குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




குன்றக்குடி அடிகளார்

நூல்வரிசை

தொகுதி - 11

சமயம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

குன்றக்குடி அடிகளார்
நூல்வரிசை

16 தொகுதிகள்
6000பக்கங்கள்

தொகுதி - 11

சமயம்

முதன்மைப் பதிப்பாசிரியர்

தவத்திரு பொன்னம்பல அடிகளார்


விற்பனை உரிமை :

மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர்தெரு, பாரிமுனை,
சென்னை-600108

முதல் பதிப்பு : செப்டம்பர், 2001
திருவள்ளுவர் ஆண்டு : 2032
உரிமை : திருவண்ணாமலை ஆதீனம்
மணிவாசகர் வெளியீட்டு எண்: 894
விலை : ரூ. 100-00

பதிப்பாசிரியர் குழு
தமிழாகரர் தெ. முருகசாமி
நா. சுப்பிரமணியம்
குன்றக்குடி பெரியபெருமாள்
க. கதிரேசன்
மரு. பரமகுரு

செயலர் :
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
9, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.

தொலைபேசி :
சிதம்பரம்  : 30069
சென்னை  : 5361039
தி.நகர்  : 4357832
மதுரை  : 622853
கோயமுத்தூர் : 397155
திருச்சி  : 706450


அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை-600 021.
தொலைபேசி: 5954528

(Upload an image to replace this placeholder.)

தமிழ்மாமுனிவர் அருள்நெறித் தந்தை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வாழ்க்கைக் குறிப்புகள்

