குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10/ஜூன்


ஜூன் 1



ஆற்றல் மிக்கவனாகி வியத்தகு சாதனைகள் இயற்ற அருள் பாலித்திடுக!

இறைவா என் தலைவா நின் ஆற்றலால் இந்த உலகம் இயங்குகிறது. தொழிற்படுகிறது. இறைவா, நீயே ஆற்றல்! நீயே ஆற்றலின் ஊற்றுக்கண்!

இறைவா, நோக்கும் திசையெங்கும் ஆற்றல். ஆற்றலே வாழ்கிறது. ஆற்றலே வாழ்விக்கிறது. இறைவா, எனக்கு ஆற்றலை அருளிச் செய்க! நான் என்னைச் சுற்றியுள்ள எனக்குப் பொருந்தாச் சூழ்நிலையைத் தாக்கிப் போராடி மாற்றும் ஆற்றலினை வழங்கு.

என் உடம்பின் ஒவ்வோர் உறுப்பும் ஆற்றல் மிக்குடையதாக விளங்க அருள் செய்க. நான் ஆற்றல் நிலையிலேயே வாழ்ந்திருத்தல் வேண்டும்.

நான் காரியங்கள் செய்த வண்ணமாகவே வாழ்ந்திடுதல் வேண்டும். ஆற்றலே உயிர்ப்பு என்று உணர்த்திடுக. ஆற்றலே வாழ்நிலை என்று எண்ண வரம் தந்திடுக!

குறைவிலா ஆற்றலுடன் வாழ்தலே வேண்டற்பாலது. ஆற்றலை அருள் செய்க! என் வாழ்வையே ஆற்றலாக ஆக்கிடுக.

ஆற்றல் மிக்கவனாகி வியத்தகு சாதனைகள் இயற்ற அருள் பாலித்திடுக! இறைவா, ஆற்றல் மிக்குடைய வாழ்வை அருள் பாலித்திடுக!! 


ஜூன் 2
தீமையை எதிர்த்திடும் திட சித்தமுள்ளவனாக வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா! உன்னை அண்டியவர்களுக்கு நீ நல்லன்! உன்னை அணுகாதவர்களுக்கு நீ நலமிலன்! இதுதான் நியதி.

இறைவா, நான் நன்மையை நேசிக்க வேண்டும். நன்மையையே நான் நாடுதல் வேண்டும். நன்மையைச் செய்ய வேண்டும். நன்மைக்குத் துணை செய்ய வேண்டும். இறைவா, அருள் செய்க.

நன்மையே என் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய அருள் செய்க: இறைவா, தீமையை வெறுத்தால்தானே நன்மையை நாடமுடியும். ஆம், இறைவா! தீமையை நான் வெறுக்க வேண்டும். தீமைக்கு நான் அந்நியனாக வேண்டும்!

தீமைக்கு நான் அந்நியனாகாமல் நன்மை என்னிடம் கால் கொள்ளாதே. இறைவா! என்னைத் தீமையிலிருந்து விலக்கு! தீமையை என்னிடமிருந்து அகற்றுக. நான் தீமைக்கு - தீமை உடையோருக்கு அந்நியமாய் விளங்கும் நிலையை அருள் செய்க!

மெய்ப்பொருளாருக்குப் பக்தனாகவும், அதே போழ்து முத்தநாதனுக்கு நண்பனாகவும் ஆதல் அரிது. நான் இரண்டு எசமானர்களுக்குத் தொண்டூழியம் செய்ய இயலாது.

நன்மைக்கும் தீமைக்கும் ஒருசேர நல்லவனாக இருத்தல் ஒருபொழுதும் இயலாது. இறைவா, அருள் செய்க தீமையை எதிர்த்திடும் திட சித்தமுள்ளவனாக நான் வாழ்ந்திட அருள் செய்க! 


ஜூன் 3
என்னுள் இருப்பது சிறத்தல் வேண்டுமென எடுத்துக் காட்டிய இறைவா, போற்றி.

இறைவா! என்னால் அறியாப்பதம் தந்தருளிய என் தந்தையே! தலைவனே! நீ எனக்கு நிறைய அருளிச் செய்துள்ளனை. ஆனாலும் நான் இன்னமும் தேடுகின்றேன். என்னுடைய பற்றாக்குறை ஒரு தொடர்கதை. அதனால் தேடிக் கொண்டிருக்கிறேன்!

இறைவா, என்ன அருளிச் செய்கின்றாய்! "உள்ளது சிறத்தல்”- ஆம் இறைவா! என்னை மன்னித்துக் கொள். என்னிடம் உள்ளதை நான் சிறப்படையச் செய்து, பயன் கொள்ளாத நிலையை இழிநிலையை எடுத்துக் காட்டிய கருணைக் கடலே. நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்!

இறைவா! என்னிடம் உள்ள அறிவு, இன்னமும், பட்டை தீற்றப்படவில்லை. என்னிடம் உள்ள ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை. இறைவா, எனக்கு வாய்த்த செல்வக்களங்கள் கூட முழுமையாகப் பயன்படுத்தப் பெறவில்லை!

இறைவா, மன்னித்துக்கொள். "உடையது பெருக்காதவனிடம் உள்ளதும் நிலைக்காது" என்ற ஆப்த மொழியை நான் உணர்ந்து கொள்ளத் துணை செய்த என் தலைவா!

நான் என்னை நம்புகிறேன். என் அறிவை நான் பெருக்கி வளர்த்துக் கொள்ளும் பாங்கினை அருள் செய்க. என் ஆற்றல் அளப்பரியது. படைக்கும் தன்மை உடையது. என் ஆற்றலை எஞ்சுதலின்றி முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்!

என் உடைமையுலகம் பெரியது. அதன் வளம் முழுதும் கண்டு, கொண்டு வந்து குவித்தாலே போதும் போதும் என்றாகிவிடும். இறைவா, நான் தற்சார்பினனாக வாழ அருள் செய்க! 


ஜூன் 4


என் எண்ணங்கள் சிறப்புற அமைய அருள் செய்க!


இறைவா, இந்த உலகின் நியதியாக நின்றருளும் தலைவனே! நான் எண்ணுகிறேன். கருதுகிறேன். என் எண்ணங்களே என் இயக்கத்திற்கு முதல். என் கருத்துக்களே என் வாழ்க்கைக்கு முதல்!

நான் என் எண்ணத்தின் வழியதாக வாழ்கிறேன். நான் என் கருத்துக்கு இசைந்தவாறு ஒழுகுகிறேன். அதனால் என் படைப்பு, படைப்பின் தன்மை, என்னுடைய எண்ணத்தின் வழியதாகவே அமையும்!

என்னுடைய புறவாழ்க்கை, என் கருத்து எப்படியோ, அப்படியே இருக்கும். ஒவ்வொரு பறவையும் அதனதன் முட்டையைத்தான் இடுகிறது. அதுபோல, நான் என் எண்ணங்களையே சொல் ஆக்குகிறேன். என் கருத்துக்களையே காரியங்களாக்குகிறேன்!

இறைவா, என் உடனாய் நின்றருளும் தலைவனே. என் எண்ணத்தையே திருத்தியருள்க! என் கருத்தினையே திருத்தி ஆட்கொண்டருள் செய்க! நான் நல்லனவே எண்ணுதல் வேண்டும்.

என் கருத்து நின் கருத்தாதல் வேண்டும். தலைவா! இங்ஙனம் அருளிச் செய்த தலைவா நான் எண்ணுதற்குரிய என் புலன்களை உயர் நந்தனவனமாக்கி-உயர் எண்ணங்கள் கருக்கொள்ளத் துணை செய்க.

என் எண்ணங்களே நான்! என் எண்ணங்களே என் வாழ் நிலை, என் கருத்துக்களே என்னை ஊக்குவிக்கும் சக்திகள். அவை சிறப்புற அமைய அருள் செய்க! 


ஜூன் 5


என் உலகியல் வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் இசைவித்து ஒரே வாழ்நிலையாகும்படி அருள் செய்க ! ,


இறைவா, மனத்தகத்தானாக எழுந்தருளி ஆட் கொண்டருளும் தலைவனே! நான் இருபாலும் ஒத்து வளர்ந்திட அருள் செய்க! என் ஒருவன் வாழ்க்கையிலேயே எத்துணை வேறுபாடுகள். வீட்டு வாழ்க்கை வேறு. சமுதாய வாழ்க்கை வேறு. திருக்கோவில் வாழ்க்கை நிலை வேறு.

