குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/மே

மே 1


மனிதர் வியக்கும் சித்துக்கள் வேண்டாம், மனிதர் மதிக்கும் மாண்பினை அருள்க !


இறைவா, நரியைப் பரியாகச் செய்வாய்! வித்தின்றியே விளைவு செய்வாய்! நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகம்! இறைவா, நான் ஒரு சித்தன் ஆக விரும்புகின்றேன். சித்தன் என்றால் மனிதன் படைக்கும் சில பொருள்களை வரவழைத்துக் கொடுப்பதல்ல. அதை நான் விரும்பவில்லை. அவற்றின் மதிப்பு, மிகமிகக் குறைவு.

இறைவா, எனக்கு என் சித்தம் அடங்கவேண்டும். என் சித்தத்தை எனக்கு நன்மை செய்யத்தக்கதாக வளர்த்துப் பழக்கிக் கொள்ளவேண்டும். என் சித்தத்தை அதன் உயர் எல்லை வரையில் நான் வளர்த்து அந்தப் பயனைத் துய்க்க வேண்டும்.

என் சித்தம், சிந்தனை என்ற ஊற்று வற்றாததாக அமைய வேண்டும். என் சித்தம் அறிவார்ந்த சிந்தனையில் ஓயாது ஈடுபட வேண்டும். என் சித்தத்தில் இரக்கம் வேண்டும். என் சித்தம் ஈதல் பண்பில் திளைக்க வேண்டும். என் சித்தத்தை அழகாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். இறைவா, அருள் செய்க!

என் சிந்தனை நின் திருவடிப் போதுகளுக்கே. என் சிந்தனை அன்பிலே நனைந்து அருளிலே திளைத்து மகிழ்தல் வேண்டும். என் சிந்தனை என் வசமாகிய நிலையில் இன்பமே. மனிதர் வியக்கும் சித்துக்கள் வேண்டாம்! மனிதர் மதிக்கும் மாண்பினை அருள் செய்க! 

மே 2


எடுத்த முடிவுகளைத் துணிவுடன் செயற்படுத்தும்
இயல்பினைத் தா!


இறைவா, இராவணனின் தலைகள் பத்தும் நசுங்கக் கால்விரல் ஊன்றிய வலியோனே! எனக்கும் வலிமை தேவை. உடல் வலிமையல்ல. அதுவும் தேவைதான். உள்ளத்தில் வலிமையில்லாது பெறும் உடல் வலிமை பயனற்றது. எனது உள்ளத்தில் வலிமை தேவை.

இறைவா, நான் ஒரு கிழட்டுக் குதிரை போலானேன். கிழட்டுக் குதிரை இலாயத்தில் படுத்தே கிடக்கும். தீனி தின்னும்! எப்பொழுதோ ஒரு தடவைதான் சவாரிக்குப் பயன்படும். இறைவா, நான் எத்தனையோ நல்ல தீர்மானங்களை எடுக்கிறேன்! அழகாக எழுதி வைக்கிறேன். என்ன பயன். தீர்மானங்கள் என் வாழ்க்கையில் செயற்பாட்டுக்கு வரவில்லையே! நூற்றில் ஒரு தீர்மானம் கூட செயற் பாட்டுக்கு வருவதில்லை.

இறைவா, என் தீர்மானத்தைச் செயலுக்குக் கொண்டு வரக் கூடியவாறு என் வாழ்க்கையைப் பழக்குதல் வேண்டும். பழக்கம், வழக்கம் என்பதில் வழுக்கி வழுக்கி வீழ்ந்து கிடக்கிறேன். எழுந்து நடமாட இயலவில்லை! நான் எடுத்த தீர்மானங்கள் என் காலத்தில் கூட செயற்பாட்டுக்கு வராது போனால் வாழ்ந்து என்ன பயன்?

நல்ல தீர்மானங்களாக இருந்தால் மட்டும் போதாது. எடுத்த முடிவுகளைத் துணிவுடன் செயற்படுத்தும் இயல்பினைத் தா! நான் ஒரு இளமை நலமிக்கவனாகவே எப்போதும் பயன்படக்கூடியவனாகவே வாழ ஆசைப்படுகிறேன். இறைவா அருள் செய்க! 

மே 3


என் இதயம் உன்னோடு பேச ஆணை தந்து அருள் செய்க!


இறைவா, நானும் உன்னை அருச்சிக்க ஆசைப்படுகிறேன். இறைவா, எழுந்தருள்க! என் அருச்சனையை ஏற்றுக் கொள்க. ஆம் இறைவா, உனக்கு நான் இலட்சார்ச்சனை செய்கிறேன்! கோடி அருச்சனை செய்கிறேன்! ஆனால், நீ அருளிச் செய்யவில்லை!

ஏன் இறைவா, நீ விரும்பும் மலர் எது? தாமரையும் அல்ல; மல்லிகையும் அல்ல; முல்லையும் அல்ல! இறைவா, நீ விரும்புவது இந்த மலர்களையா? இதய மலரையே நீ விரும்புகிறாய்! என் இதயம் மலராக இல்லை. கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளன் நீ! நின் அருட் பார்வையால் என் இதயம் மலர்க!

கதிரவன் கண்ட தாமரைபோல என் இதயம் நின் அருள் நோக்கால் மலர்க! இறைவா, என் இதயம் அன்பில் தோய்ந்து அருள் நலத்தினைப் பெற்று விளங்குக! இதயம் விரிவடைந்திடுக! உலகந்தழுவியதாக வளர்க! பேரிதயமாக மலர்க!

நீ எழுந்தருளும் திருக்கோயிலாக என்னிதயம் விளங்குக! இமைப்பொழுதும் என் இதயத்தினின்றும் நீங்காதிருந்து அருள் செய்க! என் இதயம் பாய்ச்சும் செங்குருதி திருவருள் நலம் செறிந்ததாக விளங்க அருள் செய்க! என் இதயம் உன்னோடு பேச ஆணை தந்து அருள் செய்க!

மே 4


நீதியே என் ஆவியென விளங்கிட அருள் செய்க!


இறைவா, நீதியே! இன்று நான் வாழும் உலகில் எதுவுமே இல்லை; நீதியில்லை; நியாயம் இல்லை; அன்பு இல்லை; பரிவு இல்லை; பாசம் இல்லை. எல்லாம் பணத்தின் மயம் !

அன்பு, அறம், ஒப்புரவு, கண்ணோட்டம் எல்லாமே கடைச்சரக்காகிவிட்டன. இறைவா, ஆனாலும் நீதியின் பாவனைக்கும் பஞ்சம் இல்லை. நீதி பற்றிய கற்பனை அருமையாக இருக்கிறது. இறைவா, உலகம் முழுவதும் நடிப்பில் நடக்கிறது! பணத்தில் இயங்குகிறது! இறைவா, என்னாக் காப்பாற்று!

"நீதி" கற்பனையல்ல. நீதி என்பது ஒரு வாய்மை என்பதனை அறிந்து ஒழுக அருள் செய்க! நீதி பாவனை போதாது. நானே நீதியின் பாலகனாக மாற வேண்டும். இறைவா, அருள் செய்க!

நீதியே என் வாழ்க்கையின் உயிர்ப்பாக விளங்க அருள் செய்க! "நீதி" வழி வரும் நிதியே எனக்குக் கிடைக்க அருள் செய்க! நீதி என் உயிரின் உயிராக இருக்க அருள் செய்க! நீதி நிலை நிற்கத் துணை செய்யும் நியதிகள் வழி வாழ்ந்திட அருள் செய்க! நீதியே உலகத்தின் உயிர்ப்பு! இறைவா, நீதியே என் ஆவியென விளங்கிட அருள் செய்க! 

மே 5


நல்லுறவாகி நலமெலாம் அருள்க!


