குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/சமய மறுமலர்ச்சி


2. சமய மறுமலர்ச்சி


இன்றைய நமது சமயநிலை


நமது சமயம் சிவநெறி, திருமால் நெறி, திருமுருகன் நெறி என்றிவ்வாறு அறுவகைச் சமயநெறிகளாயிற்று. ஆயினும் இந்த அறுவகைச் சமயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் மிகக் குறைவு. சிவநெறி, திருமால்நெறி இவற்றினிடையே தத்துவங்களின் வழியிலும் இறைநிலையிலும் வேறுபாடுகள் உண்டு. ஆயினும் இன்று வைணவ சமயத் தலைவர்கள் காட்டும் அளவு, சைவ-வைணவத்துக்கிடையே வேறுபாடுகளில்லை. வைணவர்கள், அவர்களின் நெறியில் தோன்றிய வடகலை, தென்கலை வேறுபாட்டைக் கூடப் பெரிதுபடுத்தி வருகின்றனர். உண்மையிற் சொன்னால் அவர்கள் வைணவத்துக்குச் செய்யும் பணியை விட வேற்றுமைகளுக்கே அதிகப்பணி செய்து வருகின்றனர். இல்லையானால், இந்த இருபதாம் நூற்றாண்டில் “யானைக்கு எந்த நாமம் போடுவது” என்று வழக்கு மன்றம் ஏறுவார்களா? நினைத்தாலே நெஞ்சைச் சுடும் செய்தி.

சிவநெறிக்கும் மற்ற சமயங்களுக்குமிடையே உள்ள வேறுபாடு, வழிபடு கடவுளின்வழி அமைவதேயாம். இடையில் புறச் சமய நெருக்கடிகளிலிருந்து நமது சமுதாயத்தைக் காப்பாற்ற நினைத்தபோது, இந்த அறுவகைச் சமயங்களையும் இணைத்து ஒரு சமயமாக்கினர். அதனால்தான் நம் சமயத்தில் பல மூர்த்திகளை வழிபடும் நிலை உருவாயிற்று. அதனால் சிலர், பல கடவுள்கள் நம் சமயத்தில் இருப்பதைக் குறைவாக நினைக்கின்றனர். அது தவறு. கடவுள் ஒருவர்தான்; அவரைக் கண்டவர்கள் பல வகையினர். அதனால் அவரவர்தம் அனுபவத்தின் வழி பெயர்கள் மாறுபட்டன; அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டவழி அனைத்து மூர்த்திகளும் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. ஆனாலும் வழிபடுவோர் ஒரு கடவுளை வழிபட வேண்டு மென்பதுதான் நெறி. நமது தொன்மைக் காலச் சமயநெறி, சிவநெறியே! இந்தியத் துணைக் கண்டம் முழுவதும், மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வளர்ந்த நெறி சிவநெறி.

இந்து என்னும் பெயர்

நமது சமயம் சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்து சமயம் என்று பெயர் பெற்றது. இந்து சமயம் என்ற பெயரமைப்பு இன்று விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்து சமயம் என்றால் அஃதொரு பச்சைப் பார்ப்பனீயம் என்ற கருத்து வளர்ந்திருக்கிறது. அதிலும் உண்மையில்லாமற் போகவில்லை. ஆனால், களர் என்பதற்காகக் கழனியை விடுவார் யார்? களர் நீக்கப்படுதல் வேண்டும் என்பதே உண்மை. அதுபோல மனித குலத்துக்கு வேண்டாதனவற்றை விலக்கி, நாம் இந்து சமயம் என்ற பெயரை அதன் பொதுத் தன்மையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏன்? இமயத்தின் முடியிலிருந்து குமரிமுனை வரை நமது மக்கள் வழிபடும் கடவுளின் பெயர்கள் மாறுபடவில்லை; வடிவங்கள் மாறுபடவில்லை, சமயச் சின்னங்கள் மாறுபடவில்லை. இந்த அளவு பரந்து வளர்ந்துள்ள ஒருமைப்பாட்டை இழத்தல் கூடாது.

இந்து சமயம் என்ற பெயரில் பல கடவுள்களை வழிபடும் வழக்கம் வராமல் பாதுகாப்பது அவசியம். சிறு தெய்வ வழிபாட்டை அறவே விலக்கல் வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் தொழில் முறை கால்கொண்டவுடன் அருச்சகர்கள் தமது போட்டா போட்டிகளைக் கடவுள்களின் போட்டிகளாக்கி விட்டனர். அதன் காரணமாக “இந்தக் கடவுளை வழிபட்டால், அது கிடைக்கும்; இது கிடைக்கும்” என்ற பிரசாரங்கள்-விளம்பரங்கள் பெருகின, ஏன் ? புராணங்களே கூடத்தோன்றின. கடவுள் வழிபாட்டில் ஈடுபடுகின்றவர்கள் பல நலன்களை அடைகின்றனர் என்பது உண்மை. ஆயினும், அதனைக் காரணமாகக் கொண்டு வழிபாட்டை வணிக முறையாக்கக் கூடாது. இந்த மனப்போக்கு, சமயநெறியின் விழுமிய குறிக்கோளாகிய நிறைநலத்தைப்பெறத் துணை செய்யாது. கடவுளின் கருணை, காரணங்களாக அமையுமே தவிரக் காரியங்களாக அமையாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஆதலால் மக்களின் இச்சைகளை-ஆசைகளைத் தூண்டி அவ்வழி நிகழ்த்தும் வழிபாடுகள் நெறியுடையனவல்ல; முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை; வெறுக்கத்தக்கவை. எந்த ஒரு தத்துவத்தில் - மூர்த்தியிடத்தில் நமக்கு ஈடுபாடு தோன்றுகிறதோ அந்த மூர்த்தியையே உயிர்க்கு நாயகனாகக் கொண்டு, நினைந்து நினைந்து, உள்ளக்கிழியில் உருவெழுதி, உணர்ந்து உணர்ந்து வழிபடுதல் வேண்டும். அப்போதுதான் வழிபாட்டின் பயனாகிய இன்ப அன்பு நிலையை எய்த முடியும்.

உயிர் - பெயர் விளக்கம்

மனிதன் ஒரு விந்தையான பிறவி, மானுடப் பிறப்பு உரிமைகளின் களம்: அனுபவங்களின் மையம், நெடிய வரலாற்றுக்கு மின்விசை. இந்த விந்தையான மானுடச் சாதி இல்லாது போனால், இயற்கைக்குப் பொருளேது? கடவுளுக்குத்தான் வழிபாடு ஏது?

உயிர், நுண் பொருள்; உருவமில்லாதது; அறிவு உருவானது; (அறிவில்) வளரும் தன்மையது; சார்ந்ததன் வண்ணமாவது. அனுபவம் அதன் பிறப்புரிமை! இத்தனை மாட்சிமையுடைய உயிரின் அறிவு எல்லைக்குட்பட்டதே! அதன் ஆற்றலும் எல்லைக்குட்பட்டதே! எல்லை, சிறுமையின் சின்னம் தானே! எல்லை கடந்தது தானே பெருமைக்குரியது! அதனால், அறிவிலும் ஆற்றலிலும் எல்லைக்குட்பட்டு, அனுபவம் முழுமையுறாமல் அல்லற்படும் ஆருயிர்க்குத் துணையாய் அமையத்தக்கது பேரறிவே! பேராற்றலே! எல்லைகளைக் கடந்த ஒன்றே! சுருங்கக் கூறின் உயிர், அறிவு விளக்கத்தைப் பெறுவதற்குரியதே யானாலும், அறியாமையைச் சார்ந்திருக்கிறது. அஃது ஆற்றல் மிக்குடையதானாலும், அந்த ஆற்றல் முடக்கப்பட்டு, ஆற்றல் உண்டோ இல்லையோ என்ற நிலையில் அவலத்தில் ஆழ்ந்துள்ளது. இன்பத் துய்ப்பிற்குரிய உயிர், நெறிமுறைப் பிறழ்வின் காரணமாகத் துன்பத்தில் துயருறுகிறது. உயிர், உய்தலுக்குரியது; உய்தி பெறும் தன்மையது. அது உய்தி பெறவேண்டும். உய்தலே உயிரின் உயரிய குறிக்கோள்.

சமய நெறி

உயிர்கள் உய்தி பெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் சாலையே வாழ்க்கை உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. உயிர்கள் உய்யும் நெறியில் தலைப்படின் சிந்தையில் தெளிவு, அறிவில் ஆக்கம், ஆற்றலின் கொள்கலம், அயரா அன்பு, எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய வழிப்பட்ட சமுதாயம், களவு-காவல், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், உடையார்-இல்லாதார் என்ற அமைப்பு சமயநெறி சாராதார் அமைப்பு. ஆனால், இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி நிறுவனங்களாகி அதுவே களவுக்கும்-காவலுக்கும் ஆளாகி, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும், இல்லாரை எள்ளி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம், பிரானாட்டம் ஆக முடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமய நெறி.

இறை வழிபாடு

உயிர், உய்தற்குக் கடவுளை நாடுகிறது. இங்கு உயிரும் உருவமற்றது; உயிர் அடையத் துடிக்கும் ஒரு பெருங் கடவுளும் உருவமற்றதே! இங்குக் கலத்தல் உருவங்கள் அல்ல; உணர்வுகளேயாம். உயிர், உணர்வினால் அவாவி, அவாவி, பேரறிவாகவும் பேராற்றலாகவும் விளங்கும் இறையினை நினைத்தல் மூலம், அந்த அறிவையும் ஆற்றலையும் தன்பால் ஈர்த்துத் தன்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் சாதனையே வழிபாடு. இஃதோர் அறிவுப் பயிற்தி!! உணர்வுப் பழக்கம்! இஃது எளிதில் கைவருவதன்று; அரிதில் முயன்று அடையக்கூடிய சாதனை. பன்னாள் அரன்தனை அர்ச்சிக்கில் சற்றே மெய்ஞ்ஞானம் மிகும். உணர்வுப் பயிற்சி எளிதில் அமையாத தொன்று. அதனால், உணர்வுப் பயிற்சியினை நோக்கமாகக் கொண்டு தொடக்க நிலையில் உருவப் பயிற்சி வழங்கப் பெறுகிறது.

