குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/தமிழமுது
மானுடத்தின் வரலாறு ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த ஓய்வில்லாத இயக்கத்திற்குரிய உயிர்ப்பு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? தனக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெற்றியே மானுடத்தின் இயக்கத்திற்கு உயிர்ப்பு; உந்து சக்தி. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து மானுடம் சிந்திக்கப் பழகி வந்திருக்கிறது; வாழும் துடிப்பினைப் பெற்றுப் படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறது; வாழ்வித்தும் வந்திருக்கிறது. பண்டைக் காலத்தில் அதாவது புராணங்கள் தோன்றிய பிறகு தேவர்கள் பாராட்டப்படவில்லை. மாறாக “வானவர்கள் வாழ்த்துவதும் தாம் வாழ்வான்” என்றும், “தக்கன் வேள்வித் தகர் தின்று” என்றும் “தேவரனையர் கயவர்’ என்றும் எள்ளி நகையாடப்பெற்றுள்ளனர். ஆனால் மானுடம் பாராட்டப் பெற்று வந்துள்ளது. ஏன்? இறைவன்கூட மானுடத்துடன் உறவு வைத்துக் கொள்ள இம்மண் புகுந்துள்ளான். ஏன்? மானுடத்தினுடைய வாழ்வியலில் பழங்காலத்தில் பொதுமை இருந்தது. எனவே மானிடர் வாழ்வித்தே வாழ்ந்துள்ளனர்; மற்றவர்களை வாழ்விக்க இயலாத பொழுது நொந்து வேதனைப்பட்டுள்ளனர். அவர்கள் பொருளைத் தேடினார்கள். ஆனால் பொருளைச் சேமித்துப் பாதுகாக்கும் பூதமாக வாழ்வதற்கல்ல. “இல்லென இரப்போர்க்கு இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்” என்ற நெறியே வாழ்வு நெறியாக இருந்தது. இங்ஙனம் அருளொடும் அன்பொடும் தேடிய பொருளே பொருள் என்று வாழ்தலே வாழ்வு. இத்தகு வாழ்வு தமிழகத்தில் நடைபெற்ற சங்க காலத்தில் வாழ்வே சமயமாக இருந்தது. சமயநெறிச் சீலங்கள் வாழ்க்கையின் துறை தோறும் ஊடுருவி ஊனும் உதிரமும் ஆக இருந்தன. ஆதலால் சங்க காலத்தில் நோன்பு என்ற சமயநெறி வழிபட்ட சொல், பிறர்க்கென முயலும் முயற்சியினைக் குறித்து வழங்கிற்று.
“தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென
முயலுநர் உண்மை யானே”
என்பது புறநானூறு. இத்தகு நெறி வாழ்வியல் நெறியாக இருந்தவரையில் சமுதாயம் உத்தரவாதமும் பாதுகாப்பும் பெற்றிருந்தது. காலப்போக்கில் அயல் வழக்கின் நுழைவு காரணமாக ‘விதி நம்பிக்கை’ வலுத்தது. உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் கால்கொண்டன. அறியாமை, வறுமை, ஏழ்மை முதலியன ஒன்றன்பின் ஒன்றாக, சமுதாயத்தை அகநிலையிலும் புறநிலையிலும் தாக்கிப் பீடழித்தன. அதனால் திருக்குறள் கூறுவது போல இலர் பலர் ஆயினர். மனித இயல்கள் அழியத் தொடங்கியபின் சமுதாயத்தில் மக்களுக்கு இருந்த பிடிப்பு தளர்ந்தது. சுயநலமே எங்கும் தலைவிரித்தாடியது.
இந்தச் சூழ்நிலையில் சில சிந்தனையாளர்கள் மீண்டும் சமய இயக்கத்தைப் புதுப்பிக்கவும் அவ்வழி சமுதாயத்தை உயிர்ப்புடன் இயக்கவும் முன் கைகொடுத்து முயற்சி எடுத்தனர். இந்தப் பேரியக்கம் திருமூலர் முதல் வள்ளலார் வரையில் வளர்ந்து வந்தது. மனிதர்களை நடமாடும் கோயில் என்று வர்ணித்தது; அது மட்டுமா? நடமாடும் மனிதர்களாகிய கோயில்களுக்கு வழங்கினால் இறைவனுக்கு ஆகும் என்றது. நடமாடும் கோயிலாகிய மானுடத்தைப் பேணுதலே சமுதாயத் தொண்டு.
ஒரு மனிதன் தனது பொறி புலன்களைப் பக்குவப்படுத்திப் பலருக்கும் பயன்பட வாழ்தலே சமய வாழ்க்கை மற்றவர்க்குப் பயன்படாதன எல்லாம் தற்சார்புடையன. அவையெல்லாம் காலப்போக்கில் அழியும். ஆதலால் மானுடத்தை முழுமையாக வளர்த்து உயிர்க்குலத்திற்கு அர்ப்பணிப்பதே சமயத்தின் குறிக்கோள். இக்குறிக்கோள்வழி சமயம் பேணப் பெற்றால் சமயம் வளரும்; சமுதாயம் வளரும்.