அகத்து வாழ்க்கை வேறு. புறத்து வாழ்க்கை வேறு. ஒரு பாத்திரத்தின் உட்புறமும் வெளிப்புறமும் மாறுபாடாகவா காட்சியளிக்கும். இறைவா, நான்தான் என் அக வாழ்க்கை வேறு, புற வாழ்க்கை வேறு என்று வாழ்ந்து வருகிறேன்.

இறைவா, உலகம் ஒன்றே என்று உணர்த்திய உத்தமனே! அதுபோலவே என் வாழ்க்கையும் என்று உணர்த்தி வழி நடத்திய வள்ளலே! என் உலகியல் வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையும் ஒன்றேயாக அமைதல் வேண்டும்! இறைவா, இங்ஙனமே அருள் செய்க!

அகத்தேயும் புறத்தேயும் வேறு வேறு வாழ்நிலைகளில் வாழ்தலைத் தவிர்த்திட அருள் செய்க. அமைதி அந்த அமைதி தழுவிய வாழ்க்கையே நிறை நலம் சார்ந்த வாழ்க்கை. இறைவா, அருள் செய்க!

சிந்தையொடு செயலிசைந்து நடந்திடும் வாழ்க்கையை, அகமும் புறமும் ஒத்திசைந்து நடந்திடும் ஞான வாழ்க்கையை அருள் செய்திடுக! இறைவா, இரட்டை நிலையிலிருந்து மீட்பாயாக! எங்கும் ஒரே நிலை! ஒரே வாழ்க்கை!

என் உலகியல் வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் இசைவித்து ஒரே வாழ்நிலையாகும்படி அருள் செய்க. உள்ளும் புறமும் ஒத்த உயர்ந்த வாழ்நிலையை வழங்கி அருள்க! 


ஜூன் 6


பிழையிலாப் பெருவாழ்வு வாழ்ந்திட அருள் செய்க!

"இறைவா, பிழையெலாம் தவிரப் பணித்து" ஆட்கொண்டருளும் அண்ணலே! பிழை நிறைந்த வாழ்க்கையை நானும் எப்படியோ தூக்கிச் சுமந்து நடக்கிறேன். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிழைகள்!

பிழைகளே மலிந்த வாழ்க்கையில் இழப்புக்களே நிகழும். ஈட்டம் எப்படிக் கிடைக்கும்? இறைவா, நான் இழப்புக்களேயே கூட கண்டு பதறுவதில்லை. பிழைகள் செய்தலும், இழத்தலும் பின் இவற்றை இயற்கை நியதி என்று சமாதானம் செய்து கொள்ளுதலும் என் வாழ்க்கையின் சகச நிலையாகிவிட்டது!

இறைவா! சின்னச் சின்னப் பிழைகளாக நான் செய்யும் பிழைகளைத் தவிர்த்திடுக. பல நூறு சிறு பிழைகளே ஒரு பெரிய இழப்பைத் தருகின்றன. அல்லது ஆக்கத்தைத் தருகின்றன! பிழையிலா வாழ்க்கையை அருள் செய்க!

பிழையில் சிறுபிழை, பெரியபிழை என்ற வேற்றுமை இல்லை! ஆதலால், ஒரு சிறுபிழையும் நிகழாவண்ணம் என் கடமைகளைச் செய்யும் திறனை அருள்செய்க. பிழைகள் தவிர்ந்த வாழ்க்கையே வாழ்க்கை!

பிழைகள் செய்யா வாழ்க்கையை நடத்த அருள் செய்க! நின்னருள் காட்டும் நெறியில் நெறி பிறழாது வாழ்ந்திடுவேன். இது உறுதி!

இறைவா, இதுவரை நிகழ்ந்த பிழைகளைப் பொறுத்து அருள்க! இனிமேல் வரும் பிழையெல்லாம் தவிர்த்தாட் கொள்க. நான் பிழையிலாப் புகழ்மை படைத்த பெருவாழ்வு வாழ்ந்திட அருள் செய்க! 


ஜூன் 7


திட்டமிட்டுப் பணி செய்ய அருள் செய்க!


இறைவா! மூன்றாய் உலகம் படைத்து உகக்கும் எம் தலைவனே! இந்த உலகை நீ ஆண், பெண், அஃறிணை என்ற முத்திறத்தால் படைத்திருப்பது ஒரு சிறந்த திட்டம்! நீ திட்டமிட்டுச் செய்ததால் உலக இயக்கத்தில் ஒழுங்கமைவும் மாறா முறையும் இருந்து வருகின்றன.

இறைவா, என் வாழ்க்கை மாறா முறைகளை அவாவி நிற்கிறது! ஒழுங்கமைவு தேவை! இறைவா. நானும் திட்டமிட்டு வாழக்கற்றுக் கொண்டால் என் வாழ்விலும் சிறப்புடைய மரபுகள் கால் கொள்ளும்; முறைகள் தோன்றும்.

இறைவா, வரைபடம் இல்லாது கட்டடம் கட்ட இயலுமா! பல சின்னஞ்சிறு செயல்கள் கூட மனத்துள் திட்டமாகி, உருப்பெற்றுச் செயற்பாட்டுக்கு வருதலே இயற்கை!

ஆனால் நானோ என் பணிகளுக்குத் திட்டமிடாமல் கண்டதை - கைக்கு எட்டியதை - பிறர் என் வாழ்க்கையில் திணிப்பதைச் செய்து கொண்டிருக்கிறேன். என் வாழ்நாள் நெருக்கடியிலேயே கழிகிறது. பணிகளின் மிகுதியால் ஏற்பட்ட நெருக்கடியன்று!

காலத்தால் கருதாத பிழை! திட்டமிடாது கடைசி நேரத்தில் செய்வது! ஒரே பரபரப்பு! இது என் வாழ்க்கையில் திட்டமிடாததனால் ஏற்பட்ட விளைவு! சென்ற நொடிப் பொழுது எப்படிப் போயிற்றோ அதை அடியொற்றித்தான் அவ்வழியில்தான் அடுத்த நொடியும் செல்லும்.

இறைவா! நான் என் பணிகளுக்குத் திட்டமிட ஆணை தந்தருள்க. நான் எனக்குக் கிடைத்துள்ள பொழுதை முற்றாகப் பயன்படுத்தத் திட்டமிடுதலே வழி என் ஆற்றல் முழுதையும் திட்டமிட்டுப் பயன்படுத்திப் பணிசெய்ய அருள் செய்க! 


ஜூன் 8


தேவ, தேவே! தீமையெல்லாம் மடிக! நன்மை வந்தெய்துக!

இறைவா, முப்புரம் எரித்த முதல்வா! நான் உனக்கு வழிபாடு செய்யும் வழிகள் பலப்பல! உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கவும் ஏராளமான வாயில்கள் உண்டு!

இறைவா, நீ, நீதி! நீ அன்பு! நீ, அருள்: நீ, கருணை! நீ, இன்பம்! இறைவா, இந்த உயரிய பண்புகள் குடி கொண்டுள்ள ஆன்மாவின் இதயத்தில் குடியிருந்தருள்வாய்! இறைவா, இப்பண்புகள் உடையவர்கள் நல்லவர்கள்! வலிமையுடையவர்களே நல்லவர்களாக வாழ முடியும்!

அற்பச்செய்திகளில் சலுகை காட்டுவது, மன்னிப்பது நன்மையும் அல்ல; வலிமையும் அல்ல. வாழ்க்கையில் நிகழும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால், தாங்கிக் கொள்ளக் கூடாது!

களைகள் மண்டிய கழனியில் பயிர் வளருமா? அது போல அநீதி நிலவும் இடத்தில் நீதி இருத்தல் இயலாது! பொய்யமை நிந்திக்காது போனால் உண்மையைச் சாதிக்க இயலாது. சோம்பலை விட்டொழிக்காத இடத்தில் நல்வாழ்க் கையைப் படைக்க இயலாது.

