குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/கடவுளைப்போற்று! மனிதனை நினை
சமயம், ஒரு சடங்கல்ல; கண்மூடிப் பழக்கமல்ல. சமயம் ஒரு வாழ்வியல் கலை. வாழ்வாங்கு வாழத் துணை செய்வது சமயம். சமயம் நம்பிக்கையின் பாற்பட்டது; நல்லறிவின் பாற்பட்டது சமயம் உயிரியல் அறிவியல். உயிர், அறிவுபெறத் தக்கது; உணர்வு நலன்கள் பெறத்தக்கது. சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடி இன்பமாக அமைத்துக் கொள்ளத் துடிப்பது. ஆர்வம் காட்டுவது. ஆயினும் நடப்பது என்ன? உயிர் அறியாமையின் வயப்பட்டுக் கிடக்கிறது. அதனால் துன்புறுகிறது; அல்லற்பட்டு அழுகிறது. அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று; ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ அறிந்திருப்பதே அறியாமை. அதாவது, நன்மையைத் தீமையென்றும், தீமையை நன்மையென்றும் கருதுவது; உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் கருதுவது இன்பத்தைத் துன்பமாகவும் துன்பத்தை இன்பமாகவும் கருதுவது; நியாயத்தை அநியாயமாகவும் அநியாயத்தை நியாயமாகவும் கருதுவது; நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும் கருதுவது; நிலையானவற்றை நிலையில்லாதனவாகவும், நிலையில்லாதனவற்றை நிலையானவையாகவும் கருதுவது. இன்றையச் சூழ்நிலையில் அறியாமையே அறிவு என்று நம்பப்படுகிறது. அஃது உயிரின் இயல்பன்று; இயல்பான விருப்பமும் அன்று. உயிர் சார்ந்துள்ள ஆணவம் உயிரை இப்படி ஆட்டிப் படைக்கின்றது. உலகியலில் கூட, சேரத்தகாதவருடன் சேர்ந்து விட்டால் அவர் சொல்லுகிறபடி ஆடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படி ஆடாமல் இருந்தால் அவர்கள் தொல்லை கொடுப்பார்கள். அதனால்தான் பேயோடாயினும் பிரிவு தீயது என்றனர் சான்றோர். இது போலத்தான் ஆணவம்! நிலத்தியல்பால் தூய தண்ணீர் கெட்டுப் போகிறதல்லவா? அதுபோல உயிரும் ஆணவத்தின் கூட்டால் அல்லற்படுகிறது; துன்புறுகிறது.
ஆணவம், தன்முனைப்பைத் தரும்; தெரியாதது ஒன்றுமில்லை என்று கருதச் செய்யும்; தம்மினும் அறிவும் திறனும் உடையார் இல்லை என்று எண்ணச் செய்யும்; தருக்கி நடக்கத் தூண்டும். அதனிடம் பணிவும் இல்லை; அதனால் பண்பும் இல்லை. இதனால் அறிவு வாயில்கள் அடைபட்டுப் போகின்றன. மேலும் எதையும் எவரையும் அலட்சியப் படுத்துகின்ற புத்தி தோன்றிச் செயற்படும். இதனால் உயிர், தான் சார்ந்த ஆணவத்தின் தன்மையாகவே மாறிவிடுகிறது; தன் நிலையை இழந்து விடுகிறது. இந்த இருண்ட சூழ்நிலையில் விண்வெளி மின்னலெனத் திருவருள் வழி காட்டுகிறது. இருட்டில் அலைந்து எய்த்த உயிருக்கு ஓர் உயிர்ப்புத் தோன்றுகிறது. அறிகருவிகளையும் செயற்கருவிகளையும் திருவருளால் பெறுகிறது; சிந்திக்கிறது. இதனை “நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார்?” என்ற பாடல் முழுவதுமாகச் சிந்திக்கிறது: ஆராய்கிறது. “நான் யார்?”-இது சிந்தனையின் முதற்படி, இது என்ன புதிராக இருக்கிறது? சிந்திக்கின்ற உயிருக்கு “நான் யார்?” என்பது கூடவா தெரியாது? “நான் யார்?” என்ற கேள்வி பருவுடலைப் பற்றியதுமன்று; ஊனுடல் வாழ்க்கையைப் பற்றியதுமன்று; இது அஞ்சலகத்தின் முகவரி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரம். குணங்களைப் பொருத்த கேள்வி அது. ‘நான்’ நான்தானா? அல்லது ஆணவமயமா? ‘நான்’ எப்படி இருக்கின்றேன்? எப்படி வாழ்கின்றேன்? எப்படி நடந்து கொள்கின்றேன்? மனிதனாகவா? கொடிய விலங்குகளைப் போலவா? நச்சுச் செடிகளைப் போலவா? யார் மனிதர் உறுப்புக்களால் மட்டும் ஒருவர் மனிதராகி விடுவதில்லை. மானிடரில் பலர் மனிதர் போல இருப்பர்; ஆனால் மனிதரல்லர்! ‘மக்களே போல்வர் கயவர்’ என்றது திருக்குறள். நான் யார்? இதற்கு விடை அடுத்த ஆய்வில் பொருந்திக் கிடக்கிறது. அதாவது, “என் உள்ளம் ஆர்?” என்ற கேள்வியில்! இதற்கு விடை எங்கிருக்கிறது? ஆய்வின் அடுத்த பகுதியில் “ஞானங்கள் ஆர்?” என்ற பகுதியில்! ஆம்! உயிர் வாழ்க்கை அறிவால் அமைவது! உயிரின் வேறுபாடுகள் அறிவின் பாற்பட்டனவேயாம். மனிதரில் விலங்குக் குணமுடையார் இல்லையா? ஏன்விலங்கினும் இழிந்த குணமுடையவர்கள் இல்லையா? இருக்கின்றார்கள். அவர்கள் இழிபிறவிகள்; ஆக, உயிர் தம் நிலையில்-அறிவு நிலையில் இல்லாமல் தலைதடுமாறிக் கிடந்தால் நன்மைகூடப் பிழையாகத் தெரியும்.
எது அறிவு? அறிவு-அறியாமை வளர்ச்சி நிலையைச் சார்ந்தது. அறிவிலிருந்து அறியாமை தோன்றும்! “அறிதோறு அறியாமை” என்பதறிக. அறிந்தவர்கள் மேலும் அறிய வேண்டியன உள்ளன என்று கருதும் உணர்வே அறியாமை. இந்த அறியாமை, அறிவினைத் தேடுதலில் முனைப்பைத் தரும். ஞானம் என்பது அறிவு-அறியாமைச் சுழற்சிகளைக் கடந்துவளர்ந்த பேரறிவே! அறியாமைக் கலப்பில்லாத அறிவே, ஞானம். அந்த அறிவுபெற, உயிர் செய்யும் முயற்சியே சிந்தனை-வழிபாடு! இதுவே திருவாசகப் பாடலின் கருத்து.
ஆக, உயிர் நாள்தோறும் சிந்தித்துத் தன் நிலைமையறிந்து கொள்ள முயற்சி செய்தலே வாழ்க்கையின் முதற்படி! இருக்கும் நிலை அறிந்தால்தான் இல்லாத நிலைமை அடைய முயலும் ஆர்வம் பிறக்கும். இந்தச் சிந்தனையில் மலர்வதே வழிபாடு!
“மக்கள் சிந்தனை” -15-8-80
உயிர், கடவுளால் படைக்கப்பெற்றதன்று; கடவுளுக்கு அடிமையுமன்று. ஆனால், உயிரின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் வகையில் கடவுள் தாய் போல்வான்; தலைவன் ஆவான்! உயிர் வளர, கடவுள் செய்யும் முதல் உதவி பொறி புலன்களை உயிர்களுக்கு வழங்குவதுதான்! நோயுற்ற நிலையில் முதல் உதவியால் செயற்கை மூச்சு ஏற்படுத்துவர் மருத்துவர்; செயற்கை முறையில் உயிர்ப்பு நிலை உணவு ஏற்றுவர். ஆயினும் உடல் அவைகளை ஏற்றுச் செரித்துக் கொண்டு, தானே மூச்சுவிட முடிந்தாலன்றிப் பிழைப்பு இல்லை. இதுபோலத்தான் உயிரியல் நிலையுமாகும். உயிர்க்குப் பொறி, புலன்கள் வழங்கப்பெற்ற நிலையில் உயிர் நினைந்து, வாழ்ந்து, துய்த்து, வளர்ந்து குறைகளினின்றும் விடுதலை பெற்று நிறைநலம் பெறுதல் வேண்டும். உயிரின் இந்த முயற்சிகளின் அளவுக்கும் தகுதிக்கும் ஏற்ப, கடவுள் உதவி அமையும்.
உயிர், கடவுளை ஏன் வழிபடுகிறது? பயத்தினாலா? இல்லை! “கடவுள் வழிபாடு பயத்திலிருந்து வந்தது” என்பது மேற்புல வழக்கு. “கடவுள் தன்னை வழிபடுவதற்காகவே படைத்தனன்” என்பது புறச்சமய வழக்கு! “கடவுளை வழிபட்டாகவேண்டும். இல்லையானால் நரகம் கிடைக்கும்” என்பது பிற சமயவழக்கு. தமிழ் வழக்கு, இவைகளுக்கு முற்றிலும் வேறானது. “கடவுள் பேரறிவினன் வரம்பிலாற்றல் உடையவன்; நன்மையானவன்; இணையில் இன்ப வடிவினன். ஆதலால் கடவுளை வழிபடுவதன் மூலம் உயிர்கள் இந்த இயல்புகளைப் பெறலாம்; பெற வேண்டும்” என்பது தமிழ் வழக்கு!
வழிபடுதல் என்ற சொல் வழிப்படுதல் என்று பொருள்படும். அதாவது “கடவுள் நெறி நிற்றல்” என்பதாகும். கடவுள் வழிபாட்டில் எண்ணுதல், சிந்தித்தல் என்ற அகநிலைத் தொழிற்பாடே முதன்மையானது; பயன்தரத் தக்கது. இதற்குத் துணை செய்வனவாகச் சில சடங்குகள் அமைந்தன. ஆனால், காலப்போக்கில் சடங்குகளே விஞ்சி விட்டன! எண்ணுதல் இல்லை; சிந்தித்தல் இல்லை; அறிதல் இல்லை. அதனால் தெளிதலும் இல்லை. மண்ணில் வளரும் செடி செழித்து வளர, பூத்துக் குலுங்கக் கதிரொளி தேவை. இந்த ஒளிச் சேர்க்கை நுண்ணிய முறையில் பருஉருத் தோற்றங்களின்றி நிகழ்கின்றதல்லவா? அதுபோலத்தான் ஞானச் சேர்க்கை உயிர்க்கு ஏற்பட்டாகவேண்டும். அதற்கு உயிர், கடவுளைச் சிந்தித்தல் இன்றியமையாதது. இதையே வேறு வகையில் சொன்னால் எண்ணுதல் அவசியம். எண்ணங்கள் வழியது உயிர்களின் ஆக்கம் என்பது கொள்கை-கோட்பாடு! உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் இயல்பாகத் தோன்றுவதற்கு முன்பு, பாவித்தல் - அதாவது நடிப்பாகக்கூட இருக்கலாம் - பயனுடைய வாழ்க்கையாகிவிடும். ஆதலால் வழிபாடு சிறந்தது; உயர்ந்தது! தப்பாது பயன் தருவது!
கடவுளைச் சிந்தித்தல், அவனது பெயரை மந்திரமாக நெஞ்சத்திலிருத்தி எண்ணுதல்! மந்திரம் என்பது கூடச் சொல் அல்ல! பொருள் அல்ல. ஒலிக்கூட்டமும் அல்ல! பயன் தருவது! மந்திரத்தை எண்ணும் மனத்தின் வலிமையாலும், உறுதியாலும் அந்த மந்திரத்தை எண்ணும் பொழுது ஏற்படும் உணர்வுநிலையே பயன் தருவது. கடவுள் நெறி நிற்றல் வழிபாட்டின் பயன்; அதாவது அறிஞனாதல், தொழில் வல்லானாதல், இன்புறுதல் ஆகும். அந்த வழிபாட்டில் பொறி, புலன்களை இயக்கும் மனம், புத்தி, சித்தம் ஆகிய உயிர்களின் தலையாய அறிகருவிகள் ஈடுபடவேண்டும். இவை ஈடுபடாமல், பொறிகளால் செய்யப்படும் வழிபாடு பயனற்றது. மனம் ஆற்றல் மிக்கது. ஓயாத இயக்கத்தன்மை உடையது; விரைந்து தொழிற்படும் தன்மையது. அதனால் தான் மனத்தின் வேகத்தை வளியின் வேகத்திற்கு ஒப்பிடுவர். “வாயு வேகம், மனோ வேகம்” என்பது வழக்கு. உயிர், அரிதல் முயன்று மனத்திற்குச் சிந்தனைக்குரிய -நுகர்தலுக்குரிய நற்செய்திகளைத் தந்துவிடின் மனம், புத்தியின் துணை கொண்டு நன்மை தீமையைப் பகுத்தறிந்து சிந்திப்பதற்குரிய செய்தியினை நிச்சயித்து மனத்திற்குத் திரும்பத் தரும். இந்நிலை அமையாதெனின் உயிர் தன்போக்கில் தொழிற்படும். இந்நிலை, பயன்படாநிலை மட்டுமின்றி, துன்பம் தருவதுமாகும். இந்நிலையில், உயிர் தன்னிச்சைப் போக்குகளை நிறுத்தி, மடைமாற்றி நன்னெறியில் மனத்தைச் செலுத்துதலே-நிறுத்துதலே வழிபாடு!
ஆக, உயிர், கடவுளுக்குச் செய்யும் வழிபாடு கடவுளுக்கு உரிமையுடைய ஒரு காணிக்கையன்று! உயிர், கடவுளை வழிபடுதலால், கடவுளுக்குப் பயனுமில்லை, ஏன்? கடவுள் என்பது ஆற்றல் மிக்க பொருள்; விருப்பு, வெறுப்புகளைக் கடந்தது. கடவுளை முன்னிட்டு வழிபாடு செய்யினும் பயன் முழுவதும் உயிர்க்கேயாம்! வழிபாட்டின் பயனாக உயிர் அறிவு பெறுகிறது; தெளிவு பெறுகிறது; இன்புறுகிறது; இதற்காகத் தான் கடவுளை உயிர் வழிபடுகிறது. வழிபடுதல் என்பது கடவுளின் பேரறிவை, பேராற்றலைப் பெறுவதற்குரிய உயிரின் முயற்சியேயாம்!
- “மக்கள் சிந்தனை"-1-9-80
உயிர், உய்தலுக்குரியது; உய்யவேண்டிய நிலையில் இருக்கிறது. உய்தி பெறுவதற்காகவே வாழ்க்கை அமைந்தது. உய்தலாவது உயிர் குறைகளின்று விடுபடுதல்; நிறை நலம்பெறுதல்; அறியாமையினின்றும் நீங்குதல்; அறிவுநலம் பெறுதல், துன்பங்களின்று விடுபடுதல், இன்ப நலன்கள் பெறுதல், இன்ப அன்பு நிலையெய்துதல், உயிர்களின் தரம் பல. அதனால் உயிர்கள் வளர்ச்சியடையும் நெறிகளும் பல. நெறிகளுக்கேற்பக் காலங்களும் பிடிக்கலாம். உயிர் உய்யும் நெறி எதுவானாலும் அந்நெறிகள் அனைத்தும் உயிரின் செயற்பாடுகளையும் செயற்பாடுகளின் நோக்கங்களையும் மையமாகக் கொண்டதேயாம். உயிர், இயற்கையாக உழைப்புத் தன்மையுடையது.
உழைப்பு இருவகை. ஒன்று உடல் உழைப்பு. பிறிதொன்று அறிவுழைப்பு. இருவேறு நிலையினதாக உழைப்பு பிரித்து எண்ணப்பெற்றாலும் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானது, முற்றிலும் வேறுபட்டது அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாதது என்று கருதக்கூடாது. அளவு, பரிணாம வேறுபாடுதான் இரண்டும் தனித் தன்மையுடையதாக இருத்தல் கூடாது; இயலாது. ஒன்றையொன்று தழுவியதே! உழைப்பின் வாயிலாகக் கிடைக்கக் கூடிய நிலையான பாடங்கள் உடற்சார்புடையன அல்ல. எல்லாம் உயிர்க்கே! உழைப்பின் நோக்கம், தரம் தகுதி முதலியவற்றை மனத்தின் வாயிலாகப் புத்தியின் துணைகொண்டு, சித்தத்தில் சிந்தித்து முடிவு செய்வது உயிரே! பலர், பல சமயங்களில் புத்தி, சித்தம் இவைகளின் ஆய்வைக் கேளாமலே, மனநிலையிலேயே (மன நிலையில் கூட ஆழ்ந்த நிலையில் அல்ல) உடல், பொறிகள் வழிப்பட்ட உணர்ச்சி வேகங்கள் இயக்குகின்ற வழி செயற்படுவர். இச்செயல்கள் நூற்றுக்கு நூறு தன்னலச் சார்பினதாகவே அமைந்திருக்கும். அதுமட்டுமல்ல, வெட்கம், மானம் இவைகள் பற்றிக் கவலைப்படாத நிர்வாணத் தன்மையுடைய ஆசைகளாகவே அமைந்து கிடக்கும்.
இத்தகையோர் எதையும் ஆராயார்; யாரைப் பற்றியும் கவலைப்படார். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தேவை ஒன்று மட்டும்தான்! அத்தேவைகளைக் கூட அடையும் வாயில்களைப் பற்றியும் அவ்வாயில்களை அணுகும் முறையைப்பற்றியும் ஆராயார்: அறிந்து முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். ஏன்? வாயில்கள் திறந்திருந்தாலும் கூட அவ்வழி அணுகார். நெறியல்லா நெறிகளையே மேற்கொள்வார். அதனால்தான். “மனம் போன போக்கில் போகவேண்டாம்” என்றனர். இன்று மனம் அழைத்துச் செல்லாமல்கூட தசை உணர்ச்சிகள் அழைத்துச் செல்லும் வழியில் செல்வோர் எண்ணிக்கை மிகுதி.
ஆதலால் உழைத்தால்மட்டும் போதாது. உழைத்தல் ஒருவகை அறிவியல்கலை, அருமைப் பாடுடைய கலை. மனம், புத்தி, சித்தம் இவற்றின் ஆற்றல் மிக்க தொழிற்பாடுகளை மானிட உயிர், உழைப்புக்குத் துணையாகக்கொண்டு அவ்வழியிலும் காலம், நியதி என்பனவற்றை அனுசரித்தும் உழைப்பவர்கள் வாழ்க்கை பாழ்படுவதில்லை. இத்தகு உழைப்பாளிகள் நன்கு வளர்வர். அவர்கள் ஒப்பற்ற சமுதாயத்தைக் காண்பர். சமுதாயத்தின் உறவு நெறிகளைச் செழிப்பாக வளர்த்துப் பாதுகாக்கும் காவலராகவும் விளங்குவர். இத்தகைய முறையான உழைப்பும் ஒருவகையில் தவமே! வழிபாட்டில் எண்ணும் சொல்லும் மந்திரங்களால் மட்டும் பயன் விளைவதில்லை. மந்திரங்களை எண்ணும் பொழுது மனம், புத்தி, சித்தம், உயிர் இவற்றின் உணர்வு நிலைத் தொழிற்பாடுகளே பயனளிப்பது. ஆதலால், உயிர் உய்யும் நெறி உழைத்தலேயாம். உழைப்பினால் வரும் உணர்வுகளே பண்பாடுகளாக வருகின்றன.
உழைத்தலின் மூலம் வரும் உணர்வுகளினால் பயன் விளைதலுக்கும் அதனை உரியவர் அனுபவித்தலுக்கும் நியதி-ஊழ் என்பது வழக்கு. ஊழ்த்தல்-ஊழ். ஊழ் என்பது புறத்தேயிருந்து வருவது அல்ல. அல்லது கடவுளோ யாரோ ஒருவர்மீது திணிப்பதும் அல்ல. அவரவர் ஊழுக்கு அவரவரே பொறுப்பு. “தீதும் நன்றும் பிறர் தர வாரா"; “அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்,” என்ற உரைகளை அறிக உழுது விதைத்தவன் அறுவடையின் பயனை அடைய வேண்டாமா? இத்தகைய உரிமையின்பாற்பட்டதே ஊழ்த் தத்துவம். நல்லவைகளை எல்லாம் கண்டு மகிழ்கிறவர்கள் துன்பங்களைக் கண்டு அல்லற்படுவதேன்? ஆனால், இன்பமும் துன்பமும் தொல்லைப்படுத்தும் நோக்குடையன அல்ல; மருத்துவ முறையேயாகும். ஆனால் மக்கள் இன்பத்தைப் பரிசுகளாக நினைந்து மகிழ்தலையும் துன்பங்களைத் தண்டனைகளாக நினைந்து வருந்துதலையும் காண்கிறோம். இன்னும் சிலர் ஊழ் மாற்றமுடியாதது என்கின்றனர். கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியாதா? எழுந்திருக்கக் கூடாதா? இது என்ன நியாயம்? கீழே விழுந்தவன் எழுந்திருக்க முடியும்; எழுந்திருக்க வேண்டும்; இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள். ஆனால் ஒன்று கீழே விழுந்ததால் பட்ட அடி-வலி இருக்கத்தான் செய்யும் சிலமணிகள், சில நாட்களுக்கு! அதற்கும் மருத்துவம் செய்வர். அதுபோல் சென்ற காலத்தின் நிகழ்வுகளின் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். அதுவும்கூட உணர்வில் குணத்தில்தான். ஊழ் உயிரைச் சார்ந்தது. வறுமைக்குக் காரணம் ஊழல்ல. அறிவறிந்த ஆள்வினையின்மைக்கு காரணம் ஊழல்ல. ஆதலால், உழைப்பு, உழைப்பின் பயன் என்ற வட்டம் ஓயாது இயங்குவது இயங்கவேண்டும். இந்த வட்டத்தைக் கோணலின்றிப் பயன் தரத்தக்க வகையில் இயக்கும் நல்லுணர்வுகள் தேவை!உய்யும் நெறி உழைத்தலே!