சமுதாயம் என்பது பலர் கூடி வாழும் ஒரு சமூக அமைப்பு. சமுதாய அமைப்பில் உள்ள ஒவ்வொருவருடைய ஆன்மாவும் செழித்து வளர்ந்தால்தான், சமுதாயம் செழிப்படையும். ஆதலால் சமயத்திற்கே அடிப்படை உறுப்பு சமுதாயம்தான். எனவே, சமுதாயத்தை வளர்ப்பது சமூகத் தொண்டே தான். காலத்தால் பிந்திய பிற்போக்குவாதிகள் தொண்டினை இரண்டாகப் பிரித்தனர். ஒன்று சிவத்துக்குச் செய்வது பதித்தொண்டு, பிறிதொன்று பசுத் தொண்டு - அதாவது உயிர்களுக்குச் செய்வது. இதனால் காலப்போக்கில் சிவத்திற்கு அஞ்சியாயினும் அன்புபட்டாயினும் தொண்டு செய்யத் தலைபட்டனர். உயிர்களுக்குச் செய்வதை அதாவது பசுத்தொண்டைக் கைவிட்டனர். இது பெரும்பிழை. பசுக்களுக்கு - உயிர்களுக்குச் செய்தாலும் திருவருள் சிந்தனையுடன் பாத்திரம் என்று எண்ணிச்செய்யின் அதுவும் சிவத்தொண்டேயாகும்.
இறைவன் உயிர்கள் வளர்ந்து வாழ்ந்து உயர்வு பெற, உய்தி அடைய உயிர்களுக்குக் கருவி, கரணங்களை வழங்குகின்றான். இந்தக் கருவி கர்ணங்களுக்குரிய துய்ப்புகள் தடையிலாது கிடைக்கச் செய்து துய்க்கச் செய்வது தொண்டு ஆகும். உடலுடன் பொருந்தியுள்ள அறிவுக் கருவிகள், அறிவறிந்து இயங்கத் துணை செய்தல் தலையாய தொண்டு. கொடையில் சிறந்தது அறிவுக் கொடையே. பொது நூல்களைக் கற்றவும், ஞானநூல்களை ஒதவும், தெளிவு பெறவும் உரியன செய்தல் ஒப்பற்ற சமயத் தொண்டு. இறைவன், சொல் எடுத்துக் கொடுத்த வரலாறும், நாளும் இன்னிசையால் தமிழ் கேட்க விரும்பியதும் அறிவு வளர்ச்சிப் பணியின் பாற்பட்டதேயாம்.
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றது திருக்குறள். ஆம்! உண்பனவும் தின்பனவும் உடுத்துவனவும் உயிர்ப்பனவும் இல்லாது போயின் எங்ஙனம் வாழ்க்கை இயங்கும்? ஆதலால் தின்கின்ற சோறும் பருகுகின்ற நீரும் வெற்றிலை பாக்கும் கொடுப்பது சிறந்த சமூகத் தொண்டு; சமயத் தொண்டுமாகும். இறைவன் பொதி சோறு சுமந்து கொண்டு சென்று அடியார்களுக்குக் கொடுத்த வரலாற்றினை அறிக அது போலவே அடியார்களாகிய சிறுத் தொண்டரும், இளையான்குடி மாறரும் சோறளித்துச் சோறு பெற்ற வரலாற்றினை உணர்க!
வாழ்க்கை என்பது பொன்னால் மட்டும் ஆவது அல்ல. பொருளும் அதற்குத் தேவை. வாழ்க்கை என்பது பொருளால் மட்டும் ஆவதல்ல. மனிதருக்குப் பொருளும் கருவியே. இன்பம் வேண்டும்; “இறைவன் கழலேத்தும் இன்பமே இன்பமல்ல” என்று தமிழ் வழக்கு கூறுகிறது. ஆயினும் தமிழ் மரபில் இன்பம் என்று கூறினால் அது காமஞ்சான்ற இல்வாழ்க்கையைக் குறிக்கும். தமிழ் மரபில் பெண் பெருமைக்குரியவள். அறம் என்று மனையறம் பாராட்டப் படுகிறது. பிற்காலத்தில் அயல் வழக்குகளின் தாக்கத்தால் பாதிப்பால் இல்வாழ்க்கை தரம் தாழ்த்தப் பெற்றுக் கொச்சைப் படுத்துப் பெற்றது. திசை தவறிய இந்த நிலையில் தான் அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றது. இறைவனே முன்னின்று சுந்தரருக்கு இரண்டு திருமணங்களை நடத்தி வைத்தமையை ஓர்க. திருஞானசம்பந்தர் திருமருகலில் திருமணம் செய்து வைத்தமையை எண்ணுக. ஆதலால் மனிதர்களை முறையான வாழ்வில் ஆற்றுப்படுத்துதலும் அந்நெறியில் நின்று வாழச் செய்தலும் சமயத் தொண்டேயாம்.
அடுத்து மானிட வாழ்க்கைக்குக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய இசை முதலிய கலைகளை வளர்ப்பதும் சமயத் தொண்டே சமயம் கலைகளாக, கலைகளின் முடிவாக முடிந்த கலையாக விளங்குகிறது. “ஏழிசையாய், இசைப் பயனாய்” நின்றாடும் தேவதேவனை உன்னுக. திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாய நாயனார், மாணிக்கவாசகர் ஆகிய திருத்தொண்டர்களின் வரலாற்றையும் அறிக. ஆதலால் கவின் கலைகளை வளர்த்து மானுடத்தின் தரத்தை உயர்த்துவதும் சமயத் தொண்டேயாம்.