இறைவா, நான் தீமையை எதிர்ப்பதும் உனக்குச் செய்யும் வழிபாடே என்று உணர்த்தியருளிய மாட்சிமையை என்னென்பேன்! தீமையுடன் சமரசம் கூடாது. கூடாவே கூடாது. தீமையை எதிர்ப்பதுவே வாழ்க்கையின் குறிக்கோள். இதுவே நன்மைப் படைப்பின் தொடக்கம்.

தீமையை எதிர்ப்பது, தீமையுடையோரை அங்கீகரிக்காமல் இருப்பது ஆகிய நெறிமுறைகளில் நின் ஆணை வழி நடப்பேன். இது உறுதி. தீமையை எதிர்ப்பது உன் ஆணைக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கை என்பதை உணர்த்திய தேவ தேவே! தீமையெலாம் மடிவுறுக! நாளும் நன்மை வந்தெய்துக! 


ஜூன் 9


மூலநோய் முதல் கொள்முதல் நோய்வரை நீக்கியருளுக!

இறைவா, ஆரூரர் போன்ற அருட் செல்வர்கள் "நீ யல்லாது துணை பிறிதிலனே" என்று போற்றிய கடவுளே! நீயலால் எனக்குத் துணை யார்?

இறைவா, ஒப்புக்குப் பலர் "நான்", "நீ" என்று வரலாம். ஆனால் உன்னைப் போல் என்னை ஆட்கொண்டருளிச் செய்யும் தலைவன் எனக்கு யாருளார்?

பிழையெலாம் பொறுத்து ஆட்கொள்வாய். இறைவா, நீயே எனக்குத் துணை. இது நான் தெரிந்து எடுத்த முடிவு. உனக்கே நான் அடைக்கலம்.

இறைவா, நீ என்னை ஆட்கொண்டருளுதல் வேண்டும். நின் பணி பிழைக்கின் புளியம் வளாரினால் மோது. அடித்து அடித்துத் திருத்து. நான் உன் உடைமை. நீ என்னை ஆட்கொண்டருளாது போனால் சவலையாய் என் வாழ்நாள் கழிந்து போகும். இறைவா, அருள்பாலித்திடுக.

இறைவா, கருணை காட்டுக! என் வாழ்வில் நீங்காத் தனித்துணை மருந்தாக வந்தருளி மூலநோய் முதல் கொள்முதல் நோய்வரை நீக்கி அருள் செய்க! இன்பக் கிளுகிளுப்பை வழங்கி அருள்க! எம் துணைவா! அருள் செய்க! 


ஜூன் 10


எப்போதும் விழிப்புநிலையில் இருக்க அருள் செய்க!

இறைவா, நீ புவனியில் சேவடி தோய வந்து அருளிய போதே நின்னைச் சிக்கெனப்பிடித்திலன். பேதையாயினேன். வாய்ப்புகள் தாமே வருவன. வரவழைக்க இயலாது.

கதிரவன் ஒளி, இயற்கை நியதியின்படி சுழற்சி முறையில் வருவது. கதிரவன் காயும் பொழுதுதான் பண்டங்களைக் காயப்போடுதல் வேண்டும் என்பது சராசரி அறிவு.

இறைவா, அதுபோல வாய்ப்புகள் வரும்போது, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுதான் வாழ்க்கை முறை. வாழ்வாங்கு வாழும் நியதி. இறைவா, நான் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க அருள் செய்க!

அண்ணலே, நான் எப்போதும் பணிகளை ஏற்கும் ஆயத்த நிலையில் இருக்க அருள் செய்க. இறைவா, ஊனில் உயிர் உலாவர வைத்த என் தலைவா, இந்த உடம்பைக் கொண்டே நான் முத்திநிலையை அடைய வேண்டாமா?

இறைவா, அருள்செய்க! இமைப்போதும் சோராது நின்திருவடிகள் போற்றி வாழ்ந்திட அருள் செய்க! நீ என்னைப் பணி கொள்ளும் துறைதோறும் பணிகள் செய்து வாழ்ந்திட அருள்செய்க!

நான் இனியும் ஏய்த்து ஏக்கற்றுப்போகேன். இறைவா, அருள்செய்க! வழங்குகின்ற நின் அருட் கொடை முழுதும் காண்போனாகச் செய்க. 


ஜூன் 11


உழைப்பாளியாக உழைத்து வாழ்ந்திட அருள்செய்க!

இறைவா, திட்டமிட்டு உலக இயக்கத்தை இயற்றும் இறைவா, என் வாழ்க்கையில் இன்னமும் திட்ட அமைவு கால் கொள்ள மறுக்கிறது. அதனால் ஒழுங்கமைவு இல்லை.

ஒழுங்கமைவு இன்மையால் ஆக்கம் இல்லை. ஆக்கம் இல்லாததால் இன்பமும், மகிழ்வும் இல்லை. இவை யனைத்தும் காரணகாரியத்தொடர். ஆனால் நானோ எதற்கும் சமாதானம் கற்பித்து வருகிறேன். இதனால் என்ன பயன்? தற்காலிகமான மனச்சாந்தி. அவ்வளவு தானே?

இழந்த ஆக்கம் திரும்ப வரப்போகிறதா? இறைவா, என்னுடைய திட்டமிட்ட வாழ்க்கையை இன்றே தொடங்க அருள் செய்க! ஆம் இறைவா, ஒவ்வொரு நொடிப்பொழுதும், பணி செய்ய வேண்டும்.

பயனுடைய பணி செய்ய வேண்டும். இறைவா, நான் உண்ணும் உணவு உழைப்பின் விளைவு. இயற்கையின் ஓய்விலாத உழைப்பும், உழவரின் உழைப்பும் சேர்ந்தளித்த கொடையே, நான் உண்ணும் உணவு.

நான் உண்ணும் ஒவ்வொரு கவளமும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. ஆம், "உழைப்பை உண்கிறாய், திரும்ப உழைப்பை, உழைப்பால் ஈடு செய்ய மறுக்கிறாயே" என்று!

இறைவா, என் உடலாற்றலின் ஒரு சிறு பகுதியும் வீணாகாமல் பயன்படத்தக்க வகையில் திட்டமிட்டு உழைக்கும் உறுதியைத் தா. உழைப்பே உலகு! தெய்வம்! எல்லாம் உழைப்பின் பயனே! உழைப்பாளியாகவே உழைத்து வாழ்ந்திட அருள் செய்க! 


ஜூன் 12


இறைவா, வாய்ப்புகளை நழுவ விடாத பாக்கியசாலியாகிட அருள் செய்க!


இறைவா, காலத்தின் காலமாகி நிற்கும் கடவுளே! "காலம்" ஓயாது. நில்லாது இயங்கிடும் இயக்கம். ஒரு காலத்தைப் போல் பிறிதொரு காலம் இருக்காது. ஆதலால், ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்தி ஆக்கம் தேடுதலே வாழ்வு சிறக்க வழி.

இந்தப் பரந்த உலகத்தில் எனக்கு உதவி செய்யக் கூடியவர்கள் சில சந்தர்ப்பங்களில்தான் கிடைக்கிறார்கள். நான் அவர்களுடைய உதவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. என்னே! என் செயலின்மை.

இறைவா, எனக்கு ஒவ்வொரு நொடிப் பொழுதும் வாழும் திறனை அருள் செய்க. என்னுடைய உதவியாளர்கள் நான் சுண்டுவிரலைக் காண்பித்தால் அதனைப் பற்றிக் கொண்டு மேலே ஏறும் திறனை அருள்செய்க!

கிடைத்த வாய்ப்புகளைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு உறுதியுடன், அழுத்தமாக முயன்றால் எண்ணற்ற காரியங்களைச் சாதிக்கலாம். இறைவா, எனக்கு உதவிக்கு வருபவர்கள் எனக்கு வாய்த்த செல்வமாவர். அவர்தம் உதவிகளே என்னை வளர்ப்பவை. இத்தகு வாய்ப்பு ஒரோ வழிதான் வந்தமையும்.

இறைவா, நான் நழுவ விடாத நற்பாக்கிய சாலியாக வாழ்ந்திட அருள்செய்க. எனக்கு உதவி செய்வோர் மனம் மகிழ நான் என் வாழ்க்கையில் உயர அருள் செய்க!