உருவமற்ற ஒன்று, அனுபவத்தைப் பெறவேண்டு மானாலும், அனுபவத்தைத் தரவேண்டுமானாலும் உருவம் பெறுதலைத் தவிர வேறுவழியில்லை. காதல், உருவமற்றது. ஆனால் உருவமைதியில் காதல் நிகழும் பொழுதுதான் இன்பம் கிடைக்கிறது. இதனால் காதலுக்கு உருவமில்லை என்பதும், காதலிப்பவர்க்கு உருவம் வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன. அதனாலன்றோ வள்ளுவம், காதலர் இருவர் பிணைப்பிற்கு உடம்பு-உயிர்ப் பிணைப்பை உவமை ஆக்கிற்று!... உடல் இன்றேல் உயிர்க்கும் துய்ப்பில்லை; உயிர் இன்றேல் உடலுக்கும் துய்ப்பில்லை என்பது தானே பொருள். உருவ வழிபாட்டுக்கு இஃதொரு தத்துவம். உயிர், உருவ அமைதியுடைய உடலினைப் பெற்றே துய்ப்பினைப் பெறுகிறது. அஃது உருவத்தை இழக்குமானால் துய்ப்பில்லை. அதுபோலவே கடவுளும். அருவப் பொருள் உயிர்களின் துய்ப்பிற்குத் துணையாயிருக்கும் பொழுது உருவம் பெறுகிறது. விஞ்ஞான அடிப்படையில்கூட ஒலியலை உருவமில்லாதது. அந்த ஒலியலை வானொலி உருவ வடிவத்தின் வழி இயங்கும்பொழுது செவிப்புலன் அனுபவத்திற்கு வருகிறது. மின்னாற்றலும் அப்படியே! ஆக, உய்தி பெற வேண்டிய உயிர், மானுட வடிவத்திலும் உய்திக்குத் துணை நிற்கும் வழிபாட்டுக்குரிய திருமேனி வடிவத்திலும் கொண்ட உறவே திருக்கோயில் வழிபாடாக மலர்ந்தது. திருக்கோயில் வழிபாடு, மனிதன் கடவுளைத் தோழமை கொள்ளும் களமாகவே அமைந்தது.

வழிபாடு - விளக்கம்

வழிபாடு என்பது, ஓர் உயிர், தன் உயர்வுக்காகத் தானே செய்யும் ஒருவகை அறிவுப் பயிற்சி உணர்வுப் பயிற்சி. ஒருவர் அறிவுபெறப் பிறிதொருவர் படிக்க முடியாது. ஒருவர் பசிக்காகப் பிறிதொருவர் உண்ண முடியாது. ஆனால் விந்தை! இன்று மக்களுக்காகச் சிலர் வழிபாடு செய்கிறார்களாம். இஃது எங்கனம் சாத்தியம்: தண்ணீரைக் குடித்துச் செரித்த விதையால்தான் முளைக்க முடியுமே தவிர, அண்டாவில் தண்ணி இருப்பதினால் பக்கத்தில் உள்ள விதை முளைத்துவிடாது. தண்ணீரைக் குடிக்கும் இயல்பில்லாத விதை தண்ணில் கிடந்தாலும் முளைக்காது. “ஆண்டாண்டு அழுதாலும் அவளே பெறவேண்டும்” என்ற பழமொழி போல, ஒவ்வோருயிரும் தத்தம் உய்திக்குத் தாமே அழுது வழிபாடாற்ற வேண்டும். இதுவே, சமயத் தத்துவத்தின் அடிப்படை, கடவுள் வழிபாட்டின் நோக்கம்.

வழிபாட்டு வரலாறு

பழங்காலத்தில் உய்யுமாறறிந்த அனைவரும், அவரவர்களே வழிபாடு ஆற்றியிருக்கின்றனர். ஒருவருக்காக இன்னொருவர் வழிபாடு செய்யும் வழக்கம் பழங்காலத்தில் இருந்ததில்லை. அதனால்தான் எளிதில் எல்லோரும் வழிபடத் தக்கவாறு மணலில், சாணத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தும் வழக்கம் இருந்திருக்கிறது. சண்டீசர் மணலில்தானே திருமேனி செய்து வழிபட்டார்! காலம் செல்லச் செல்ல, காலத்தில் கரையாதவாறு நிலையான திருமேனிகள் அமைத்து வழிபாடு செய்யும் உணர்வு மேலிடக் கற்களால் ஆன திருமேனிகள் தோன்றின. வழிபாட்டில் ஆர்வம் பெருகப் பெருகத் தாம் வழிபடும் திருமேனிக்குத் திருக்கோயில் அமைக்கும் ஆர்வம் மக்கள் மன்றத்தில் வளர்ந்தது. மக்கள் மன்றத்தின் ஆர்வத்தை அறிந்த தமிழக மன்னர்கள் திருக்கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். திருக்கோயில்கள் தோன்றிய பிறகும் கூட மக்கள் தாமே சென்று இறைவனுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து வந்தனர்.

இங்ஙனம், பக்தி நெறியில் வளர்ந்த சமயம், பாதுகாப்பு என்ற பெயரில் தத்துவ, சாத்திரச் சூழலுக்குள் அடி வைத்தது. ஆகமங்கள் தோன்றுகின்றன. அன்பிற்குத் தடை விதித்து அறிவுக்கும் ஆட்சிக்கும் வழி வகுக்கப்படுகிறது; பொதுமை மறைகிறது! திருக்கோயில் வழிபாட்டை என்றென்றும் செய்வோரென்று தம் குடியில் மூத்தோர் சிலரை நியமிக்கின்றனர். அவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக் குடியினராயினர்; கடவுளுக்கு உரிமைச் சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர்; உடையோரை உவந்து வாழ்த்தி மடி நிறையப் பெற்றனர். இது கோயில் முறை தெரிக்கும் வரலாறு!

திருக்கோயில்கள் தோன்றிய காலக்கட்டத்தில் கூட - ஏன்? அவை தோன்றிப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூடத் தாமே பூவும் புனலும் சொரிந்து வழிபடும் உரிமை மக்களுக்கு இருந்தது. அதனாலன்றோ, தமிழகத் திருத்தல வரலாறுகள் அனைத்தும் வாலி பூசித்தது, தருமன் பூசித்தது, இராமன் பூசித்தது, இராவணன் பூசித்தது, நளன் பூசித்தது, என்றும் - இவை மட்டுந்தானா? யானை பூசித்தது, குரங்கு பூசித்தது, எறும்பு பூசித்தது. நண்டு பூசித்தது என்றெல்லாம் கூட் திருக்கோயிற் புராணங்கள் உள்ளன. இதுவே, பண்டைய திருக்கோயில்களின் நிலை.

இடைக் காலத்தில் திருக்கோயிலைத் தொழிற் கூடமாக்க நினைத்தவர்கள், மற்றவர்கள் வழிபடும் உரிமையை மறுத்தனர். அதற்குப் “பரார்த்த பூசை” என்று ஒரு பெயரைச் சூட்டினர். பெயர், நல்ல பெயர்தான்! ஆனால் வைதிகர்கள் அதற்குச் சொல்லும் பொருள்தான் பொருத்தமாக இல்லை. பரார்த்தம் என்னும் சொல்லுக்குப் பொருள், மற்றவர்களுக்காகச் செய்வது என்பதுதான். அதாவது, நாள்தோறும் ஒரு சின்னத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யும் பயிற்சி அல்லது செயல்முறை. இது எளிதன்று. அதன் காரணமாகப் பலர் வந்து வழிபட்டுப் பயன்பெறத்தக்க வகையில் ஒருவர் ஒரு திருமேனியில் இறைவனை எழுந்தருள்வித்து, மற்றவர்கள் வழிபாடு செய்து கொள்ளத் தருதல் என்பதே பரார்த்த பூசை என்பதன் பொருள். ஆனால் நம்மில், மூத்த குடியினராய் அமர்த்தப் பட்டவர்கள் நம்மில் உயர்ந்தோராகி என்றென்றும் திருக்கோயிலில் நிலையான உரிமை பெறவும், பெரும்பான்மையான சமூகத்தாரை விலக்கி வைக்கவும் ஆசாரம், ஆகமம் என்ற பெயரால் தடை விதித்தனர். அதனாலேயே நமது நாட்டில் சமயம் அனுபவத்திற்கு வராது போயிற்று.

வழிபாட்டின் பழைய முறை

நமது முன்னோர்கள் திருக்கோவிலுக்குச் சென்று பூவும் புனலுமிட்டு வழிபட்டனர் என்பதற்கு முன்னர் எடுத்துக் காட்டிய தல புராணங்கள் சான்று கூறும். நமது திருமுறைகள் தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம், மக்கள் தாமே வழிபாடு செய்து கொண்டனர் என்றே பேசுகின்றன.

திருஞான சம்பந்தர் வேத நெறி தழைத்தோங்கத் தோன்றியவர்: சைவ நெறி விளங்கத் தோன்றிய ஞாயிறு. அவர் பாடிய திரு இராமேச்சுரத் திருப்பதிகத்தில்,

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை விடுமே[1]

என்ற திருப்பாடலில் வில்லினைத் தாங்கிய அரச (க்ஷத்திரிய) மரபைச் சார்ந்த இராமன் பூசித்த வரலாறு கூறப்படுகிறது.

அப்பரடிகள் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் பக்தர்கள் வழிபாட்டுக்காகப் பூவும், நீரும் சுமந்துகொண்டு ஒழுங்கு வரிசையில் நிற்பதையும், தாம் அவர்கள் பின்னே நிற்பதையும் குறிப்பிடுகின்றார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்[2]

என்பது அவர் திருப்பாடல்.

திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெண் நாள் தோறும் மலர் சாத்தி வழிபட்டதாக வரலாறு இருக்கிறது.

