர் சோம்பேறிகளாக இருப்பர்; ஆனால் ஆசைப்படுவர். அறிவறிந்த ஆள்வினை இயற்றி அடையக் கூடியனவற்றை அடைய ஆசைப்பட மாட்டார்கள். கடின உழைப்பு என்பது அவர்கள் கனவிலும் கருதாதது. இத்தகையோர் வாழ்க்கையில் பெறவேண்டியவைகளைப் பெற இயலாதுபோதல் இயற்கையே! ஆனாலும் அவர்கள் தங்களை நொந்து கொள்ளமாட்டார்கள். தாங்கள்தான் தங்களுடைய இழிநிலைக்குக் காரணம் என்பதையும் உணர மாட்டார்கள். உணர்த்தினாலும் உணர மாட்டார்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களையும் கடவுளையும் விதியையும் காரணங்காட்டி நொந்து கொள்வார்கள்; பழி துற்றுவார்கள்.

மேலும் அழுக்காறுடையவர்க்குத் தன்னம்பிக்கையும் இருப்பதில்லை. தாழ்வு மனப்பான்மை யுடையவராகவும் அல்லது தாழ்வு மனப்பான்மை வழி வளர்ந்து பொய்ம்மை நடிப்பும் உடைய உயர்வு மனப்பான்மை யுடையவராகவும் உருவாகலாம். இதனால் மற்றவர்களைப் போல் இவர் வளர முடியாது, வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுவர். ஆயினும் தன்குறையை மறைக்க, பேறு பெற்றாரின் வாழ்க்கையில் குற்றங்களைக் காண்பர். பிறர் வாழ்க்கையில் குற்றங்களைக் காணுதல் என்ற இயல்பு, குற்றங்களைச் சுமந்து திரியும் இழிபிறவிகளுக்கே உண்டு. அதனால் அறிவும் ஆள்வினையும் அறியாதான் - வாழ்வாங்கு வாழும் முறையறியாதான் தன் இழிவினை மறைத்துக்கொள்ள அழுக்காற்றின் வழி குற்றமே தூற்றித் திரிவான். அழுக்காறு இலாது வாழ அறிவறிந்த ஆள்வினை வாழ்வு தேவை. முயற்சியும் உழைப்பும் தேவை. பழகும் பாங்கறிந்து பழகும் இயல்பே வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தகுதியல்லாதனவற்றை அடைய விரும்பாத மனப்பான்மை அல்லது துறவு மனப்பான்மை வேண்டும். தகுதி வழி உரிமை இல்லாத ஒன்றை அடைய விரும்புவோர் பழி பாவம், ஏளனம் ஆகியவற்றை அடைந்து ஆராத் துயரத்தில் ஆழ்வர் என்பதை மாணிக்கவாசகர்,

“சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா விடுநம் மவரவரே
மூவரென் றேஎம் பிரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே”

(திருச்சதகம் 4)

என்ற திருவாசகப் பாடலால் தகுதியில்லாதவரெல்லாம் தகுதிக்கு ஆசைப்பட்டு அடைந்த அவலத்தை விளக்குகிறார்.

அடுத்து, அறவே அழுக்காற்றினின்றும் விலக வேண்டுமானால்,

“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார்
யாவர்”

என்ற வள்ளலாரின் வாக்குப்படி ஆன்மநேய ஒருமைப்பாடு கொண்டொழுகி வாழ்ந்திடில் மற்றவர்கள் அடையும் பேறுகள் மகிழ்வையே தரும்; மனநிறைவையே தரும்; தியாக சீலத்தைத் தரும். மற்றவர்களை-அவர் தம் இயல்புகளை உளமாரப் பாராட்டுவதின் மூலம் அழுக்காற்றைப் போக்கலாம். எங்கு நெஞ்சு கலந்த உறவும் பாராட்டும் இருக்கிறதோ அங்கெல்லாம் அழுக்காறு கால் கொள்ளாது. தலை காட்டாது.

அடுத்து, சங்கத் தமிழ் வலியுறுத்தியவாறு, “தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் நோன்பு”டையாரை அழுக்காறு அணுகாது. ஏன்? பிறர்க்கென முயலும் நோன்புடையார் வாழும் நாட்டில் “இலர்” இல்லை என்று திருக்குறள் கூறுகிறது.

“இவர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்”

(270)

என்பது குறள்.

திருமூலர், “யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி” என்று மந்திர மொழியாக ஆணையிட்டார். பாவேந்தர் பாரதிதாசன்,

“உலகம் உண்ண உண்டு உடுத்த உடுப்போம்”

என்றார்.

