குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11/தமிழும், சமயமும், சமுதாயமும்

2. தமிழும், சமயமும், சமுதாயமும்


அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய அருமை நண்பர் சண்முகவேல் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! இரண்டாவது சுற்றாக, கடல் கடந்து வாழ்கின்ற உங்களைப் பார்க்கவும், கலந்து பேசிப் பழகவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், துணை செய்த திருவருளுக்கும், அந்தத் திருவருளுக்குக் கருவியாக நின்ற மகாமாரியம்மன் கோயிலைச் சேர்ந்த ஆலய நிர்வாகிகளுக்கும் ஏனையோருக்கும் என்னுடைய நன்றி, பாராட்டு! வாழ்த்துக்கள்!

பேரவையின் செயலாளர் அருமைக்குரிய நண்பர் பெருமாள் அவர்கள், பல நல்ல செய்திகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். நான் இப்பொழுது அந்தச் செய்தியில் நுழைய விரும்பவில்லை. கடைசியில், முடிக்கிறபொழுது நேரமிருந்தால், காலமிருந்தால், அதைத் தொடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அவருடைய பேச்சிலிருந்து சில தலைப்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். காரணம், சில தலைப்புகளைத் தொடர்ந்து விளக்கினால், சில ஒளி பொருந்திய செய்திகள் நமக்குக் கிடைக்க முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக, என்னுடைய நல்லூழோ அல்லது எப்படியோ, எனக்குத் தெரியாது, என்னைப் பாராட்டுகிறவர்களிலேயே சில எதிரிகள் இருப்பார்கள். அவர்களுடைய நோக்கம் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அந்தப் பாராட்டுரைகள் மற்றவர்களுக்கு, அதாவது என்னுடைய எதிர்ப்பாளர்களுக்கும் தீனியாக அமையும். நண்பர் பெருமாள் அவர்கள் அந்தத் திருப்பணியை இன்றைக்குச் செய்திருக்கிறார்கள். அதுவும் நண்பர் சண்முகவேல் அவர்கள்-அவருடைய வீட்டில் வைத்துச் சொன்ன பிறகும் கூட-அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

சென்ற தடவை நான் இங்கே வந்தபொழுது, தமிழுக்கு வித்திட்டுப் போனேன்; தமிழுக்காக வந்தேன் என்று சொன்னார்கள். தான் சென்ற தடவையும் மலேசியா வந்த பொழுது, சமயத்திற்காக வந்தேன்; சமய அமைப்புகள் அப்பொழுது யாதொன்றும் இல்லை. இப்பொழுது அந்தச் சமய அமைப்புகள் எல்லாம் தோன்றிச் சமயம் செழித்து வளர்கிறது. நான் சென்றமுறை வந்த பொழுது இல்லாத திருமுறை இயக்கங்கள் வலிமை பெற்று வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு நல்ல சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. சென்ற தடவை பல நகரங்களில் என்னுடைய கருத்துக்கு உடன்பாடு இல்லதவர்கள், என்னை வினாக்கள் கேட்டுத் திக்குமுக்காட வைத்தனர். பல இடங்களில் அந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்லிப் போனேன். நண்பர் சண்முகவேல் அவர்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இப்பொழுது வினாக்கள் கேட்பவர்கள் எல்லாம் நான் என்ன சொல்லுகிறேன் என்று கேட்கிற அளவுக்கு, மனம் மாறி இருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். இது நாட்டினுடைய வளர்ச்சிக்கும் ஒருவருடைய தொண்டுக்கும் அடையாளமாக இருப்பது. நான் தமிழுக்காக வந்தேன் என்று சொன்னால், அடிகளார் தமிழுக்காகத்தான் பாடுபடுவார், சமயம் அவருக்கு இரண்டாந்தரந்தான் என்று சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையினால் அப்படியொரு, மனப் போக்கை உண்டாக்கி விடக்கூடாது.

தமிழ் உயர்ந்ததாக இருக்கிறது என்பதற்காகத்தான் தமிழை நாம் நேசிக்கிறோம். தமிழ் என்னுடைய தாய் மொழியாக இருக்கிற ஒரே காரணத்திற்காக, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது விபத்தின் காரணமாகவோ, தமிழ் மொழி பேசுகிற ஒரு குடும்பத்தில், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் தமிழை நேசிக்கவில்லை.

அப்படி ஒரு குறுகிய நோக்கமும் அதற்குக் காரணம் அல்ல. பொதுவாக உலகில் பல மொழிகள் உண்டு. எல்லா மொழிகளும் மக்களிடத்தில் கருத்தை வளர்க்கவும், கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யவும்தான் தோன்றின; ஆனால், உலகத்தில் தோன்றிய பல்வேறு மொழிகளை விட, தமிழ் பல துறைகளில் உயர்ந்ததாக இருக்கிறது; செழுமை வாய்ந்ததாக இருக்கிறது. அதற்கு இருக்கிற நீதித் தன்மையும், அறநெறித் தன்மையும் உலகில் இருக்கிற வேறு எந்த மொழிக்கும் வாய்க்கவில்லை என்பதுதான் நான் தமிழை நேசிப்பதற்கு உரிய மிகுதியான காரணம் என்று கூற ஆசைப்படுகிறேன். அது என் தாய் மொழியாக இருப்பது என்பது ஒரு காரணம். அதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடுதான் மதிப்பெண் கொடுக்கலாம். அது என்னுடைய தாய்மொழியாக இருப்பதின் காரணமாக எளிதாகப் பேச, எளிதாக நினைக்க, எளிதாகச் சிந்திக்கத் துணை செய்கிறது என்பதற்கு ஓர் இருபத்தைந்து விழுக்காடு கொடுக்கலாம். ஆனாலும், ஐம்பது விழுக்காடு நான் தமிழினிடத்திலே பற்றாளனாக இருப்பதற்குக் காரணம், தமிழ்மொழி வளர்ந்த முறை தமிழ் வளர்த்த நாகரிகம், தமிழ் வளர்த்த மரபு, தமிழ் வளர்த்த சிறந்த பண்பாடுதான் காரணம். தெளிவாகச் சொன்னால், ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஆங்கிலப் பேரறிஞன், ‘உலகில் இருக்கிற நீதி இலக்கியங்களிலேயே, தமிழில் இருக்கிற திருக்குறளைப் போல ஒரு நீதி இலக்கியம், வேறு எந்த மொழியிலும் உலகத்தில் நான் பார்த்ததே இல்லை’ என்று சொன்னான். ஆக, என்னுடைய அன்னைத் தமிழ் வெறும் மொழியாக மட்டும் வளரவில்லை; வெறும் சொற்குவியலாக மட்டும் வளரவில்லை; சொல்லும் பொருளுமாக, பொருளின் பயனுமாக நடமாடுகின்ற ஒரு பெரிய நாகரிகப் பெட்டகம் என்பதுதான் தமிழ்ப் பற்றுக்குக் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எதிர்பாராத காரணமாகச் சில சமயப் பற்றாளர்கள் தமிழுக்கு எதிர்த் திசையில் இருப்பதின் காரணமாகவே, தமிழுக்கும் சமயத்திற்கும் தொடர்பில்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது. தெளிவாகச் சேக்கிழார் சொல்லுகிறார். திருஞானசம்பந்தருடைய வரலாற்றைப் பாடுகிறார் பெரிய புராணத்தில்! மதுரை நகரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளியிருக்கிறார். அயல் சமயத்தோடு போர் நிகழப் போகிறது. தம்முடைய சமயத்தையும், தம்நாட்டுப் பண்பையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு திருஞான சம்பந்தருக்கு வந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சேக்கிழார் விவரிக்கிற பொழுது, 'செழுந்தமிழ் வழக்கு, அயல் வழக்கின் துறைவெல்ல' என்று சொன்னார். ஆக, சைவம் என்று சொல்லாமல், சித்தாந்தச் சமயம் என்று சொல்லாமல், இந்து சமயம் என்று சொல்லாமல், 'செழுந்தமிழ் வழக்கு அயல் வழக்கின் துறை வெல்ல' என்று சேக்கிழார் வருணிக்கின்றார். ஆக, சைவம் என்று சொன்னாலும், சமயம் என்று சொன்னாலும் அது ஒரு செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது 'செழுந்தமிழ் வழக்காக' ஒரு காலத்தில் இருந்தது.

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற

வேண்டும் என்றும் சேக்கிழார் பாடுகிறார். அந்தத் துறையில் தமிழை நேசிக்கிறோம் என்று, சொன்னால், ஏதோ நூற்றுக்குச் சில விழுக்காடு தமிழ்ப் பற்றாளர்கள் சமயப் பற்றாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களைக் கூட அறிஞர் அண்ணா அவர்களைக் கூட தமிழ் மந்திரம் திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம், 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற கருத்து, கொள்கை, கோட்பாடு, ஈர்த்துத் தன்னிடத்திலே ஆட்படுத்தியதால், அவர்கள் மீண்டும் தமிழகத்தில்-மக்கள் மன்றத்தில், 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையை வைத்தார்கள். அவர் பிறந்து வளர்ந்த பாசறை ‘கடவுள் இல்லை’ என்று சொல்லுகின்ற பாசறை. அது நெடிய காலத்திற்குத் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துவரும், என்ற நம்பிக்கை அண்ணா அவர்கட்குக் குறைவாக இருந்து அதன் காரணமாக, அதிலிருந்து வந்த பொழுது ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது நம்முடைய ஆன்றோர் கொள்கை, இந்த நெறியை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகவும், துணிவாகவும் தம்முடைய தம்பிகளுக்கு அவர் வைத்தார் என்று சொன்னால், அந்த நெறியைக் கூடத் தந்தது செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, தமிழைச் சொல்ல வந்தேன் என்று சொன்னால் அதனோடு சமயம் என்பதையும் சேர்த்து நண்பர் பெருமாள் அவர்கள் சொல்லியிருந்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்திருக்கும். எனவே, செழுந்தமிழ் வழக்கு என்று சொன்னால், அது ஒரு சைவம், அது ஒரு சமயம் என்று பொருள்.

உலகிலேயே இன்றைக்கும். கூட எடுத்துக் கொண்டாலும் உலகப் பொதுமொழி என்று பேசப்படுகிற ஆங்கிலமானாலும் சரி, மொழிக்கு இலக்கணம் உண்டு; சொல்லுக்கு இலக்கணம் உண்டு. ஆனால் மனிதர்கள் வாழுகிற நெறிக்கு இலக்கணம் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இங்குதான் தொல்காப்பியன் முதன்முதலாக வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தான். வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட அதுவும் இன்றல்ல, நேற்றல்ல-மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு இலக்கணம் கண்ட பெருமை, நம்முடைய தமிழுக்கு உண்டு என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும் என்பது என்னுடைய விழைவும், விருப்பமும் கூட ஆக, ஒருவனும் ஒருத்தியுமாக மனையில் கூடி வாழ்கின்ற வாழ்க்கைக்கு, அகத்திணை என்றும், அவர்களே சமூகத்தில் கொள்கின்ற உறவுகளுக்கும், பொருள் செயல் வகைக்கும், செருக்களங்களுக்கும், ஆட்சிக்கும் அரசியலுக்குமாகப் ‘புறத்திணை’ என்றும், இரண்டு இயல் இலக்கணங்களை நம்முடைய நாடு கண்டது. தொல்காப்பியர் காலந்தொட்டு நம்முடைய மொழி வளர்ந்த மொழி. தொல்காப்பியம் இலக்கணம் என்பதை மறந்துவிடக் கூடாது. உலகில் சாதாரணமாக, மொழி வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். இலக்கியத்திற்கு இலக்கணம் செய்வார்களே தவிர, இலக்கணத்திற்கு இலக்கியம் செய்கிற பழக்கம் இல்லை என்று. ஆக, இலக்கணம் தோன்றுவதற்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு ‘செழுந்தமிழ்’ இலக்கிய மரபு தமிழில் தோன்றி மலர்ந்திருக்க வேண்டும்.