சேக்கிழாரின் பெரிய புராணத்தில், கண்ணப்ப நாயனார் வரலாறு குறிப்பிடத்தக்கது. அநேகமாகக் கண்ணப்பநாயனாரின் வரலாற்றுக் காலம், திருக்கோயில்கள் தோன்றி நாட்பூசனைக்காக ஆசாரியர்கள் நியமிக்கப் பெற்றிருந்தும் பொதுமக்கள் வந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்த காலமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்கோயிலில் நாட்பூசனைக்காக நியமிக்கப்பெற்ற சிவகோசரியாரும் முறையே ஆகம வழியில் பூசிப்பவர் என்பதைச் சேக்கிழார்,

எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்[3]

என்றும்,

சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு[4]

என்றும் கூறுவதால் அறியக்கிடக்கிறது. இதே திருக்கோயிலில் கண்ணப்ப நாயனார் பத்திமை நெறியில் அன்பு மேலிடத் தாமே வழிபாடு செய்கிறார். ஆகத் தாமே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருந்தமை பெறப்படுகிறது. சிவகோசரி யாருக்கு எழுந்த ஐயம் கூட யார் பூசித்தார்? என்பது அல்ல; கண்ணப்பர் பூசனையில் புலால் சிந்திக் கிடந்தமையால் “நெறியல்லா நெறியில் (சிவகோசரியார் பார்வையில்) பூசனை செய்தது யார்? என்பதே சிவகோசரியாருக்கு இறைவனே பதில் சொல்லித் தேற்றிக் கண்ணப்பர் பூசனையே தனக்கு உவப்பாக இருந்தது என்பதனை,

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
அவனுடைய நிலை இவ்வா றறிநீ[5]

என்று அருள் செய்து விளக்கியுள்ளார். ஆதலால், திருக்கோயிலில் உள்ள இறைவனை எல்லோரும் சென்று வழிபடுவது தான் சிறந்த சமயநெறி. அதன் மூலம்தான் உயிர்கள் இன்ப அன்பினையும் ஞான அனுபவத்தினையும் பெறமுடியும். அருச்சகர்கள் நாள்தோறும் இறைவன் திருமேனியைப் பூசனைக்குரியவாறு அமைத்து வைப்பார்கள். இஃது, இந்த நூற்றாண்டின் புரட்சியுமல்ல; புதுமையுமல்ல.

திருக்கோயில் நாட்பூசை வரலாறு

திருக்கோயில் நாட்பூசனைக்கு நியமிக்கப் பெற்றவர்கள் ஆதியிற்பெற்ற பெயர் சிவாசாரியார் என்பதே உலகியற் கல்விக்குரியவர் ஆசிரியர். ஆசாரியர் என்ற சொல்லுக்குப் பொருள் ஆசிரியர் என்பது. ஆசாரியர் வழிபாட்டு முறையைக் கற்றுத் தருபவரே தவிர, வழிபாட்டைத் தாமே செய்பவரல்லர். இந்த நிலையிலிருந்து உயர்மனப்பான்மையிலும், தொழிலடிப்படையிலும், இலாப நோக்கிலும் சிவாசாரியார்கள் நிலை திரிந்த பிறகு அருச்சகர்கள் ஆயினர். அருச்சனை என்பதே அப்பொழுதுதான் தோன்றுகிறது. அதாவது ஒருவருக்காகப் பிறரொருவர் கூலி பெற்றுக் கொண்டு வழிபாடு செய்யும் முறை உலகியற் பொருளாதாரத்திலேயே இலாப நோக்கம் தவறு என்று விமர்சிக்கப்படும் காலம் இது. இந்த இலாப நோக்கம் முறுகி வளரவளரத் திருக்கோயிலில் உள்ள இறைவனைக் காண்பதற்கும் வழிபடுவதற்கும்கூடக் கட்டணங்கள் வசூலிக்கும் நிறுவனங்களாகத் திருக்கோயில்கள் உருமாறி விட்டன. உலகம் துய்த்து மகிழ ஆண்டியாக நிற்கும் பழனி ஆண்டவனைக்கூட ரூ. 50/ கொடுக்கும் வசதியுடையோர் மட்டுமே அவன் அருகில் நின்று உபசரணையோடு வழிபடலாம். அதனைத் தர இயலாத ஏழை, எட்ட நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. இங்ஙனம், சிவாசாரியார்கள் பெருவாரியான மக்களை ஒதுக்கித் தொழில் மயப்படுத்த முனைந்ததில் அவர்கள் அடைந்தது உயர்சாதி என்ற இலாபமே. பிறிதொரு முனையில் குருக்களுக்கு நிறைய இலாபம் வருகிறது என்று தெரிந்தவுடன் இலாப நோக்குடைய பலர், அதில் ஈடுபடத் தொடங்கித் திருக்கோயில் ஆட்சிப் பொறுப்பையடைந்து, இன்று அவர்கள் சிவாசாரியர்களைப் பணியாளர்களாக்கி மேலாதிக்கம் செய்கின்றனர். “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதற்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. சிவாசாரியார்கள் தம் மரபிற்கேற்பப் பழுத்த மனத்து அடியாராகப் பற்றற்றுத் தம்மை நாடி வரும் சீடர்களுக்கு - பக்தர்களுக்கு இறைவனைக் கண்டு காட்டி வழிபாடு செய்து கொள்ளக் கற்றுத்தந்து, அவர்களுடைய அரவணைப்பில் வாழ்ந்திருப்பார்களானால், திருக்கோயில்கள் தூய்மையாக விளங்கியிருக்கும். திருக்கோயில்கள் அன்பின் களனாகவும், அருளின் பெட்டகமாகவும் விளங்கியிருக்கும். இன்றைய நிலையில் திருக்கோயில் காவலையே நம்பிக் கிடக்கிறது. பொதுமக்கள் வழக்கத்தின் காரணமாகவும், மன அமைதிக்காகவும் வழிபாட்டுக்கு வருகிறார்கள்; ஏதோ செய்து கொண்டு போகிறார்கள். ஆனால், ஞானானுபவம் அவர்களுக்குச் சித்திக்கவில்லை. பழுத்த அனுபவத்தில் தோன்றிய வழிபாடு, இன்று முதிராப் பிள்ளைகளின் சிறு விளையாட்டுப் போல் அமைந்துவிட்ட கொடுமையை நினைந்து உட்கி வெட்கமுறாதார் நெஞ்சம் என்ன நெஞ்சம்?

ஏன்? நால்வர்களும், ஆழ்வார்களும் அவதரிக்காத வடபுலத்தில் இன்றும் பொது மக்களுக்கு வழிபாட்டுரிமை இருக்கிறது. காசித்திருக்கோயிலுக்குள் பக்தர்கள் சென்று, அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கங்கை நீர் கொண்டு திருமுழுக்குச் செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். இங்ஙனம் நிகழ்வதால் எந்தப் பண்டாவும் அங்குத் தம் வழிவழி உரிமையை இழக்கவில்லை. சாதி வேற்றுமைகளை எதிர்த்துப் போராடி ஒரு குலம் அமைக்க முயன்ற ஞானிகள் தோன்றிய மண்ணில் பக்தர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமையை மறுப்பது நியாயமும் அன்று; நெறியுமன்று முறையுமன்று.

எல்லோரும் வழிபடுவோம்

எல்லோருக்கும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபாடு செய்யும் உரிமை வேண்டுமென்பதால் ஏதோ தான்தோன்றித்தனமாகத் திருக்கோயிலைத் திறந்து விடுதல் என்பது பொருளன்று. எத்தகைய உரிமையையும் சில கடமைகள் வழியே தான் பெற முடியும். பிறப்பின் காரணமாகத் தடையிருக்கக் கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, சீலத்தின்வழி தடையிருக்கக் கூடாது என்பதன்று. கொள்கைகளைக் கோட்பாடுகளின் வழிதான் அடையலாம். கோட்பாடுகள் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து இயங்கும் பொழுதுதான் நன்மை தரும். ஆதலால் திருக்கோயில் கருவறைக்குள் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் திருமேனிக்கு மலரிட்டு வழிபாடு செய்யும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் அடியிற்கண்ட ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

1. தகுதியுடையாரிடத்துத் திருவாளன் திருநீறு பெற்றுத் திருமுறைவழிச் சமயச் சார்பினராய் இருத்தல் வேண்டும்.
2. திருக்கோயில் வழிபாட்டுரிமையுடையவர் என்ற உரிமையைப்பெற அவர்கள் வாழும் ஊரிலுள்ள திருக்கோயிலில் ரூ. 5/- செலுத்தித் தம்மைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
3. ஆசாரியர்களின் வழிநடத்தலின் பேரில் பக்தர்கள் மலரிட்டு வழிபாடு செய்து கொள்ளவேண்டும்.
4. கருவறைக்குள் செல்வோர் உடலாலும் உயிராலும் உணர்வாலும் சமயக்கோலம் கொள்ளுதல் வேண்டும்.

ஆக, நமது சமூகத்தில் மிக அகலமாக விரிந்திருக்கும் சாதி வேற்றுமைகளை அகற்றவும், எல்லோரும் பத்திமை உணர்வில் பழுத்து ஞானானுபவத்தைப் பெறவும், திருக்கோயில் கருவறைக்குட் சென்று, எம்பெருமானுக்குப் பூவும் புனலுமிட்டு வழிபாடு செய்யவும் உரிமை பக்தர்களுக்கு வேண்டும். இந்த உரிமை நமது பிறப்புரிமை. திருமுறைகள் உணர்வூட்டிப் பாதுகாத்துத்தந்த உரிமையாகும். இந்த முறை செயற்படும் பொழுது நமது சமயமும் ஒழுங்குபடுத்தப் பெறும்.

எது அருச்சனை?

சமயச் சீர்திருத்தங்களுள் ஒன்று தாய்மொழியில் அருச்சனை என்பது. பொதுவாக அருச்சனை முறையே, ஒருவருக்காக மற்றொருவர் செய்யும் முறை தோன்றிய பொழுது செல்வாக்குப் பெற்ற ஒன்று. அஃது அவ்வளவு சிறப்புடையதன்று. இறைவனை மலரிட்டுப் போற்றித் துதித்து வழிபடுதல்தான் நம்முடைய வழிபாட்டு முறை. தேவாரத் திருமுறைகளில் தற்கால அருச்சனை முறை இருந்ததில்லை. சங்ககால இலக்கியங்களிலும் இல்லை. அருச்சனை என்ற சொல்லும் வடமொழிச் சொல்லே. சேக்கிழார் அர்ச்சனை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். ஆனால் அவர் குறிப்பிடுவது இன்றுள்ள அருச்சனை முறையையன்று. “அருச்சனை பாட்டேயாகும்” என்பது சேக்கிழார் வாக்கு. “பாட்டேயாகும்” என்ற சொல்லில் உள்ள தேற்றேகாரம் எண்ணத்தக்கது. சுந்தரர் காலத்தில் இன்றுள்ள அருச்சனை முறை பெருவழக்காக வந்திருக்க வேண்டும். இது அருச்சனை முறையன்று. நீ பாடிப் பரவுதலே அருச்சனையென்று பெருமான் சுந்தரருக்கு ஆணையிடுகின்றார்.

அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக............. [6]

என்பதுதான் தூமறை பாடும் வாயனாகிய பெருமானின் கட்டளை. ஆதலால் தேவாரத் திருமுறைகளைப் பாடித் துதித்தல் சிறந்த வழிபாட்டுமுறை. ஆயினும் இன்று கால் கொண்டுள்ள அருச்சனைமுறை அவ்வளவு எளிதில் போகாது; அது மட்டுமன்றி, விரும்புபவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் இந்த முறை இருப்பதனால் ஓரளவு பயனுண்டு. இந்த அருச்சனை முறை தாய் மொழியில் அமைய வேண்டும்.

மொழி எல்லை ஏன்?

சமய நெறிகளுக்கு - பிரார்த்தனைக்கு மொழி எல்லை ஏன்? இசுலாமியர் எந்த மொழியினத்தைச் சேர்ந்திருந்தாலும் அராபிய மொழியில்தானே பிரார்த்தனை செய்கிறார்கள். ஆம்! அஃது உண்மையே. இசுலாமிய சமயம் அராபிய மொழி வழிப்பட்ட சமுதாயத்தில் தோன்றிற்று. பிற மொழி வழிப்பட்ட இனங்களிலும் அது பரவியது. ஆதலால் இசுலாமியர் தமது சமயம் தோன்றிய மொழியையே விரும்பி மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி விரும்பி மேற்கொள்வது மரபுவழி வழக்கமுமாகிவிட்டது; அதற்குத் தடையுமில்லை. நம்முடைய சமயம் நம்முடைய தாய்மொழியில் தோன்றி வளர்ந்ததே தவிரப் பிறமொழியில் தோன்றி வளர்ந்ததில்லை. சேக்கிழார் “தமிழ் வழக்கு“[7] என்றே நமது சமயத்தைக் குறிப்பிடுகின்றார். ஆதலால் நம்முடைய சமயம் தோன்றி வளர்ந்த முறையிலேயே நமது பிரார்த்தனைமொழி இருப்பது தான் நியாயம். மேலும், இன்று அர்ச்சனை மொழியாக இருக்கும் சமஸ்கிருதம், உண்மையில் நமது சமய மொழியாக இருந்திருக்குமானால் அதை எல்லோரும் கற்றுத்தெளிவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் வழங்கப்படாததோடு மட்டுமன்றித் தடையும் விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இடையில் வந்த மொழி ஆதிக்கமும், சாதி ஆதிக்கமுமே நம்முடைய சமயம் உலகச் சமயமாவதைத் தடுத்து விட்டன. அதுபோல, கிறித்தவ சமயம் லத்தீன் மொழியில் தோன்றி வளர்ந்தது. கிறித்தவர்கள் லத்தின் மொழியில் பிரார்த்திக்கின்றனர். அங்கே லத்தீன் மொழியைப் பயில எல்லோருக்கும் வாய்ப்புண்டு; தடையில்லை. ஆனாலும் மார்ட்டின் லூதர் தோற்றத்திற்குப் பிறகு கிறித்தவ சமயம் பரவியிருக்கும நாடுகளில் அவரவர் மொழியில் வழிபாடு செய்யும் பழக்கம் வந்துவிட்டது.

மொழி வழிப்பட்ட இயக்கமன்று

தாய்மொழியில் அருச்சனை என்ற இயக்கம் மொழி வழிப்பட்ட இயக்கமன்று. பிரார்த்தனை, பக்தி என்பன உயிரின் வளர்ச்சிக்குத் துணை செய்வன. உயிரின் வளர்ச்சி நெஞ்சத்துடன் தொடர்புடையது. ஆதலால் நெஞ்சினைத் தொட்டு உணர்வினைத் துண்டும் மொழிதான் வழிபாட்டு மொழியாக அமைதல் வேண்டும். அந்த வாய்ப்புத். தாய்மொழிக்கே மிகுதியும் உண்டு. இது பொதுவான கொள்கை.

தமிழ் மந்திரங்கள்

நமது நாட்டில் தமிழில் வழிபாடு என்று கேட்கும் கோரிக்கை பொது வகையால் மட்டுமன்று; உரிமை வகையினாலும் எழுந்தது. உலக மொழிகளிலே பக்திக்குரிய மொழி. தமிழ்தான் என்பது அறிஞர் முடிபு. பக்திக்குரிய அருமையும் எளிமையும் தமிழுக்கு இயல்பாகவே உண்டு. தமிழ், வழிபாட்டு மொழியாகவே வளர்ந்து வந்துள்ளமொழி. அது மட்டுமன்று. மந்திரங்களுக்கு மொழி வரையறையில்லை. நிறைமொழி மாந்தர் அருளிச் செய்பவை மந்திரங்கள்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திர மென்ப[8]

என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் “தானே என்று பிரித்தார். இவை தமிழ் மந்திரமென்றற்கு”[9] என்று எழுதுகின்றார். மாதவச் சிவஞான முனிவர் சமஸ்கிருதத்தின்பாலும் மிகப் பற்றுடையவர்: சமஸ்கிருதம் தேவ மொழி என்ற கருத்துடையவரே. ஆயினும் தாம் இயற்றிய காஞ்சிப் புராணத்தில் இறைவனை அகத்தியர் பூசித்த பொழுது தமிழ் மந்திரங்கள் கூறிப் பூசித்ததாகக் கூறுகிறார்.

மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகிஇனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்[10]

என்பது காஞ்சிப்புராணப் பாடல்.

... எனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறிய நிமலன் ...

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு திருமுறைப் பாடல்கள் ஆற்றல் மிக்க மந்திரங்களாக ஐந்தொழில்களையும் நிகழ்த்தியுள்ளன.

உரிமைபெற உழைப்போம்!

ஆதலால், தமிழில் வழிபாடு என்பது வரலாற்றடிப் படையிலும் நியாயமானது; உளவியலடிப்படையிலும் நியாயமானது. மரபு வழியிலும் அது நமது பிறப்புரிமை. நமது திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்தும் முயற்சிக்கு நமது தமிழக அரசு அளித்துவரும் ஆதரவு பாராட்டுதலுக்குரியது. ஆனால், அரசு முறையில் இயக்கப்படும்பொழுது தமிழ் வழிபாட்டுமுறையை விரும்பாதார் வழக்கு மன்றங்களுக்குச் செல்லலாம். அதனால் தடைகள் ஏற்படலாம். ஆனால், தமிழ் மக்கள் தங்களுடைய உயிரினுமினிய திருமுறைகளால் வழிபாடு நிகழ்த்த வேண்டும் அருச்சனை செய்யவேண்டுமென்று கிளர்ந்தெழுவதே தமிழ் வழிபாட்டினைப் பெற ஒரே வழி. நமது மக்கள் உயிரனைய பிரச்சினைகளில் அலட்சியம் காட்டுகிறார்கள். “ஏனோ தானோ” என்று வாழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றியமைக்கத் தமிழறிஞர்கள் ஓயாது உழைத்திடுதல் வேண்டும்.

சமய நிறுவனங்களும் திருக்கோயில்களும்
சமய - சமுதாயப்பணி மன்றங்களே

பழங்காலத் திருக்கோயில்கள் இறைவன் திருவோலக்கம் கொண்டருளும் திருவருள் நிலையங்களாக விளங்கின; அது மட்டுமன்றி நமது சமுதாயத்தின் பொது இடங்களாகவும் விளங்கின; மக்கட் பணி மன்றங்கள் ஆகவும் விளங்கின. பழங்காலத் திருக்கோயில்களில் தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்களிருந்து தமிழாராய்ந்தனர்; கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள் இருந்தன; கலைபயில் கழகங்களிருந்தன; நாடக அரங்குகளிருந்தன; மருத்துவ மனைகள் இருந்தன என்பதைத் தமிழகத்திருக்கோயில்களின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். ஏன்? பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் “முறை மன்றங்களும்” இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழி நடத்தும் கிராம சபைகள் - ஊர்ச் சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்றைய நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. அவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகி விட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்கள் - திருமடங்கள் இந்த வகையான பணி செய்வதில் இடைக்காலத்தில் நெடுந்தொலைவு விலகிவிட்டன. அண்மைக் காலமாக ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இந்த வகையில் தருமபுர ஆதீனமும், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் - கெளமார மடாலயமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடமும் செய்துவரும் பணிகள் பாராட்டுதலுக்குரியன. இந்தப் பணியை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள் மேற்சொன்ன சிலவேயாம். இன்னும் பல நிறுவனங்கள் இந்த நினைவிற்குக்கூட வராதது வருந்தத்தக்கது. தமிழகத் திருக்கோயில்களில் பல இன்றைக்கு இந்தத் திசையில் திரும்பிப் பணிகளை மேற்கொண்டுள்ளன.

அருள்நெறித் திருக்கூட்டம்

1952-ல் தமிழகத்தில் தோன்றிய சமய மறுமலர்ச்சி இயக்கமாகிய அருள்நெறித் திருக்கூட்டத்தின் தத்துவங்கள் - கொள்கைகள் இன்று எங்கும் எதிரொலித்து வருகின்றன. இன்று தமிழகத்தின் திருக்கோயில்கள், பள்ளிகளை நடத்துகின்றன; கல்லூரிகளை நடத்துகின்றன. சிறப்பாக மாண்புமிகு டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசு இந்த வகையில் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துறை அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு. கண்ணப்பன் இந்தப் பணிகளில் காட்டும் ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. ஆயினும் நம்முடைய சமுதாயத் தேவைக்குரிய அளவுக்குப் பணிகள் வளரவில்லை. இந்து சமய நிறுவனங்களின் வளத்திற்கேற்றவாறு வளரவில்லை. ஒரு புறம் நிறுவனங்கள் தங்கத்தில் தவழ்கின்றன. பிறிதொருபுறம் அச்சமய நிறுவனங்களைச் சார்ந்த மக்கள் புழுதியிற் கிடந்து புரளுகின்றனர். இந்த இடைவெளி நீக்கப் பட்டாலொழிய சமயத்தின் கொள்கை நிறைவேறாது. இந்துவாகப் பிறந்த ஒருவன் அனாதையாக விடப்படும் அவல நிலையிலிருக்கும் வரை நமது சமயம் ஏற்றம் பெற இயலாது. மனிதன் பெற்ற உணர்வினைப் பாதுகாப்பதே அவனுடைய செயல். தொண்டு இல்லாத வழி, பக்திக்கு ஏது பாதுகாப்பு? மக்கள் இல்லாதபோது ஏது சமயம்? மக்களைத் தழுவியவையாகச் சமய நிறுவனங்கள் இல்லாது போனால் அந்த நிறுவனங்களுக்கு ஏது உயிர்ப்பு? நடமாடும் கோயில்களைப் பேண வேண்டும்; அங்கும் கடவுளை எழுந்தருளச் செய்யவேண்டும். இது திருமூலர் இட்ட பணி.