ஆண்டு நிகழ்வுகள்
1925 தோற்றம்
பூர்வாசிரமம் : தந்தையார் : திரு. சீனிவாசம் பிள்ளை
 தாயார் : திருமதி. சொர்ணத்தாச்சி
பிள்ளைத் திருநாமம் : அரங்கநாதன்
தோற்றம் பெற்ற ஊர் : தஞ்சை மாவட்டம், திருவாளப்புத்தூர் அருகேயுள்ள நடுத்திட்டுக் கிராமம்.
1931- சிதம்பரம் அண்ணாமலை நகரில் வாசம்.
1936 ‘சொல்லின் செல்வர்’ ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் நாட்டார், சுவாமி விபுலானந்தர் ஆகியோர் தொடர்பு.
1937- தமையனார் திரு. கோபாலகிருஷ்ன பிள்ளை வீட்டில்
1942 கடியாபட்டியில் வாழ்தல்.
பள்ளியிறுதித் தேர்வு எழுதுதல்.
1942 விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு.
‘வினோபா பாவே’ படிப்பகம் தொடங்கி நடத்துதல்.
1945 தருமபுரம் ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் கயிலைக் குருமணி அவர்களிடம் கந்தசாமித் தம்பிரான் என தீட்சாநாமத்துடன் தம்பிரானாதல்.
தருமபுரம் தமிழ்க் கல்லூரியில் பயிலுதல்.
1947- * சீர்காழிக் கட்டளைத் தம்பிரான் - திருஞான சம்பந்தர்
1948 திருமடம் தூய்மைப் பணி; திருமுறை வகுப்பு, விழா நடத்துதல்.
1949 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் இளவரசு பட்டம் ஏற்பு. திருநாமம் சிறீலசிரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
1951 காரைக்குடிக் கம்பன் விழாவில் ‘புதரிடைமலர்’ என்ற தலைப்பில், அறிஞர்களின் நெஞ்சம் கவர்ந்த சொற்பொழிவு.
1952 குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆவது குருமகா சந்நிதான்மாக எழுந்தருளல்.
அருள்நெறித் திருக்கூட்டம் தோற்றம்.
‘மணிமொழி’ என்னும் பெயரில் இயக்கப் பத்திரிகை வெளியிடல்.
1953 ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள பிரான்மலைத் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின்போது (சங்க கால வள்ளல் பாரி வாழ்ந்திருந்த மலையில்) வள்ளல் பாரி விழாத் தொடங்குதல்.
பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வருதலைத் தவிர்த்தல்.
இலங்கைப் பயணம் - இரண்டு வாரம் சுற்றுப் பயணம்.
1954 இராசாசி தலைமையில் தேவகோட்டையில் அருள்நெறித் திருக்கூட்ட மாநாடு.
திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சந்திப்பு.
தாய்லாந்து, இந்தோசீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் (3 திங்கள்)
1955 அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்குதல்.
‘தமிழ்நாடு’ நாளிதழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ற பெயரை அறிமுகப்படுத்துதல்.
1956 அறிஞர் அண்ணா குன்றக்குடி திருமடத்திற்கு வருகை
ஆச்சார்ய வினோபா பாவே திருமடத்திற்கு வருகை.
1958 குன்றக்குடியில் உயர்நிலைப்பள்ளி தொடங்குதல்.
1959 ஆ தெக்கூரில் பள்ளிச் சீரமைப்பு மாநாடு நடத்துதல்.
பாரதப் பிரதமர் நேரு மாநாட்டிற்கு வருகை.
1960 மத்திய அரசு சேமநலக் குழு உறுப்பினராதல்.
1962 சீனப்போரின்போது தங்க உருத்திராட்ச மாலையைத் திருவொற்றியூர்க் கூட்டத்தில் ஏலம் விட்டு ரூ. 4000 தருதல்
மதுரை அருளமிகு மீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சனை தொடங்குதல்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அரசு வழக்கு தொடர்தல்.
1966 தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தோற்றம்.
1967 திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தோற்றம்.
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறை நெறிப்படி - போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல்.
1968 இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு - திருக்குறள் உரைக்கோவை நிகழ்ச்சி தொடக்கவுரை நிகழ்த்தல்
- திருக்குறள் இந்திய நாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல்.
இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணா நோன்பிருத்தல்.
கீழ வெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்; புத்தாடை வழங்குதல்.
1969 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி ஏற்பு;
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல்
தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெறல்.
1970 சட்டமன்ற மேலவையில் இந்து அறநிலையத் திருத்த மசோதா - சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல் பற்றிப் பேசுதல்.
1971 தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல்.
சோவியத் பயணம்; 22 நாள் சுற்றுப் பயணம்.
1972 பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி, திருவள்ளுவர் கலைக் கல்லூரியாக உருவாதல்.
சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக நியமனம். வள்ளுவர் கோட்டம் திருப்பணித் தலைவராக நியமனம்.
குன்றக்குடித் தருமைக் கயிலைக் குருமணி உயர்நிலைப் பள்ளிக்குப் புதிய இடத்தில் கட்டடம் கட்டித் திறத்தல்.
1973 திருக்குறள் பேரவைத் தோற்றம்.
திருச்சியில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை இரண்டாவது மாநில மாநாடு நடத்துதல்.
“கோயிலைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய கோயிலும்” என்ற முழக்கம் நாட்டளவில் வைக்கப்பெற்றது.
குன்றக்குடி கிராமத்தைத் தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டம் உருவானது.
1975 நாகர்கோவிலில் தமிழ்நாடு தெய்விகப் பேரவை மூன்றாவது மாநில மாநாடு நடைபெறல்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சொர்ணம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஏ.பி.சி. வீரபாகு சைவசித்தாந்த அறக்கட்டளைச் சொற்பொழிவு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொர்னம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு.
இராமநாதபுரம் இனக் கலவரம் - அமைதிப்பணி.
1982 குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரம் - அமைதிப் பணியாற்றல்.
மண்டைக்காடு அமைதிப்பணி பற்றிச் சட்ட மன்றத்தில் முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பாராட்டுதல்.
திருவருட்பேரவை தொடங்குதல்.
மலேசியா, கொரியா, ஹாங்காங், ஜப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம்.
புளியங்குடி இனக்கலவரம் - அமைதிப்பணி.
1984 பாரதத் தலைமை அமைச்சர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் குன்றக்குடிக் கிராமத் திட்டக்குழுவின் பணிகளைப் பாராட்டல்.
1985 நடுவணரசு திட்ட ஆணைக்குழுப் பிரதிநிதிகள் குன்றக்குடி வருகை, கிராம வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டுதல்.
பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் வளர்ச்சிப் பணிக்குத் திட்டக்குழு அமைத்தல்.
மணிவிழா
1986 தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது பெறுதல்
இந்திய அரசு திட்டக்குழு குன்றக்குடித் திட்டப்பணியைப் பாராட்டி “Kundrakudi Pattern” என்று அறிவித்தது.
1989 இவர் எழுதிய ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்னும் நூல் தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் (D.Litt) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1991 இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இலண்டன், அமெரிக்கா சுற்றுப்பயணம்.
அரபு நாடுகள் பயணம்.
1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1995 இறைநிலையடைதல்.