இயற்கையோடிசைந்தது நமது வாழ்வியல், நமக்கு பாதுகாப்பு இயற்கைதான். இயற்கையோடு ஒத்து இசைந்து வாழ்ந்தபோதெல்லாம் வாழ்க்கை சிறந்து விளங்கியிருக்கிறது. இயற்கையையே இறைவனாக எண்ணிப் போற்றிய நாடு இது. “வாசமலரெலாம் ஆனாய் நீயே” என்பது நினைந்து நினைந்து ஓதத்தக்கது. அதுபோலவே தலமரங்கள் (தல விருஷங்கள்) என்று மரம் வளர்க்கும் நெறியை அறிகமுப்படுத்தி வளர்த்தனர். திருத்தலங்கள் அரசவனம், கடம்பவனம் என்று அழைக்கப் பெற்றன. திருத்தலங்கள் இயற்கையான சோலையும் காடும் சூழ்ந்து விளங்கி மிளிர்ந்தன. இப்போழுது கடைகளும் காட்டிரைச்சலும் அமைந்து திருக்கோயிலின் சூழலையே கெடுத்து விட்டன. அதனால் மழைவளம் குறைந்து போயிற்று. ஆதலால் மரங்களை வளர்த்தல், மலர்ச் செடிகளை வளர்த்தல் உயிர்க் குலத்திற்கு உரிய உயிர்க் காற்று (OXYGEN) தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும் மழைவளம் பேணுவதாலும் சமுதாயத் தொண்டுமாகும்.
“நீரின்றி அமையாது உலகம்” என்றது திருக்குறள், அதனாலன்றோ சிவம் தண்ணீரின் அருமை கருதி அதனை உச்சித் தலைமேல் வைத்துப் போற்றுகின்றார். இறைவனுக்கு உவப்பானது தண்ணீர்தான். அதனால் முன்னோர் திருக்குளங்களை அமைத்தார்கள். நீராடுதலின் இன்றியமையாமையை உரைக்கத் தீர்த்தவாரித் திருநாள் ஏற்படுத் தினார்கள். கண்ணிரண்டும் இழந்த தண்டியடிகள் திருவாரூர் கமலாலாயம் என்ற திருக்குளத்தைச் சேறு அள்ளித்துய்மை செய்த அரிய வரலாறு நம்மனோர் வாழ்வாவது என்று? இன்று திருக்கோயிலைச் சார்ந்த திருக்குளங்கள் பேணு வாரில்லாமல் உள்ள அவலநிலை ஆற்றொணாத் துயரத்தைத் தருகிறது. திருக்குளங்கள் துர்வை அள்ளல் சமுதாய நலம் தழுவிய சமயத் தொண்டு.
ஆன்றோரே! சான்றோரே! சமயம் வேறு சமுதாயம் வேறு என்று பிரிக்காதீர்கள்! இரண்டும் ஒன்றையொன்று தழுவியது. ஒன்றில்லையேல் பிறிதொன்றில்லை. நமது சமயத்தைக் கடவுட் சமயம் என்ற நிலையிலிருந்து கோயில் சமயமாக்கிச் சமூதாய சமயம் ஆக்க வேண்டும்! இது நடந்தால் வாழ்வு சிறக்கும்! வரலாறும் சிறக்கும்!
இயற்கைப் பெரும் பகுதி இயல்பாகவே உயிர்க்குலத்திற்கு இதத்தையும் மகிழ்வையும் தரக்கூடியனவாகவே அமைந்துள்ளன. ஆயினும் ஒரு சில பரிணாம வளர்ச்சி நிலை எய்தி முழுமை நிலை அடைந்த பிறகே இதமும் இன்பமும் தருவனவாய் அமைந்துவிட்டன. இந்த வகையினவற்றுள் ஒன்று கனி. அதாவது பழம். அரும்பு போதாகி, மலராகிக் காயாகிக் கனியாதல் வளர்ச்சிமுறை. இந்தப் படிமுறை வளர்ச்சியில் முழுமை நிலை எய்த இயலாத நிலையில் அரும்பு நிலையிலேயே வீணாதல் உண்டு. அரும்பு நிலை கடந்த போது ஆன நிலையிலும் சிதைவு ஏற்படுகிறது. பொது நிலையினைக் கடந்து வளர்ந்த நிலையில்-மலர் நிலையில் பாழாதல் உண்டு. மலரிலிருந்து பிஞ்சு, பிஞ்சு நிலையில் காய்நிலை பெறாமல் உதிர்ந்து வீணாதல் உண்டு. காய்நிலையில் கனியாதற்கு இயலாமல் வெம்பி வீழ்தலும் உண்டு. இத்தனை ஆபத்துக்களைக் கடந்து பழமாதல் ஒரு பெரிய வளர்ச்சி, சாதனை, இதுபோலத்தான் மனிதனின் நிலையும். மனிதன் அவனுடைய குணங்களின் படிமுறையில் வளர்ந்த பிறகே பயன்படுகின்றவன் ஆகின்றான். குணம் என்னும் குன்றேற வேண்டும். இதுவே வாழ்க்கையின் சாதனை-பயன்? இந்தக் குணம் என்னும் குன்றேறி முடியாமல் பழுத்த மனத்தராகாமல் இடையிலேயே அழுக்காற்றில் ஆழ்ந்து கெட்டுப் போகிறவர்களும் உண்டு. அவா வெள்ளக்கடலில் வீழ்ந்து கரையேற முடியாமல் ஆழ்ந்து போகிறவர்களும் உண்டு. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லும் பாவையிடம் சிக்கி அழிந்து போனவர்கள் பலர். நாவடக்கம் இன்றிக் கடுஞ்சொல் கூறிக் குன்றியவர்களும் உண்டு. இந்த ஆபத்துக்களைக் கடந்து குணம் என்ற குன்று ஏறி நிற்பவனே மனிதன்! மாமனிதன்!