இங்ங்னம் பிறருக்கென முயலும் தவம் செய்வாரை அழுக்காறு அணுகாது. அவர்கள் வாழும் நாட்டிலும் அழுக்காறு என்ற பாவி நடமாடமாட்டான்! இத்தகு பண்பில் சிறந்து வாழ்பவர் பிறர் பெற்றுள்ள ஆக்கம் கண்டு மகிழ்வர். அவர்தம் ஆக்கத்திற்கு அரணாக நின்று பேணுவர். இத்தகையோரை அழுக்காறு அணுகாது; அகன்றுவிடும்.

பிறர் எல்லாம் வாழ்தலால் தன் வாழ்க்கை ஒருபொழுதும் தாழாது என்ற நம்பிக்கை வேண்டும். எவர் ஒருவரும் அவரவருடைய அயர்விலா உழைப்பும் வளர்ச்சியும் மாற்றங்களும் பொருந்திட வாழ்க்கையை நடத்துவாராயின், அவர்தம் நிலை என்றும் தாழாது. அதுமட்டுமின்றி மேலும் மேலும் உயரும். இந்த அறிவு இருந்தால் தற்காப்பின் காரணமாக அழுக்காறு கொள்ளார்.

அழுக்காறு பற்றி ஒரு தவறான கருத்து மக்களிடையில் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அது என்ன? அதாவது கல்வியில், நற்பணிகள் செய்தலில் அழுக்காறு கொள்ளலாம் என்ற கருத்து. இந்தக் கருத்து முற்றிலும் தவறானதாகும். நன்றாகக் கற்கும் மாணவனைப் பார்த்து மந்தமாகக் கற்கும் மாணவன் அழுக்காறு கொள்வதன் மூலம் நன்றாகக் கற்க முயலலாம் என்பது இவர்கள் கருத்து. இல்லை; அழுக்காறு பற்றிய உள்ளம் நல்லன எண்ண ஊக்குவிக்காது; நன்முயற்சிகளில் ஈடுபடுத்தாது. மாறாக, நன்றாகக் கற்கும் மாணவனின் தரத்தைக் கொச்சைப்படுத்தும் செயலையே செய்யும். இதுபோலவேதான் பணிகளுக்கும் எந்த வகையாலும் எந்தச் சூழ்நிலையிலும் அழுக்காறு ஆகாது. அழுக்காறு உயர் பணிகளைக் கெடுக்கும். துறவிகளும் இதற்கு விதி விலக்கு இல்லை.

அழுக்காறு உடையவனின் மனம், புத்தி முதலியன பிறருடைய குற்றங்களைக் காண்பதிலும் பழிதூற்றுதலிலும் நோக்கமுடையதாயிருப்பதால் அவனுடைய காலமும் சக்தியும் அவற்றிற்கே செலவாகும். தன் முயற்சியில் ஈடுபட மாட்டான். அதனால் அழுக்காறுடையான் முன்னேறுவதற்குரிய வாயில்களும் அடைபட்டுப் போகின்றன. ஆதலால் வாழ்வாங்கு வாழ ஆசைப்படுகிறவர்கள் அழுக்காறு கொள்ளலைத் தவிர்க்க வேண்டும்.

அழுக்காறு தீது; முற்றிலும் தீது; மனித சமூகத்தை அழிக்கும் தீய சக்தி, பாவத்தின் உருவம். ஆதலால் அழுக்காற்றினை அறவே நீக்குக, விலக்கு. பெற்றது கொண்டு மன நிறைவு பெறுக. பெறாதவைகளை அடைய முயலுக; குறுக்கு வழிகள் வேண்டாம்.

அழுக்காறு சுயமரியாதையையும் கெடுக்கிறது. வாழ்க்கையில் யாதொரு பணியும் செய்யாமல் பழிதூற்றியே வாழ்வதால் எவரும் நம்பமாட்டார். “பொறாமைப் பிண்டம்” என்று பழிப்பர்; ஒதுங்குவர். இதனால் மானம் போகும்; செல்வம் கெடும்; சுற்றத்தை இழக்க நேரிடும். அதனால் அழுக்காறு கொடிது; கொடுமையிலும் கொடுமையானது.

அழுக்காறு அகன்றால் பல பண்புகள் வளரும். அழுக்காறு அழுக்காற்றினைத் தோற்றுவித்தும் வளர்த்தும் கேடு செய்யும். அவா, அவா நிறைவேறாமையினால் பெறும் சினம், சினத்தின் காரணமாக மொழியும் கடுஞ்சொற்கள் - ஆகியவைகளை அறவே அகற்றுவோம்! பிறர் நலம் பேணுவோம்; முயற்சியுடன் வாழ்வோம்.