அடிகளாரின் சமயப் பணிகள்
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்

தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்கூறு நல்லுலகில் சமய மறுமலர்ச்சிக்கு வழிகண்டவர். அடிகளார் பூர்வாசிரமத்தில் செட்டிநாட்டில் எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைக் கல்வி பயின்றார்கள். எங்கள் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனார் அவர்களும், அடிகளாரின் அண்ணன் அவர்களும் விநோபா பாவே வாசகசாலையைத் தொடங்கினர். அடிநாள் தொட்டு அடிகளாரை நான் நன்கறிவேன். அடிகளார் திருவண்ணாமலை ஆதீனத்தில் பொறுப்பேற்ற பின்னர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார்கள். முதன்முதலில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் அடிகளார் அவர்களும் நாங்கள் நடத்திய தமிழர் திருநாள் திருக்குறள் விழாவில் ஒரே மேடையில் பேசினர். அப்பொழுது ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் சந்திக்கின்றன என்ற செய்தியை வியப்புடன் நாளிதழ்கள் வெளியிட்டன.

50, 60களில் அடிகளார் தமிழ்மேடைக்குத் தம் பேச்சால் புதிய வலிமை சேர்த்தார்கள். தமிழகம் முழுவதும் அடிக்கடிபயணம் செய்யும் நான் அடிகளாரின் நூற்றுக்கு மேற்பட்ட பொழிவுகளைச் செவிமடுக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அடிகளார்நூல் பலவற்றைப்படிக்கும் பேறும் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அடிகளார் சிந்தனைகள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்க வேண்டும் என்ற வேணவா என்னுள்ளத்தில் முகிழ்த்தது. அது இன்று கைகூடுகிறது.

தமிழ் மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழ்நாடு செய்த தவப்பயனால் 1925இல் தோன்றி 70 ஆண்டு காலம் தமிழகத்திற்குப் பல்வேறு பணிகள் வாயிலாகக் கடமை ஆற்றிய நாட்டுத் துறவியாவார்.

தவத்திரு அடிகளாரைப் புரட்சித்துறவி என்றும், மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்றும் நாடு கருதும்.

அடிகளார் எழுத்துக்கள் அனைத்தையும் நூல்வரிசையாகத் தொகுக்கும் போது ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களுக்குக் குறையாமல் 15 தொகுதிகளாக மொத்தம் சற்றொப்ப 6000 பக்கங்கள் அளவில் விரிந்தன. தம் 50 ஆண்டுப் பொது வாழ்வில் அடிகளார் எழுதிய 60 நூல்களையும் பதிப்பாசிரியர் குழு 5 தலைப்புக்களில் வகைப்படுத்தியது. நூற்றொகுதி அனைத்தையும் ஒருசேர வைத்து நோக்கும்போது அடிகளார் மிகச்சிறந்த நூலாசிரியராகச் சிறப்பதை நாம் உணர்கிறோம்.

1999 டிசம்பர் திங்களில் முதல் தொகுதி முகிழ்த்தது. 2001 நவம்பரில் தொகுதிகளின் அச்சுப் பணி முடிந்தது. திருக்குறள் பற்றி மட்டும் அடிகளார் கட்டுரைகள் 4 தொகுதிகளாகச் சற்றொப்ப 1600 பக்க அளவில் விரிந்துள்ளது.

தருமபுரம் ஆதீனம், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகள் ஆகியோர் அளித்துள்ள அணிந்துரைகளில் அடிகளாரின் இறையுணர்வையும், பக்திவழி நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பையும், சைவத்திற்கும், தமிழுக்கும் அடிகள் ஆற்றிய அளவிடற்கரிய பணிகளையும் போற்றியுள்ளனர்.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த திறனாய்வாளர்களான சிலம்பொலி செல்லப்பர். வா. செ. குழந்தைசாமி, தமிழண்ணல், வை. இரத்தினசபாபதி, ஔவை நடராஜன், சிற்பி பாலசுப்பிரமணியன், ச. வே. சுப்பிரமணியம், கு. சுந்தரமூர்த்தி முதலியோர் அடிகளார் நூல்வரிசையை ஆராய்ந்து, தேர்ந்து, தெளிந்து அடிகளாரின் சிந்தனை வளத்தையும், சமூக உணர்வினையும், பல்துறை அறிவினையும், மனித நேயத்தையும், தமிழாற்றலையும், அழுத்தமாக எடுத்துக் கூறும் பெற்றியினையும் தங்கள் அணிந்துரைகளில் சான்றுகளுடன் விளக்கி உள்ளனர்.

