குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/ஏப்ரல்
இறைவா, ஆகாயம் எவ்வளவு அற்புதமான பொருள்; ஒலி-ஒளி இரண்டையும் பிரதிபலித்துத் தரும் ஆற்றலுடையது ஆகாயம். இறைவா, என்னிடம் ஆகாயத்தின் ஆற்றல் இம்மியும் இல்லையே. யாதொன்றையும் பிரதிபலிக்கத் தெரிய வில்லையே. வெறும் பிண்டமாகக் காலம் கழிகிறது. இறைவா, ஐம்பூதங்களில் ஆகாயம் உயர்ந்து விளங்குவது போல் நான் விளங்க அருள் செய்க!
தூய்மை, பொதுமை, வாங்கும் சக்தி, உரிமைப்படுத்திக் கொள்ளத்துறவு, மண்ணகத்துயிர்களை ஓசையால், ஒலியால், உறவுகள் உண்டாக்கி இயக்கும்நிலை - இன்னோரன்ன இயல்புகள் வாழ்வியலுக்கு இன்றியமையாதன.
இறைவா, இந்த இயல்புகளை எனக்குத்தா! நான் மன்னுயிர்த் தொகுதிக்கெல்லாம் ஆதாரமாக வாழும் அருளைப் புரியாய்! நின் திருவருள் என்னை உயர்த்தாவிடில் வேறு எப்படி உயர்வது இறைவா? நின் கருணையைப் பொழி, ஆகாயம் அளவுக்கு உயர்த்து இறைவா!
இறைவா, காற்று, உயிரின் காற்று. இறைவா, "வளி வழங்கு ஞாலம்” என்று புகழப் பெறும் காற்று. என்னே காற்றின் ஆற்றல்; ஓயாதொழியாது இயங்கும் காற்று. எனக்கோ நாள் ஒன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு கட்டாய ஓய்வு மாதிரி உறக்கம் கொடுந்திருந்தாலும் ஓய்வு போதவில்லை. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டியிருக்கிறது! கட்புலனாகாத காற்றின் இயக்கத்தைப் போல் ஓயாது நான் உழைத்திட அருள் செய்க! காற்று, தன் திசையில் செல்லும்; தடைகள் ஏற்படின், தடைகள் நொறுங்கும். இறைவா, நான் எங்கே, குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்கிறேன்? இறைவா, இன்னொரு வேடிக்கை எனக்குத் தேவைகளும் ஆசைகளும் குறிக்கோளாகிவிட்டன! தேவைகளும் ஆசைகளும் குறிக்கோள்களா என்று எனக்கு என் புத்தியில் படவை.
வரலாற்றின் திசையை மாற்றுவது, சூழ்நிலையை மாற்றுவது, மனித குலமே பயனடையக்கூடிய ஒப்பற்ற காரியங்களைச் செய்வது போன்றவைதான் குறிக்கோளாக இருக்க முடியும். எனக்கு என்று குறிக்கோள் தேவை. இறைவா, எனக்கு என்று தனி நடை தேவை! இறைவா, நான் பல்லவி, அனுபல்லவி பாட ஆசைப்படவில்லை. புதிய சுருதியில் புதிய பண்பாடவே ஆசை. அதுவும் ஓய்வில் சுகம் காணாது உழைப்பில் சுகம் காண ஆசை உழைக்கவே ஆசை, இறைவா, அருள் செய்க!
இறைவா, நெருப்பு-எரிசக்தி...! ஆகா! என்னே நின் அற்புதம்! நெருப்பு ஒளியாகி வாழ்விக்கிறது. எரிசக்தியாகப் பயன்பட்டு எண்ணற்ற பொருள்களைப் படைத்துத் தருகிறது. தூய்மைக் கேடான பொருள்களுடனும் கலந்து தூய்மைக் கேடுகளைக் களைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது.
இறைவா என் உடலிலும் நெருப்பின் ஒருகூறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன பயன்? இறைவா! உண்ட உணவைச் செரிக்கவே, ஆயிரம் பாடு. மருந்து மாத்திரைகள்.
இறைவா! இந்த உலகிலே தூய்மைக் கேடுகளை நாளும் உருவாக்குபவனே நான் தான். இறைவா, என்னை மன்னித்து விடு! அக்கினியைப் போல ஒளி படைத்த உடலினைத்தா. படைப்பாற்றல் மிகுதியும் உடைய மனிதனாக நான் வாழ அருள் செய்! தூய்மைக்கும் அழகுக்கும் தொண்டு செய்ய என்னை ஆளாக்கு இறைவா, நான் ஒரு அக்கினிக்குஞ்சாக வாழ்ந்திடத் திருவுளம் பற்றுக!
இறைவா! தண்ணீர் எவ்வளவு அருமையான பெயர். தண்ணென்ற தண்மை அளிப்பது தண்ணீர். உயிர்க்குலம் அனைத்தும் உயிர்ப்புடன் தழைத்து வளரத்துணையாயிருப்பது தண்ணிர். இறைவா, தூய்மைக் கேடுகளை நீக்கித் தூய்மை செய்யவும் தண்ணீர் பயன்படுகிறது. இறைவா, "நீரின்றமையாது உலகு" என்ற திருவள்ளுவர் வாக்கு அப்படியே உண்மை இறைவா.
இறைவா, தண்ணீரை நோக்க நோக்க நான் மிக மிக அற்பமாகத் தோன்றுகின்றேனே. இறைவா, நான் தண்ணீரை விட உயர்ந்தவன்தான். ஆனால், செயலில் என்னிடம் தண்ணளியில்லையே, பசுமையான எண்ணங்கள் இல்லையே. ஏன் இறைவா? நான் முதலில் தண்ணீரைப் போல் ஈரநெஞ்சுடன் வாழ அருள் செய்க; எங்கும் எதிலும் பசுமையைக் காணும் ஆர்வத்தினைத் தந்தருள் செய்க!
தூய்மை! அகத்திலும் தூய்மை, புறத்திலும் தூய்மை காத்திட வரம் தா! தூய்மையே அருள் நிலை, இறைவா, நான் தண்ணீரைப்போல் மன்னுயிர்த் தொகுதிக்குப் பயன்பட வாழும் வரத்தினைத்தா!
இறைவா, எனக்குப் பகுத்தறிவு தந்தருளினை ஆதலால், நான் அஃறிணைப் பொருள்களை விட உயர்ந்தவன் என்று தம்பட்டமடித்துக் கொள்கிறேன். ஆம்! உண்மை.