தமிழனுடைய வரலாற்றுத் தொன்மை மிகப் பன்னெடும் நாட்களுக்கு அப்பால் செல்கின்றது. கடல் கொண்ட, குமரி நாட்டில், மதுரை நகரத்தைப் போன்ற மிகப் பெரிய திருக்கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல் தமிழ்ச் சங்கமே இன்றைக்கிருக்கும் மதுரையில் இருந்ததன்று. முதல் தமிழ்ச் சங்கம் கடல் கொண்ட தென்குமரி நாட்டில் நடந்தது. அந்தத் தென்குமரி நாட்டில் பல்யாகாசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் ஒருவன் ஆண்டிருக்கிறான். அவன் வேறு யாருக்கும் தாழாதவன்; எந்த அரசுக்கும் தாழாதவன் ஆனால், சங்கச் சான்றோர்கள்-முது தமிழ்ப் புலவர்கள் அவனுடைய குடையைப் பார்த்து, ‘யாருக்கும் உன்னுடைய குடை தாழாது போனாலும், முக்கட் செல்வன் நகர்வலம் செயற்கு உன்னுடைய குடை தாழ்க’ என்று சொன்னார்கள். ஆக, எங்கும் தாழாத கொற்றக்-குடைகள்-வெற்றிக் குடைகள், எங்கும் தாழாது இருக்கின்ற முக்கட் செல்வனாகிய சிவபிரான் திருக்கோயில் முன்னாலே தாழ்ந்தன என்று சங்க இலக்கியம் பேசுகிறது. எனவே, தமிழர் வாழ்வோடு ஒட்டி வளர்ந்தது சமயம் தமிழோடு வளர்ந்து நின்றது சமயம் என்பதைத் தயவு செய்து மறந்து விடக் கூடாது. ஆகவே என்றைக்குத் தமிழிலிருந்து சமயத்தைப் பிரிக்கிறோமோ, அல்லது சமயத்திலிருந்து தமிழைப் பிரிக்கிறோமோ, அன்றைக்கு இரண்டுக்கும் அதில் விபத்து ஏற்படும் என்பதை நான் உணர ஆசைப்படுகிறேன்; உணர்த்தவும் ஆசைப்படுகிறேன்.

மொழி வாயில் என்பதே ஒரு நாகரிகத்தை ஊட்டுவதற்காக, வளர்ப்பதற்காகத்தானே தவிர, மொழி ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்காக மட்டுமன்று. இந்தத் துறையில், தமிழ் இலக்கியத்திலே நான் வரிசைப்படுத்திக் கொண்டு போனால், ஏராளமான சான்றுகளை என்னால் சொல்ல முடியும் ஒளவைப் பாட்டியார் இருக்கிறார். சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கிடைத்தது அதியமானுக்கு! இன்றைக்கு யாருக்குத்தான் சாகப் பிரியம். நிறையப் பேர் இன்றைக்குச் ‘சாக வேண்டாம்’ என்ற நினைத்தாலும் சாவு வருகிறது. சிலபேர் செத்துப் போக வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்; சாவு வரமாட்டேன் என்கிறது என்பர். சில பேர் பொய்ம்மையாகச் சொல்லுகிறார்கள், செத்துப் போனால் தேவலாம் என்று. ஆனால், அதியமானுக்கு ஒரு நெல்லிக் கனி கிடைத்தது. சாவைத் தடுக்கும் நெல்லிக்கனி, அதை உண்டால் பன்னெடுங்காலம் வாழலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், மண்ணை ஆளுகின்ற ஓர் அரசன் வாழ்வதைவிட, மாத்தமிழை ஆளுகின்ற ஒரு கவிதை மூதாட்டி-ஒளவைப் பாட்டியார் வாழ்வது, நாட்டிற்கு நலன் தரும் என்ற நம்பிக்கையால், ஒளவைப் பாட்டிக்குக் கனியினுடைய இரகசியத்தைத் தெரிவிக்காமலேயே அதியமான் கொடுத்து விடுகிறான். அவள் வாங்கி உண்கிறாள். அதற்குப் பிறகு இந்தக் கனி உண்டவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் என்று சொல்லுகிறான் அதியமான். ஆக, ஒரு மண்ணை ஆளுகின்ற அரசன், தான் வாழ்வதைவிட, மாத்தமிழை வாழ்விக்கிற ஒரு கவிதைச் செல்வி, கவிதை அரசி, வாழ்வது பெரிது என்ற கருத்தில் கனியைக் கொடுக்கிறான். உடனே அம்மையார் பாடுகிறார்கள். எவ்வளவு அருமையான கற்பனை வளம் என்று பாருங்கள்.

நம்முடைய சிவபெருமானுக்குத் ‘திருநீலகண்டர்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்தக் கண்டம் கருத்திருக்கும். கருத்த கண்டத்திற்கும் ‘கருமைக் கண்டம்’ என்று திருமூலர் பெயர் சொல்வார். நம்முடைய நாட்டில் மட்டுமல்ல; மனித உலகத்தில் மட்டுமல்ல; தேவர் உலகத்திலே கூட தலைவர் நாற்காலிகளுக்குப் போட்டி அதிகம். அதற்கு ஏராளமான கீழறுப்பு வேலைகள்; மேலறுப்பு வேலைகள், சூழ்ச்சிகள், தந்திரங்கள். இவைகள் தேவர்களிடத்தில் இருந்து நாம் கற்றக் கொண்டவையா? அல்லது மனிதர்களிடத்தில் இருந்து தேவர்கள் கற்றுக் கொண்டவையா? எனக்குத் தெரியாது. மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். எனவே இந்தப் போட்டிகள் அங்கு மிகுதியாக ஏற்பட்டு, எல்லா நாற்காலிகளும், எல்லா மரியாதைகளும், சிவபெருமானுக்கே போகிறது என்று கவலைப்பட்ட தேவர்கள் உண்டு. எனவே, ஒரு காலத்தில் இதற்கு ஒருசோதனைக் காலம் வந்தது. தலைவர்களுக்கு வருகிற சோதனை என்னவென்று நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு வருகிற சோதனையெல்லாம், இடர்ப்பாடுகள் வருகிற பொழுது தலைமையில் நிற்கப் பிரியப்படுகிறார்களா என்பதுதான். தொல்லைகள் வருகிற பொழுது தன்னுடைய தலையைக் கொடுத்தும் அந்தத் தொல்லைகளிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காப்பாற்ற விரும்புகிறார்களா என்பதுதான் தலைவனுக்குரிய சோதனை; வேறு ஒன்றும் இல்லை.

அசுரர்களும், அமரர்களுமாகச் சேர்ந்து பாற்கடலைக் கடைகிறார்கள். கடைகிறபொழுது முதன் முதலில் நஞ்சு தோன்றுகிறது. நஞ்சு தோன்றியவுடனே அமரர்கள் மொத்தமாக ஓடுகிறார்கள். நாற்காலியை விரும்பி வந்து உட்கார்ந்தவர்கள் வேள்விகளை விரும்பி வந்து அவிப் பொருளை வாங்கியவர்கள், இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் ஓடுகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து சிவபெருமானிடம் ஓடி ‘ஐயோ ஆல கால நஞ்சு வந்து விட்டது’ என்று அலறுகிறார்கள். பெருமான் பார்த்தார். சிரித்த முகத்தோடு இந்த அமரர்கள் அசுரர்கள் வாழட்டும் என்ற பெருமிதத்தோடு, அந்த நஞ்சை வாரி உண்கிறார். வாழ்க்கைத் துணை நலமாக அமைகிறவளின் கடமை தன்னுடைய கணவன், துணைவன் சாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது; எந்தவிதமான சோதனைகள் இருந்தாலும் அவள் தொடர்ச்சியாகத் தன் தலைவனுடன் இருக்க வேண்டும்; நிழல் போல இருக்க வேண்டும். இது நம்முடைய பெரிய புராண வரலாற்றில் மட்டுமன்றி, இறைவன் இறைவி வரலாற்றிலும் பார்க்கிறோம். உண்ட நஞ்சு தொண்டைக்குள் இறங்குகின்ற நேரத்தில், உமையம்மை ஓடி வந்து, கழுத்தைப் பிடிக்கிறாள். பிடித்ததின் காரணமாக நஞ்சு அங்கே தங்கி விட்டது. அது நீலகண்டம் ஆயிற்று கருத்த கண்டம் ஆயிற்று கருணைக் கண்டம் ஆயிற்று. உடனே அமுதம் தோன்றியது. சிவபெருமான் எங்கே? என்று தேடிப் பார்ப்போரையே காணோம். தெளிவாகச் சொன்னால் சிவபெருமானை மறந்து கூடப் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. அமுதம் தோன்றியவுடன் எல்லாரும் ஓடிப் போய் அமுதத்தை உண்ண ஆரம்பித்தார்கள்; குடிக்க ஆரம்பித்தார்கள்.

இளங்கோவடிகள் இந்த அருமையான கற்பனையை நினைத்து நினைத்து மகிழ்ந்து பாடுகிறார்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத
நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

என்கிறார். சாவா மருந்தைச் சாப்பிட்டவர்கள் எல்லாம் செத்துப் போனார்கள். சாவதற்கே உரிய நஞ்சைக் குடித்தும் நீ வாழ்கிறாய் என்று சொன்னால் அது இறைவன் என்கிற ஒரு காரணத்தினால் மட்டும் இல்லை. இறைவனுக்கு இருக்கின்ற சில குணங்கள், சில இயல்புகள்தான் காரணம். தாம் வாழ்வதைவிட மற்றவர்கள் வாழ்வது பெரிது என்று நினைக்க வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்க்கைதான் பெரிய வாழ்க்கை. அதே மாதிரி சாதனையை மனிதனும் முயன்றால் செய்ய முடியும்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

என்பது திருக்குறள்.

எதிரே ஒருவர் இருக்கிறார். நட்டவன் போல இருக்கிறார். நண்பர் போல இருக்கிறார். பழகினவராக இருக்கிறார்; அவரே கொண்டு வந்து நஞ்சை வைக்கிறார். அது நஞ்சு என்றும் தெரிகிறது. திருவள்ளுவரைப் பார்த்து, “இவர் நஞ்சை வைத்திருக்கிறாரே! அதுவும் என்னோடு பல காலம் பழகிய நண்பர் பெருமாள் வைத்திருக்கிறாரே! ஒருங்கிணைப்புச் செயலாளர் வைத்திருக்கிறாரே, குடிக்கலாமா? வேண்டாமா?” என்று திருவள்ளுவரைக் கேட்டால், ‘குடி’ என்று சொல்லுகிறார். ‘நீ நஞ்சைக் குடி, நீ நிச்சயமாகச் சாகாமல் வாழ்வாய்’ என்று சொன்னார். என்ன? என்று கேட்டால் விளக்கம் சொல்லுகிறார். உலக நாடுகளிலே கிரேக்க நாட்டிலே அறிவு தோன்றியது. ‘அறிவினாலே சிந்தித்துப் பார்’ என்று சொன்னான் கிரேக்க அறிஞன். ‘எதையும் கண்மூடித் தனமாகச் செய்யாதே. அறிவினால் ஆய்ந்து செய்’ என்று சொன்ன ஒரே குற்றத்திற்காக அன்றைக்கிருந்த முட்டாள் உலகம், அந்த அறிஞனுக்கு உலக மேதைக்கு நஞ்சைக் கொடுத்துச் சாகடித்தது. அவன் பெயர் சாக்கரடீஸ் - கேள்விப்பட்டிருப்பீர்கள். அவனுக்கு நஞ்சு கொடுத்தபொழுது, அவன் நஞ்சை வாங்கிக் குடித்தான். தைரியமாகக் குடித்தான்; பண்பாட்டோடு குடித்தான்; ஆனால் செத்துப் போனான். ஆனால், தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் அப்படி ஒரு ஞானத் தலைமகனுக்கு நஞ்சு கொடுத்தது அந்த நாடு. ஏழாம் நூற்றாண்டில் இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தில் ஒரு ஞாயிற்றொளி நடமாடியது. அந்த ஞாயிற்றொளி நடமாட்டத்தினால், அந்த நாடு முதுகெலும்பு பெற்றது என்று கூடச் சொல்லலாம். வீறு தமிழ் அந்த நாட்டில் நடைபோட்டது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை

என்றார். ஒரு பெரிய அருள்ஞான முழக்கத்தை அந்த உருவம் செய்தது. அவர் பெயர் அப்பரடிகள். அவருக்கும் அந்தக் காலச் சமுதாயம் நஞ்சைக் கொடுத்தது. ஆனால், அப்பரடிகள் நஞ்சைக் குடித்தார்; மகிழ்ச்சியோடு குடித்தார். தயவுசெய்து மறந்து விடாதீர்கள்; சாக்கரடீஸ் செத்தது போல அப்பரடிகள் சாகவில்லை. காரணம், சாக்கரடீஸ் தோன்றிய நாட்டில் நஞ்சு குடித்தும் வாழ்வதற்குரிய கலையைக் கற்றுக் கொடுக்கிற வள்ளுவர் தோன்றவில்லை. தமிழ் நாட்டில் திருவள்ளுவர் தோன்றியிருந்தார்; நஞ்சைக் குடித்தும் வாழ முடியும் என்ற ஒரு நயத்தக்க நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தார். அந்த வழியில் அப்பரடிகள் குடித்தார். என்ன கலையோடு, என்ன உணர்வோடு நஞ்சு குடித்தால் வாழலாம் என்று சொன்னால், நஞ்சு வைத்திருக்கிறார் இந்தப் பெருமாள் என்பது நான் அறிந்து கொண்டு விட்டேன்; அது நஞ்சு என்பதைத் தெரிந்து கொண்டு விட்டேன். தெரிந்தும், பெருமாளுக்கு நான் அறிந்தது தெரியாமல் அதை நான் குடிக்க வேண்டும். அது நஞ்சு என்று தெரிந்து கொண்டு விட்டேன் என்று சொன்னால், உடனே மனதில் தோன்றுகிற எண்ணம். முகத்தில் படரும் ஒருவித மரண பயம் முகத்தில் தோன்றி, மரண பீதி என்னைப் பிடித்து ஆட்டும். அப்படி ஆட்டுவதைப் பார்த்துப் பெருமாள் ‘ஐயோ! நாம் நஞ்சு வைத்திருக்கிறோம்’ என்ற செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாரே, இந்தச் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ? சண்முகவேல் என்ன செய்வாரோ, என்றெல்லாம் எண்ணிப் பார்க்கும்படி இல்லாமல் யாதொன்றும் இல்லாததுபோல, நல்ல தூய்மையான பாலை வைத்திருப்பதைப் போல, நினைந்து, மகிழ்ந்து குடித்தால், நீ சாவாய் என்று சொல்ல மாட்டேன்; வாழ்வாய் என்ற பொருளில் ‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்’ என்று சொன்னார்.