உய்யும் நெறி உணர்வு சிறத்தலே!
உய்யும் நெறி ஊழின் வலிமை மடக்குதலே!
“மக்கள் சிந்தனை” 15-9-80
சமய வாழ்க்கை
அறிவு, உணர்வு, உழைப்பாற்றல் மானிட சாதி அனைத்துக்கும் ஒப்ப அமைந்து விடுவதில்லை. சில வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் இருத்தல் இயற்கை. உண்ணும் பொருள்களில் சுவை வேறுபாடுகள் இல்லையா? சுவை வேறுபாடுகளை மனிதன் மதிநுட்பத்துடன் கையாண்டு கூட்டுகின்றவாறு கூட்டியும் சமைக்கின்றவாறு சமைத்தும், சுவைக்கின்றவாறு சுவைத்தும் மகிழக் கற்றுக் கொள்ளவில்லையா ? சுவை வேறுபாடு கருதியும் பொருந்தாச் சுவை கருதியும் எப்பொருளை மனிதகுலம் இழக்கத் துணிகிறது! அது போலத்தான் இயற்கையில் அமைந்த மனிதகுல வேறுபாடுகளையும் கருதவேண்டும்.
எல்லாருக்கும் ஒரு மாதிரியான உயிரணுக்கள், கரணங்கள், பொறிகள், புலன்கள் அமைந்து விடுவதில்லையே! இதில் பரம்பரை, அளவுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கிறது. அதனால் பரம்பரைத் தன்மை மாற்றமுடியாதது என்பது கருத்தன்று. பரம்பரைத் தன்மையை மாற்ற வளரும் சூழ்நிலை வாய்ப்புள்ளதாக அமையவேண்டும். நடைமுறையில் பரம்பரைகளின் தகுதி நிலைகளுக்கு ஏற்பத்தான் சூழ்நிலைகளும் அமைகின்றன. இஃது இன்றைய நடைமுறையில் இயற்கை-சிக்கல், ஏன், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகள், இளைஞர்களின் வாழ்க்கையிலுள்ள பரம்பரைத் தன்மையை மாற்ற அரசு முயற்சி செய்தது; முயற்சி செய்துகொண்டிருக்கிறது. ஆனால் பயன் மிகுதியல்ல. ஏன்? தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு என்று தனி விடுதிகள்தான் அமைத்தன. இம்முறையில் பரம்பரையாக வரும் குண ஆதிக்கங்களை உடைத்தெறியும் வாய்ப்புக் குறைவு. இதற்குப் பதிலாக இந்த மாணவர்களை வசதியும், வாய்ப்பும் உடைய வளர்ந்த சமுதாயத்தின் இளைஞர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளிலேயே தங்கிப் படிக்க அனுமதித்திருந்தால் வளர்ச்சியின் விகிதம் கூடுதலாகி இருக்கும். ஆதலால், பரம்பரை காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ இருக்கும் இயற்கையிலமைந்த வேறுபாடுகளைப் பெரிதாக்கி வளர்த்து இலாபம் ஆக்க நினைப்பது சமுதாயக் குற்றம். வளர்ச்சி, பரிணாம நிலையில் அமைவது. இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் துணையாக அமைந்து உதவி செய்தல் கடமை. இந்தக் கடமையிலிருந்து வழுவுகிறவர்கள் இயற்கை நியதிகள் இறைநெறிகளை மதிக்காது பிழை செய்கின்றனர்.
எந்த ஒரு தனி மனிதனின் அல்லது இனத்தின் அறிவாற்றலும் உழைப்புத் திறனும் அவர்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே பெற்றதல்ல. அதனால் அவை அவர்களுக்கு மட்டுமே உரிமையுடையனவும் அல்ல. மனிதகுல நிகழ்வுகள்தாம் அறிவாற்றலுக்கும் ஆள்வினைத் திறனுக்கும் ஊற்றுக் கண். ஆதலால் அறிவும் ஆற்றலும் மனித குலத்துக்குப் பொது, அறிவு, ஆற்றல் துணைகொண்டு படைப்பனவும் பொதுவேயாம். மனிதனை அறிவுடையவனாக, ஆற்றலுடையவனாக வளர்த்தது மனிதகுல வரலாறு. இது உண்மை.
இந்த வரலாற்றுண்மையைத் தான் சமயம், உயிர் பல பிறப்புக்களால் வளர்ந்து வருகிறது என்கிறது. ஒவ்வொரு பிறப்பிலும் உயிர், சமுதாயத்தில் வாழ்ந்து தானே வளர்ந்து வருகிறது! உயிர்களை வளர்க்க எண்ணும் கடவுளும்கூட உயிரைச் சமுதாய வாழ்க்கையில் ஈடுபடுத்தித் தானே வளர்க்க வேண்டியிருக்கிறது! ஆதலால், வளர்ந்த அறிவை, உழைப்புத் திறனைக் காட்டி எந்தத் தனித்தகுதியும் இலாபமும் அடைய யாருக்கும் உரிமை இல்லை. “சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பது அறிக அறிவறிந்த ஆள்வினை பெறாதார் உழைப்பை, உழைப்பின் படைப்பை யாரொருவர் எடுத்துக்கொண்டாலும் அது திருட்டே இலாபம் என்பதும் ஒருவகைத் திருட்டேயாம். ஆதலால், சமுதாயத்தின் வேறுபாடுகளை ஒருமையாக மாற்றுவதே சமயம். வேறுபாடுகள் தெரியாமல், அறிந்து கொள்ளாமல் வாழ்வதே சமய வாழ்க்கை.
—“மக்கள் சிந்தனை” —1-10-80
அன்பை வளர்ப்பதே!
‘அன்பு—வாழ்க்கையின் உயிர்நிலை. அன்பு வாழ்க்கையில் ஈட்டக்கூடிய துய்க்கக்கூடிய பொருள். உலகியல் வாழ்க்கையை உறவுகளால் செழிக்கச் செய்வது அன்பு. இறையிடம் இன்ப அன்பினையும், இறைவனின் உலகத்தையும் வழங்குவதும் அன்பேயாம்.
அன்புடையாராதல் அரிது. இன்று அன்பின் போலித் தோற்றங்களை அன்பு என்று நம்பி ஏமாறுகின்றனர் பலர். அன்புடையராய் வாழ்பவர்களுக்கே உயிர் உண்டு. அன்பில்லாதவர்கள் உண்டு, உடுத்துத் திரியும் பிணம் என்பார் திருவள்ளுவர்.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு” (குறள் 80)
அன்பு உயிரைச் சார்ந்த உணர்வு; ஒழுக்கம். அன்புக்கு வேறு புறமான குறிக்கோள் இல்லை. அன்புக்குக் குறிக்கோள், அன்பே! வேறுவேறு குறிக்கோளுடன் அன்புடையராகப் பழகுதல் உண்மை அன்பன்று. அஃதொரு வாணிகம். அன்பு ஏன்? எதனால்? என்ற காரண வினாக்களுக்கு விடைகூற இயலாது. அப்படிக் காரணம் கூற முடியுமானால் அந்த ஒரே காரணம் அன்பாக இருத்தல் என்ற உயிரியற்கைதான்.
அன்பு, உயிரின் இயற்கைக் குணம். அன்பு வாழ்க்கை உயிரியல் வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர்களிடத்தும் அன்பு உண்டு, ஆனால், அது வளச்சியில்லாத அன்பு நிலையில்லாத அன்பு மறக்கக்கூடிய அன்பு, இல்லை! அன்பை உறவை மறந்து மோதிக் கொள்ளக்கூடிய அளவுக்குக் கீழிறங்கக்கூடியது. மானிடச் சாதியினர் ஆறறிவினர். வளர்ந்த அன்பினராய் இருத்தல் மனிதர் கடமை. ஆனால், இன்று அப்படி இருக்கிறதா? மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. இன்று மானிடச் சாதியில் பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை. தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று பழகும் காலத்தில் தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கின்றார்கள். வெறுப்பு வந்தவுடன் நன்மைகளையெல்லாம் மறந்துவிட்டுத் தீமைகளையே-தவறுகளையே தொகுத்துப் பழிசுமத்துகிறார்கள். நேற்று அன்பு, உறவு! இன்று பகை பழிதூற்றல்! இது மானிட இயல் இல்லை; விலங்கியல் வாழ்க்கை! மிகமிக அற்பமானவைக்கும் கூட இன்றைய மானிடச் சாதி அடித்துக்கொண்டு சாகிறது. இன்று வீட்டு வாழ்க்கையிலிருந்து வீதி வாழ்க்கை வரை அன்பு வழியதாக அமையவில்லை. ஒவ்வொருவரும் உலகம் அவர்களுக்காகவே என்று கருதுகின்றனர். ஒவ்வொருவரும் பிறிதொருவரும்-சமுதாயத்திற்குக் கடமைப்பட்டிருப்பதாக நினைப்பதே இல்லை. அதுமட்டுமன்று; கடமைகளின் வழியது உரிமை என்ற அடிப்படை நியதியையே மறந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில் அன்புடையார் போலப் பலர் நடிக்கின்றனர். ஆனால் உண்மையான அன்பு யாரிடமும் இல்லை.
அன்பு உயிரியல்பான உணர்வு; ஒழுக்கம். அன்பு உயிரிடத்தில் பொங்கிவழிந்து மற்ற உயிரினங்களுக்குப் பாய்ந்து வளப்படுத்துவது. இத்தகைய தூய இயற்கையான அன்பை, வாழ்விக்கும் அன்பை-ஊற்றுக் கண்ணைத் தன்னல நயப்புக்களால் ஆணவச் செருக்குக்களால் தூர்த்து விட்டனர் பலர். அதனால், வீட்டிலும் டே... நாட்டிலும் போர்! உலக அரங்கிலும் போர்! ஏன் இந்த அவலநிலை? அன்பு, தன்னயப்புணர்வுகளால், விருப்பு வெறுப்புக்களால் எளிதில் திரிபடையக் கூடியது. இன்று மானிடச் சாதியின் வாழ்க்கை திரிபடைந்து கிடக்கிறது. அன்புக்கு உறவும் இல்லை, பகையும் இல்லை! அன்பு வளரும் நிலையில் கூடுதல், குறைவு அளவுப் பரிமாணங்கள் இருக்கும். ஆனால், அன்பு உலகத்தில் வேறுபாடு இல்லை; வெறுப்பு இல்லை; பகை இல்லை; குற்றம் இல்லை; குறை இல்லை; சிறிய வட்டங்களைக் கடந்து நிலையாக இருப்பதுதான் அன்பு.
அன்புடையராதல் எளிது. அன்புடையராய் விளங்க, உயிர் வாழ்க்கையின் குறிக்கோள், பயன் என்ன? என்று கண்டுகொள்ள வேண்டும். வாழ்க்கையின் குறிக்கோள் குற்றங்களும் குறைகளும் உடையதாயிருக்கும். உயிர், அவற்றினின்றும் விலகி விடுதலை பெற்றுத் தகுதிகளைப் பெறுதலேயாம்! உயிரின் முழு நிலையான வளர்ந்த தகுதி, உயிர் அன்பாயமர்ந்திருத்தலேயாம். அவ்வன்பின்வழி திருவருளைத் துய்த்து இன்புறுதலேயாம். இந்த உயரிய இலட்சியத்தினையடைய அறிவு, ஆள்வினை, பொருள், பதவி எல்லாமே துணையாக அமைவனவேயாம். அன்பே இலட்சியம் என்று உணர்ந்தவுடன் அன்பினைத் தோற்றுவிக்க ஒரு நிலையான கருத்துத் தேவை! கடவுள் ஒருவர்! அவர் உலகத்தின் தந்தை—தாய்! உயிர்க்குலமனைத்தும் அவர்தம் அருளுக்குரியன என்ற அடிப்படைக் கருத்தை எண்ணினால் தோற்றநிலையிலும் வாழ்க்கை நிலையிலும் இறுதி நிலையிலும் ஓர் குலம் என்ற உணர்வு தோன்றும்! அந்த உணர்வு அன்பினைத் தூண்டும்! அன்புக்கு நாடு, இனம், மொழி ஆகிய எந்த வேறுபாடும் இல்லை. வேறுபாடுகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ இருந்தால் அவை அன்பைத் தடைசெய்யும். குற்றம் குறைகள் கூட அன்புக்குத் தடையாக அமையா; அமையக்கூடா. துர்நாற்றமான மலம்கூட முறையாகப் பக்குவப்படுத்தப்பட்டால் நல்ல உரமாகிவிடுகிறதே! மீண்டும் நமக்குரிய உணவைப் பெற அந்த உரம்தானே துணைசெய்கிறது? அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொள்வார் யார்? அழுக்கு வேட்டியின்மீது கோபம் கொண்டு அதைக் கிழிப்பவர்கள் யாரையாவது பார்த்திருக்கிறார்களா? இல்லை! கிழிந்த வேட்டியைக்கூட வேறுவகையாக உபயோகிக்கும் மனிதர்களையே பார்க்கிறோம். அதுபோல் குற்றங் குறைகளுடைய வர்களையும்கூட அன்பாகப் பழகித் திருத்திப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வேற்றுமை பாராட்டக்கூடாது; வெறுப்பும் கொள்ளக் கூடாது. ஒரு குணம் அதனை ஒத்த குணத்தையே எதிர்த் திசையிலும் தோற்றுவித்து வளர்க்கும். ஆனாலும் அன்பு நெஞ்சமுடையார் சிலர். அன்பை ஒளித்து வைத்துக்கொண்டு குற்றம் குறையுடையாரைத் திருத்தி எடுத்து வளர்க்க முயற்சிசெய்வர். இத்தகு சூழ்நிலைகளில் நம்பிக்கையும் நல்லெண்ணமுமே துணைசெய்ய இயலும். அன்பில், உறவில் அவநம்பிக்கையும் பரபரப்பும் கூடவே கூடாது!
உயிர்க்குலத்தை, மானிடச் சாதியை அன்பில் நனைத்து வளர்க்கவே சமயம் தோன்றியது. அன்பே சிவம் என்று திருமந்திரம் கூறும்.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமான தாரும் அறிகிலார்”
(திருமந்திரம் 370)
“அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே”
என்பது திருமுறை.
அன்பில் மனித குலத்தை இணைத்து வளர்த்து வாழ்விக்காதது சமயம் அல்ல. சமய வேற்றுமையால் மனிதகுலத்தை வேறுபடுத்தும் கொள்கைகளைப் பரப்புபவர்கள், பேசுபவர்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். சமயங்கள் நிறுவனங்களாக மாறிய பிறகு, சமய நெறியிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்ற பிறகு தம் தகுதியை இழந்துவிட்டன. அதனால் சமய அடிப்படையில் போர்கள் கூட நடந்தன-நடந்து கொண்டிருக்கின்றன! இது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள சமயத்தை, சமூகத் தீயசக்திகள் பயன்படுத்திக் கொள்வதன் விளைவேயாம். சமயம் காரணமன்று. ஆனால் சமயம், திருத்தும் சக்தியை இழந்துவிட்டது. உப்பே சாரமற்றுப் போனால் அதற்குச் சாரமேற்ற இயலுமா?
அன்பைத்தூண்ட, வளர்க்க, மனிதகுல ஒருமைப்பாட்டைக் காண, வையகத்தைச் செழிக்கச் செய்வதே சமயம். இந்தப் பணியில் ஈடுபடுகின்றவர்களே சமய நெறியாளர்கள்! சமயத் தலைவர்கள்!
“மக்கள் சிந்தனை” -15-10-80
அன்பு, ஆற்றல் உடையது. அன்பினும் உயர் ஆற்றலுடையது வேறு எதுவும் இல்லை. அன்பு ஒரு சிறந்த செயலூக்கி, அன்பு செயலாக்கம் உடையது. அன்பு அளப்பில் ஆண்மை தரத்தக்கது. அன்பு குடத்துள் விளக்கும், உறையுள் வாளும் போலப் பார்க்க முடியாதது என்ற கருத்து உண்மையன்று. அன்பு உணர்வுமயமானது; செயல்களாக உருப்பெறுவது. இன்று ஆற்றல் மிக்க அன்பு எங்குமில்லை. வெறும் ஆசைகளால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆசை, பனிமூட்டம் போன்றது. அன்பு வளம் கொழிக்கும் மழை போன்றது. ஆசை சுரண்டி ஏமாற்றி வாழ்வது. அன்பு உழைத்து வாழ்வது, ஆசை இரந்து உதவிகள் பெற்று வாழ்வது. அன்பு உழைத்து வாழ்வித்து வாழ்வது, ஆசை இகழ்வினைத் தருவது. அன்பு புகழினைத் தருவது. அன்புடையார் நெஞ்சத்தில் வேற்றுமை இல்லை. மருத்துவ நலம் கருதியும் வளர்ப்பு நிலைகள் கருதியும் பாகுபாடுகள் இருக்கலாம். இவை சிலருக்கு நிலையானவையல்ல. எல்லாரும் பெறக் கூடியனவே.
இந்த ஆற்றல் மிக்க அன்பு வாழும் முறையால், துய்க்கப்பெறும் நிலைகளால் வேறு வேறு பெயர் பெறினும் அன்பு அன்பேயாம்; கணவன் மனைவியிடை நிகழ்வது காதல். நண்பர்களிடையில் நிகழ்வது நட்பு. கடவுள் -உயிர்களிடையில் நிகழ்வது பக்தி. இவைகளின் பெயர்கள் வேறு வேறாயினும், துய்க்கும் நிலையால் வேறுபட்டனவே தவிர, ஒன்றில் ஒன்று உயர்ந்தவையுமல்ல; தாழ்ந்தவையுமல்ல. ஒன்றின் வாயிலாகப் பெறுவதைப் பிறிதொன்றின் வாயிலாகப் பெறலாம். ஏன் இறைவனையே கூட-இன்ப அன்பினைக் கூட பக்தியினால்தான் பெற வேண்டும் என்பதல்ல. முன் இரண்டு அன்பு நிலைகளில் செழித்து வளந்தாலே இறைவன் தேடி வந்தருள்வான். ஆனால் அன்புடையராதல் என்பது சொல்லுதற்கு எளிது. வாழ்தல் அருமை. அருமையுடையதெனின் முடியாததா? இல்லை. மனம் வைத்து முயன்றால் எளிது.
கணவன் மனைவியாக வாழ்தல் தூய வாழ்க்கை பெண்மையைப் பழித்தலும் மனையறத்தை இகழ்தலும் தமிழ் வழக்கமல்ல. “துறவியரும் தொழும் பரவை” என்பார் சேக்கிழார். சுந்தரர் பரவையாரிடத்தில் வாழ்ந்த இன்ப வாழ்க்கையை, யோக வாழ்க்கை என்று சிறப்பித்துச் சேக்கிழார்,
“தென்னாவ லூர்மன்னன்
தேவர்பிரான் திருவருளால்
மின்னாரும் கொடிமருங்குல்
பரவையெனும் மெல்லியல்தன்
பொன்னாரும் முலைஓங்கல்
புணர்குவடே சார்வாகப்
பன்னாளும் பயில்யோக
பரம்பரையில் விரும்பினார்”
என்று கூறுவதறிக.