இறைவா, ஒரு குலமும் ஓருரும் சுற்றமுமாக எழுந்தருளி உய்வித்திடும் தலைவனே! உறவு முறைகள் பலமான சொற்களால் அமைந்துள்ளன. ஆனால், நடைமுறை என்ன? இறைவா, எனக்குச் சுற்றமே இல்லை! என்னைச் சுற்றி ஒரே பொய்ம்மையான உலகம்! உறவுகளையெல்லாம் சொத்துடைமை என்ற நஞ்சு பாழடித்து விட்டது!

தொடர்ந்து வாராச் சொத்தின் பேரால் மனித உறவுகள் பாழ்பட்டுப் போகின்றன! இறைவா, எனக்குச் சோறும் கூறையும் போதும். ஆனால், அன்பினாலாய உறவினர் எண்ணிக்கை உயர அருள் செய்க! பலரோடு கூடிக் கலந்து காகம் போல் உறவு கலந்து உண்டு பழகிட நயந்தருள் செய்க! சுற்றமாய் எதற்கும் என்னைச் சூழ்ந்து நிற்க அருள் செய்க!

நீயே ஒரு குலமும் சுற்றமுமாக வந்தருள் செய்க! தாயாகி என்னை வளர்த்திடுக! தந்தையாகி நின்று என்னைச் சான்றோனாக்கிடுக! ஐயனாகி நின்று அருள் செய்க! அன்புடைய மாமனாக வந்து தாழாது வழங்கியருள்க! நல்ல மாமியுமாகி, மகிழ்ச்சி பொங்கிடும் வாழ்வினை அளித்திடுக! உடைமைகள் காரணமாகப் பகைமை வாராது காத்திடுக! பொது அறத்தோடு நிற்க அருள் செய்க! மன்றுளார் அடியார் எம் தோழராக நின்று உற்றுழி உதவிட அருள் செய்க! நல்லுறவுகளே என்னை வளர்ப்பன! இறைவா, அருள் செய்க!

மே 6


இறைவா, எல்லாருக்கும் நல்லவனாக நடக்க அருள்க!
ஆனால், எல்லாரையும் திருப்திப் படுத்தும் வாழ்வு வேண்டாம்.


இறைவா, புகழ்ச்சியைக் கடந்த போகமே! என் வாழ்க்கை பொருளுடையதாக அமைந்திட அருள் செய்க! என் வாழ்வு, பாழுக்கிறைத்ததாகப் போய்விட்டது! இன்று நான் செய்வதெல்லாம் பாழுக்கிறைத்தனவே! இறைவா, நான் ஒரு பொய்ம்மைப் பொருளானேன்! உள்ளீடில்லாச் சுரைக்காயானேன் !

இறைவா, சுரைக்கூடு கூடப் பொருள் இட்டு வைக்க உதவும்! நான் என்னானேன்! எதற்கானேன்! வினாக்களுக்கு விடை காணேன். இறைவா, என்னை நான் பாழ்படுத்திக் கொண்டேன். புகழ் ஆசைக்கு ஆட்பட்டேன்! வந்தது அவலம் !

நான் பலரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்கிறேன்! ஆம், இறைவா! இது சத்தியம். உண்மை. ஒன்றுக்கும் ஆகாத பைத்தியக்காரனைக் கண்டால் கூட அவனுக்கும் நல்லவனாக நடக்க ஆசைப்படுகிறேன். நீ சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் பைத்தியக்காரனிடம் நான் பரிவு காட்டவில்லை! நானும் புகழ்ப் பைத்தியக்காரனாகி பைத்தியக்காரனுடன் பேசுவதும் செய்தியாகாதா? பாடமாகாதா? என்று எண்ணுகிறேன்!

இறைவா, எல்லாருக்கும் நல்லவனாக நடக்க அருள் செய்க! ஆனால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் பரிதாபகரமான வாழ்வு வேண்டாம்! பலரையும் திருப்திப்படுத்தும் வாழ்க்கையில் உண்மை குறை போகக் கூடாது. இறைவா, வாய்மை வழாத நிலை அருள் செய்க! ஐயத்தின் நீங்கிய தெளிவினைத் தருக! ஒரு நெறியில் நின்று நிலை பெற அருள் செய்க! இறைவா, அருள்செய்க!

மே 7


திருநெறிய தமிழ்ப்புனல் பாய்ந்து சென்று என் இதயத்தில் தங்கும்படி அருள் செய்க!


இறைவா, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தகுடி, தமிழ்க்குடி நீயும் அப்பொழுதே என் பொருட்டு, கல்லில் எழுந்தருளினை! இறைவா! நானோ உன்னைத் தொழாமல் கல்லைத் தொழுதேன். உன்னைப் பாவிக்காமல் கல்லைப் பாவித்தேன்! அதனால் என் நெஞ்சு கல்லாகிவிட்டது!

இறைவா, கல்லைப் பிசைந்து மென் கனியாக்கும் வல்லாளனே! என் நெஞ்சை நெகிழச் செய்திடுக! என் நெஞ்சினை உருக்கி நெகிழச் செய்யும் தமிழ், வழிபாட்டில் இல்லையே! அஷ்டோத்திரம் அல்லவா ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது! நான் என்ன செய்ய?

என் செவிவழித் திருநெறிய தமிழ்ப்புனல் பாய்ந்து சென்று இதயத்தில் தங்கும்படி அருள் செய்க! என் இதயத்தில் அன்பு எனும் உரம் இடுக! தகைமை எனும் வேலி அமைத்திடுக! தற்சார்பெனும் களைபறித்திடுக! அகந்தை எனும் நோய் வராமல் பாதுகாத்திடுக! சிவம் எனும் வித்தினை இடுக! இன்ப அன்பு என்ற பயிர் தானே விளையும் இறைவா, அருள் செய்க! இன்னே அருள் செய்க! என் இதயம் சிவம் தாங்கி வளர்க! என் பொறிகள் சிவத் தன்மையுடையனவாய் விளங்க அருள் செய்க!

மே 8


இறைவா, நீ ஒருவனே என்பதை உணர்ந்தேன்


இறைவா, உனக்கு என்று ஒன்றும் இல்லை! ஐயோ பாவம் ஓருரும் இல்லை, ஒரு நாமமும் இல்லை. ஆயினும் உனக்கு என்ன குறை? இந்தப் பூமண்டலமே உனது வீடு. உனக்கு ஆயிரம் ஆயிரம் திருவுருவங்கள்; ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள். இறைவா, எனக்கு ஒரே குழப்பம். உன்னை நான் எந்தப் பெயரில் அழைப்பது, உன்னை எந்த உருவில் வழிபடுவது?

இறைவா, உனக்கு ஏது பெயர்? ஏது உருவம்? நீ, நான் விரும்பும் உருவத்தை ஏற்றுக் கொள்கிறாய். திருநாமத்தை ஏற்றுக் கொள்கிறாய் அவ்வளவுதான்! நான் எங்குச் சென்றால் என்ன? எந்தத் திருக்கோயிலுக்குச் சென்றால் என்ன? நீ என்னை ஆட்கொண்ட திருக்கோலம் - நீ என்னை ஆட்கொண்டருளிய திருநாமம் - அவையே எனக்குப் பற்றுக் கோடு.

இறைவா, நின்னையன்றிப் பிறரை நினையேன். நீ ஒருவனே! ஆனால், ஒன்றென்றும் ஒருவனென்றும் ஒருத்தியென்றும் உலகு உன்னைப் பிரித்து அழைக்கிறது; போற்றுகிறது. எல்லாமே நீ தான். 'ஒன்றென்றிரு, உண்டென்றிரு' என்ற ஆப்தமொழி என் வாழ்க்கையின் பற்றுக் கோடாகி விட்டது. ஆதலால், எங்கும் உன்னையே பரசிவத்தையே காண்கிறேன்.