உயிர்த் தொகுதியனைத்தும் தாங்கி வளர்த்து வாழ்விக்கும் நிலத்திற்கு நான் ஈடு ஆவேனா? நிலம் மக்கள் வாழ்வுக்குப் பயன்படுமாறு போல வேறு எது பயன்படுகிறது? கழிவுப் பொருள்களைத் தன்மடியில் வாங்கிக் கொண்டு, பின் படைப்பாற்றல் மிக்க உரமாகத் தருகிறதே! என்ன அற்புதம்! நிலம், அதனைக் கொத்தினாலும் வெட்டினாலும், உழுதாலும் சினங் கொள்ளாது. மாறாக, நன்மையையே தருகிறது. இறைவா, நானோ கழிவுப் பொருள்களைக் கழிக்கவே முயலுகிறேன். உடன்பாடிலாத மனிதனை ஒதுக்கவே முயலுகிறேன்.
அம்மம்ம! இறைவா, நான் என்னையே சுற்றுகிறேன். நிலம், வானவெளியில் சுற்றுகிறது. எனக்கும் பகுத்தறிவு இருந்து என்ன பயன்? இறைவா. என் வாழ்க்கை பயன்பாடுடையதாக வளர அருள் செய். மன்னுயிர்த் தொகுதி அனைத்தையும் தளுழுவி நிற்கும் வாழ்க்கையை அருள் செய்க!
இறைவா! கதிரவன். ஆற்றல் மிக்க ஒளிக்கற்றைகளை உடைய கதிரவன்! குகைகளிலும் ஊடுருவும் கதிரொளி. இறைவா! இந்த ஞாயிற்றொளியில்தானே உயிர்க்குலம் தோன்றி வளர்ந்து, தழைத்து வாழ்கிறது! இறைவா, நானும்தான் ஞாயிற்றைத் தொழுகிறேன். தொழுது என்ன பலன்? ஞாயிற்றின் காலக் கடைப்பிடியும்-சுற்றித் திரிதலும் என்னால் இயலவில்லையே!
ஞாயிற்றொளி கண்டால் ஞாலமே சிரித்து மகிழ்கிறது. மலர்கள் விரிந்து மணம் பரப்புகின்றன; புள்ளினங்கள் பாடுகின்றன. இறைவா! நான் கிடந்தாலும் எழுந்தாலும் எனக்கு மகிழ்ச்சியைக் காணோம். என்னைச் சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சியைக் காணோம்!
இறைவா, என்னை ஞாயிற்றின் மாணாக்கனாக்கு! படைப்பாற்றல் உடைய மானுடனாக்கு ஞாயிற்றுக்கு, என்னை வளர்க்குமாறு ஆணையிடு, ஞாயிற்றைப் போற்றி அவ்வழி வளர்ந்து நின் அடிபோற்றப் பணித்திடு, இறைவா!
இறைவா! தண்ணிலவு பொழிகிறது. எவ்வளவு தண்மை. தண்ணிலவு, உயிர்களிடத்தில் எழுப்பும் உணர்வுக் கிளர்ச்சிகளை ஏட்டில் எழுத இயலுமா? இறைவா! தண்ணிலவுக்கு இந்த ஆற்றல் எப்படிக் கிடைத்தது? நின் முடியைச் சார்ந்ததனால்தானே? அது மட்டுமல்ல, இறைவா! ஒளிக்கதிர் அனைத்தும் கதிரவன் தந்தது. இறைவா, சேர்வாரோடு சேர்ந்தால் அனைத்தும் நன்றாக நிகழும்.
இறைவா, எனக்கும் உன்முடியில் இடம் கொடுக்கக் கூடாதா? கேட்டவர்களுக்குத்தான் உன் முடியா? இறைவா, நீயாக இடம் அருளிச் செய்தால் எதுவும் நன்றாக அமையும். நானாகக் கேட்டால் அது நன்மையாக அமையாது. நான்முகன் முடி தேடினான். முடிந்ததா, என்ன? முடிவு, குடியிருக்கக் கோயில் இல்லாது போனான். அதனால் இறைவா, நான் கேட்கவில்லை, நீயாக அருள் செய்!
இறைவா, நின் முடியினும் நின் தாள்கள் ஆற்றலுடையன. நின் தாள்களிலேயே மூவுலகும் முகிழ்த்தன. நின் தாள்களிலேயே இசையும் கூத்தும் அடங்கியுள்ளன. நின் தாள்களே மரணமிலாப் பெருவாழ்வு தருவன.
ஆதலால் இறைவா, நின் திருவடிகளை நினைந்து நினைந்து வாழ்ந்திட அருள் செய்! நின் திருவடிகளை என் இதயத்தில் பதித்து வை. இறைவா, நான் ஏழேழ் பிறப்புகளிலும் நின் திருவடி பதிந்த நெஞ்சுடன் வாழ அருள் செய்க!
இறைவா, அடியார்கள் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருளிய புண்ணியனே! எனக்கும் பொறுத்தாற்றும் ஆக்கப் பண்பினை அருள் செய்க! யார் என்ன செய்தால் என்ன? குடி முழுகி விடவா போகிறது?
இறைவா, பரபரக்காத நிலையினை அருள் செய்க! மனிதர்களைப் பற்றி விரைந்து முடிவு செய்யா உயர் நிலையினை அருள் செய்க! வரவரக் கண்டு ஆராய்கின்ற உள்ளத்தினைத் தா.
பிறர் செய்யும் குறைகளைப் பொருட் படுத்தாது வாழும் நிலையினை அருள் செய்க! பிறர் குற்றம் காணாது அவர்தம் நிறையினையே கண்டு பாராட்டும் பெருந்தன்மையினைத் தந்தருள் செய்க! அறியாமல் ஆயிரம் பேசுவார்கள். இழப்புகளும் வரும், துன்பங்களும் வரும். எல்லாவற்றையும் பொறுக்கும் ஆற்றலினை நல்கி அருள் செய்க!
எல்லாவற்றையும் பொறுத்து ஏற்றுக் கொண்டு திடமனத்துடன் வாழ்வில் நடைபோட அருள் பாலித்திடுக! பொறுத்தாற்றும் பண்பே எனது உயிர்ப் பண்பாக ஏற்று ஒழுகும் ஆற்றலை அருள் செய்க!
இறைவா, உமையொரு கேள்வனே, அன்னை மீனாட்சி ஆட்சி செலுத்த அருகிருந்த ஐயனே, பெண்மையைப் பெருமைப்படுத்தியவனே, உன்னை நாள்தோறும் வணங்கும் இந்த உலகம் பெண்களைக் கொத்தடிமைகளாக, போகப் பொருள்களாக நடத்துகிறதே. இச்செய்கை அறமா? புண்ணியம் தரத்தக்கதா? எடுத்ததற்கெல்லாம் ஒருவனைப் பழிக்க "மதுரை” என்று பரிகாசம் செய்கிறார்கள். தோப்புக் கரணம் போடுவதாகக் கூறுகிறார்கள்.