இயற்கையில் மனிதன் நல்லவனாகவே பலநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறாள். பண்டைக்கால மனிதன், அதாவது ஆதி மனிதன் தன் வாழ்க்கையோடு ஒத்து வாராத இயற்கையொடும் விலங்குகளொடும் தான் போராடினான். தன்னையொத்த மனிதர்களோடு போராடவில்லை. ஏதோ ஒர் இனக்கவர்ச்சிக்கு ஆட்பட்டுப் பகைமையின்றி வாழ்ந்திருக்கிறான். ஆனாலும் இன்றுள்ள அமைப்பியலில் உறவுகள் இருந்ததாகக் கூறமுடியாது. இன்றும் குழந்தைப் பருவநிலையில் பேதம் இல்லை. உரிமை, வேற்றுமை, பகை வாசனையின்றிப் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பொல்லாத சமுதாயம் பொல்லாதன வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்து விடுகிறது. மனித குலத்தில் சொத்துடைமை தோன்றிய பிறகுதான் மனிதன் ஒருமை நிலையில் வாழ்தலினின்றும் மாறுபட்டான். எனது ‘உனது என்ற நச்சு மரங்கள் வளர்ந்தன. இந்த நச்சு மரங்கள் மானிட சமுதாயம் என்னும் கட்டுமானத்தைப் பிளந்தன; பிரிவினைப் படுத்தின; பகைமையை வளர்த்தன. ‘எனது’ ‘உனது என்னும் நச்சுமரங்கள் ஈன்ற கனிகளே நான், அதிகாரம், காவல், அரசு ஆகியன! ஆக, மானுடம் அறிவு, அன்பு, இணக்கம் உறவு என்று வளர்ந்து சொர்க்கத்தைப் படைப்பதற்குப் பதிலாக அழுக்காறு, அவா, வெகுளி, சண்டை, காவல், சிறை என்னும் தீயவட்டத்தை மையமாகக் கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது. வாழ்க்கை நரகமாகி விட்டது. இது தவறான பாதை என்று மானுடத்திற்கு உணர்த்தத் தோன்றியது பழனியின் பழக்கதை.
இருப்பது ஒரு கனி. தாயும் தந்தையும் கணபதி, முருகன் ஆகிய குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பதே முறை. ஆனால், போட்டிகள் கால் கொண்டுவிட்ட உலகத்தின் நடைமுறையால் பாதிக்கப்ட்ட மனிதன் எழுதிய கடவுட்கதை என்பதை மறந்து விடக்கூடாது. போட்டி உருவாக்கப்படுகிறது. கணபதி, முருகன் நிலை தீய திசையில் நடை பயிலத் தொடங்கிய நிலை ஆதலால், “எங்களுக்குப் போட்டி வேண்டாம்” என்று மறுத்துவிட்டு இருவரில் ஒருவர் எடுத்துக் கொள்ள மனம் ஒருப்பட்டிருக்கலாம். அன்றைய உலகம் அஃதன்று. அது கிடக்கட்டும். சமமாகவாவது பங்கிட்டிருக்கலாம். இதுவும் தீய திசையில் மேலும் நடந்த நிலைதான். சமம் இருக்கலாம். அதுவே உரிமையாக மாறும்பொழுது வேறுபாடுகள் கால்கொள்ளும் என்பதை மறந்துவிடக் கூடாது. தவிர்க்க முடியாத நிலையில் போட்டி தொடங்கிவிடுகிறது. போட்டியில் ஒருவர்-முருகர் உண்மையிலேயே உலகத்தை வலம் வருகிறார். ஒருவர்-கணபதி அம்மையப்பனை வலம் வருகிறார். அம்மையப்பனை வலம் வந்தவருக்குக் கனி கிடைத்துவிடுகிறது. ஆம்! தன்னை நாடி மதித்தவருக்குப் பரிசில்கள் தருவது என்கின்ற மானுடத்தின் தற்சார்பு-தற்போத நிலையின் தாக்கம்-அம்மையப்பனுக்கு! திறமை புறக்கணிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உள்ள மானுடம் மிகவும் தாழ்ந்த நிலையினதாகும். இந்த இடத்தில் - வீழ்ந்து கொண்டிருந்த மானுடத்தைத் தடுத்து நிறுத்தி உயர்நிலையில் உய்த்துச் செலுத்த எம்பெருமான் முருகன் திருவுள்ளம் கொண்டான்; துறவியானான்; முருகன் மேற்கொண்ட துறவி விரக்தியால் ஏற்றபட்டதன்று; விவேகத்தினால் ஏற்பட்டது. முருகன் ஏற்றுக் கொண்ட துறவு மோட்சத்தைக் கருதி ஏற்றுக் கொண்ட துறவன்று. மண்ணகத்தை விண்ணமாக்க ஏற்றுக் கொண்ட துறவு.
மண்ணில் மாந்தர்கள் கலகம்செய் மாந்தர்களாக வாழ்தல் கூடாது. ஒருவர் எல்லாருக்காவும் என்று வாழ்தல் வேண்டும். அப்பட்டமான நிர்வாணமான தன்னலத்தைத் துறக்க வேண்டும். வையகம் உண்ண, உண்ணவேண்டும். வையகம் உடுத்த, உடுத்த வேண்டும். இத்தகு சமுதாயத்தைக் காண மனம் பழமாதல் வேண்டும். மனம், அன்பில் பழுக்கவேண்டும். பழுத்த மனத்தடியார்களானால் சமுதாய ஆர்வம் தோன்றும்; பிறர்க்கென முயலும் நோன்பு தலைப்படும். வையகம் வளரும்; வாழும்.