கிடைக்கும் சிறு உதவியையும் பெரிய காரியமாக வளர்த்துப் பயன்கொள்ளும் ஆற்றலினை வழங்கியருள்க. உதவி செய்தார்மாட்டு நன்றியும், கடப்பாடும் உடையவனாக வாழ்ந்திட அருள்செய்க! 


ஜூன் 13


உழைக்கும் தொழிலாளியாக வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, நீ ஒரு தொழிலாளி. உயிர்க்குலத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் தொழிலாளி. இது ஒரு மாபெரும் வேலை. இடையீடு இல்லாது, ஓய்வில்லாது, தற்செயல் விடுப்புக்கூட இல்லாது செய்யப்பெறும் வேலை.

இறைவா, நீ விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிற சமூகப் பணிகள் வேறு உள்ளன. வந்திக்காகக் கொற்றாளாகப் போய் மண் சுமந்தனை. ஆரூரருக்குப் பெண் தேடி, நண்பன் தேடித் தந்தாய். தாயாகி மகப்பேறு மருத்துவம் பார்த்தாய். மாமனாகி வழக்குரைத்தாய்.

இறைவா, ஓயாது உழைக்கும் தொழிலாளி நீ எனக்கோ மணிக்கணக்கில் வேலை. என் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதான் வேலை. ஏதோ செய்வேன். "என்ன செய்தாய்? என்ன பயன்?” என்று மட்டும் கேட்டுவிடாதே. நான் தொழில் செய்யவில்லை என்பதைச் சுற்றியுள்ள உலகமே பறை சாற்றுகிறதே.

ஒன்றை, பதின்மடங்கு பயனுடையதாக்கி மதிப்பு உயர்த்தி வாழ்தலே தொழில் வாழ்க்கை நான் தொழிலா செய்கிறேன்? இதிலும் பாவனைதான். பாவனையே பெருகிப் பாவத்தைப் பெருக்குகிறது.

இறைவா, என்னைப் பாவத்திலிருந்து மீட்பாயாக! தொழில் செய்யும் மனப்பான்மையை அருள்செய்க. நான் உண்மையில் ஓர் உழைக்கும் தொழிலாளியாக வாழ்ந்திட அருள் செய்க!

என் தொழில் திறத்தால் இந்த வையகம் முழுதும் பாலித்திட அருள்செய்க! இறைவா, நான் தொழிலாளி என்பதை உணர்த்திய கருணைக்குப் போற்றி! போற்றி!! 


ஜூன் 14


சமநிலை மனம் தந்தருள் இறைவா!

இறைவா, வேண்டுவார் வேண்டுவதே ஈந்து புகழ் சுமக்கும் புண்ணியனே. இறைவா, எனக்குத் தேவை நிறைய இருக்கிறது. எனக்குத் தேவை அறிவு. அறிவை நீ தரமுடியாது. கற்பதன்மூலம் பெறுவது அறிவு. எனக்குத் தேவை செல்வம். நீ செல்வத்தைத் தரமுடியாது. செல்வம் உழைப்பினால் படைக்கப்படுவது. எனக்குத் தேவை அமைதி அமைதி சமநிலை உணர்வால் தோன்றுவது. இதுவும் ஒருவர் தந்து ஒருவர் பெறுவது அல்ல. இறைவா, இவையெல்லாம் என் தேவை.

இவற்றையெல்லாம் நான் பெற ஆசைப்படுகிறேன். ஆனால், பெறுதலுக்குரிய முயற்சி சிறிதும் இல்லை. இறைவா, அது மட்டுமா! இவையெல்லாம் எளிதில் பெற இயலாது. அதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்ற சமாதானத்தையும் செய்துகொண்டு ஊன் பொதி சுமந்து உயிர் வாழ்கின்றேன். என் செய்ய? நின் கருணை என்பால் விழவில்லை.

நான் கற்கும் முயற்சியில் ஈடுபடும் முனைப்பை நீ எனக்கு அருள்செய்! செல்வத்தைத் தப்பாது தரும் உழைப்பு எண்ணத்தைத் தந்தருள்செய்க. விருப்பு, வெறுப்பற்ற சமநிலையில்தான் அமைதி என்றுணரும் ஞானத்தினைத் தந்தருள் செய்.

இறைவா, "இயலாதது, முடியாதது, இவ்வளவுதான் முடிகிறது, கொடுத்து வைத்தது இவ்வளவுதான்" என்ற சைத்தான் தத்துவங்களை மூளையிலிருந்து அகற்றி அருள் செய்க!

கற்றனைத்து அறிவு ஊறும். உழைப்பளவு செல்வம் தப்பாமல் விளையும். சமநிலை மனம் அமைதி தரும். இவற்றை என் வாழ்க்கையில் கடமைகளாக, நோன்புகளாக ஏற்று வாழ அருள்செய்க! இறைவா, இயலாமை இல்லாமல் போக அருள்செய்க! 


ஜூன் 15


இறைவா, என் வாழ்க்கைக்குரிய வரைபடத்தை நானே

வரைந்து கொண்டு வாழும் உரிமை வழங்கியருள்க!

இறைவா, உன்னை நான் நம்புகின்றேன். தொழுகின்றேன். உனக்கு நான் பயப்படுகிறேன். இது உண்மை. இறைவா, ஒரு வேண்டுகோள். நான் உன்னை நம்பித் தொழுகின்றேன். உனக்குப் பயந்தே என் வாழ்க்கையை நடத்துகின்றேன்.

ஆனால் நான் என் வாழ்க்கையை நான் விரும்பும் வகையிலேயே சுதந்தரமாக நடத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன். நான் உன்னுடைய ரப்பர் முத்திரையாக, மையொற்றித்தாளாக இருக்க ஆசைப்படவில்லை.

நான் என் சொந்தமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் என் வாழ்க்கைக்குரிய வரைபடத்தை வரைந்து கொண்டு நடத்த உரிமை வேண்டும்! இயற்கை நியதிகள் கூட என்னைத் தீண்டாத வண்ணம் அருள் செய்க! நானே திட்டமிடுவேன். என் வாழ்க்கையை நானே உருவாக்கிக் கொள்வேன்.

நான் எனக்காகவும் இந்த உலகத்திற்காகவுமே உழைத்து வாழ்வேன். இரந்து வாழும் வாழ்வு எனக்கு வேண்டாம். நான் என் பொறுப்பை உணர்கிறேன்.

நானாக வாழும் வாழ்க்கையை அருள்செய்க! நான் என் சொந்தப் பொறுப்பில் இந்த வையகத்தை உண்பித்து வாழ்ந்திடும் திறனைப் பெற்றுள்ளேன். என்னைச் சுதந்தரமாக வாழ்ந்திட அருள்செய்க! ஆனாலும் நான் உன் அடிமையே.

நான் உன் உழைப்பால் கருணையினால் வாழாமையை அருள்செய்க! நான் என் கடமைகளைச் செய்கின்றேன். தொடர்ந்து செய்கிறேன். இறைவா, அருள் செய்க! 


ஜூன் 16


எப்பணியையும் திறம்படச் செய்ய இறைவா அருள்க!

இறைவா, வித்தின்றியே விளைவு செய்யும் வித்தகனே! நின் ஆற்றல் அளப்பிலாதது. ஒன்றுக்கும் ஆகாத கழிவுகளையே எருவாக்கி, படைக்கும் ஆற்றல் உடையதாக்கி விடுகிறாய்.

இறைவா, நான் ஒரு பொல்லாத மனிதன். எனக்கு நீ வழங்கிய அறிவுக் கருவிகளின் அற்புதம் என்னே! ஆனாலும் நான் என்ன செய்கிறேன். வீணில் உண்டு உடுத்து செத்து கொண்டிருக்கிறேன். இறைவா, என்னைத் திருத்து, என் புத்தியைத் திருத்து.

எனக்கு வாய்த்த வேலைகள், பணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் நான் அதை ஏற்று உவப்புடன் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல இறைவா, நான் செய்தால் போதாது - நான் திறம்படச் செய்யவும் வேண்டும்.

சிறிய வேலைகளே பெரிய வேலைகளுக்குரிய வாயில்கள். இறைவா, பணிகளில் அற்பமான பணி எது? யாதொன்றும் இல்லை.