பொதுவாக 15 தொகுதிகளிலும் அடிகளாரின் ஆளுமை வெளிப்பட்டாலும், மூல இழையாகச் செல்வது தமிழ்ச் சமூகத்திற்குரிய விழுமங்கள். உன்னதங்கள், உயர்வுகள். சிறப்புக்களே. பழந்தமிழ் இலக்கியமாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் தொடங்கி பாரதி பாடல்வரை தமிழரின் தனி அடையாளங்களின் வேர்களை அவை இனங்காட்டுவன. அயல் வழக்கினைத் தமிழ்வழக்கு வென்ற திறத்தினை அடிகளார் அழுத்தம் திருத்தமாக ஆவணமாக்கி விடுவார்.

சமயக் கட்டுரைகள் பொதிந்துள்ள இத்தொகுதிகள் வாழ்முதலாகிய இறைவனைப் பற்றிய அடிகளாரின் சிந்தனைப் பதிவுகளைக் கொண்டன. இந்தப்புலம் அடிகளாரின் ஆன்மா விரும்பும் விருப்பமான நிலம், அவர்கள் நாளும் பயணம் செய்யும் ஞானபூமி. ஆதலால் சமயம்பற்றி அடிகள் கொண்ட அனைத்துக் கருத்துக்களின் கருவூலமாக இத்தொகுதிகள் திகழ்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும் என்னும் கொள்கை உருவாக்கம் அடிகளாரின் தனிக்கொடை.

தமிழ் இலக்கியம் சமயம் சார்ந்த இலக்கியம். சமணமும் தமிழும். பௌத்தமும் தமிழும் எனப் பகுத்தாலும் இலக்கிய நிலப்பரப்பில், பங்களிப்பில் சைவமும் தமிழும்தான் தனிச்சிறப்பு பெறுகிறது.

அடிகளார் சிவநெறியினைச் சிரத்திலும் சிந்தையிலும் வைத்துப் போற்றிக் கூறிய, எழுதிய கருத்துக்கள் சைவ சமயத்திற்குப் புத்துணர்வையும், புத்தொளியையும் நல்குவன. புரட்சித் துறவியாகிய அடிகளாரின் புதிய பார்வை திருமுறைகளை மறுமைக்கு மட்டுமின்றி இம்மைக்கும் வழிகாட்டும் என நிறுவுவன. மனிதனை மேம்படுத்தும் எண்ணங்களை, சீரிய செவ்வறங்களைக் கூறுவன திருமுறைகள்.

அடிகளார் அப்பரடிகளிடம் கொண்ட அன்பு அளவிடற்கரியது. நாவுக்கரசர் காட்டிய நல்லறங்களை நாளும் சொல்லி மகிழ்பவர். எட்டாந் திருமுறை ஆகிய திருவாசகத்தை எண்ணி எண்ணி எப்போதும் இறும்பூது எய்துபவர். சேக்கிழார் இயற்றிய 12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்தை நிகழ்கால சமூக வாழ்க்கையோடு இயைத்துக்காட்டி, சைவ சமயம் என்பது தமிழர் வாழ்க்கை நெறி என்பதை ஒல்லும் வகையெலாம் உணர்த்தியவர்.

கோயிற் பண்பாடு என்னும் கோட்பாட்டை விளக்குவதில் அடிகளார் முதல் வரிசையர். சைவ சமய, தோத்திர, சாத்திர சரித்திரக் கருத்துக்களில் ஆழங்கால் பட்டவர். பரந்துபட்ட தமிழ்நூற் பயிற்சியும் வாழ்வியல் அனுபவங்களும் இத் தொகுதிகளில் ஒளி வீசுகின்றன.

இறைவன், பிறவித்துன்பம், வினைக் கொள்கை,ஊழ் உண்மை, ஓதி உணர்தல், புலனடக்கம். மெய்ப்பொருளை உணர்தல், விண்ணும் மண்ணும், வீட்டுலகம் முதலியன பற்றி அடிகளார் கூறிச் செல்லும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு.

அடிகளார் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுற மொழிந்திடுதல் என்ற இரு நிலையிலும் சிறப்பாக விளங்கியவர் என்பதனை இத்தொகுதிகள் பறைசாற்றுகின்றன. இலக்கியக் கட்டுரைகளாயினும் சரி. சமயக் கட்டுரைகளாயினும் சரி அடிகள் மனித குல மேம்பாடு ஒன்றிற்கே உயர்வளிப்பவர் என்பது விளங்கும்.