சிறந்த கணவன் மனைவியாக வாழ்தல் என்ற அடிப்படையில் சங்ககாலம் தலைவி என்றே குறிப்பிடுகிறது. திருக்குறள் “வாழ்க்கைத்துணை நலம்” என்று பாராட்டுகிறது. சிறந்த மனையற வாழ்க்கையில் பங்கு பெறுவோர் குறைகள் நீங்கிக் குணங்கள் பெற்று ஆன்மநலம் எய்துதல் இயற்கை. ஒரு பெண், தனக்கு வாய்த்தவன் குறைகளையுடைய கணவனாயினும் அவனை நெறிப்படுத்தி, தெய்வ நிலைக்கு உயர்த்தமுடியும். குறைகளைக் கடந்து அன்பு காட்டுதல், தொண்டுசெய்தல், உதவியாக இருத்தல், கலத்தல் முதலிய நிகழ்வுகளின் மூலம் அற்புதமான மாற்றங்கள் விளைகின்றன. திருநீலகண்டர் மனைவாழ்க்கையும், கண்ணகி மனை வாழ்க்கையும் இதற்கு எடுத்துக்காட்டுகள். “குறையிலாதார் யாருமில்லை” என்பது உலகியல் வரலாறு காட்டும் உண்மை. ஆனால் அன்புக்கு, காதலுக்கு, நட்புக்குக் குறை தடையாக அமையாது; அமையக்கூடாது. அப்படி அமையும்படி அனுமதித்துவிட்டால் குறைகள் பல்கிப் பெருகுமே தவிர, அன்பு வளராது; வாழ்க்கை வளராது; வளமாக அமையாது. அதேபோழ்து குறைகளைப் பொருட்படுத்தாத அன்பை சலுகையாக எடுத்துக்கொண்டு கெட்டுப்போகவும் கூடாது. ஆதலால், அன்பின்மை போலக் காட்டுதல், அன்பு வாழ்க்கைக்குக் களை வெட்டிக் காய்ச்சல் காட்டுவது போலப் பயன்தரும். அதனாலன்றோ காதல் வாழ்கையில் ஊடல் தேவையென்று மனையறம் அறிந்தோர் கூறுகின்றனர். ஊடலும் உணவுக்கு உப்புப் போலச் சுவைமிகுந்து வழங்குவதே என்றனர். ஆதலால் காதல் வாழ்க்கையைச் சிற்றின்பம் என்று சீரழித்துச் சித்திரவதை செய்வது நன்மரபாகாது. காதல் வாழ்க்கையினால் மானிடன் பெறும் ஆற்றலைப் பாரதி,
“காற்றில் ஏறி, அவ்
விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள்
கடைக்கண் பணியிலே!”
(பெண்கள் வாழ்க—8)
என்று பாடுகின்றான். சித்தாந்தச் செந்நெறியும் கூடச் சிவமாகிய பரம்பொருள் சக்தியாகிய அம்மையுடன் சேரும்பொழுதே ஆற்றல்பெற்று ஐந்தொழில் நிகழ்த்துவதாகக் கூறுகிறது. ஏன் சிவம் அடியார்களுக்கு அருளியபோதெல்லாம் அம்மை உடனிருந்து, அருளுதற்குத் துணையாயமைந்ததால் என்பது பெரிய புராணத்தின் விளக்கம்; முடிவு. ஆதலால், மனையறத்தில் நிகழும் காதல், இறைநெறிக்கு முரணாவது இல்லை. இந்த அன்பு தூய்மையானது. காதலர்கள் முழுமையாக வளர்ந்து நன்மக்கட் பேற்றின் மூலம் வையகத்திற்கு-அன்பில் பழுத்து வளர்த்த புகழுடைய வர்களாதலால்-வானோர்க்கும் விருந்தாக அமைகின்றனர்.
துறவு வாழ்க்கையைவிட மனையற வாழ்க்கை எளிதன்று. துறவிகள் கூடக் களத்திலிருந்து விலகிப் பொறிகளை ஒடுக்கிப் பழக்கப்படுத்துதல் மூலம் எளிதில் வெற்றி பெறலாம். ஆனால் மனையறத்தில் இன்பக் களத்திலிருந்து விலகுதல் இல்லை. அங்கேயே இருந்து துய்ப்பதையே இலட்சியமாகக் கொள்ளமால் துய்ப்பிப்பதை இலட்சியமாகக் கொண்டு வாழ்தலுக்கு மிகக் கடுமையான துறவு மனப்பான்மையும் நியாய உணர்வும் தேவை. சுவையாகச் சமைத்தல் வேண்டும். ஆனால் சுவைத்து மகிழ்வதற்காக அல்ல. காதற் கொழுநனை, மக்களை, சுற்றத் தாரை உண்பித்து மகிழ்வதற்காக அழகாக ஒப்பனைகள் தேவை. ஆனால் தான் மகிழ, பெருமைப்பட அல்ல. காதலன் மகிழ்ந்து வாழ! காதலன் கண்டு மகிழ்ந்து வாழ்தலுக்கே பெண் அழகாக இருக்கிறாள்; இருக்க விரும்புகிறாள் என்பதை, காரைக்காலம்மையார் உணர்த்துகின்றார். இது போலவே அடலேறாகிய ஆடவருக்கும் காதலியின் மகிழ்வே மகிழ்வு. அவன் அவளுடைமை. இத்தகைய ஊன், உயிர், அறிவு, உணர்வு கலந்த மனையற வாழ்க்கையே மங்கலமாம். இங்ஙனம் மங்கலமாக அமைந்த மனையற வாழ்க்கையிலேயே நன்மக்கள் தோன்றுவர். இத்தகு மனைகள் திருக் கோயில்கள், திருமடங்கள் போல்வன; தூய்மையானவை; இறைவன் மகிழ்ந்து தேடிவரும் இடங்கள் இத்தகு மனையற வாழ்க்கை உயர் சமய வாழ்க்கையே; மனைகள் கோயில்களாக மாறினால் கோயில்கள் கோயில்களாக விளங்கும்.
— ‘மக்கள் சிந்தனை’—1-11-80
மனிதன் கூடிவாழப் பிறந்தவன். மனிதன், சமுதாய வாழ்க்கைக்கு உரியவன்; கடமைப்பட்டவன். ஏன்? தோற்றத்தால் தனி மனிதனாயினும் அவனைப் படைத்து உருவாக்கி உலாவர விட்டிருப்பதே சமுதாயம் என்ற அமைப்புத்தான்; தனிமனிதனா? சமுதாயமா? என்ற கேள்வி பிறத்தல் கூடாது. பிறந்துவிட்டால் சமுதாயம் என்பதே விடை சமயம், அரசியல் ஆகியவற்றின் தோற்றக்களன் சமுதாயமே! இவற்றின் நோக்கமும் சமுதாயத்தைக் கட்டமைத்துக் காப்பதே.
சமுதாயம் என்ற அமைப்பில் எல்லாரும் இருப்பர். கற்றோர் இருப்பர்; கல்லாதவரும் இருப்பர். உடையவரும் இருப்பர்; இல்லாதவரும் இருப்பர். வலியுடையோரும் இருப்பர்; வலிமையற்றோரும் இருப்பர்; ஆனால் சமுதாயக் கட்டமைப்பிற்குள் கரைந்து வேறுபாடற்ற ஒன்றாக இருப்பது சமுதாய அமைப்பின் இலக்கணம். அப்படியானால் சமுதாயம் என்பது ஒரு அச்சுவார்ப்பா? இல்லை. அச்சுவார்ப்புக்கு உயிர்ப்பு ஏது? சிந்தனை ஏது: செயல் ஏது? உணர்வு எது? சமுதாயம் என்பது சிந்தனையும் செயல் திறனும் உடைய உணர்வுகளால் பொலிவடைந்து ஓயாது இயங்கும் ஓர் இயக்கம். ஆங்கு வேற்றுமைகள் இருக்கும். ஆனாலும் வேற்றுமைகளை ஒருமை, ஆட்கொண்டுவிட்டது. பொதுமை தனிமையை எடுத்துச் செரித்துக்கொண்டு விட்டது. ஆங்கு ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்று வாழ்கின்றனர். இத்தகைய சமுதாய அமைப்பே சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு. சமயம் மனிதகுலத்தைச் சமைப்பது. “சேரவாரும் செகத்திரே” என்பது சமயத்தின் அழைப்பு! அப்பரடிகள் திருக்கோயில் உழவாரப் பணிமட்டும் செய்யவில்லை, “பார் வாழத் திருவிதிப் பணி"யும் செய்தார் என்பறிக சிவநெறியில் ஒரு வாழ்த்துப் பாடல் உண்டு. அந்தப் பாடல் கச்சியப்பர் அருளிச் செய்தது. அப்பாடலின் அமைப்பு முறையே, சமயம் ஒரு சமுதாய அமைப்பைப் பொதுநலம் செறிந்த சமுதாய அமைப்புப் படைக்கும் நோக்கும் உடையது என்பதை விளக்குவதாய் அமைந்திருக்கிறது.
“வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்க ளோங்க!
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்!”
என்பது அந்தப் பாடல்.
மண்ணின் வளத்திற்கும் உயிர்கள் உண்டு களித்து மகிழற்கும் பொருள்கள் தோற்றத்திற்கும் இன்றியமையாததாகிய மழை பெய்யவேண்டும். மழை பெய்தால் போதுமா? வளம்பல கொழிக்கவேண்டும். வான் மழை பெய்தாலும் வளம்பல கொழித்தாலும் முறையான அரசு இல்லையாயின் வல்லார்கள் உண்டு கொழுப்பர். மெலியார்கள் வாடுவர். ஆதலால் வல்லார்கள்பால் சாராத முறையான பங்கீட்டினைச் செய்யும் அரசு தேவை. உயிர்கள் யாவும் யாதொரு குறையுமில்லாது வாழவேண்டும். “குறைவிலாது உயிர்கள் வாழ்க!” என்னே இலட்சியம்! உயிர்கள் யாவும் பெறுவனவெல்லாம் துய்த்து யாதொரு குறையும் இன்றி வாழ வேண்டும். இந்தச் சாதனைகள் நடந்தால்தான் அறங்கள் நடைபெறும்; தவம் இயற்றப்பெறும்; மனித குலத்தில் இன்றியமையாத நீதியும் நிலவும். இது கச்சியப்பர் காட்டும் சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு.
இத்தகைய சமுதாய அமைப்பைக் காணச் சமயம் ஈடுபட்டால்தான் அது சமயம்; வாழ்விக்கும் சமயம் ! இல்லையானால் சமயம் ஒரு பிழைப்பு. அது காலப் போக்கில் வரலாற்றுப் புதைமணலில் புதையுண்டு போகும். புதிய சமயநெறியைப் புத்துலகம் படைக்கும்.
—‘மக்கள் சிந்தனை’ 15-11-80
இந்தியா பரப்பளவில் ஒரு பெரிய நாடு. பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ந்து வரும் ஒரு நாடு. இந்தியாவின் பழமை, பரப்பளவு இவைகளின் அளவுக்கு வேற்றுமைகளும் உண்டு. இவ்வேற்றுமைகளில் பல, காலத்தின் தேவையாகத் தோன்றியவை. அதாவது இமயத்தின் அடிவாரத்தில் வாழ்வோனுக்கும் தென்குமரிக் கடலோரத்தில் வாழ்வோனுக்கும் எளிதில் உறவு ஏற்படவாய்ப்பில்லாமல் காலமும் தொலைவும் பிரித்து வைத்தமையே வேற்றுமைகளுக்கு மிகுதியும் காரணம். ஆதலால் இந்திய மக்களிடையேயுள்ள வேற்றுமைகள் பல இயல்பானவை; சில வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டவை. சில வேற்றுமைகளை எதிர்த்து இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமற் கூடப் போராடியிருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர்களை நினைவில் கொண்டால் இந்திய வேற்றுமைகளை எளிதில் நீக்கலாம். வேற்றுமைகளை எளிதில் நீக்க இயலாமற் போனாலும் விழுமிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். இதற்கு இந்திய நாட்டின் பல்வேறு நாகரிகங்களை, சமயக்கொள்கைகளை, மொழி இலக்கியங்களைச் சமன்செய்து சீர் தூக்கிப் பாராட்டும் மனப்பான்மை வளரவேண்டும். எப்பொழுதுமே, இது உயர்ந்தது-அது தாழ்ந்தது என்ற விவாதத்தை ஆய்வு மனப்பான்மையின்றி வெறிக் கூச்சலாக்குபவர்கள் கலகத்தையே வளர்ப்பார்கள். எந்த ஒன்றின் தனித் தன்மையையும் அறிந்து பாராட்டிப் பேணுதல் சான்றோர்க்கு அழகு-கடமை. குறிப்பாக இன்று விவாதத்திற்கு ஆளாகியுள்ள இந்துமதத்தை ஆராய்வோம்.
உண்மையில் இந்துமதம் என ஒன்று இல்லை. பொதுவாக உலகச் சமயங்கள் வழிபடும் கடவுளின் பெயரால் விளங்கும் அல்லது அம்மதங்களைக் கண்ட ஞானிகள் பெயரால் விளங்கும். இந்து மதம் என்ற பெயர் இவ்விரண்டு அடிப்படையிலும் இல்லை. ஒரு சிலர் இந்து மதம் என்ற பெயர் சிந்து என்ற நதி அடிப்படையில் தோன்றிக் காலப்போக்கில் இந்து என்ற மருவிற்று என்பார்கள். இன்று சிந்து நதிக்கரையை இந்து சமயத்தைச் சேர்ந்தவர் யாரும் தாயகமாகக் கொண்டு இல்லை. வேறு சில அறிஞர்கள், அந்நியர்கள் இந்தியாவில் தோன்றிய சமயங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி இந்து மதம் என்று பெயர் சூட்டியதாகக் கூறுவர். எது எப்படியிருப்பினும் இந்துமதம் என்ற ஒன்று வேதம், சாத்திரம், ஆகமம், திருமுறை திவ்வியப்பிரபந்தங்கள் ஆகிய எந்த நூல்களிலும் இல்லை. இந்து மத வரிசைப் பட்டியலில் இன்று ஜைனமதம்கூட சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்து மதம் என்ற வெறும் பெயரில் ஒரு சமயத்தை உருவாக்குவதும் அதற்கு இதுதான் கொள்கையென்று நிர்ணயிப்பதும், அந்த மதத்திற்கு இன்னார்தான் தலைவர் என்று உரிமை கொண்டாடிக் கொள்வதும் வரலாற்றின் அடிப்படையில் இல்லாத ஒன்று. தத்துவங்கள் அடிப்படையிலும் ஏற்புடையதன்று.
இன்று காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முயற்சியைக் கடுமையாகச் செய்துவருகிறார்கள். ஆனால், கொள்கையளவில் வேற்றுமையில்லாத சிருங்கேரி பீடம், “காஞ்சி காமகோடி பீடம் ஆதிசங்கரர் நியமித்த நான்கில் ஒன்றில்லை” என்ற நூல் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இது அவர்களுக்குள் இருக்கும் சண்டை மற்றவர்கள் அந்தச் சண்டையைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிசெய்வதோ விமர்ச்சிப்பதோ நாகரிகம் இல்லை. ஆதலால் அதுபற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. இந்து மதம் என்பது சைவம் வைணவம் என்னும் இரண்டு பெரும் பிரிவை உள்ளடக்கியதாக வழங்கப்பெறுகிறது. இந்த இரண்டு பெரும் பிரிவுகளின் தனித்தன்மையை, இந்து மதம் என்ற பேரமைப்பை விரும்புகிறவர்கள் போற்றிப் பாதுகாப்பதாகத் தெரியவில்லை. வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தனித் தன்மையைத் தொடர்ந்து பேணிக்காத்து வருகிறார்கள். ஆனால் சைவ சித்தாந்தச் செந்நெறிக் கொள்கைகளை திருமுறைகள் வகுத்துத் தந்த கோட்பாடுகளை வைணவர்களைப் போலப் பாதுகாக்கத் தவறியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சைவ சம்யத்தைச் சார்ந்தவனைக் கேட்டால், தான் வழிபடும் கடவுள் சிவன் என்று கூறுவான். வைணவ சமயத்தைச் சார்ந்தவனைக் கேட்டால் திருமால் என்று கூறுவான்.
ஆனால், சைவனாகவோ, வைணவனாகவோ, வாழாமல் இந்துவாக வாழ்பவனிடம் அவன் வழிபடும் கடவுள் பேர் கேட்டால் ஒரு கடவுள் பெயரைச் சொல்ல அவனுக்குத்தெரியாது. பல கடவுள் வழிபாட்டுணர்ச்சியே இந்து என்ற உணர்ச்சியிலிருந்துதான் வருகிறது. ஒரு சைவனை நோக்கி உன் ஆச்சாரியர் யார்? என்று கேட்டால் மெய்கண்டார் என்று சொல்லுவான். அதுபோலவே ஒரு வைணவனைக் கேட்டால் இராமாநுசர் என்று சொல்லுவான். இந்து சமயம் என்று கூறுபவர்களைக் கேட்டால் ஆதிசங்கரர் என்று சொல்ல வைக்கிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த ஞானிகள் மட்டும் அல்ல, உலக அரங்கில் தோன்றிய எந்தவொரு ஞானியையும் நாம் போற்றக் கடமைப்பட்டுள்ளோம். ஞானத்திற்கு நாட்டு எல்லையும் மொழி எல்லையும் கால எல்லையும் கிடையாது. வரம்புகளைக் கடந்ததுதான் ஞானம். ஆனால் உரிய வளர்ச்சியடைகின்ற வரையில் எது சிறந்தது என்று அனுபவத்தில் வைத்து அறியத்தக்க வகையில் உலகத்தின் தத்துவ நெறிகள் எல்லாம் உலகத்தின் வற்றாத புனலுடைய பல ஆறுகளைப் போலச் செழித்து வளரவேண்டும். அவைகளின் அனுபவங்கள் உலக மக்களுக்கெல்லாம் உரிமையாக வேண்டும்.
இதில் நமக்கு இரண்டு விதமான கருத்து இல்லை. ஆயினும் சிந்தையில் மலர்ந்து நிற்க வேண்டிய ஒரு நெறியை, ஆதிக்கத்தின் மூலமும் மற்ற நெறிகளின் குரல்வளைகளை நெரிப்பதன் மூலமும் ஒன்றை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கும் போதுதான் சிக்கல் தோன்றுகிறது. 1955-இல் நாம் மலேயா சுற்றுப்பயணத்திலிருந்தபொழுது “நாம் ஓர் இந்து அல்ல” என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருந்தோம். அச்செய்தியை அறிந்த சென்னை இந்துபத்திரிகை நிர்வாகிககள் அவர்களுடைய மலேயா நிருபருக்குத் தந்திச் செய்தி அனுப்பி, மீண்டும் பேட்டியில் நம்மை விளக்கம் கேட்டார்கள். மீண்டும் நாம் இந்து என்ற பெயரில் நமக்கு வெறுப்பில்லையென்றும் நாம் உண்மையில் மேற்கொண்ட வழி சைவசித்தாந்தச் செந்நெறியே என்றும் தெளிவாக விளக்கினோம். ஆனால் 1969 டிசம்பரில் தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைமையை ஏற்றுக் கொண்ட பொழுது நாம் இந்தத் தீவிரக் கொள்கையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்து சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடலானோம். ஆனால் நம்முடைய சிந்தனையும் செயலும், ஊற்றாகவுள்ள சைவசித்தாந்தச் செந்நெறிக் கொள்கையைப் பிரதிபலிப்பனவாக இருந்தன. அதாவது தீண்டாமை இல்லை. சாதிவேற்றுமை இல்லை. எல்லாருக்கும் எல்லாம் வழங்கும் சமவாய்ப்பே சமய நெறியின் அறம் என்ற திசையில் நம்முடைய பணிகள் தொடர்ந்தன. இக்கொள்கை வளர்ச்சியின் பயனாகத் தமிழ் வடிபாட்டியக்கம் தீவிர மடைந்தது; சாதி வேறுபாடற்ற முறையில் அருச்சகர்களைப் பயிற்சிகொடுத்து நியமிக்கலாம் என்ற கொள்கை உருக்கொண்டது. இக்கொள்கைகள் சித்தாந்தச் செந்நெறிக்கு முரண்பாடானவையல்ல என்பது நமது கருத்து. ஆனால் இந்து சமயத்திற்கு முரண்பாடுடையனவாக காஞ்சி காமகோடி பீடம் நினைத்தார். நம்மையும் அழைத்து விவாதித்தார். கொள்கைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்து சமயம் என்ற பெயரில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள விரும்பிய அவர் பேரவையின் வளர்ச்சிக்கே இடையூறாக அமைந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மீண்டும் நாம் பழைய தீவிரக் கொள்கைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியது. ஆனாலும் நம்முடைய தனிப்பட்ட சமய மொழிக் கொள்கைகள் இந்தியன் என்ற கொள்கைக்கு மாறாக ஒருபோதும் அமையவில்லை. இனி மேலும் அமையாது. இந்தியன் என்ற நாட்டு அடிப்படையின்றி இனம் மொழி, மத அடிப்படையில் ஒருமைப்பாடுடையவராகச் செய்தல் அரிது என்பதே நமது கருத்து.