தெருக்களைக் கூட்டித் துப்புரவு செய்யும் தொழிலும் கூட அதன் தன்மையில் மிக மிக உயர்ந்த தொழில். கோடான கோடி மக்களை நோயினின்று பாதுகாக்கும் தொழில். அதனாலன்றோ அப்பரடிகள் பார் வாழத் திருவீதிப் பணி செய்தார்.

இறைவா, எந்தப் பணியும் நல்ல பணியே! எப்பணியும் செய்யும் திறத்தில்தான் சிறக்கிறது. இறைவா. எந்த ஒரு பணியையும் திறம்படச் செய்ய அருள் செய்க! 


ஜூன் 17


கைத்திருத்தொண்டு செய்யும் கடப்பாட்டில் நிற்பேன்

இறைவா, நான் உன்னை நூறாயிரம் நாமங்கள் சொல்லிப் போற்றிப் புகழ்கின்றேன். எண்ணற்ற வேண்டுதல்களையும் உடன் இரந்து கேட்கிறேன். ஆனால் நீயோ என் வாய் கூறுவதை எளிதில் கேட்பதில்லை. நீ என்னிடம் கேட்பது என் கைகள். அதாவது நான் கைகளால் செய்யும் கைத் திருத்தொண்டையே நீ விரும்பிக் கேட்கிறாய்.

இறைவா, நான் வாயினால் பேசி என்ன பயன்? என் கைகள் அல்லவா, உழைப்பின் சின்னம். படைப்பின் கருவிகள். இறைவா, நீ நிகழ்த்தும் ஐந்தொழில்களை என் கைகளும் நிகழ்த்தும் இயல்புடையன. ஆனால், இன்று என் கைகள் உண்ணப் பயன்படுகின்றன; அடிக்கப் பயன்படுகின்றன. இறைவா, மன்னித்துக்கொள்.

என் கைகள் உழைப்பில் ஈடுபட்டுக் காய்ப்பேறுக என் கைகள் அன்பினால் அனைவரையும் அரவணைத்திடுக. என் கைகள் அள்ளி வழங்கிடுக. என் கைகள் ஒரோவழி தீமையை அழித்திடுக.

இறைவா, இப்பரிசே எனக்கருளி என் கைகள் தொழிற்பட்டால் உலகம் புதுமை பெறும்! பொதுமை நலம் பெற்று விளங்கும். இறைவா, அருள் செய்க! இந்த உலகு நாள்தோறும் புதுமை பெறத்தக்க வகையில் என் கைகள், தீமை செய்யாமல் பாதுகாத்துக் கொள்ளட்டும். இறைவா, என் கரங்கள் கொடுப்பதைவிட என் உறவினர்கள் கை, எடுத்துக் கொள்ளும் உரிமை பெற்ற கரங் களாக மாறினால் ஒப்புரவுக் கொள்கை சிறக்கும். இறைவா, அருள் செய்க!

இறைவா, உன் குறிப்புணர்ந்தேன். இனி வாயினால் பேசிக் கொண்டு உன் சந்நிதிக்கு வர மாட்டேன். கைத் திருத்தொண்டு செய்யும் கடப்பாட்டில் நிற்பேன். அருள் செய்க! 


ஜூன் 18


இறைவா, பாவச் செயல்களை நான் இனி செய்ய மாட்டேன்

இறைவா, பாவநாசா, புண்ணிய மூர்த்தியே! இறைவா, இந்த உலகத்தில் ஒருவன்கூட பாவத்தைச் செய்யாதவன் - பாவத்தை எதிர்க்காதவன் இல்லை! ஏன்? ஒருவன் ஓர் அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் ஒரு பாவியே.

இறைவா, இன்று இந்த உலகத்தில் அநியாயத்தைத் தவிர வேறு என்ன நிகழ்கிறது! இந்த அநியாயத்தைப் பாராட்டிக் கூறும் இழிநிலையும் வளர்ந்து விட்டது. அநியாயமே நியாயமாகிவிட்ட காலம் இது. இறைவா, என்னைக் காப்பாற்று!

என் வாழ்க்கை நிலையானது அல்ல. ஆனால் நான் வாழும் வாழ்க்கையை நிலையானதாக்கலாம். அநியாயங்களை நான் எதிர்க்க வேண்டும்.

நான் நியாயங்கருதிப் போராட வேண்டும். உழைக்காமல் வாழ்தல், ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடுதல், பிரிவினைப்படுத்துதல், சாதி, இன, மதப் பிரிவினைகளை வளர்த்தல், கொலை, கொள்ளைகள் நிகழ்த்துதல் ஆகிய பொல்லாங்குகள்-பாவங்கள் நிறைய நடக்கின்றன! இவைகளை நான் பார்த்தும் பாராமல் இருக்கின்றேன்! இல்லை இறைவா, பல சமயங்களில் உடன்பட்டும் இருக்கின்றேன். இறைவா, என்னை மன்னித்து அருள் செய்க!

நான் இனி பாவச் செயல்களைக் கண்டிப்பேன். இனிச் செய்யமாட்டேன், துணையும் போக மாட்டேன். இறைவா, அருள் செய்க! 


ஜூன் 19


இறைவா, என்னை நான் உள்ளவாறு காண அருள் செய்க!

இறைவா, ஈசா, நின்னடி போற்றி! போற்றி! வினாக்கள், வளர்க்கும் பான்மை உடையன. அறிவைத் தரும் தன்மை உடையன.

ஆனால், என்னுடைய வினாக்கள் என்னை விளக்க முறச் செய்யவில்லை; என் அறிவை வளர்க்கவில்லை. என்னையே வளர்க்கவில்லை. ஆனால், மாறாக மற்றவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கின்றன. இறைவா, இதில் என்ன பயன் ?

சாமர்த்தியங்கள் சாதனைகளாகிவிடா. இறைவா, நானே அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் பலப்பல உள. இறைவா, நான் மற்றவர்களை வினாக்கள் கேட்பதைவிட நான் எனக்கே வினாக்களைக் கேட்டுக் கொள்வது பயன் தரும்.

"நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்?" என்று மாணிக்கவாசகர் தம்மைத் தாமே வினாக்கள் கேட்டுக் கொண்டார். இதனால், "நானும் பொய். என் நெஞ்சும் பொய். என் அன்பும் பொய்” என்று உண்மை நிலை கண்டார், தெளிந்தார், அழுதார். நின்னருள் பெற்றார். இறைவா, அங்ஙனமே நான் என்னைக் காணுதல் வேண்டும். உள்ளவாறு காணுதல் வேண்டும்.

என் உள்ளத்தின் பொய்மைகளைக் களைதல் வேண்டும். ஞானத்தினை அடைதல் வேண்டும். இறைவா, அருள் செய்க! புறத்தே ஓடித் திரியும் என் அறிவு வேட்கையை அகத்தே திருப்பியருள்க! நானே எனக்கு நல்லவனாக வாழ்ந்தால் நல்லது. இறைவா, அருள் செய்க. 


ஜூன் 20


நடுவுரை கூறி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, நாவில் நடுவுரையாய் நின்றருளும் தலைவா! நின் நீதி தழைத்திடுக. போற்றி! போற்றி! இறைவா, மனித உலகம் அன்பு, அறம், நீதி, ஒப்புரவு என்ற நான்கு தடங்கள் அமைந்த அகலவழிப்பாதையில் சென்று கொண்டிருந்தால் ஆபத்தில்லை. மண்ணிலேயே விண்ணகம் ககாணலாம். ஆனால் நடப்பதுதான் இல்லை.

தீமைகளுக்கெல்லாம், தீமை நாவிலிருந்துதான் தோன்றுகிறது. நாவடக்கம் தேவை.

இன்னாதன சொல்லக்கூடாது. புறங்கூறல் ஆகாது. தீக்குறளைச் சென்றோதக்கூடாது. பயனில சொல்லக் கூடாது. பொய்கூறக் கூடாது. நடுவுநிலை பிறழ்ந்து பேசக் கூடாது. இறைவா, நாவிற்கு-நாவினால் சொல்லப்படும் சொற்களுக்கு எவ்வளவு வரையறை! கட்டுப்பாடு.