காரைக்கால் அம்மையார் அதைத்தான் சொல்வார்,

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்

என்று. ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய நெஞ்சு நல்லதல்லாததை நினைக்காமல் நம்முடைய நெஞ்சு நன்மை! நன்மை! நன்மை! என்று நின்னத்திருக்குமானால், நம்முடைய செங்குருதி தூய்மையாக இருக்கும். அந்தத் துாய்மையான இரத்தம் யாருடைய உடலில் ஒடுகிறதோ, அந்தத் தூய்மையான இரத்தத்தினால் நஞ்சை எடுத்துத் தின்று சீரணித்துவிட முடியும். யாருடைய உள்ளம் நன்று என்று நினைக்காமல் தீமைகளையும் சூதுகளையும், பிணக்கையும், பகைமைகளையும் வேற்றுமைகளையும், நினைக்கிறதோ, அவருடைய உடம்பில் ஓடும் இரத்தம், கெட்டுக் குட்டிச்சுவராகி, அது சாக்கடையைப் போல ஆகிவிடுகிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் ஓட வில்லையோ, அங்கே நோயும் இருக்கிறது. யாருடைய உடம்பில் தூய்மையான இரத்தம் இல்லையோ, அந்த உடம்பின் நஞ்சு சேர்ந்தால், அந்த உடம்பைக் கொல்கிறது. எங்கே தூய்மையான செங்குருதி ஓடுகிறதோ, அந்தச் செங்குருதி, உலகத்தின் எல்லாத் தீமைகளையும் எடுத்துச் சீரணிக்கிற சக்தி உடையது என்பது வள்ளுவர் கொள்கை; கோட்பாடு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய நாட்டில் ஒளவைப் பாட்டியார் பார்க்கிறார். இந்த இறைவன் இருக்கின்றானே திருநீலகண்டன், மற்றவர் நஞ்சு குடிக்க முடியாமல் தவித்தபொழுது நஞ்சைக் குடித்தான். மற்றவர்களுக்கெல்லாம் அமுதத்தைக் கொடுத்தான்; எனக்கு என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,

நீ நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக! பெரும நீயே

அந்தத் திருநீலகண்டன் எப்படிச் சாகாமல் வாழ்கின்றானோ, அதேபோல நீயும் சாகாமல் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறாள். இது சங்ககாலப் பாட்டு, புறநானூற்றுப் பாட்டு, நல்ல தமிழ்ப் பாட்டு என்பதை மறந்து விடக் கூடாது. இப்படி ஏராளமான சான்றுகள் உண்டு நம்முடைய தமிழ், சமயத்தோடுவளர்ந்தது என்பதற்கு. எனவே சமயம், தமிழை வளர்த்தது; தமிழ் சமயத்தை வளர்த்தது.

அதனால்தான் ஏழாம் நூற்றாண்டில் நம்முடைய சிவ பெருமானே வழிவழியாகத் தமிழ் கேட்கிற மரபுக்கு மாறாக வழி வழியாகத் தமிழ் கேட்கிற ஆவலுக்கு மாறாக, பிற மொழிகளின் நுழைவுகளை அவர் நினைத்து சகித்துக் கொள்ள முடியாமல், நாளும் இன்னிசையால், தமிழ் கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார். பெருமான் தமிழோடு இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் கொடுத்தார் என்று சொன்னால், இறைவனே காசு கொடுத்துத் தமிழ் இசை கேட்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது என்று சொன்னால், அன்றைக்குத் தமிழுக்கு மாறான, தமிழ்நெறிக்கு மாறான, தமிழ் இயலுக்கு மாறான ஒரு சமய ஊடுருவல், தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. திருஞானசம்பந்தருடைய தேவாரம், சுந்தரருடைய தேவாரத்தைப் படித்தால் வரலாற்றுக் குறிப்புகள் நமக்குத் தெளிவாகின்றன. எந்த ஊரில் இருந்து சொல்கிறார்? எந்த ஊரில் கிளிகள் வேதங்கள் சொல்லுமோ, எந்த ஊரில் கிளிகள் மரங்களில் இருந்தவாறு வேதங்களைச் சொல்லி முழங்குமோ, அந்த ஊரில் இருக்கும் இறைவன், 'தமிழோடு இசை கேட்கும் இச்சையால், காசு நித்தம் நல்கினார்' என்று சொன்னார்.

அது மட்டுமன்று. பல்வேறு இடங்கள்; செல்வியர் அருமையான திருவாசகப் பாட்டு, இறைவணக்கமாகப் பாடினார்கள்.

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

என்ற பாடலைப் பாடினார்கள். இறைவன் மண்புகுகிறான்; மண் சுமக்கிறான். இந்த நாட்டிலே இருக்கிற சமுதாய அமைப்பைப் பார்க்க வேண்டும். சமயமும், சமுதாயமும் ஏதோ நாம் சேர்த்து வைக்கின்ற பொருள்கள் அல்ல. நம்முடைய பழந்தமிழகத்தில் சமயம் வேறு, சமுதாயம் வேறன்று. தமிழ் வேறு, சமயம் வேறன்று.

வைகை ஆற்றிலே பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டிற்கு ஓர் ஆள் அடைக்க வர வேண்டும். ஏழைப் பிட்டு வாணிச்சி ஒருத்தி இருக்கிறாள். பிட்டு விற்று வயிறு வளர்க்கிறாள். அவளுக்கு வீட்டிலே பிள்ளை இல்லை; ஆண் மகன் இல்லை; கூலிக்கு ஆள்பிடிக்கக் காசு இல்லை; அழுகிறாள்; புலம்புகிறாள். எனவே, தனி ஒருத்தியாக அரசனுடைய ஆணைக்கு ஆள் அனுப்ப முடியாமல் ஒரு பெண் வருந்தினாள் என்பதற்காக, மாணிக்கவாசகருடைய வருத்தத்தையும் இந்தப் பிட்டு வாணிச்சியினுடைய வருத்தத்தையும் ஒரு சேர நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறைவனே மண்ணுக்கு வருகிறான்; மண்ணைச் சுமக்கிறான். பிட்டுத் தின்கிறான்; வேலையைச் சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். சிலர் நாடகத்தில் சில குறிப்புகளை நாம் உணர வேண்டும். தாய், குழந்தையிடம் ஒளிந்து காட்டுகிறாள் என்றால், குழந்தையிடம் இருந்து ஒளிய வேண்டும் என்பது தாய்க்கு நோக்கம் இல்லை. தேடுவதன் மூலம் மூளை வளர்கிறதா என்று பார்க்கிறாள். தெருவிலே விளையாடுகின்ற குழந்தையைப் போக்குக் காட்டி விட்டுத் தாய் ஓடி ஒளிந்து கொள்வாள். குழந்தைக்குத் தாயைத் தேடுகின்ற முனைப்பு இருக்கிறதா? பற்று இருக்கிறதா? அதைத் தேடுகிற கூர்மையான புத்திசாலித்தனம் இருக்கிறதா? இவற்றை யெல்லாம் சோதனை செய்வதற்காகத் தாய் விளையாடுகிறாளே தவிர வேறு அல்ல. குழந்தை அழுகிறது என்று சொன்னால் இதோ பார்! இந்தப் பாவித் தாய் குழந்தையினிடத்து கூட வெளிப்படையாக இல்லாமல், ஒளிந்து விளையாடுகிறாளே என்று சொல்லக்கூடாது. அதுபோல ஒளிந்து விளையாடுவது என்பதும் இறைவனுடைய கருணைகளில் ஒன்று. எனவே அவன் வேலை சரியாகச் செய்யாதது போல் நடிக்கிறான். நம்மில் பலர் அப்படி நடிக்கிறோம். நாம் நம்முடைய கடமைகளைச் சரியாகச் செய்யாமல், வாழ்க்கையின் நியதிகளை ஒழுங்காகப் பின்பற்றாமல், நமக்கென்று நியமிக்கப்பட்ட கடமைகளை முறையாகச் செய்யாமல், நாம் சமூகத்தை ஏமாற்றுகிறோம். எனவே யார் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையோ, அவர்களை அரசு ஒறுக்கும் என்கிற ஒரு பண்பாட்டை, நியதியை உலகுக்கு உணர்த்துவதற்காக இறைவன் கடமைகளைச் சரியாகச் செய்யாதவன் போலக் காட்டுகிறான். அரசன் அடிக்கிறான்; இறைவன் புண் சுமக்கிறான். பண் சுமந்த பாடலுக்காக என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய காட்சி! அதில் என்ன நடந்தது என்று பாருங்கள்! நாம் என்ன வரலாற்றையா பின்பற்றுகிறோம். நாயன்மார்களையா பின்பற்றுகிறோம்! சிவபெருமானையா பின்பற்றுகிறோம்!

கடவுளை வழிபடுதல் என்று சொன்னால், கடவுள் எதை விரும்புகிறாரோ, நாமும் அந்த நெறியில் நிற்றல் என்பதுதான் நியதி. அதற்குப் பொருள், வழிப்படுதல் என்பதுதான்! இந்த வழியே சென்றால், நிறைய உதவிகளைப் பெறலாம். எந்த வழியை? இறைவன் எந்த வழியைக் காட்டினானோ, அந்த வழியை! இறைவன் நமக்கு என்ன வழி காட்டினான்? பிட்டும் தின்றான். மண்ணும் சுமந்தான். இன்றைக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? பிட்டு மட்டுமே தின்று கொண்டிருக்கிறோம். மண் சுமப்பதற்கு யாருமே வருவதில்லை.

தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலே பல திருக்குளங்கள் தூர்ந்து போயின; பல திருக்குளங்கள் இடிந்து கொண்டிருக் கின்றன. ஆண்டுக்கு ஒரு நாள் எல்லா சைவ அடியார்களும் மண் சுமக்க ஆரம்பித்தால், ஒரு திருக்குளத்தில் கூடப் பச்சைப் பாசி இருக்காது; வழுக்காது. அன்றைக்குச் சுந்தரர் பாடினார்.

வழுக்கி விழினும் நின்றிருப்பெயர் அல்லால்
மறுவார்த்தை அறியேன்

என்று. இந்த வழுக்கல் என்பது சமுதாய வழக்கல். ஒழுக்கத் தவறுகள். ஒழுகத் தவறுதல். ஆனால், இன்றைக்கு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ‘வழுக்கி வீழினும்’ என்று சொன்னால், பாசியில் வழுக்கி விழுந்தாலும், ‘நின் திருப்பெயர் அல்லால் மறுவார்த்தை அறியேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் பண்சுமந்த பாடல் பரிசுபெற என்று வருகிற பொழுதும், நண்பர்களுக்குத் தெரியும். சகோதரிகளுக்குத் தெரியும்-பண் என்பது தமிழுக்கே உரிய இசை என்பது. பண் என்ற சொல் தமிழுக்கு உரிய மரபு. தமிழ் இசைக்கு உரிய மரபு. செட்டி நாட்டரசர், தமிழ் இசை மேடைகளில் இருந்து மறைத்ததை, தமிழக இசை அரங்குகளில் பதிவு செய்து கொண்டு வந்தார்.

