குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1/திருவள்ளுவர் திருநாள் சிந்தனைகள்

3


திருவள்ளுவர் திருநாள் சிந்தனைகள்

மதுரை வானொலி ஒலிபரப்பு: 15.194

தமிழருடைய மறை, திருக்குறள். திருக்குறள் தமிழர் வாழ்வியலை விளக்குவது; அரண் செய்வது; பாதுகாப்பது: வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது. திருக்குறள் ஒரு முழு நூல். வாழ்க்கை முழுவதும் தழீஇ வழிகாட்டும் நூல்.

சமுதாயத்திற்கு நான்கு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றைத் திருவள்ளுவர் பாயிரமாகச் செய்துள்ளார். கடவுள் நம்பிக்கை, மழை, ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர், நீத்தார், சான்றோர் கூறும் அறிவுரைகள் - அறன் வலியுறுத்தல் ஆகியன. இந்நான்கும் மானுடம் வளர, வாழ வாயில்களாக அமைந்துள்ளன. மனிதன், மிருகமல்ல; மனிதனுமல்ல; விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வேண்டியவன். மனித நிலையிலிருந்து இறைமைப் பண்பு நிலைக்கு வளர வேண்டியவன் என்று திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

மானுடம் வளர, வாழ, இல்லறம் உதவி செய்கிறது. ஆதலால், நாம் வழிபடும் கடவுள்களும் கூட இல்லறமே நடத்தி வருகின்றனர் என்று கூறுவது மரபு. ஆதலால், திருவள்ளுவர் தமது நூலை, இல்லற நெறியில் தொடங்குகின்றார். “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று வலியுறுத்துகின்றார். இல்லற இயலில் பெண்ணினத்தைப் பெருமைப்படுத்துகின்றார். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்று வினா எழுப்புகின்றார். பெண், பெருமைக்குரியவளாக அமையாவிடின் ஆணுக்கு, “இகழ்வார் முன் ஏறுபோல் பீடுநடை இல்லை” என்று கூறுகின்றார். இல்லறத்தின் அச்சாக விளங்கும் வாழ்க்கைத் துணை நலத்திடம் பொறுப்புக்களை ஒப்படைக்கின்றார். குடும்பத் தலைவியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று குறிப்பிடுவதன் மூலம், திருவள்ளுவர், இல்லற வாழ்க்கையில் தலைவனுக்குத் தலைவி துணை; துணை மட்டுமல்ல நலமும் கூட என்று அறிவுறுத்தும் பாங்கறிக. இல்லறத்தின் சிறப்பைத், தலைமுறை தலைமுறையாக வரும் குடும்பப் புகழை - ஏன்? கணவனின் கற்பைக் கூடப் பெண்ணே காப்பாற்ற வேண்டும் என்று தலைவியின் கடமையை உணர்த்தும் பாங்கு அறநெறியின் பாற்பட்டது.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்,”

(56)

என்பது திருக்குறள். இல்லத் தலைவி, மனைமங்கலம். அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. மானுடத்தின் வரலாறு சிறக்க, குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வளர நன்மக்கள் தேவை. மக்கட் பேறு இயற்கை. நன்மக்கட்பேறு குடும்பத் தலைவனும் தலைவியும் நோன்பிருந்து பெற வேண்டிய ஒன்று. நல்ல தாய், நல்ல தந்தை என்று புகழ் பெற நன்மக்களை ஈன்று புறந்தருதல் வேண்டும். தந்தை, கல்வி தந்து வளர்க்க வேண்டும்; சான்றோனாக்க வேண்டும். அந்த இளைஞன் வாழ்க்கைக் கடமைகளைப் பொறுப்புணர்வுடன் இயற்ற வேண்டும். இது திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

திருக்குறள், இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தாலும் துறவறத்தை ஒதுக்கவில்லை. இல்லறத்தின் முடிவுநிலையில் துறவைக் கூறுகின்றாரா? தனித்துறவைக் கூறுகின்றாரா? இது ஆய்வுக்குரியதாகவே விளங்குகிறது. ஆனால், ஓர் உண்மை உணரப்படுதல் வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் துறவும் கலந்திருத்தல் வேண்டும். துறவைத் தொடர்ந்து துய்ப்பு. இயற்கை, அன்பின் பிணைப்பும் அர்ப்பணிப்புணர்வுமாய் விளங்கும் தன்மையது. ஏன் பிறந்தோம்? வளர்ந்தோம்? வாழ்ந்தோம்? வீடு கட்டியாச்சு; சொத்துச் சேர்த்தாச்சு; பிள்ளை குட்டிகள் பெற்றாச்சு! இவை மட்டுமல்ல இல்லறம்! புகழ் பெற வேண்டும். நல்ல குறிக்கோளுடன் நாட்டின் வரலாற்றுடன், சமுதாயத்துடன் இணைந்த செயற்பாடுகளால் புகழ் கிடைக்கும். புகழ்மிக்க வாழ்க்கை எளிதில் அமையாது.

புகழ் புரியும் வாழ்க்கைத் திசையில் அடியெடுத்து வைக்கும் பொழுதெலாம் நம்முடைய ஊழ் தலை காட்டும். அதாவது, முன்னேற்றத்துக்குத் தடையான நமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சமுதாயத்தின் சூழலாக உருவாகும். அல்லது, எடுத்துக்கொள்ளும் பழக்கவழக்கங்கள் தடையாக அமையும். இவைகளை எதிர்த்து நின்று பழக்கம் தவிரப் பழகினால்தான் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். புகழ் பூத்து வாழலாம்; வரலாற்றில் இடம் பெறலாம்.

இன்று, திருவள்ளுவர் திருநாள்! எப்படி வாழ்வது? சிந்தனை செய்க! வள்ளுவம் காட்டும் வழியில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!.