இறைவா, நான் என் நாவை அடக்கி வாழ்ந்திட அருள் செய்க! ஆய்ந்து ஆய்ந்து சொற்களை அறிந்து கூறும் நற்பழக்கத்தில் என்னை நெறிப்படுத்தியருள்க! நான் நடுவுநிலை பிறழ்ந்து சார்புகள் வயப்பட்டு எதையும் கூறக்கூடாது, பேசக் கூடாது.

நடுவுநிலை!- ஆம், இறைவா, விருப்பு-வெறுப்பு, காய்தல்-உவத்தல் ஆகியனவற்றிற்கு இரையாகாமல் எது வாய்மையோ, எது நன்மையோ அதைச் சொல்லுதல் வேண்டும். இத்தகு நடுவுரைகள் இறைத்தன்மையுடையன. நடுவுரையாகவே இறைவன் நின்றருள் செய்கிறான். இறைவா, நின்றன் திருவுள்ளம் மகிழத்தக்க வகையில் நடுவுரை கூறி வாழ்ந்திட அருள் செய்க! 


ஜூன் 21


நம்பிக்கையே நல்வாழ்க்கை: இறைவா அருள்க!


இறைவா, நம்பியே கைதொழும் எளியேனை ஏற்றருளும் எந்தையே! "நம்பிக்கை" - சொல் எளிதாக இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் கடுமையாக இருக்கிறது.

நம்பிக்கை என்பது எளிதில் தோன்றுவது இல்லை. அப்படியே ஒரோவழி தோன்றினாலும் நிலைத்து நிற்பதில்லை. சிலபொழுது நம்பிக்கையைவிட ஐயப்பட்டு உணர்தலே வாழ்க்கைக்குச் சிறந்த வழி என்றெல்லாம் கருதக் கூடிய சூழ்நிலை தோன்றுகிறது.

நம்பிக்கை கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இங்கும் அங்குமாக நடைபெறும் நம்பிக்கைகள் ஏமாற்றங்களைத் தந்ததன் விளைவாக நம்பிக்கை தோன்றவே மறுக்கிறது.

இறைவா, நம்பிக்கையின்மையினால் வரும் இழப்புகள், துன்பங்களைவிட நம்பிக்கையினால் வரும் இழப்புகள் துன்பங்கள் குறைவு என்றருளிச் செய்கின்றனை, நன்றருளிச் செய்தனை.

இறைவா, நான் நம்பிக்கையை என் வாழ்க்கையின் மையமாகக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நம்பி நடத்தல்-வாழ்தல் என்ற கொள்கை பொருந்தி அமைய அருள் செய்க. என் நம்பிக்கை உள்ளத்தை வலிமைப்படுத்தித் துரோகங்களை எதிர்த்துப் போராடும் உணர்வைக் கொடு.

என் நம்பிக்கை, அறிவறிந்த ஆள்வினை, திறம்பட இயங்கினாலே, என் வாழ்க்கை எளிதாகிவிடும். நான் நம்பிக்கையோடு வாழ்வேன். பிறரும் என்னை நம்பத் தக்க வண்ணம் நடந்து கொள்வேன். நம்பிக்கையே நல் வாழ்க்கை இறைவா, அருள் செய்க! 


ஜூன் 22


சம நிலையில் அமைந்த சமுதாயமே சமுதாயம் -இறைவா அருள் செய்க!


இறைவா, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே! இன்று என் வாழ்க்கை அப்படியில்லையே. இறைவா. வல்லாங்கு வாழ்வார் பக்கமே என் துலாக்கோல் சாய்கிறது. இது வாழ்வாருக்கு மாரடிக்கும் உலகம் இறைவா, உன் திருவுள்ளம்தான் என்ன?

மலை-மடு என்ற வேறுபாடு உன்படைப்பா? அல்லது உன் திருவுள்ளக்குறிப்பறிந்து நான்முகன் செய்த படைப்பா? இறைவா, நீ வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவன்.

நபிகள் நாயகம் அவர்கள் "ஏற்றத்தாழ்வற்ற நடு நிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம்” என்று திருமறையில் அருளியுள்ளார்.

இறைவா, ஏற்றத்தாழ்வு இயற்கையுமன்று. நின் படைப்புமன்று. அது மட்டுமா? "ஆரம்பத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினராக இருந்தனர்” என்றும் திருமறை கூறுகிறது. இறைவா, திருமறை மேலும் கூறுகிறது, "நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவர்களின் பொருள் களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்" - என்று. இறைவா, உன் திருவுள்ளம் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய நிலை.

இறைவா. நான் பிறர் உணவைப் பறிக்காது உழைத்து வாழும் நெறியில் என்னை நெறிப்படுத்தியருள்க! எந்தச் சூழ் நிலையிலும் சமநிலை பேணும் அறிவைத் தா. பொதுமை வேட்டு நிற்கும் வாழ்க்கையை அருள் செய்க!

சமநிலையில் அமைந்த சமுதாயமே சமுதாயம். இறைவா, அருள் செய்க! நான் உழைக்கின்றேன். உழைத்து உண்பேன். சமநிலையே சமயம். இறைவா, அருள் செய்க! 


ஜூன் 23


இடரினும் தளரினும் நின் அருள்மனம் அமையும் வழியில் தொடர்ந்து வருவேன், அருள்க!

இறைவா, தடையிலா ஞானம் தந்தருள் செய்யும் ஞானமுதல்வனே, போற்றி! போற்றி! இறைவா, நான் வாழ ஆசைப்படுகிறேன். நன்றாக வாழ ஆசைப்படுகிறேன். முழுமையாக வாழ ஆசைப்படுகிறேன்!

ஆனால் நான் வாழ ஒரே ஒரு நிபந்தனை. இறைவா, ஏன் சிரிக்கிறாய். என்னைச் சிரித்து மயக்கிப் பயனில்லை! எனக்கு அருள் செய்ய வேண்டும்!

என் வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் வரக்கூடாது. சோதனைகள் வரக்கூடாது. துன்பங்கள், துயரங்கள் தலை காட்டவே கூடாது. இறைவா, என்ன மீண்டும் சிரிக்கிறாய், என்ன சொல்கிறாய்? வேதனை இல்லாமல் மகப்பேறு அடைய வேண்டும். உலைநீர் கொதிக்காமல் பண்டங்கள் வெந்தாக வேண்டும். நிலம் உழுபடாமல் விளைபொருள் தர வேண்டும். என்ன இறைவா, என்னைப் பார்த்து நகைக்கின்றாய்.

இறைவா, என்ன அருளிச் செய்கின்றன. வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் வரும். தடைகள் வருவதே வளர்ச்சிப் போக்குக்கு அடையாளம். சொர்க்கத்தின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் பாதையில் எண்ணற்ற தடைகள் தோன்றும். துன்பங்கள் வரும். துயரங்கள் வரும்.

தடைகளைக் கடந்து பயணத்தை மேற்கொள்ளும் பொழுதுதான் நான் வளர்கின்றேன். இறைவா, நீ அருளிச் செய்வது முற்றிலும் உண்மை. தடையிலாத வழிநடை எங்கும் கொண்டு சேர்க்காது.

இறைவா, அருள் செய்க! இடரினும் தளரினும் உன் அருள் மனம் அமையும் வழியில் தொடர்ந்து வருவேன். வாழ்வேன். இறைவா, அருள் செய்க! 


ஜூன் 24


பணியே, வாழ்க்கைக்கு அணி. அருள் செய்க!

இறைவா, எழுதிக் காட்ட இயலாத அருளே! பொழுது புலர்ந்தது. கதிரொளி படர்கிறது. உலகத்திற்குப் பொழுது விடிந்து விட்டது. ஆனால் எனக்கு இன்னும் விடியவில்லை. இருளே தொடர்கிறது. துன்பங்களில் கிடந்து எய்த்துப் போனேன். இறைவா, இது சமயம், எடுத்தாள்க.

இறைவா, நான் உன் மகவு, உன் அடிமை; இது என்றோ முடிந்த முடிவு. நானோ பிழை செய்கிறேன். என் உடல் பொருள் ஆவி மூன்றையும் உன்னிடத்தே ஒப்புவித்தேன். அன்றே நீ எடுத்துக் கொள்ளவில்லையா?