ஊனில் நின்றுலாவி உணர்த்துவதும் நீயே. உயிருக்கு உயிராய் நின்றியக்குவதும் நீயே. உண்ணும் உணவாக, பருகும் நீராக விளங்குவதும் நீயே. எண்ணுளே உயிர்ப்பாய் இயங்கும் வளியும் நீயே. நீயின்றி நான் இல்லை. எங்கெங்கு நோக்கினும் உன் காட்சியே! ஆட்பட்டேன்! ஆட்கொண்டருள்க! இறைவா. 

மே 9


வலிமையினை நான் பெற்று வாழ்ந்திட அருள்க!


இறைவா, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே! நின் நெறியில் நிற்கும்பேறு பெற்றிலேனே! நான் வலியார் பக்கம் சார்கிறேன். மெலியார் என்றால் அங்கீகரிப்பது கூட இல்லை. ஏன் இந்த நிலை இறைவா? நான் வலியாரோடிருந்தாலே வாழ முடியும்.

என்னுடைய அருங்குணங்கள் - தொண்டுகள் என்னை வாழச்செய்து விடாது. நிலையில்லா உலகத்தில் நிலைபெறச் செய்து விடாது. தகுதியுடையது வாழும் இது இந்த உலகத்தின் நியதி.

இறைவா, நான் இந்த உலகத்தில் நிலையாக வாழும் தகுதியைப் பெற அருள் செய்க! நெஞ்சிலே உறுதி, அறிவிலே தெளிவு, உழைப்பின் மேல் நிற்கும் உடல், சலியாத உழைப்பு, வலிமை இவையெல்லாம் எனக்குத் தேவை. பொருளால் வலிமை பெற வேண்டும்.

இன்றைய சமூக வாழ்க்கையின் தேவை பணமே! நிறைந்த பொருளைச் செய்து குவித்துக் கொள்ள வேண்டும். நண்பர்களை, அலுவலர்களை, பின் பற்றாளர்களை இனம் கண்டு கொண்டு அவர்கள் தம் உறவைப் பராமரித்து எனக்கு வலிமையாக்கிக் கொள்ள அருள் செய்க!

அறிவில் வலிமை, நெஞ்சில் வலிமை, பொருள் வலிமை, படை வலிமை இவைகளை நான் பெற அருள் செய்க! வாய்மையே என் வாழ்வின் அச்சு. உயிர்ப்பு! இறைவா, வலிவலத்துறை நாயகனே, அருள் செய்க! 

மே 10


சரியான ஒன்றைத் தேடிப் பெறும் அறிவினை அருள்க!

இறைவா, அடியார்களைத் தேடிச் சென்று ஆட் கொள்ளும் அருளாளனே, நானும் தேட அருள் செய். நான் எதைத் தேட? இன்பத்தைத் தேடி அலைந்திடவா? இறைவா, இல்லை, இல்லை. நான் மகிழ்ச்சியைத் தேடி அலைந்தால் கிடைத்து விடுமா? ஒரு பொழுதும் கிடைக்காது.

இறைவா, எது சரியானதோ அதை நான் தேட வேண்டும். ஆம் இறைவா, உண்மையான மகிழ்ச்சி தரும் பொருள் இதுவென, ஆசை காட்டாது; தூய அறிவே காட்டும். என் வாழ்க்கைக்கு எது நன்மை பயக்குமோ அதுவே சரியானது. என்னைச் சார்ந்தவர்கள் வாழ்க்கைக்கு, எது நன்மை செய்யுமோ, அது சரியானது. என் நாட்டு மக்களுக்கு எது நன்மையானதோ அதுவே சரியானது.

மன்னுயிர்க்கெல்லாம் எது ஆக்கம் தருமோ அதுவே சரியானது. அதுவே எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தர இயலும், அந்தச் சரியான ஒன்றை நான் தேடி அடைந்து விட்டால் என் வாழ்க்கை இன்பமே. எந்நாளும் துன்பமில்லை.

இறைவா, அந்தச் சரியான ஒன்றை - என் வாழ்வுக்கு மகிழ்வளிக்கக் கூடிய ஒன்றைத் தேடும் அறிவினைத் தா! அந்தச் சரியானதைத் தேடும் உழைப்பினில் ஈடுபடுத்துக. இன்பநிலை தானே வந்தெய்தும் இறைவா, அருள் செய்க!



மே 11


இமைப் பொழுதும் போற்றற்குரியதென அறிவித்த இறைவா போற்றி!


இறைவா, தினைப் போதில் தேசமெல்லாம் உய்த்தறியும் தலைவா, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காத இறைவா, போற்றி! போற்றி!! 'இமைப் பொழுதும்!' என்பதே கால அளவையின் குறைந்த குறியீட்டு அளவு. என் வாழ்நாள் ஒவ்வொரு இமைப் பொழுதாகத்தான் நகர்கிறது.

பல நூறாயிரம் இமைப் பொழுதுகளையும் நான் வறிதே பயன்படுத்தாமல் பொழுதைப் புறக்கணித்து விட்டு எய்த்து அலைகின்றேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு இமைப்பொழுதும் பொருளுடையதாக உருமாற்றம் பெற்றால் என் வாழ்வு ஆக்கத்தில் சிறக்கும்.

நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் "இமைப் பொழுதுகள்" உரிய இடத்தை வகிக்கின்றன. எந்தத் தவறும் சரி. நன்மையும் சரி, ஏதோ ஒரு இமைப் பொழுதில்தான் கருவுற்று வளர்கிறது. இறைவா, என் இமைப்பொழுதுதான் என் வாழ் நாள்! இமைப்பொழுதுகள் தாம் பணிகளின் தொடக்கத்திற்குரியன. செயற்பாட்டுக்குரியன.

இமைப்பொழுது, ஆம்! அது என் வாழ்நாளின் ஒரு பகுதி என்று போற்றிப் பயன் கொள்ளும் திறனை அருள் செய்க! என் வாழ்வில் இமைப் பொழுதும் போற்றுதலுக்குரியதே என்று அறிவித்தருள்க! கருணையே போற்றி! போற்றி!! 


மே 12


வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் நன்றாக வாழ்ந்திட அருள் செய்!

இறைவா, காலத்தின் காலமாகி நிற்கும் தலைவா! நான் "கால"மாகி நின்றிட முயன்றேனில்லை. இறைவா, நான் சென்ற காலத்தை நினைந்தே வருந்துகிறேன்; அழுகிறேன். ஆண்டாண்டுதோறும் அழுதாலும் சென்ற காலம் சென்றது தான். இறைவா, அதைவிடப் பெரிய கொடுமை நான் இப்பொழுது இந்தப் பொழுதில் வாழ்வதில்லை.

நிகழ்காலம் உண்மை. இதனை நான் முழுமையாகப் பயன்படுத்தினாலே சென்ற காலத்தவறுகள் திருந்தும்; எதிர்காலம் பயன்பெறும்.

நான் என் கண்முன்னே என்னைவிட்டு நெகிழ்ந்து ஓடத் துடித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலத்தைப் பொருட்படுத்துவதில்லை. பயன்படுத்துவதில்லை.

நிகழ் காலத்திற்கு உழைப்பு உரு, கொடுப்பதில்லை. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கிக் கனவுகளைக் காண்கிறேன். இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து என்னைக் காப்பாற்று. நிகழ்காலம் தாய்! நிகழ்காலம் கழிக்கப்பெற்ற பாங்கின் அடிப்படையிலேயே எதிர்காலம் அமையும்.

நான் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பதைக் கைவிடச் செய்க! இன்று இப்பொழுது வாழ்ந்திட அருள் செய்க! எனக்கு எதிர் காலக் கவலை வேண்டாம். நன்மை, தானே வரும். அது வரும்பொழுது வரட்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் நன்றாக வாழ்ந்திட அருள் செய்க! 