இறைவா, அன்னையின் திருவடிகளில் பிறைச் சந்திரன் ஒளிவிழுகிறதாம். கொன்றை மணம் கமழ்கிறதாம். இதற்கு என்ன பொருள்? நீயே என் அன்னையை நிலத்தில் வீழ்ந்து வணங்கியிருக்கிறாய். ஆம், இறைவா, நீ சொல்வது முற்றிலும் சரி. சக்தியைச் சரணடைதல் வாழ்வதற்கு வழி.
இந்த உலக இயக்கமே சக்தியினால் இயங்கும் இயக்கம். பெண்-சக்தி! அவள் படைக்கும் உணவினால் உடல் ஆற்றலையும், வழங்கும் உணர்வினால் ஊக்கத்தையும், அணைப்பினால் உயிர்க்கு மகிழ்ச்சியையும், அரவணைப்பினால் ஆறுதலையும் வழங்கி வாழ்விக்கிறாள்.
அன்னையைப் போற்றுவோம், ஆற்றலைப் பெறுவோம். அயரா அன்பினைப் பெறுதலே உயிரின் நோக்கமாகும். ஊக்கத்தினைப் பெறுவோம். இறைவா அன்னையின் கடைக்கண் அருளுக்குப் பரிந்துரை செய்தருளுக!
இறைவா, ஆலமே அமுதமாக உண்டருளும் உத்தமனே. நான் வயிறு நிறைய உண்கிறேன். உண்டு முடித்தபிறகு சற்று நிமிர்ந்து "போதுமா” என்று ஒரு தடவை வயிற்றைக் குலுக்கிச் சரிபார்த்துக் கொள்கிறேன். ஆனால், இறைவா! உடலார நிறைவு பெற்ற உழைப்பினை நான் செய்வதில்லை.
இறைவா, முழுமையான பயன் தரத்தக்க உழைப்பினை மேற்கொள்ள அருள் செய்க! மற்றவர் உழைப்பின் பயனை அனுபவிக்கிறேன். இதனால் அவர்களுடைய உழைப்பு நடிப்பல்ல என்று தெரிகிறது. ஆனால், என் உழைப்பின் பயனை யாராவது அனுபவிக்கிறார்களா?
இறைவா! கொண்டும் கொடுத்தும் இயங்குவது வாழ்க்கை. நான் கொள்ளவே ஆசைப்படுகிறேன். கொடுப்பதற்கு ஆசைப்படுவதில்லை. இறைவா, கொள்வதில் மன நிறைவு ஏது? மகிழ்ச்சி ஏது? கொடுப்பதில்தான் மனநிறைவு, மகிழ்ச்சி இருக்கிறது.
என் உழைப்பு, மற்றவர்கள் வாழ்க்கைக்கு உதவியாக அமைதல் வேண்டும். மற்றவர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இத்தகைய சீர்பெற்ற, உழைத்து வாழும் பண்பினை, அருள் செய்க! குறிக்கோளைக் குறிவைத்து அடையும் குறைவிலா உழைப்பே எனக்குத் தேவை. உழைத்தே உயிர் வாழ ஆசை. இறைவா, அருள் செய்க! ஐந்தொழில் நிகழ்த்திடும் முதல் உழைப்பாளியே! அருள் செய்க!
இறைவா! காலதத்துவத்தைக் கடந்த தேவதேவனே! இறைவா, உனக்குக் காலமில்லை. ஆனால் இறைவா, எனக்கு எல்லாமே காலமாக வல்லவா இருக்கிறது. நான் கால தத்துவத்திற்கு உட்பட்டவன். கால தேவதை வினாடி, வினாடியாக என் வாழ்க்கையைக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நானோ "இன்று நன்று; நாளை நன்று” என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருக் கிறேன். இறைவா, என் காலத்தைக் களவாடும் கள்வர்கள் மிகுதி. அவர்களிடமிருந்து என் காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள அருள் செய்க!
காலம் அற்புதமானது. ஓயாது சுழல்வது, இயங்குவது. ஆனால், அதன் சுழற்சியில் நான் கலந்து கொள்ளாது போனால் தங்கிவிடுவேன். இளமையைத்தரும் காலத்தை நான் போற்றிட அருள் செய்க காலமறிந்து தொழிற்பட அருள்செய்க! காலம் காலமாக வாழ்ந்திடும் பயன் தரும் உழைப்பைக் காலமறிந்து செய்யக் கற்றுத் தருக.
காலம் ஓடுகிறது! நான் வார்த்தைகளைத் தடவித் தேடி உன்னை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இறைவா என் பிரார்த்தனையை உழைப்பாகவும் செலுத்தலாம். இறைவா, நீ உலகாக நிற்கிறாய். நின் உலகத்தைப் பாதுகாப்பதே வழிபாடு, வாழ்க்கை கால காலனே, காலமறிந்து வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா, நம்பிக்கைக்குரிய எம் தலைவா! ஆனால் நான்தான் உன்னை நம்புவதில்லை! இறைவா, "நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு” என்பது என் வாழ்க்கையின் நியதியாக இடம்பெற அருள் செய்க!
என்னிடத்தில் எனக்கு நம்பிக்கை முதலில் வேண்டும். நான் மானிடன். வெற்றிபெறக்கூடிய மானிடன். நான் வாழ்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன், வாழப்போகிறேன் என்ற நம்பிக்கையை அருள் செய்க! திடமாக உன்னையே நம்பும் வாழ்க்கையினை அருள் செய்க!
ஒரு பொழுது உன்னை நம்புகின்றேன், எண்ணுகின்றேன். மறுபொழுது ஜோசியரிடம் ஓடி அலைகின்றேன். கழுவாய் செய்கின்றேன். இறைவா, இவையெல்லாம் வேடிக்கையாக இல்லையா? இந்த வேடிக்கை போதும். நான் உளேன். நான் ஒரு மானிடன். உன்னுடைய அடிமை. எனக்கு இங்கென்ன குறை? நின் திருவடிகள் தாங்குந் தகையன.
நான் தளராது உழைக்கும் கடமை பூண்டவன். இந்த நிலைமைக்கு அருள் செய்வாயாயின் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இறைவா, அருள் செய்க! நின்னையே நம்பிச் சரணடைதலைக் கற்றுத் தா. நம்பிக்கையே வெற்றியின் அடிப்படை, நம்பிக்கையே உறவுகள் சங்கமிக்கும் இடம். அருள் செய்க!
இறைவா, தனக்குவமையில்லாத தலைவா! நீயே தலைவன். அரசர்கள் கூட முழுத் தலைவர்களல்லர். ஏன்? அரசுகள் அதிகாரத்தையே மையமாகக் கொண்டு தோன்றுகின்றன. அதிகார அடிப்படையில் தலைமை உருவாவதில்லை என்ற பாடத்தினைக் கற்றுத் தா.
இறைவா, மக்களின் முதற் சேவகனாக வாழ்பவனே தலைவன். இறைவா, நீயே இல்லங்கள் தோறும் சேவகனாக எழுந்தருளி அருள் பாலித்திடும் அற்புதத்தை என்னென்பேன்?
