குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/தமிழில் வழிபாடு (கொள்கை விளக்கம்)

433600குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12 — தமிழில் வழிபாடு (கொள்கை விளக்கம்)குன்றக்குடி அடிகளார்



3
தமிழில் வழிபாடு
(கொள்கை விளக்கம்)


தமிழ்ப்பெரு மக்களுக்கு
நமது பணிவான வேண்டுகோள்


தமிழக ஆலயங்களில் தமிழிலும் வழிபாடு (அருச்சனை) செய்ய வசதி வேண்டும் என்று அருள் நெறியாளர்களாகிய நாம் பலகாலம் சொல்லி வந்துள்ளோம். தக்க சான்றுகளுடன் நம்முடைய கொள்கையைத் தெளிவாக இந்த வெளியீடு விளக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ் அருச்சனை இயக்கத்திற்கு ஆதரவு நம் மனத்தளவில் மட்டும் இருந்து பயனில்லை. நம் எண்ணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதின் மூலமே நாம் வெற்றி காணும் காலத்தை விரைவில் நெருங்க இயலும்.

தமிழகத்து நற்குடி மக்கள் நாளும் நற்றமிழ் அருச்சனை செய்து திருவருள் நலம்பெற கேட்டுக் கொள்கிறோம்.

தமிழில் அருச்சனை

நமது கொள்கை

உயிர்கள் துன்பத்தினின்று விடுதலை பெற்று அருளார்ந்த வாழ்வு பெறுவதே சமய வாழ்வின் விழுமிய பயன். இத்தகைய விழுமிய பயனைத் தரவல்லது வழிபாடேயாம். வழிபாடு என்பது தூய பேரருளின் வழி தன்னை வழிப்படுத்திக் கொள்வது - உயிரின் அனுபவத்துக்கு உரியதொன்று சிந்தனையைத் தூண்டிக் காதலைத்தந்து, கணிவையும் நல்கி, நெகிழ்ச்சியைக் கொடுத்து வழிபாட்டின் பயனைத் தரக்கூடியதாக வழிபாட்டு முறை அல்லது அருச்சனை இருக்க வேண்டும். தற்பொழுது உள்ள அருச்சனை முறையில் இருதயம் கலந்த வழிபாட்டுக்குப் பெரும்பாலும் இடமில்லை. தாய்மொழியில் வழிபாடு அல்லது அருச்சனை செய்தால், அவ்வழிபாடு இருதயம் கலந்ததாக, விழுமிய பயனைத் தரக்கூடியதாக இருக்குமென்று நம்புகின்றோம். ஆதலால், தமிழகத் திருக்கோயில்களில் விரும்பினால், தமிழிலும் அருச்சனை செய்ய வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது நமது கொள்கை அதுபோலவே, தற்பொழுது இருந்து வருவது போலவே வடமொழியிலும் வழிபாடு அல்லது அருச்சனை நடத்தலாம். அது போலவே பிறமொழிகளிலும் செய்யலாம் என்பதே நமது கொள்கை. இக்கொள்கை மொழி வழியாகத் தோன்றியதல்ல. வழிபாட்டின் முழுப்பயனைத் தரவேண்டுமென்ற கருத்துவழித் தோன்றியதேயாம் என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் கூறுகிறோம்.

கொள்கைக்கு அரண் செய்கின்ற கருத்துக்கள்

1. எந்த இனத்திற்கும் அவற்றின் தாய்மொழிவழியே சமயம்தோன்றி வளர்ந்து வாழ்வளிக்குமே தவிர பிறமொழி வழியல்ல என்பது வரலாற்று நூல் முடிபு. 2. வழிபாட்டிற்குச் சிந்தனையே அடிப்படை. பெருபான்மையோர்க்குத் தாய்மொழிவழியே சிந்தனை தோன்றிச் சிறக்குமென்றால், வழிபாட்டிற்குத் தாய் மொழியின் தேவையைச் சொல்லவும் வேண்டுமோ?

3. ஒரு கால், அறிஞரானோர் சிலருக்குப் பிற மொழியில் சிந்திக்க முடியுமானால், அக்கருத்து உணர்வைத் தொடுவதில்லை. வழிபாட்டுக்கு உணர்வே உயிர்நாடி, உணர்வைத் தொட்டுப் பெருகிய அன்பினராக உருகி, வழிபாடு செய்யத் தாய்மொழியின் மூலமே முடியும்.

4. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு இவ்வுணர்வுகளின் வழிப்பட்ட நெகிழ்ச்சி தேவை. இவ்வுணர்வுகளை, மெய்ப்பாடுகளை ஒருவர் தாய்மொழியிலேயே பெறமுடியும் என்பதால் தாய்மொழியில் வழிபாடு அவசியம்.

5. வழிபாடு என்பது உயிரைத் தூய அருளார்ந்த அனுபவத்திற்கு அழைத்துச் செல்கின்ற சாதனம். எந்த உயிர் அனுபவத்தை விரும்புகிறதோ அந்த உயர் மனம் கரைந்து கசிந்து வழிபாடு செய்ய வேண்டும். தூய்மையாக்கப்பட வேண்டிய பாத்திரத்தைத் தேய்த்தாலே பாத்திரம் தூய்மையாகும். உழுது பண்படுத்த வேண்டிய நிலத்தை உழுதாலேயே நிலம் பண்படும். அதுபோலவே, அனுபவ நிலையினின்றும் விலகியே, அருளார்ந்த அனுபவத்தைப் பெற வேண்டிய உயிர்களின் உணர்வை, வழிபாடு தொட்டு அவ்வுயிரின் புலன்களை ஞான ஏர்கொண்டு உழுதாலேயே அவ்வுயிர் திருவருளைப் பெறமுடியும். அதற்குத் தாய்மொழியே சாதனமெனக் கூறவும் வேண்டுமோ?

6. வழிபாடு அல்லது அருச்சனை என்பது ஓர் உயிர் இறைவனை நோக்கி அழுகின்ற அழுகையேயாகும். எவ்லோர்க்கும் தாய்மொழியில்தான் அழமுடியுமே தவிரப் பிற மொழியிலும் அழ முடியுமோ?

7. மந்திரங்களுக்கும், மறைகளுக்கும் மொழி வரையறை கிடையாது. நிறைமொழி மாந்தர்கள் (ஞானிகள்) அருளிச் செய்தனவெல்லாம் பொருளும் பயனும் நோக்கி மறைகளும் மந்திரங்களுமாகும்.

8. உலகில் எல்லா மொழிகளிலும் எல்லாச் சமயங்களிலும் மறைகளும் மந்திரங்களும் பழக்கத்தில் இருந்து வருகின்றன.

10. தமிழில் மந்திரங்கள் இருந்தன, இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம்-திருக்குறள்-காஞ்சிப் புராணம் - திருமுறை கண்ட புராணம்-திருமந்திரம் முதலிய நூல்களின் வழியறிந்து உணர முடிகிறது. தமிழகத் திருக்கோயில்கள் பலவற்றிற்குத் திருவருட் பொலிவும் (சாநித்தியம்) பெருமையும், சைவ நாயன்மார்களின் திருப்பாடல்களாலும், ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களாலேயுமாம் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியானால் அப்பாடல்களால் பெருமைபெற்ற திருத்தலங்களில் பாடல்களை ஓதி அருச்சனை செய்வதில் தவறென்ன?

11. கன்று பசியினால் தாய்ப்பசுவின் மடியை முட்டும்போது பால் சுரக்கும். கன்றாக முட்டாத போது நாம் பிடித்து முட்டச் செய்தாலும் பால் சுரக்கும். இறைவன் நாயன்மார்களின், ஆழ்வார்களின் பாடல்கேட்டு மகிழ்ந்து திருவுருவங்களை இடமாகக்கொண்டு வீற்றிருந்தருளி அருள் வழங்கினார். அதே பாடல்களை இன்று நாம் மனம் கலந்த அன்பினராக ஓதி அருச்சனை செய்தால் திருவருள் அனுபவம் எளிதில் கிடைக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