முதலில் இன்றுள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டுமானால் இந்து மதம் என்ற அமைப்புக்குள் மதத் தலைவர்களுக்குள்ள ஆதிபத்திய உணர்வு நீங்கி அவர்களின் தனித் தன்மைக்கு இடையூறில்லாமல் ஒருங்கிணைக்க முயற்சி செய்யவேண்டும். இது அவ்வளவு எளிதாக நடைபெறும் என்று நாம் கருதவில்லை. ஏனெனில் பார்ப்பனர்கள் பார்ப்பனர் சார்புடையவர்கள் ஆகியோர் தங்களைத் தனித்து ஒதுக்கி அமைத்துக்கொள்வதற்கே முயற்சி செய்கின்றனர். தங்களோடு முற்றிலும் உடன்பட்டுவராதவர்களை ஒதுக்கவே முயல்கின்றனர். நாம் பேரவைத் தலைவராக இருந்தபொழுது பேரவையின் கொள்கைகளில் முற்றாக உடன்பாடில்லாத இந்து சமய அமைப்புகளாயிருந்த பல்வேறு அமைப்புக்களின் பேராளர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்தோம். பொதுப் பிரச்சனைகளில் அவர்களை அடிக்கடி கூட்டி ஆலோசனைகள் கேட்டோம். அவர்களுடைய இயக்கங்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்தோம். ஆனால் பேரவைக்கு இடுக்கண் ஏற்பட்டபோது அந்த இயக்கங்களில் ஒன்றுகூட வாய்திறக்கவில்லை. இன்றுள்ள சூழ்நிலையிலும்கூட இந்த மதமாற்றச் சிக்கல்களில் ஈடுபட்டும் எவரையும்விட நாம் காலத்தில் அக்கறை காட்டியிருக்கிறோம். திருநெல்வேலி - நைனாகரம் சிற்றூரில் முஸ்லீம் மத மாற்றத்தை நேரில் சென்று தடுக்க முயற்சி செய்தோம். ஓரளவு வெற்றி கிடைத்தது. போடிநாயக்கனூரில் - லெட்சுமிபுரம் முஸ்லீம் மதமாற்றத்தைத் தடுத்து நாம் நிறுத்தியதோடு ஆங்கு வழிபாட்டுக் கோயில் இல்லாமலிருந்ததால் நாம் ஆதீனத்தின் சார்பில் நிதி உதவி செய்து கோயில் கட்டித் தரவும் செய்தோம்.
இராமநாதபுரம் மாவட்டப் பிரச்சனையிலும் இதே நிலைதான். காஞ்சிபுரம் புதுப்பெரியவாள் கேட்டுக் கொண்டதன் பேரில் குன்றக்குடி அடிகளார் சென்றார் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. காஞ்சிபுரம் புதுப் பெரியவாள் கேட்டுக்கொண்டதன் பேரில் நாம் செல்வதில் குறையிருப்பதாக நாம் நினைக்கவில்லை. ஆனால் உண்மை அதுவன்று. ஆக, ஏதோ இந்து சமயத்தில் அவர்களுக்கு மட்டுமே அக்கறையிருப்பது போலக் காட்டிக்கொள்ளும் போது கொஞ்சம் மனச் சங்கடம் ஏற்படுகிறது. வளர்ந்த மதத் தலைவரிகளிடையேகூட பரஸ்பரம் நல்லெண்ணத்தையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளாமல் இந்து சமூகத்திற்கு விளைந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது எளிதல்ல என்று காண்கிறோம்.
‘மக்கள் சிந்தனை’ —15.7.81
நம் நாட்டில் இங்கும் அங்கும் பரவலாக இந்து அரிசனச் சகோதரர்கள் மதம் மாறுவதற்குரிய அடிப்படைக் காரணங்களைக் கண்டு ஆராயவேண்டும். அங்ஙனம் கண்டு ஆராயாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் “கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக மதம் மாறுகிறார்கள்; பணத்தாசையால் மதம் மாறுகிறார்கள்” என்றெல்லாம் பழி தூற்றுவது அறமன்று. நம்மைப் பொறுத்தவரையில் காரணங்கள் இல்லையென்று கருதவில்லை. ஆனால் மதம் மாறிச் செல்லுகிற அளவுக்குப் போதிய காரணங்கள் இல்லையென்றும் கருதுகின்றோம்.
தீண்டாமை என்பது இந்து நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. இந்து மதத்தின் குறைகளில் ஒன்று, தமிழ்நாட்டுச் சமய நெறிகளாகிய சைவம், வைணவம் இந்து மத அமைப்பில் வந்துள்ள பார்ப்பனியத்தோடு கூட்டுச் சேராம லிருந்தால் நமது சமய நெறிகளில் தீண்டாமை பற்றியிராது. பார்ப்பனியத்தின் வழித்தோன்றிய சாதி வேற்றுமை கற்பிக்கும் நெறிகளோடும் தீண்டாமையோடும் நமது சமய நெறி தொடக்க காலத்திருந்தே எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது.
உலகப் பொது மறையாகிய திருக்குறள் ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று கூறியிருப்பதறிக. நமது ஞானாசிரியராகிய அப்பரடிகள்,
“சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங் கொண்டேன் செய்வீர்”
என்றும்,
“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தகுவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யர்ம்வணங்கும் கடவு ளாரே”
என்றும்,
சாதி வெறியர்களோடு போராடியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதுபோலவே திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும் “சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை” என்றருளிச் செய்திருப்பதையும் அறிக.
இவையெல்லாம் சாதிமுறைகளைக் கற்பித்துச் சமுதாயக் கேடுசெய்யும் சிறு நெறியை எதிர்த்தெழுந்த கிளர்ச்சிகள். ஆயினும் இந்தக் கருத்துக்கள் சமுதாயத்தில் முழுமையாக வெற்றிபெறவில்லை என்பது உண்மை. ஆயினும், தீண்டாமையற்ற-சாதி வேற்றுமைகளற்ற ஒரு சமுதாய அமைப்புக்குச் சமுதாயத்தை உந்திச் செலுத்தி அத்திசையில் நகர்த்தின என்பதை யாரும் மறுத்தற்கியலாது. சமுதாயத்தைத் தனித்தனியே பிரித்து அவரவர்க்கென்று தனித்தனி நலன்கலை ஒதுக்கீடு செய்து பகையுணர்வை முட்டி மோதச் செய்த வகையில் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் தன்னல நயப்பைக் களமாகக் கொண்டு வெற்று பெற்றுவிட்டன-வேரூன்றிவிட்டன. இதனை எதிர்த்துத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. பஞ்சாபில் குருநானக்கும், வங்கத்தில் விவேகானந்தரும் கருநாடகத்தில் பசவேசரும், தமிழகத்தில் வள்ளலாரும் சமய நெறிக்களத்தில் நின்று போராடி யிருக்கிறார்கள். அரசியல்-சமுதாயத் துறைகளில் தயானந்த சரசுவதி, காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், தலைவர் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரும், கவிஞர்களில் தேசியகவி பாரதியதும், பாவேந்தன் பாரதிதாசனும் அரும்பணி செய்திருக்கிறார்கள். இத்தகையோருடைய அரிய பணிகளின் காரணமாகத் தீண்டாமையும் சாதி வேற்றுமைகளும் கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கின்றன. சாதி வேறுபாடுகளற்ற சமுதாயத்தை நோக்கிச் சமுதாயம் மெள்ள நகர்ந்து வருகிறது என்பதை அன்புகூர்ந்து இந்து அரிசனச் சகோதரர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
சமுதாய மாற்றங்கள் எப்பொழுதும் எண்ணிப் பார்க்கிற அளவுக்கு நடந்து விடுவதில்லை. அது மனித குல வரலாற்றுக்கு இருக்கிற குறை. ஆதலால் இந்து அரிசன சகோதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமைகளைவிட இன்று சமூக அந்தஸ்திலும் பிற துறைகளிலும் உயர்ந்திருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்.
இங்ஙனம் கூறுவதால் தீண்டாமை முற்றாக ஒழிந்துவிட்டதாகவோ சாதி வேற்றுமை தீங்கிவிட்டதாகவோ நாம் எண்ணுவதாகப் பொருள் கொள்ளக் கூடாது, இத் துறையில் நாம் சாதிக்கவேண்டியன நிறையவே இருக்கின்றன. அதற்குரிய பணிகளில் நாம் தொடர்ந்தே ஈடுபட்டு வந்துள்ளோம். இனிமேலும் ஈடுபடுவோம். ஆதலால் மத மாற்றம் குறித்து அவர்கள் எண்ணுவதையே கைவிடுவதுதான் சரியான நெறி.
அண்மையில் மீனாட்சிபுரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மத மாற்றங்களுக்குரிய காரணங்களை ஆராய்ந்தபொழுது, சாதி வேற்றுமைகள் காரணம் என்பதை விட அரசுத்துறையில் காவல் துறையில் ஈடுபட்டிருந்த சிலர் அத்துமீறி நடந்ததே காரணம் என்பது புலப்படுகிறது. தற்செயலாக வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் குறிப்பிட்ட சாதியினரைச் சார்ந்தவர்களாக இருந்துவிட்டால் இந்து அரிசனச் சகோதரர்கள் அதைச் சாதிக் கலவரம் என்று கருதுகின்றனர். பத்திரிகைகளும் அதுபோலவே செய்திகளை வெளியிடுகின்றன. இது தவறு. பொதுவாக அண்மைக் காலமாக காவல்துறை நாடு தழுவிய முறையில் வரம்பிகந்த செயல்களில் ஈடுபடுவதாகக் காண்கிறோம். பகல்பூரில் இளைஞர்களின் கண்ணைப் பறித்ததைவிடக் கொடுமையான செயல் ஒன்று இந்த நாட்டில் நடந்ததுண்டா? ஆதலால், அரசை-அரசின் தவறான செயல்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அந்தக் காவலர்கள் எந்தச் சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்களோ அந்தச் சாதியை அல்லது அந்த மதத்தை எதிர்த்துப் போராடுவது நெறியன்று. ஆதலால் கட்டுங்கடங்காமல் செல்லும் காவல் துறையினரின் அத்து மீறிய செயல்களுக்குக் கண்டனம் தெரிவிப்போம். குடி தழுவிய ஆட்சியைக் காணும் முயற்சியில் ஈடுபடுவோம்.
தாழ்த்தப்பட்டவர்கள் முஸ்லிம்களாக மாறி விடுவதால், காவலர்களின் கொடுமை நீங்கிவிடுமா? அல்லது உரிமைகள் தாம் வந்துவிடப் போகின்றனவா? ஒருபொழுதும் இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதைப்போல எல்லாச் சமயங்களிலும் எல்லா இனங்களிலும் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆதிக்கப் போட்டிகள் இருக்கத்தான் செய்கின்றன. மனிதருக்குள்ளே கருத்துரிமைகள் சனநாயக உரிமைகள் ஆகியவற்றை நமக்கு அண்டையிலிருக்கிற முஸ்லிம் நாடாகிய பாகிஸ்தானில்கூடப் பார்க்க முடியவில்லையே! அந்த நாட்டின் பிரதமாரக்த் திகழ்ந்த ஒருவரைக் கூட தூக்கில் தூக்குகிறார்கள்! இவற்றையெல்லாம் நாம் சிந்திக்கவேண்டாமா? “சொர்க்கத்தில் அடிமையாய் வாழ்வதைவிட நரகத்தில் சுதந்தரமாய் வாழ விரும்புகிறேன்” என்னும் வாக்கு நினைத்தற்குரியது.
இந்தக் கலவரங்களின் பொழுது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவாக- பாதுகாப்பாக இருந்தார்களா? அல்லது தாக்கும்பொழுது தாக்கியவர்களுக்கு ஒத்துழைக்காமல் இருந்தார்களா? இரண்டும் இல்லை. ஆதலால், ஏதோ ஒரு கோபத்தை மனத்தில் வைத்துக் கொண்டு மதம் மாறும் முடிவை விரைந்து எடுப்பது இந்து அரிசன சகோதரர்களுக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல.
மேலும் இந்து அரிசனச் சகோதரர்கள் தாம் பெற்றுவரும் அரசுச் சலுகைகளை இழக்க நேரிடுவதன் மூலம் அவர்களின் பிற்கால வாழ்வு பாதிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும், அடுத்து, இந்த மதமாற்றத்தைக் குறித்து மற்றவர்கள் குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அரசினர் என்ன செய்யவேண்டும் ? முதலாவதாக ஆத்திர அவசரங்களில் மதம் மாறிச் செல்லும் உண்ர்ச்சிகளுக்கு அளவு கடந்த முக்கியத்துவத்தைக் கொடுத்து அதைக் கவனத்திற்குரியதாக்கி அஃது ஓர் அலையாக வளர்வதைத் தவிர்க்கவேண்டும். இப்படிச் சொல்வதால் மதம் மாறிச் செல்வதைப்பற்றி நமக்குக் கவலையில்லை என்று பொருளில்லை. நம்முடன் பிறந்த இந்து அரிசனச் சகோதரனை நாம் எளிதில் இழக்க தயாராக இல்லை. ஆயினும் மதம் மாறிச் செல்லும் நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்தி, அங்கு முற்றுகையிடுவது விரும்பத்தக்கதல்ல. அதற்கு மாறாக மதமாற்றத்துக்குச் செல்லுமளவுக்கு இந்து அரிசனங்களைத் துண்டும் காரணங்களை மாற்ற உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதனை விடுத்து மாநாடுகள் நடத்துதல் மாநாடுகளில் இன வகுப்புக் கலவரங்கள் ஏற்படத்தக்க வகையில் கடுமையாகப் பேசுதல், முஸ்லிம் சமுகத்தினரைப் போருக்கு அழைத்தல் ஆகியவை உணர்ச்சிகளைத் தூண்டப் பயன்படலாம். ஆனால் உருப்படியான செயலைத் தூண்டாது; பயன்தராது;
இந்து சமூகத்தின் எல்லாச் சமூகப் பிரிவினரும் சாதி வேற்றுமைகளை அடியோடு அகற்ற- மறந்துவிட, முன்வர வேண்டும். சாதாரணமாகப் பிரிவினைகள் வழிப்பட்ட சமூக அமைப்பில் நன்மை தீமைகள் நிகழும்பொழுது, அவற்றிற்குக் காரணமானவர்களின் தகுதி, திறமை, வளர்ச்சி ஆகியன கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறாமல் சாதி உணர்வே முன் தலைதூக்கியது. இது சமுதாய அமைப்பிற்கு நன்றன்று. குறிப்பாகத் தீண்டாமையை அறவே விலக்க உறுதியெடுக்கவேண்டும். சமுதாய அமைப்பில் தீண்டாமை என்பது ஒரு கொடிய புற்றுநோய். இந்நோயால் சமூக அமைப்பில் இருபால் தழுவிய நல்லெண்ணங்கள், நம்பிக்கைகள் கெட்டுப்போகின்றன. அவ்வழி ஆக்கமும் ஆற்றலும் அழிகின்றன. இதனை நன்குணர்ந்து தம்முடைய இந்து சமூகத்தினர் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் அகத்திலும் புறத்திலும் தீண்டாமையை அறவே அகற்றவேண்டும்.
இந்த மதத் தலைவர்கள் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் ஆகியவை குறித்துத் தெளிவான இனம் காட்டிக் கொள்ளவேண்டும். மழுப்பல்கள் பயணதரா. சாதி வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பாராட்டக் கூடாது என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத கருத்துக்கள். மதத்துறையில் எல்லா மட்டங்களிலும் தீண்டாமையையும், சாதி வேற்றுமைகளையும் நீக்க மதத் துறையிலுள்ள பணிகளில் பதவிகளில்-எல்லாரும் எல்லா வாய்ப்புக்களையும் பெற அனுமதிப்பார்களா? இவர்கள் முகத்தில் பிறந்தவர்கள்; அவர்கள் காலில் பிறந்தவர்கள், இவர்கள் கடவுளாலேயே சிருட்டிக்கப்பெற்றவர்கள் என்றெல்லாம் உள்ள கருத்துக்கள் புறக்கணிக்கப்படுமா? இந்த வகையில் மதத் தலைவர்கள் தெளிவான கொள்கையை விளக்கம் செய்வதுடன் செயல்முறைகளிலும் காட்ட முன்வர வேண்டும்.
மத நிறுவனங்கள் தமது மக்களுடன் ஆன்மீகத் தொடர்பை இடையறாது இயக்கி உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று இந்தப் பணியை எந்த மத நிறுவனமும் செய்யவில்லை. அதற்குரிய செயல் திட்டமும் இல்லை. ஒருசில நிறுவனங்கள் செய்வதுபோலத் தோன்றுகிறது. அது பெரும்பாலும் மேட்டுக் குடியினர், வசதியும் வாய்ப்புமுள்ளாரிடத்தில் கொண்டுள்ள உறவே தவிர, சாதாரண மக்களிடத்தில் கொண்டுள்ள உறவல்ல, நமது நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இத்துறையில் நமக்கு விருப்பமும் முயற்சியும் இருந்தாலும் அது முழுமை அடையவில்லை. ஆனால் அது கொண்டுள்ள உறவு சாதாரண மக்களிடத்தில் தானே தவிர மேட்டுக்குடியினரிடமல்ல; வசதி வாய்ப்புடையோரிடத்துமல்ல, இன்றுள்ள நிலையில் சாதாரண மக்களிடம் நெருங்கிய உறவுகளை, தொடர்புகளைத் தோற்றுவித்துக் கண்காணித்துப் பேணி வளர்த்துக்கொள்ள எந்தவொரு மத நிறுவனத்தாலும் தனித்தனியே இயலாது. அதனால் திருமடங்களின் தலைவர்கள் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆகியவர்களின் ஒருங்கிணைப்புக் கொண்ட பேரவை தோன்றியது. ஆனால் அதன் வளர்ச்சியில் போதிய ஆர்வம் காட்ட மதத் தலைவர்கள் முன்வரவில்லை. ஆயினும் மக்கள் அளவுகடந்த ஆர்வம் காட்டினார்கள். இயக்கம் வளர்ந்தது. ஆனால் சாதி வெறி பிடித்தவர்கள் நெருக்கடி காலத்தில் மறைவாகச் சதிசெய்து அதை முடக்கிவிட்டார்கள். அதன்பின் பேரவை சரியாக வராது என்ற எண்ணத்துடனேயே உழுவலன்பிலும் கெழுதகை நட்பிலும் நமக்குச் சிறந்தவர்களாக விளங்கும் பேரூராதினத் தலைவர் சிரவையாதீனத் தலைவர் குன்னூர் சற்குரு ஆசிரமத் தலைவர் ஆகியோரையும் இன்னும் சிலரையும் கொண்டு திருமடங்கள் அவையம் காணப் பெற்றது. இந்த அமைப்பைக் கண்ட நோக்கத்திற்கிசைய அதை இயக்க முடியவில்லை. அண்மைக் காலமாகக் குன்னூரடிகள் இயக்கும் முயற்சியில் துடிப்போடு ஈடுபட்டுள்ளார்கள். ஆயினும் செய்யவேண்டிய பணிகளை நோக்கின் இது போதாது. திருமடங்கள் அவையத்தைத் திறம்பட இயக்க நம்முடைய கெழுதகை அடிகள் பெருமக்கள் தியாகம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. இங்ஙனம் நாம் சொல்வதற்குக் காரணம் அவர்களின் பணிச்சுமையே அவையும் செயல்படாமல் போனதற்குக் காரணமாகும் என்பதற்காகவே! இனியும் பணிச்சுமை என்று கருதி வாளாஇருத்தல் இயலாது. பேரவையையும் புதுப்பித்து மக்கள் இயக்கமாக நடத்தவேண்டும்.
பேரவையைப் புதுப்பித்து இயக்கத் தருமபுரம் ஆதீனம் காட்டும் ஆர்வம் வரவேற்கத்தக்கது! பாராட்டத்தக்கது; திருமடங்கள் அவையம் முழுநேரத் தொண்டர் அணி அமைத்து ஆழமான-ஆக்கரீதியான நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பேரவை ஒரு பிரச்சார நிறுவனமாக வெளியீட்டு நிறுவனமாக இயங்கவேண்டும். இப்படி அமைப்பது சாலும் என்று நம்புகிறோம்.
இந்து அறநிலைய ஆட்சித்துறை மக்களுடன் தொடர்புடையதாகவும் மதத் தலைவர் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட குழுவின் ஆலோனையிலும் இயங்கும்படியாகவும் செய்தல் உடனடியாக அவசரத் தேவை. இந்து சமூகத்தில் நலிந்தவர்களின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடக்கூடிய இந்த சமுக மேம்பாட்டு வாரியத்தைத் தன்னாட்சித் தன்மையுடையதாக அமைத்து, செயல் விருப்பமும் முற்போக்குச் சிந்தனையும் உடைய தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்து சமூகத்தில் நலிந்தோர்களின் மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். இந்த வாரியத்திற்கு எல்லா இந்து சமய நிறுவனங்களும் தம் தம் வருமானத்தில் ஐந்து விழுக்காடு, நிதி பங்களிப்புத் தரவேண்டும்.
இந்த வாரியம் கல்விப்பணி, மருத்துவப் பணி இன்ன பிற மேம்பாட்டுப் பணிகளைச் செய்து இந்து சமூகத்தில் நலிந்த பிரிவினர், மற்ற சமூகத்தினரோடு ஒத்த நிலைக்கு உயர்ந்து வரத்தக்க வகையில் ஆக்கப் பணிகளை மேற் கொள்ளவேண்டும். இது உடனடியான அவசர - அவசியத் தேவை. இம்முயற்சியின் மூலமே நம்முடைய மக்கள் பாதுகாக்கப்படுவர்; மதமும் வளரும்.