இறைவா, மது போதையிலும் கொடிய போதையான அதிகாரம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம். இறைவா அருள் செய்க! தனி முடி கவித்து ஆளும் அரசேயாயினும் வேண்டாம். உயிர்க்குலத்திற்கு ஆட்பட்டுத் தொழும்பாய்க் கிடந்து தொண்டு செய்யும் இனிய வாய்ப்பினை அருள் செய்க!
நின் அடியார்களுக்கு அடிமையாகத் தொண்டு செய்யும் வாழ்க்கையினை அருள் செய்க! உனக்குப் பணி செய்ய-எந்நாளும் பணி செய்ய வரம் தா. மனக் கவலை நீக்குகின்ற தென்மதுரை அரசே! மனக் கவலையை வளர்க்கும் அதிகாரத்திலிருந்து என்னை விடுதலை செய்.
மனக்கவலையை மாற்றும் தூய தொண்டு நெறி சார்ந்த வாழ்க்கையினை அருள் செய்க! அதிகாரம் எனக்கேது? ஏன் வேண்டவே வேண்டாம். நின் திருவடிக்கு அன்பலாது வேண்டேன்? அருள் செய்க!
இறைவா, நின் அருள் கனியத் தாமதம் ஏன்? காலம் தாழ்த்துவது ஏன்? நின்னருளுக்குப் பாத்திரமாகும் பேறு எனக்கு இல்லையா? கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளன் நீ, நினக்கு அரிது எது? என்னைத் தகுதியுடையனாக்குதல் உனக்கு எளிது.
நரியைப் பரியாக்கிய நாயக! வித்தின்றியே விளைவு செய்யும் வித்தக! என்னை நின் தாளுக்குரிய பாத்திரமாக்குவது எளிது. ஆனால், நீ, அந்நியன் போல நடக்கிறாய். பழைய ஆவணத்தை மறந்து விட்டாய். "நீ ஆண்டான், நான் அடிமை” என்ற உடன்பாட்டா வணத்தை மறந்துவிட்டு அருள் செய்யக் காலம் கடத்துகிறாய். இறைவா, நின்அருள் பெறாதொழியின் என் ஆவி தரியேன். இறைவா, அருள் செய்க!
இறைவா, நின்னருள் பெறுதற்குத் தடையாக இருக்கும் அறியாமையை அகற்றுக, ஞானதீபத்தினை என் அகத்தினில் ஏற்றுக. 'யான்', 'எனது' அற்ற நிலையை அருள் செய்க. நின் சிவம்பெருக்குந் திருவடி என் தலைமேலாக இருக்க அருள் செய்க! என்னை நான் நாள்தோறும் மெய்யுணர்வு நிலையில் வளர்த்துக் கொள்ளும் வாயில்களை அருள் செய்க! நான் சூழ்நிலையின் அடிமையாகி விடாமல் சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் உரத்தினை அருள் செய்க!
நான் அழுதால் உன்னைப் பெறலாம். நான் அழ முடியவில்லையே. நான் பொய்ம்மையாக நடிக்கிறேன். என் நெஞ்சே, பொய்ம்மையின் இருப்பிடமாகிவிட்டது. நான் காட்டும் அன்பு பொய்யானது. ஆயினும் என்ன? நான் அழுதால் உன்னைப் பெறலாம். இறைவா, எனக்கு அழக் கற்றுக் கொடு.
இறைவா, ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே, ஒருவரை ஐயமற நம்புதல் வேண்டும். வழக்காடும் வம்புள்ளத்தினைத் துறத்தல் வேண்டும். இறைவா, என்னைச் சுற்றியிருப்பவர்களை நம்பும் நட்புப் பாங்கினை அருள் செய்க! சந்தேகம் என்ற தவறான மனக் குற்றத்திலிருந்து நான் முற்றாக விடுதலை பெற வேண்டும். இறைவா, அருள் செய்க!
நான் ஒரு செய்தியை, விவகாரத்தைப் பேசிமுடிக்க உட்காரும் பொழுதே சந்தேகத்துடன் உட்கார்ந்தால் எப்படி உளமார்ந்த விவாதம் இருக்க முடியும்? இந்தச் சூழ்நிலையில் மனங்கலந்த பேச்சுக்கூட வராதே! பாதிச் சிந்தனைகள் அடிமனத்தில் புதைந்து போகுமே. இறைவா, இந்தக் கொடுமையிலிருந்து என்னை மீட்பாயாக.
உள்ளத்தில் உள்ளதைப் பேசும் பாங்கினைத் தா. மற்றவர் கூறுவதை உள்நோக்கம் இல்லாது திறந்த மனத்துடன் கேட்கும் பாங்கினை அருள் செய்க! இறைவா, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளும் மனப்பான்மை-தீமையானது. என்னை, என்னைச் சார்ந்தவர்கள்தான் காப்பாற்ற வேண்டும். இவ்வண்ணமே அருள் செய்க!
வழக்காடும் போக்கு எனக்கு வேண்டாம். சமாதானமே என் வாழ்வின் இலட்சியமாக ஏற்க அருள் செய்க. விட்டுக் கொடுத்து வாழும் பேற்றினை அருள் செய்க! கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து வாழும் நிறை வாழ்வை அருள்செய்க!
இறைவா, உய்யும் நெறியில் உய்த்துச் செலுத்திடும் தலைவா! உய்த்துணரும் திறன் எனக்கு வேண்டும். உய்த்துணரும் திறன்-ஊகித்தல்-மற்றவர் மனம் பற்றிய கற்பனை இவை தம்முள் மாறுபட்டன. மற்றவர் மனக்கருத்து பற்றிக் கற்பனை செய்வது தவறு. இது உறவைக் கெடுக்கும். இறைவா, இந்தக் கற்பனை எனக்கு வேண்டாம். அதுபோலவே மற்றவர்களைப் பற்றி மற்றவர்களின் கருத்தினைப் பற்றி ஊகித்தலும் குற்றமே. இந்த ஊகம் மற்றவர்களைப் பற்றிய உண்மையான மதிப்பீடாக இருக்காது. என் கருத்தையே மற்றவர் கருத்தாகப் பதியம் போட்டுக் காட்டும் முயற்சியே இது. இந்த மாபெரும் தவறை நான் செய்யாமல் என்னைக் காப்பாற்று.
இறைவா, எப்படியும் உறவே முக்கியம். அப்புறம்தான் கொள்கை கோட்பாடுகளெல்லாம். இத்தகைய சால்பு நிறைந்த உறவினை நான் எல்லாரிடத்திலும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தந்தருள் செய்க!
