குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/சிந்தனைச் சோலை




9


சிந்தனைச் சோலை

அன்பழைப்பு!

இருபத்தோராம் நூற்றாண்டு வரப்போகிறது. ஆனால் நாம் முன்னோக்கிப் பயணம் செய்து இருபத்தோராம் நூற்றாண்டை வரவேற்கப் போகிறோமா? அல்லது பின்னோக்கி வரலாற்றுக்கும் முந்திய-நாகரிக முதிர்ச்சியில்லாத பழைய யுகத்திற்குச் செல்லப் போகிறோமா? அன்புகூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!

இற்றைநாள் போல அற்றைநாளில் அறிவியல் உலகம் வளரவில்லை. அதன் காரணமாகக் காலமும் தூரமும் மக்களைப் பிரித்து வைத்திருந்தது. உடனுக்கு உடன், மானுடத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, வளர இயலவில்லை. அதனாலேயே, மானுடம் பேசும் மொழிகள், பலவாயின; மானுடம் நின்றொழுகும் சமயங்கள், பலவாயின. பின், மொழி, சமயம் இவைகளுக்கு ஏற்ப நாடுகள் பல ஆயின. வளர்ந்துவரும் அறிவியல் இன்றைய பூத, பௌதீக உலகத்தை நெருக்கமாகக் கொண்டு வந்துவிட்டது. மானுடத்தின் இதயங்கள் இணைக்கப் பெறவில்லை; ஆன்மநேய ஒருமைப்பாடு கால் கொள்ளவில்லை. ஏன், இந்த அவலம்?

அறிவியலால், பூத, பௌதீக உலகம் இணைக்கப் படுவதற்கு முற்பட்ட மானுட நெறியாளர்கள்-சமயச் சிந்தனையாளர்கள் “ஓருலகம்” பற்றிச் சிந்தித்தனர். மனிதகுல ஒருமைப்பாட்டை ஒழுக்கமாக்கினர். வேறுபாடுகளுக்கிடையில், விழுமிய ஒருமைப்பாடு காணக் கற்றுத் தந்தனர். திருக்குறள் உலகந்தழிஇய ஒழுக்கத்துடன் வாழ்தலை வாழ்க்கையென்று ஆற்றுப்படுத்துகிறது.

மாணிக்கவாசகர்,

:“எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!” என்றார்.

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால்
மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா”

என்றார் தாயுமானார்.

வள்ளலார்,

“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய்”

என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டை எடுத்தோதினார்.

விவேகானந்தர், “இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அதனுடைய இதயங்கள் ஒரே ஆன்மீக ராகத்தில் இசைக்கவேண்டும்” என்று கூறினார்.

அண்ணல் காந்தியடிகள், “உலகத்தில் உள்ள சிறந்த எல்லாச் சமயங்களும் உண்மையானவை என்பதில் நான் நம்பிக்கையுள்ளவன். நமது சொந்த சமயத்தைப்போல் மற்ற சமயங்களையும் மதித்து, கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல மற்ற சமயங்களுக்கும் மரியாதை காட்டவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்விதம் நாம் கற்றுக் கொண்டாலன்றி உலகில் நிரந்தரமான அமைதி ஏற்படுவது முடியாத காரியம். மானிட வர்க்கத்தின் வெவ்வேறு சமய போதகர்களின் உபதேசங்களைப் பக்தியுடன் நாம் அணுகி ஆராய்ச்சி செய்வதே, சமயங்களிடையே பரஸ்பரம் மதிப்பு ஏற்படுவதற்கான தகுந்த வழியாகும்.” என்றார்.

(மகாத்மா காந்தி நூல்கள் 10 பக்: 473)

இங்ஙனம் நமது சமயம், பரந்த பண்பாட்டு நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது. “இந்து சமயம்” இந்தியத் தன்மையாக வளர்ந்து வந்திருக்கிறது. உலகில் பிறந்துள்ள அனைத்துச் சமயங்களையும் தழுவியதே இந்து சயம். இந்து சமயத்தில் “இவர் தேவர், அவர் தேவர்” என்ற இரண்டாட்டு இல்லை. எதையும் ஏற்பது, அணைப்பது என்பதே இந்து சமயத்தின் இலக்கணம். ஒரே கடவுள்! ஒரே ஜாதி! இதுவே இந்து சமயத்தின் உயரிய கோட்பாடு.