இறைவா, என்மேற் குறை சொல்வது நியாயமா? இனி என்மீது குறை சொல்ல வேண்டாம். இறைவா என்னை எழுப்பியருள்க! என் சித்தம் தெளிவித்தருள் செய்க! நான் செய்ய வேண்டிய பணிகளை மெல்ல எடுத்துக் கூறிப் பணி கொள்க. நின் பணி பிழைக்கில் என்னைத் தடிந்தும் பணி கொண்டு அருள்பாலித்திடுக.

இறைவா, ஒருமையில் உலகம் இயங்கிடச் செய்ய வேண்டும். எங்கும் சமரசமும்-சமாதான சகழ்வாழ்வுமே நிகழ்ந்திடுதல் வேண்டும். மதம் பிடித்தவர்களின் வாய் கொழுப்புகள் அடங்கவேண்டும். இறைவா, நன்றருளிச் செய்தனை என் தூக்கந் தவிர்ந்தது. என் அறிவு விழிப்புற்றது.

இறைவா, என்னை ஆட்கொண்டருளிய தலைவனே! நான் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்லியருள் செய்க! இறைவா, உறக்கம் தவிர்த்திடுதல் வேண்டும். ஒருமைப்பாடு காண வேண்டும். சாதி சமய ஆசாரங்கள் தவிர்த்திடுதல் வேண்டும். மதமெனும் பேய் பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும்.

இறைவா, என்னைப் பணி கொண்டருளும் தலைவா! நின் பணி ஏற்றேன். செய்வேன். நின் பணி பிழைக்கில் அடித்தும் அருள் செய்க! பணியே வாழ்க்கைக்கு அணி அணியே பணி. 


ஜூன் 25


என் வாழ்க்கையின் சாரமாக அன்பு இருக்க அருள் செய்க!

இறைவா, எனக்கு எய்ப்பினில் வைப்பாக நின்றருளும் நிதியே. நின் திறம் போற்றி! போற்றி!! இறைவா, என் வாழ்க்கை வளமாக அமைய வேண்டும். நான் வேண்டுவ தெல்லாம் கிடைக்க வேண்டும்.

மகிழ்ச்சியாக வாழ்தல் வேண்டும். இன்பமாக வாழ்தல் வேண்டும். புகழுடன் வாழ்தல் வேண்டும். இறைவா, இவ்வளவும் எனக்குத் தேவை. இத்தகு வாழ்க்கையை நான் அடைய பெரிய மூலதனம் தேவை. இறைவா, பொற்கிழி தருகிறாயா?

இறைவா, வாழ்க்கைக்குப் பொருள் நடைமுறை மூலதனமே தவிர, அது முதலீட்டு மூலதனம் அல்ல. எனக்கு முதலீட்டு மூலதனம் தேவை. நடைமுறை மூலதனம் எப்படியும் சம்பாதிக்கலாம். முதலீட்டு மூலதனம் தேவை.

இறைவா, கோடி தொகுத்தவர் கூடத் துய்க்காமல் வாழ்வதைக் காண்கிறோம். எனவே, வாழ்க்கைக்குப் பணம் மூலதனம் அல்ல. இறைவா, அப்படியா! சரியான மூலதனத் தைக்காட்டியருளியுள்ளனை. நான் அன்பாக இருத்தல் என்பதே.

அன்பிற்கு ஈடான மூலதனம் உலகத்தில் இல்லை. இறைவா, இந்த மூலதனம் எனக்குக் கிடைக்குமா? அல்லது வேறுயாராவது எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? அப்படியா! இறைவா, இந்த உலகில் யாரும் இன்னும் மூலதனத்தைக் காணவில்லை, எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை.

இறைவா, உனக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள் கூறி வழிபடுகின்றேன். நான் எல்லாரிடமும் அன்பாக இருப்பதுவே வாழ்க்கையின் மூலதனம். இறைவா, என் வாழ்க்கையின் சாரமாக அன்பு இருக்க அருள் செய்க! 


ஜூன் 26


மாறா அன்பு செய்யும் பண்புள்ளத்தைக் கொடு


இறைவா, என் பிழைகள் பொறுத்தாளும் புண்ணியனே. இறைவா, நான் ஒரு பேதை, அறியாமையே என் உடைமை. நன்றும் தீதும் உணராமல் பிழை செய்கின்றேன்.

இறைவா, நான் ஒரு பேய், பேய், குறிக்கோள் இல்லாதது; குறிக்கோள் இல்லாமலே சுற்றும் தன் கண்ணில் பட்டவர்களைப் பிடித்துக் கொள்ளும்; அவர்களை இடமாகக் கொண்டு ஆடும். நானும் அங்ஙனமே குறிக்கோள் இல்லாது வீணே வாழ்கிறேன். வாழாமல் வாழ்கிறேன். யாதொரு பயனுமின்றி வாளா உழல்கிறேன்.

இறைவா, நான் ஒரு நாய். அதுவும் ஊர் நாய். இல்லை, இல்லை. நாய் என்னிலும் சற்று உயர்ந்தது. சோறு போடுபவனுக்கு நாய் நன்றி காட்டும், வாலாட்டும். நான் அங்ஙனம் இல்லையே! எனக்கேது நன்றி. நல்லவற்றில் மறதி. பொல்லாங்கில் அபார நினைப்பு.

இறைவா, நான் ஒரு பித்தன். என் சித்தம்போக்கு என் போக்கு. நான், ஒருநெறி பற்றுவதில்லை, நிற்பதில்லை. நான் செய்த மோசமான பிழைகள் எவ்வளவு? ஒன்றா? இரண்டா? இல்லை. என் வாழ்க்கை பிழை மலிந்த வாழ்க்கை

என் பிழைகளைக் கண்டு, திருத்தித் தீர்வு கண்டு என்னை ஆட்கொள்வது என்றால் இப்பிறப்பில் ஒன்றும் நடக்காது. இறைவா, ஆதலால் நின் திருவுள்ளம் என் பிழைகளைப் பொறுத்தாட் கொண்டது. இறைவா, நின் கருணைக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள்.

இறைவா, நான் என் வாழ்க்கையில் மற்றவர் செய்யும் பிழைகளை - இழைக்கும் துன்பங்களைப் பொறுத்தாற்றிக் கொள்ளும் பண்பினைக் கற்றுத் தா! என்னைச் சுற்றி வாழ்பவர்களிடம் நான் துன்பம் அனுபவித்தாலும் நான் மாறா அன்பு செய்யும் பண்புள்ளத்தைக் கொடு. இதுவே கருணை, அருள்! இறைவா, அருள் செய்க! 


ஜூன் 27


நான் என் மீது அதிகாரம் செலுத்தி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, அடியார்க்கு எளியன் என்றெழுதிய எளியோய். அப்பெற்றியனாகிய நீ என்னை எளிமையாய் வந்து ஆட்கொண்டனை. ஆயினும் என் செய்ய? நான் மீண்டும் மீண்டும் விளக்கொளியில் வீழும் வீட்டில் பூச்சியாகிக் கொண்டிருக்கிறேன். இதற்கென்ன காரணம்? என் துன்பத்துக்கு நானேதான் காரணம்.

இறைவா, நான் தனிமுடி கவித்து அரசாள விரும்புகிறேன். அதிகாரப்பசி கோரப்பசியாக இருக்கிறது. ஆனால், நான் அதிகாரம் செய்ய இயலுமா? அதிகாரம் சென்றடையுமா? இறைவா, என் அதிகாரம் சென்றடையாது. ஏன்? என் அதிகாரம் செல்லுபடியாக வேண்டுமானால் நான் ஆற்றல்மிக்குடையோனாக இருக்க வேண்டும். என்சக்தி அபரிமிதமாக இருக்க வேண்டும். எனக்கு ஏது ஆற்றல்? சக்தி?

இறைவா, இந்த நாக்கை அடக்கமுடியவில்லையே! சுவைபார்த்து வயிறு புடைக்கத் தின்கிறது. அதன் பயனாக எடை கூடுகிறது. எடை கூடினால் எளிதில் நடமாட முடியாது. சோம்பல் வந்தணையும். சோம்பலின் இணைகளாகிய - பரிவாரங்களாகிய நோய்கள் ஒன்று பலவாக வந்தடையும். இறைவா, இதுதான் என்னுடைய யதார்த்த நிலை!