மற்றவர்களுடைய விருப்பார்வங்களை உய்த்தறிந்து நிறைவேற்றும் கடமைப் பாங்கு நிறைந்த வாழ்வை அருள் செய்க! எனக்கு எண்ணற்ற ஆர்வங்கள், ஆசைகள். இவ்வளவும் மற்றவர்களுக்கும் இருக்கும் என்ற சராசரி மனிதனுக்குரிய நம்பிக்கையை அருள் செய்க!
மற்றவர் நலனுக்குரியவற்றை நான் உய்த்தறிந்து செய்யும் கடப்பாட்டில் நிற்க அருள் செய்க! மற்றவர் மகிழ்வை, என் மகிழ்வெனக் கொள்ளும் பெருவாழ்வினை அருள் செய்க!
இறைவா, எனக்குத் தெளிவு ஏற்படும்படியாகச் சொல்ல வேண்டும். இறைவா, "நான்” அருமையான பொருளா? பொன்னும் மணியும் தானியங்களும் அருமையான பொருள்களா? இறைவா, உண்மையைச் சொல். உனக்கு எது விருப்பம் ?
இறைவா உனக்கு உயிர்கள் மீதுதான் விருப்பம். இறைவா அப்படியா? நான் தப்பிப் பிழைத்தேன். ஆனால் இறைவா, உனது பக்தர்கள் உனக்குப் பொன்னாலும் மணியாலும்தானே ஆராதிக்கிறார்கள்! தங்கத் தேர்தானே செய்கிறார்கள்!
நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ், கோடானு கோடி மக்கள். செல்வ ஆசையால் காதல் வாழ்க்கை கொலைக்களமாகிறது. செவ்வப் போட்டியில் உயிர்கள் பணயங்களாகின்றன. இன்று மானுடத்தின் மதிப்பு உலகச் சந்தையில் இறங்குமுகம். ஒரோவழி மதிப்பு இருப்பதுபோல் இருந்தால் அது விளம்பரம். அந்த விளம்பரமும் இந்த நூற்றாண்டின் மனிதனுக்கல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகரிகத்தின் பாதுகாப்பாளனுக்கு.
இறைவா, என்னைக் காப்பாற்று, நான் உன்னைத் தேடி வரவில்லையே என்று எண்ணாதே. மானுடத்தைத் தேடிப்போகிறேன். மானுடத்தை மதிப்புடையதாகச் செய்யும் முயற்சியில் எனக்கு ஆவேசம் கொடு. மானுடத்தை வாழ்விக்கும் முயற்சியில் அயர்விலாது ஈடுபட வாழ்த்து. சோர்ந்து நிற்கும்பொழுது திறனைத் தந்து அருள் செய் இறைவா!
இறைவா, உன் திருவிளையாட்டில் எத்தனை ஒழுங்குகள். முறைபிறழாத நிகழ்ச்சிகள். இறைவா, என் வாழ்விலும் ஒழுங்குகள் அமைந்து விளங்கும்படி கருணை பாலித்திடுக!
இறைவா, இயற்கையில் விளங்கும் வாழை மரத்தைப் பார்க்கிறேன். எவ்வளவு ஒழுங்காக கோணல் - வளைவு இன்றி வளர்ந்திருக்கிறது. இறைவா. என்னுடைய வளர்ச்சியில் எவ்வளவு கோணல். சாயும் நாற்காலியின் தயவால் கூன் விழவில்லை. அந்த ஒழுங்குபட்ட அழகு என்னிடம் இல்லையே.
இறைவா, வாழை மட்டைகள் ஒழுங்குபட, ஒழுங்குற அடுக்கி வைத்தாற்போன்ற அமைவு, நாங்கள் பல பேர் அப்படி அமைவுறத் தழுவிய நிலையில் ஒழுங்கமைவுடன் வாழக் கற்றோமில்லையே.
இறைவா, வாழையின் பயனாகிய காய்கள் ஒழுங்குற அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப் பெற்ற நிலையில் உள்ளன. என் பணிகளை இப்படி அடுக்கிப் பார்க்க முடியவில்லையே. இறைவா, வாழைமரம் முழுதும் பயன்படுகிறது. பயன்படாப் பகுதி வாழை மரத்தில் இல்லை. நான் எங்கே முழுமையாகப் பயன்படுகிறேன்? இறைவா, ஏன் இந்த நிலை?
இறைவா, நான் என் உடலை, உணர்வை ஒழுங்கமைவுடன் வைத்துக் கொள்ள அருள் செய்ய வேண்டும்! இறைவா, என் வாழ்க்கை முழுதும் வையகம் பயனுறத் தக்கவாறு வாழ அருள் செய்ய வேண்டும்! இது என் பிரார்த்தனை. இறைவா, அருள் செய்க!
இறைவா, பச்சிலைகள் பசுமையாக விளங்குகின்றன. கிடைத்த இடத்தில் கிடைத்த வசதிகளைக் கொண்டே வளர்கின்றன. உயிர்க் குலத்தின் பிணி தீர்க்கும் மருந்துகளாகவும் விளங்குகின்றன. இறைவா, என்னிடத்தில் பசுமை எங்கே இருக்கிறது? கண் பார்வையில் வெறுப்புக்கனல். வாய்ச் சொற்களோ இனிமைப் பண்பிற்கு மாறுபட்டன. இதயத்திலோ பகைப்புகை மூளையிலோ செருக்கு. உடலோ பிணிகளின் கொள்கலன். ஏன், இறைவா இந்த அவல நிலை?
ஓரறிவுயிராகிய செடிகளின் பயன்பாடுகள்கூட ஆறறிவு உள்ள என்னிடம் இல்லையே. இறைவா, என்ன சொன்னாய். ஆறாவது அறிவு எனக்கில்லை என்கிறாயா? அப்படியானால் இறைவா, நான் மானிடன் இல்லையா? இறைவா, நான் பிறப்பில் மானிடன். வாழ்நிலையால் இழிபிறப்பு என்கிறாயா?
இறைவா, என்னை எடுத்தாள். மானிடனாக வாழவை. அறிவு நலன்களைத் தா. இறைவா, நின்னை யறியும் அறிவைத் தா. என் கண்களுக்குக் குளிர்ந்த பார்வையைக் கொடு. இனிய சொற்களையே என் வாய் பேசட்டும், என் இதயத்தில் அன்பு சுரக்கட்டும்.
இறைவா, உயிர்க் குலத்தின் பசிப்பிணியை, உடற்பிணியைப் போக்கும் பணியில் ஈடுபடுத்து! பணி கொள்! இறைவா, என்னைப் பணி கொள்! வாழ்வாங்கு வாழ வாழ்த்து.
இறைவா, இடுகாட்டெரியாடல் அமர்ந்தருள் இறைவா, நீ மகிழ்ந்தாடும் இடம் சுடுகாடு. எந்தச் சுடுகாடு? ஊழிப் பெருங்காலத்தில் இந்த உலகம் முழுவதும் பற்றி எரியும் சுடுகாடு. யான்', 'எனது' என்று மயங்கிப் போராடிய தேவர்களும் மனிதர்களும் அழியும் சுடுகாடு, தனி ஒருவனாக நீ நின்றாடும் நிலை இது.