பொதுவாக வாழ்க்கையில் ஏற்படுகிற வெறுப்புகள் அதிருப்திகளால் மத மாற்றம் தூண்டிவிடப்படுகின்றது. நாடு விடுதலை பெற்று 33 ஆண்டுகளாகியும் இன்னமும் கிராமப்புறங்களின் நிலை ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாடு முழுவதும் தீமையாக வளர்ந்துள்ள பணவீக்கம் கூட கிராமங்களில் எட்டிப்பார்க்காதது ஏன்? என்றுகூடத் தெரிய வில்லை. ஆதலால் கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்குச் சிறப்புத் திட்டங்கள் தயாரித்துச் செயற்படுத்த வேண்டும். இப்பணியைக் கிராமங்களில் கூட்டுறவு மூலம் செய்வது வேற்றுமையற்ற பேதமற்ற ஒரு சோசலிச சமுதாய அமைப்புக்குத் துணையாக இருக்கும். இத்துறையில் மாநில அரசும் நடுவண் அரசும் போதிய கவனம் செலுத்துதல் நல்ல பயனைத் தரும்.
அடுத்து, பல திருமண உரிமை, வருமான வரிச்சலுகை, திருமண விலக்கு உரிமை, கல்வி நிறுவனங்கள் நடத்துதல் ஆகிய பல துறைகளில் இன்னும் நாட்டுக்குப் பொதுச் சட்டங்கள் உருவாகவில்லை. சமூக விதிகளும் காலத்தின் மாற்றங்களையும் தேவைகளையும் அனுசரித்ததாக இல்லை. இந்தச் சலுகைகளும் மத மாற்றங்களைத் தூண்டிவிடும் சக்திகளாக விளங்குகின்றன. இந்திய நாட்டு அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டம் உருவாக்க வேண்டிய அவசியத்தை நடுவணரசு ஆராய்ந்து ஒரே சிவில் சட்டம் இயற்ற முன்வரவேண்டும்.
பொதுக்கல்வி நிறுவனங்களை நடத்துதல் ஒரு சமுதாயப்பணி. இதில் இந்துக்களுக்கு ஒரு விதியும் பிற சமயத்தினருக்கு ஒரு விதியும் இருப்பது நெறிமாறானது; அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்னும் பொதுக் கொள்கைக்கு முரணானது. கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் தங்களுடைய மதக் கலாச்சாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நடத்தும் எந்த நிறுவனத்திற்கும் அரசு விதிவிலக்குத் தரலாம்; மான்யங்கள் தரலாம். அதில் ஒன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் எல்லாரும் படிக்கக்கூடிய-எல்லாருக்கும் உரிமையான பொதுக் கல்வித் திட்டத்தில் ஏன் பாரபட்சங்கள்? இந்தப் பாரபட்சங்களை உடனடியாக நீக்கவேண்டும். அப்பொழுதுதான் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்த முன்வருவார்கள்.
இந்திய நாடு சமயச் சார்பற்ற நாடு. இந்த நாட்டில் மத நம்பிக்கையுடைவர்கள்கூட, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலுமே மதப்பற்றைக் காட்டவேண்டும். நாடு தழுவிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்போது, தம் மதத்தவர் அல்லாத மற்ற மதத்தினரிடம் வெறுப்போ, பகையோ காட்டுவது மதச்சார்பற்ற நாட்டின் இலக் கணத்திற்கு மாறாகிவிடும். ஆதலால் எந்த ஒரு மதப் பிரிவினரும் மற்ற மதங்களை இழிவுபடுத்துவது மத மாற்றங்களைத் தூண்டுவது ஆகியவற்றைச் செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி மத நிறுவனங்கள் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ளத் தவறினால் அரசு மத மாற்றங்கள் அறிவுத்தெளிவின் அடிப்படையில் நிகழத்தக்கனவாகவும் விரும்பத்தகாத வகையில் மத மாற்றம் நிகழ்வதைத் தடுப்பதாகவும் சட்டங்களை இயற்றிக் கட்டுப்படுத்த வேண்டும்.
மத நிறுவனங்களில் இந்து மத நிறுவனங்களின் பொருளாதாரம், வரவு, செலவு ஆகியன மட்டுமே அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றன. மற்ற மத நிறுவனங்கள் எத்தகையதொரு கட்டுப்பாட்டையும் பெறவில்லை. அதன் காரணமாக அந்த மத நிறுவனங்கள் தங்களுடைய பொருளாதார வசதிகளைப் பல்வேறு வழிகளில் பெறவும் தாம் விரும்பியவாறெல்லாம் செலவு செய்யவும் உரிமை பெற்றுள்ளன. இந்த உரிமைகளே மத மாற்றங்களுக்குப் பெரும் தூண்டுதல்களாக அமைகின்றன. ஆதலால் எல்லா மத நிறுவனங்களுக்கும் ஒத்த ஒரே மாதிரியான சட்டங்களை இயற்றித் தவறுகள் நிகழாதபடி பாதுகாக்கவேண்டும் இங்ஙனம் பல முனைகளில் திட்டமிட்டுச் செயற்பட்டால் தான் மதமாற்றங்களைத் தவிர்க்கலாம்; மக்களையும் காப்பாற்றலாம். நாட்டையும் காப்பாற்றலாம்.
—"மக்கள் சிந்தனை"-1-8-81
அண்மைக் காலமாக நமது நாட்டில் மதம்மாறுதல் என்ற ஒரு புதிய சமுதாயச் சிக்கல் தோன்றியிருக்கிறது. இது காலத்துக்குக் காலம் மெல்ல நடைபெற்றுக்கொண்டு வந்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஏற்படும் மனத் தாங்கல்கள், புழுக்கங்கள் அவை தொடர்பான சண்டைகள் இவைகளை மையமாகக் கொண்டு வாய்ப்புழி பலரை ஒரு சேர மதம் மாற்றுதல் என்பது இப்பொழுதுதான் நடைபெற்று வருகிறது. மத அனுபவ அடிப்படையிலும் கூட இது வரவேற்கத்தக்கதல்ல, மதங்கள் வேறுபடுவதற்குக் காரணம் பல்வேறு அனுபவங்களின் வழியில் தானே தவிர வேற்றுமைகளின் பாற்பட்டதல்ல. மதம் என்பது, ஒருவர் உயிரால் அனுபவித்துத் தன்னுடைய ஆன்மிகத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குத் துணை செய்கின்ற ஒன்று. அந்த அனுபவத்தின் வழியில் ஒவ்வொருவரும் தன் மதத்தை மாற்றிக்கொள்வதற்கு உரிமை இருக்கவேண்டும். அதில் ஒன்று தடையில்லை. ஆனால், இப்பொழுது நிகழ்கிற மதம்மாறுதல் என்பது அத்தகைய நிகழ்ச்சி அன்று.
இதற்கு ஏதோ ஒர் உந்து சக்தி அல்லது காரணம் இருக்கிறது என்று கருதும் பொழுதுதான் நாட்டுப்பற்றுக்கும் சமுதாயப் பற்றுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பல ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வந்திருக்கிற பரஸ்பர சகிப்புத் தன்மை மதச்சார்பற்ற வெறித்தன்மையின்மை ஆகிய உயர் பண்புகளுக்கும் இடையூறு நிகழுமோ என்று கருதிக் கவலைப்பட வேண்டியதாயிருக்கிறது. இந்தக் கவலைக்குச் சரியான தீர்வு காண்பது நம்முடைய நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
பொதுவாக, மதம் மாறுதலுக்கு அதிகமாகச் சொல்லப்படுகிற ஒரு காரணம், சமூகத்திலிருக்கிற தீண்டாமையினால் சமூகத் தகுதி அல்லது சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை என்பது. இதில் உண்மை இல்லாமல் போய்விடவில்லை. இந்து சமூகத்தில் இருக்கும் இந்தத் தீண்டாமையை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வந்திருக்கிறோம். ஆனால் இதைக் காரணமாகக் காட்டுகிற தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக இந்தத் துறையில் நாம் அடைந்திருக்கிற முன்னேற்றத்தை அன்புகூர்ந்து கணித்துப் பார்க்கவேண்டும். முப்பத்து நான்கு ஆண்டுகளில் தீண்டாமை ஒழிப்பில் இந்த நாடு மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் சட்டமன்றங்களில் பல்வேறு பொறுப்புக்களில் தகுதிவாய்ந்த பதவிகளில் இன்றைக்கு இருக்கிறார்கள். அவர்களுக்குச் சமூக அந்தஸ்து அல்லது சமூகத் தகுதி அரசியல் நிலையிலும் சமுதாய நிலையிலும் வழங்கப் பெற்றிருக்கிறது; வழங்கப்பெற்றிருக்கிற உரிமைகள் போதவில்லையென்று சொன்னால் நியாயம் உண்டு. ஆனால் இதைவிடக் கடுமையான தீண்டாமையில் தொல்லைப்பட்ட காலத்திலெல்லாம் மதம் மாறாமல் இப்பொழுது, ஏதோ தற்செயலாக நிகழ்கின்ற சில சம்பவங்களைக் காரணம் காட்டிச் சமூகத் தகுதி இல்லையென்று சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்பது நம்முடைய கருத்து. ஆனாலும் இந்து சமூகத்தைச் சேர்ந்த மேட்டுக் குடியினர் தீண்டாமையை முற்றாக ஒழிக்கவும், இந்து சமூகத்திலிருக்கிற கடை கோடி மனிதனுக்கும் நல்ல வாழ்க்கை நல்ல சமூகத் தகுதி கிடைக்கவும் உத்தரவாதம் அமையும்படி பார்த்துக் கொள்வது நீங்காத கடமையென்றே நாம் கருதுகின்றோம்.
இந்து சமூகம் எவ்வளவு சீக்கிரத்தில் தீண்டாமைக்கும் சாதி வேற்றுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறதோ அந்த அளவுக்கு அஃது உயிர்ப்போடு ஆர்ப்பரித்து எழும்; புதிய பொலிவோடு விளங்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.
நம்முடைய நாடு. சமயச் சார்பற்ற அரசு நிலவுகின்ற ஒரு நாடு. அதாவது எந்த ஒரு மதத்தையும் அரசு சார்ந்திருக்காது என்பது இதன் கொள்கை. அப்படியிருந்தும் ஒவ்வொரு மதத்திற்கும் அல்லது சமயத்திற்கும் அந்தந்தச் சமயத்தைச் சார்ந்த மக்களை வழி நடத்தத் தனித்தனி மதச் சட்டங்களையே நடைமுறைப்படுத்துகிறது. இந்த நடைமுறையின் மூலமாக வாழ்க்கை உரிமைகளில் பலவகை வேறுபாடுகள் இருப்பதும் மதமாற்றத் தூண்டுதலுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. உண்மையான சமயச் சார்பற்ற அரசுத் தன்மைக்கு இலக்கணமாக எல்லாச் சமயத்தைச் சார்ந்த மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரே விதமான பாங்கு நிலவும்படி ஒரே விதமான உரிமையில் சட்டத்தைச் செய்வது நல்லதா என்பதை இந்தத் தருணத்தில் அரசியல் தலைவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.
எல்லாவற்றிற்கும் மேலாக முப்பத்து நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் கடைகோடியில் வாழும் மக்களுக்குப்போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. தீண்டாமையை உயர் சாதியினர்தான் நீக்கவேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கொள்கை, காரணம் ஒருவர் அல்லது ஒரு சமூகத்தினர் தங்களுடைய உரிமைகளுக்குத் தாங்களே போராடினால் அது ஒரு விதமான காழ்ப்பாக உருமாற்றம் பெறும் என்பது அண்ணல் காந்தியடிகளின் கருத்து. எனவே, தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களை உயர்த்துவதும் உயர் குடியினர் செய்யவேண்டிய பணியென்று வலியுறுத்தினார். ஆனால், அண்மைக் காலமாக நம்முடைய நாட்டின் நடைமுறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்களுக்காகத் தாங்களே போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டனர். இஃதொரு பெரிய தீமை.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடத்திலும் கூட, தாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நீண்ட நெடுங்காலத்திற்கு இருந்தால்தான் இந்தச் சலுகைகளைப் பெறமுடியும் என்ற ஒரு பொய்மையான நம்பிக்கை கூடக் கால்கொண்டு வருகிறது. இவைகளை நாம் நீக்கியாகவேண்டும். எனவே குறிப்பிட்ட கால எல்லைக்குள் நம்முடைய இந்து சமூகத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள், திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் தீண்டாமையை முற்றாக நீக்கி, இந்து சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினருக்கும் எல்லா உரிமைகளையும் ஒப்ப வழங்குகிற ஒரு புதிய சமுதாயத்தைக் கண்டேயாகவேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, திருமூலர் கண்ட “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற உயரிய கொள்கை நம்முடைய வாழ்க்கையில் சட்டமாக இடம் பெறவேண்டும். அந்த முறையை நாம் என்றைக்கு நடைமுறைப் படுத்துகிறோமோ அன்றைக்குத்தான் மத மாற்றங்கள் நிகழாலிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்து சமூகத்தைப் பொறுத்தவரையில் அது மக்களிடம் சென்று அவர்களை அனைத்து அழைத்து வருகிற செயல் திட்டங்களை இன்றும் ஏற்றுக்கொள்ளாதது பெரிய குறை.
மாணிக்கவாசகருக்கு அருளை வழங்கிய பிறகு, இறைவன் தம்மைப் பின் தொடர்ந்து வந்து பாதுகாப்பதாக மாணிக்கவாசகர் தாம் அருளிச் செய்த திருவாசகத்தில் பாடியுள்ளார்.
“பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!”
என்பது திருவாசகம்.
அது மட்டுமா? வீடுதோறும் சென்று அங்கு வாழ்கின்ற மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற கருத்தை மாணிக்கவாசகர், “இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை” என்று அருமையாகப் பாடுகிறார். இந்த இரண்டு பணிகளையும் இந்து சமய நிறுவனங்கள் நடைமுறைப் படுத்தாதது ஒரு பெரிய குறை.
நல்ல நிலமாக இருந்தால்கூட புழங்கி உழாது போனால் காட்டு நிலமாக மாறிவிடுகிறது. அதே போல நம்முடைய மக்களை நாம் அடிக்கடி சந்தித்து, அவர்களை முறைப்படுத்தி வாழ்விப்பது கடமை என்பது நம்முடைய சமய நிறுவனங்கள் அறிந்தாக வேண்டும். நம்முடைய சமயத்துக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட ஒருமைப்பாடும் தொடர்ந்து மக்களைப் பாதுக்காக்கின்ற தொண்டு நெறியும் உரிமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மதமாற்றங்கள் முற்றாக நீக்கப்பெறும்.
அதுமட்டுமல்ல நம்முடைய காலத்தில் நம் நாட்டில் நிலவுகின்ற பிற சமயங்கள் சமூக மேலாதிக்கமுடையனவாக வளர்ந்து அவைகளுடைய நெறிமுறைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றன. ஆனால் நம்முடைய இந்து சமூகத்தின் மீது இந்து சமய நிறுவனங்களுக்கு சமூக மேலாதிக்கம் இல்லை. இப்படியில்லாதது ஒரு காலத்தில் நம்முடைய மதத்துக்கு இருந்த பெருமை என்றுகூட நாம் கருதலாம். நமது சமயம் தோன்றிய காலத்தில் தொன்மைக் காலத்தில் தனித் தன்மைக்காகச் சுதந்தரமான சிந்தனையும் சுதந்தரமான வழிபாடும் வேண்டுமென்பதற்காக நாம் ஒழுங்குபடுத்தப் பட்ட முறைகளை வற்புறுத்தவில்லை; சமூக மேலாதிக்கத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் நாம் சமூக மேலாதிக்கமுடைய ஒரு சமய அமைப்பை-ஒழுங்குபடுத்தப்பட்ட தொண்டு நெறியுடைய ஒரு சமய அமைப்பை ஏற்றுக்கொண்டால்தான் இதற்கொரு நிலையான தீர்வு காணமுடியும் என்று நம்புகின்றோம். அதே நேரத்தில் சமயச் சார்பற்ற ஓர் அரசு நிலவுகிற நாட்டில் புறத் தூண்டுதல்கள் மூலமோ வேறுவகையான ஊக்க சக்திகளை வழங்குவதன் மூலமோ மதமாற்றம் செய்வது விரும்பத்தக்கதல்ல. அப்படி மதமாற்றம் செய்ய நாம் அனுமதித்தோமானால் கடைவீதிச் சண்டைபோல் காலப் போக்கில் இன, சமயச் சண்டைகள் தோன்றி நாட்டில் ஆங்காங்கு அமைதியும் சமூக இனக்கங்களும் கெட்டுப் போகும்.
விருப்பம் உடையவர்கள் குறிப்பிட்ட வயது வந்தபிறகு, தங்களுடைய மத அனுபவத்தின் அடிப்படையில் மதம் மாறிக்கொள்வதை நாம் நிச்சயம் அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் செயற்கை முறையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக மதம் மாற்றுகிற முறையைத் தவிர்க்க அரசு ஏதாவது செய்யலாமா? என்பதை இந்தத் தருணத்தில் ஆலோசிக்க வேண்டும். இப்படி நாம் சொல்லுகிற ஆலோசனை ஒரு மதத்திற்குச் சாதகமாகவும் இன்னொரு மதத்திற்குப் பாதமாகவும் இல்லை. இந்து மதத்தினைச் சேர்ந்தவர்கள்கூடப் பிற மதத்திலிருந்து திரும்ப எடுப்பதை அவர்கள் விருப்பம் வந்த பிறகு எடுப்பதுதான் சிறப்பான முறை. இல்லையானால் மத சம்பந்தமான பழக்க வழக்கங்கள் இன்று இந்த மதத்தில், நாளை அந்த மதத்தில், திரும்ப இந்த மதத்தில் என்பதைப் போலக் கேலிக்குரிய பழக்க வழக்கங்களாக மாறிவிடும். எல்லா மதங்களின் தலைவர்களும், சமய ஆசிரியர்களும் மதத்தை இந்த மாதிரி கேலிக்குரியதாக்காமல் இஃது உயர்ந்த வாழ்க்கை முறை; ஒப்புரவோடு வாழவேண்ய வாழ்க்கை முறை என்பதைக் கவனத்திற்கொண்டு சமய ஒருமைப்பாட்டையும்-சமூக இணக்கங்களையும் உருவாக்கத் துணைசெய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மதமாற்றம் நிலையானது என்று நாம் கருதவில்லை. ஏதோ இப்போது ஓர் அனற்காற்றுப்போல வீசுகிறது; ஓர் அலை வீசுகிறது. ஆனால் நிச்சயமாக அது தடுத்து நிறுத்தப்படும். நம்முடைய மக்கள் இங்கே எல்லாவிதமான உரிமைகளையும் பெறுவர் என்ற உத்தரவாதத்தை நாம் தைரியமாகக் கூறிக் கொள்கிறோம். அவர்கள் பிறந்த சமயத்தில் வாழ்ந்து வளர்ந்து எல்லா உரிமைகளும் பெற்று அவர்கள் மகிழவேண்டுமென்பது நம்முடைய வேண்டுகோள். அந்த நல்லெண்ணத்தை அவர்களுக்கு வழங்குமாறு எல்லாவல்ல இறைவனை - வழிபடும் தெய்வத்தை இறைஞ்சுகின்றோம்.
-"மக்கள் சிந்தனை” 1-11-81
“எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்”
என்பது பாரதியார் வாக்கு. இந்திய நாகரிகம் சமயப் பொறைக்கும், சமயச் சார்பற்ற தன்மைக்கும் அடிப்படை கண்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவதரித்த மாணிக்கவாசகர்,
“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!”
என்று அருளினார்.
அண்ணல் காந்தியடிகள் மதச்சார்பற்ற தன்மையுடைய ஒரு சிறந்த இந்துவாகவே விளங்கினார். இத்தகைய நாட்டில் இன்று பரவலாக மதக் கலவரங்களும் சாதிக்கலவரங்களும் நடப்பது வருத்தத்தைத் தரக்கூடியன. இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. மொழியும் மதமும் உணர்ச்சியைத் தொடக்கூடியன. எளிதில் கலவரத்தைச் செய்யக்கூடிய உணர்வைத் தூண்டக்கூடியன. இதில் மக்கள் கவனமாக இல்லாதுபோனால் பெரிய கேடுகள் விளையும். நாடு வலிமை இழக்கும்.
“இந்து மதம் மற்ற மதங்களால் அழிக்கப்படும்” என்று நம்புவது-கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டபொழுதும், கிறிஸ்தவர்களாகிய ஆங்கிலேயர்கள் ஆண்டபொழுதும் இந்து மதம் ஏன் அழிய வில்லை? அல்லது அழிக்கப்படவில்லை.
மதச்சார்பற்ற கொள்கை, சுதந்திர இந்தியா எடுத்துக்கொண்ட கொள்கையல்ல. அக்பர் சக்கரவர்த்தியும், விக்டோரியா மகாராணியும் கடைப்பிடித்த கொள்கை என்பதை நினைவு கொள்வது நல்லது. இந்து சமயம், அதனுடைய வலிமையைப் பிற சமயங்களால் இழக்காது; அழியாது. இந்து சமயம் அதனுடைய மக்களிடத்தில் உருவாக்கிவைத்துப் பாதுகாத்து வரும் தீண்டாமை, சாதி வேற்றுமைகளால்தான் உள்ளீடழிந்து வலிமை இழக்கும். இந்து சமயத்தின் உண்மையான தத்துவக் கோட்பாடுகளின் படி நாயன்மார்கள், ஆழ்வார்கள் காட்டியபடி இந்து சமூகம் அமையவில்லை; இயங்கவில்லை. இந்து சமூகத்தில் நிலவிய சாதி வேற்றுமைகள் காரணமாகவும் எத்தனை சமயங்கள் தோன்றியுள்ளன ? புத்தமதம், சீக்கியமதம், வீரசைவம் இப்படிப் பலப்பல. இந்தச் சூழ்நிலையில் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி என்ற பெயரில் கிறித்தவ, இசுலாமிய மதங்களோடு சண்டை போடும் அணியைத் தோற்றுவிப்பது எப்படி இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும்? ஒரோவழி ஒன்றை எதிர்ப்பதில் ஒற்றுமை தோன்றினாலும் அது நிலையான ஒற்றுமையாக- ஆக்க வழியிலான ஒற்றுமையாக அமையாது.