12. அருச்சனை என்பது இறைவனைப் புகழ்ந்து போற்றித் துதி செய்தலேயாகும். தாய்மொழியில் போற்றிப் புகழ்வதே எளிது. இறைவன் உலகத் தலைவன். எல்லா உயிர்களுக்கும் தலைவன். எல்லாச் சமயங்களுக்கும் தலைவன். அவனுக்கு எல்லா மொழிகளும் சொந்தம். எல்லா மொழிகளும் தெரியும். ஆனால் அவன் அருளைப்பெற வேண்டிய உயிர்களோ சிற்றறிவின. உயிர்களுக்குத் தெரிந்த மொழி இறைவனுக்குத் தெரியும். ஆனால், இறைவனுக்குத் தெரிந்த மொழிகள் உயிர்களுக்குத் தெரியாது. உயிர்கள், தனக்கும் இறைவனுக்கும் தெரிந்த ஒரு மொழியில் வழிபாடு செய்தால் பெரும்பயனைத் தரும்.

13. இறைவன் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மீது காதலுடையவன்.

அ. தமிழ்ப்புலவனாக அமர்ந்து தமிழை ஆராய்ந்து கவிதையையும் செய்திருக்கிறான்.
ஆ. அவன் மட்டுமல்ல; அன்னை பராசக்தியும், செந்தமிழ் முருகனும் தமிழ் ஆராய்ந்திருக்கின்றனர்.
இ. சைவ நாயன்மார்கள் பாடிய பாடல்களைக் கேட்க வேட்கை மீதூர்ந்து காசும் பிறவும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஈ. சேக்கிழாருக்குப் பெரிய புராணம் செய்ய அடி எடுத்துக் கொடுத்த போது “உலகெலாம்” என்ற துரய தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொடுத்தான்.
உ. மாணிக்கவாசகர் பாடி திருவாசகத்தைத் தானே தன் கைப்பட எழுதியிருக்கிறான்.
ஊ. உமாபதி சிவாச்சாரியாருக்குக் கொடுத்த சீட்டும் தமிழிலேயாம்.
எ. ஆடுகின்ற அம்பலத்தரசு தென் தமிழும் அனுபவிக்கும் வேட்கையிலேயே தென் திசை நோக்கி ஆடுகின்றான். தென்திசை நோக்கி நகர்ந்து மிதிக்கின்றான்.
ஏ. அன்னை பராசக்தி கொடுத்த சிவஞானப் பாலை உண்ட, வேத நெறி தழைத்தோங்கப் பிறந்த
குழந்தை திருஞானசம்பந்தர் “தோடுடைய செவியன்” என்று தமிழிலேயே பாடியது. அப்படியானால் அன்னை பராசக்தி கொடுத்த சிவஞானம் தமிழ் வழிப்பட்டதுதானே!

மேற்கண்ட சான்றுகளால், இறைவன் தமிழ் விரும்பினன் என்ற கருத்து உறுதியாகிறது. அப்படியானால் தமிழ் அருச்சனை செய்து போற்றினால் அவன் திருவுளம் மகிழ்வான் என்பதற்கும் ஐயமுண்டோ!

14. சேக்கிழார் சிவபெருமான் வாயிலாக “அருச்சனைப் பாட்டேயாகும்.” என்று அருளிச்செய்த சொற்றொடர் அருச்சனை என்பது திருமுறைப்பாடல்களினால் செய்வதேயாம்.

15. திருமுறைகளை ஓதி அருச்சனை செய்கிற வழக்கு இருந்தமையினாலேயே “அருச்சனைப் பதிகம்” என்ற அகத்தியர் தேவாரத்திரட்டில் “பந்துசேர்விரல்” எனத் தொடங்கும் திருஞானசம்பந்தர் பதிகமும்; “வேற்றாகி விண்ணாகி” எனத் தொடங்கும் திருநாவுக்கரசர் திருத்தாண்டகமும், “கொன்று” எனத் தொடங்கும் சுந்தரர் தேவாரமும் அமைந்துள்ளன.

16. நம்முடைய சமயத்திற்குப் பௌத்த சமண சமயங்களால் இடர் வந்துற்ற போது அவ்விடரிலிருந்தும் சைவத்தைக் காப்பாற்றித் தந்த ஞானப் பாடல்களாகிய திருமுறைகளை அருச்சனை செய்வதில் இழுக்கு என்ன? அப்படி செய்வதின் மூலம் நன்றியுடையவர்களாகவும் வாழ முடியுமே.