இறைவா, நீ ஏன் என் மனத்தில்-நெஞ்சகத்தில் நின்றாடக் கூடாது? இறைவா, என் நெஞ்சில் நின்றாட விருப்பந்தானா? ஆனால் என் நெஞ்சு சுடுகாடு ஆகவேண்டுமே. இறைவா, என் நெஞ்சத்தை, நீ உவந்தாடும் சிற்றம்பலமாக்க அருள்செய்க!
விருப்பு, வெறுப்புகளைச் சுட்டுப் பொசுக்கும் தூய துறவுள்ளத்தினை அருள் செய்க! வேண்டுதல், வேண்டாமை என்ற நிலைகளைச் சுட்டெரிக்கத் திருவுள்ளம் பற்றுக, ஆணவம், வறுத்த வித்தென அடங்கிக்கிடக்க அருள்செய்க! என் நெஞ்சம் எனும் காட்டை வெட்டித் திருத்தி நிலமாக்கி வைத்துப் பின் நீ நின்றாடுவாய்.
என் நெஞ்சத்தைச் சிற்றம்பலமாக்குவதே என் வாழ்க்கையின் குறிக்கோள் என் நெஞ்சத்தில் நீ நின்றாடுதல் வேண்டும். நானும் மகிழ்ந்து ஆடவேண்டும். என்புருகிப் பாட வேண்டும். என் தலையினை நின் திருவடிகளுக்கு அணியாக் கிடுதல் வேண்டும். நின் திருவடிகளை என் புன்தலைக்கு அணியாகச் சூடிக்கொள்ளுதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! இந்த வண்ணம் அருள் செய்க!
இறைவா, இயற்கையின் அற்புதங்களைப் பார்த்துப் பார்த்துப் படித்துக் கொண்டால் போதுமே, அழகுற வாழலாமே. இறைவா, தென்னை மரத்தின் வேரில் தண்ணீர் ஊற்றினால் தலையால் தருகிறது இளநீராக. ஆம், இறைவா, மனிதனின் கால்கள் நடக்கின்றன. மனித சமூகத்தின் நடப்பே வரலாறு. இந்த வரலாற்று நிகழ்வுகளை மூளையின் செயற்பாட்டால் பயனுடையதாக்கிக் கொள்வதுதானே வாழ்க்கை.
இறைவா, தென்னை எவ்வளவு விழிப்புணர்வுடன் தூய்மையைப் பயன்படு பொருளைப் பாதுகாத்துக் கொள்கிறது. மட்டை, நார், கொட்டாங்கச்சி என்றெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து தேங்காயின் கருப்பொருளைக் காத்து நிற்கின்றன. இறைவா, அதுபோல நான் என் உயிரை, இல்லை உயிருக்கு உயிராக விளங்கும் உன்னைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டாமா? இறைவா, முக்குணங்கள் வசப்பட்டு நின்னை இழக்க மாட்டேன்.
இறைவா நின்னுடன் எனக்குஉள்ள உறவு தூய்மையானது. உண்மையானது. ஊக்கம் அளிப்பது. அதை எப்போதும் பாதுகாப்பேன். என் உயிரை மடமையிலிருந்து - உறவு, பாசங்களிலிருந்து ஆணவத் திண்மையிலிருந்து மீட்டு உனக்கு அர்ப்பணிக்கின்றேன். இறைவா, என்னை ஏற்றுக் கொள்.
இறைவா, எருது உனக்குப் பிடித்தமானது எப்படி! எருது, கடுமையாக உழைக்கும் பிராணி, உழைப்பின் பயனை உயிர்க்குலம் வாழ அளிக்கும் பிராணி. இறைவா, நீ என் இதயத்தில் எழுந்தருள வேண்டும். நானும் எருது ஆக வேண்டும். ஆம்! இறைவா, உழைப்பில் சுகம் காணும் மனப்போக்கினைத் தந்தருள் செய்க! உழைத்தால் மட்டும் போதாது. அந்த உழைப்பின் பயனைப் பிறர்க்குரியதென அர்ப்பணிக்கும் மனம் வேண்டும். இந்த மனப்போக்குடன் உழைத்தலே தவம். இத் தவத்தினைச் செய்யும் நன் மனத்தினை அருள் செய்க!
கடுமையான உழைப்பு தவம். ஊருக்குழைத்தல் யோகம். மற்றவர் வாழவாழ்தல், அர்ப்பணிப்புடன் கூடிய வாழ்க்கை. இத்தகு புனித வாழ்க்கையை எனக்கு அருள் செய்க! கைத்திருத்தொண்டு செய்யப் பணித்திடுக. உயிர் நலமுற அருள் செய்க! ஒன்றி நிற்கும் கற்றறிவினைத்தருக. எனது புலன்களும் பொறிகளும் பணி செய்யும் பான்மையில் வளர வாழ்த்துக.
அன்பினில் பொறிகளைத் தோயச் செய்து புலன்களை நினதருளில் நனையச் செய்து தொண்டு எனும் தூய நெறியில் நிற்க அருள் செய்க! இதுவே என் பிரார்த்தனை. மன்றாடல். இறைஞ்சுதல்! இறைவா, அருள் செய்க! தொண்டெனும் தூய உழைப்பில் நின்று வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா, உன் சந்நிதியில் தேங்காய் உடைக்கிறேன். நிவேதனம் செய்கிறேன். இறைவா, இவையெல்லாம் உன் விருப்பமா? அல்ல; உனக்குத் தேங்காய் தேவையா? இறைவா, இரண்டும் இல்லையென்பது எனக்குத் தெரிந்ததே. ஆயினும் இறைவா, ஏன் தேங்காய் உடைக்கிறோம்? இறைவா, அப்படியா, வாழ்க்கையில் இன்பம் எளிதாக வந்தமையாது.
எனது வாழ்க்கையை இன்ப வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள நான் கடுமையாகப் போராட வேண்டும். தேங்காய் எங்கும் காய்க்கிறது; எட்டடி உயரத்திற்கு மேல் உச்சாணிக் கொம்பில் காய்க்கிறது. அதுபோல இறைவா, எனது மன நிலைகளும் உயர்ந்தால்தானே உயர்வு கிட்டும்.
இறைவா, தேங்காய்க்குள் நார், மட்டை, கொட்டாங்கச்சி முதலியவைகளைத் தாண்டித்தான் அந்தச் சுவையானசத்தான உணவுப் பொருள் இருக்கிறது. இறைவா, நான் விரும்பும், துன்பங்களையும் சோதனைகளையும் கடந்துதான் வரும்.