இந்துக்கள் ஒன்றுபடுவது நல்லது. அவசியமும் கூட. ஆனால், மற்ற மதங்களை எதிர்ப்பதற்கு அல்ல. இதனை ஒற்றுமை என்று சொல்லக்கூடாது. இந்து சமூகத்தை ஒழுங்குபடுத்தப்பெற்ற அமைப்பாக மாற்றுவது அவசியம், ஒழுங்குபடுத்தப் பெற்ற அறமனைகள், பணிமனைகள் நமது மக்கள் நலம் கருதி அமைக்கப்படுதல் அவசியம். நமது சமூகத்தில் புரையோடி வந்துள்ள தீண்டாமையை அறவே நீக்கவேண்டும். சாதி வேற்றுமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும். சமூகத்தின் ஏழ்மையும், வறுமையும் அறவே அகற்றப்படவேண்டும். இந்து சமயம் மனித நேயத்தில் தோன்றி வளர்ந்தது. இன்று தேவை, மனிதகுல ஒருமைப்பாடே! அதுவே நாகரிகம்! மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிராக இயங்கும் “இந்து ஒற்றுமை” அவசியமா? அதுதான் உருவாகுமா? மனித குல ஒருமைப்பாடும், அமைதியும் இன்பமுமே மதங்களின் இலட்சியம்.
—"மக்கள் சிந்தனை” 1-4-82
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இவ்விரண்டு குறிக்கோளும் இருக்கவேண்டும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையன. கடவுளைப் போற்றும் நெறியின் பயனே மனிதனை மதித்து வளர்ப்பதுதான்! மனிதனை “நடமாடுங் கோயில்” என்று திருமந்திரம் பாராட்டுகிறது. கடவுளைப் போற்றும் நெறி நிற்பவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பண்டைக் காலத்தில் மனிதனையும் மதித்தனர்; வாழ்வித்தனர். ஆனால் மதங்கள் காலப்போக்கில் கெட்டுப்போயின. மதத் தலைவர்கள், புரோகிதர்கள் ஆகியோர் ஆதிக்கவாதிகளாக-சுரண்டும் வர்க்கத்தினராக மாறினார். இந்த நிலை வளர்ந்தது.
“மக்களைவிட மதம் உயர்ந்தது. கடவுளுக்காகவே மக்கள். மதத் தலைவர்கள் மிகமிக உயர்ந்தவர்கள். இவர்களை வணங்குவதும் இவர்களுக்குக் காணிக்கை செலுத்துவதும் புண்ணியம்” என்ற கருத்துக்கள் கால்கொண்டன. இந்த நிலையில் சுரண்டும் இதர வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும் ஒருங்கிணைந்து கொண்டு, உழைப்பாளர்களைத் துன்புறுத்தின.
இந்தச் சுரண்டலும் ஆதிக்கமும் என்றென்றும் நிலைபெற வேண்டி, மனித குலத்திற்குள் எண்ணத் தொலையாத சாதிப் பிரிவுகளைத் தோற்றுவித்து, அவர்களுக்குள் அழுக்காற்றினை வளர்த்தும் குழுச் சண்டைகளை உருவாக்கியும் இழிபடு வாழ்க்கைக்கு வித்திட்டனர். இதனால் மனித குலத்தில் முக்கால் பங்குக்கு மேல் தாழ்த்தப்பட்டவர்களாக் கப்பட்டனர். இவர்களுக்குத் திருக்கோயில் வழிபாட்டுரிமை இல்லை. கல்வி இல்லை ஏன்? நாகரிகமாக உடுத்துதல்கூடக் கூடாது என்ற தடை இந்த இழிநிலைமைகளைக் கண்டு மனம் வெம்பிய சில சமய ஞானிகள், இந்தச் சமுகக் கொடுமைகளைக் களைந்து சமயத்தைச் சமுதாயத்திற்காக்க முனைந்தனர். திருமுறைக் காலத்தில் இந்த முயற்சிகள் தோன்றின. பின் வள்ளலார்! அதன் பின் காந்தியடிகள்! அதற்கும் பிறகு தந்தை பெரியார்! இவர்களெல்லாம் தோன்றி, மனித உரிமைக்காகப் போராடினார்கள். ஆனால் மதத்தலைவர்கள் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் இந்து மதத்திலிருந்து வெளியேறிய கடவுள் நம்பிக்கையுடையவர்கள், புது மதங்கள் புதுநெறிகள் கண்டனர். மதத்தின் நடைமுறைகளை-மதத் தலைவர்களின் மனப்போக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் மதத்தைவிட்டு வெறியேறி, நாத்திகர்கள் ஆயினர். இவர்கள் தோன்றி, போராடித்தான் ஆதிதிராவிடர்களுக்கு ஆலய நுழைவுரிமை பெற்றுக் கொடுத்தார்கள்; கடவுட் சிந்தனையாளர்களின் அங்கீகாரத்துடன் அல்ல- சட்ட மன்றங்களின் அங்கீகாரத்துடன்! இந்தச் சூழ்நிலையிலும் ஆதிதிராவிடர்களின் ஆலய நுழைவை இந்துமதத் தலைவர்கள் ‘நடமாடும் தெய்வங்கள்’ எதிர்த்தார்கள். ‘அரிசனங்கள்-ஆதிதிராவிடர்கள் நுழைந்த கோயிலுக்குள் கடவுள் இல்லை. ஓடிவிட்டார் என்று கூறிப் பல ஆண்டுகள் ஆதிதிராவிடர்கள் நுழைந்த கோயிலுக்குச் செல்லாத பெரியவர்களை இந்த நாடு மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. ஆதிதிராவிடர்கள் நுழைந்ததால் மதுரை மீனாட்சி கோயிலிலிருந்து வெளியேறி வந்துவிட்டாள் என்றுகூறி மதுரையில் ஒரு பார்ப்பனர் வீட்டிலேயே மீனாட்சி படத்தை வைத்து வழிபட்டார்கள். இதுமட்டுமா? ஆயிரக்கணக் கானவர்களுக்குக் கல்வியையும் ஞானத்தையும் தந்த கடவுளை நம்புவதாக நடிப்பவர்கள் செய்த கொடுமைகள் கொஞ்சமா? கடவுளை நம்புவதாக நடிப்பு? கடவுள் எல்லோருக்கும் வைத்த ஞானத்தை, இந்த மனிதப் புரோகிதர்கள் - நடமாடுந் தெய்வங்கள் - மண்ணுலகக் கடவுளர்கள் நாட்டுத் தேவர்கள் தட்டிப் பறித்த கொடுமையை எடுத்துக் கூற வார்த்தைகள் ஏது? சுதந்திர அரசாங்கம் வந்தே கல்வி கிடைத்தது. வேலை வாய்ப்பு உண்டா? வேலைவாய்ப்பெல்லாம் மேட்டுக் குடியினரின் ஏகபோகமாக இருந்தது. அண்ணல் காந்தியடிகளும் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கைப் போராட்டத்தின் வழியாக வந்த பலன் தானே இன்று, தாழ்த்தப்பட்ட மக்கள்- பிற்படுத்தப் பட்ட மக்கள் அனுபவிக்கும் பட்டம், பதவிகள்!
“கடவுள் உலகிற்குப் பொதுவானவர்; உலகிற்கு அம்மையப்பர் அன்பே வடிவமாக இருப்பவர்-என்றெல்லாம் பஜனை செய்யும் மதத் தலைவர்கள்-உபதேசிகள் ஏன் இந்த உரிமைகளை மதத்தின் பெயரால் மக்களுக்கு வழங்கவில்லை: இந்த ஏமாற்றுகள்தாமே அல்லது நீதிப் பிறழ்வுகள் தாமே சமுதாயத்தின் ஒரு பகுதியில் கடவுள் இருந்தால் இந்தச் சதிகள் நடக்குமா? என்ற கேள்விக்கு, இடம் தந்தன! சமயத் தலைவர்கள் விடை தந்திருந்தால் திராவிடர் கழகம் நாத்திக இயக்கமாக வளர்ந்திருக்காது. இந்த நாட்டில் கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இடம் பெற்றிருக்காது. இது இந்து நாடாகவே இருந்திருக்கும். யார் வெளியே போனாலும் கவலைப்படாது. திருக்கோயில் மடப்பள்ளிகளை உரிமை கொண்டிருந்தவர்கள் மடங்களின் சொத்து சுகபோகங்களை அனுபவித்தவர்கள் “வழக்கம்போல்” தலைவிதி என்று கூறி வாளா இருந்தனர். இன்று மக்களாட்சி அரசு மதத்துவம் மேம்பட்டதாக இடம் பெற்றுவிட்டது. மடாதிபதிகளை, இல்லை நடமாடும் தெய்வங்களை, மண்ணகத்தில் விளங்கும் கடவுளர்களை விளக்கம் கேட்கும் அளவுக்கு அரசு மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் மதத் தலைவர்கள் நடமாடுகிறவர்களானபின் மக்களை நாடுகின்றனர். பச்சை நிர்வான விளம்பர அதிகார வேட்டையாடுகின்றனர். கடவுளைப் போற்றியவர்கள் மனிதனை நினைக்க மறந்ததால், மனிதனை நினைக்கத் தொடங்கியவர்கள் கடவுளைப் போற்ற மறுக்கின்றனர். இதில் எந்த அணி நல்லது நம்மைப் பொறுத்தவரை இரண்டு அணியும் ஒன்றாதலே நல்லது. இரண்டும் ஒன்றாகா போலும்! நமக்கு இரு அணிகளும் வேண்டியவைகளே! ஏன்? இரண்டையும் ஆதரிக்காது போனால் வாழ்க்கையில் ஒரு பாதிதான் நடக்கும். இங்கே மனிதர்களை நினைக்காதவர்கள் உண்மையில் கடவுளைப் போற்றுபவர்கள்தாமா? கடவுள் தத்துவம் மனிதனை மறக்கச் சொல்கிறதா? மனிதனைத் தீண்டாமையிலும் வறுமையிலும் ஆழ்த்தி அழிக்கவா சொல்கிறது மதம்? இல்லை; இல்லவே இல்லை. கடவுளைப் போற்றுபவர்கள் மனிதனை மதித்து உயர்த்தத் தவறினாலும் ஒரு வகையில் நாத்திகர்களே, ஏன்? அவர்கள் கடவுள் சித்தத்தையே மதிக்காதவர்கள்! கடவுளை நம்பாதவர்கள். கடவுளை மறந்து விட்டு கடவுள் தன்மையைப் பெற்ற மனிதனை மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள். இந்த இரண்டிலும் நாத்திகத்தன்மை இருக்கிறது. இரண்டு அணிகளும் இணைதல் ஆத்திகம்! அதுவே நமது கொள்கை!—‘மக்கள் சிந்தனை’ 15-6-82
இந்திய நாட்டில் உள்ள மதங்களுக்கிடையில் வளர்ச்சிப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன். நலம் நிறைந்த போட்டிகள் வரவேற்கத் தக்கனவே! ஆனால் நமது நாட்டில் நிலவும் போட்டிகள் நிறைநலமுள்ள போட்டிகள் அல்ல என்று மதமாற்றங்கள், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் கலவரம், இராமநாதபுரம் கலவரம் ஆகியன கூறுகின்றன.
மதங்களின் வரலாறு
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய உடனேயே தோன்றியது கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை தோன்றிப் பலநூறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே கடவுள் நம்பிக்கை அடிப்படையில் மதங்கள் தோன்றின; மதத் தலைவர்களும் புரோகிதர்களும் தோன்றினர். மத நிறுவனங்கள், சொத்துக்களும் அதிகாரமும் உடைய நிறுவனங்களாக வளர்ந்து சமுதாயத்தில் நிலையான இடத்தைப் பெற்றன. காலப்போக்கில் மதத் தலைவர்களின் ஆதிக்கமும் சுரண்டல் தன்மையும் மக்களிடத்தில் வெறுப்பை வளர்த்தன. இந்தச் சூழ்நிலையில்தான் அரசுகள் தோன்றுகின்றன. தொடக்கக் காலத்தில் மதத் தலைவர்கள் அரசியல் அதிகாரங்களையும் தம்மிடமே வைத்திருந்தனர். பின் சமுதாயத் தலைவர்கள் தோன்றி மதத் தலைவர்களிடமிருந்து விடுதலைபெற அரசியல் ஆதிபத்தியத்தைப் பெற முயன்றனர். சிலகாலம் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கூட்டாக ஆட்சி செய்தனர்.
மத ஆதிக்கச் சண்டைகள்
இந்த நெடிய வரலாற்றுப் போக்கில் மதங்களிடையில் ஏற்பட்ட ஆதிபத்தியச் சண்டைகள் மனிதகுல வரலாற்றுக்கு இழைத்த தீங்குகள் எழுதிக்காட்ட முயாதவை. இங்கிலாந்து வரலாற்றில் ரோசாப்பூச் சண்டைகளும் இந்திய நாட்டில் முஸ்லீம் படையெடுப்புக்களின்போது இந்துக் கோயில்கள் இடிபட்டமையும் தமிழ்நாட்டில் சைவ-சமணச் சண்டைகளும் எடுத்துக்காட்டுக்கள். இவையெல்லாம் மதச் சண்டைகள் என்று கூறப்பட்டாலும் உண்மையில் மதத்துக்காக மதத்தின் நலத்துக்காக ஏற்பட்ட சண்டைகள் அல்ல! ஆதிக்கத்தின்பாற்பட்ட போட்டிகளும் சண்டைகளுமேயாம்; சைவ சமய நாயன்மார்கள் சமணத்தை எதிர்த்துச் சண்டை போட்டிருந்தால் சமணம் பிறந்த நாள் தொட்டே சண்டை போட்டிருக்கவேண்டும். அதுவல்ல நோக்கம்; அப்பரடிகள் சமண சமயத்திற்கு மாறிச் செல்லும் அளவிற்குச் சமணம் வளர்ந்திருந்தது. எப்போது சண்டைகள் மூண்டன? பல்லவ-பாண்டிய “அரசுகளைச் சமண சமயம் கைப்பற்றிக் கொண்டு தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் அளவுக்குச் சென்றபின்தான் சமணத்தை எதிர்த்தது சைவம். எது எப்படியாயினும் மதத்தின் பெயரால் நடந்த படுகளப் போர்கள், பெருக்கெடுத்த இரத்த ஆறுகள் இவைகளை வரலாற்று ஏடுகளிலிருந்து மறைக்க முடியாது. அதனால்தான் வள்ளலார் “மதமானபேய் பிடியாதிருக்கவேண்டும்” என்றார். மதங்களைக் கடந்த பொது நெறி கண்டார். அதுவே சன்மார்க்கம்.
இன்று நடைபெறுவது என்ன?
இன்று நாட்டில் நடைபெறும் மதப்போட்டிகள் மதங்களை அனுட்டானங்களாக மாற்றும் போட்டிகள் அல்ல. ஆன்ம ஞானத் தவத்தின் பாற்பட்ட போட்டிகளும் அல்ல. யார் பெரியார்? யாருடைய மதத்துக்குச் செல்வாக்கு அதிகம்? எந்த மதம் இந்தியாவை ஆளுவது? என்ற வினாக்களுக்கு விடை காணும்போட்டிகளே நடைபெறுகின்றன. இவை ஒருபொழுதும் மதத்தை வளர்க்கப் பயன்படா. மதஅமைப்புகள் வேண்டுமானால் வளராலாம். ஆனால் மதம் வரளாது. கோயில்கள் உயரலாம், ஆனால் கடவுள் அங்கு வரமாட்டார். இதனால் மனித குலத்துக்கு என்ன பயன்?
மதங்களை அனுட்டானத்துக்குக் கொண்டு வருபவர்கள் மதங்களை அனுபவநிலையில் காண்பவர்கள். மதங்களைப் பற்றிய விவாதங்களில் (சர்ச்சைகளில்) ஈடபடமாட்டார்கள்; ஈடுபட நேரமிருக்காது. இன்று நடைபெறுவதெல்லாம் மதங்களைப்பற்றிய சர்ச்சைகளே! யாரும் தம் மதத்தில் கொள்கைகளைக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வதில்லை. மற்ற மதங்களை விமர்சனம் செய்து எரிவும் வெறியும் ஊட்டுவதிலேயே ஈடுபடுகின்றனர். இந்தச் செயல்முறை நாத்திகத்தை விடக் கொடுமையானது.
ஏன் இந்த விநோதம்?
இந்தியாவில் உள்ள முக்கிய மதங்கள் மூன்று. அவை இந்து மதம், கிறித்துவ மதம், இசுலாமிய மதம். இந்த மதங்கள் மூன்றுமே அடிப்படையில் வேறுபாடுடையன அல்ல. மூன்றுக்குமே கடவுள் நம்பிக்கை உண்டு; அனுட்டானங்களில் தான் வேறுபாடு, கடவுளை நம்புகிற மதத்திற்கும் கடவுளை நம்பாத புத்த மதத்திற்கும் சண்டையில்லை. ஏன் இந்த விநோதம்: “கடவுளை நம்புதல்-கடவுளை நம்பாமை” மட்டுமே மதம் அல்ல. திராவிடர் கழகத்தினர் பொதுவுடைமைக் கட்சியினர் மட்டுமே கடவுளை நம்பாதவர்கள் அல்லர். புத்த மதத்தினருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இந்துமத ஆர்வலர்கள் புத்த மதத்தை எதிர்ப்பதில்லை. ஏன்? திராவிடர் கழகம் சாதி ஆதிக்கங்களை எதிப்பதைப்போல் புத்தமதம் எதிர்ப்பதில்லை. பொதுவுடைமைக் கொள்கையினர் சுரண்டலை எதிர்ப்பதைப்போல புத்தமதம் எதிர்ப்பதில்லை. அதனால் ஆதிக்கம் என்ற பேரில் சாதிகளையும் சுரண்டலையும் வளர்ப்பவர்கள் திராவிடர் கழகத்தையும் பொதுவுடைமைக் கொள்கையையும் எதிர்க்கின்றனர். “ஒன்றே குலம்” என்ற திருமந்திரத்தில் நம்பிக்கை இல்லை. ஆதீனத் தலைவர்களிலிருந்து பீடாதிபதிகள்வரை, அர்ச்சகளிலிருந்து பரிசாரகம் வரை சாதிமுறைகளே இடம்பெறுகின்றன. மேலாதிக்கம் பெற்றுள்ள சாதிகளே ஏகபோக உரிமைகள் கொண்டாடுகின்றன; அனுபவிக்கின்றன.
இந்தச் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கின்றனர் திராவிட கழகத்தினர். எல்லா மதங்களிலேயும் கோடீசுவரருக்கு மரியாதை மிகுதியும் உண்டு. ஏழைகளுக்கு மிச்சம் “இரக்கம்” தான். மதத்தலைவர்களுக்குப் பக்கத்தில் நிற்கும் தகுதி, பொன்னாடைகள், ஆசீர்வாதங்கள் எல்லாம் சுரண்டல் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர்களுக்குத்தான். இதனால் திராவிடர் கழகத்தினரை எதிர்க்கின்றனர்; பொதுவுடைமை வாதிகளை எதிர்க்கின்றனர்.
மதங்களின் நோக்கம்!
மதங்களின் தோற்றம் மனித குலத்தை வளர்த்து வாழ்வித்து இன்ப அன்பில் திளைக்க வைப்பதுதான். கடவுள் நம்பிக்கையின் ஒரே இலட்சியம் மனித குலத்தை ஒன்றுபடுத்தி எல்லாரையும் சமநிலையில் வாழவைப்பது தான்! அதனால்தான் கடவுளை உயிர்க் குலத்திற்குத் தாய்-தந்தை என்று உருவகம் செய்து காட்டினர்; கற்பித்துத் தந்தனர். இன்றைய மத அமைப்புக்கள் இந்தப் பாடத்தை மறந்துவிட்டன போலும்!