படமாடுங் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடுங் கோயில் நம்பர்க்கங் காகா

நடமாடுங் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடுங் கோயில் பகவற்கஃ தாமே[11]

என்னும் திருமந்திரம் அறிந்து உணரத்தக்கது.

திருமடங்களின் தோற்றமும் நோக்கமும்

நமது சமய அமைப்பில் திருமடங்களுக்குத் தனியிடம் உண்டு. பழங்காலச் சமுதாய அமைப்பில் திருமடங்கள் இருந்ததில்லை. திருமடங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டனவேயாம். நமது சமயநெறி வாழ்க்கையோடிசைந்திருந்த காலத்தில் திருமடங்களின் தோற்றம் அவசியமில்லாம லிருக்கிறது. பின்னர், கால வளர்ச்சியின் காரணமாகவும் அயல் சமய நெறிகளின் ஊடுருவல் காரணமாகவும் சமயப் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்த ஞானிகள்-சமுதாய வளர்ச்சியில் சிந்தனை செலுத்திய ஞானிகள்-திருமடங்களைக் கண்டனர். தமிழகத்தின் தலைசிறந்த தாளாளர்களும் மன்னர்களும் சமயப் பாதுகாப்புப் பணி கருதி நிறையப் பொருள்களைத் திருமடங்களுக்கு அளித்தனர். திருமடங்களின் தலையாய பணி, சமயப் பாதுகாப்பேயாம். சமயப் பாதுகாப்பு என்பது சமயத்தை, தத்துவங்களை மட்டும் பாதுகாப்பதன்று. கோவிலையே பாதுகாப்பது என்பதுமன்று. நமது சமய நெறியில் நின்றொழுக வேண்டிய மக்களை அறியாமையினின்று விலக்கி, அறிவு நெறியில் ஆற்றுப்படுத்தி அருளார்ந்த சமய அனுபவத்தில் கொண்டு வந்து நிலை நிற்கும்படி செய்தலேயாம். மக்கள் மன்றத்தில் சமய உணர்வைப் பாதுகாப்பதே.

திருமடங்களின் இன்றைய நிலை

சாதாரண சராசரி மக்களிடம் சமய வாழ்க்கையின் தேவையை உணர்த்துவதும், சமய உணர்வைப் பெற்றவர்களுக்குத் 'தீக்கை' முதலியன செய்வித்து, அவர்களை அனுபவ நிலைக்கு அழைத்துச் செல்வதும் திருமடங்கள் செய்யவேண்டிய பணிகள். இன்று அந்தப் பணிகளைத் திருமடங்கள் செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. திருமடங்கள் 'தீக்கை' செய்விப்பதையே நிறுத்தி விட்டன. அண்மையில் கரூரைச் சார்ந்த அன்பர் ஒருவர் ‘தீக்கை' பெற்றுச் சிவபூசை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒரு திருமடத்திற்குச் சென்றாராம். அத் திருமடத்தின் படைபரிவாரங்கள் திருமடத்தின் தலைவரைக் கண்டு கொள்ள அனுமதிக்காமலேயே, “இங்கே உங்களுக்கெல்லாம் தீக்கை செய்ய மாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். இஃது என்ன கொடுமை? மக்களைச் சந்திக்க - மக்களுக்கு அறிவூட்ட, பக்தியுணர்வை வழங்கத் தோன்றிய திருமடங்கள் இன்று திசைமாறி இருக்கின்றன. ஒரு சில மடங்களில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறதென்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த மாறுதலும் கூட வளர்ந்த சமுதாயத்தினருக்குப் பயன்படும் அளவே தவிர, வளர வேண்டிய சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க வகையில் அமையவில்லை. இந்து சமூகத்தில் எண்பது விழுக்காடு மக்கள் பள்ளத்தில், படுகுழியில் கிடக்கின்றனர். அவர்களுடைய பொறிகளுக்குப் பொருளில்லாமல் போய்விட்டது; புலன்கள் செயலற்றுக் கிடக்கின்றன. வெற்று மனிதர்களாக அரசை நம்பி, ஒரு சில செல்வர்களுடைய தாராள மனப்பான்மையை நம்பி, ஏழைகளாக அவர்கள் செத்துக் கொண்டிருப்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனையடைகிறது! ஒருபுறம் வாழ்வாரோடு கூடிக்குலாவிப் பொன்னாடைகளை வழங்கிக்கொள்ளும் இவர்கள் ஏன், புழுதியில் கிடக்கும் மனிதர்களைப் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு சமயத்தைச் சார்ந்த மக்கள் அறியாமைப்படுகுழியில் கிடக்கும்பொழுது, அந்த மக்கள் ஞானசூனியர்களாக இருக்கும்பொழுது திருமடங்கள் ஏன் என்ற வினா எழுவது இயற்கைதானே.

தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை

இந்த வேதனை தரத்தக்க சூழ்நிலைக்கு நடுவே 1965-ல் ஒரு சிறு ஒளிக்கீற்று பிறந்தது; இந்து சமுதாயத்திற்கு நம்பிக்கையைத் தந்தது. அதுதான் முன்னாள் முதலமைச்சர் பாராட்டுதலுக்குரிய மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களின் அரிய முயற்சியில், திருமுறைக்காவலர் பாராட்டுதலுக்குரிய முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் திருமிகு சாரங்க பாணி முதலியார் அவர்கள் இனிய முயற்சியில் தொடங்கிய தமிழ்நாட்டுத் தெய்வீகப் பேரவை, அது இன்று தமிழகத்தின் ஒளிமிக்க-ஆற்றல் படைத்த இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆனாலும் “உழுத சாலில் உழும்” இயல்பு நம்மை விட்டு நீங்கவில்லை. ஆதலால், பேரவையின் பணிகளில் நமது சமயத் தலைவர்கள் தேவைக்குரிய ஆர்வம் காட்டவில்லை. ஏன்? தமிழக அரசு காட்டும் ஆர்வத்தைக்கூட காட்டவில்லை. பாராட்டுதலுக்குரிய அறநிலைய ஆணையர் திருமிகு கே.எஸ். நரசிம்மன் அவர்கள் காட்டுகிற அளவுக்கூட ஆர்வத்தைக் காட்டவில்லை. தொடக்கக் காலத்திலிருந்தே வேறுபாடுகளே விழுமிய கொள்கையாகக் கொண்டிருக்கும் சமயத்தினர் இசைந்து வரவில்லை. சைவ சமயத் தலைவர்கள் ஓரிருவர் தமிழக அரசு கொணர்ந்த அருச்சகர் வைணவ மசோதாவின் வாயிலாக விலகியும் விலகாமலும் நிற்கின்றனர். அருச்சகர் மசோதாவை நாம் எதிர்க்க வேண்டு மென்பது அவர்கள் விருப்பம். ஆனால் அவர்கள் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஏன்? பேரவையிலேயே கூட இது போன்ற சமய சமுதாயத் தொடர்பான செய்திகளை விவாதித்து முடிவு எடுக்கும் அளவுக்குக்கூட அவர்கள் முன் வருவதில்லை. கடந்த கால் நூற்றாண்டாகச் சாதிவேறுபாடற்ற சமுதாயத்தை நமது சமயத்தின் பெயரால் அமைத்திட வேண்டும் என்று ஓயாது பேசிவந்த நாம் அந்த மசோதாவை எதிர்ப்பது எங்ஙனம்? வேறு சிலருக்கு அக்கறையில்லை. இந்த நிலையில் பேரவை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமயத்தலைவர்களின் நிறுவன நிறுவனமாகத் தோன்றிய பேரவை இன்று இலட்சோபலட்சம் மக்களின் இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேரவையைக் கட்டிக் காப்பாற்றுவார்கள்; அவர்களுடைய மாநாடுகள் சமயச் சீர்திருத்தங்களைப் பற்றி எண்ணும்; முடிவெடுக்கும்; செய்து முடிக்குமென்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

சமயத் தலைவர்களின் அவலநிலை

திருமடங்கள் இன்னும் சிறப்பாகப் பேரவைப் பணிகளுக்கு ஒத்திசைந்து அதன் பணிகளைச் செய்ய வேண்டும். சமயத் தலைவர்கள் தங்களுக்குள் ஒருவரை யொருவர் வழி நடத்திக் கொள்ளவும், சமயப்பணிகளை மேற்கொள்ளவும் மேலாண்மை செய்து கொள்ளவும் தக்காங்கு பேரவை உருப்பெறுதல் வேண்டும். அங்ஙனம் தனித்தன்மை யிழவாத ஒரு பொதுத் தன்மைக்கு இசைவித்துக் கொள்ள முன்வராது போனால், அவர்கள் புறநெறியாளர்களின் மேலாண்மைக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் வந்து சேரும். அது வருந்தத்தக்க விளைவுகளைத் தரும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே பொதுத் தன்மையிலிருந்து விலகியதன் விளைவுகளை அவர்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். அரசோடொத்த அருளாளர்களாக இருக்க வேண்டியவர்கள் - அரசினையும் ஆற்றுப்படுத்த வேண்டிய அருளார்ந்த நிலையிலிருக்க வேண்டியவர்கள் இன்று அரசின் கட்டுப்பாட்டுக்காளாகியிருக்கின்றனர். இன்று அரசின் தணிக்கைகளுக்கு ஆட்படுகின்றனர். ஏன்? அரசின் ஒழுங்கு முறைகளுக்கு ஆட்படுகின்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதன் காரணமாக அவர்கள், தங்கள் தங்கள் நிலையில் சுதந்திரத்தை இழந்திருக்கின்றனர்; அதனால் சமயத்தைச் சீர்திருத்தும் முயற்சிகளைக்கூட அவர்கள் சிந்தித்துச் செயற்படுத்துவதில்லை. அரசு செயற்படுகிறது- அவர்கள் கட்டுப் படுகின்றனர். நம்முடைய நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவுரிமையைச் சிவபெருமான் வாயிலாகப் பெறவில்லை. தமிழ்நாட்டுச் சட்டசபையின் வாயிலாகப் பெற்றார்கள் என்றால் என்ன பொருள்? அறவுணர்வில் செய்யப்படாத ஒன்றினைச் செய்யும்படி கட்டுப்படுத்துவது சட்டம். சமயத் தலைவர்கள் அறநெறிப்படி செய்யத்தவறிய ஒன்றினைச் சட்டம் செய்யும்படி வற்புறுத்தியது. சட்டம் தோன்றிய பிறகு தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து அமைச்சர்களாக வந்தவர்களுக்குப் பொன்னாடை போர்த்தத் தவறினார்களல்லர். இந்த முரண்பாடுகள் ஏன்?