இந்நூல் வரிசையால் அடிகளாரிடம் தமிழ் முனிவர் திரு.வி.க.வின் சமுதாயப்பார்வையும், சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களின் சமுதாய அரசியற் பார்வையும் இலங்கியதை அறியலாம். தமிழ் தேசியம் வேர்கொள்ள அடிகளார் ஆற்றிய பணி தமிழர் வரலாற்றில் பதிவுசெய்யப் பெற்று விட்டது.

அருள் நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை, திருக்குறட் பேரவை, திருவருட்பேரவை முதலிய அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமிழ் இனம், நாடு முன்னேறப் பல்லாற்றானும் பணிசெய்தவர்.

உலகின் பெரும் பகுதியினைப் பலமுறை வலம் வந்தவராதலால் இவர் தம் எழுத்தும் பேச்சும் சமூக உணர்வுடன் சிறந்து விளங்கின. பயணத்திற்குப் பயணம் இவரது அனுபவ அறிவு செழுமை பெற்றதை இந்நூல் வரிசை பரிணாம முறைப்படி உணர்த்துகிறது. சமுதாய உய்வுக்கு அடிகள் உரைத்த பொன்மொழிகளின் படிமுறை வளர்ச்சியை. வாழ்வியல் அறங்கள் பற்றிய அடிகளாரின் நோக்கும் போக்கும் மாற்றம் பெற்ற திறத்தினை இவ்வரிசை நூல்கள் உயிரோவிய மாக்குகின்றன. தமிழகத் துறவிகள் வரலாற்றில் அடிகளாரைப்போல அனைத்துலகையும் வலம் வந்தவர் வேறு எவரும் இலர்.

பரிபாடலின் பக்திநெறி பற்றிப் பேசினாலும், பாரதியின் பக்திமைபற்றிப் பேசினாலும் பக்திநெறியில் அடிகளின் பார்வை புதியது. ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என்கிற கோட்பாட்டை. ‘நாமார்க்கும் குடி அல்லோம்’ என்னும் நாவுக்கரசரின் குரலோடு இணைத்து சுதந்திரக் குரலாக எடுத்துரைப்பார். விடுதலை வேள்விக்கு வித்திட்டவர் என வீறார்ந்த மரபை விளக்கிக் கூறுவார்.

கடவுட் பற்றும், கவிதைப் பற்றும், கட்சிசாரா நாட்டுப் பற்றும் அடிகளார் எழுத்துக்களில் எங்கும் பரக்கக் காணலாம்.

பாரதியாரை ப. ஜீவானந்தம் ஆரவாரமாக, உணர்ச்சி பொங்கச் சொல்லிக் கூத்தாடுவார். அடிகளாரோ ஆரவாரமின்றி ஆழ்ந்த அமைதியோடு அழகு தமிழில் ஆற்றொழுக்காக எடுத்துரைப்பார்.இவர் எழுத்து நடை திரு.வி.க.வைப் போல, பேச்சு நடை தழுவியது. சிறிய தொடர்கள் சிந்தனையைத் தூண்டுபவை.

ஒட்டுமொத்தமாக எழுத்துக்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்துப்பார்க்கிறபோது அடிகளாரின் அறிவாற்றலும், எழுத்தாற்றலும், தமிழாற்றலும் நம்மை வியப்படையச் செய்கின்றன. ஒரு நொடியும் வீணாக்காது தமிழினம் உய்ய அடிகள் ஆற்றிய அரும் பணிகளின் ஆழத்தையும், அகலத்தையும் விரிவையும் இந்நூல் வரிசைகள் விளக்குகின்றன. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

அணிந்துரை
பேராசிரியர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி,
அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம்,
தருமபுரம் - மயிலாடுதுறை.

பழமையும் பண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் உடைய சைவத் திருமடங்களுள், திருவண்ணாமலை ஆதீனமும் ஒன்றாகும். அத்திருமடத்தில் எழுந்தருளியிருந்து அருட் செங்கோல் ஓச்சி வந்த திருப்பெருந்திரு. குருமகா சந்நிதானம், தமிழ் மாமுனிவர், தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களாவர். 1949 முதல் 1995 வரையிலான 46 ஆண்டுகள் குருமூர்த்திகளாய் இருந்தருளியவர்கள்.

