குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/பொங்கல் பரிசு




16


பொங்கல் பரிசு


சமய ஒழுக்கம்


மனிதன் என்றாலே பொதுவாகத் துன்பத்தை மாற்றுகிறவன்-இன்பத்தை உண்டாக்குகிறவன் என்றுதான் நான் கருதுகிறேன். இந்த ஆற்றல் இல்லாதவன் மனிதனல்லமனித உருவில் உலவுகிற விலங்கு.

“கடவுள் மனிதனுக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுத்திருக்கிறார். அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவது கறந்த பாலைக் கற்பாறையிலே கொட்டிக் கவிழ்ப்பது போன்றது. இசச்யெல், கடவுளுக்கே பெரும் துரோகம் செய்வது போலாகும். எனவே இறைவனால் நமக்கு வழங்கப் பெற்ற அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி, முறையாக வாழ்வதில்தான் நமக்கும் பெருமை இருக்கிறது. நமக்கு ஆற்றலையும் அறிவையும் தந்த கடவுளுக்கும் பெருமை இருக்கிறது.

நமது சமயமும், இலக்கியங்களும், கலைகளும் ஆன்மாவை-உயிரை ஒத்துக்கொள்ளுகின்றன. ஆன்ம நலம் இல்லாத வாழ்க்கை முகப்பு இல்லாத வீடு போன்றது. இதனை நன்குணர்ந்தே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற நமது சமயக் குரவர்கள் ஆன்ம நலத்தை வளர்க்கப் பாடுபட்டார்கள். சமயம் நமது சமுதாய நலனை-வாழ்வியலை விட்டு விலகியதில்லை.

வெறும் சம்பிரதாயங்களும், சடங்குகளுமே சமயமன்று. முறையாக-நாணயமாக வாழ்வதில்தான் சமயம் இருக்கிறது. இதனை நமது சேக்கிழார் பெருமான், தாம் அருளிய பெரிய புராணத்தில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

பாத்திரத்தை வெளிப்புறத்தே மட்டும் தேய்த்துத் தூய்மைப்படுத்தினால் போதாது. உட்புறத் துாய்மையும் இருந்தால்தான் அதில் பெய்யப் பெறும் பாலின் துய்மை கெடாமல் இருக்கும். மனிதனுக்குப் புறத் தூய்மை இன்றியமையாததுதான். எனினும், அகத் தூய்மை அதனினும் இன்றியமையாததாகும். அத்தகைய அகத்தூய்மையை உருவாக்கத்தான் பிரார்த்தனை-சமயம் எல்லாம் இருக்கின்றன.

இன்று இறைவனிடம் சென்று எதைக் கேட்பது என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை. மளிகைக் கடைக்குப் போய்க் காய்கறியும், காய்கறிக் கடைக்குப் போய் மளிகைச் சாமானும் கேட்பது போலப் பலர் இருக்கின்றனர். இறைவனிடம், நாம் நமது குணப் பெருக்கத்தைக் கேட்க வேண்டும்-குறையுடைய என்னை நிறைவுடையவனாக்கு என்று கேட்க வேண்டும். ஆன்ம வளர்ச்சியைக் கேட்க வேண்டும். ‘இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கு வல்லமை தா’ என்றுதான் பாரதி கூடக் கேட்டார்.

நம்மை அறிந்தோ, அறியாமலோ புறத்தே சில வளர்ச்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு காலூன்ற முயற்சிக்க வேண்டும்.

தொடக்கத்தில், விலங்குகளை எதிர்த்துப் போராடவே கையில் ஆயுதந் தாங்கிய மனிதன் இன்று, அன்பு செலுத்திச் சிரித்து மகிழ வேண்டிய இன்னொரு மனிதனை எதிர்க்கவே ஆயுதந் தாங்கும் இழி நிலையைக் காண்கிறோம். சிறந்த சமயவாதி மறந்தும் கூட மற்றவர்களிடம் காழ்ப்போ, பகையோ கொள்ளமாட்டான்; எவரிடத்தும் அன்பு செலுத்துவதுதான் சிறந்த சமய ஒழுக்கம். வான்மழை பெய்தால் மண்ணில் மரம் செடிகொடிகள் தழைக்கும் என்பது போல, அன்பு மழை பொழிந்தால் மனித சமுதாயம் செழிக்கும்.