உடனடித் தேவை

சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமய நெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளாததால் சமுதாயத்தின் அடிமட்டத்தில் கிடக்கும் நம்முடைய சமயத்தைச் சார்ந்த மக்கள் இன்னமும் மத மாற்றங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சிக் குறியீட்டு எண்களைக் காணின், நமது சமய வழிப்பட்ட சமுதாயத்தின் வீழ்ச்சியை உய்த்துணரமுடியும். ஏன் இந்த வீழ்ச்சி? மக்களைத் தழுவி நின்று பேணிப் பாதுகாக்கும் பணியைச் சமய நிறுவனங்கள் மேற்கொள்ளாததால்தானே; ஆதலால், சமய நெறியை உயிர்ப்புடன் பாதுகாக்கவும் சமய வழிப்பட்ட சமுதாயத்தைப் பாதுகாக்கவும் சமய நிறுவனங்களின் இன்றைய நடைமுறையும் ஆட்சி முறையும் துணை செய்யா. துணை செய்யவும் இயலா அவை சாதி வழிப்பட்ட அமைப்புகளாகவும் இயங்கிவிட்டன. அரசும் அவற்றை நேரிய வழியில் நெறி முறைப்படுத்த இயலாத நிலையில் இருக்கிறது. காரணம் அரசு, சமயச் சார்பற்ற அரசு. ஆதலால், அரசு ஏதாவது சமயச் சீர்திருத்தங்கள் - நடைமுறை மாறுதல்கள் உண்டாக்க முயன்றால் முறையீட்டு மன்றங்கள் தலையிடும். ஆதலால் நமது சமயத் தலைவர்களும், சமய நெறியில் நிற்கும் பெரியோர்களும் அறிஞர்களும் உளமார நினைந்து பார்த்து ஒரு மாற்றத்தைக் காண முன் வரவேண்டும். இந்த வகையில் நமது எண்ணத்தில் தோன்றும் சிந்தனைகளைக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது சமயமும் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பேரவை பல்கலைக் கழக வடிவத்தில், திருமடங்களின் தனித்தன்மைக்கு ஊறு இல்லாத வகையில் அதே பொழுது பொதுத் தன்மைக்கு இசைந்த வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். திருமடங்களிடையே பொதுத் தன்மைக்கு மாறாக வளர்ந்துள்ள தனித்தன்மை முற்றாக அகற்றப்பட வேண்டும். தன்னுரிமை உணர்வு சாய்க்கப்பட்டுப் பொதுமையுணர்வு மலர வேண்டும். திருமடங்களின் நிதியங்கள் முறையாக மையப்படுத்தப் பெறவேண்டும். அந்த நிதியங்களைக் கொண்டு சமயத்தைச் சார்ந்த மக்களிடையில் வாழ்வுப் பணியும் சமயப் பாதுகாப்புப் பணியும் முறைப்படுத்தப் பெற்றுச் செய்யப்பெறவேண்டும். இன்று, திருமடங்களைச் சார்ந்து மக்கள் மன்றத்தில் உலாவரும் தொண்டர்கள் இல்லை. அங்கேயே தொண்டர்களுக்குப் பஞ்சம்; தக்க இளைஞர்களைத் தவமும் சீலமுமுடையவர்களாக வளர்க்கும் பணிமனைகள் பல தேவை. திருஞானசம்பந்தருடன் பதினாயிரம் தொண்டர்கள் மதுரைக்கு வந்ததாகக் கூறுவர். இன்று நாட்டில் சமய உணர்வுடன் மக்கட் பணியை ஏற்றிருக்கும் துறவிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அதுவும் வழி வழி நிறுவனங்கள் சார்பில் இல்லையென்று கூறலாம். பலரிருக்க வேண்டிய இடத்தில் ஓரிருவர் இருப்பது, உளது போலக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த நல்ல அமைப்பைத் தோற்றுவிக்க நம்முடைய திருமடங்களின் தலைவர்களே முன்வந்து ஏற்றருள வேண்டுமென்பது நம்முடைய பிரார்த்தனை. அவர்கள் அதை ஏற்றுச் செய்யத் தவறினால் நம்முடைய இளைஞர்கள், நம்முடைய அறிஞர்கள் விவிலியத்தின் மார்ட்டின் லூதர் போலப் புரட்சியைச் செய்தாவது அந்த நிலையை உருவாக்க வேண்டும். இது நமது விருப்பம், வேண்டுகோள்.

நம் திருக்கோயில்களும் உதிரித் தன்மையுடையனவாக விளங்குகின்றன. அவற்றையும் ஒருமைப்பாடுடையனவாக ஆக்கவேண்டும். காலத்தின் எல்லைகளில் செய்த தவறுகளின் காரணமாக இன்று நமது சமய நிறுவனங்கள் சமயச் சார்பற்ற அரசின் ஒரு பகுதியாகப் போய்விட்டன. இதனால், நமது சமயப் பாதுகாப்புப் பணிகளுக்கு உரிய வாய்ப்பு அருகியிருக்கிறது. அறநிலைய அமைச்சர் சமய நிறுவனங்களின் உடைமைகளைப் பாதுகாப்பார்; ஆனால் உணர்வுகளைப் பாதுகாக்க முடியாது. அறநிலைய ஆட்சித்துறை சமய நிறுவனங்களைக் கண்காணிக்கும்; ஆனால் சமயத்தை வளர்க்காது. இது இன்றுள்ள உண்மையான நிலை. நிறுவனங்கள்-உடைமைகள் சமய வழிப்பட்ட சமுதாயத்தைச் சமய வழியில் பாதுகாக்கவும், சமய உணர்வில் பாதுகாக்கவும் உரிய கருவிகளேயாம். உடல் பாதுகாக்கப்படும், உயிர் பாதுகாக்கப்படாது என்று சொன்னால் என்ன பயன்? ஆதலால், திருமடங்கள் திருக்கோயில்களின் இணைப்பு மையமாகப் பல்கலைக் கழக வடிவமைப்பில் ஒரு தன்னாதிக்கமுள்ள பொதுவான அரசின் மேலாண்மைக்கு இசைந்தவாறமையும் வகையில் பேரவைக்கு உருவம் கொடுக்க வேண்டும். அந்த அமைப்பு சமய நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பே அவ்வப்போது நமது சமயநெறியில் காணவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் சமுதாய மற்றங்கள் குறித்தும் சிந்தனைசெய்து தக்கவாறு வழிநடத்த வேண்டும். நம்முடைய மூவேந்தர் காலத்திற்குப் பிறகு நம்முடைய சமய நெறியையும் சமுதாய அமைப்பினையும் பற்றி எண்ணிச் சிந்தித்துத் தக்க மாற்றங்களைச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெறவில்லை. இங்கொருவர் அங்கொருவராகச் சிந்திப்பவர்கள் சிலர் தோன்றினர். அவர்களில் வடபுலத்தில் இராமகிருட்டினரைத் தொடர்ந்து விவேகானந்தரும், தென் புலத்தில் வள்ளலாரும் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள். இவர்களுடைய சிந்தனையை வழி வழி வந்த சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏன்? அவர்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளக்கூட அவைகள் மறுத்தன; மறுத்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால் சமயத் தலைவர்கள் தம்முள் கலந்து முடிவெடுத்துச் சமுதாயத்தை வழி நடத்த முன் வரவேண்டும். அதுபோலவே தமிழகத்தில் நமது சமுதாய அமைப்பில் தோன்றும் திருக்கோயில்களையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். நம்முடைய வழிபடும் திருமேனிகளை, திருக்கோயில்களைச் சந்து பொந்துகளிலும் சாலை ஓரங்களிலும் சிலர் தம் பிழைப்புக்கருதி, மற்றவர் அலட்சியப்படுத்துமளவுக்கு அமைத்து விடுகிறார்கள். இதற்கு ஒரு நியதி இல்லை. அவற்றை முறைப்படுத்துவதற்குரிய நியதிகளையும் உருவாக்க வேண்டும். புதிய கோயில்களை எழுப்பச் சமய நிறுவனங்களின் தலைமையிடமாகிய பேரவையின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வரன்முறை தேவை. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சமயப் பணிகளைச் செய்து சமயத்தைக் காக்கவேண்டும். அவ்வப்பொழுது சமுதாயத்தை உரியவாறு வழிநடத்த வேண்டும். இது இன்றைய உடனடியான தேவை. குடிகளைத் தழுவிய கோயில்; கோயிலைத் தழுவிய குடிகள்.

மீண்டும் நமது திருக்கோயில்களில் ஊர்ச் சபைகள் அமைய வேண்டும். அச்சபை சாதி, குல, இன, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும். தன்னியல்பாகத் “தெரிதல் முறை”யில் அமையவேண்டும். அச்சபை திருக்கோயில் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு செய்யவேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் வழிபடுவோர் பட்டியல் இருக்கவேண்டும். அந்தப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவனை வழிபாடு செய்யவும், வழிவழித் திருத்தொண்டு செய்யவும்வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு திருக்கோயிலில் தொண்டுரிமை கொண்டவர்களாக நலன்களை நாடிப்பெறும் உரிமையுடையவர்களாக இணைக்கப்பெற வேண்டும். வேறொரு பெயரில் சொன்னால் நம்முடைய சமுதாய மக்கட் கணக்குப் பட்டியலாக அந்த வழிபடுவோர் பட்டியல் அமையவேண்டும். திருக்கோயிலின் ஊர்ச்சபை ஒவ்வொருவரிடத்தும் தொண்டு கொள்ளவேண்டும்; நிதியும் பெறவேண்டும். ஊர்ச்சபையின் தொண்டின் மூலம் கோயிலுக்கும் குடிகளுக்குமிடையேயுள்ள இடைவெளி குறையவேண்டும்; பிரிக்கமுடியாதவாறு நல்றுறவால், பிணைக்கப்படவேண்டும். இந்தத் தொண்டு முறை சிவபெருமானே செய்துகாட்டிய தொண்டுமுறை. இறைவன் உயிர்களைத் தொடர்ந்து சென்று அவற்றைப்பின் தொடர்ந்து நின்று பாதுகாக்கிறான் என்பதைத் திருவாசகம்,

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே[12]

என்ற பாடலில் சிறப்பித்துக் கூறுகின்றது.