இந்த நெறிகளையே,

“உனக்குத் தீங்கு இழைப்பவனுக்கு, அதே அளவு தீமை வரும். பிறரை மன்னித்து, சண்டை போடுவோரிடையே சமாதானம் செய்து வைப்பவனுக்குத் தக்க வெகுமதி அளிப்பது அல்லாவின் பொறுப்பு:”

என்று இஸ்லாமியம் எடுத்தியம்புகிறது.

(இஸ்ஸாம் சர்வோதயப்பிரசுரம் பக். 29)

“நீ உன் மனம் மொழி மெய்களினால் பரமபிதாவை நேசிக்க வேண்டும்; பக்தி செய்யவேண்டும் என்பது அவரது கட்டளைகள் அனைத்திலும் முக்கியமானது. இதே போன்று, முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு கட்டளை, நீ, உன் அயலானையும் தன்னைப் போலவே நேசிக்க வேண்டும் என்பதே.”

(மத்தேயு 22, 37-39)

என்று ஏசுமதமும் கூறுகிறது. இதனாலேயே பிரிந்த பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு என்று அறிவித்தது. நாம் நமது பாரம்பரியத்துக்கு ஏற்ப மதச்சார்பற்ற அரசை அமைத்ததுக் கொண்டோம். அனைத்துச் சமயங்களையும் ஏற்றுத் தழுவி நிற்கும் அரசு என்பது விழுமிய கருத்து.

மதச் சார்பற்ற வாழ்க்கை, மதமே இல்லாத வாழ்க்கையல்ல; சன்மார்க்க நெறியில் நிற்றலே மதச் சார்பற்ற வாழ்க்கை

இன்று நமது நாட்டில் “இந்தியர்” என்ற உணர்வுக்கு மாறாகப் “பெரும்பான்மையினர்” என்ற அடிப்படையில் ஒருவித உணர்வுமாக முரண்பட்ட நிலையில் இயங்குவது விரும்பத்தக்கதன்று. இந்தப் போக்கு, இந்தியாவின் ஆன்மிக அனுபூதிச் செல்வத்தையே அழித்துவிடும். இந்தியா நாட்டின் முன்னேற்றத்தையும் பாதிக்கும்.

இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாகக் காப்பாற்ற, “இந்தியா” மக்களிடத்தில் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க வேண்டிய கட்டாயம் தோன்றியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றும் வழிவகைகளை ஆராய அனைவரும் வருக! கடமைகளில் பங்கேற்றுப் பணி செய்ய-குறள்நெறிச் சமுதாயம் அமைய இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி விடுக்கும், அன்பழைப்பு!


இனி நாம், சமய-சமுதாயத்
துறைகளில் என்ன செய்யவேண்டும்?

தமிழ் நாகரிக வரலாற்றில் வளர்ந்த காலப்பகுதி திருக்கோயில் கண்ட காலமேயாகும். நமது சமய, சமுதாய மரபில் திருக்கோயில் வழிபாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது. இன்று திருக்கோயில்கள் ஓரளவு சமய மரபுகளைக் காப்பாற்றிவந்தாலும் சமுதாய மரபுகளைப் புறக்கணித்துவிட்டன என்றே கூறவேண்டும். அப்பரடிகள், “திருக்கோயில் இல்லாத ஊர் திருவில் ஊர்” என்று சாடுவார். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழைய வாக்கு, ஏன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாது?

சைவத் தமிழ் மரபு, “சிவமலால் தெய்வமில்லை, சனமலாது அடிமையில்லை” என்று கூறும். திருக்கோயில்கள் கடவுளுக்காக-கடவுள் எழுந்தருள்வதற்காக மட்டும் எழுந்தவையல்ல. கடவுளுக்கும் மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் உறவை ஏற்படுத்துதலே திருக்கோயில் அமைப்பின் நோக்கம். மனிதர்களை-மனித வாழ்வை மேம்படுத்துவது ஒன்று; பிறிதொன்று மனித சமூகத்தை ஒன்றுபடுத்துவது. இன்று இந்த நிலை இல்லாதது ஒரு பெரிய குறை. நகரத்தார் சமூகம் இந்த மரபைப் பேணிக்காத்து வருகிறது. ஆயினும் பழைய மரபு அப்படியே பின்பற்றப்படுகிறது என்று கூறமுடியாது.