நான் ஏன் துன்பத்திற்கு அழ வேண்டும். உலையில் கொதிக்கும் அரிசி அழலாமா? உலையில் கிடக்கும் இரும்பு அழலாமா? இறைவா. அதுபோலத்தானே எனது வாழ்க்கை? இறைவா, நான் இனி துன்பத்திற்கு அஞ்சமாட்டேன், அழமாட்டேன். இறைவா, அருள் பாலித்திடுக! சமநிலை உணர்வைத் தந்தருள் செய்க!
இறைவா, நாய் கீழான பிராணியா? மேலான பிராணியா? நன்றியுள்ள பிராணி நாய். ஆனால், இறைவா, நாய்க்குரிய நன்றிக் குணம் பொதுமையான குணமல்ல. தன் இனத்தினிடத்தில் நன்றியாக இருப்பதில்லையே?
இறைவா, ஒரு நாய் தன்னை ஈன்று வளர்த்த தாய் நாயினிடத்தில் கூட, பற்றுடன் இருப்பதில்லை. அது மட்டுமல்ல; சண்டைபோட்டுக் கொள்கிறது. ஆயினும் என்னை விட நாய் உயர்ந்தது என்பதை உணர்கிறேன். நாய் தன்னை வளர்த்தவர்களிடத்தில் நிறைவான நன்றி காட்டுகிறது.
இறைவா, நீ எனக்குச் செய்த உதவி இவ்வளவா, அவ்வளவா? ஆயினும் என்ன? இருட்டில் ஒரு மூலையில் கிடந்த என்னை முற்றத்திற்குக் கொண்டு வந்தாய். நுகர்ந்து இன்புற்று மகிழப் பொறிகளையும் புலன்களையும் தந்தாய். எனது பொறிகளும் புலன்களும் நுகர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட எத்தனை கோடி இன்பங்கள் வைத்துள்ளாய் இறைவா.
நீ எனக்குச் செய்துள்ள நன்மையை அறிந்தேன் இல்லை. நன்றியுடன் நினைந்து போற்றினேன் இல்லை. இறைவா, என்னை மன்னித்துவிடு. என் மனத்தில் நின் அறக்கொடையை நினைந்து நினைந்து போற்றி வாழ்ந்திட அருள் செய்க.
இறைவா, நீ மோன அமைதியில் அமர்ந்து முழுநிறை அறிவை, ஆற்றலை இடையீடின்றி உலகிற்கு வழங்கி வளர்த்து வாழ்வித்தருள் செய்கின்றாய். ஆனால் உன் பெயரால் நான் செய்யும் விளையாட்டுக்கள், திருவிழாக்கள், கொட்டு முழக்குகள் கொஞ்சமல்ல. இறைவா, இவையெல்லாம் உனக்காகவா? இல்லை, இல்லை. நான் ஓய்வு பெற, மகிழ்ந்து வாழ இவையெல்லாம் தேவை. ஆதலால், உன் பெயரால் செய்து கொள்கிறேன், இறைவா, பொறுத்துக்கொள்.
என் மனம் பரபரப்பாகவே இருக்கிறது. ஒன்றுவிட்டு ஒன்று பற்றி அலைகிறது; எய்த்துக் களைத்துப் போகிறது. இந்தச் சூழ்நிலையை மாற்றிக் கொள்ளவே நான் திரு விழாவை நாடுகிறேன். இறைவா, மன்னித்துக் கொள்.
என் வாழ்க்கையில் இடையீடில்லாமல் புத்துணர்ச்சியைத் தந்தருள் செய்க! எப்போதும் செயல் வழிப்பட்ட கிளர்ச்சியுடன் இருக்கும் வாழ்க்கையைத் தந்தருள் செய்! இறைவா. களிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையைபுத்துலகைப் படைக்க அருள் செய்க! இறைவா, அருள் செய்க!
ஏப்ரல் 26
இறைவா, நீ இருக்கிறாயா? உண்மையாகவே நீ இருக்கிறாயா! நீ இல்லை என்பவர் முன் நீ ஏன் உன்னை நிரூபணம் செய்து கொள்ளவில்லை? இறைவா, ஆம் உண்மை தான், என் முன்னே நீ இருப்பதாக நிரூபணம் செய்து கொள்வதில் என்ன பயன்?
இறைவா, நீ இருப்பதும், தொழில்களை இயற்றுவதும் உன் பொருட்டல்ல. உயிர்க்குலம் அனைத்தும் தழைத்திட நீ இருந்தருள் செய்கின்றாய். உயிர்க்குலம் ஆணவத்தின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை பெறத் துணை செய்கின்றாய். இறைவா, பொன்னால் பொன் பெற்றோருக்குப் பயனுண்டு. பொன் பெற்றோரால் பொன்னுக்கு யாது பயன்?
இறைவா, நீ எனக்குத் தேவை, இன்றியமையாத் தேவை. என் வாழ்க்கை இயங்குகிறது. என்னைச் சுற்றி ஓர் உலகம் இயங்குகிறது. அந்த உலகத்தில் எனக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் உண்டு. நீ எனக்குத் தேவை. அப்படி நீ இல்லாது போனாலும் உன்னை நான் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லை, இறைவா! கண்டுபிடிப்பதில் காலதாமதமானால் இறைமைத் தன்மையுடைய உன்னை நான் கண்டு பிடித்தாக வேண்டும். அப்பொழுது நீ காணப்படாது போயின் நான் உன்னையே படைத்துக் கொண்டாதல் வேண்டும்.
ஆம் இறைவா! நான் வாழ நடுவுநிலை, அறிவு பெற நீ தேவை. இவற்றை, நான் பெற்று வளர்கிறேன். ஆதலால் நீ இருப்பது உண்மை. இறைவா, நின் காட்சியினை அருள் செய்க!
ஏப்ரல் 27
இறைவா, நான் யார்? இறைவா, நீ என்னைப் படைத்தாயா? இறைவா, நிச்சயம் நீ என்னைப் படைத்திருக்க மாட்டாய். ஆம், இறைவா, நீ குறைவிலா நிறைவு. கோதிலா அமுது. ஞானத்தின் திருவுரு. நீ என்னைப் படைத்திருந்தால் இவ்வளவு குற்றங்கள், குறைகளுடன் படைத்திருப்பாயா? அதனால் நீ என்னைப் படைத்திருக்கமுடியாது.
இறைவா, என் பெற்றோரே என்னைப் படைத்தார்களா? அதுவும் இல்லை இறைவா. என் பெற்றோரும் தன் குழந்தை உடல்-உள்ளம் ஊனமுடையதாகப் படைக்க விரும்பியிரார். ஆதலால் நான் என் பெற்றோர்களின் படைப்பும் அல்ல. என் பெற்றோர் என் பயணத்திற்குத் துணை நிற்பவர்களே தவிர, படைப்பாளர்கள் அல்லர்.