நாம் அதுபோலத் தமிழ்நாட்டிலே இறைவனுக்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும். இங்குத் தமிழிலே வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வதினால், சமசுகிரதம் வேண்டாம் என்று சொல்வது நம்முடைய நோக்கம் அல்ல; குறிக்கோளும் அல்ல. அல்லது வேறு எந்த மொழியும் கூடாது என்பதும் நோக்கம் அல்ல. நாம் என்ன பைத்தியக்காரர்களா? மாணிக்கவாசகர் அருளிச் செய்தது நமக்குத் தெரியவில்லையா?

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்றார். எல்லா நாடுகளிலும் இருக்கின்ற மக்களுக்கு அவன்தான் தலைவன். அவன்தான் கடவுள், யார் யார் எந்தெந்த மொழியில் பேசுகிறார்களோ, அவரவர்களுக்கு அதுதான் கடவுளோடு பேசுகிறமொழி. நமக்குக் கடவுளுக்கு எந்த மொழி தெரியும் என்பது பிரச்சனையல்ல; நாம் எந்த மொழியில் கடவுளுடன் பேச முடியும் என்பதுதான் பிரச்சனை. கடவுள் அனைத்து மொழிகளுக்கும் சொந்தக்காரன்; அனைத்து மொழிகளையும் உணர்ந்தவன்; தெளிந்தவன்; தெரிந்தவன். அவனே எல்லா மொழிகளாகவும் இருக்கிறான். எனவே அவனுக்கு எந்த மொழி என்பது சிக்கல் அல்ல. நமக்கு எந்த மொழியில் சொன்னால் கடவுள் எளிதாகக் கிட்டுவான்? நாம் அழவேண்டும், நாம் கசிந்துருக வேண்டும். நம்முடைய நெஞ்சு என்ற புலன் உழப் பெற வேண்டும். நம்முடைய இதயப் புலன்கள் உழப்பெற வேண்டும். அதற்கு எந்தச் சொல், எந்தமொழி இசைந்தது? என்பதுதான் பேச்சு. இதைப் பத்தாம் நூற்றாண்டிலேயே சுந்தரர் வரலாற்றில் காணலாம். அங்கேயும் சொல்கிறேன். அயல்மொழி வழக்கு நுழைந்திருக்கிறது என்பதை அயல்மொழி வழக்கைக் காட்டி, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சுந்தரர் வாழ்க்கையிலே சிவபெருமான் கூறுகிறார். ஆக, 'அர்ச்சனை பாட்டே ஆகும்' என்று சொல்லுகிறவர் 'தூமறை பாடும் வாயார்' என்று சொன்னார் சேக்கிழார் பெருமான். ஆக மறைகள் இருக்கின்றன. அந்த மறைகள் எவையாயினும் இருக்கட்டும். ஆனால், என்னுடைய நெஞ்சு பக்குவமடைகிற மாதிரி, உறுதியடைகிற மாதிரி, நல்ல தமிழில் பாடுக என்று சொன்னார். நான் இவ்வளவு செய்திகளும், தமிழில் கொண்டு வந்தார் என்று நண்பர் பெருமாள் அவர்கள் சொன்னதற்கு விளக்கம் சொன்னேன். தமிழ்வேறு சமயம் வேறல்ல, இரண்டும் ஒன்று தான். தமிழிலிருந்து சைவத்தைப் பிரிக்காதீர்கள், சமயத்தைப் பிரிக்காதீர்கள். அதேபோலச் சமயத்திலிருந்தும் தமிழைப் பிரிக்காதீர்கள். சமயத்திலிருந்து தமிழைப் பிரித்து விட்டால், நமமுடைய நெஞ்சுப் புலன்களை உழ முடியாது. நம்முடைய நால்வர், தமிழிலேதான் சிறந்த முயற்சிகளைச் செய்திருக் கிறார்கள்.

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று பாடுகிறார் சுந்தரர். ஆக, நாளும் இன்னிசையால் திருஞானசம்பந்தர் ஒன்றும் தமிழ் பரப்புவதற்காக வரவில்லை. அவர் பரப்பியது சைவம்தான்; சைவ நன்னெறி தான். திருநெறிய தமிழில்தான் ஓதினார். ஆனாலும் கூட, சுந்தரருடைய எண்ணத்திலே என்ன தோன்றுகிறது என்று சொன்னால்,

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று சொன்னார். திருஞானசம்பந்தர் பரப்பியது தமிழ்நெறி, திருநெறி; அன்றைக்குத் தமிழகத்தில் ஊடுருவி நின்ற பிற மொழிக் கொள்கை, தமிழுக்கும், தமிழர் வாழ்வியலுக்கும் உடன்படாத கொள்கை. தமிழ் இசையை மறுத்த நெறி; இயற்கையோடிசைந்த வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி; மனையறத்தோடு கூடிய வாழ்க்கையை வேண்டாமென மறுத்த நெறி. இப்படிப் பல்வேறு புறத்தூய்மை யில்லாத, பண்பாடு இல்லாத நெறிகளை மறுக்க வேண்டிய சூழ்நிலையில்தான், திருஞானசம்பந்தர் இதைச் செய்தார்.

தமிழும் சைவமும், தமிழும் சமயமும் இணைக்க முடியாதவைகள் என்று இங்கே கூறினார்கள். இவைகள் பிரிக்க முடியாதவைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல்தான் நான் மீண்டும் நினைப்பூட்டுகிறேன். சமயமும், சமுதாயமும் என்பது நாமாகச் செய்யக்கூடிய முயற்சிகள் அல்ல. இடைக்காலத்திலே மறந்துபோன ஒன்றை நான் நினைவுபடுத்துகிறேன். அவ்வளவுதான். பழங்காலத்தில் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்கள். கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னால், அங்குக் கடவுளைத் தொழ முடியாது என்பது மட்டுமல்ல; உன்னுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்காது; பாதுகாப்பு இருக்காது; நியாயம் கிடைக்காது; நீதி கிடைக்காது; எனவே, கோயிலைச் சார்ந்து வாழ் என்பதுதான். இது இன்று நேற்றுத் தோன்றிய பழக்கமல்ல. பல்லாயிரம் ஆண்டுக் காலத்துப் பழக்கம். இதனைச் சேக்கிழாருடைய பெரிய புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் நாம் பரக்கக் காணமுடிகிறது.

அதற்குச் சில சான்றுகள் சொல்லுகிறேன். இப்பொழுது சாதாரணமாக ஒருவனுக்குத் திருமணம் ஆக வேண்டும். வயது வந்த இளைஞனாக இருக்கின்றான். அவனுக்கு வீட்டிலே திருமணம் செய்து வைக்கின்ற முனைப்பைக் காணோம். பெற்றோர் ஒரு மாதிரியாகக் காலம் கடத்துகிறார்கள். பையனுக்கோ வயது வந்துவிட்டது. காதல் உணர்வு வந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வார்கள்? எங்கேயாவது கடை வீதிகளிலே புறத்திலே போய்ச் சுற்றுவார்கள். ஆனால், சுந்தரர் போன்ற இளம் தலைமுறையைச் சார்ந்தவர்கள், சிவபெருமானிடத்தே போகிறார்கள்; திருக்கோயிலுக்குச் செல்லுகிறார்கள். அங்கே போய்ச் சிவபெருமானிடத்தும் கேட்கிறார்கள். ‘எனக்குத் திருமணம் செய்து வை’ என்று. திருமணம் செய்து வை என்று கூட இறைவனிடத்திலே கேட்கக் கூடிய ஓர் உரிமை நம்முடைய சமயத்திலே இருந்தது. சமூகத்தைச் சேர்ந்த மனப்பக்குவம் பக்தர்களுக்கு இருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.

அது மட்டுமா? திருமணம் ஆகிவிட்டது. மனைவிக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டு விட்டது. தகராறு வந்து விட்டது. கேட்டால் எந்தக் காலத்திலும் பெண்கள் அடக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஒரு திருமணத்திலேயே மிகப் பெரிய மன நிறைவை அடைவார்கள். வாழ்நாள் முழுவதும் அந்தக் கணவனுக்கே தொண்டு செய்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், ஆடவர்கள் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. பல ஆடவர்கள் கொம்பு மாறுகிற பழக்கம் உடையவர்கள். கொஞ்சம் வெளியேயும் புறத்தேயும் சுற்றி வருவார்கள். கோவலன் வாழ்க்கையைப் பார்க்கிறோம். பல்வேறு வாழ்க்கையைப் பார்க்கிறோம். அதேபோல சுந்தரருக்கும் கூட இரண்டாவது திருமண ஆசை வந்து விடுகிறது. அவர் திருவொற்றியூருக்குப் போகிற போது அங்கே ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விழைவு தோன்றுகிறது. ஆனால், தயவு செய்து மறந்து விடாதீர்கள். முதல் திருமணம் செய்வித்த சிவபெருமான் மூலமாகவே இந்தத் திருமணத்தையும் செய்து கொள்கிறார். இப்பொழுதெல்லாம் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமென்று சொன்னால், முதல் திருமணம் செய்து வைத்த சண்முகவேலுக்குத் தெரியாமல், தாமாகப் போய்க் கோலாலம்பூரில் பதிவு செய்து கொண்டு வந்து விடுவார்கள். சிவபெருமானைப் பொறுத்த வரையில் சுந்தரர் அப்படிச் செய்யவில்லை. சிவபெருமானிடமே போகிறார். அந்தக் காலத்திய சமூக வழக்கத்தில், இரண்டு தடவை திருமணம் செய்து கொள்வது தவறில்லை என்ற நாகரிகம் இருந்தது. பரவையின்பால் சிபபெருமானுக்கு இருக்கிற ஈடுபாடும் குறைவல்ல. என்ன செய்வது? அவருடைய தலைவிதியே என்று திருமணம் செய்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. சுந்தரருடைய பழைய மனைவிதானே! சங்கிலியாரையும் போய்ச் சமாதானம் செய்து திருமணம் செய்து வைக்கிறார். இந்தத் திருமணம் செய்து வைக்கிறபொழுது, என்ன அருமையான வாழ்வியல் இருக்கிறது என்று செய்து வைக்கிறார்கள்? இப்பொழுது ஒருவர் இல்லாதபோது, ஒருவருக்காக நாம் பரிந்து பேசப் போனால், யாருக்காகப் பரிந்து பேசுகிறோமோ, அவர்களைத் தரந்தாழ்த்திப் பேசுவது நம்முடைய போக்கில் ஒன்று. ‘என்ன செய்வது? வந்து தொலைத்தான்! நானும் வந்து சேர்ந்திருக்கிறேன். உனக்காக இல்லையென்றாலும் அவனுக்காக இல்லையென்றாலும், எனக்காகவாவது வந்து பேசு என்று சொல்லுவார்கள். இப்படியெல்லாம் தரம் தாழ்த்திச் சொல்லுவது என்பது பழக்கம்! ஆனால், சுந்தரரை நம்முடைய சிவபெருமான் சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிற பொழுது,

சாரும் தவத்துச் சங்கிலிகேள்
சாலஎன்பால் அன்புடையான்
மேருவரையின் மேம்பட்ட தவத்தான்...