நாளும் இன்தமிழால் தமிழ்பரப்பியருளிய குருமூர்த்திகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய பெருமை உடையவர்கள் ஆவர். அவ்வகையில் அமைந்த நூல்களை அன்பிற்குரிய பதிப்புச்செம்மல் திருமிகு. ச. மெய்யப்பன் அவர்கள். திருவண்ணாமலை ஆதீனத்தில் தற்பொழுது குருமூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அடிகளார் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம், ஐவகையில் அந்நூல்களை அமைத்து வெளிப்படுத்த உளங்கொண்ட வகையில், சமயம் குறித்து இதுபொழுது வெளியிட்டுள்ளார்கள். இந்நன்முயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியதாகும். இவ்வகையில் தவத்திரு குருமூர்த்திகளும் பதிப்புச்செம்மல் அவர்களும் போற்றுதற்கும் பாராட்டுதற்கும் உரியவர்கள் ஆவர்.

திருக்குறள், இலக்கியம், சமயம், சமுதாயம், பொது என அமைத்துக்கொண்ட பாங்கில் திருக்குறள் பற்றிய குருமூர்த்திகளின் சிந்தனைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவை 1647 பக்கங்களைக் கொண்டவையாகும்.

அருட்தந்தையாக விளங்கிய திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். இவ்வாய்வின்வழி வழங்கியிருக்கும் - கருத்துக்கள் மிகப் பலவாம். அவை ஆழ்ந்து அகன்ற அரிய சிந்தனைக் கருவூலங்களாக அமைந்துள்ளன.

அவற்றுட் சில:

“மானுட வாழ்க்கை சிறப்புறப் பல நலங்கள் தேவை. அவற்றுள் சிறப்பானவை உடல் நலனும் ஆன்ம நலனுமாம். காற்று, தண்ணீர், உணவு, உழைப்பு. குடியிருப்பு மருந்து ஆகியவற்றால் உடல் நலம் சிறக்கும். கல்வி, கேள்வி, அறிவு, மணவாழ்க்கை, பிரார்த்தனை ஆகியவற்றால் - ஆன்ம நலம் சிறக்கும்.”

“தாய்மொழி, நாட்டுமொழி, உலகப்பொதுமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றல் நலம்.”

“அழுக்காறு தோன்றுதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, சமுதாய அமைப்பு முறையில் உடையார், இல்லாதார் என்ற முறையில் வாழ்வியல் அமைந்திருப்பது. இரண்டு, உரிய வாய்ப்புக்கள் அனைவர்க்கும் உரிமையாக்கப்படாமல் சிலருக்கே உரிமையாக்கப்பட்டிருப்பது.”

“உண்டலில் வாய்க்கினிதென்று உண்ணாது உடற்கினிதாயவற்றையே உண்டல் வேண்டும்.”

“தமிழைக் கற்போர்; திருக்குறள், திருமுறைகள், சங்க இலக்கியங்கள் ஆகிய இவற்றை முழுமையாகவும் முறைமையாகவும் படித்தல் நன்று.”

“வேலை வாய்ப்புக்கள், இடஒதுக்கீடுகள், சாதிகளை மட்டும் அடிப்படையில் வைத்துக் கொண்டு அமைவது தக்கதன்று. குடும்ப வருவாய் அடிப்படையில் அமைதல் வேண்டும். அவையும் ஒரு கால எல்லைக்குட்பட்டிருத்தல் வேண்டும்.”

“திருக்குறள் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியையே கூறுகிறது. இதனை,

“குடிதழிஇக் கோலோச்சம் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு ”
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”

என வரும் திருக்குறள்களால் அறியலாம்.”

“மக்கள் வாழ்வுக்கும் அரசுக்கும் பொருளே அடிப்படை. திருக்குறள் காட்டும் பொருளியல் நுட்பமானது. திருக்குறள் தனியுடைமைச் சமுதாயத்தை மறுப்பதன்று. ஆயினும் தனி உடைமைக்குச் சில அறநெறிகளை - விதிகளை விதிக்கிறது.

1. வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள்
2. பழி மலைந்து எய்திய ஆக்கம்
3. தாழ்விலாச் செல்வர்
4. தீதின்றி வந்த பொருள்

இத்தொடர்கள் உணர்தற்குரியன.”

“சமயவாழ்வு இருவகையில் சிறத்தல் வேண்டும் என்பர் திருவள்ளுவர். 1. இறைவழிபாடு 2. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல்.”