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை, அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்[13]

என்பதும் திருவாசகம். எனவே நமது சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரையும் திருக்கோவில் வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டும். அங்கு நிகழ வேண்டிய தொண்டுகளில் அவரவர் தகுதிக்கேற்பப் பங்கேற்கும்படி செய்யவேண்டும். அங்ஙனம் பங்கு கொள்ளத் தவறுபவர்கள் திருத்தி வழி நடத்தப்பெற வேண்டும். திருக்கோயில் திருப்பணிக்கு ‘யார் யார்’ வந்தார் என்று கணக்கெடுக்கும் முறை இருந்தது. ‘யார் யார் வந்தார்’ என்ற திருவிசைப் பாவினால் அறியலாம். முன்னர்க் கூறப்பட்ட முறையின் வழி சமய வழிப்பட்ட சமுதாயப் பணியைச் செய்யப் பயிற்சி பெற்ற துறவிகள் ஊர்ச்சபையின் இயக்குநர்களாக அமைவார்கள். ஊர்ச்சபை, அந்தக் கிராமத்திலுள்ள அனைத்து மக்களின் கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, பிணி நீக்கம், நல்வாழ்க்கை அமைத்துத் தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும், கூட்டுறவு முறையில் தொழிலமைப்புகளைத் தோற்றுவித்து வாழ்க்கையில் வளம் காணச் செய்யும். கிராம சமுதாயத்தின் வளத்தைப் பெருக்கும்; சில வழக்குகளைத் தவிர்க்கும். ஒரோவழி மன மாறுபாடு தோன்றி விட்டால் தாமே தீர்வுகண்டு சமாதானம் செய்து வைக்கும் பணியையும் ஊர்ச்சபைகள் செய்யும், இந்த ஊர்ச்சபைகள் மாவட்டச் சபைகளோடு உறவு கொள்ளும். மாவட்டச் சபைகள் மாநில சபைகளோடு உறவு கொள்ளும். இந்தப் படிமுறையில் வளர்ந்தவுடன் எந்த ஓர் இந்துவும் அனாதையாக இருக்க மாட்டான் ஏழையாக இருக்கமாட்டான். அவனுடைய வாழ்க்கைக்குப் பாதுகாப்பு இருக்கும். எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் திருக்கோயிலை மையமாகக் கொண்டு கலந்து மகிழ்ந்து வாழ்வார்கள். மத மாற்றங்களுக்கு ஆளாக மாட்டார்கள். நமது மரபுகள் காப்பாற்றப்படும். நமது சமயத் தலைவர்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருப்பார்கள். ஞானாசிரியர்களாக இருப்பார்கள். திருத்தொண்டர்களாக இருப்பார்கள். உடைமைகளுக்கு உரியவர்களாக இல்லாமல் உயிரினத்துக்கு உரிமையுடையவர்களாக இருப்பார்கள். அந்தப் பொற்காலம் மலர்க.

நாயன்மார் அடிச்சுவட்டில்

நமது சமய வழிப்பட்ட தனி மனித வாழ்க்கைமுறை, சமுதாய வாழ்க்கை முறை ஆகியன எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கும் ஒரு சிறந்த காப்பியம் பெரியபுராணம். சங்க காலத்தில் நிலவிய விழுமிய வாழ்க்கையை, நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தலைதடுமாறிப் போகாமல் பாதுகாத்தவர்கள் பெரியபுராணத்தில் இடம் பெற்றிருக்கும் சான்றோர்களே!

திருமருகலில் திருஞானசம்பந்தர் இள வணிகனுக்கும் வணிகப் பெண்ணுக்கும் நிகழ்த்திவைத்த திருமணத்திற்கும், அகனைந்திணை ஒழுக்கத்தின் வழி சங்க காலத்தில் நிகழ்ந்த திருமணத்திற்கும் என்ன வேறுபாடு?

சங்ககாலத்துக் கொடைமடம்பட்ட புரவலர்களுக்கும் விதைக்கப்பட்ட வித்தை அமுதாக்கி விருந்தளித்துக் கொடை மடம்பட்ட இளையான்குடி மாறனார்க்கும் யாதொரு வேறுபாட்டையும் காண முடியவில்லை.

அவிநாசியில் ஆரூரர் கண்டு வேதனைப்பட்ட காட்சிக்கும் பக்குடுக்கை நன்கணியார் கண்ட காட்சிக்குமிடையே வேறுபாடே இல்லை.

பெரியபுராணத்திற்குப் புராணம் என்பது பெரிய புராணத்தில் வரும் பாத்திரங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவை: வரலாற்றுப் புகழ்ச் சிறப்புடையவை. திருத்தொண்டர் வரலாறு படித்தற்குரியது மட்டுமன்று ஓதுதலுக்கும் உரியது: ஓதுதலுக்குரியது மட்டுமன்று வாழ்ந்து காட்டுதற்குரியது. ஆனால் வழக்கம்போல நமது நாட்டில் பெரிய புராணம் படிக்கத்தான் பயன்படுகிறது. வயிற்றுப் பசியுடையவர்களில் கெளரவமானவர்கள் பெரியபுராண நாயன்மார்களைக் குருபூசை விழாக் கொண்டாடும் பாத்திரங்களாக்கி உண்டி நாலு விதத்தால், அறுசுவையால் ஆர்ந்து மகிழ்கின்றனர். திருத்தொண்டர் புராணத்தின் பயனாகிய அன்பு வளர வில்லை; பக்தி வளரவில்லை; திருத்தொண்டு வளரவே இல்லை. நமது இனம் உயிர்ப்புள்ள இனமாக வளர்ந்திருக்கு மேயானால் அறுபான்மும்மை நாயன்மார்கள் செய்த திருத்தொண்டுகளையொட்டிய திருப்பணி இயக்கங்கள் தோன்றியிருக்க வேண்டும். கண்ணப்பர் காலத்திலேயே கண்ணொளி வழங்கும் இயக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

கண்ணப்பர் காலத்திலேயே நாயன்மார்கள் வரலாற்றில் பலமுனைச் செயற்பாடுகள் அமைந்திருந்தன; அறிவியல் நுணுக்கங்கள் அமைந்திருந்தன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் மறந்துவிட்டோம்; ஆதலால் நாடு பயனொன்றும் பெறவில்லை. கண்ணப்பர் வரலாற்றில் சிவபெருமானே வலியுறுத்திக் காட்டிய “எல்லாரும் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை”யைப் பெற்றோமில்லை. திருக்கோயில் உள்ளிருக்கும் சிவன்தன்னைச் சிவனெனவே தேறி உயிர்ப்புடன் வழிபடும் உணர்வும் வளரவில்லை. அங்ஙனம் வளர்ந்திருப்பின் இன்று திருவுருவச் சிலைகள் திருடு போகா. வருவாய் தரும் திருக் கோயில்களின் திருவுருச் சிலைகளைப்போன்று வருவாய் இல்லாத திருக்கோயில்களின் திருவுருவச் சிலைகளைக் கவனிப்பதில்லை. அங்கு அர்ச்சகர்களும் பணியாற்ற வேண்டிப் போட்டிபோட மறுக்கின்றனர். ஆதலால் உண்மையில் அவரவர் ஆவல்கள் தொழப்படுகின்றனவே தவிர ஆண்டவன் தொழப்படவில்லை; அகநிலை அன்பிலும் வளரவில்லை. “பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றும்” பண்பிலும் வளரவில்லை, சரி, பக்திதான் வளரவில்லை; அறிவியலாவது வளரக்கூடாதா? கண்ணப்பர் காலம் சற்றேறக்குறைய கி.மு. 42-க்கு முற்பட்டது என்று கூறு கின்றனர். அக்காலத்தில் ஒருவர் கண்ணைப் பிறர் ஒருவர்க்கு எடுத்து வைத்துக் கண்ணோய் தீர்க்கும் முறை உலகில் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பிற நாட்டறிஞர்கள், விலங்குகளிடையே இந்த மருத்துவச் சோதனையைச் செய்யத் தொடங்கினர். பின்னர்ப் படிமுறையில் வளர்ந்து இன்று ஒருவர் கண்ணை மற்றொருவருக்குப் பொருத்திக்கண்ணொளி பெறச் செய்யும் மருத்துவமுறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இன்று இந்த வெற்றி தமிழின் பெயரால் இல்லை; தமிழர் பெயரால் இல்லை; தமிழர் சமயத்தின் பெயரால் இல்லை; கண்ணப்பர் திருப்பெயராலும் இல்லை. ஏன், இந்த மருத்துவ முறையை முதன் முதலில் காளத்தியப்பனிடம் சோதனைப்படுத்தி வெற்றிகண்ட கண்ணப்பர் பெயர், கண் மருத்துவத் துறையில் ஒப்புநோக்கிற்குக் கூட வரவில்லை. வராததற்குக் காரணம் நம்மவர் உறக்கமே நாயன்மார்களைப் போற்றுவது என்பது அவர்களுக்குச் சிலை எடுப்பது மட்டுமன்று; விழா எடுப்பதுமட்டுமன்று; அவர்கள் வரலாறுகளைப் பட்டிமன்றங்களாக்கிவிடுவது மட்டுமன்று; இவையெல்லாம் முயற்சியில் முனைந்து ஈடுபடவும், உள்ளக் கிளர்ச்சி பெறவும் துணை செய்யலாம். ஆனால் உண்மையாக நாயன்மார்களைப் போற்றும் வழி, அவர்கள் வழி நிற்றலேயாம். கண்ணப்பர் அடிச்சுவட்டில் கண் மருத்துவத் துறையை நாம் மேற்கொண்டிருக்க வேண்டும். கண்ணப்பர் பெயரால் நூற்றுக்கணக்கான கண் மருத்துவ மனைகள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அவை நிகழவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணொளித் திட்டத்தைக் கொண்டுவந்த டாக்டர் கலைஞர் தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசை நன்றியுணர்வுப் பெருக்கோடு பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம். இன்று கண் மருத்துவத்துறை நிபுணராக விளங்கும் மதுரை டாக்டர் திருமிகு வேங்கடசாமி அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏன்? மதுரை அரசினர் எர்ஸ்கின் மருத்துவ மனையில் கண் மருத்துவத் துறையின் விரிவாக்கம் பெற்ற புதுப்பகுதிக்குக் கண்ணப்ப நாயனாரைப் போற்றும் வகையில் “கண்ணப்ப நாயனார் கண் மருத்துவமனை” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தண்டியடிகள் அடிச்சுவட்டில் அவரை அடியொற்றியே திருக்குளங்களைத் துய்மை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள திருக்குளங்கள் தூர்ந்து போயிருக்குமா? வழுக்கும் பாசிதான் வருமா?

திருவிழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சம் நீக்கும் பணியை அடியொற்றி மேற்கொண்டிருந்தால் நமது நாட்டில் பஞ்சம் வருமா? ஒரு சிலர் “இன்றும் இறைவன் படிக்காசு கொடுத்தால் அந்தப் பணியைச் செய்யலாம்” என்பர். ஆனால் நாம் உறுதியாகக் கூறுகிறோம், “இன்று இறைவன் படிக்காசு தரமாட்டான்” என்று! ஏன்? தரக்கூடாது என்பதன்று. அன்று அப்பரடிகள் மேற்கொண்டிருந்த வாழ்க்கை, ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கிய வாழ்க்கை, பழுதிலாத்துறவு வாழ்க்கை! அவர் மடாதிபதியில்லை. அவரிடத்தில் காசுகள் இல்லை. அதனால் இறைவன் படிக்காசு தந்தான். இன்றைய மடாதிபதிகளிடமோ நிறையச் செல்வம் இருக்கிறது. அதற்கு என்ன செலவு என்றே புரியாதபொழுது இறைவன் எப்படி மேலும் தருவான்? இன்றைய சமய நிறுவனங்களின் வரவு-செலவு, தணிக்கைக்குரியனவாக இருக்கின்றனவே யன்றித் தகுதிக்குரியனவாக இல்லை. ஆட்சிக்குரியனவாக இருக்கின்றனவேயன்றி அறநெறிக்கு இசைந்தனவாக இல்லை. ஆதலால், இறைவன் வழங்கிய பேறுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பெற்று மேலும் நியாயமான தேவை ஏற்படுமானால் இன்றும் தருவான். ஆதலால் உண்மையில் நம்முடைய சமயநெறி வளரவும், சமுதாயம் மேம்பாடடையவும் நாம் மேற்கொள்ள வேண்டியன திருத்தொண்டர் வரலாற்றின் வழி வாழ்தலும், அவர்களின் நெறி வழிப்பட்ட பணிகளை மேற்கொள்ளுதலுமேயாம்.

தொகுப்புரை

நமது சமயம் இந்தியத் துணைக்கண்டத்தின் தனிச் சமயம். கோட்பாடுகளில் வேறுபாடுகளிருந்தாலும் உயர்ந்த ஒருமை நலம் கருதி இந்து சமயம் என்ற அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அவ்வழி நமது வாழ்வியலுக்கு ஒவ்வாத முரண்பாடுகளை அறவே அகற்றவும் வேண்டும்.

நமது சமயத்தில் சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் திருக்கோயிலில் வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது. அன்று சிறுமையின் சின்னங்களாகிய எல்லைக் கோடுகள் இருந்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்களில் எல்லோரும் சென்று வழிபாடு செய்துகொள்ளும் உரிமையிருந்தது. ஒரு சிலர் இலாபம் கருதி இடையில் அந்த உரிமைகளைப் பறித்திருக்கிறார்கள். சிவாசாரியர்களின் கடமை திருக்கோயில் உள்ள இறைவடிவை வழிபாட்டுக் குரியதாகச் செய்துவைப்பதே! வடபுலத்திலுள்ளது போல அனைவரும் திருக்கோயில் கருவறைக்குள் சென்று புனலும் பூவுமிட்டு வழிபடும் உரிமையைக் கண்ணப்பர் பெயரால் அடைந்தே தீரவேண்டும். அவரவர் வழிபாடு செய்யும் பொழுதுதான் மெய்யுணர்வு அரும்ப முடியும்.

வழிபாட்டிற்குத் தமிழ் உரிய மொழி. இறைவனைத் தமிழால் பாடித் துதி செய்தல் நூறுகோடி அருச்சனைக்கு ஒப்பானது. அதனாலன்றோ இறைவன் சுந்தரரிடம் “அருச்சனை பாட்டே யாகும்” என்று அருளிச்செய்து பாடச் சொன்னான். தமிழோடு இசை கேட்கும் இச்சையால் நாளும் காசுகள் கொடுத்து அப்பர், சம்பந்தர் ஆகியோரின் தமிழைக் கேட்டிருக்கிறான். அங்ஙனம் இறைவன் விரும்பிக் கேட்ட தமிழைக் கேளாது தடை செய்ததனால்தான் போலும் திருக்கோயில்களில் திருவருள் விளக்கம் சிறப்பாக அமையவில்லை. இறைவனைத் தமிழில் வழிபாடு செய்து கொள்ளும் உரிமை நமது பிறப்புரிமை. அதை நாம் அடைந்தே தீரவேண்டும். தமிழ் வழிபாட்டு இயக்கம் மொழியியக்க மன்று. அதன் நோக்கம் பக்தியை வளர்ப்பதேயாகும். தமிழ் வழிபாட்டு இயக்கத்தை மாதவச் சிவஞான முனிவர் முதலிய சான்றோர்களும் ஆதரித்துள்ளனர்.

பழங்காலத் திருக்கோயில்கள் சமுதாயத்தின் கேந்திரங்கள். சமுதாயத்தைக் கண்ணின் இமைபோல் பாது காக்கும் நிறுவனங்களாக அவை விளங்கின. அதனால்தான் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி பிறந்தது. இடைக்காலத்தில் நமது சமய நிறுவனங்களாகிய திருக்கோயில்களும் திருமடங்களும் இந்தப் பணிகளைச் செய்வதிலிருந்து விலகிவிட்டன. அண்மைக் காலத்தில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் தருமபுரம் ஆதீனம் செய்துவரும் பணி பாராட்டுதலுக்குரியது. மேலும் திருப்பனந்தாள் காசிமடமும், பேரூர் சாந்தலிங்கர் திருமடமும், சிரவணபுரம் கெளமார மடமும், மயிலம் பொம்மபுரம் ஆதீனமும் செய்துவரும் பணிகள் நினைவுகூரத்தக்கன. ஆயினும், பணி செய்ய வேண்டிய வளம்பெற்ற திருமடங்கள் பல இன்னும் வாளா உறங்குகின்றன. இங்ஙனம் வளர்ந்துள்ள மாறுதல்கூட பணிகளின் தேவை அளவுக்குரிய மாறுதலன்று; வளத்தின் அளவுக்குரிய மாறுதலுமன்று.

நமது சமுதாயத்தில் சமய நிறுவனங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை-படாடோபமான திருவிழாக்கள் நடத்துகின்றன. அதேபோழ்து நமது சமுதாயத்தைச் சேர்ந்த பலகோடி மக்கள் ஊமையராய்ச்-செவிடராய்ப் பாழ்பட்டுப் புழுதியில் கிடப்பதைச் சமயத் தலைவர்கள் உணரத் தவறுகின்றனர். மக்களைத் தழுவி வளர்க்காத சமய நிறுவனங்கள் எதற்காக? நடமாடும் கோயில்களை நாடிப் போற்றாத நிறுவனங்கள் எதற்காக? என்ற வினாக்களை வரலாறு எழுப்பத்தான் செய்யும். இனி வரலாறு எழுப்ப இருக்கும் வினாக்கள் சொற்களாகத் தோன்றா; அருளியல் வழிப்பட்ட புரட்சியாகத்தான் தோன்றும். அது சீரமைப்பைச் செய்தே தீரும்.

வல்லாண்மையுடையவர்களுக்கும் அஃதில்லாதவர் களுக்குமிடையே நடுவாக நின்று நீதியைக் காப்பாற்ற வேண்டிய சமயத் தலைவர்கள் வல்லாண்மையுடையவர் களோடு கூட்டுச் சேர்ந்துவிட்டனர். நடுவாக இருக்க வேண்டிய சமயத் தலைவர்கள் நடுவிகந்து வாழ்வோரிடையே கூடிக் குலவுகின்றனர். தொழுத கை துன்பம் துடைக்கும் தூயநெறியில்லை.

இந்த இடுக்கண் நிறைந்த சூழ்நிலையில் பேரவை தோன்றிற்று. பேரவை முறையாக வளர்ந்து வருகிறது. மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், சமயத் தலைவர்கள் காட்டும் ஆர்வம் போதாது. மேலும் நிறைந்த ஆர்வம் காட்ட வேண்டும்.

சமயச் சார்பற்ற அரசு உடைமைகளைத்தான் காப்பாற்றும், உணர்வுகளைக் காப்பாற்ற முடியாது. ஆதலால், இந்து அறநிலையச் சட்டத்தின் ஆட்சிமுறை உடைமைகளைக் காப்பாற்றுகிறது. உணர்வுகளைக் காப்பாற்றவில்லை. ஆதலால் சமய உணர்வுகளையும் சமுதாயத்தையும் ஒருசேரக் காப்பாற்றும் அளவுக்குப் பேரவை பல்கலைக்கழக வடிவத்தில் தன்னாதிக்கமுள்ள நிறுவனமாக அமைய வேண்டும். அந்த அமைப்பு சமயச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருமடங்களின் தலைவர்கள் காலத்திற்குத் தேவையான பொதுமைக்கு இசைந்து வரவேண்டும். இது தவிர்க்க முடியாத பணி.

ஒவ்வொரு திருக்கோயிலும் குடிகளைத் தழுவியதாக விளங்கவேண்டும். குடிகள் கோயிலைத் தழுவி வாழ வேண்டும். இந்தப் பொற்காலத்தை நாம் படைத்திட வேண்டுமாயின் நாயன்மார்கள் அடிச்சுவட்டில் பணிகளைத் தொடங்கவேண்டும்; திருத்தொண்டுகளைத் தொடங்க வேண்டும். அதுவே இன்று செய்யவேண்டிய பணி; முதற்பணி.

மேற்கோள் விளக்கம் 

  1. திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2.
  2. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31.
  3. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135
  4. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136.
  5. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157.
  6. திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70.
  7. திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24,
  8. தொல். செய்யுள். 178.
  9. தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை.
  10. காஞ்சிப்புராணம், தழுவக், 245,
  11. திருமந்திரம், 1821.
  12. திருவாசகம், பிடித்தயத்து-9
  13. திருவாசகம், திருவெம்பாவை, 17