மே 13


உயிர்க்குலம் அனைத்தும் ஒரே தொகுதியென உணர்ந்து தொழுதிட அருள்க!


இறைவா, நீ அகண்டமான பொருள். எல்லையற்ற பொருள். இறைவா! நான் உன்னை வழிபடும் வழி, நானும் எல்லை அற்ற நிலையில் அன்பு காட்டுவதேயாம்.

இறைவா, எல்லைகள், வேலிகள், குறுக்குச் சுவர்கள், பிரிவுகள் இவையெல்லாம் சைத்தானின் கருவிகள். இந்தச் சைத்தானின் பேயாட்டமே இன்றைய உலகின் ஆட்டம். இறைவா, எங்களைக் காப்பாற்றக்கூடாதா?

இறைவா, இந்த மனிதகுலம் பேய்க் கோட்பாட்டுப் பிரிவினைகளில் கிடந்து உழல்கின்றதே. இறைவா, களவும் காவலும் ஒழுக்கங்களாக மாறிவிட்டனவே. கெட்ட கலகம் செய்து கொள்கிறார்களே. நீயே உயர்வற உயர்ந்தவன்; உலகம் ஆனவன்; எல்லைகளை நீத்து ஓங்கி உயர்ந்து நிற்பவன்.

இறைவா, நான் உன்னைப் போற்றுகின்றேன். வணங்குகின்றேன், வாழ்த்துகின்றேன். இறைவா, நான் நீயாக வேண்டாமா? நின் பண்புகளை உபாசித்து உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டாமா? இறைவா, அருள் செய்க!

உயிர்க்குலம் அனைத்தும் ஒரே தொகுதி என உணர்ந்து ஒழுகிட அருள்க! இறைவா, உயிர்க் குலத்தினிடம் காட்டும் அன்பே தவம், தொண்டே, வாழும் நெறி. இறைவா. அருள் செய்க! 


மே 14


மீனைப்போல் நான் நின் அருள் வெள்ளத்தில் வாழ அருளுக!


இறைவா, தண்ணீரில் மீன் வாழ்கிறது. தண்ணீரினின்று மீன் பிரிந்தால் செத்துப்போகும். இறைவா, நானும் மீனைப் போல் நின் அருள் வெள்ளத்திலேயே கிடக்க வேண்டும்.

இறைவா, என்றோ, ஒருபொழுது நின்னை வணங்கி என்ன பயன்? இறைவா, எப்போதும் நின் சிந்தனையிலேயே இருக்கும் அருளைப் புரியாய்? இறைவா, நினது அருள் வெள்ளத்திலேயே நனைந்து கிடக்கும் அருளைச் செய்!

இறைவா, அருள் நனைதலுக்கு இடையூறாக வந்திடும் வாசனைகள் பொல்லாதவைகளாக உள்ளன; சுண்டி இழுக்கின்றன. இறைவா, நிலை தடுமாறுகிறது. என்னை எடுத்தாளக் கூடாதா? மூல மலத்தினையே பிடித்து நெருக்கும் ஆற்றலை வழங்கியருள் செய்க!

இறைவா, எனது புலன்கள் நின் வசப்பட்டால் தூய்மையுறும்! ஆற்றல் பெருகும். இறைவா, நான் என்னை உன்னிடம் ஒப்படைக்க ஆசைப்படுகிறேன். ஆனால், இது எளிதில் நடவாது.

ஆதலால், இறைவா, நீ, என்னை வந்து எடுத்தாள்க! நீ என்னைப் பிரியாமல் இருந்தருள் செய்க! இறைவா, நின் திருவடி என் நெஞ்சத்தில் நிரந்தரமாக இருக்க அருள் செய்க! 


மே 15
மண்ணில் நிலவும் வேதனைகளை மாற்றிட அருள்க!


இறைவா, நீ, தாய். இல்லை, தாயினும் சிறந்தவன். ஆனால், நின் கருணையை நான் அனுபவிக்க முடியவில்லையே. நான் மட்டுமா? கோடானுகோடி உயிர்களும் அப்படித்தான் இறைவா, அலமருகின்றன.

இந்த உலகில் என்னை வருத்தும் பசிகள் தீர்ந்தால் அல்லவா, நான் உன்னைத்தேட முடியும், காணமுடியும்.

என்னுடைய அன்றாட வாழ்க்கையே, ஒரே பிரச்சனை. ஏன் இந்த அவலம்? முத்தொழிலுக்கும் உரிய முதல்வா, நீயே என் பிரச்சனைகளைத் தீர்த்து விடக்கூடாதா? இறைவா, இந்தக் கவலை மட்டும் இல்லையானால் நின் புகழைப் பாடிக் கொண்டேயிருப்பேன்.

இறைவா, கருணை பாலித்திடு! சோறும் கூறையும் தா. அன்று ஆரூரருக்குப் பொன்னும் பொருளும் அளித்தனையே. இன்று ஏன் எனக்குத் தரக்கூடாது?

இறைவா, அருள் செய்க!

எனக்கு இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. மண்ணில் நிலவும் வேதனைகளை மாற்ற அருள் செய்க! நின் சந்நிதியில் பணி செய்து கிடக்கும் பேற்றினை அருள் செய்க இறைவா, அருள் செய்க! 


மே 16


இறைவா என்னை ஆசை வயப்படுத்தி ஆட்கொள்க!


இறைவா, ஒரு காலத்தில் நீ வலைவீசினாய் என்ற வரலாறு கேட்டிருக்கிறேன். ஆனால் இறைவா, நீ வலை வீசியபோது வலையில் என்ன அகப்பட்டதோ அது எனக்குத் தெரியாது. ஆனால், என்னைப் பொறுத்த வரையில் நான், நீ விரித்து வீசும் வலையில் இதுவரை சிக்கவில்லை.

இறைவா, நான் மட்டுமா? என்னைப் போல் கோடானுகோடி. பஸ்மாசுரன், சூரபதுமன் இவர்கள் எல்லாம் நின் வலையில் விழாதவர்கள். ஒரு போராட்டத்திற்குப்பின் நின் வலிமையினாலும் யுக்தியினாலும்தான் அடக்கினாய்.

இறைவா, நானோ நின் வலையில் சிக்காத சின்ன மீன், தப்பி ஓடிவிடும் தன்மையுடையவன்.

இறைவா, நான் என்ன செய்ய! என்னோடு பிறந்த ஆணவம் என்னை ஆட்டிப் படைக்கிறது. அதற்குச் சேவகம் செய்யவே பொழுது இல்லை.

இறைவா, ஆணவத்தினைப் போக்க நான் பிடித்த மாயை-கன்மம் ஆகியவை துணையாக இல்லாமல் எசமானர்களாகி என்னுடைய கூட்டாளிகளாகிய ஐம்பொறிகளை அவை அடகு பிடித்து விட்டன! நான் இப்போது எட்டுப் பேருக்கு அடிமை! இறைவா, என்னைக் காப்பாற்று!

என்னை வலை வீசிப் பிடிக்க முடியாது! தூண்டில் போடு! தூண்டில் நுனியில் உள்ள இரையின் மீது ஆசைப்பட்டு வருவேன்! ஆட்படுத்திக் கொள்! ஆண்டு கொள்!

பொன்னையும் பொருளையும் வழங்கு போகத்தைத் தா. அதுவே என்னை ஆட் கொள்ளக்கூடிய ஒரே வழி. அதன் பின் மெய்ப் பொருள் தேடுவேன். திருவெலாம் பெறுவேன். இறைவா, அருள் செய்க!


மே 17


மற்றவர் ஆசைதீர, நான் ஆர்வத்தோடு உழைக்க அருள் செய்க!


இறைவா, அலைவீசும் கடல் என்பார்கள். ஆனால், அக் கடலிலும் கூட அலைகள் கரையோரத்தில்தான். ஆழ் கடலில் அலைகள் வீசுவதில்லை!