“மெய்ப்பொருளார் பொறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். சண்டிகேசுவரர் ஒறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். இருவரும் போற்றத் தக்கவரே. காரணம், முன்னையவர் தன் சார்பில் நேர்ந்த கேட்டைப் பொறுத்தார். பின்னையவர், ஓர் இனத்தினுடைய பண்பாட்டு நாகரிகத்தைக் கெடுக்கின்ற கேட்டை ஒறுத்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டுக்கென்று பயன்படுகின்ற மூர்த்தியை, அந்த வழிபாட்டுச் சடங்கைக் கீழ்ப்படுத்தியதால் சண்டிகேசுவரர் வெகுண்டார்” என்பது அடிகளாரின் திருவுள்ளமாகும்.

நாவரசர் பொறுத்தாற்றியதும், ஞானசம்பந்தர் ஒறுத் தாற்றியதும் அடிகளாரின் சிந்தனையோடு ஒப்பிட்டு மகிழ்தற்குரியன அன்றோ?

“கூற்றம் குதித்தலும் கைகூடும்” என்ற திருக்குறளுக்கு, மார்க்கண்டேயர் வரலாற்றை அடிகளார் நினைவு கூர்ந்த சிந்தனை அரியதாகும்.

இனைய பல அரிய சிந்தனைகளையும், திருக்குறள் அமைப்பு முறைகளையும் விளக்கி இருக்கும் குருமூர்த்திகள்; பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாணக்கியர் போன்ற பல அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆங்காங்கு ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் திறம் அரியதாம்.

இக்குருமூர்த்திகள் தம் அரிய கருத்துக்களை, ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ எனக் கூறுதற்கு ஏற்ப, உலகெங்கும் சென்று வழங்கி வந்தவர்கள். அவை என்றும் நிலைபெறுதற்கென நூல் வகையானும் வரவேண்டுமெனத் திருவுளம் கொண்டு, அருள் பாலித்திருக்கும் குருமூர்த்திகள் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். அவர்களின் திருக்கருணையையும், பதிப்புச்செம்மலாய் விளங்கிவரும் அரிய இனிய அன்பராய ச. மெய்யப்பனார் அவர்களையும் போற்றியும் வாழ்த்தியும் மகிழ்கின்றேன்.



முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ், அருள்நெறித் தந்தை என அனைவராலும் அன்பொழுகப் பாராட்டப்பெற்ற குருமகாசந்நிதானம் ஆற்றிய அற்புதச் சொற்பொழிவுகள் சமய இலக்கியம் என்று முகிழ்த்திருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. சமயம் மனிதனைச் சமைப்பதற்கே; பண்படுத்துவதற்கே! சமயம் வாழ்க்கை நெறி; வாழ்வாங்கு_வாழ வழிகாட்டும் நெறி, சமய உலகம் சமூகத்தை விட்டு விலகிச் சென்ற பொழுதுதான் - ஏழாம் நூற்றாண்டில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தப் பெருமானாலும், நாவுக்கரசர் பெருமானாலும் ஏற்றப்பட்ட ஞானவேள்வி சுடர்விட்டுப் பிரகாசித்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் உச்சக் கட்டமாகப் பொங்கிப் பரிணமித்தது. இடையில் சமய உலகில் ஒரு தொய்வு ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமய உலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள் அருள்நெறித் தந்தை குருமகாசந்நிதானம் தவத்திரு அடிகளார் பெருமான். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் “அடிகளார்” என்ற சொல் அவர்கள் ஒருவரைத்தான் குறித்தது. சமயத்தையும் சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கின்ற உறவுப் பாலமாக விளங்கினார்கள். சமூகத்தை விட்டுச் சமயம் விலகிச் சென்ற பொழுது சடங்கும் ஆரவாரத் தன்மையும் நிறைந்திருந்த சமயத்தை மக்களுக்குரியதாக மாற்றிக் காட்டினார்கள்.

சமய இலக்கியத்தை ஓதி உணர்வதோடு அல்லாமல் வாழ்வில் நடைமுறைப்படுத்தினார்கள். நாட்குறிப்பேடு போல் சமய இலக்கிய நாட்குறிப்பேடு ஒன்று பேணப்பட்டது. அதில் அறுபத்து மூன்று நாயன்மார் ஒவ்வொருவரின் நாள் குறிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, கண்ணப்பநாயனாரின் நாளன்று கண்ணொளி வழங்க உதவி செய்தல் என்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும். நாயன்மார்களின் அடிச்சுவட்டில் அவர்களின் தொண்டு வாழ்வியல் மீண்டும் நடைமுறைக்குக் கொணரத் திட்டம் செயற்பட்டது. சமயத்தை இயக்கமாக, வாழ்வியலாக மாற்றுகின்ற முயற்சியில் சிறப்பாகச் செயற்படுத்தினார்கள். உழவாரக் கருவி ஏந்தித் தமிழகம் உலாவந்தார்கள். உழவாரக் கருவி திருக்கோயில்களில் முளைத்த முட்புதர்களை மட்டும் களையவில்லை. சமுதாயத்தில் முளைத்திருந்த முட்புதர்களையும் களைந்தது.