திருக்கோயிலைத் தழுவிய சமுதாயத்தையும் சமுதாயத் தைத்தழுவி நிற்கும் திருக்கோயில்களையும் நாம் உருவாக்க வேண்டும். நமது முன்னோர் காலத்தில், திருக்கோயில்களைத் தழுவியே சிந்தித்தனர்; செயல்பட்டனர்; வாழ்ந்தனர். ஒவ்வொருவருக்கும் திருக்கோயிலில் கடமையும் இருந்தது; உரிமையும் இருந்தது. இன்று நமக்குத் திருக்கோயில், வழிபாட்டு நிலையமே தவிர மற்றபடி நமக்குத் திருக்கோயிலில் கடமையும் இல்லை; உரிமையுமில்லை. இந்த நிலையை மாற்றத் திருக்கோயிலில் உழவாரம், திருவலகு, திருமெழுக்கு, நந்தவனம், முதலிய பல்வேறு பணிகளில் நாம் ஈடுபடவேண்டும். தொண்டு செய்ய வேண்டும். ஆன்மாக்கள் சிவனிடத்தில் காட்டும் அயரா அன்பாலும் இயற்றும் கைத்திருத்தொண்டாலுமே வளரமுடியும்; வாழமுடியும்; உறுதியைப் பெற இயலும். இறைவனுக்கு “அன்பலால் பொருள் இல்லை” ஆன்மாக்களுக்குத் “தொண்டல்லால் ஊதியமில்லை” என்பது திருமுறை வாக்கு திருக்கோயில்பணிகள் அனைத்துமே தொண்டாகச் செய்யப்பெறுதல் வேண்டும். இன்றோ திருக்கோயில் பணிகள் பிழைப்பு நோக்கி இயற்றும் தொழில்களாகிவிட்டன. இது மிகவும் வருந்தத்தக்கது.

திருக்கோயில் மானுடம் முழுவதையும் அங்கீகரிக்க வேண்டும். எந்த வேறுபாடுமின்றி அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொர் ஊரிலுமுள்ள அனைவரும் அந்தந்த ஊர்க் கோயிலில் வழிபடுவாராக இருக்கவேண்டும். அவ்வழியாக கடமையும் உரிமையும் உடையவராக வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயிலை மையமாகக் கொண்டு திருக்கோயிலில் நிகழவேண்டும். மக்கள் வாழ்வியல் நிகழ்வுகளின்பொழுது தரும் காணிக்கை மற்றும் ஆண்டுக் காணிக்கை இவைகளைக் கொண்டே திருக்கோயில்கள் நடைபெற வேண்டும். ஒவ்வொருவரும். தமது ஈட்டத்தில் குறைந்தது 10 விழுக்காட்டை ஆண்டு தோறும் திருக்கோயிலுக்குத் தரவேண்டும். இந்நிதியில் ஒரு பகுதி 3% திருக்கோயிலுக்குச் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். மீதத்தில் 5% சமுதாயத்தின் இன்றியமையாத் தேவைகளாகிய கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் முதலியவற்றிற்குச் செலவழிக்கப் பெறுதல் வேண்டும். இத்துறையே இலக்கியம், கலை, தத்துவ வளர்ச்சியையும் கவனித்துக் கொள்ளவேண்டும். மீதம் 2% திருக்கோயில் சார்ந்த குடிமக்களில் வாய்ப்பிழந்தவர்களுக்குத் திருமணம் மற்றும் சில உதவிகளுக்குமாகச் செலவழிக்கப்பெறுதல் வேண்டும். திருக்கோயில் நிர்வாகம் சமூகத்தால்-ஊராண்மை மக்களால் நடந்துப்பெறுதல் வேண்டும். திருக்கோயில் நிர்வாகக் குழுவில் ஊரின் பல்வேறு சமூகமும் சுழற்சி முறையில் அனைவரும் பங்கேற்கத் தக்கவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருக்கோயில் நிர்வாகத்தில் அரசுத் தொடர்பு இருத்தல் நன்றன்று.

இதுதான், நமது திருக்கோயில்களில் தழுவி நிகழ்ந்த நாகரிகம்; இந்த நாகரித்தைப் புதுப்பித்தால் சமயம் வளரும். சமுதாயம் வாழும். திருவருளும் துணை செய்யப் பிரார்த்தனை !