இத்தகு அருமையான வாழ்வியல் தத்துவத்தைக் கற்றுத் தரும் பழநிமலை வாழ்க! பழநியில் எழுந்தருளியுள்ள நமது வாழ்முதல் வாழ்க!
தமிழ் நாகரீகம் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தைக் குறிக்கோளாக உடையது. அந்நெறியிலேயே முயன்று வாழ்ந்த பெருமை தமிழினத்துக்கு உண்டு.
சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்தின் உயிர்நாடியாக விளங்குவது ஒப்புரவு. விருந்தோம்பல் சிறந்த வேள்வியாகப் போற்றப்பெற்றது. இல்லையென்று சொல்லாது ஈதல், வாழ்வின் கடமை என்று கொண்டவர்களும் வாழ்ந்திருக் கிறார்கள். பெரியபுரணம் காட்டும் ஒப்புரவு நெறியில் மிகவுயர்ந்து பரவையார் மேற்கொண்ட நெறி. திருவருளால் மழையெனப் பொழிந்த நெல் மலையை எல்லாரும் அவரவர் தம் இல்லத்துக்கு எடுத்தேகுக’ என்று அறிவித்து அள்ளிக்கொள்ளச் செய்த ஒல்காப் புகழ்மிக்க ஒப்புரவுப் பண்பாட்டை என்னென்று வாழ்த்துவது!
தமிழர்களின் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாய வாழ்வுக்குச் சங்க காலத்தில் அமைந்த ஒரு நிகழ்ச்சியைச் சான்றாக அமைக்கலாம். சங்ககாலச் சான்றோர் பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு வீட்டில் மனமுரசு கேட்பானேன். பிறிதொரு வீட்டில் சாப்பறை கேட்பானேன்? இம்மாறுபட்ட நிகழ்வு கொடுமையானது. இதற்குக் காரணமாய் அமைந்துள்ள அடிப்படையானது பண்பில்லாதது. அதனை மாற்ற வேண்டும் என்றார் பக்குடுக்கை நன்கணியார். மாற்றிக் காட்டினார் சுந்தரர்.
"...... எதிர் மனைகள்
இரண்டில், நிகழ் மங்கலவியங்கள்
அறையும் ஒலி ஒன்றில், ஒன்றில்
அழுகை ஒலி வந்து எழலும்
............ இரண்டும்
உடன் நிகழ்வது என்?”
என்பது சுந்தரர் வினா. ஒரு வீட்டில் துன்பம்; அடுத்த வீட்டில் இன்பம். ஒரு வீட்டில் வளம், ஒரு வீட்டில் வறுமை. திருக்கோயிலில் செல்வச் செழிப்பு: மக்களிடத்தில் வறுமை. இது மேன்மைகொள் சைவ நீதி ஆகுமா? பொதுமையில் ஆடுபவனை அடிப்படையாகக் கொண்டதே சைவ சமுதாய அமைப்பு. எனவே எல்லார்க்கும் இன்பம் என்ற புதுமை நிறைந்த பொதுமை தழுவிய சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயமே தமிழர் கண்ட தமிழர் சமயங்கண்ட சமுதாயச் செந்நெறியாகும்.
இந்நிலையில் சமநிலைச் சமவாய்ப்புச் சமுதாயத்துக்கு ஒரு வகையில் சராசரித் தகுதி ஒன்றை வரையறை செய்ய வேண்டியுள்ளது. இவ்வடிப்படையிலேயே சமய உண்மைகள் சைவத்தில் விளக்கப்பெறுகின்றன. ஒரு மனிதன் சராசரித் தகுதியுடையவனாக இருப்பதற்கு அவன் இறை வழிபாடு நிகழ்த்துபவனாக இருக்க வேண்டும் என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். இவ்வாறே சராசரிக் குறைகளைக் கடந்த அறிவின் முதிர்ச்சியையே ஞானம் என்று வரையறை செய்கிறது சைவம். சமநிலைச் சமுதாய அமைப்புக்கு, உடையார் இல்லார் என்ற வேற்றுமை இல்லாது உரிமையுடையார் ஒருவருக்குப் பொறுப்புடையார் வழங்குவதை யொத்த ஈதலைச் சைவ சமயம் மையமாகக் கொள்கிறது.
ஆயினும், இத்தகைய சமநிலை சமவாய்ப்புச் சமுதாயத்தை அறவழியில் மலரவைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, மக்களின் வாழ்த்துப் பொருளாக இல்லாமல் வாழ்வுப் பொருளாக அமையும் கடவுள் வழிபாட்டில் பொதுநிலை, சமநிலை, சமரசம் என்பவைகளின் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.
நமது நெறி ஒரு கடவுளைத் தொழும் உயர் மாண்புடையது. ஆனால், அறுவகைச் சமய இணைப்பானது, நம்முடைய சமுதாயத்தில் பலரை ஒரு கடவுள் வழிபாட்டிலிருந்து நெடுந்தொலைவுக்கு இழுத்துச் சென்றுவிட்டது. எந்தவொரு மூர்த்தியையும் ஆன்ம நாயகனாக ஏற்றுக் கொள்ளாமல் கிழமைக்கொரு சாமி, சந்தர்ப்பத்துக்கொரு சாமி என்று தொழுது ஏய்க்கும் அவலம் இன்று பெருகிவிட்டது. நால்வர் காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்தன. நால்வர் பெருமக்கள் இவர்களைத் தனித்தனியே வழிபடவில்லை. பதிகம் அருளிச்செய்யவும் இல்லை, சைவர்கள் சிவத்தையே வழிபட்டனர். ஆழ்வார்கள் திருமாலையே தொழுதனர். இதுதான் சமய சீலம். கடவுளை வழிபடும் துறையில் சிலர் சமரசம் கூறியுள்ளனர். அந்தத் தவறான வழியில் “அரியும் சிவனும் ஒன்று; ஆதலால் யாரையும் வழிபடலாம்; இருவரையும் வழிபடலாம்” என்று கூறுவதும் ஒன்று.