என்கிறார். ஏனென்றால் சங்கிலியாருக்கு இரண்டாந் தடவையாகத் திருமணத்திற்கு வந்திருக்கிறார் என்ற கவலை வந்துவிடக் கூடாது. அவரைப் பற்றி, சுந்தரரைப் பற்றித் தரக்குறைவாக நினைத்துவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாக ‘மேருமலையின் மேம்பட்ட தவத்தான்! சால என்பக்கம் அன்புடையான்’ என்று சங்கிலியாருக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்படி அறிமுகப்படுத்துவது என்பது ஒரு நல்ல கலை. யாரையும் மனங்குளிரப்பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது வளர்கின்ற பயிருக்கு மழைபோல! பாராட்டுவதன் மூலமாகக் கூடச் சில தீமைகளைத் தவிர்க்கலாம். நமக்கு அதில் தரித்திரம் காட்டுகிற பொழுது தான் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவனுக்குப் புகழ், ஒருவனுக்கு இல்லையென்று சொன்னால் அதைத் தாங்க முடியாமல் சமூகம் தவிக்கிறது. இதனால்தான் ‘மேரு மலையில் மேம்பட்ட தவத்தான்; சால என்பக்கம் அன்புடையான்’ என்கிறார். அம்மையாரும் ஒப்புக் கொள்கிறார்கள். திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. சிவபெருமானுக்குச் சில சமயம் கிண்டல், கேலி இவைகளெல்லாம் செய்யத் தோன்றும். ஏனென்றால் வாழ்க்கையோடு இசைந்த சமயம் நமது சமயம். சமயத்தைக் கொண்டு போய் எங்காவது கருவறையிலும், கைலாயத்திலும் வைத்துவிட்டு, சுவைத்து, இரசித்து, வாழத் தெரியாமல் கிடந்து தொல்லைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் போய் மெள்ள என்ன சொல்லுகிறார்? சங்கிலியாரிடமும் போய் மெள்ளக் காதைக் கடித்து, ‘அவன் திருவாரூர்மேல் கொஞ்சம் கிறுக்கும், பைத்தியமும் உடையவன். திடீரென்று திருவாரூருக்குப் போனாலும் போய் விடுவான். எனவே நீ போய்த் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை என்று சத்தியம் வாங்கிக் கொள்’ என்று சொல்லி விட்டார். இந்த அம்மையாரிடம் சுந்தரர் போகிறார். இந்த அம்மையார் சத்தியம் கேட்கிறார்கள். சுந்தரருக்கும் தர்ம சங்கடம்; அரைச் சங்கடமாகப் போய் விட்டது. திருவாரூருக்குப் போகாமல் இருக்க முடியாது. சங்கிலியாருடன் திருமணம் ஆக வேண்டும். ஆதலால் என்ன செய்கிறார்? ‘சரி’ என்று ஒப்புக் கொள்கிறார்.

நம்முடைய மாசுகளுக்குக் கூட, கடவுளிடத்திலே ஒளிக்காமல் பேசினால் நன்மை கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ‘சங்கிலியார் என்னிடம் சத்தியம் கேட்டிருக்கிறாள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், உன் முன்னால் சத்தியம் செய்து கொடுத்து விட்டு மீறுவது என்றால், என்னவோ போலச் சங்கடமாக இருக்கிறது. அவளோ நல்ல பக்திமான். உன் முன்னால்தான் சத்தியம் கேட்பாள். நான் சத்தியம் செய்கிற நேரத்தில், சிறிது கோயிலை விட்டு வெளியே வந்துவிடு’, என்று கேட்கிறார். எவ்வளவு சுதந்தரமான ஒரு பக்தி இருக்கிறது என்று பாருங்கள்! இதைப் படிக்கும் போது நமக்கு அழுகையும் வருகிறது; இரக்கமும் வருகிறது. கோயிலைவிட்டு வெளியில் வந்து அந்த மரத்தடியில் நின்று கொள். சத்தியம் செய்தபின் கோயிலுக்குள் போய்விடு’ என்று சொல்லுகிறார். சிவபெருமானுக்குச் சுந்தரருடைய வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை. சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த அம்மை யாரை “ஏமாற்றுவது போல் ஆகிவிடக் கூடாதே! அங்கே போய்ச் சொல்லிக் கொடுத்து விடுகிறார். ‘இந்தச் சின்ன விசயத்திற்குக் கோவிலுக்குள் சத்தியம் வேண்டாம்; இந்த மரத்தடியிலே செய்தால் போதும் என்று கேள்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு நமது குறைகளுக்கும், நிறைகளுக்கும் ஈடு கொடுத்து நின்ற ஒரு சமயம், இன்றைக்கு வெறும் சடங்குச் சமயமாக, வாழ்க்கையோடு இசைந்து வராத, ஒத்துவராத, வாழ்க்கையாகவே ஆக்க முடியாத ஒரு சமயமாக இருக்கிறதே என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்புறம், சுந்தரர் சத்தியம் செய்கிறார்; மரத்தடியில் சத்தியம் செய்கிறார்; பிறகு கண் போகிறது; கண்ணைப் பறித்து விடுகிறார் சத்தியத்திற்காக! அப்பொழுது என்ன திட்டுத் திட்டுகிறார்? நாம் வீட்டிலே குறும்பாக இருக்கிற குழந்தையைப் பார்த்து ‘என்ன சனியனே!’ என்று சொல்லுகிற மாதிரி, கடவுளிடத்துப் போய், ‘மகத்தில் புக்கதோர் சனியெனக்கு ஆனாய்!’ என்று கூறுகிறார். சிவபெருமான் இவ்வாறு பேசவும் உரிமை கொடுத்தார்; வாழ்த்தவும் உரிமை கொடுத்தார்; வேலை வாங்கவும் செய்தார்; வேலை செய்யவும் செய்தார். அதுதான் நம்முடைய சமயம்; நம்முடைய சமுதாயம் நாம் ஒன்றும் சமயத்தைக் கொண்டு போய்ச் சமுதாயத்தோடு செயற்கை முறையில் இணைக்க ஆசைப்படவில்லை. அப்படி ஒரு காலத்தில் இருந்தது. பொன் வேண்டுமா? கேட்டார்! சாப்பாடு! நல்ல நெய் போட்ட கறியோடு கூடிய சாப்பாடு வேண்டும் என்று கேட்டார்! கடவுளை வாழ்க்கைப் பொருளாகப் பார்த்த, கடவுளை வாழ்த்துப் பொருளாகப் பார்த்த வாழ்க்கையின் ஊனும், உயிரும், உடலும், உணர்வும் ஒன்றாக இருந்த சமயத்தை நான் பார்க்கிறேன்.

இன்னும் உருக்கமான ஓர் இடம்! திருக்கச்சூர் என்ற ஊருக்குப் போகிறார் சுந்தரர்! நல்ல பன்னிரண்டு மணி வெயில்! பசி! யாரிடத்திலும் பிச்சை கேட்டுப் பழக்க மில்லாதவர். கோயிலுக்கே போகிறார். ஆனால், திருக்கச் சூரிலே இருக்கிற இறைவன் இவருக்கு முன்னாலேயே வந்து காத்துக் கொண்டிருக்கிறான். பசிக்கிறதா? என்று கேட்கிறார். ‘சரி! நல்ல வெயிலாக இருக்கிறது! சிறிது உட்கார்ந்திரு! ஓய்வெடு! நான் போய் உனக்குச் சாப்பாடு கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுச் சிவபெருமான் சாப்பாடு எடுக்கப் போகிறார். நான் சில சமுதாய உண்மைகளையும் இந்த வரலாற்றைப் பார்க்கிற பொழுது பார்ப்பது உண்டு. அது சிலருக்குப் பிடிக்காது போனாலும் அன்பு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். திருக்கச்சூர்க் கோயில் இறைவன்தானே! அவனுக்குக் கோயிலில் சாப்பாடு இல்லையா? ஒரு கட்டி எடுத்துக் கொடுக்கக் கூடாதா? ஆக, திருக்கச்சூர்க் கோயிலிலே இருக்கிற இறைவனுக்கு திருக்கச்சூர்க் கோயிலிலே சோறு கிடைக்கவில்லை சுந்தரருக்குக் கொடுக்க, என்று சொன்னால், அப்பொழுதே இந்தப் பூட்டு, சாவி, அறங்காவலர் முறையெல்லாம் வந்து, கடவுள் உரிமைகள் இரண்டாந்தரமாக மாறி, மனிதர்களுடைய உரிமைகள் மேலோங்கி விட்டதாகத் தெரிகிறது. எனவே, கோயிலிலே அவருக்குச் சோறு கிடைக்கவில்லை. அதனால் தெருவில் இறங்கிப் பிச்சை எடுக்கப் போகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு மாதிரியும் நினைப்பதுண்டு. இப்பொழுது நாம், கடவுள் எழுந்தருளியிருக்கிற திருக் கோயில்களிலே இருக்கிற மூர்த்திகளை, நிறையப் பேர் இன்றைக்குச் சிலைகளாகத் தான் பார்க்கிறோம்; உருவங் களாகத்தான் பார்க்கிறோம். நம்மை ஆளும் தெய்வம் எழுந்தருளி இருப்பதாக நம்மில் பலருக்கு நினைவே வருவதில்லை. மனிதன் அங்கு அட்டகாசம் செய்கிறான்; மனிதனுக்கு மரியாதைகள், சிலருக்கு ஏகபோகமான மரியாதைகள்; இறைவனுடைய சன்னிதியில் எல்லா மனிதர்களும் அடக்கம் உடையவர்களாக, அமைதி உடையவர்களாக, இருக்க வேண்டும். அந்த இடத்திலே கூட மனிதர்களுக்கிடையில் சமரசமும், சமாதானமும் வராது போனால், வேறு எங்கேதான் வருவது?

நான் கூட அடிக்கடி நினைப்பதுண்டு. இந்தக் கடவுளுக்குக் கண்ணப்ப நாயனாருக்குப் பிறகு நன்றாக, சுவையான உண்வைச் சமைத்துக் கொடுத்தவர் யாருமே இலர் போலும். கண்ணப்பர் நன்றாக, கவனமாகச் சமைத்துக் கொடுத்தார். நம் வீட்டில் கூட சுவாமிக்குப் படைக்கின்ற அன்றைக்கு, சுவைத்து விட்டுப் படைக்க நமக்கு மனம் வராது. அது உப்பில்லாத வடையாக இருந்தாலும் வைத்துப் படைத்து விட்டுப் பிறகு நாம் உட்கார்ந்து சாப்பிடும்போது, ‘அய்யய்யோ! உப்பு சேர்க்க மறந்து விட்டோமே! என்று சொல்லி, திரும்பவும் உப்பு சேர்த்துச் சாப்பிடுவோமே தவிர, கடவுளுக்கு உப்பில்லாதவைதான் கிடைத்திருக்கும். ஆனால், கண்ணப்பர் என்ன செய்தார்? அவர் புலால் தின்கிறவர், அவர் புலாலைப் பதமாகச் சுடுகிறார்; தேனில் நனைக்கிறார்; வாயில் போட்டு அதுக்குகிறார்; சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. அந்த இடத்தை நாம் மிகவும் கூர்மையாகப் பார்க்க வேண்டும். சுவை பார்க்கிறார்; சுவையை அனுபவிக்கவில்லை. சுவையை அனுபவித்து விட்டால் எச்சில்! சுவை இருக்கிறதா என்று உணருகிறார்; உடனே துப்புகிறார் இலையில்! கடவுளிடத்துப் போய், நான் மிகவும் நன்றாகச் சமைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இதுபோல உனக்குக் கிடைத்தே இருக்காது. இந்தா, சாப்பிடு’ என்கிறார்.

ஆனால், இங்கே திருக்கச்சூரிலே இருக்கிற இறைவன், கோயிலிலே சாதம் எடுக்காமல், வெளியில் போவதற்குக் காரணம். நம்முடைய நாட்டுக் கோயில்களிலே கடவுளுக்குச் சுவையான பண்டங்களைப் படைப்பது என்பதை மறந்து விட்டோம். எங்கேயாவது தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்த்தால், ஒரு பட்டைச் சோறு. பாவம்! அது ஏமாளிப் பட்ட சோறு என்று அர்த்தம். சுந்தரரோ, சொகுசான பிள்ளை. நெய்யுடன் சோறு கேட்பான். நாம்தான் தினமும் இந்தப் பட்டைச் சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம். சுந்தரருக்கு இது ஒத்து வராது. திருக்கச்சூரிலே வீடுகள் இருக்கின்றன. தங்களுடைய கணவனுக்குமாக, குடும்பத்திற்குமாகச் சுவையான சமையலைச் செய்து வைத்திருப்பார்கள் பெண்கள்! அதில் நான்கு வீடுகளில் போய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தால், சுந்தரருக்குத் திருப்தியாக இருக்கும் என்று போனரோ என்று தெரியவில்லை! ஆக, பசிப்பதற்குச் சோறு! ஆழ்வார் ஒருவர் பாடினார். ‘உண்கின்ற சோறும், பருகுகின்ற நீரும், தின்கின்ற வெற்றிலை, பாக்கும் ஆனாய்’ என்று சொன்னார். கடவுளை அவர் அனுபவித்த முறை அப்படி! இதிலே சமயம், சமுதாயம் என்பதைத் தயவு செய்து பிரிக்காதீர்கள். வாழ்க்கையே சமயமாக வேண்டும்; சமயமே வாழ்க்கையாக இருக்கவேண்டும்.