மனிதவள மேம்பாட்டில் ஆன்மிகம்

இந்தப் பரந்த உலகத்தின் உயிர்ப்பு மாந்தரிடத்திலேயே இருக்கிறது. இந்த உலகத்தை, உலகத்தின் இயக்கத்தை, மாற்றத்தை, வளர்ச்சியை இயக்கும் உந்து சக்தி, மானுட சக்தியே! மானுடம் அளப்பரிய ஆற்றல் மிக்க தோற்றம். இன்றைய பிரதமர் கல்வி அமைச்சராக இருந்தபொழுது, கல்வி அமைச்சு என்பதை “மனிதவள அமைச்சு” என்று மாற்றினார். ஆம்! இன்றுள்ள கல்விமுறை மனிதனின் புலன்களில், பொறிகளில் ஆற்றலை வளர்த்து ஆன்மாவை வளர்ப்பதாக இல்லை. மாறாகப் பிழைப்புத் தேடி அலையும் பிராணி ஆகிவிட்டது. அறிவைத் தேடல், கடின உழைப்பு, தியாகம் ஆகியனவற்றை வழங்கக்கூடியதாக இன்றைய கல்வி இல்லை. அதனால், சிறந்த அறிஞராகிய நமது பிரதமர் நாட்டின் நிலைமையறிந்து நாட்டிற்கு உடனடித் தேவையான மனிதவளத்தை வளர்க்க எண்ணினார்; முயன்றார்! என்ன நடந்திருக்கிறது என்பதை வரலாறு கூறவேண்டும்.

மனிதவளம்

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி”-என்று போற்றியவகையில் இம்மானுடப் பிறப்பைப் போற்றி வளர்த்து, வெற்றிகளைப் பெறவேண்டும். குறித்த ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கையை நடத்துவதுதான் சிறப்பு. தேவைகளை அடைவது குறிக்கோள் ஆகாது. தேவைகளைக் கடந்தது குறிகோள். மனிதவளங்கள் எவை? அவை இயற்கையில் அமைந்துள்ளனவா? அல்லது மனிதன் தேடவேண்டுமா? சிந்திக்கும் திறன், அறிவு, ஆற்றல், ஆன்மாவின் தரப்பாடு ஆகியன மனிதவளமாம்! இவற்றில் எவையும் இயற்கையாக அமைந்தவையல்ல. மனிதன் சிந்தனைப் புலன் வாய்ந்தவன். ஆனால், அவன் சிந்திக்க வேண்டுமே! சிந்தனை இயங்க மனிதன் தன் வாழ்நிலையுடன் மன நிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் வாழ்நிலையை--வளர்த்துக் கொள்ள விரும்பவேண்டும். வாழ்தலில்-நன்றாக வாழ்தலில்-இன்புறு நுகர்வு நலன்கள் அனைத்தும் பெற்று வாழ்தலில் விருப்பம் வேண்டும். தாம் பெற்றின்புறுவது போலவே மற்ற எல்லோரும் பெற்று இன்புற வாழ்தல் வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் உடையராய் இருத்தல் வேண்டும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொள்ளும் மனப்பான்மை கூடாது; இந்த உலகம் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று எண்ணி, இந்த உலகை மாற்ற ஓயாது முயற்சி செய்ய வேண்டும். எதற்கும் காரணம், சாமாதானம் சொல்லி மூளைச் சோம்பலுக்கு இரையாகக் கூடாது! நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்ற ஆய்வு தேவை; தொடர் ஆய்வு தேவை. இந்தக் களத்தில்தான் சிந்தனை பிறக்கும்.

கற்றல், கேட்டல், அறிவு

வாழ்க்கையின் நோக்கமே தேடல்! ஆம்! அறிவினைத் தேடல்! அறிவுக்கு வாயில்களாகிய கற்றல், கேட்டல், ஆய்வு செய்தல், சோதனை செய்தல் முதலியவற்றால் அறிவு கிடைக்கும். கற்றல், ஆன்மாவினிடத்தில் அறிவொளியைக் கனலச்செய்யும் முதல் முயற்சி! மனிதன் சிந்திக்கத் தொடங்கி வாழ்க்கையை நடத்த முயன்ற காலத்தினில் எண்ணற்ற சிந்தனையாளர்கள், வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கையைப் பயனுடையதாக்கும் வழி வகைகள் பற்றியும் எழுதியுள்ளார்கள். அவர்களுடைய அனுபவங்கள் நமக்கு அறிவாக அமைகின்றன. “திப்ஸ்” நகரில் ஒரு நூலகத்தின் வாயிலில் எழுதியுள்ள வாசகம் “ஆன்மாவுக்கு மருந்து” என்பதாகும். திருவள்ளுவரும்,

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக”