இறைவா, என் மனத்தில் வீசும் ஆசை அலைகள் அளப்பில. அவை, ஓய்வதே இல்லை! "அவா வெள்ளம்" என்ற மணிமொழி என் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பொருத்தம்!

இறைவா, ஆசை அனுபவித்தால் தீரும் என்பார்கள். இறைவா, இதுவும் என்னைப் பொறுத்தவரையில் பொய். அனுபவம் ஆசைகளை வளர்க்கவே செய்கின்றன. இறைவா, "போதும்” என்ற முடிவுக்கு மனம் வர மறுக்கிறது.

இந்த ஆசையை அடக்க ஒருவழி கூறு! ஆசைப்படுவதில் தவறில்லை. இறைவா, அப்படியா? ஆசைப்படு என்கிறாய்! நல்லது, இறைவா, அப்படியே செய்கிறேன்.

ஆனால், அதிலும் தொல்லைப்பட்ட அனுபவமே எனக்கு. அதாவது மற்றவர்கள் ஆசையை நம்மால் தீர்த்து வைக்க இயலாமல் தொல்லைப்படுகிறேன்! இஃது இயற்கை என்று கூறுகிறாயா? மற்றவர் ஆசை என்னை வளர்க்குமா, இறைவா?

என்னால் நேசிக்கப்படுபவர்களுக்கு ஆசைதிர அள்ளிக் கொடுக்க ஈட்ட வேண்டும் என்ற ஆர்வம் வளருமல்லவா? ஆம், இறைவா! ஆசைப்படுவேன். அவர்கள் தேவையை ஈடுசெய்ய ஆர்வம் காட்டி உழைப்பேன் இறைவா, இந்த மனப்பாங்கில் நிலைத்து நிற்க அருள் செய்க! 


மே 18


பயன்படுவோனாக வாழ ஆசைப்படுகிறேன்! இறைவா அருள்க!

இறைவா, இது உன்னுடைய உலகமா? நீ அருள் பாலித்து வாழவைக்கும் உலகமா? உண்மையைச்சொல். இதுவல்ல உன் உலகம். இறைவா, எங்குப் பார்த்தாலும் சண்டைகள், கலகங்கள், கொலைகள், களவுகள், காவல் நிலையங்கள். அம்மம்ம, பயங்கரமாக இருக்கிறது! ஏன் இந்த நிலை?

இறைவா, ஏன் மௌனம் சாதிக்கிறாய்? இறைவா, அப்படியா? நான்- மனிதன். நின் வழி வராமல் சைத்தான் கையில் சிக்கிவிட்டேனா? அப்படியா. இறைவா! சைத்தான் பாவியாயிற்றே. நன்மை செய்வது போலக்காட்டி அழித்து விடுவானே!

இறைவா, என்னைச் சைத்தானிடமிருந்து காப்பாற்று. ஆணவத்தாலாகிய மிடுக்கு எனக்கு வேண்டவே வேண்டாம். அடக்கமாக இருத்தல், எளிமையாக வாழ்தல், ஆருயிர்களுக்கு எல்லாம் அன்பு காட்டுதல் ஆகிய பண்புகளை அருட் கொடையாக வழங்கி அருள் செய்க!

நான் வாழ ஆசைப்படவில்லை! நல்லவனாக மட்டும் வாழ ஆசைப்படவில்லை. பயன்படுவோனாக வாழ ஆசைப்படுகிறேன். இறைவா, அருள் செய்க!


மே 14


நன்மைக்காகப் போராடும் மனப்பாங்கினை அருள் செய்க!

இறைவா, நான் நல்லவனாகவே வாழ ஆசைப்படுகிறேன். ஆனால், இறைவா, நல்லவர்களாக வாழ்ந்தவர்களை இந்த உலகம் வாழவைக்கவில்லையே. எல்லாரையுமே தோற்கடித்தது மட்டுமின்றி அழித்தும் விட்டதே!

இறைவா, இந்த உலகத்தில் நல்லவனாக வாழ இயலுமா? நல்லவனாக வாழ்ந்து இறக்கத்தான் வேண்டுமா? இறைவா, ஏன் இந்தத் தற்கொலை வாழ்வு? இறைவா, மீண்டும் ஒரு தடவை அருளிச் செய்க! நன்மை ஒரு பொழுதும் தோற்காது.

நல்லவன் ஒருபொழுதும் தோற்கமாட்டான் என்றா கூறுகிறாய்? அப்படியா இறைவா! நன்மை என்பது முழு நிறைச் சொல்! நன்மையினுள் ஆற்றலும் அடங்கும்! நன்மையினுள் நன்மைக்காகப் போராடும் முனைப்பும் அடங்கும்!

நல்லவர்கள் நன்மைக்காகப் போராடும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். அப்போதுதான் நன்மை பூரணத்துவம் அடைகிறது. தீமையில்லாமையே நன்மை ஆகிறது. தீமையை எதிர்ப்பதே நன்மை ஆகிறது.

இறைவா, நன்றாக அருளிச் செய்தனை! நான் நன்மையை - பூரணத்துவம் வாய்ந்த நன்மையைக் கடைப்பிடிக்க - நன்மைக்காகப் போராடும் மனப்பாங்கை - ஆற்றலை எனக்கு அருள் செய்க!

இறைவா, அருள் செய்க!


மே 20


மனமும் பொறிகளும் ஒத்திசைந்து இயங்கிடும் வாழ்க்கையினை அருள் செய்க!

இறைவா! நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்ட தூயவனே! என் மனம் நின் கோயிலாவது எப்போது? இப்போதைக்கில்லை. நான் இன்னும் நினைக்கவே பழகவில்லையே! மனத்தில் ஆசைகளால் தோற்றுவிக்கப்பெறும் அலைகளில் கிடந்து தவிக்கிறேன். இறைவா, என்னைக் காப்பாற்று!

நான் நினைக்கும் நிலையில் என் மனத்தைப் பழக்கியருள்க. சுயாதீன நிலையில் நினைத்திடும்படி செய்க. தொடர்ச்சியாக நினைந்து வாழும் நெறியில் ஈடுபடுத்துக! நான் நினைப்பவைகளுக்கும் என் இயல்பான வாழ் நிலைக்கும் இணைப்புண்டாக்கி அருள் செய்க!

மனத்தே நினைத்தது என் அகநிலை வாழ்வாகவும் புறநிலை வாழ்வாகவும் அமைய அருள் செய்க! நினைப்பொடு இயைந்த வாய்மை தழிஇய வாழ்நிலையை அருள் செய்க! என் நினைப்புக்களை நான் செய்யும் காரியங்களுடன் நெருங்கிய சம்பந்தம் கொள்ளும்படி அருள் பாலித்திடுக!

மனமும் பொறிகளும் ஒத்திசைந்து இயங்கிடும் உத்தம வாழ்க்கையினை அருள் செய்க! மனம் பொருந்திய வாழ்வினை நல்கி, வெற்றிகளை அருளிச் செய்க!

நினைக்கும் மனம்; நினைப்பொடு பொருந்திய செயல்; செயலுக்கிசைந்த வாழ் நிலையே தவம்! அருள் செய்க! என் மனத்தைப்புறம் போகவிடாமல் நிறுத்தி உன்னை நினைந்து வாழும் பேற்றினை அருள் செய்க! 


மே 21


இந்தச் சமுதாயத்திற்கு என் வாழ்வு அடிக்கல்போல் மறைந்திருந்து தாங்கி நிற்க அருள்க!

இறைவா, புகழ்ச்சியைக் கடந்த போகமே! என்னை ஆட்கொண்டருள் செய்க! புகழ், ஆம்! மனித நாகரிகத்திற்கு நஞ்சென அமைந்துள்ள புகழ் என்னும் இச்சை வருத்துகிறது. புகழ், நீரில் குமிழி போன்றது!