சமரசம் என்பது தன்னுடையதுமீது பற்றும் இன்னொருவருடைய மீது வெறுப்பில்லாதிருப்பதுதான். ஒரு நங்கை கொழுநன், கொழுந்தன் ஆகிய உறவுகளைப் பேணலாம். ஆனால், இருவரையும் கொழுநன் நிலையிலேயே சமரசமாக எண்ணிப் பார்க்க முடியுமா? கொழுநனும் கொழுந்தனும் ஆடவர்களே. ஆகையால், இவனும் கணவனாக இருக்கலாம் அவனும் கணவனாக இருக்கலாம். இரண்டு பேருங்கூட கணவன்மார்களாக இருக்கலாம் என்பது பைத்தியக்காரத்தனமானது.
“கொள்ளேன் புரந்தரன் மால்அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடியா ரொடல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம்; உன்னையல்லாது எங்கள் உத்தமனே”
என்று மணிவாசகரும்,
“நயவேன் பிறபொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவ ரோடல்லால் - வியவேன்
திருமாலை யல்லது தெய்வம்என்று ஏத்தேன்
வருமாறு நம்மேல் வினை"
முன்னுரை
இந்த நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு என்று பாராட்டப்பெறுவது. மனித உலகத்தில் அறிவியல் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் பயனாக இயற்கைச் சக்திகளை அடக்கியாண்டு அனுபவிப்பதும் வெற்றி பெறுவதும் நிகழ்ந்து வருகின்றன. இவ்வழி மனிதர்களின் அனுபவ ஆற்றல் பெருகி வளர்ந்துள்ளது. அதன் காரணமாக நுகர் பொருள்களின் எண்ணிக்கையும் பெருகி வளர்ந்துள்ளன. எனினும் ஏதோ ஒருவகை அமைதியின்மை, வெறிப்புடன் கூடிய பகைமை உணர்ச்சி, போராட்டச் சூழல்கள் ஆகியவை எங்கணும் உலகத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கின்ற இரங்கத்தக்க நிலையைப் பார்க்கின்றோம்.
சமயம்
ஏன்? எதனால் மாறுபட்ட இந்த நிலை? என்று ஆராய்தல் யாவர்க்கும் இன்றைய உடனயடியான கடமை. மனிதன் புறப்பொருள்களைத் திறமையாகக் கையாளுகிறான். தன்னுடைய நுகர்வுக்கேற்றவாறு பக்குவப்படுத்திப் பயன்படுத்த முயல்கிறான். ஆயினும், தன்னை, புலன்களை, உணர்வுகளைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர மறக்கிறான்; மறுக்கிறான். பெரிய விபத்துக்கள் நிகழ்கின்றன. சரக்குப் பேருந்து வண்டியும் (லாரி) மனிதச் சுற்றுலாச் சுற்றுந்து வண்டியும் (பிளசர்) மோதிக் கொள்கின்றன. அவை மோதிக் கொள்வதற்குக் காரணம் அவ்வண்டிகள் அல்ல; அவற்றைச் செலுத்தும் வலவர்களின் திறமையின்மை, அல்லது கவனக் குறைவு ஆகியவையேயாம். அது போலவே மனித உலகத்தில் ஏற்படும் பிணக்கு, பகை, போர் முதலியவைகட்கு ‘மனிதர்களிடையே நிலவும் மக்கள் நிலைக்கு வேண்டிய தகுதியின்மையே காரணமாகும். மனிதர்களின் உள்ளுணர்வுகளைச் சமைத்துப் பக்குவப் படுத்தும் உயரிய வாழ்க்கை முறையே சமயம். பச்சையாகச் சுவைத்து நுகர்தற்கு உரியனவாக இல்லாத பொருள்களைச் சுவைத்தற்குரியனவாகப் பக்குவப்படுத்தும் வினையைச் சமைத்தல் என்று கூறுவது தமிழ் மரபு. இன்ப நுகர்வுக்குரிய கன்னிமைப் பருவத்தை ஒரு பெண் எய்தினாள் என்பதற்கும் “சமையல்” என்று கூறுதல் தொன்று தொட்டுள்ள தமிழ் வழக்கு. அதுபோலவே உயிரும் இன்ப அன்பினை நுகர்தற்குரிய நிலையினை எய்துதற்குப் பக்குவப்படுத்துவதே சமயம்.
இந்தச் சமயவாழ்க்கையில் இன்று மனித உலகம் போதிய அக்கறை காட்டவில்லை. ஒரோவழி காட்டப் பெறும் இடத்திலும்கூட வெற்று ஆரவாரச் சடங்குகள்மீது அக்கறை காட்டப் பெறுகிறதேயொழிய, உண்மையான சமய வாழ்க்கையில் அக்கறை காட்டப் பெறவில்லை. மனித உலகம் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்ற சமய நெறியின் வழி நின்று ஒழுகினால் மட்டுமே இன்பமும் அமைதியும் கலந்த சீரிய வாழ்க்கை மலரும்.