சுந்தரர் அவிநாசிக்குச் செல்கிறார். நான் திருமணம் என்று சுந்தரர் திருமணத்தைச் சொன்னேன். இன்னொரு திருமணமும் இருக்கிறது எவ்வளவு சமூக நெளிவுகள் இருக்கின்றன நம்முடைய மதத்திற்கு என்று தெரியும். திருமருகல் என்ற ஊரிலே ஒரு திருமணம் நிகழ்ந்தது. திருமருகல் என்பது தஞ்சை மாவட்டத்திலே உள்ள ஒரு திருத்தலம். திருமருகலுக்குப் பக்கத்தில் ஏழெட்டுக்கல் தொலைவில் ஒரு வணிகச் செட்டி குடும்பம். இந்தச் செட்டி வீட்டில் ஏழு பெண்கள். இந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய முறை உடைய மாமன் ஒருவன். இந்த மாமன் இங்கேயே பெண் கேட்கிறான். ஆனால், மாமனுக்குக் கொஞ்சம் வசதிக் குறைச்சல். இப்பொழுது பெண் கொடுக்கவோ, பெண் வாங்கவோ, பெரும்பாலும் வசதியைத் தான் பொதுவாகப் பார்க்கிறோம். பழைய காலத்தில் குலம் அறிந்து கோத்திரம் அறிந்து கொடு என்பார்கள். இப்பொழுது அதெல்லாம் முடிவதில்லை. அதுவும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்த வரையில், பெண்களிடத்திலே பணம் வாங்குகிற அளவுக்கு ஆண்கள் இளைத்து விட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கெல்லாம் ஆண்மையும் வலிமையும் மிகக்குறைவாகப் போய், பெண்களிடத்திலே பணம் கேட்கிறார்கள். இந்த மாமனுக்குப் பெண் கொடுக்காமலே மாறி, மாறி வேறு வேறு இடங்களிலே வணிகன் தன் மகள்களை அடுத்தடுத்துத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறான். இவனும் அங்கேயே எப்படியாவது, ஒரு பெண் கூடக் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறான், கடைசிப் பெண்தான் மிச்சம். அப்பொழுதும் தகப்பனிடத்தில் மாமனுக்குக் கொடுக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு இரக்கமான குணம்! நம்முடைய மாமன். நம்முடைய வீட்டிலேயே பெண் எடுக்க வேண்டும் என்று காத்திருக்கிறான். நம்முடைய தந்தையோ மோசடி செய்கிறார். நாம் அந்த மாமனுக்கு வாழ்க்கைப் படாது போனால், அவனுடைய வாழ்க்கை கெட்டுப் போகும் என்று எண்ணி, தன்னுடைய பெற்றோரை மீறி, தன்னுடைய மாமனுக்கு ஆள் அனுப்பி, நாம் இருவருமாகச் சேர்ந்து எங்கேயாவது போய்த் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொல்லி விடுகிறான். மாமனுக்கு மிக்க மகிழ்ச்சி.

இருவரும் பெற்றோருக்கும் தெரியாமல் புறப்பட்டு விடுகிறார்கள்; திருமருகல் என்ற திருத்தலத்துக்கு வருகிறார்கள். திருத்தலத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்ற முடிவோடு அவர்கள் வருகிறார்கள். இரவாகி விடுகிறது. திருமருகல் கோயில் சாத்தியாகி விட்டது. இருவரும் எங்கோ ஒரு மடத்தில் படுக்கிறார்கள். நெடுந்துாரம் நடந்து வந்த களைப்பில் கடுமையாகத் தூங்கி விடுகிறார்கள். நல்ல-நச்சுப் பாம்பு ஒன்று இரவில் அவனைக் கடித்து விடுகிறது. காலையில் எழுந்து பார்க்கிறாள். தான் திருமணம் செய்ய இருந்த தலைவன்-தலைமகன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறாள். பெற்றோரை இழந்து வந்தாயிற்று. கைப்பிடிக்க இருந்த கணவன் இறந்து போனான். இரண்டு பேரும் தனியே வந்திருந்தாலும், திருமணம் ஆகவில்லை என்ற ஒரே காரணத்தினால் உடற்சார்பு இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்; தூங்கியிருக்கிறார்கள். எனவே, ‘நான் கணவன் என்ற உரிமையோடு, உன்னைத் தீண்டிக் கூட அழ மாட்டாமல் செய்து விட்டாயே, என்று அழுகிறாள். திருஞானசம்பந்தர் வருகிறார்.

தஞ்சை மாவட்டத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். ஊர் எல்லையிலேயே கோயில்கள் வரவேற்கும். விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் கோயில்கள் ஏராளம்! ஆனால் அந்தத் திருக்கோயில் நம்முடைய திருஞான சம்பந்தரை ஈர்த்ததைவிட, அழுகிற குரல் அதிகம் ஈர்த்திருக்கிறது. எங்கே அழுகிறார்கள்? ஏன் அழுகிறார்கள்? என்று பதைத்து ஓடுகிறார்; விரைந்து ஓடுகிறார். அங்கே ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள். ஒரு பிணம் கிடக்கிறது. இவர் வருகின்றார்; உடனே இவரும் அழுகிறார்.

அவருடைய அழுகையின் காரணமாக இறை வனுடைய கருணையினால் அவன் எழுந்து நிற்கிறான். திருமணத்தைச் செய்து முடிக்கிறார்; அவர்கள் முகத்திலே மகிழ்ச்சியைப் பார்க்கிறார். அதற்குப் பிறகுதான் இறைவுனை வணங்கச் செல்லுகிறார். இப்படியோர் உயிர்ப்புள்ள சமயம் நம்முடைய நாட்டிலே இருந்தது என்பதை இன்றைக்கு நாம் மறந்து விட்டோம். சமயத்தையும், சமுதாயத்தையும் யாரோ புதிதாகச் செயற்கையாகப் படைக்க நினைப்பதாக நினைத்து விடக் கூடாது. அது பழைய காலத்தினுடைய தொன்மையான வழக்கம்.

நம்முடைய நாட்டில் சுந்தரருக்கும், சிவபெரு மானுக்கும் இடையில் ஒரு வழக்கு வந்தது. இந்த வழக்கை எங்கே போய்ச் சொன்னார்கள்? (Privy Counsil) தனி ஆலாசனை சபைக்கா? போனார்கள்? உயர்நீதிமன்றத்து (High_Court)க்கா போனார்கள்? இப்பொழுது தமிழ்நாட்டிலே கோயில்களும், மடங்களும் கூட (High Court)க்குப் போய்க் கொண்டிருக்கின்றன. சுவாமிகள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். எந்த யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதற்கு: ‘இசுமாயில்’ நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்துக்குப் போகிறார்கள். ஆனால் நம்முடைய பழைய சமயத்தில், பழைய சமுதாயத்தில் கோயிலிலே இருந்த முறை மன்றத்தில், சிவபெருமானும், சுந்தரரும் சமபாத்திரமாய் இருந்து வழக்கு நடத்தினார்கள். ஆக, வழக்குத் தீர்க்கின்ற அளவுக்குக் கூட நம்முடைய கோயில்கள் சமூக மன்றங்களாக இருந்தன. எனவே சமயமும் சமுதாயமும் ஒன்றுதான். பழைய காலத்தில், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னது அந்தப் பொருளில்தான். சாதாரண பன்றி பட்டினியாகக் கிடந்தாலும், தாய்ப் பன்றியாக வந்து பாலூட்டி வளர்த்தான் நம்முடைய இறைவன் என்பது வரலாறு, அவைகளையெல்லாம் நாம் பொய்யாக்கக் கூடாது; புனைந்துரையாக்கக் கூடாது.

இன்றைக்கு நான் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லுகிறேன். என்றைக்குப் புராணங்கள் அல்லது தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் செயற்பாடாக வரவில்லையோ, என்றைக்கு அவற்றிற்குச் செயல் உருவங்கள் வரவில்லையோ, அன்றைக்கு அவற்றைப் பொய்ம்மை என்று சொல்லுகின்ற ஒரு வட்டம் தோன்றத்தான் தோன்றும். அதைப் பொய்ம்மை என்று சொல்லுகிறவர்கள் மீது நமக்கு வருகின்ற கோபத்தைவிட, அவை என் உண்மையாக நடைமுறைக்கு வரவில்லை; அவைகள் ஏன் நம்முடைய சமுதாயத்தை ஈர்த்துப் பிணைத்துக் காப்பாற்றவில்லை? இன்றைக்கு ஏன் ஏராளமான பேர் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என நினைக்க வேண்டும். ஆண்டுதோறும் திருக்கோயிலிலே திருமணம் என்று சொன்னால் அது எதற்காக? இறைவனுக்கா திருக்கல்யாணம்? திருமணம் செய்து வைப்பது நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்கட்டும். இறைவன் வழங்கிய ஐம்பொறிகளுக்கு நீ துணையாக இரு. அவன் ஒரு வகையில் படைக்கிறான். நீயும் ஒரு வகையில் படைத்துக் காப்பாற்று, என்ற தத்துவங்களின் அடிப்படையில்தான் இந்த வரலாறுகள் தோன்றுகின்றன.

எனவேதான் புராணங்கள் பொய் என்று சொல்லுகிறவர்களைப் பற்றியோ, கடவுள் இல்லை என்று சொல்லுகிற வர்களைப் பற்றியோ நான் அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. காரணம், அவர்களைவிடக் கடவுள் இருக்கின்றார் என்ற தத்துவத்தை நம்புகிறவன். நடமாடுகின்ற உயிர் வர்க்கத்தின், அழுகின்ற கண்ணீரை மாற்றி, துன்பத்தை மாற்றி, தொல்லைகளை மாற்றி, சமூகத்தை ஒருமைப் பாடுடையதாக மாற்றி எந்த மனிதன் இந்த மண்ணுலகத்திலே, விண்ணுலகைப் படைக்கின்றானோ, அவன் தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறவனாக இருக்கிறான். நான், ஒன்று இருக்கிறது என்று நம்பினால் போதாது. நான், அந்த நம்பிக்கையினுடைய மனச்சாட்சியாக இருக்க வேண்டும். அது என்னுடைய உணர்வாகவும் அறிவாகவும் இருக்க வேண்டும். அதுவே என்னுடைய ஒழுகலாறாகவும் இருக்க வேண்டும். எங்கேயும் கடவுள் இருக்கிறார். கருத்து வேற்றுமையைப் பற்றிக் கூட சண்முகவேல் சொன்னார். அது சாதாரணமான காரியம். ஆளுக்கொரு நெஞ்சும், ஆளுக்கொரு தலையும், ஆளுக்கொரு குரலும் கொடுத் திருக்கிறபொழுது, கருத்து வேற்றுமை கொள்வது என்பது ஒரு சாதாரணமான காரியம். ஆனால், கருத்து வேற்றுமையைக் காழ்ப்பாக மாற்றுவதுதான் மிகக் கொடுமையான செயல். வேறுபட்ட சுவைகளினாலே உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது! ஒரே நிறம், ஒரே சுவை; ஒரே உப்பு; ஒரே புளி, ஒரே மிளகாய் என்றால், சுவை எப்படித் தோன்ற முடியும்! எனவே கருத்து வேற்றுமை என்பது தவிர்க்க முடியாதது-அது இயற்கை ஆனால், எங்கே கருத்து வேறுமைகள் விவாதத்துக்கு உரியனவாக இல்லாமல், ஆய்வுக்கு உரியனவாக இல்லாமல் அல்லது தெளிவுக்கு உரியனவாக இல்லாமல், அவற்றில் எதோ கட்சி கட்டிக் கொள்வதற்காக, காழ்ப்பாக ஆக்குகிற பொழுதுதான், சமூகம் முறை பிறழ்ந்து போகிறது; தடம் புரண்டு போகிறது. எனவே, வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை காணுதல் என்பது நம்முடைய நாட்டினுடைய விழுமிய நாகரிகம். வேற்றுமை இல்லாத ஓர் உலகியல் கிடையாது. பால் வேறுபாடு; சுவை வேறுபாடு; இராக வேறுபாடு அத்தனையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்த வேறுபாடுகளுக்கிடையே நான் ஒருமைப்பாட்டைக் காணத் தான் விரும்புகிறேன்.