புகழ், பொல்லாங்கைத் தோற்றுவிப்பது. புகழ், எதிரிகளைத் தோற்றுவிப்பது; புகழ், கள்ளினும் கொடிய போதை தருவது. இறைவா, என்னைப் புகழ் இச்சையினின்றும் மீட்டு ஆள்க! நான் நல்லதை-நன்மை கருதியே செய்ய வேண்டும். நன்மை, நன்மைக்காகவே என்ற அறநெறியில் நின்றிடும் பேற்றினை அருள் செய்க!

புகழ் விரும்பாப்புண்ணிய மனத்தினை அருள் செய்க! நாடறியாத அடக்கமான அறவாழ்க்கையினை அருள் செய்க! எல்லாருக்கும் எளியோனாக, தாழ்வெனும் தன்மையுள் நடந்திடும் நல்வாழ்க்கையினை அருள் செய்க!

மண்ணிற்குள் மறைந்து கிடந்தே மரங்களை வாழ்விக்கும் வேர்களைப்போல இந்தச் சமூக வாழ்க்கைக்கு நான் வேரென வாழ்ந்திடும் நெறியில் நிறுத்தி அருள் செய்க! எடுப்பான மாளிகைகள் மண்ணில் மறைந்து கிடக்கும் அடிக்கற்களின் வலிமையிலேயே நிற்கின்றன! என் வாழ்வும் இந்தச் சமுதாயத்திற்கு அடிக்கல்போல அமைய அருள் பாலித்திடுக! - - பொருளின் ஆற்றல் பொருளுக்குள் ஒளிந்து கிடந்தே இயங்குகிறது. இந்தச் சமுதாயப் பெருவாழ்க்கையில் ஆற்றலாக நான் ஒதுங்கியிருந்து உழைத்து உயர்த்தும் பெரு வாழ்வினை அருள் செய்க! நான் பணி செய்து கிடக்கும் புண்ணியப் பாங்கினை அருள் செய்க!


மே 22


பிறர் நலம் பேணும் பெருநோன்பு நோற்று வாழும் வாழ்க்கையினை அருளுக!

"இறைவா இருளே உலகத்தியற்கை இருளகற்ற கை விளக்கே கற்ற அறிவுடைமை" என்பது சான்றோர் வாக்கு! இந்த உலகில் இருட்டில் பொருள்களைப் புலப்படுத்துவது கைவிளக்கு! கைவிளக்கு ஒளியுடன் கண்ணொளியும் பொருந்திப் பொருள்களைக் காண்கிறது.

இறைவா, நான் என் மனக் கண்ணைப் புறத்தே செலுத்தாமல் என் அகத்தே திருப்பினேன். என்ன பயங்கரம்! இந்த நிலையில் வேறு, உன்னை மனத்தில் குடியிருக்க அழைத்துவிட்டேன்.

இறைவா, என் மனம் அழுக்காறு, அவா ஆகிய நச்சுப் பூச்சிகளுக்குக் கொத்தடிமையாகச் சேவகம் செய்து வாழ்கிறது. வெட்கம், புறத்தே கம்பீரமான தோற்றம். ஆனால் அகத்தே பேய்களுக்குத் தொழும்பு பூண்ட கேவல நிலை. இறைவா, என்னைத் தடுத்தாள்க என்னைத் தன்னல நயப்பின் கொடுமையிலிருந்து விடுதலை செய்தருள்க! வீண் களியாட்டங்களில் பொழுதினைக் கழித்து வாழ்ந்திடும் இழிநிலையிலிருந்து மீட்டு அருள் செய்க! பொறிகளின் நுகர்வு வழிப்பட்ட கிளர்ச்சிகளுக்கு இரையாகாத வண்ணம் மீட்டருள்க! எல்லை கடந்த பேராசைப் பிசாசிடமிருந்து தப்பித்து நிறைமனம் பெற்று வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, என்னை நானே அறியும் அறிவினைத் தந்தருள் செய்க! என் மன நிலையைத் தூய்மையாகப் பேணும் பேற்றினை அருள் செய்க!

தன்னலம் கடந்த பிறர் நலம் பேணும் பெருநோன்பு நோற்று வாழும் வகையில் வாழ்ந்திட அருள் செய்க. என் மனம் என் வசம் இருத்தல் வேண்டும்! இறைவா! இந்த ஒரு வரத்தினைத் தந்தருள் செய்க! 


மே 23


வருங்காலம் கருதித் திட்டமிட்டு வாழ அருள் செய்க!

இறைவா, என் உயிர் வாழ்க்கைக்கு என்னென்ன தேவையென்று முன்னமேயே அறிந்து திட்டமிட்டு வழங்கியருளிய வள்ளலே! நான் இதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? நின் கருணையைப் போற்றி வாழ்ந்தாலே போதும்.

நின் கருணை பிழைபடாது என்று உணர்த்தும் நிலையில் நான் வாழ்தலே கடமை! இறைவா, நான் ஒர் இயந்திரம்போல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். எங்கு? மருத்துவமனைக்கு ஓடுகிறேன். அதிர்ஷ்டச்சீட்டு வாங்க ஓடுகிறேன்!

ஆனால், இறைவா, நேற்று ஒரு வார்த்தையில் புத்தி உரைத்தாயே. இறைவா, அந்த அறிவுரை எனக்கு உறைத்தால் போதும். வாழ்க்கையில் அந்தப்புத்தி அமைந்தால் போதும். அது என்ன புத்தி? ஆம் இறைவா, ஒன்று நிகழ்ந்த பிறகு திருந்துவதைவிட, திருத்தமுறச் செய்வதே நல்லது.

நோய்க்கு மருந்து தேடி அலைவதைவிட, நோயே வராமல் வாழத் திட்டமிடுதலே சிறப்பு. வறுமைக்கு ஆளாகி, சிறுமைப் பட்டழிந்து, இரந்து வாழ்வதிலும் உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே முறை. வம்பை வளர்த்துக்கொண்டு வழக்கறிஞரிடம் செல்வதை விட, வம்பே வராத நல்வாழ்க்கை நூறுமடங்கு நல்லது.

இறைவா, முன்நோக்கியே முகம் அமைந்துள்ளது. எதிர்த்திசை நோக்கியே அனைத்து அறிவுப்புலன்களும் அமைந்துள்ளன. நான், வருங்காலம் கருதித் திட்டமிட அருள் செய்க! வரும் முன் நோக்கும் நுண்ணறிவைத் தந்தருள் செய்க! 


மே 24


இன்றே செய்வேன்; இப்பொழுதே செய்வேன்-இறைவா!

இறைவா, உண்மையுமாய் இன்மையுமாய் நிற்கும் அண்ணலே! என் வாழ்க்கையின் பங்குதாரர்கள் என் கண் முன்னாலேயே மறைகின்றனர். அவர்கள் என்னுடன் வாழத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகவில்லை.

நான் வாழத் தொடங்கியதே நேற்று போலத்தான் தெரிகிறது. அதற்குள் எங்கள் வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கிறாயே இது நியாயமா? எண்ணியன செய்து முடிக்காமல் சாவது எந்த வகையில் பயனுடையது?

கூர்ந்து நோக்கினால் வாழ்நாள் மிகமிகச் சுருக்கமாகவே இருக்கிறது. இதற்குள் என்ன செய்ய! இறைவா, என்ன சிரிக்கிறாய்! எனக்கு நூறாயிரம் ஆண்டுகள் கொடுத்தாலும் நான் செய்யமாட்டேனா இறைவா, ஆம் உண்மை தான். இந்த நிமிடத்து வேலையைச் செய்யாத நான் எப்படி அடுத்த நிமிடத்தில் செய்வேன்?