சமய ஒருமை
இந்நிலவுலகம் அளவிடப் பெறாத அகற்சியையுடையது. உலகின்கண் பல்வேறு மொழிகள் பேசப் பெறுகின்றன; அதுபோலவே பல்வேறு சமயங்களும் வழக்கில் உள்ளன. வேறுபடு சமயங்கள் பலவாயினும் அவையனைத்திற்கும் குறிக்கோள் ஒன்றேயாம். ஆயினும் தத்துவக் கட்டுக் கோப்பால், வழிநடத்தும் நெறிமுறைகளால் அவை தம்முள் பள்ளி வகுப்புப் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. அங்ஙனமிருப்பது இயற்கையும் கூட இந்த வேறுபாடுகள் செயற்கையாகக் கற்பிக்கப் பெற்றவையல்ல. திருவருளால் பெறப்பெறும் மெய்யுணர்வு முதிர்ச்சியினாலும், மெய்ப் பொருள் காணும் திறனாலும், அனுபூதியின் பயனாலும் தோன்றியவை ஆகும். இந்த வேறுபாடுகள் வேறுபடுத்தும் இயல்புடையனவல்ல. அப்பரடிகள் அருளிச் செய்தது போல “அறுவகைச் சமயத்து அவரவரைத் தேற்றுந்தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன” என்பதே இந்த வேறுபாட்டின் இயல்பு. இதனை மறந்து சமரசம் என்ற பேரால் கலப்படம் செய்வது தத்துவ அறிவின் வளர்ச்சியையும், ஒன்றியிருந்து அனுபவிக்கும் திருவருள் அனுபவத்தையும் எய்தி இன்புறவொட்டாமல் தடைசெய்யும். தன்னுடைய தத்துவச் சார்பில் தன்சமயத்தில் பற்றுக் கொள்ளுதலும், பிறிதொரு சமயத்தின்மீது வெறுப்புக் கொள்ளாது அந்நெறிக்கேற்ற உதவி புரிதலுமே சமரச ஒழுக்கமாகும்.
சித்தாந்த சமயம்
சித்தாந்த-அதாவது, சிந்தனையின் முடிந்த முடிபு என்று பொருள். சித்தாந்தமே முடிந்த முடிபு. மற்றையது “பூர்வ பக்கம்” என்பது இரத்தினத் திரையம். தமிழ், காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்த மொழி, தமிழினம் பல நூறு ஆண்டுகட்டு முன்பே நாகரிகத்தில் சிறந்து, பண்பாட்டில் மேம்பாடுற்று விளங்கியமை போன்று, விழுமிய சமய நெறியினும் சிறந்து விளங்கிது. “தமிழரது பேரறிவின் முதிர்ச்சியின் விழுமிய பயன் சித்தாந்த சமயம்” என்று மேனாட்டு அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். சிந்தாந்த சமயம் பரசிவத்தாலேயே அருளிச் செய்யப்பெற்றது. ஆதலால் அது தமிழரது பேரறிவின் பயன் என்று கூறுதல் பொருந்தாது என்பர் சிலர். பரசிவமே தமிழ்நாட்டானாக- தமிழனாக-சைவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டது என்பதை,
“தண்ணார்தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்” .
“தென்னாடுடைய சிவன்”
“ஐயாறதனிற் சைவன்”
என்ற மணிமொழி மறைகளை நோக்கும்பொழுது, பர சிவத்தைத் தமிழனாக ஏற்றுக் கொள்வதில் என்ன குறை? இந்திய நாட்டில் வழங்கும் பல்வேறு சமயங்களுள்ளும் சைவ சித்தாந்தமே சிறப்புடையது. ஆயினும், இந்து சமயம் என்ற ஒரு பொதுப் பெயரும். ஒரு முடிச்சும் தோன்றிய பிறகு சித்தாந்த சமயத்தின் உண்மைச் சிறப்பினைப் பலரும் உணரமுடியாமல் போயிற்று. ஏன்? சித்தாந்த சமயத்தின் மெய்ம்மை விளக்கும் செந்தமிழ்ப் பண்ணைகளாக விளங்கிய திருக்கோயில்களிலும் திருமடங்களிலும்கூட அகப்புறச் சமயங்களின் செல்வாக்கும் சிறிதளவு புறச் சமயங்களின் செல்வாக்குங்கூடப் புகுந்து ஆட்சி செய்கின்றன. இச்செல்வாக்குப் புகுந்துள்ள நிலைமை, மரத்தில் புல்லுருவி போன்று இருப்பதால் தெற்றென விளங்கவில்லை. சித்தாந்த சைவம் மிகப் பழைய நெறி; தொன்மை நெறி என்று அருள் நூல்கள் பேசும். காலத்தால் பழமையாக இருந்தாலும் மிகப் புது நெறியாகவும் காட்சியளிக்கும் இயல்பு இச்சமயத்திற்கே உண்டு. “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்று மணி மொழி. காட்டும் அவ்வியல்பு பெருமானுக்கு மட்டுமன்று; அப்பெருமான் திருவடியினை எளிதாகவும் இனிதாகவும் எய்துவிக்கும் இந்தப் பெருநெறிக்கும் பொருந்தும். இன்றைக்கும் அறிவியல் உணர்வுக்கு இயைந்ததாக, அனுபவத்திற்கு உகந்ததாக, நம்பிக்கைக்கும் நல்வாழ்வுக்கும் ஏற்றதாக இருக்கும் சமயம் இது என்று கூறினால் நடுநிலையாளர் யாரும் மறுக்கமுடியாது.