எல்லாக் கருத்துக்களும் எல்லாருக்கும் உடன்பாடு உடையனவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நான் இந்தச் சமூகத்தைப் பார்க்கின்ற பார்வை, இந்தச் சமயத்தைப் பார்க்கின்ற பார்வை, பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், என்னுடைய கருத்தில் எது உடன்பாடு உடையது? அதைச் சொல்லுங்கள்! அல்லது எல்லாமே உடன்பாடு உடையன அல்லவா? எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், எது உடன்பாடு உடையது? எது உடன்பாடில்லை? என்பதை எனக்குப் புரியும்படியாகச் சொன்னால், என்னுடைய அறிவிலே தெளிவூட்டினால், நான் யாருடைய கருத்தையும் ஏற்றுக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன் என்று நான் சொல்வதுண்டு. எனவேதான், கருத்து வேற்றுமையாளர் களிடத்திலே கூட எனக்கு நட்பு, உறவு, இருக்கிறது. நான் என்னுடைய கருத்தை எங்கேயும் தெளிவாக்க முடியும் என்று நம்புகிறேன். எனக்குச் சில பிடிவாதமான மரபுகள் இருக்கின்றன; நடைமுறைகள் இருக்கின்றன; இந்தப் பிடிப்புகளிலிருந்து யாரும் என்னை எளிதாக அசைக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக இருக்கின்றது.

சமயம், சமுதாயம் என்ற இரு சொல்லைப் போட்டார் பெருமாள். தமிழ் என்ற ஒரு சொல்லைப் போட்டார். இந்த இரண்டுக்கும் நான் இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டிய ஒரு நிலையை உருவாக்கி விட்டார். சமயமும், சமுதாயமும் பிரிக்க முடியாதவைகள், மீண்டும் நான் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், கடல் கடந்த நாடுகளில் நமது சமுதாயம் இருக்கின்ற அனுபவத்தை வைத்தும், நான் தெளிவாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். மீண்டும் கோயில்களை மையமாக வைத்து நம்முடைய குடிமக்களை இணையுங்கள்! கோயில்களைச் சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கை முறைகளை உண்டாக்குங்கள்! கோயில்களைச் சார்ந்து ஒரு சமூக மேம்பாட்டு நிதியை உண்டாக்குங்கள். உங்கள் சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களுக்கு உதவ, அந்த நிதியைப் பயன்படுத்துங்கள்! நம்முடைய கோயில்தான் இன்றைக்கும் வழிபடுவோர் பட்டியல் இல்லாத ஒரு கோயிலாக இருக்கிறது. இன்றைக்குச் சில சமயங்களில் தமிழ்நாட்டில் மதமாற்றப் பிரச்சனைகள் வருகின்ற பொழுது, நாம் போகிற பொழுது, நம்மை வெட்கித் தலைகுனியச் செய்யும் நிலையாக ‘அவன்’ யாருக்குச் சொந்தக்காரன் என்று பட்டியல் கூட இல்லாமல் இருக்கிறது. அவன் இந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரன் என்று சொல்ல வேண்டாமா? அதனால்தான், திருநாவுக்கரசர் பெண்ணாகடத்திற்குச் செல்லும் பொழுது, நான் உன்னுடைய அடியான் என்பதை உலகுக்கு அறிவிக்குமாறு, என்னுண்டைய தோள்பட்டையில் இடபச் சின்னத்தைக் குறி என்று சொன்னார்; அதைப் பொறிக்கச் சொன்னார். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மலேசிய நாட்டிலே தோட்டத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான பேர் வாழ்கிறார்கள். அவர்கள் நம்மவர்கள் என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது? என்ன சான்று இருக்கிறது? ஏதோ இயற்கையாக வளர்கின்ற காடுகளைப் போல அவரவர்கள் எப்படியோ தங்கள் சமயத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம்முடைய நல்லூழ்.

ஆனாலும் இன்றைக்கு உலகத்தில் பிரளயம் போலப் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் கோயில்களைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில்கள் என்கிற நடைமுறைகளை உருவாக்கி, எல்லாரும் வழிபாடு செய்வதைக் கோயிலில் பதிவு செய்து, ஆண்டுக் கட்டணங்கள் ஏற்படுத்தி, திருக்கோயிலிலே பாக்கு வைத்து திருக்கோயிலிலே மாலைகள் வாங்கித் திருமணம் செய்ய வேண்டும். இந்தக் கோயிலைச் சார்ந்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இரண்டு இந்து சகோதரர்கள் தங்களுக்குள் பிரச்சனைகள் இருக்குமானால், கோயிலில் வைத்துப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கோயிலைச் சார்ந்தோர் வெளியே முறையீட்டு மன்றங்களுக்குப் போகக் கூடாது என்கிற நடைமுறைகளை-பழக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதை நான் சொல்லவில்லை-சுந்தரர் செய்து காட்டியிருக்கிறார்; சிவபெருமான் செய்து காட்டி இருக்கிறார்.

அதேபோல, கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள்; பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால், பேசாமல் வாழ்ந்தார்கள் என்றால் சண்டை போடவில்லை. அந்தக் காலத்தில் கணவன், மனைவிக்கு இடையில் கருத்துப் பிணக்கு என்று சொன்னால், பக்கத்து வீட்டுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். பேச்சுதான் இருக்காது; உறவுதான் இருக்காதே தவிர, வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டே இருக்கும். அப்படி ஒரு குடும்பம் வாழ்ந்தது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அது திருநீலகண்டருடைய வீடு, கணவனுக்கும், மனைவிக்கும் பிணக்கு. குமரனும் குமரியுமாக இருந்த காலத்தில் பிணக்கு. கிழவனும், கிழவியுமாகிற வரையில் பிணக்குத் தீரவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்று என்னுடைய வழிபடு தெய்வம் கவலைப்பட்டு, இறங்கி, அவர்கள் இரண்டு பேரையும் சமாதானம் செய்து வைக்கக் கூட மண்ணுக்கு வந்தான் என்று சொன்னால், நீங்கள்தான் உலகத்தில் தேர்ந்த சமயத்தினராக இருக்க வேண்டியவர்கள். உங்களுக்குப் பின்னாலே வந்தவர்கள், மிசினெறிகளாக மாறி, சமூக சேவை நிறுவனங்களாக மாறி, இன்றைக்குச் சோறும், கல்வியும், மருந்தும் கொடுப்பவர்களாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். நம்முடைய சமயம் கடவுளை எவ்வளவு தூரம் போற்றியதோ, அவ்வளவு தூரம் கடவுள் கொள்கையைப் போற்றாமல், கடவுள் நெறிகளைப் போற்றாமல், கடவுள் செய்த தொண்டுகளைப் போற்றாமல், நாம் இருந்ததின் பயனாக நம்முடைய சமயத்தில் புதிய நபர்களைக் காணவே காணோம்.

பழைய அடியார் சிலபேர் இருக்கிறார்களாம். மாணிக்கவாசகர் சொல்கிறார். புத்தடியார் சில பேர் வந்திருக்கிறார்களாம். இந்தப் பழைய அடியார் மிகவும் திமிருவார்கள். ‘இவன் நேற்றைக்குத்தான் வந்திருக்கிறான். திருநீறு பூசிக் கொண்டு; இவனை எப்படி உள்ளே சேர்ப்பது?’ என்று சொல்லுவார்கள். ‘பாங்குடையீர்! பழ அடியீர்! புத்தடியோம்! புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ!’ என்கிறார். இந்தப் பழைய அடியார்கள் என்று சொன்னால், எப்போதுமே அவர்களுக்கு மமதை இருக்கும்போல் தெரிகிறது. அடியார் என்று சொன்னாலே, ‘அடிபணிந்து செல்பவர்கள்’ என்பதுதான் பொருள்.

தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம்
சமயம் சாரும் ஊழ் பெறலரிது

என்பர். தலைநிமிர்ந்து சுந்தரர் நடந்தபொழுது, அடியார்க் கடியேன்! அடியார்க்கடியேன்; அடியார்க்கடியேன்! என்று தோப்புக்கரணம் போட வைத்தார் சிவபெருமான். ஆனாலும், இன்னும் நம்முடைய நாட்டில் அந்தப் பழவடியார் என்ற போக்கு இருக்கத்தான் செய்கிறது. புத்தடியார்கள் யாராவது வந்தால் எற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இன்னொன்று சொல்ல ஆசைப்படுகிறேன்; இந்த நாட்டில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, பழ அடியார்கள் யாராவது இருந்தால், அவர்களை ஒத்த பழ அடியார்களாக என்னை ஏற்றுக் கொள்ளாது போனாலும், புத்தடியாராகவாவது ஏற்றுக்கொள்ளுங்கள்! அதிலே என்ன பொல்லாங்கு வந்துவிட்டது என்று கேட்கத் தோன்றுகிறது. இந்தச் சூழ்நிலையில் சமயமும், சமுதாயமும் வேறு அல்ல.

கடைசியாக, முடிவாக நான் சொல்லக்கூடிய செய்தி! கடவுளைப் பிரார்த்திப்பது, வழிபாடு செய்வது, தியானிப்பது, எல்லாவற்றிற்குமே நோக்கம். இறைவனுடைய சக்தியை நாம் பெற வேண்டும் என்பதுதான். நான் வழிபடுவதினாலே, கடவுளுக்கு ஒன்று கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரத்தோடு நம்முடைய வீட்டு மின்கம்பி (ஒயர்) தொடர்பு கொள்வதன் மூலமாக, மின்சாரத்திற்குப் பயன் இல்லை; நமக்குத்தான் மின்சாரம் கிடைக்கிறது. அதேபோல, கடவுள் என்ற பரம்பொருளை, குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, நன்றுடையானாக, தீயதில்லாதானாக, இன்பனாக, துன்பம் இல்லாதவனாக இருக்கின்ற பரம்பொருளை, அளவு கடந்த பேரறிவும் பேராற்றலும் உடையவனாக இருக்கின்ற பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து, நனைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, உணர்வதின் மூலம், அந்த ஆற்றலை, சக்தியை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் பெற்று, நம்முடைய பொறிகள், புலன்கள் வாயிலாக, இந்த உலகத்திற்குப் பயன்படுத்திப் பீடுடன் வாழ்தல், பெருமையுடன் வாழ்தல், பலரோடு சேர்ந்து வாழ்தல், குடும்பத்தைக் கோயிலாக்கல், வீதியைக் கோயிலாக்கல், சமுதாயத்தையே கோயில் ஆக்கல்- பொதுவுடைமை ஆக்குதல் ஆகிய உயர்நெறிகள் நாட்டிலே மலர வேண்டும் என்பதற்காகத்தான் வழிபாடு செய்கிறோம். எனவே இறைவனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய குறைகளில் இருந்து விடுதலை பெறுங்கள்: நிறைவுகளைப் பெறுங்கள்; அளவு கடந்த ஆற்றலை சக்தியைப் பெறுங்கள். அந்த ஆற்றலும், சக்தியும் உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் வாழ்விக்கப் பயன்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு இறைவனைப் பிராத்தனை செய்யுங்கள்.