இந்த நிமிடம் தாய். அடுத்து வரும் நிமிடம் சேய், தாயைப் பேணும் சேய் “நாளை செய்கிறேன்", "இனிமேல் செய்கிறேன்" என்றெல்லாம் சொல்லிப் பழக்கமாகிவிட்டது. இறைவா, என்னைக் காப்பாற்று!

நொடிப் பொழுதுகளே நிமிடமாகின்றன! நிமிடங்களே மணியாகின்றன. மணிகளே நாட்களாகி, வாரமாகி, திங்களாகி, ஆண்டாகி, வாழ்க்கையை முடிக்கின்றன. உணர்ந்து கொண்டேன். இனி என் வாழ்க்கையில் நாளை என்று சொல்வதில்லை.

இன்றே செய்வேன்; இப்பொழுதே செய்வேன். அருள் செய்க! நீ கொடுத்தாலும் எனக்கு நீண்ட ஆயுள் வேண்டாம். சில நாளே வாழ்ந்திட ஆசை. அதுவும் புகழ்பட வாழ்ந்திட ஆசை அருள் செய்க!


மே 25


ஐயப்படாத பெருமைமிகு வாழ்க்கையினை அருள்செய்க!

இறைவா, சிந்தையுள் தெளிவாய், தெளிவினுள் சிவமாய் நிற்கும் அண்ணலே! ஐயத்தின் நீங்கித் துணிய வேண்டிய துணிவே. அச்சத்தினை அகற்றும் ஐயனே. என் வாழ்க்கையை ஐயமும் அச்சமும் ஆட்டிப் படைக்கின்றன.

வாழ்க்கையைக் கெடுப்பதில் ஐயமும் ஒன்று. எண்ணித் துணிதல் வேண்டும். துணிந்தபின் செயற்படுத்தலே உயரிய வாழ்க்கை ஐயம்-இது பாவத்திற்குத் தலைவன். நட்பில் ஐயம், காதல் வாழ்க்கையில் ஐயம், ஆள்வினையாற்றுதலில் ஐயம், என்று போனால் வாழ்க்கையே இயங்காது.

ஆதலால் ஐயத்தின் நீங்கிய தெளிவினைத் தந்தருள்க. ஐயத்திற்கு ஆட்படாத நட்பினை வளர்த்துக் கொடுத்து அருள் செய்க! ஐயமற்ற காதல் வாழ்க்கை வளர அருள் செய்க! செய்யும் தொழில் சிறப்புடையது எனும் துணி வினைத் தந்தருள் செய்க!

நட்பு, இயற்கை காதல் இயற்கை தொழில், இயற்கை வினை, உயிர்களது இயற்கை. இந்த நிலையில் ஐயப்படாத பெருமைமிகு வாழ்க்கையினை அருள் செய்க! ஐயம் நீங்கிய நிலையில் திறந்த புத்தகம் போல் வாழ்ந்திட அருள் செய்க! ஐயத்தின் இணையாகிய இரகசியம், என் வாழ்க்கையில் வேண்டாம்.

ஐயம் நீங்கிய உறவே உறவு. ஏன், இறைவா! நின்னையே நான் ஐயப்படாமல் துணிதல் வேண்டும். நின்னையே தொழ உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இறைவா, அருள் செய்க! ஐயம் அறவே நீங்கிய நம்பிக்கையின் பாற்பட்ட நல்வாழ்க்கையை அருள் செய்க! 


மே 26


இறைவா, என் மனத்துள் "கருத்து" உருவாகும் வண்ணம் அருள் செய்க!

இறைவா, மனத்தில் இருக்கும் கருத்தறிந்து முடிக்கும் முதல்வா! என்னுடைய காரியங்கள் பல நிறைவேறவே இல்லையே. இறைவா, ஒன்றல்ல. பலப்பல கருத்துக்கள் காரியங்களாக வில்லையே. நிறைவேற வில்லையே.

என் கருத்து முடியவில்லை. இறைவா! என்ன சொல்கிறாய்? "என் கருத்து” என்பதே பொய் என்று கூறுகிறாயா? இது என்ன இறைவா, எழுச்சி வசப்பட்ட உணர்ச்சியால் அகநிலையில் உருவானது எல்லாம் கருத்தாகாதா? அப்பட்டமான ஆசைகள் கருத்தாகாதா? ஆம். இறைவா, கருதி முடிவு செய்தல் கருத்து.

கருத்துக்கு நோக்கம் இருக்கும். நோக்கம் இல்லாத ஒன்று கருத்தாக இயலாது. நோக்கமே வாழ்க்கையின் முதல், முடிவு, எல்லாம். நோக்கமே வாழ்க்கையின் இன்ப வாயிலைத் திறக்கும் சாவி, நோக்கமே வாழ்க்கையை இயக்கும் சக்தி.

இறைவா, என் மனத்துள் கருத்து உருவாகும் வண்ணம் அருள் செய்க, அக்கருத்தும் உயரிய நோக்கம் கொண்டதாக அமைய அருள் செய்க. உயரிய நோக்கத்தினைக் கொண்டு உழைப்பில் உழந்து உயரிய இடத்தினைப் பிடிக்க அருள் செய்க. இடர்களைத் தாண்டியும் அச்சப்படாமலும் ஆள்வினை இயற்றும் அருள்திறனை வழங்கு.

நோக்கம் எனக்குத் தேவை! நின் அருள் நோக்கு என்பால் என்றும் இருக்க வேண்டும். நின் அருள். நோக்கு என்னை ஆளாக்குதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! 


மே 27


பொறி புலன்கள் அனைத்தும் மௌனத்தில் ஈடுபடும் அருள் நயந்த வாழ்வினை வழங்கு!


இறைவா, பேச்சிறந்த பூரணமே! என் வாழ்நாள், "பேச்சு, பேச்சு" என்று கழிகிறது. எப்போதும் பேசுகிறேன். எங்கேயும் பேசுகிறேன். ஒரு நாள், ஒரு பொழுது பேசாநிலை மௌனம் கொண்டேனில்லை!

இறைவா, பெட்டியில் பணம் போல, ஆற்றல், பேசா நிலையிலேயே பாதுகாக்கப் பெறுகிறது. "பேச்சு” நன்மையும் செய்கிறது! அதே அளவுக்குத் தீமையும் செய்கிறது. மௌனத்தில் நன்மையே மிகுதி.

இறைவா, நான் பேசுகிறேன்! பேசிக் கொண்டேயிருக்கிறேன். ஊரார் வேறு அழைத்துப் பேசச் சொல்கிறார்கள்! என் பேச்சு நண்பர்களையும் தந்திருக்கிறது. பகைவர்களையும் தந்திருக்கிறது!

இறைவா, இனி பேசுவது வேண்டாம்! பேச்சுக் கச்சேரி போதும்! அரட்டை அடித்தல் வேண்டாம். பெரிய பெரிய பேச்சாளர்கள்கூட, பெரிய காரியங்களைச் செய்ததாக வரலாறு இல்லை. வாய்ப்பந்தல், வாழ்வளிக்காது அல்லவா?

இறைவா, இனி நான் பேசாதிருக்கும்படி அருள்செய்! நாளும் மௌன நிலையிலேயே காரியங்களை இயற்றிடும் இனிய பழக்கத்தினை அருள் செய்க! பேசா வரம் அருள்க!

மௌனத்தில் பழகும் பெருவாழ்வினை அருள்செய்க. பொறிகள்-புலன்கள் அனைத்தும் மௌனத்தில் ஈடுபடும் அருள் நயந்த வாழ்வினை அருள் செய்க! 


மே 28


தொண்டால் வரும் துன்பம் தழுவிய வாழ்க்கை அருள்க!

இறைவா! பண்சுமந்த பாடல் பரிசுக்காகக் கொற்றாளாகி மண் சுமந்த மாதேவா! கோலால் மொத்துண்ட கோவே! புண் சுமந்த புண்ணியனே!