என்றார். பிறப்பின் சார்பாலும் சுற்றுச் சூழ்நிலையாலும் மனிதனின் ஆன்மாவில் குற்றங்கள் இருக்கலாம்; இருக்கவும் கூடும்! அக் குற்றங்கள் நீங்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும் என்பதை உணர்த்த, “கசடறக் கற்பவை கற்க” என்றார். கற்பது என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெற வேண்டிய ஒரு பணி! மனிதர் ஒவ்வொருவரும் உலகில் உள்ள அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்தல் என்பது எளிதன்று; அது இயலாத ஒன்று. ஆதலால், கற்றார் வாய்க் கேட்டல் அறிவு பெறுதலுக்குரிய எளிய வழி! கற்றலிலும் கேட்டலிலும்கூட அவற்றை ஆய்வு செய்து பெறாது போனால் அறிவு தலைப்படாது. “சிந்தையும் தெளிவுமாகி, தெளிவினுள் சிவமுமாகி” என்று திருமுறை கூறும் அறிவின் தெளிவுதான் உறுதிப்பாட்டினைத் தரும்.

துன்பங்களின் வகை

அறிவு எது? அறிவு ஆற்றல் வாய்ந்த கருவி. காலந்தோறும் மாறி வளர்ந்து வரும் சிறந்த கருவி!

“அறிவு அற்றம் காக்கும் கருவி”

என்றது திருக்குறள். துன்பத்தினின்று மனிதனைப் பாதுகாப்பது அறிவு. ஆம்! எத்தனை எத்தனைத் துன்பங்கள். புதரிடை மலர் போலத் துன்பங்களுக் கிடையில்தானே இன்ப வைப்பு இருக்கிறது. துன்பம் உலகு சார்ந்த துன்பம், சமூகம் சார்ந்த துன்பம், உடல் சார்ந்த துன்பம் என்று பலபடக் கூறலாம்.

ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றால் ஏற்படும் துன்பம் உலகைச் சார்ந்த துன்பம். இன்று இந்த வகைத் துன்பம் பெரும்பாலும் குறைந்து விட்டது. இடி, மின்னல், மழை வெள்ளம் இவற்றினால் துன்பம் நிகழ்வதற்கு முன்பே கண்டறிந்து அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் மனிதன் வெற்றி பெற்றுவிட்டான். ஆதலால், உலகத்தினால் வரும் துன்பம் இன்று மிகுதியும் இல்லை.

அடுத்து, சமூகத்தால் வரும் துன்பம். சமூகம் என்பது மனிதக் கூட்டமைப்பு ஏற்பட்டதன் நோக்கம் மனிதனின் ஆற்றலைப் பெருக்கி, ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தலுக்குரிய நியதியினை மையமாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில்-தனிச் சொத்துடைமைச் சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்து மானுடச்சாதிமனிதம், மனித நேயம், மனிதகுல உறவு ஆகிய பண்பாடுகளை இழந்து, கொடிய விலங்குகளைவிட மோசமான இழி நிலைக்கு இறங்கி விட்டது. இன்றைய நிலையில் மனித ஜாதி ஒரு கூட்டம் தான்! அதுவும் தன்னிச்சைப்படி நடக்கும் வெறிபிடித்த கூட்டம்! நாளும் கொலைக் கருவிகளைச் செய்து குவிக்கும் மனிதக் கூட்டம்! அதுமட்டுமா? இன்றைய சமூகம் மனிதனைத் தாங்குவதற்குப் பதிலாக அவன் தோள்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு சவாரி செய்கிறது. அந்தோ! என்ன கொடுமை! இந்த உலகத்தில் உள்ள நுகர்வுப் பொருள்கள் இந்த உலகத்திற்கு மட்டுமல்ல, இன்னும் பல உலகத்திற்கு போதும் ! ஆயினும், தனி மனிதனுடைய கொள்ளிவாய்ப் பிசாசுத் தன்மையுடைய பேராசையால் ஈடு செய்ய முடியாமல் போகிறது. இத்தகைய சமூக அமைப்பினைத் திருத்திப் பயனுடையதாக்குவதும் மனிதவள மேம்பாட்டினைக் காக்கும் பணியாகும்.