இறைவா, குழாயில் தண்ணீர் வருகிறது. குழாய், தண்ணீரைப் படைக்கவில்லை. அஞ்சற்காரர் அஞ்சலைக் கொண்டு வந்து தருகிறார். ஆனால் அந்த அஞ்சலை எழுதியவர் அஞ்சற்காரர் அல்லர் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இறைவா, என் இயல்பும் குற்றங்குறையுடையதாக இருப்பதால் நான் படைக்கப்படவும் இல்லை. என்னுடன் உள்ள ஆணவக்கூட்டு இருக்கிறதே, அதுதான் என்னைச் சிறுமைப்படுத்துகிற குற்றம், குறைகளைத் தருகின்றன. ஆணவத்திற்கு நான் அடிமைப்பட்டுள்ளேன்.
இறைவா, என் ஆணவச் சேட்டையை அடக்க எனக்கு ஞானத்தைக் கொடு! மயக்கங்களைத் தவிர்த்து ஆட்கொள் இறைவா! இறைவா, ஆணவத்திலிருந்து நீ, என்னை மீட்டு விட்டால் நான் உனக்கு ஏழேழ் பிறப்பும் தொழும்பாய்க் கிடந்து அடிமை செய்வேன். இறைவா, அருள் பாலித்திடுக!
ஏப்ரல் 28
என நீ உணர்த்திய நெறி நிற்பேன்.
இறைவா, எனக்குப் பொருள் தேவையா? பொருளின் பயன் தேவையா? அல்லது பொருளுக்கு நான் தேவையா? இறைவா, என்னால் பொருளுக்கு மதிப்பா? அல்லது பொருளால் எனக்கு மதிப்பா? இறைவா, இந்த வினாக்களுக்குச் சரியான விடையைச் சொல்.
இறைவா, எனக்கும் பொருளுக்கும் உள்ள உறவில் உள்ள அடிப்படை சரியாக இல்லையே. இறைவா, வழி காட்டு. பயன்பாட்டுக்குத்தான் பொருள். பயன்பாட்டுக்கு உரியதல்லாத பொருள் - பொருளே இல்லையல்லவா? இறைவா, நன்றாகச்சொன்னாய். என் புத்தியிலும் சற்றே உறைத்திருக்கிறது.
இறைவா, எனக்குத்தான் பொருள் தேவை; பொருளுக்காக நான் அல்ல. பொருளுக்கு மதிப்பு என்னால்தான். இன்றைய நடைமுறை அப்படி இல்லையே. சாமியார்களில் கூட, பணக்காரச் சாமியாருக்கு இருக்கிற மரியாதை, ஏழைச் சாமியார் ஞானியேயானாலும் இல்லையே.
என் வாழ்க்கைக்குத் துணைதான் பொருள். பொருளைப் பயன்படுத்தி நான் வளர வேண்டுமே தவிர, பொருள் ஆசை கூடாது என்று அருள் செய்.
இறைவா, என் வாழ்க்கையின் பண்பாட்டுத் தரத்தை உயர்த்த பொருள் துணை என்பதை அறிந்தேன். அப்பொருளை ஈட்டுவதற்குரிய செயற்பாடுகளும் என்னை வளர்க்கவேண்டும் என்பதை அறிந்தேன். இறைவா, இந்த அறிவை எனக்கு நிலையாகத் தா. என்னுடைய வாழ்நிலை தான் யாவற்றினும் உயர்ந்தது என்பதை உணர்த்திய இறைவா! நன்றி! நீ உணர்த்திய நெறியில் வாழும் உறுதியைத் தந்தருள் செய்க!
ஏப்ரல் 29
இறைவா, நான் என் வாழ்க்கையில் முன்னேற அறிவு தேவையா? அல்லது நீ தேவையா? உண்மையைச் சொல் இறைவா! என்ன சிரிக்கிறாய்! உன்னையே கேள்விப் பொருள் ஆக்கிவிட்டேனா? ஆம் இறைவா, என்மீது கோபித்துக் கொள்ளாமல் விடை சொல். இறைவா, அறிவு தான் தேவை.
அறிவுதான் முதன்மையானது. அறிவுதான் அனைத்து இன்பத்திற்கும் வாயில். இறைவா, நன்றருளிச் செய்தாய். இறைவா, அப்படியானால் என் வாழ்க்கையில் உன் இடம் என்ன? இறைவா, என்ன சொல்கிறாய்? நீயே அறிவுதானா? நீ அறிவின் திருவுருவமா? இறைவா, மீண்டும் ஒரு தடவை அருள் செய்க! அறிவு தொடக்கம்! முடிவு நீயா?
இறைவா, நான் அறிவைத் தேடாமல் உன்னைத் தேடியலைந்தால் நீ அகப்படமாட்டாய்! அப்படித்தானே இறைவா! இறைவா, நீயே அறிவு என்றாயே, நின்னையறியும் அறிவு எனக்குத் தந்தருள் செய்க! இறைவா, அறிவும் அருளும் முரண்பட்டதல்ல; முடிவில் இரண்டும் ஒன்று என்பதனைத் தெரிந்தேன். இறைவா, இனி அறிவைப் போற்றிப் பெறும் திறனை அருளிச்செய்க.
ஏப்ரல் 30
இறைவா, உண்மையைச் சொல்! உனக்கு விருப்பம் கற் கோயிலா? அல்லது மனக்கோயிலா? இறைவா..! அப்படியா இறைவா? என் மனக்கோயில்தான் உனக்கு வேண்டுமா? ஏன் இறைவா? என் மனம் தூய்மையாக இல்லையே. என் மனத்தில் ஏற்கெனவேயே ஆசை, ஆணவம் இன்ன பிற குணக்கேடுகள் இடையீடின்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. நான் அவற்றை அப்புறப்படுத்திடவும் எளிதில் இயல்வதில்லை.
இறைவா, இந்த இட நெருக்கடியில் உனக்கு எங்கே இடம் கிடைக்கப்போகிறது? இறைவா, என்ன சொல்கிறாய்? ஒண்டுக் குடித்தனமாகப் புகுந்து கொள்வதாகச் சொல்கிறாய். இறைவா, என்ன தவறு செய்கிறேன்? பேரருட் செல்வனாகிய உன்னை ஒண்டுக் குடித்தனமாக வைப்பதா? இறைவா, கூடாது. மன்னித்துக்கொள்.
இன்றே என் மனத்தில் ஆக்கிரமிப்புச் செய்துள்ளவற்றை அகற்றித் தூய்மையாக்கி அன்பினால் மெழுகி நினக்கு அர்ப்பணிக்கிறேன். இறைவா, இது உறுதி என் மனம் இனி உனக்கே இடம். இனி என் மனம் உனக்கே ஆட்செய்யும், என் மனத்தில் எழுந்தருள்க. இறைவா, கருணை பாலித்திடுக!