மதுரை வானொலி ஒலிபரப்பு: 16,195

இன்று திருவள்ளுவர் திருநாள். திருவள்ளுவ்ர் மனிதன் மனிதனாக வாழ அருளிச் செய்தது திருக்குறள். வாழ்தல் என்பது ஒரு கலை. அதனால் திருக்குறள் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்றது. வாழ்வாங்கு வாழ்தலாவது, மண்ணில் வாழும் பொழுது வளமுடன் வாழ்தலும், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனத்தில் நிலை நிற்பதற்குரியவாறு புகழ்பட வாழ்தலுமாகும். அதனால் திருக்குறள் “புகழ்பட வாழ்தல்” என்றே கூறுகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ அறிவு தேவை. துன்பத்திலிருந்து மனிதத்தைக் காப்பது அறிவு என்ற கருவி என்று திருக்குறள் கூறும். “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பது திருக்குறள். மேலும் “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றும் திருக்குறள் பேசுகிறது. கற்றல், கேட்டல்; கற்றனவற்றையும் கேட்டனவற்றையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பயன் காணல் - அறிவுடைமை.

இந்த உலக வாழ்வு நுகர்வுகளால் ஆயது. உண்டு, உடுத்து, உறங்கி வாழ்தலுக்குரிய பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். “செய்க, பொருளை” என்று திருக்குறள் ஆணையிடுகிறது. அறிவும் பொருளும் இருந்தாலும் கூடி வாழக் குடும்பம் வேண்டும். நல்லதொரு சமூக அமைப்பு வேண்டும் என்பதை உணர்த்த இல்லற இயல் கூறிப் பின் சமூக இயலுக்குரிய பொருளியல் கூறுகின்றார். இடையில் துறவற இயல் அமைந்துள்ளது. துறவு என்பது நுட்பமான ஒரு வாழ்க்கை முறை. எந்த ஒன்றின் பாலும் அளவற்ற ஆசை வைப்பின் அது திதாக முடியும். “அவா வெள்ளம்” என்பார் மாணிக்கவாசகர். பொருளியலில் திருவள்ளுவர் வாழ்க்கையைப் பயனுடையதாக்கும் ஊக்கத்தை“உள்ளம் உடைமை உடைமை” என்றும், “அறிவறிந்த ஆள்வினை” என்றும் கூறுகின்றார். பொருளியலுக்குள் நுழையும் முன் ஊழ் பற்றிப் பேசுகின்றார். அறத்துப்பால் தொடங்கி இல்லறஇயல், துறவற இயல் பேசிப் பின் ஊழியலைத் தனி அதிகாரமாகப் பேசுகின்றார். காரணம், முன் கூறிய இல்லற இயல், துறவற இயல் சார்ந்த வாழ்க்கைகளில் ஏற்பட்ட பழக்கங்கள், வழக்கங்கள் ஊழாக உள்ளத்தினின்றும் முகிழ்த்து வருகின்றன: மனிதன் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவன்; எளிதில் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள மாட்டான். “பழக்கம் தவிரப் பழகுமின்” என்று ஆன்றோர் கூறியும் நமது வாழ்க்கைத் தடம் மாறவில்லை! ஆனால் தோல்விகள், துன்பங்கள், துயரங்கள் இவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் அறைகூவலாக ஏற்றுக்கொண்டு, நாள்தோறும் உழைப்பின் அளவும் திறமும் தரமும் கூடினால் தான் பழக்கங்களை - வழக்கங்களை மாற்ற இயலும்; மாற்ற முடியும். இதனைத் திருக்குறள்,

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”

(620)

என்று கூறுகிறது. ஆயினும் நமது நாட்டு மக்களுக்கு ஊழ், தலைவிதி இவற்றின் மீதுள்ள நம்பிக்கை சற்றும் தளரவும் இல்லை; குறையவும் இல்லை.

அதனாலேயே நமது நாடு வறுமையிலிருந்து விடுதலை பெற இயலவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வறுமையை எதிர்த்துப் போர்க்கொடி தாங்கினார் திருவள்ளுவர்.

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும், நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது”;

(1049)

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

(1062)

என்று கடிந்து கொண்டார்! ஆனால் இன்னமும் நாம் திருக்குறளுக்கு உரையெழுதிக் கொண்டிருக்கின்றோம்! அல்லது விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்! ஆனால், திருக்குறள் நெறியை வாழ்வியல் நெறியாக்கச் சமூகம் முயலவில்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைத் திருக்குறள் மறுக்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று வலியுறுத்துகிறது. ஆனால், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட நாம் தீண்டாமையினின்றும், சாதி வேறுபாடுகளினின்றும் விடுதலை பெறவில்லை! திருக்குறள் நெறிக்கு மாறாக நாட்டில்,

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு”

(735)

என்று திருக்குறள் விலக்கிய தீமையே நாளும் வளர்ந்து வருகிறது.

திருவள்ளுவர் திருநாளாகிய இன்று உறுதி எடுத்துக் கொள்வோம்! கற்போம்! நாளும் கற்போம்! அறிவைத் தேடுவோம்! அறிவை வாழ்க்கைக்குக் கருவியாகப் பயன்படுத்தி ஊழின் வலிமையை முறியடித்து வெற்றி பெறுவோம்! வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் நாட்டை மீட்டு “நாடென்ப நாடா வளத்தன” என்ற திருக்குறளுக்கு ஏற்ப நாட்டை அமைப்போம்! எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவோம்! பொறிகளைப் பக்குவப்படுத்திக் கொண்டு வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்! வாழ்க, திருக்குறள்! வளர்க, வள்ளுவத்தின் வாழ்வியல்!