குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/இராமநவமிச் சிந்தனைகள்


17


இராமநவமிச் சிந்தனைகள்


மதுரை வானொலி ஒலிபரப்பு: 1-4-93

இன்று இராமனைப் பற்றிப் பரவலாகப் பேசப்பெறுகிறது. இராமன், நடையில் உயர்ந்த நாயகன். கடவுளுக்கும் சரி, அவதார புருஷர்களுக்கும் சரி, நமது நாடு வழிவழியாக வழிபாடு செய்து வந்திருக்கிறது. வழிபாடு என்றால் என்ன? நிவேதனங்களைப் படைத்துக் கும்பிட்டால் போதுமா? அவதார புருஷர்கள் ஏன் அவதாரம் செய்தனர்? என்ன செய்தனர்? எதற்காகச் செய்தனர்? என்று அறிந்து அந்தப் பணிகளை நாமும் தொடர்ந்து செய்வதே சிறந்த வழிபாடு! வழிப்படுதல் என்ற சொல்லே வழிபாடு என்றாயிற்று:

இராமன், அரசபதவியைத் துறந்தான். ஒரு நாட்டின் அரச பதவியைக் கொஞ்சம்கூட முணுமுணுப்பு இல்லாமல் “அன்றலர்ந்த செந்தாமரையினை ஒத்த” முகத்துடன் வேண்டாம் என்றான். அதுமட்டுமா? காட்டிற்கும் செல்ல ஒத்துக்கொண்டான். இது, இராமனின் நெறி. இன்றைக்கு இந்த நாட்டில் அதிகார பதவியைத் துறப்பார் யார்? இன்று நாட்டில் நடப்பது நாற்காலிச் சண்டைதானே. நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் நாற்காலியை விடுவதற்கு விரும்பாமல், இறுகப் பிடித்துக்கொள்கின்றனர். அந்த நாற்காலியைப் பிடுங்கவே மற்றவர்கள் முயற்சி செய்கின்றனர். ஆக, நாற்காலிப் போராட்டத்திலேயே மனிதநேரமும், ஆற்றலும் செலவாகிறது. இதைத் தவிர்க்க அதிகாரப்பசி இல்லாமல் நாட்டுப்பணியில் நாட்டம் செலுத்துவதே இராமனுக்குச் செய்யும் வழிபாடாகும்.

அடுத்து, இராமன் சென்ற இடங்களில் தோழமைகள் கிடைக்கின்றன. கங்கைத் தலைவன் குகனின் தோழமை ! கிட்கிந்தைத் தலைவன் சுக்கிரீவனின் தோழமை! அடுத்து இலங்கைத் தலைவன் விபீஷணனின் தோழமை! இவர்கள் அனைவரையும் இராமன் நாட்டெல்லை, சாதி, வர்ணம் கடந்து தோழமை கொள்கிறான். இல்லை, இல்லை! தோழமை மட்டுமா கொள்கிறான்? உடன்பிறவாச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்கிறான்.

“குகனொடு ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்; எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய, நின்னொடு எழுவர் ஆனேம்!
புகல்அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை”

என்று இராமன் கூறுவதாகக் கம்பன் பாடுவான். இந்த விரிந்த சகோதரத்துவம் இந்த நாட்டில் எங்கிருக்கிறது: தீண்டாமை! எண்ணத் தொலையாத சாதிப் பிரிவினைகள்! மதப்பிரிவினைகள்! இவ்வளவும் கடவுள் பெயராலேயே நடக்கின்றன.

இந்திய மண்ணிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதர்களைக் கூட, சகோதரர்களாக அங்கீகரிக்க மறுக்கிறோம்! இல்லை, மனிதர்களாகக்கூட அங்கீகரிக்க மறுக்கிறோம்! அசல் - நகல் என்றெல்லாம் பேசுகிறோம்! இராமன் மானிடசமுதாயத்தில் சகோதரத்துவத்தை வளர்க்க உறுதி பூண்டிருந்தான்! நாமும் இராமநவமியின் சிந்தனையில் சகோதரத்துவத்தைப் பேறுவோமாக!

இராமன், யாரோடும் பகை கொண்டதில்லை. இராவணனுடன் கூட இராமனுக்குப் பகை இல்லை. இன்று நமது சமுதாயம் இந்த நெறியைப் பின்பற்றுகிறதா ? இல்லையே! சின்னச்சின்னச் செய்திகள், கருத்து வேற்றுமைகளுக்காகக் கூட இன்று பகை கொள்கின்றனர்; குண்டுகளை வைத்து அழிவு செய்கின்றனர். இராமநாமம் உச்சரிக்கும் நாம், நம் இதயத்தில் பகைமையையும் கையில் வன்முறை ஆயுதங்களையும் வைத்திருக்கிறோம் : இராமநவமிச் சிந்தனையில் இவற்றைத் தவிர்த்திடுவோம்! நாடு, மொழி, இனம், மதம் கடந்த ஒருகுலம் காணப் போராடுவோம்! கூடி உழைப் போம்! கூடி வாழ்வோம்!

இராம காதையின் நோக்கம் சிறையிருந்த செல்வியின் ஏற்றம் பேசுவது என்பர். இராவணனுடைய நாட்டில் தன்னந்தனியாகக் கற்புத்தவம் செய்தாள் சீதை! இராவணனுடன் விவாதப்போர் நடத்தினாள்: அந்தத் துணிவு அன்று சீதைக்கு இருந்தது. இன்றோ நமது மகளிர் தற்கொலைகளை நாடுகின்றனர். ஏன், நமது நாட்டு மகளிர் கோழைகளானார்கள்? வாழப் பிறந்தவர்கள் ஏன் சாகிறார்கள்? இராமநவமியின் போது இதுபற்றிச் சிந்தனை செய்வோம்! மகளிரை வாழவிடுவோம்! மகளிர் குலமே! வாழத் தலைப்படுங்கள்! நடையில் உயர்ந்த நாயகன் இராமன் நினைவில் பதவியை நாடாது பணியை நாடுவோம்! அனைவரும் ஒரு குலத்தவராக வாழ்வோம்! யாரோடும் பகை வேண்டாம்! மகளிரை வாழவைப்போம்! இதுவே இராமனுக்குச் செய்யும் வழிபாடு!