துன்பத்தை மாற்றும் முயற்சி

வாழ்க்கையைப் பயனுடையதாக்கிட அறிவறிந்த ஆள்வினை தேவை. மானுடத்தினிடம் ஒப்படைப்புச் செய்யப்பெற்றுள்ள ஆற்றல். அம்மம்ம! அளப்பரிய ஆற்றல். மானுடத்தின் ஆற்றலை இந்தப் புவிக்கோள் பறைசாற்றுகிறது. நாள்தோறும், புவிக் கோளத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிகள், இயற்கை தன்னகத்தே வைத்துள்ள எண்ணரிய வளங்களைக் கண்டு அனுபவத்திற்குக் கொண்டு வருதல் - இயற்கையை ஆண்டு அனுபவித்தல் ஆகியன மனித ஆற்றலின்பாற்பட்ட முயற்சிகள். சிக்கிமுக்கிக் கற்களை உரசித் தியைக் கண்ட மனிதன் - இன்று ஒரு பொத்தானை அழுத்தி இருண்ட உலகை ஒளிமயமாக்குகின்றான். காலமும் தூரமும் மனிதனை-மனித உறவுகளைப் பிரித்து வைத்திருந்தன. இன்று-மனிதன் காலத்தையும் துரத்தையும் வென்று விளங்கும் தொலைபேசி மூலம் பேசிக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தி உறவினை வளர்த்துக்கொள்கின்றான். அன்று காசிக்கும் இராமேஸ்வரத்திற்மே யாத்திரை செல்ல பல்லாண்டுகள் ஆயின. இன்று உலகையே சில மணி நேரங்களில் வலம்வர முடிகிறது. ஒலி, ஒளி, வளி இவற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து இன்பமார்ந்த வாழ்க்கையை நடத்துகின்றான். இயற்கையை வெல்லும் பணியில் கணிசமான வெற்றி பெற்றிருக்கிறான். எத்தனை எத்தனை விதமான புத்தம் புதிய அனுபவங்கள், போகங்கள், இன்பங்கள்.

ஆன்மிகம்

இங்ஙனம் வளர்ந்து வரும் மனிதவள ஆற்றல் எல்லையிகந்தது. இந்த மனித வளத்தை நிறைவாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்தல் ஆன்மிகம். ‘ஆன்மிகம்’ என்ற சொல் இன்று வழக்கில் கொச்சைப்பட்டுவிட்டது. இன்று ஆன்மிகம் என்றால் கடவுள் பெயரால் செய்யும் சடங்குகள் என்றாகி விட்டது. கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் ஆன்மிகத்தின் ஒரு பகுதி. ஆன்மிகம் என்பது ஆன்மாவின் உயிர்ப்பு, அறிவு, ஆற்றல், செயல்திறம் ஆகியனவும், அன்பு, சால்பு, பண்பாடு ஆகியனவும் ஆகும். ஆன்மா, அறிவறிந்த ஆள்வினையில் தழைத்து அன்பில் ஒத்துக் கலந்து அருளில் பழுத்து விளங்குவதே ஆன்மிகம். ஆன்மா சுயநலமற்ற ஊழியம் புரியும் சத்திபெற்று விளங்க வேண்டும். இத்தகு ஆன்ம அனுபூதியைப் பெறக் கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தேவை. கடவுள் என்பது பண்புகளின் முழு வடிவம்.

“குறைவிலா நிறைவே! கோதிலா அமுதே”
“நன்றுடையானைத் தீயதில் லானை”

என்னும் அருள்வாக்குகளை எண்ணுக கடவுள் வழிபாடு என்பது கடவுள் வழி நிற்றல். கடவுளை வழிப்படுதல் என்றே பொருள்படும்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

என்ற திருக்குறள் நினைவிற்குரியது.

இங்கு ‘அவித்தல்’ என்பதற்கு அழித்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவித்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் என்பதே பொருள்.

கடவுளை எண்ணுவதன் மூலம் - சிந்தித்தல் மூலம் கடவுளின் நிறை நலமிக்க இயல்புகளை ஆன்மாக்கள் பெற்று அவை தம்முடைய பொறி புலன்களில் இறை நலத்தினைத் தேக்கி வாழ்தலே ஆன்மிகம். இங்ஙனம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கிய அப்பரடிகளின்,

“நாமார்க்கும் குடியல்வோம் நமனை அஞ்சோம்”

என்னும் பாடல் அவரது ஆன்ம வாழ்க்கையின் மேன்மையை விளக்குகிறது.