17. திருமுறைகள் இறைவனே தனது உரைகளாக உகந்து, ஏற்றுக் கொண்டவைகளேயாகும். அவைகளால் அருச்சனை செய்வது ஆண்டவனுக்கு மிகவும் உகந்தது.

18. திருமுறைகள் செந்தமிழ் மந்திரங்கள்; அவைகளில் ஒவ்வொரு எழுத்தும் சொல்லும்கூட மந்திரங்கள்; அவைகள் செயற்கரிய செய்கைகளைச் செய்தன. அத்தகு செயற்கரிய செயல்களைச் செய்த திருமுறைகளால் அருச்சனை செய்தால் எண்ணிய பயனை எய்த முடியும்.

வினாவும் விடையும்

1. தாய்மொழி வழிபாட்டுக் கொள்கையை மொழி விருப்பு வெறுப்பின்பாற்பட்ட கொள்கை, எனச் சிலர் கருதுகிறார்கள். தாய்மொழியில் வழிபாட்டுக் கொள்கை, மொழிவழி தோன்றியதல்ல. வழிபாடு நெஞ்சு கலந்ததாக இருந்து பூரணப் பயனைத்தர வேண்டும் என்ற வழிபாட்டு வழித்தோன்றிய கருத்தே. நமக்குத் தமிழில்தான் செய்ய வேண்டும் என்ற கொள்கை இல்லை. எம்மொழியிலும் வணங்கலாம். எல்லா மொழியாலும் தேவர்கள் இறைவனைத் துதித்ததாகத் திருஞான சம்பந்தர் தேவாரம் பேசுகிறது. ஆதலால் பல மொழிகளில் வழிபாடு செய்யலாம் என்று சொல்வதினால் மொழிவெறி உண்டாகாது. வடமொழியில் தான் வழிபடலாம் பிற மொழியில் கூடாதென்று சொல்லும் பொழுதே மொழிவெறி எனக்கருத முடிகிறது.

2. இப்படி மொழிவழிப்பட்ட எண்ணங்களினால் மக்களிடையே பிரிவினை சக்தி வளர்ந்து பிளவுகள் ஏற்படும் என்று சிலர் கருதுகிறார்கள். அதுவும் உண்மையல்ல. தன்மொழி மீது விருப்பும் பிறமொழியின் மீது வெறுப்புக் காட்டும் பொழுதே பிரிவினை தோன்றும்; பிளவுகளும் உருவாகும். அவரவர் தாய்மொழியில் அவரவர் விரும்புகிற வண்ணம் அருச்சனை செய்யலாம் என்று சொல்வதினால் பிரிவினையும் பிளவும் தோன்றுகிறதில்லை. இந்தியப் பேரரசு நாட்டின் ஆட்சிக்கென்று ஒரு பொது மொழியைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தந்த மாநிலங்களின் தேசீய மொழிகள் அந்த மாநிலங்களின் ஆட்சி மொழியாக ஆக்கியதின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை உருவாக்க நினைக்கிறது. அது போலவே, வழிபாட்டுத் துறையில், பரவலாகச் சமஸ்கிருதமும், பிராந்திய எல்லையில் விரும்பியவர்களுக்குத் தாய்மொழியும் இருக்க வேண்டும் என்று சொல்வதினால் தேசீய ஒற்றுமை பாதிக்கக் கூடியதில்லை.

3. திருக்கோயில் நடைமுறைகள் சிவாகமங்களின் வழி நடைபெறுகின்றன. அதற்கு மாறாக, தமிழில் செய்யக்கூடாது என்று சிலர் சொல்லுவர். அதுவும் உண்மை அல்ல. இன்று அருச்சனைக்குப் பயன்படுகிற ‘அஷ்டோத்திர’ ‘சகஸ்ர நாமங்கள்’ சிவாகமங்களுக்கு உரியனவல்ல. மிகப் பிற்காலத்தில் வடமொழிப் புராணங்களிலிருந்து புகழ் மொழிச் சொற்றொடர்களாகத் தொகுக்கப்பெற்று அருச்சனைக்கு உரிமையாக்கப் பட்டனவேயாம். ஆதலால் இன்றைய அருச்சனை முறையும் சிவாகமங்களுக்கு உடன் பாடில்லாதனவேயாம். எப்படி வடமொழி சொற்றொடர்பை அருச்சனைக்கு உபயோகப்படுத்திக் கொண்டோமோ, அப்படி திருமுறைப் பாடல்களையும் அப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பெற்ற சொற்றொடர்களைக் கொண்டு அருச்சனை செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதேயாகும்.