சமய இலக்கியம் வெறும் தத்துவ நூல் அல்ல. அனுதினமும் சமயத்தை வாழ்வில் நடைமுறைப் படுத்திய அனுபவசாரம், ‘அப்பர் விருந்து’ என்ற நூலில் முழங்காலுக்கு மேல் வேட்டி உடுத்தி, உருத்திராக்க மாலை அணிந்த பழைமையான தோற்றத்திற்குரிய அப்பர் பெருமானின் புதுமைச் சிந்தனையைப் புதிய கோணத்தில் சமய அடையாளம் காட்டியுள்ளார்கள்! என்னே புதுமை. இதோ, பானைச் சோற்றுக்குப் பதச் சோறுபோல், அப்பர் பெருமான் பாடலுக்குப் புதிய விளக்கம்.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் விங்கிள வேனிலும்

(Upload an image to replace this placeholder.)

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்று அப்பர் பெருமான் பாடுகின்றார்! இந்தப் பாடலுக்குப் புதிய விளக்கம் குற்றமற்ற வீணையின் இனிய கீதத்தை எல்லோரும் கேட்டு மகிழலாம்! தேவையான நிபந்தனை நம் காதுகளுக்குக் கேட்கின்ற சக்தி வேண்டும், மாலைக் காலத்து அழகிய நிலவை எல்லோரும் பார்த்து மகிழலாம். அதற்குத் தேவையான நிபந்தனை நம் பார்வையில் குறைபாடு இல்லாது இருக்க வேண்டும். வீசுகின்ற தென்றல் காற்று எல்லோருக்கும் பொதுவானது, ஆண்டவனுக்கும் பொதுவானது; அடிமைக்கும் பொதுவானது, அதைப் போலவே பரம்பொருள் எல்லோருக்கும் பொதுவானது, வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பாக, எல்லோருக்கும் பொதுமைப் பொருளாக இறையின்பத்தை அடையாளம் காட்டினார்.

அருள்நெறித் தந்தையின் சமயம் பற்றிய புதிய சிந்தனை எந்நாளும் எண்ணி இன்புறத்தக்கது. உடல் வாழ்வு தன்னலம் பற்றியது; உயிர் வாழ்வு பொது நலம் பற்றியது. சராசரி மனித வாழ்க்கையை உயிர்ப்புள்ளதாக்கி முழுமையாக்கும் உணர்வின் தேவையிலே தோன்றியது சமயம், இதனை மகாசந்நிதானம் “பொதுவில் ஆடுபவன் நிழலின் பொதுமையைக் காணாமல், தீமையை அகற்றாமல் நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடுதட்டிச் செயலிழந்துபோன நமது சமய அமைப்புகள் குறையுடைய நடைமுறைகளே!” என்று சமய உலகை மாபெரும் புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று அறைகூவுகின்றார்கள். சமயம் மனிதத்தை மேம்படுத்த! சமயம் மனித வாழ்வுக்கே! சமயம் மனிதத்தைப் புனிதமாக்க என்ற உயர்நிலையில் சமய உலகப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அருள்நெறித் தந்தையின் பாதையில் பயணம் செய்ய, ‘‘சமய இலக்கியம்’’ வாழும் மானிடத்திற்கு அற்புத வழிகாட்டியாகும்.

இவ் அரிய நூல் ஆக்கத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தொகுப்பு நூலாக வெளியிடும் மணிவாசகர் பதிப்பக ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்! இந்நூல் தொகுப்புக்குப் பெரிதும் பாடுபட்ட நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு, பலவகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமையாற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தெ. முருகசாமி ஆகியோருக்குப் பெரும் நன்றியறிதலுடன் கூடிய பாராட்டுக்கள்! இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நமது சமய உலகப் பாதையில் பயணம் செய்ய “சமய இலக்கியம்” வழிகாட்டும் என்று நம்புகின்றோம். ‘சமய இலக்கியம்’ இயக்கமாக மாறினால் அதுவே சமய உலகத்தின் மாபெரும் புனருத் தாரணம் ஆகும். ‘சமய இலக்கியம்’ புதிய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் என்று இறையருளைப் போற்றிப் பிரார்த்திப்போம்!

உள்ளடக்கம்