நான் என் நாவின் மீது அதிகாரம் செலுத்த முடியவில்லை. வயிற்றின் மீது நாவிற்கு இருக்கும் சர்வாதிகாரத்தைத் தடுக்க முடியவில்லை. நொய்ம்மையானேன்! இறைவா, என் பொறிகள் மீது எனக்கு அதிகாரம் இல்லை. அவை என்னை ஆட்டிப் படைக்கின்றன. இறைவா, என்னைக் காப்பாற்று.

இறைவா, நான் ஆற்றலுடையோனாக வளர, வாழ என்மீது எனக்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும். என் பொறிகளின்மீது தனியரசாணை செலுத்தவேண்டும். நான் என் ஆன்மாவின் மீதே அதிகாரம் செலுத்தி வாழக் கற்றுத் தா! இறைவா, அருள் செய்க!


ஜூன் 28


பிறர்க்கென வாழ்தலே பெரிய நோன்பாகும்!

இறைவா, ஏன் எனக்குப் போட்டியாக ஆணவம் இருக்கிறது. அம்மம்ம! இந்த ஆணவம் போடுகிற ஆட்டம் தாங்க முடியவில்லை. கத்திரிக்கோலின் இரட்டைச் சிறகுகள் போன்ற "நான்", "எனது” என்ற இரட்டை உணர்வுகளைக் கொண்டு அது என்னை மயக்கித் தன் வயப்படுத்துவது விந்தை!

"நான்" என்ற சொல் - உணர்வு அழியத்தான் குடும்பம். சுற்றம், சமுதாயம், என்றெல்லாம் அமைந்தன. ஆனால் இந்த அமைப்புகளுக்கு ஆணவத்தைப் போன்ற கவர்ச்சி இல்லை. ஆற்றல் இல்லை.

இறைவா, நான் சாமர்த்திய சாலி தான். அதில் ஒன்றும் குறையில்லை. ஆனால், சாமர்த்தியமெல்லாம் நன்றாற்றுவதில் இல்லை. குடும்பம், சுற்றம், சமூகம், சமுதாயம் எல்லாவற்றையுமே நான் எனக்காக ஆக்கிக் கொண்டு விட்டேன். அவற்றிற்காக நான் அல்லன். இறைவா ஏன் இந்த அவலம்? கடைசியில் என்னாகிறது; ஆணவம், ஆணவத்துடன் மோதுகிறபோது அழிவு வருகிறது.

வேண்டாம், இறைவா, "நான்" வேண்டாம்! "எனது”ம் வேண்டாம். நான் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவே படைக்கப்பட்டேன். என் வாழ்க்கையின் குறிக்கோளே அதுதான். ஏன்? என்னிலும் தாழ்ந்த விலங்குகள் தாவரங்கள் வாழ்க்கை கூட உபயோகப்படும் வகையிலேயே இயங்குகின்றன.

நான் பிற உயிர்களுக்கு உபயோகப்பட வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் ஆணவம் தலைகாட்டாது. அன்புணர்வு வந்தமையும். பின் நீ, என் இதயத்தில் இடம் பிடிப்பாய்!

ஆம், பிறருக்கென வாழும் நோன்பே, நோன்பு இந்த நோன்பினை நோற்றால் எளிதில் உன்னை அடையலாம். இறைவா, இனி என் வாழ்வின் குறிக்கோளே இது தான். நீயும் வாழ்த்து! 


ஜூன் 29


வழி நடைப் பயணம் முழுதும் என்னுடன் வருக, இறைவா!

என்றன் உயிரில் இடம் கொண்ட இறைவா. ஏன் எனக்கு இந்த மயக்கம், கவலை, சொல்? இன்று எனக்கு விடை தெரிந்தாக வேண்டும். இறைவா, என்ன சொல்லுகிறாய்? ஆம், அது உண்மைதான். எத்தனை கோடி இன்பங்கள் வைத்திருக்கிறாய்.

ஆனால், இறைவா, என்மீது சினம் கொள்ளாது கேட்கத் திருவுள்ளம் பற்றுக! பாலுக்குக் காவலாகப் பூனையை வைக்கலாமா? உன்மீதும் குறையில்லை. என்மீதும் குறையில்லை. ஆனால் பொறிகள்-புலன்கள் படுத்தும்பாடு அதிகம். தாங்க முடியவில்லை. ஆம் இறைவா, எந்த ஒன்றையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை.

எதையும் முறையாகப் பயன்படுத்தினால் அது நல்ல வண்ணம் பயன்படும். ஆனால் என் நிலை என்ன? பொறிகள் என்மீது மேலாண்மை கொள்ளத்தக்க வகையில் எளியனாகி விட்டேன். நொய்ம்மை அடைந்து விட்டேன்.

பொறிகளின்மீது தனியரசாணை செலுத்த முயன்றேன். இல்லை. ஏன் தனியரசு செலுத்தவில்லை? நான் ஆசைகளுக்கு ஆட்பட்டு, ஆளுமையை இழந்து அல்லற்படுகிறேன்.

இறைவா, ஆசைகளினின்று விடுதலை பெற அருள் செய். இறைவா, ஆசைகளை அறுக்க வேண்டாம் என்றா சொல்கிறாய்? அப்படியா? இறைவா, ஆசைகளின் நோக்கத்தை மாற்றச் சொல்கிறாய். அவ்வளவு தானே? இன்று முதல் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

இறைவா, எனது ஆசைகள் என்னை நோக்கியனவாக இருக்காது. என்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றியதாக இருக்கும். இது உறுதி! வாழ்த்தியருள்க! வழி நடைப்பயணம் முழுதும் என்னுடன் வருக! 


ஜூன் 30


உழைப்பாளியாக்கி என் வாழ்நாளை ஓங்கிவளரச் செய்க!


இறைவா, கால காலனே, நீ, காலங்கடந்தவன் என்கிறார்களே. உண்மையா இறைவா? நீ, காலங்கடந்தவன் என்றால் காலம் கடத்தும் பழக்கம் உனக்கும் உண்டா? இல்லை. இல்லை! நீ ஒருபோதும் காலம் கடத்துதல் இல்லை. காலதாமதம் செய்வதில்லை.

ஆனால் இறைவா, நீ காலங்கடந்தவன். நீ சாவதில்லை. கால எல்லைகளைக் கடந்தும் வாழ்கிறாய். ஏன் இறைவா, உனக்கு மட்டும் இந்தப் பேறு! நானும் உன்னைப்போல் காலங்கடந்து வாழக்கூடாதா? இறைவா வாழலாம் என்று அருள் செய்கிறாயா? மிக்க மகிழ்ச்சி.

தகுதியுடையனவெல்லாம் வாழும் என்ற ஆப்த மொழி நினைவிற்கு வருகிறது. ஆம், இறைவா, தகுதியுடையன வெல்லாம் வாழும், இன்பத்துடன் வாழும், பெருமையுடன் வாழும், காலங்கடந்தும் வாழும்.

ஆனால், இறைவா, காலங்கடந்து வாழும் உன் தகுதி எங்கே? நான் எங்கே? இறைவா நீ உழைப்பாளி. ஓயாது உறங்காது உழைக்கும் உழைப்பாளி! ஐந்தொழிலை இடைவிடாது இயற்றுகின்றாய்! இயற்கையை ஓயாது இயக்குகின்றாய். ஒழுங்கின்மையும், முறை பிறழ்வும் இல்லாது இயக்குகிறாய். நீ உழைப்பில் மட்டுமா உயர்ந்தவன்? நீ ஒரு பெருந்தகையாளன்.

நானும் தான் உழைக்கிறேன். உழைப்பது போலப் பாவனை செய்கிறேன். ஆத்திரமும் ஆவேசமும் என்னை ஆட் கொண்டுள்ளன. நான் சுயநலவாதி! நான் எப்படி வாழத் தகுதியுடையவனாவேன்? இயற்கைக்கு முரணாக, வாய்ப்பையும் இழந்து வறுமைக்குப் பற்றுக் கோடாக நோய்களுக்குக் கொள்கலனாக வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

இறைவா, உன் அடிமையை மன்னித்து அருள்க! வாழ் வாங்கு வாழ அருள் செய்க! முதலில் உழைப்பாளியாக்குக.