இறைவா, எல்லாம் வல்ல உனக்கே பண் சுமந்த பாடல் கேட்க இத்தனை இடர்ப்பாடுகள் என்றால், நான் என் வாழ்க்கைக்கு மலர்கள் தூவிய பாதையை நினைந்து நினைந்து ஏங்குகின்றேனே. தடைகளே வராத-இடர்களே குறுக்கிடாத வாழ்க்கையின்மீது எனக்கு ஆசை!

துன்பமே தலைகாட்டாத-இன்பக் களிப்பு நிறைந்த வாழ்க்கையே எனக்குத் தேவை என்று தேடுகின்றேன். தேடித் தேடி அலைகின்றேன். இறைவா, யாதொரு பயனும் இல்லை. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதா? கிடைக்குமா?

இறைவா, எனக்கு உண்மையை உணர்த்துக! இறைவா, நான் நினைப்பது பொய்ம்மையா? பொய்ம்மையில் உருவாகும் கற்பனையா? இறைவா, என்னை மன்னித்துவிடு. இறைவா, நீ அருளிச் செய்தது முற்றிலும் உண்மை. நான் இப்போது உணர்கிறேன். தடையே இல்லாத வாழ்க்கை - இடர்களே இல்லாத வாழ்க்கை வெற்றியாகாது. தடைகளே இல்லாத வாழ்க்கை பயனற்றது. எங்கேயும் அழைத்துச் செல்லாது! ஆம் இறைவா, உணர்ந்து கொண்டேன். என்னை இடர்கள் வளர்க்கும்; துன்பம் தூய்மைப்படுத்தும்!

இறைவா! தொண்டால் துன்பம் தழீஇய வாழ்க்கையையே அருள் செய்க. இறைவா, என்ன இருந்தாலும் நான் ஏழை. துன்பத்தில் கிடந்துழலும்போது துணையாய் இருந்து வழிகாட்டு, நெறிப்படுத்து. இவைவா, அருள் செய்க! 


மே 29


இறைவா, ஓர் உத்தமத் தோழனை அருள் செய்க!

இறைவா! தம்பிரான் தோழரே! எனக்கும் ஒரு தோழன் தேவைப்படுகிறான். நண்பனைத் தேடித்தேடி அலைகிறேன். இது வரையில் கிடைக்கவில்லை. நண்பர்கள் கிடைக்காமல் இல்லை. கூட்டம் நிறைய இருக்கிறது!

உறவு கொண்டாடுகிறார்கள்! உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களால் எனக்கு என்ன பயன்?

சுந்தரருக்குத் தோழனாகிப் பொன் கொடுத்தாய். பொருள் கொடுத்தாய். பெண் கொடுத்தாய். அவர் பகைவர்களை நண்பர்களாக்கினாய். மன்னர்களோடு இணைத்து நட்பு உண்டாக்கினாய். எனக்கு இப்படி எல்லாம் செய்யக் கூடிய நண்பர்கள் யாரையுமே காணோம்!

எனக்குக் கிடைப்பவர்கள், என்னிடம், வாங்கியவர்கள். வாங்கினால் கூட பரவாயில்லை. இறைவா, நானும் கொடுத்தால்தானே நட்பு வளரும். கூட்டு உழைப்பிலே பொருளை உற்பத்தி செய்து எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. உழைப்பே தர மறுக்கிறார்கள்!

உற்றுழி உதவும் நண்பரை - எனக்குத் தோளொடு தோள் கொடுத்து நிற்கும் ஒர் உத்தமத் தோழரை அருள் செய்க எனக்குச் செல்வமாக - ஆக்கமாக அமையும் ஓர் அருமையான தோழரை அருள் செய்க காலந்தாழ்த்தலாகாது?

இறைவா, எனக்கேற்ற வேறு தோழர் கிடைக்காது போனால் ஒரு பணிவான வேண்டுகோள்! நீயே எனக்குத் தோழனாக வந்துவிடு. உன்னைச் சுந்தரர் திட்டியது போலத் திட்டமாட்டேன். இறைவா, அருள் செய்க! 


மே 30


இறைவா, என் வாழ்வு உழைப்பாகவே ஆகுக!

இறைவா! ஓயாது இயக்கியருளும் தலைவனே! நான் உன்னைப் போல உழைக்கவும் இல்லை. தொழில் செய்யவும் இல்லை. ஆனால் ஒய்வு தேவைப்படுகிறது.

இறைவா, நீயே என்பால் அருள்கொண்டு மூன்றில் ஒரு பங்கை உறக்கத்திற்கு ஒதுக்கிப் பூரண ஓய்வளித்துள்ளனை. இது போதவில்லை எனக்கு!

நான் வேலை பார்ப்பதே சராசரி 5 மணி நேரம் அல்லது கூடுதலாகப் போனால் 8 மணி நேரம்! அதாவது மூன்றில் ஒரு பங்குநேரம் உழைப்பு - வேலை. பிறிதொரு பங்கு எனக்காக!

ஒரு நாளில் 16 மணி நேரம் நான் என்னைக் கவனித்துக் கொள்ள, தூங்கி ஓய்வு பெற! 8 மணி நேரம் உழைப்பு - வேலை. இதற்கே நான் அலுத்துக் கொள்கிறேன்.

இறைவா! என்னைக் காப்பாற்றுக! நான் ஒய்வு விரும்பலாமா? எனக்கு ஓய்வு பழக்கமாகிவிட்டது. வழக்கமாகி விட்டது.

ஓய்வு எனக்காக என்ற நிலை மாறி, ஓய்வுக்காக நான் என்றாகிவிடுகிறேன். இறைவா, என்னைக் காப்பாற்றுக!

ஓய்விலாது உழைக்கும் ஆற்றலினை அருள் செய்க என் வாழ்வு உழைப்பாகவே அமைக! இறைவா, அருள் செய்க! 


மே 31


என் உழைப்பே எனக்கு உத்தரவாதம் என்றருளிய உத்தமனே! போற்றி!

இறைவா, படைத்தளித்திடும் பரம்பொருளே! உன் நிகழ்வுகள், ஒழுங்கமைவுகளுடன் நிகழ்கின்றன. முன் கூட்டியே சீராகத் திட்டமிட்ட செயற்பாடு. ஆதலால், மாறுபாடுகள் இல்லை. எதிர் விளைவுகள் இல்லை.

இறைவா, நின் தொழிலின் மாட்சிமை என்னே! நானும்தான் வேலை செய்கிறேன். நான் வேலை செய்கிறேனா? வேலை என்னை வேலை வாங்குகிறதா? இறைவா, என் நிலை இரங்கத்தக்கது!

இறைவா, நீயும் கருணை இல்லாமல் கைகளை மட்டுமே கொடுத்தாய். உணவைக் கொடுத்தாய் இல்லை. இறைவா, நான் வேலையைத் தேடிச் செய்வதில்லை. ஒரோ வழி செய்தாலும் நெருக்கடிகளுக்கு ஆற்றமாட்டாது செய்கிறேனே. தவிர, வேறு இல்லை!

இறைவா! என்னை வறுமை விரட்டுகிறது! என்னைக் கருணையுடன் காப்பாற்று! நான் என் வேலையைத் திட்டமிட்டுச் செய்ய அருள் பாலித்திடுக!

நான் வேலையைத் தேடிச் செல்லும்படி செய். நான் வேலையைத் துரத்திப் பிடித்துச் செய்து, பயன் கொண்டு பெருமையுடன், வளமுடன், வகையுடன் வாழ அருள் செய்க!

இறைவா, என் உழைப்பே எனக்கு உத்தரவாதம் என்றருளிய உத்தமனே ! உனக்கு நூறாயிரம் போற்றி! நான் வேலையைத் திட்டமிடுகிறேன். பயன் தரத்தக்க முறையில் செய்கிறேன். இறைவா, வழி காட்டுக! வழி நடத்தி அருள் செய்க!