4. ஓம், ஹாம், ஹறிறீம், வௌ ஷட் ஆகிய மந்திரங்கள் வடமொழியைச் சார்ந்தனவென்று சிலர் சொல்லுகின்றனர். அதுவும் நிறைவான கருத்தல்ல. ஓம் என்பது தமிழ் மந்திரமே என்பது பல பேரறிஞர்களின் முடிவு. ஹாம் ஹிறீம், ஹௌம், போன்றவை எம்மொழியையும் சார்ந்த மந்திரங்கள் அல்ல. மொழிகடந்த ஒலிக்குறிப்புகளேயாம்.

5. திருவைந்தெழுத்து வடமொழி என்று சிலர் சொல்லுவர். அதுவும் நிறைவான கருத்தல்ல. திருவைத்தெழுத்து தமிழ்மந்திரமே என்று சைவசித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகம், மறைமலையடிகள் ஆகியோர் தெளிவாக வரையறுத் துள்ளார்கள். எனினும், ஒரே மந்திரத்தை இருமொழியினர் தம்தம் மந்திரமென்று சொல்லிக் கொள்வதில் நன்மையே தவிர இழப்பொன்றுமில்லை. திருவைத்தெழுத்து எம்மொழி மந்திரமாயினும் ஆகுக.

6. வழக்கத்தில் இருக்கின்ற முறையை மாற்றக்கூடாது என்று சிலர் சொல்லுகிறார்கள். காலத்திற்குக்காலம் உண்மை மாறுவதில்லை. ஆனாலும், நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் மாறி வருவதை அறிஞர்கள் உணர்வர். தாயுமானாரும் “காலமொடு தேசவர்த்தமானமாகிக் கலந்து நின்ற கருணைவாழி” என்றார். இறைவன் யுகத்திற்கு யுகம் வெவ்வேறு பெயர்களும் வடிவங்களும் கோலங்களும் ஏற்று அருள் வழங்கி இருக்கிறார் என்பது வரலாறு. அப்படியானால் நடைமுறையை மாற்றக்கூடாது என்பது பூரண விவாதமாகமாட்டாது. தொடக்க காலத்திலிருந்து இன்றிருக்கும் நிலையிலேயே வழிபாடு, நடந்து வந்ததுவென்று சொல்ல முடியாது. மிக அண்மைக்காலம் வரையில், எல்லோரும் மூர்த்தியைத் தீண்டி, திருமுழுக்கு செய்து, மலர்தூவி வழிபாடு செய்கின்ற முறை இருந்திருக்கிறது என்பதைத் திருமுறைகளின் மூலமும், புராணங்களின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர் வழிபாட்டு முறையில் ஒழுங்கு உண்டாக்குவதற்காகவே, இப்பொழுதுள்ள நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழ் வழிபாட்டுமுறை மிகத் தொன்மையானது என்பது நமது கருத்து. நாம் அதைப் புதியதாகக் கருதவில்லை. அப்படியே புதியதாக வைத்துக்கொண்டாலும், நாம் இருக்கிற முறையை மாற்றச் சொல்லவில்லை. இருக்கும் முறையோடு தமிழிலும் அருச்சனை செய்கின்ற முறையை இணைப்பாகச் சேர்த்துக் கொள்ளவே சொல்லுகிறோம்.