இன்று நமது நாடு வாழ்கிறவர்களை அவாவி நிற்கிறது. நம்முடைய மனிதவளம் அனைத்தும் வெளிக்கொணரப்பட்டு இயங்கினால், செயற்பட்டால் வறுமை ஏது? ஏழ்மை ஏது? சாதி ஏது? நரகம் ஏது? இந்த மண்ணிலேயே விண்ணக வாழ்க்கையைக் காணலாம்; காணமுடியும்! அத்தகு மனிதவளத்தைக் காண்பதில் அரசுகள் கவனம் செலுத்தவேண்டும், பல்கலைக் கழகங்களின் பணியமைய வேண்டும். திருமடங்களில் திருக்கோயில்களின் திருத்தொண்டு அமையவேண்டும்.

மனிதவள மேம்பாட்டுக் கருத்தரங்கு குன்றக்குடி, 28-8–91

உண்மையான சமயம்!

இந்திய வரலாற்றில் தத்துவ விசாரணை என்பது மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே வரும் ஓர் அறிவியல் பயிற்சி! தத்துவ சோதனை, தத்துவமசி என்ற வழக்குகள் இந்திய நாட்டின் வரலாற்றொடு இணைந்தவை. ‘தத்துவம்’ என்றால் உள்பொருள் எனப்படும். உள்பொருள்களை, அவற்றின் உள்ளீட்டை, பரிணாமத்தை, பயன்பாட்டை உய்த்தறிந்து உணர்தல்தான் தத்துவ சோதனை. தமிழ்நாடு தத்துவத் துறையில் மெய்ப்பொருளறிவில் சிறந்திருந்தது. இந்திய மெய்ப்பொருள் நெறிகளிலெல்லாம் தமிழகத்தின் சித்தாந்த நெறி விழுமியது. ஐயங்களினின்று நீங்கியது; நம்பிக்கைக்குரியது; வாழ்க்கைக்கு இசைந்தது.

தமிழொடு பிறந்து வளர்ந்த நெறி சித்தாந்த நெறி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மெய்கண்டார் இந்தச் சித்தாந்தச் சிவநெறி, மற்ற நெறிகளினும் எவ்வாறு விழுமியது என்று அளவைகளால் நிலை நிறுத்தினார். ஆதலால் மெய்கண்டார் சைவ சித்தாந்தச் செந்நெறியைக் கண்டவர் அல்லர். மெய்கண்டார் சைவ சித்தாந்தத்தைச் சிவஞான போதம் என்ற நூல் வழி கட்டமைப்புச் செய்தார்.

ஏனைய சமயங்களுக்கும் சைவத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு சைவத்தில் எளிதில் ஊடுருவல் செய்ய இயலாது என்பதுதான். சிந்தையில் தெளிந்த ஞானிகளால் காணப் பெற்றது சித்தாந்த சைவம், மூன்று பொருள்கள், என்றும் உள்ளவை. இந்த மூன்றாவன: இறை, உயிர், தளை என்பன. இந்த மூன்றனுள், இறையை, இந்தியச் சமயங்கள் பலவும் உலகச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சித்தாந்தம் இறையின் இருப்பு, தொழில்-முதலியவற்றை ஐயத்திற்கிடமின்றி விளக்குகிறது. இறை-கடவுள் ஒன்றே ஒன்றுதான். கடவுள் ஒருவரே. அவருக்கு உருவமில்லை. உருவம் இல்லாமலும் இல்லை. அவருக்கு ஊர், பெயர் கிடையாது. அதே போழ்து ஊர், பெயர் இல்லாமலும் இல்லை. இயல்பாகக் கடவுளுக்கு உருவம் இல்லை. ஆட்கொண்டருள் செய்தலுக்காகக் கடவுள் அருவுருவ, உருவத் திருமேனிகளை எடுக்கின்றான். கடவுள் வரம்பிலா ஆற்றல் உடையவன். ஆதலால், அவனால் எந்த உருவத்தையும் தன்னுடைய இயல்பாகிய பூரணத்துவத்திற்கு யாதொரு குறையும் வராமல் எடுக்க இயலும், கடவுள் மனம், வாக்குகளைக் கடந்தவர். ஆயினும், ஆன்மாக்களின் நலம் கருதி ஆன்மாக்கள் நடத்தும் வாழ்க்கையில் வழிநடைத் துணையாகப் பருவங்களில் பருவங்களுக்கிசைந்த பாத்திரப் பண்பில் நின்றருள் செய்யும் தனித்துணையாம் தன்மையை,

அப்பன்நீ அம்மைநீ அன்புடைய மாமனும் மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒருகுலமும்
சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய்
என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன்நீ இம்மணி நீ இம்முத்து நீ! இறைவன் நீ
ஏறுரர்ந்த செல்வன் நீயே”

என்று அப்பரடிகள் அருளிச் செய்துள்ளமையால் அறிக.