முடிவுரை
உலகியல் துறையிலும்கூட மார்க்சு மாமுனிவர் தத்துவக் கோட்பாடுகளுக்கு ஏற்ற விளக்கம் தரக்கூடிய சமயமாக இது விளங்குகிறது. தெளிவாகச் சொல்வதென்றால் இனிமேல் கேள்வி கேட்க முடியாத சமயமாக இது விளங்குகிறது. சிந்தனையின் உச்ச வரம்பில் நிற்கும் மெய்ந்நெறி இச்சிவநெறி. குமர குருபரசுவாமிகள்,
“ஒரும் வேதாந்தமென்னும் உச்சியிற் பழுத்த
ஆரா இன்ப அருங்கனி
சைவ சித்தாந்தத் தேனமுது”
என்று பாராட்டி உள்ளார்.
தமிழினத்தின் சமயப் பண்பு
தமிழினம் காலத்தால் மூத்த இனம்; கருத்தால் மூத்தது அவர்தம் மொழி. தத்துவத்தில் சிறந்து விளங்கும் இனிய மொழி. தமிழினத்தின், சமயநெறிப் பண்பு வழிவழிச் சிறந்து விளங்குவது. தமிழர்தம் சமயநெறி அறிவுக்கியைந்த நெறி; நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் ஏற்ற நெறி. தமிழும், தமிழியலும், சமயத் தத்துவமும் இணைந்தே வளர்ந்து வநதுளளன.
தமிழர்தம் தூய சமய நெறி, சைவசித்தாந்த சமயம் என்பது. இந்தச் சைவ நெறி மூன்று பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தத்துவ விளக்கம் செய்கிறது. திருக்குறள் சமயமும் இந்த அடிப்படையைக் கொண்டது. அம்மூன்று பொருள்களாவன, இறை, உயிர், தளை ஆகியவனவாம். இறை முழுமுதற் பொருள். தனக்குவமையில்லாதான் என்றும், எண்குணத்தான் என்றும் திருக்குறள் போற்றிப் பரவும் பொருள். நன்றுடையான் என்று திருமுறை போற்றும். கடவுளால் உயிர் படைக்கப்பெற்ற பொருள் அல்ல. அஃது என்றும் உள்பொருள்; சார்ந்ததன் வண்ணமாக விளங்கக் கூடிய பொருள். தளை, உயிரை ஒட்டிய அழுக்கு. தளையின் ஆற்றலை அடக்கி, திருவருளின்ப வாழ்க்கையைப் பெறுதல் உயிரின் இலட்சியம். அந்த இலட்சிய சாதனைக்காகவே பிறப்பும் இந்த உலகியல் வாழ்க்கையும் கிடைத்தன.
உயிர், தளையின் ஆற்றலிலிருந்து விடுதலை பெற்றுத் திருவருளைச் சார்ந்து, இன்ப அன்பினில் திளைத்து மகிழும் முயற்சிக்குத் துணை செய்வது வழிபாடு, சிவநெறி சிவபெருமானையே வழிபடும் பொருளாகக் கொண்டது. அவன் பெருமை முன்னர் விளக்கப் பெற்றுள்ளது.
உயிரின் அறிவு, சிற்றறிவு. கண்டு - பழகிய பொருள்களையே அது நினைவுகூர முடியும்; உறவு கொள்ள முடியும். ஆதலால் உணர்வினாலன்றி காணப்பெறாத கடவுள், நம்மனோர் உய்யக் கண்ணிற்குத் தெரியும் திருமேனி கொண்டருளியுள்ளான். அத்திருமேனிகள் சில. அவற்றுள்ளும் சிவலிங்கத் திருமேனி விழுமிய சிறப்புடையது.
இந்த உலகியல் மூலமே உயிர்களை உய்யும் வகையில் இறைவன் ஆட்கொண்டிருள்கின்றான். கடவுள், உலகத்தின்வழிச் செயல்படுதலால் அவனையே உலகம் என்று கூறுதல் பொருந்தும். “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்பது தேவாரம், உலகம் உருண்டை வடிவம் என்பது பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் கண்ட முடிவு. உலகின் சின்னமாக லிங்கத் திருமேனி அமைந்து விளங்குகிறது.
இந்த உலகம் இருமையால் ஆனது இயங்குவது; விளங்குவது உயிர்களின் அறியாமை நீக்கத்திற்கும், ஞான விளக்கத்திற்கும் துணை நிற்பன பிறப்பின் வழி ஏற்கும் இன்ப துன்ப அனுபவங்களேயாம். ஆதலால் பிறப்பொடு தொடர்புடைய காதலின்ப வாழ்க்கையைச் சைவம் வரவேற்கிறது. ஆனால் அதிலேயே அழுந்திக் கிடத்தலை மறுக்கிறது. சிவபெருமானைப் ‘பெண்பால் உகந்தாடும் பித்தன்’ என்று திருவாசகம் பேசுகிறது. சக்தி-சிவ விளக்கத் திருமேனியாக சிவலிங்கத் திருமேனி விளங்குகிறது.
சிவலிங்கத் திருமேனி ஞானத்தின் சின்னம். ஞானம் தீக்கொளுவி எரிகின்ற சுடர் போன்றது. சுடர், மேல், நோக்கியே எரியும். அதுபோல ஞானம் (தகுதி, பண்பாடு அறம்) மேல் நோக்கியே விரியும். அதனை விளக்குவது சிவலிங்கத் திருமேனி.
தமிழ் கருத்துக்கியைந்த மொழி. சைவம் வாழ்வுக்கியைந்த சமயம். சிவலிங்கத் திருமேனி வழிபாட்டுக்குச் சிறந்தது. அதிலும் சுந்தர மகாலிங்கம் கண்ணுக்கினியது. ஆரா இன்பம் அளிக்க வல்லது. வாழ்த்துமின்! வாழ்வித்து வாழுமின்!