மதவளர்ச்சிக்குரிய பணிகள்
சாதி வேற்றுமைகள், இன ஒதுக்கல்கள் என்ற தீமை உள்ளவரை மதங்கள் வளரா. அதுபோலவே மனிதகுலத்தை வறுமையும் ஏழ்மையும் வருந்தும்வரையில் மதங்கள் வளரா. மனித குலம் அறியாமையில் கிடந்து உழலும்வரையில் மதங்கள் வளரா. ஆதலால் ஒரு மதத்துக்குப் பகை பிறிதொரு மதம் அல்ல. திராவிடர் கழகத்தினரும் பொதுவுடைமை இயக்கத்தினரும்கூட எதிரிகளாகமாட்டார்கள். மதங்களின் வளர்ச்சியைக் கெடுக்கும் களைகளாகிய சாதிகுல வேற்றுமைப் பிரிவுகள், இன ஒதுக்கல் கொள்கைகள், உடையார்-இல்லார் என்ற வேற்றுமைகள் இவைகளை எதிர்த்து மதங்கள் போராடுவதே மதப்பற்றாகும்! வறுமை ஏழ்மையிலிருந்து மீட்கப் போராடுவதே மதவளர்ச்சிக்குரிய பணியாகும். இந்தியா முழுவதும் பரவலாக உள்ள மதத் தலைவர்கள் மதப் புரோகிதர்கள், சந்நியாசிகள், மத போதகர்கள் மதப் பிரசாரகர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டால் இந்தியா வளர்ந்துவிடும்! ஆனால், மனம் வரவேண்டுமே!
—மக்கள் சிந்தனை 15-2-83
இந்திய நாடு சமயச் சார்பற்ற நாடு. அதே போழ்தில் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் நாடு. இந்திய நாகரிகத்தில் விழுமியது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது. இத்தகைய சிறந்த நாகரிகம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. ஆனால் இது பழைய வரலாறு. இன்று இந்தியாமொழி, இனம், சாதி, சமயங்களால் அலைக்கழிவு செய்யப்படுகின்றது. படித்தவர்கள் என்று நம்பப்படு கிறவர்கள்கூட இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுவர், திருவருட் பிரகாச வள்ளலார் ஆகிய அருளாளர்கள் ஒருமைப்பாட்டினைத் தவம்போல ஏற்று இனிய அருள் மொழிகளைத் தந்துள்ளனர். இன்று அவர்களைப் பின்பற்றுவோரில் கூட பலர் இந்தப் பேரபாயத்தில் சிக்கியுள்ளனர். இஃது இந்திய நாட்டுக்கு நல்லதல்ல. சாதிமதச் சண்டைகளைத் தவிர்த்து இந்திய ஒருமைப்பாட்டை வளர்த்து இந்தியாவை வலிமைப்படுத்த வேண்டும். இஃது உடனடியாகச் செய்யவேண்டிய கடமை. இந்திய அரசு இந்திய மக்களின் ஒருங்கிணைப்பு மையம் ஒன்றைக் காணவேண்டும். அம் மையத்தின் தலைவராகப் பிரதமர் இருக்கவேண்டும்.
இம்மையத்தில் இந்தியாவிலுள்ள பல்வேறு மதங்களின் தலைவர்கள், அறிஞர்கள், மத நிறுவனங்களின் பேராளர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுதல் வேண்டும். இந்த மையம் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கத் திட்டமிட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையில் எழும் பிரச்சனைகளுக்கு நட்புறவு அடிப்படையில் தீர்வு காணவேண்டும். இத்தகைய முயற்சி நல்ல பலனைத்தரும். மதப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் - இயக்கங்களுக்கு இம்மையம் விதிமுறை ஏற்பளிக்கவேண்டும். இம்மையத்தால் முறையாக ஏற்பளிக்கப்பெறாத எந்த ஒரு சமய நிறுவனமும், அமைப்பும் இயக்கமும் முறையானது அல்ல என்று அறிவிப்பதோடன்றி, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தத்துவ ஞானத்தினால் ஏற்படும் மத மாற்றங்களைத் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் இன்று மத மாற்றம் ஆள்பிடிப்பதற்காக நடைபெறுகிறது. இது தவறு. இந்த மதமாற்ற முறையை அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் உடனடியாகக் கைவிடுவது நல்லது. அவசியமும்கூட முறையான மத மாற்றங்களுக்கு விதி முறைகள் இயற்றி நடைமுறைப்படுத்தவேண்டும்.
இந்தியா மதச் சார்பற்ற நாடு. ஆனால் இந்திய மக்கள் மதச்சார்பு உடையவர்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறை மதச்சார்புடையது என்பது முரண்பட்ட நிலை. ஒவ்வொரு இந்தியனும் மதச்சார்பற்றவனாக வாழ்தல் வேண்டும். மதச் சார்பற்ற தன்மை என்பது- மதம் இல்லாத வாழ்க்கையல்ல. மற்ற மதங்களையும் மதிப்போடு போற்றுதல் என்பதே மதச் சார்பற்ற தன்மைக்கு விளக்கம். இன்று இந்தியாவில் நடப்பதென்ன? மதத்தின் வழிப்பட்ட சட்டங்கள்- அரசியல் சட்டத்தைவிடச் செல்வாக்குடையவனாக விளங்குகின்றன. இதைத் தவிர்க்கவேண்டும். “மதம் என்பது தனிப்பட்ட ஒருவனுடைய வாழ்க்கை சம்பந்தமுடையது. மதத்திற்கு சமூகத்திலும் - நாட்டிலும் என்ன வேலை” என்று காந்தியடிகள் கேட்டார். ஆதலால் இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை முறைப்படுத்த இந்தியச் சட்டமே போதும். மற்றபடி மதத்தின் பெயரால் உள்ள சட்டங்கள் அவசியமா? இந்திய அரசியல் சட்டம் வழங்குகின்ற இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்ற கொள்கையை இந்த மதச் சட்டங்கள் கொடுத்துவிடுகின்றன. இந்திய மக்கள் இந்திய அரசியல் சட்டம் ஒன்றுக்கு விசுவாசம் உடையவர்களாகவும் கட்டுப்பட்டவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய பணிகளைச் செய்ய இந்திய சமயங்களின் மையம் பயன்படும். இது காலத்தின் தேவை. நடுவண் அரசு செய்யுமா?
—'மக்கள் சிந்தனை—15-5-83
மனிதவளம்! ஆம்-இந்த உலகில் ஈடும் இணையும் இல்லாத வளம் மனிதவளமே! ஆம் மனிதவளம் படைப்பாற்றல் உடையது. இயக்கத் தன்மை உடையது! ஆளுமை உடையது; ஆயினும், ஏன்? இன்று நமது நாட்டில்-மனிதம் என்பதும் ஒரு வளமாகத் தோன்றவில்லை. ஏன் மனிதனேகூடத் தன்னைவிட தனது ஆற்றலைவிட, மனித சமூகத்தைவிடப் பணத்தையே பெரிதெனக் கருதும் புன்மையைக் காண்கிறோம்; இந்தப் புன்மையிலிருந்து மனிதத்தை மீட்டுத் தன்னுடைய வளத்தை-ஆற்றலை உணரச் செய்வதே கருத்தரங்கின் நோக்கம்.
மனித வளத்தை உயிரியல், இயற்பியல் என்று அறிவியல் மரபியல்-ஆராய்கிறார்கள். இயற்பியலில் உயிர்களின் தோற்றம் இயக்கம் முதலியன பற்றியே ஆராய்கிறார்கள். இயற்பியல் ஆய்வு அளவுடன் மனித உயிரியல் நின்றுவிடுவதில்லை; மனிதம் ஓர் அறிவுப் பொருள்; உணர்வுப் பொருள். ஆம் ஆன்மா என்பது உயிர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு உரிய வடமொழிச் சொல். ஆன்மிகம்ஆன்மாவின் தரம்-பண்பு என்பது பொருள். இந்த உலக இயக்கம் ஐம்பூதங்கள் வழி இயங்குகிறது; இயக்கப்படுகிறது. இது அறிவியல் உண்மை. ஆனால் இந்த இயக்கம் இடையீடின்றித் தொடர்ச்சியாக இயங்கவும் நிலைபெறவும் பண்பாடு காரணமாக அமைகிறது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் என்று திருக்குறள் கூறும். ஆன்மிகம் என்பது ஆன்மாவை-உயிரை சால்பின் பண்பில் வளர்த்தல் என்பது. கடவுள் உயர்வற உயர்ந்த நலமாகும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது! கடவுள் நன்றுடை யான்; இன்பமுடையான், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த அன்பு, இன்ப அன்பு, கடவுள் உண்மை; வாலறிவு: கடவுள் இறவாத இன்ப அன்பு. இத்தகு இயல்புகள் மிக்குடைய கடவுட் பொருளோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆன்மிகம். அந்தக் கடவுள் இயல்புகளைச் சால்புகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளும் செயல்முறை வழிபாடு.
ஆன்மா பிழைத்தல் கூடாது; வாழ்தல் வேண்டும். இன்று மனிதர்கள் வாழவில்லை. “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்பார் மாணிக்கவாசகர். வாழ்தலே மனித வளத்தின் அடையாளம். மனிதவளம் பொறிகளில் மட்டும் அமைந்தது அன்று; புலன்களில் அமைந்து பொறிகள் வாயிலாக இயங்குவது. புலன்கள் அறிவுக் கருவிகள். இப்புலன்களில் மிகச் சிறந்த சிந்தனை எதனைச் சார்ந்திருக்கிறதோ அதனைச் சார்ந்து வாழ்வு அமைகிறது. சிந்தனை பொறிகளின் ஆற்றலுக்கடங்கி விடுமாயின் ஆன்மா வாழ்வை இழக்கிறது. மாந்தரில் பலர் உண்பர். உறங்குவர். இனவிருத்தி செய்வர். இத்தகையோர் ஆன்மாவை இழந்து இழிபிறவிகளாகி அழிவர். சித்தம் ஆன்மாவின் ஆளுகையிலும் ஆன்மா இறைவனின் ஆளுகையிலும் அடங்கி இருப்பின் வாழ்வு சிறக்கும். ஆன்மா வளரும்; ஆன்மாவின் தரம் உயரும். இத்தகு வாழ்வே வாழ்வாங்கு வாழ்தல்.
ஆன்மாவிற்கு வாய்த்த அகநிலை அறிவுக் கருவிகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகியன. இவற்றுள் இன்று பலர் மனத்தை மட்டுமே அறிந்துள்ளனர்; மனம் பற்றி மட்டுமே பேசுகின்றனர். மனம் என்பது ஒரு சாதாரணக் கருவியேயாம். மனம் செய்திகளை எளிதில் பற்றிக் கொள்ளும் தன்மையது. ஆனால் எதைப் பற்றலாம் ? எதைப்பற்றக் கூடாது? என்ற அறிவு ஆன்மாவுக்கு இல்லை. மனம் எதையும் பற்றும்; மனத்தினாலேயே பலர் வாழ்க்கை பாழ்படுகிறது. அதனாலேயே தமிழ் மூதாட்டி மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்றார். மனம் பற்றும் செய்திகளை, புத்தியினிடத்தில் ஒப்படைத்து நன்று-தீது கண்டறிந்து ஏற்பது புத்தி, புத்தியாலும் கண்டறிய இயலாத செய்திகளைச் சித்தம் ஆய்வு செய்து ஏற்றுக்கொள்ளும். சித்தம் செய்த முடிவைச் செயற்படுத்துதல் அகங்காரமாகும். இதுவே ஆன்மாவின் இயக்கமுறை. மனதை மட்டும் மையமாகக் கொண்டு வாழும் மாந்தார்கள், புத்தியைப் பயன்படுத்திவாழ்வார்கள். சித்தத்தைப் பயன்படுத்தி வாழ்பவர்கள் வளர்ந்தவர்கள்-உயர்ந்தவர்கள். சித்தத்தைத் தமது ஆளுகையில் வைத்துக் கடவுளின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்கள் வளர்ந்த மனிதர்கள்; உயர்ந்தவர்கள்; பெருந்தகையாளர்கள்.
ஆன்மிகப் பண்புகள் இயல்பாகவே வாரா. ஆன்மிகம் ஒரு சிறந்த அறிவியல்; ஆன்மிகத்தின் முதற்படி தன்னையறிதல். அதாவது தனது குறை நிறைகளை அறிதல், பெற்றிருப்பதும் பெறாததும் அறிதல்; பெறத்தக்கனவற்றை அறிந்து, அடைய-பெற முயற்சி செய்தல். ஆன்மிகம் கடவுளைச் சார்ந்தது என்பது உண்மை. ஆனால் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்தது என்றால் கடவுளை மட்டுமே சார்ந்தது என்று கொள்ளுதல் கூடாது. ஆன்மாவின் முயற்சிகளே வாழ்விற்குப் பெரிய துணை. கடவுள் தனித் துணையேயாம்.
இயற்பியல் வேதியியல்கூட காலத்தில் நிகழாத போது மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதுபோல ஆன்மிகத்திலும் காலத்தில் நிகழும்போது ஆன்மா வளர்கிறது-வாழ்கிறது - உயர்கிறது. ஆன்மிகம் என்றால் வெறும் சடங்குகள் தோத்திரங்கள் என்று பொருள் கொள்ளுதல் கூடாது. இன்று கடவுளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் சடங்குகள் பயனற்றவை; ஆன்மாக்கள் கடவுளை எண்ணுதல் வேண்டும்; சிந்தனை செய்யவேண்டும். கடவுட் பண்புகளைச் சார்ந்து வாழ்தல் வேண்டும்; இதுவே ஆன்மிகம்.
வேளாண்மையில், பயிர் செய்தலைவிடக் களை எடுத்தலும் பயிர்ப் பாதுகாப்பும் இன்றியமையாதன. அது போல ஆன்மிகத்தில் வேளாண்மை என்பது கடவுளும் ஆன்மாவும் ஒன்றோடொன்று கலந்து செய்யும் ஞானவேள்வி யாகும். இந்த வேள்விக்குப் பாதுகாப்பே பத்திமையும், அன்பும், தொண்டுமாகும். ஆன்மிக வாழ்க்கையின் பயன் ஞானமேயாகும். “ஞானத்தால் அன்றி வீடு பேறில்லை” என்பது மெய்கண்ட சித்தாந்தம். ஞானம் என்பது பேரறிவு. அதாவது அறியாமைக் கலப்பிலாத அறிவு. இந்த அறிவை ஆன்மா பெறுதலும் இந்த அறிவின் பயானாகிய இன்ப அன்பில் திளைப்பதுமே வாழ்க்கையின் குறிக்கோள்.
ஆன்மாக்கள் இந்த உயர்ந்த குறிக்கோளை அடைய உள்ள வாயில்களில் ஒன்று பத்திமை. ஆன்மாவை-உயிரை இயல்பாயமைந்துள்ள கடினப் போக்கை நெகிழ்விக்கும். ஆன்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும். பத்திமை ஒரு செயலூக்கி,
அன்பு ஆற்றல் மிக்கது. உடலும் உடலைச் சார்ந்துமே (அறிவியலைச் சாராமல் உடலை மட்டுமே சார்ந்தது) வாழ்கிறவர்கள் தன்னலமிக்குடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அன்பு செய்யத் தெரியாது. தியாகம் என்பதும் தொண்டு என்பதும் இவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ஆன்மாவைச் சார்ந்து வாழ்பவர்கள் சற்று வளர்ந்தவர்கள். இவர்களிடம் தன்னலம் கட்டுப்பாட்டிற்குள் அடங்குவதாக இருக்கும். ஏன் நல்லவர்களாகக் கூட இருப்பர்; ஆனாலும் அதிகாரப் பசி இருக்கும்; இவர்களும் மற்றவர்களிடம் அன்பு காட்டுவார்கள். ஆனால் இவர்களை அடக்கியாளவே. அதாவது தற்சார்புடன் கூடிய-அன்பு காட்டுவர். இது பயன் அற்றது; விளைந்த அன்பும் அல்ல. கடவுளைச் சார்ந்து கடவுளின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு வாழ்தல் அன்பின் களம்; ஞான வேள்வி. இத்தகையோர் தமக்கென முயலார்; பிறருக்கெனவே முயற்சிகள் செய்து உழைக்கும் நோன்புடையவர்கள். இந்த வாழ்வு புகழ் இயல் வாழ்வு; தவம் நிறைந்த வாழ்வுமாகும்.
“இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலா தவர்”
-என்னும் திருக்குறள் நினைவு கூரத்தக்கது.
ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் கடவுளின் ஆளுகைக்கு அடங்குவர்; கடவுளின் சிறந்த இயல்புகளைப் பெற்று வாழ்க்கையில் காட்டுவர்; உயிர்க் குலத்தை நேசிப்பர்; வாழ்வித்து வாழ்வர். இந்த ஆன்மிகம் இந்தியாவின் வழிவழி வளம்; உடைமை.
இவற்றைப் பேணிக் காப்பதிலேயே நமது எதிர் காலத்தின் சிறப்பு அமைந்திருக்கிறது.
மானுடம் முழுமை பெறுவதற்குச் சமயம் இன்றியமையாத தேவை. மானுடத்தின் வெற்றி, உலகியலையும் உடலியலையும் மட்டும் சார்ந்திருக்கவில்லை. மானுடத்தின் வெற்றி, ஆன்மாவின் தரத்தையே சார்ந்திருக்கிறது. ஆன்மாவின் வளர்ச்சிக்கு - ஆன்மா முழுமை பெறுவதற்கு அறிவு தேவை. அறிவின் முதிர்ச்சியே சமயம். மானிடன் முதிர்ச்சியடைய-முழுமையடைய இந்த உலகியல் வாழ்க்கையும், உடலியல் வாழ்க்கையும் கருவிகள் - சாதனங்கள் ஆகும். ஆன்மா தன்னைப் பற்றியும் தன்னுடைய வாழ்க்கை சார்ந்த உலகத்தைப் பற்றியும் எண்ணியபோது கடவுள் நம்பிக்கை தோன்றியது. “இந்த உலகத்தின் வியத்தகு அமைப்புகளிலே - வியத்தகு நிகழ்ச்சிகளிலே எத்தனையோ அதிசயங்கள் விரிந்து கிடக்கின்றன. அவற்றிலே ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு முறை பிறழாத் தன்மையிருக்கிறது. இவற்றுக்கு யார் காரணமாக இருக்கக்கூடும்? நிச்சயமாக மனிதனாக இருக்கமுடியாது. “என்னுடைய அறிவால் சொல்ல முடியாத -என்னுடைய அனுபவத்தால் எட்டிப் பிடிக்க முடியாத ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதை உணர்கிறேன்” என்று கூறுகிறான் சிசரோ என்ற பேரறிஞன்.
சிலர் ஆழமாக, நுண்மையாகச் சிந்திக்க முடியாமல் - சிந்தனையில்லாமல் ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், தீ, வளி, வான் ஆகியவற்றைக் கடவுள் என்று அச்சத்தின்வழி அன்பு பாராட்டி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் அறிவின் முதிர்ச்சியும் இல்லை! பாதுகாப்பு உணர்வு மட்டுமே என்பது வெளிப்படை வேறுசிலர் பஞ்சபூதங்களால் ஏற்பட்ட-ஒரோ வழி ஏற்பட்ட துன்பங்களுக்குப் பயந்து வழிபட்டனர். இவர்களுக்குப் பயத்திலிருந்து கடவுள் நம்பிக்கை தோன்றியது. நமது மரபு வழிக் கொள்கைப்படி பயம் தீது, பயம் மிக மிகக் கொடியது. பயத்திலிருந்து ஆன்மாக்களை மீட்பதுதான் சிறந்த அறம். ஆதலால்தான் நமது நூல்கள்,
“சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கள் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரன்முத லோரும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை”
—(திருநாவுக்கரசர் 4 ஆந்திருமுறை 11)
வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் விழிலென் வேலைநஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே!
(திருநாவுக்கரசர் 4 ஆம் திருமுறை 1057)
"........ எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில்என் ஞாயிறு எமக்கு”
(மாணிக்கவாசகர் - திருவெம்பாவை 19)
என்றெல்லாம் அருளியுள்ளன. இறைவனின் திருக்கரங்களில் ஒன்று அபயக்கரம் என்பதையும் அறிக. அதாவது உயிர்களைப் பயத்திலிருந்து மீட்கும் கை-அபயக்கை
நமது கடவுள் நம்பிக்கை அவாவுதல் அடிப்படையில் தோன்றியது. நாம் பெற்றுள்ள அறிவும் ஆற்றலும், நமது வாழ்க்கையை வளமாக்கப் போதவில்லை. நம்முடைய அறிவு அகண்டமானால்தான் நாம் வளரமுடியும்; வாழமுடியும்; உய்தி பெறமுடியும். ஆதலால் பேரறிவும் பேராற்றலுமுடைய கடவுளை,- பேரறிவும் பேராற்றலுமுடைய பொருளை மனிதன் நாடினான். கடவுள், பேரறிவும் பேராற்றலும் உடையவன் என்று நம்பினான்! எப்படி நம்பினான்? வினா எழுதல் இயற்கை ! இந்தப் பரந்த உலகியற்கையில், இயற்கையின் நிகழ்வுகளில் ஏதோ ஓர் ஒழுங்கையும் (Order) முறைபிறழாத நிலையையும் (Consistency) கண்டான் ! மானுடத்தின் வரலாறு முழுதையும் கூர்ந்து நோக்கினால் ஒழுங்குகள் கெட்ட நிலையே-முறைபிறழ்வுகளே ஏராளம் ! முறை பிறழ்வுகளின் காரணமாக, கெட்ட போரிடும் உலகம் தோன்றிற்று. நோய், சாக்காடுகள் ஏற்பட்டன: இவற்றைக் கற்றும் கேட்டும் கண்டும் உணர்பவர்கள், இந்த வியத்தகு உலகின் ஒழுங்கை-முறைபிறழா நிகழ்வுகளை-கடப் பாட்டுடன் இயங்கும் தகைமையைக் கண்டுணர்ந்து இவற்றிற்குக் காரணம் ஒன்றிருப்பதாக உணர்ந்தார்கள்; உணர்கிறார்கள். அந்த ஒன்றுக்குக் கடவுள் என்று பெயர் சூட்டினார்கள். அந்த ஒரு பொருளிடமிருந்து ஒழுங்கை, அறிவை, ஆற்றலைப் பெற்று வாழ்வை முறைப்படுத்திக் கொண்டு அவ்வழி முழுமையாக்கிக்கொள்ள, கடவுளை வழிபட்டார்கள்; கடவுள் வழி நின்றார்கள்!