முப்பொருள்களுள் அடுத்து இருப்பது ஆன்மா-உயிர். இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் சித்தாந்தச் செந்நெறியின் ஆன்மாக் கொள்கை தெளிவானது. ஆன்மாக்கள் பல; பலப்பல ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல. ஆன்மாக்களுக்கு, உயிர்களுக்கு தோற்றமும் இல்லை; அறிவும் இல்லை. ஆன்மாக்கள் கடவுளைப் போலவே என்றும் உள்ளவை. “என்று நீ அன்று நான்” என்பார் தாயுமானவர். ஆன்மாக்கள் என்றும் உள்ளவையென்றால் இறைவனுக்கு ஆன்மாவுக்கும் என்ன உறவு?

கடவுளுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்தொழில்கள் ஏன்? இந்த ஐந்து தொழில்கள் யாரை முன்னிட்டு நிகழ்த்தப் பெறுகின்றன? கடவுள் ஆன்மாவின் வாழ்க்கைப் பயணம் தோறும் தேவைக்கேற்ப உறவு வைத்து ஆட்கொண்டருள்கின்றான். ஆன்மாக்கள் அறிவும் செயலும் முடங்கி ஆணவத்தினுடன் அறியாமையில் கட்டுண்டு கிடக்கும் பொழுது தாயிற் சிறந்த தயாவுடன் உயிர்களுக்கு நுண்ணுடலையும், அறியாமை நீக்கத்தற்குரிய வாழ்நிலையில் - வாழ்ந்திட துய்ப்பனதுய்த்து உய்யுமாறு உய்தி பெறுதலுக்குரிய உடம்பினையும் பொருத்தல் படைப்பு அறியாமை நீங்கும் காலம்வரை, பொருந்திய நுண்ணுடலை உயிர் தாங்கிப் பயன்பெறச் செய்தல் - பாதுகாத்தல், அறியாமைக்கு அரண் செய்யும் துரிசுகளை அழித்தல், உயிர் அதன் பழைய நிலையை உணராது மறைத்து வைத்தல், வாழ்க்கையில் வாழ்க்கையின் போகத்தில் ஆன்மாக்களுக்கு விருப்பத்தை உண்டாக்குதல். மறைத்தல் ஆன்மாக்களுக்கு - உயிர்களை முற்றாக அறியாமையினின்றும் மீட்டு முழுமையுறச் செய்து இன்ப அளவில் நிலைபெறச் செய்தல் அருளுதல் ஆன்மாக்களுக்குக் கடவுள் வாழ்க்கையில் ஆண்டவன் அடிமையில்லை, உடையார் - இல்லார் இல்லை. பேதமில்லை, இதுவே, உண்மையான சமயம். சித்தாந்தச் சமயம்.

பிற்காலத்தில் சமயநெறிகள் தடம்புரண்டு உடைமை, பணம் ஆகியவற்றின் தடத்தில் நடந்து சுரண்டும் சமுதாயத்திற்கு அனுசரணையாக இருந்து வேற்றுமைகளை வளர்த்து, இந்தப் புவிக்கோளை இரத்தத்தால் கழுவி, நரகத்தைப் படைத்த கொடுமைகளையும் மறந்து விடுவதற்கில்லை.

ஆயினும், இன்னும் மனிதம் வளர, நம் நாட்டின் சமய ஞானம் துணை செய்யும். துணை செய்யவேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை வெற்றி பெற சிந்தனையாளர்கள், செயல் வல்லுநர்கள் துணை செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கை, அழுவதற்காக அல்ல. சென்ற காலத்தில் அழுதது போதும். சென்ற காலத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். முன்னே தோன்றிய பழமையைப் பின்னர் புதுமையாக்கி வாழ்க்கையைப் பயனுடையதாக்கப் பயன்படுத்தப்படுதல் வேண்டும். உயிர்கள் குறைவிலாது வாழ்வதற்குரியனவாகச் செய்தாக வேண்டும். மாந்தரிடத்தில் தோழமைப் பண்பை வளர்க்கவேண்டும். இதனை இன்றைய சமயம் செய்தால் எதிர்காலம் உண்டு.

மெய்கண்டார் விழா, மாமன்னன் இராசராச சோழன் விழா 16-11-92