நீங்கள் செய்கிற பிரார்த்தனையினால் அல்லது காணிக்கையினால், அல்லது தேங்காயினால், இறைவனுக்கு யாதொரு பலனும் கிடைக்கப் போவதில்லை. நீங்கள் பெற்றுக் கொள்வது என்ன? அதுதான் முக்கியமான செய்தி. உங்களுடைய வாழ்க்கையை மேலும் புதுமை உடையதாக, மேலும் ஆற்றல் உடையதாக, எதையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையதாக, ஆக்கிக் கொள்கிற ஆற்றலை, பேரறிவை, அருளார்ந்த சக்தியை, பேருள்ளத்தை, பெருங்கருணையைப் பெற்றுச் சிறப்போடு வாழ வேண்டும்; அதற்குப் பிரார்த்தனை பயன்பட வேண்டும். அதுவும் அன்னையின் சந்நிதியிலே வழிபாடு செய்கிறீர்கள். அன்னை வழிபாடு, ஆற்றல் வழிபாடு என்று சொல்லுவார்கள். அந்த ஆற்றலை மிகுதியாகப் பெற்று நீங்கள் உங்கள் வீட்டையும், வீதியையும், நாட்டையும், உலக மனித சமுதாயத்தையுமே வாழ்விக்கிற அளவுக்குப் பேறும், கருணையும் உடையவர்களாக. அருளும், திருவும் உடையவர்களாக விளங்க வேண்டும் என்று நான் வாழ்த்தி, நீண்ட நெடிய நேரம் பல்வேறு செய்திகளைச் சொல்லி இருக்கிறேன். நான், சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவது என்பது வழக்கமில்லை. ஆனால், இன்றைக்கு மிகுதியாகவே பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இன்றைய நாள் என்னுடைய பேச்சினுடைய சாரமாக நினைவூட்டிய செய்திகள்! தமிழ் வேறு சமயம் வேறல்ல. ஒரு மொழி உயர்ந்ததாக இருப்பது அதனுடைய இலக்கியத்தினால் மட்டும் அல்ல. இலக்கியம் உணர்த்துகிற அறநெறி; வாழ்க்கை நெறி; செழுமையான அறப்பண்பாடுகள்; இவைகளைப் பொருத்துத்தான் அந்த மொழி சிறந்து நிற்கிறது. தமிழ் சிறந்தது என்பதினாலேதான், தமிழை நாம் பாராட்டுகிறோம். நான் தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடையவன். தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தேன்; என்னுடைய தாய் தமிழில் பேசினாள் என்பதற்காக மட்டும் நான் தமிழ்ப்பற்றாளனாக இல்லை. என்னுடைய தமிழ், உலகு புகழ்கின்ற திருவள்ளுவரைத் தந்திருக்கின்றது; அரசியல் நீதி பெறுக என்று கூறிய இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரத்தைத் தந்திருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை மண்ணிலே நடமாடச் செய்து, மானிடனுக்குச் சொந்தமாக்கி, மானிடனுக்கு உரிமையாக்கி, அவனையும் வைகையாற்றங் கரையில் நிற்க வைத்து, பண் சுமந்த பாடலுக்காக மண் சுமக்க வைத்து, திருவாரூர்த் தெருவிலே ஒருவனுக்குத் திருமணம் செய்வதற்காக நடக்க வைத்தது. இந்த நாட்டில் தமிழ் செய்த சாதனையை உலகத்தில் வேறு எந்த மொழியும் செய்ததில்லை. எல்லாச் சமயங்களும் போய்த் தட்டு; கதவு திறக்கப்படும்’ என்று சொல்லியது. என்னுடைய மொழி கடவுளை மண்ணிலே நடமாட விட்டு என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை எழுப்பி, என்னோடு பேசி உறவு கொண்ட ஒரு மொழி என்பதை நான் உணர்கிறேன். எனவே தமிழும் சைவமும் தமிழும் சமயமும் பிரிக்க முடியாதவை. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலிருந்து திருக்கோயில் எடுத்தலும், திருக்கோயில் வழிபாடு செய்தலும், நம்முடைய பழைய மரபு என்பதை மறந்துவிடக் கூடாது. சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கொடுத்த அதியமானையே ‘நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே’ என்று வாழ்த்தினார்கள். திருநீலகண்டராக இருப்பதும், நஞ்சை உண்டு கண்டத்தில் அடக்கியதும், கருணைக் கண்டம் என்பதை மறந்து விடாதீர்கள்; நாம் மற்றவர்கள் வாழ்வதற்காக எந்தத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்.

நாம் வாழ்வது ஒரு பெரிய காரியம்தான். ஆனால், மற்றவர்களை அழிக்காமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்வது என்பதுதான் மிகப் பெரிய காரியம்! எனவே, அமரர்கள் வாழ்வதற்காக அவர்கள் நஞ்சினால் சாகாமல் இருப்பதற்காக, தான் நஞ்சை உண்டு, வாழ்விக்கிற அமுதத்தை அமரர்களுக்குக்கொடுத்தான். அந்தக் கருணைக் கண்டம் இறைவனுடைய கண்டம். அதைத் தமிழ் நெறி பேசுகிறது. எனவே தமிழ்நெறி சாகாத நெறி. சாகாத அறநெறியை வற்புறுத்துகிற நெறி என்பதை நினைவூட்டி இந்தத் தமிழ்நெறி சமுதாய நெறியைத் தழுவி நின்றது ‘செழுந்தமிழ் வழக்கு’ என்று சேக்கிழார் பாராட்டினார்.

பிற்காலத்தில் ‘அயல் மொழி’ ஊடுருவலால், தமிழ் பைய மறக்கத் தலைப்பட்டது. தமிழகத்தில் இறைவனுடைய திருக்கோயில்களிலே தமிழ்நெறி தலை தடுமாறியது. தமிழிலே இறைவனுக்கு வழிபாடு செய்தால் செல்லுமா? செல்லாதா? என்ற நிலை உருவாகியது. அப்பொழுது சிவபெருமானே தமிழ் அர்ச்சனை இயக்கத்தை தமிழ் வழிபாட்டைத் தொடங்கி இருக்கிறார். குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார் என்று யாராவது சொன்னால் அல்லது அவர்தான் தமிழ் அர்ச்சனைக்குக் கர்த்தா என்று சொன்னால், அதைவிட முழுப் பொய் வேறொன்றும் இருக்க முடியாது. சுந்தரர் வரலாற்றில் சிவபெருமான்தான் முதன் முதல் தமிழ் அர்ச்சனை இயக்கத்தைத் தொடங்கி, ‘அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால், மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக’ என்று சொன்னார்.

நாளும் இன்னிசையால் தமிழ்
பரப்பும் ஞானசம்பந்தன்

என்று சொன்னார். தமிழை வளர்த்தால் சைவம் வளரும்; சைவம் வளர்ந்தால் தமிழ் வளரும். இது நம்முடைய நாட்டு மரபு நால்வர் இந்த நெறியைப் போற்றி வளர்த்தார்கள். எனவே தமிழ் நம்முடைய உயிர் என்று சொன்னால், உயிரின் உயிர்ப்பாக இருப்பது சமயம் என்பதைச் சொல்லி, இரண்டும் இணைந்தவை; பிரிக்க முடியாதவை என்பதை நினைவூட்டுகிறேன்.

அடுத்து சமயம், சமுதாயம் என்பது கூட ஒன்றாகக் கிடந்த ஒன்று. குளம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; குடம் வேறு, தண்ணீர் வேறு அல்ல; உயிர் வேறு; உடல் வேறு அல்ல. எனவே சமயமும், சமுதாயமும் இணைந்த ஒன்று. தனி மனிதர்களை இணைப்பது குடும்பம் முதல்நிலையில், அடுத்த இடமாக-இணைப்பதில் பொது இடமாகக் கோயில் தான் இருந்தது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்; என்று சொன்னார்கள்; கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அல்ல; கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற மனிதனுக்கு உத்தரவாதம் இருக்கும். பாதுகாப்பு இருக்கும்; அறம் இருக்கும்; அன்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் சொன்னார்கள். பழைய முறையை ஒட்டியே கோயிலைச் சார்ந்து வாழ்கின்ற பழக்கம் நமக்கு வர வேண்டும். கோயில்களில் எல்லாம் அங்கு வருகிறவர்களின் பட்டியலைப் பதிவு செய்ய வேண்டும். ‘இந்த ஆள் காணோம்’ என்று சொன்னால், இந்த மகா மாரியம்மன் கோவிலைச் சார்ந்தவர் என்று போய் உரிமை கொண்டாட வேண்டும். மனிதனுக்கு உரிமை கொண்டாடுங்கள். இன்றைக்குத் தங்கத்திற்கும், வெள்ளிக்கும், அர்ச்சனைக் காணிக்கைக்கும், காணிக்கும், பூமிக்கும் உரிமை கொண்டாடுகிறோம். இவைகளை விட்டு நாம் மனிதர்களை உரிமை கொண்டாடி, இவன் அழுதால் அவன் அழுவான்; இவன் சிரித்தால், அவன் சிரிப்பான் என்ற புதுநெறியை, பொதுநெறியை மீண்டும் சமுதாயத்திலே கொண்டு வரவேண்டும்.

எனவே திருமணம் செய்து வைத்தது கோயில்; நண்பனாக இருந்து பாதுகாத்தது கோயில்; கணவனும் மனைவியும் சண்டை போட்டிருந்தால் சேர்த்து வைத்தது கோயில்; இறந்தவர்களை எழுப்பியது கோயில்; சமாதானம் செய்து வைத்தது கோயில்; இன்னும் என்ன பாக்கி சமுதாயத்தில்! என்று எண்ணிப் பாருங்கள். எனவே நம்முடைய சமயமும் சமுதாயமும் இணைந்த ஒன்று. அந்த உயர்ந்த சமுதாய நெறியை மீண்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! மீண்டும் மலேசியா நாட்டைப் பொறுத்த வரையில் ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை மூலம் கோயில் தவறாமல் மதக் குருக்கள்மார்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொருவரையும் தொடர்ந்து சென்று பாதுகாக்க வேண்டும். ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பர். இது மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஊட்டுகிற அறிவு நினைந்து என்ன தேவை என்பது அல்ல ‘நினைந்து’ நாம் நம்முடைய சமூகத்தினுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து செய்ய வேண்டும் என்பது. ‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்பதில் ‘சாலப் பரிந்து’ என்பதற்கு என்ன பொருள்? இப்பொழுது கூட சிலபேர் உதவி செய்வார்கள். ஏழை என்ற நோக்கத்தோடு செய்வார்கள்! கேட்டு விட்டான் என்பதற்காகச் செய்வார்கள். ‘தரித்திரம் பிடித்த பயல்’ என்று சொல்லிக் கொண்டே செய்வார்கள். அது அல்ல! மிக அன்போடும் பரிவோடும், வாங்குகிறவனும் சிவனின் பாத்திரம் என்று கருதிக் கொடுக்க வேண்டும். “பாத்திரம் சிவமதென்று பணிதிர்” என்பார் அப்பரடிகள். அந்தப் பாங்கோடு நடமாடுங் கோயில் என்ற பாங்கோடு கொடுக்க வேண்டும். என்பதைப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து, பாவியேனுடைய ஊனினை உருக்கி என்பர். இந்தப் பாவியேனுடைய ஊனினை உருக்கி என்றால் சிலபேர் கொடுக்கப் பிரியப் படுவார்கள். ‘குடிகாரப் பயல்! இவனுக்கா கொடுப்பது என்பார்கள். குடிகாரப் பயனாக இருந்தாலும் நீ கொடுத்து, அணைத்து, வைத்து, உட்கார்ந்து பேசி, மனம் மாற்றித்தான் செய்ய வேண்டும்! அவனை என்றைக்குத்தான் குடிகாரனாக இல்லாமல் மாற்றுவது? இதில் தாயாக நிற்பவள் பாவி’ என்று பார்க்கமாட்டாள். தகப்பன் சில சமயம் அப்படிப் பார்த்து விடுவான்; தெருவாயிற்படி வழியாக விரட்டி விடுவான். ஆனால் கொல்லைவாயிற்படி வழியாக வரச் சொல்லித் தாய் சோற்றைப் போட்டு விடுவாள். காரணம், தாய் அன்பு தலையாய அன்பு.

ஆதலால், ‘பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி’ என்றால் பாவத்தன்மைகளை மாற்றி, அறிவை நல்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து, புறம்புறம் திரிந்த செல்வமே!’ என்றார். சிலபேர் சில புத்திசாலிகளிடம் கொடுத்தோம் என்றால், அவர் நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து வைத்திருக்கிறாரா என்று பின்பற்ற வேண்டும். இப்பொழுது நானும் இருபத்தேழு ஆண்டுகள் கழித்துத் தான் வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்பற்ற முடியவில்லை.
மாணிக்கவாசகர் சொல்கிறார். 'புறம்புறம் திரிந்த செல்வமே' என்று. அது என்ன? ஒருவருக்கு ஒன்றைச் செய்தால் தொடர்ந்து அதைப் பின்பற்றி அனுபவிக்கிறாரா? என்று பார்க்க வேண்டும். தேவைக்குரிய குணங்கள் அமைந்த சமயம் நம்முடைய சமயம். இந்துப் பேரவை; ஆலயங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை. இந்த நாட்டில் இருக்கின்ற சமய அமைப்புகள் எல்லாம். உயர்ந்த நோக்கம் ஒன்றிற்காகத் தியாகம் செய்து, இந்த நாட்டில் எதிர்காலத்தில் நம்முடைய மேன்மைகொள் சைவநீதி நின்று விளங்க வேண்டும். அந்தப் பொறுப்பை நண்பர் கோடிவேல் அவர்கள் எடுத்து முடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்; எண்ணுங்கள்; சிந்தனை செய்யுங்கள்; வழிபாடு செய்யுங்கள்; அதன் மூலம் அளவு கடந்த ஆற்றலைப் பெற்று, உங்கள் பொறிகள் புலன்கள் வாயில்களிலே தேக்கி, வீட்டையும் வீதியையும் காப்பாற்றுங்கள்; வாழுங்கள்; வாழ்வியுங்கள் என்று கேட்டுக் கொண்டு வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகிறேன்.