7. இன்று திருக்கோயில்களில், திருமுறைகளுக்குரிய இடம் கொடுக்கப் பெற்றிருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். திருமுறைகளுக்கு உரிய இடம் இருக்கிறதா என்ற கேள்வி அல்ல இங்கு தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திருமுறைகளுக்கு உரிய இடத்தை வாங்குவதற்கென்று எழுந்ததல்ல. வழிபாடும் அருச்சினையும், உரிய பயனைத்தர தாய்மொழியில் வேண்டும் என்பதே. இதை நோக்க இவ்விவாதம் பயனில்லாமல் போகின்றது. மேலும் திருமுறைகளுக்கு எத்தகைய இடம் கொடுக்கப் பெற்றிருக்கிறதென்பதையும் ஆராய்ச்சி செய்வோம். உள் வீட்டில் ஒருவரை இருத்தி உணவிட்டு, அதே நேரத்தில் இன்னொருவரை வீட்டு வெளியே நிறுத்தி உணவிட்டால், வெளியிலிருந்து உணவு பரிமாறப்பட்ட ஒருவன் தன்மானம் உடையவனாக இருந்தால் உணவுதான் கிடைத்திருக்கிறதே என்று அமைதி கொள்வானா? அல்லது அமைதி கொள்ளத்தான் முடியுமா? இறைவன் எங்கே? எங்கே? என்று தேடி அலைந்த-அலைந்து கொண்டிருக்கின்ற சமஸ்கிருதம் இறைவனுக்கு அண்மையில் பூசனை மொழியாக இருக்க, இறைவன் இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கண்டு எழுதி காட்டித் தந்த தெய்வத்தமிழ் வெளியிலும் அதுவும் ஒரு உபசாரப்பொருளாக இருப்பதைத் திருமுறைகளுக்கு உரிய இடம் என்று கருதமுடியுமா?

8. சமஸ்கிருதத்தில் இருப்பவைகளை மொழிபெயர்த்து அர்ச்சனை செய்வதனால் சுவைக்காது என்று சிலர் சொல்கிறார்கள். நாம் சமஸ்கிருதத்திலுள்ள அருச்சனைகளை மொழிபெயர்த்து அருச்சனை செய்ய வேண்டும் என்ற நோக்குடையோமில்லை. இயல்பிலேயே, திருவருள் நலம்பெற்ற ஞானப்பாடல்களாக இருக்கும் திருமுறைகளைக் கொண்டும், அவைகளிலிருந்து தொகுக்கப்பெற்ற அருச்சனைக் கொத்துக்களைக் கொண்டும் அருச்சனை செய்ய வேண்டும் என்பதே நமது கொள்கை. ஆதலால் மொழிபெயர்ப்புச் சிக்கல் எழ இல்லை.

செய்முறை

தமிழகத் திருக்கோவில்களில் விரும்புகிறவர்களுக்குத் திருப்பதிக அருச்சனையும், தமிழில் அருச்சனையும் செய்துதரப்பெறும் என்ற அறிவிப்பு தரவேண்டும்.

திருப்பதிக அருச்சனை

அ. சைவ பன்னிரு திருமுறைகளில், எந்த ஒரு பதிகத்தையாவது அல்லது பகுதியையாவது அப்படியே ஓதி அருச்சனை செய்வது திருப்பதிக அருச்சனையாகும்.

ஆ. திருமுறைப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பெற்ற சொற்றொடர்களை வைத்து நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு என்று தொகுக்கப் பெற்ற அருச்சனைக் கொத்துக்களைக் கொண்டு செய்வது தமிழ் அருச்சனையாகும்.

குறிப்பு:-

கடையம் சு.சு.தெ. அருணந்தி சிவாச்சாரியார் அவர்கள் 1946ல் தொகுத்து வெளியிட்டுள்ள திருநெறி அருச்சனைக் கொத்தையும் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கழகப்புலவர் ப. இராமநாதபிள்ளையைக் கொண்டு வெளியிட்டுள்ள “மலர் பாட்டு வரிசை” நூலையும் பயன்படுத்தலாம்.

இ. அருச்சனைப் பதிகத்தை அல்லது அருச்சனைக்குரிய மொழிகளை அருச்சகரே பயின்று ஓதிச் செய்வது வரவேற்கத்தக்கது. அதற்குரிய காலம் வரும்வரை எப்படி சமஸ்கிருத அருச்சனையை அத்யானபட்டர் சொல்ல அருச்சகர் அருச்சிக்கிறாரோ, அதுபோல, திருமுறை ஆசிரியர் ஒத, அருச்சகர் அருச்சிக்கலாம்.