கடவுள் நம்பிக்கை தோன்றிய பொழுது சமயம் இல்லை; தத்துவங்கள் இல்லை. கடவுள் நம்பிக்கையும் வழிபாடும் தோன்றிய பிறகே சமயநெறி, வழிபாட்டு முறைகளைக் கற்பிக்கும் வகையில் முகிழ்த்தது. இத்தகு சமயங்கள் பல, உலகில் இயல்பாகத் தோன்றி வளர்ந்தன. தொடக்கத்தில் இந்தச் சமயங்களைச் சார்ந்தவர்கள் உண்மை தேடும் வகையிலும் காலப்போக்கில் தத்தம் சமயமே உயர்ந்தது என்று நிலைநாட்ட முனைந்தபோதும் தத்துவ இயல்களே தோன்றின. தத்துவ இயல்களும் விரிந்து வளர்ந்தன. தத்துவர்களிடையே ஏற்பட்ட போட்டியில் கடவுளர் முதன்மைப் படுத்தப்பட்டுப் புனைவுக் கதைகள்-புராணங்களும் தோன்றிய பிறகு சமயக் காழ்ப்புகளும் கலகங்களும் தோன்றலாயின. கடவுள் நம்பிக்கைக்கும் வழிபாட்டுக்கும் சமயங்களின் சார்பு போதும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாங்குவாழ்வதில் ஆர்வம் காட்டினர்; தொல்காப்பியப் பொருளதிகாரத் தோற்றம் இதற்குச் சான்று. தமிழர்களின் கடவுள் நம்பிக்கையும் சமயச் சார்பும் தொன்மையானவை. தனித்தன்மையுடையவை.
“சைவசித்தாந்தம் என்னும் தத்துவக் கொள்கையானது மிக விரிந்ததும் பெருஞ் செல்வாக்குடையதும், ஐயத்திற்கு இடமின்றி உண்மையிலேயே பெருமதிப்பிற்கு உரியதும் இந்திய நாட்டிலுள்ள சமயக் கொள்கைகளுக்கெல்லாம் தலைசிறந்ததுமாகும். தென்னிந்திய மக்களின் மிகச்சிறந்த பேரறிவின் பெருவிளைவே சைவசித்தாந்தமாகும்” என்று டாக்டர் ஜி. யு. போப் எழுதியிருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
தமிழர்களின் சமயச்சார்பு ஆரியச் சார்புடையதன்று; சமஸ்கிருதச் சார்புடையதுமன்று. தமிழர்களின் அறிவியல் தெளிவில் முகிழ்த்ததே தமிழர் சமயம். தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு, சமயம், தத்துவஇயல் புராணங்கள் ஆகியவை படிமுறையிலேயே வளர்ந்து வந்துள்ளன. தமிழர்கள் எந்த ஒரு மொழியையோ சமயத்தையோ வெறுத்ததில்லை. அதே போழ்து தனித்தன்மையைத் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளனர். அதனாலேயே ‘ஆரியம் நன்று தமிழ் தீது’ என்றவர்கள் ஒறுத்து ஒதுக்கப்பட்டனர்.
தமிழர் சமயம் தெளிவான கொள்கையுடையது! தமிழர் சமயத்தில் இயல்பாகவே தத்துவியல் தெளிவு இருக்கிறது. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் இசைந்தது தமிழர் சமயம். பொருள்கள் இயல்பாக உள்ளவை என்பது தமிழர் சமயத்தின் அடிப்படை. முதலாவது கடவுள். இரண்டாவது உயிர்கள். மூன்றாவது உயிர்களைப் படைக்கவில்லை என்ற உண்மையைத் தமிழர் சமயமே-சிவநெறியே கூறுகிறது. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்ற ஒரு கொள்கை யளவிலேயே உலகின் நுற்றுக்கணக்கான சிக்கல்களுக்கு எளிதான தீர்வு காணமுடிகிறது. அதுமட்டுமன்று வாழ்வின் பொறுப்பு மானுடத்தினுடையதாகிறது. இயல்பாக ஆணவத் தொடர்புடைய ஆன்மா, ஆணவத்தின் கொட்டத்தை அடக்கச் சிந்தனையிலும் செயலிலும் அறிவார்ந்த நிலையில் வளர்ந்து இறைவனின் இன்ப அன்பியலைச் சார்தலே தமிழர் சமயக் கொள்கையின் சாரம். இந்த அடிப்படையில் தோன்றிய சமயத்திற்கு-தத்துவம் சார்ந்த சமயத்திற்குப் பெயர் சைவசித்தாந்தம். தத்துவ உலகத்தில் இக்கொள்கையே முடிந்த முடிபாகக் கருதப்படுகிறது.
சைவ சமயம், வைணவ சமயம் இரண்டும் தமிழர்களின் பழைய சமயங்கள். சைவ சமயத்தின் கொள்கைகள் தொல்காப்பியம் மற்றும் சங்க நுல்களில் சிறப்பாகப் பேசப்பெற்றுள்ளன.
"பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுக பெரும நீயே!"
(புறம் 61; 5-7)
"மணி மிடற்றொருவன்” என்ற இந்தச் சொற்றொடர் இறைவனின் இறவா நிலையையும் உயிர்கள் மாட்டுள்ள கருணையையும் புலப்படுத்துகிறது.
:"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
(புறம் 192:2)
இக்கருத்துக்களையே திருக்குறளும் காப்பியங்களும் வளர்த்தன. இன்றுவரை உயிர்ப்போடு வளர்ந்து வரும் சமயம் சித்தாந்தச் சிவநெறி.
சிவநெறி ஒரு கடவுள் நம்பிக்கையுடையது. உயிர்களைப் பொறுத்தவரையில் அவை பல என்னும் கொள்கையுடையது. வழிபாடு என்பது ஆன்மாவின் செயல்; ஆன்மாவின் முயற்சி வழிபாட்டுக்குச் சடங்குகள் அளவோடு இருக்கவேண்டும். அதாவது ஆன்மாவை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தும் அளவுக்கே சடங்குகள் இருத்தல்வேண்டும். சித்தாந்தச் சிவநெறியில் சாதி வேற்றுமைகள் இல்லை; ஏழை-பணக்காரன் வேறுபாடு இல்லை. சித்தாந்தச் சிவநெறி ஓர் உயர்ந்த சமயநெறி; வாழ்வியலைச் சார்ந்து நின்று வளர்க்கும் நெறி.
எந்த ஒரு சமயமும் இயக்கத் தன்மையைப் பெற்றால்தான் வளரும். தமிழர் சமயநெறி இயக்க வடிவம் பெறாமலும் இல்லை. அதேபோழ்து வளர்ந்து நிலைபெறு தலுக்குரிய அளவுக்கு இயக்க வடிவம் பெறவில்லை என்ற குறையை நாம் உணர்தல் வேண்டும். இயக்கம் என்பது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது இடையறாது மக்களை நாடித் தன் வயப்படுத்திக் கொள்வதே இயக்கத்தின் செயற்பாடு! பண்டைக் காலத்தில் தமிழகத் திருக்கோயில்கள், இயக்க வடிவம் பெற்றிருந்தன. இமயம் முதல் குமரி வரை திருக்கோயில் அமைப்புப் பணிகளும் வழிபாட்டு முறைகளும் வெகுவேகமாகப் பரவின.
மானுடத்தின் வாழ்க்கை வரலாற்றில் எந்த ஒன்றும் நிலையான இடம் பெற வேண்டுமானால் அதற்கு இயக்கத் தன்மை இருக்கவேண்டும். அதாவது சமயத் தத்துவங்கள் நிலையானவையாகக் கெட்டிப்பட்டுவிடக் கூடாது. காலம், நாடு, நடைமுறைப் பழக்கங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப நாளும் புதுக்கிக் கொள்ளும் ஆற்றல்-இயல்பு சமயங்களுக்கும் சமய நிறுவனங்களுக்கும் வேண்டும். இடையறாது மக்களை நோக்கிச் சென்று அம்மக்களைத் தம் வயப்படுத்திக் கொண்டு மேம்பாடுறச் செய்தலை விழுமிய குறிக்கோளாகக் கொண்டு இயங்குதல் வேண்டும். ஓய்வு ஒழிவு இல்லாத செயற் பாடுகளை-மக்களை நோக்கிய செயற்பாடுகளை நாளும் புதுப்பித்துக் கொள்ளுதல் இயக்கத்தின் இலக்கணம். தமிழர் சமயத்தில் தோன்றிய திருக்கோயில்கள் தொடக்க காலத்தில் இயக்க வடிவம் பெற்றிருந்தன. பரந்த உலகத்தில் எங்கும் வெகுவேகமாகத் திருவுருவ வழிபாடு, திருக்கோயில் வழிபாடு ஆகியன பரவின. ஊர்தோறும் மக்கள் திருக்கோயில்களை நாடினர்; திருக்கோயில்களை அந்த மக்கள் பேணினர். திருக் கோயில்கள் மக்களைப் பேணின. ஏன் வாழும் மானுடத்தின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயன்று வெற்றிகண்டது நமது சைவநெறி. அதனாலன்றோ கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை தோன்றிற்று. ஆயினும் திருக்கோயில்களைச் சார்ந்த மறுமலர்ச்சி நிகழ்வு நிலைத்து நிற்கவில்லை. இடையறவு ஏற்பட்டது. மீண்டும் ஏழாம் நூற்றாண்டில் அப்பரடிகள் தோன்றி உழவாரப்படை யேந்தித் திருக்கோயில்களைக் காக்கும் பணியில் தலைப் பட்டார். அப்பரடிகள் காலத்தில் வந்தருளிய திருஞான சம்பந்தர், தமிழ்ச் சமயநெறிக்கு முரணாக எழுந்த சூழல்களை எதிர்த்துப் போராடினார். இதனைச் சேக்கிழார், “செழுந்தமிழ் வழக்கு அயல்வழக்கின் துறைவெல்ல என்று கூறி விளக்குகின்றார். ஆதலால் திருஞானசம்பந்தர் சமய இய்க்கம், சமயப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியுள்ளார்
திருஞான் சம்பந்தர் சிவநெறிப் பாதுகாப்புக்காக நாளும் இன்னிசையால் தமிழ்ப்பரப்பித் தமிழ்நெறிக்கு இயக்கம் நடத்தினார் நமது பாதுகாப்புக்காகப் போராடினார். அதுபோலவே அப்பரடிகளும் இயக்கம் நடத்தினார். நாடெல்லாம் நடந்துசென்று “மனிதர்காள் இங்கே வம்மின் ! ஒன்று சொல்லுகேன்” என்று அழைத்து அருள்நெறியில் ஆற்றுப்படுத்தினார், இங்ஙனம் அயல்வழக்கைவென்று விளங்கிய தேவாரத் திருமுறைகளைக் கூடத் தமிழர்கள் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டாதாகத் தெரியவில்லை அயலவர், திருமுறைகளை முடக்கினர். காரிருள் சூழ்ந்தது. பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் திருமுறைகள் மீட்கப் பெற்றன. இராஜராஜசோழன் காலத்தில் தொடங்கிய சமய மறுமலர்ச்சி இயக்கம் பிற்காலச் சோழர் காலம் மூன்றாம் குலோத்துங்கன் காலம்வரை நீடித்தது. பின் தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆட்சியை இழக்கின்றனர். குகையிடிக் கலகங்கள் நடக்கின்றன. அதன்பின் தொடர்ச்சியாக மாறி மாறித் தமிழர் அல்லாதவர் ஆட்சிகள்; தமிழின் இடத்தைச் சமஸ்கிருதம் பெறுகிறது; சாதிமுறைகள் இறுக்கமாகின்றன. சமுதாய மையங்களாக விளங்கிய திருக்கோயில்களிலிருந்து மக்கள் பிரிக்கப்படுகின்றனர். திருக்கோயில்கள் உயர்சாதியினரின் ஏகபோகமாகின்றன. சமுதாயம் நிலைதடுமாறுகிறது. நமது சமயம் வளரவில்லை.
நாடு சுதந்திரம் பெற்றும் “இந்து சமயம்” என்ற கூட்டமைப்பின் காரணமாக உயர்சாதியினரின் உடும்புப்பிடி தளரவில்லை. நம்மவர்கள் கடவுளை அஞ்சியும் யாசித்தும் வழிபட்டனர். சடங்குகளும் கழுவாய்களும் மலிந்தன. நவக்கிரக வழிபாடுகளும் சிறு தெய்வ வழிபாடுகளும் வளர்ந்தன. நமது சமய நிறுவனங்கள் செயலிழந்த நிலையில் இருந்தன-இருந்துகொண்டிருக்கின்றன. இன்றையச் சூழ்நிலையில் கற்றறிந்த சிலருக்குத்தான் சித்தாந்தச் சிவநெறி தெரியும். மற்றபடி இந்து சமயம்தான்! மாயாவாதம்தான்! நமது சமயம் தனித்தன்மைகளை இழந்து தடம் மாறியது. ஏன்? இன்று நமது சைவ சமயமே சாதிச் சமயம்போல் வழங்கப்பெறுகிறது. மானுட நேயத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்ந்த நமது சமயம் அதை அறவே மறந்து ஊழ்த் தத்துவத்தில் கிடந்து உழலுகிறது.
“அவ்வினைக் கிவ்வினை யாம் என்று
சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான்
கழல் போற்றதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்
பெறாதிரு நீலகண்டம்”
என்பது திருஞான சம்பந்தர் திருப்பாடல்.
ஊழ்த் தத்துவத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெறத் திருக்குறள்-திருமுறைகள் வழிகாட்டினாலும் ஊழ்நம்பிக்கை மக்களுக்குச் சொல்லொணாத் துன்பமிழைத்து வருகிறது. நமது சமய நெறியில் ஒரு காலத்தில் தொண்டுகளாக இருந்தவை இன்று தொழில்களாக மாறிவிட்டன. திருக்கோயில் தூய்மையை உடலுழைப்பில் செய்வோர் இன்று ஏழைகள்! ஏழைக் கூலிகள். அக்கூலியும் வயிற்றுக்குப் போதாத கூலி. நமது சமய நெறி இன்று முற்றாக வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டது. தத்துவங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. மெய்ப்பொருள் தேடும் நாட்டமும் இல்லை. மடைப்பள்ளிதான் இன்றையத் திருக்கோயிலின் ஆதிக்க சக்தி! பௌராணிக அடிப்படைகளும் சடங்குகளும் வேண்டுதல்களும் தான் இன்றைச் சமயத்தில் எஞ்சியுள்ளன. மக்கள் ஞானத்தை நாடவில்லை. ஏன் இந்த அவலம்?
தமிழ்நாட்டில் தமிழ்ச் சமய நெறியை அரியணையில் அமர்த்தவேண்டும்; திருக்கோயில்களில் தெய்வத்தமிழில் வழிபாடுகள் இயற்றவேண்டும். தமிழர்கள் இடையில் வந்த சாதிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒருகுலமாக வேண்டும்; மீண்டும் திருக்கோயில்களைச் சமுதாய மையங்களாக ஆக்கவேண்டும். திருக்கோயில் சார்ந்தே நமது மொழி, சமயம், கலை, நாகரிகம், சமுதாயம் ஆகியன வளரவேண்டும். திருக்கோயில்கள் அரசின் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு அந்தந்த ஊர்மக்கள் சொத்தாக அமைந்து, மக்களால் மக்களுக்காக நிர்வாகம் செய்யப் பெறுதல் வேண்டும்.
திருக்கோயில்களின் ஆட்சிமுறை இராஜராஜன் காலத்தில் இருந்ததைப்போல கிராமத்தினால் தேர்வு செய்யப்பெறும் தக்காரால் செய்யப்பெற வேண்டும். ஆண்டு தோறும் நிர்வாக அமைப்பு மாறலாம். அரசு தணிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோயில், அதனைச் சுற்றியுள்ள மக்களைத் தாய்போலப் பேணி வளர்த்துக் கல்வியும் ஞானமும் தந்து உயர்ந்திடுதல் வேண்டும். இந்த நெறிமுறை கைகூடினால் செந்தமிழ் வழக்கு வையகத்தில் நின்று விளங்கும்.
மனித குலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடந்த கால மனித வரலாறு, வாழும் நமக்குத் தந்த படிப்பினைகள் பலப்பல வரலாற்றுப் போக்கில் ஆக்கவியற் சிந்தனைகள் சில தோன்றின: அந்தச் சில கருத்துக்கள், உணர்வுகள் இன்றளவும் மனித குலத்திற்கு ஒளிவிளக்குகளாக நின்று வழி காட்டுகின்றன என்பதூஉம் மறுக்க முடியாத உண்மை. ஆயினும், மனித உலகம் தீயநெறிகளில் சிக்கிச் சீரழிந்த செய்திகள் வரலாற்று ஏடுகளில் அதிகமான இடத்தைப் பிடித்துள்ளன என்பதை மறுப்பார் யார்? வரலாற்றுக் காலந்தொட்டு சற்றேறக் குறைய 5000போர்கள் நடந்துள்ளன. இந்தப் போர்களால் ஏற்பட்ட அழிவுகள் பல நூறு தலைமுறைகளின் வாழ்வுக்கு ஆக்கம் தரத்தக்கன என்று எண்ணும் பொழுது கண்கள் குளமாகின்றன. இன்றும் மனிதன் நெருக்கடிகளுக் கிடையிலேயே வாழ்கிறான். களவும் காவலுமே இன்றைய வாழ்வின் கட்டாயம். இன்றளவும் தருமம் இளைத்தே வந்து கொண்டிருக்கிறது. சூதுகளே வெற்றி பெற்றுள்ளன; வெற்றி பெறுகின்றன.
இந்தச் சூழ்நிலைகளால் எய்த்துக் களைத்துப் போன மக்கள் ஒழுங்குகள், ஒழுக்க நெறிகள், ஒழுக்க நெறிகளைச் சார்ந்த அமைதி, துன்பச் சூழலுக்கு அப்பாலுமுள்ள உலக இயக்கம் ஆகியவற்றை உற்றுப் பார்த்தனர். வியத்தகு நிகழ்ச்சிகள், சிந்தனை எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒழுங்குகள், முறை பிறழாத நிகழ்ச்சிகள் அமைந்திருப்பதைக் கண்டனர். இத்தகைய வியத்தகு அமைப்புக் காரணம் கடவுளைத் தவிர வேறு யாராக இருக்கக் கூடும் என்று எண்ணினர். கடவுள் நம்பிக்கை தோன்றியது. கடவுள் நம்பிக்கை, சமநெறி, தன்னலத்துறவு, பிறர் நலம் பேணல் ஆகிய அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாடிய மக்கள், தம்மைத் தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய தனித் துணையை நாடினர். அங்ஙனம் தேடி உணர்ந்த தலைமையே கடவுள். அக்கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது, நன்றுடையான், தீயதில்லான்; இன்பன்; துன்பமில்லாதவன்.
மக்கள் கடவுள் நம்பிக்கையில் வாழத் தலைப்பட்ட பிறகு, நெறிமுறைகள் தோன்றின. நெறிமுறைகள் சமயங்களாக உருப்பெற்றன. சமயநெறிகள் வாழ்வியலைத் தழுவியனவாக இயக்க நிலையில் இருந்த வரையில் மனிதகுலம் அதிகப் பயன் பெற்றது. பின் காலப்போக்கில், சமயங்கள் நிறுவனங்களான பிறகு, அவற்றின் உயிர்ப்பாக இலங்கிய மனித நேயமும் தொண்டும் அளவால் குறைந்துவிட்டன. மாறாக, மனித உலகத்திற்குத் தீமையையும் தரக்கூடிய நிலையில் திசைமாறிவிட்டன. அதனால், சமயம் சுரண்டும் தன்மை வாய்ந்த-பொருளாதாரத் தன்மையுடைய முதலாளிகளுடனும் நிலப்பிரபுக்களுடனும் கூடிக் குலாவியதுடன், அவர்களுடைய அநீதித்தன்மை வாய்ந்த செயல்களுக்கு நீதிமுத்திரை குத்தித்தரும் பாதகச் செயலிலும் தலைப்பட்டன. கொடிய ஆதிபத்திய அரசுகளுடன் கைகோத்துக் கொண்டு, மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படத் தலைப்பட்டன. இதனால் - பொருளாதார ஆதிபத்திய எண்ணங்களால் சமயங்களும் பலவாயின. பின் இச்சமயப் பிரிவுகளுக்கிடையே சண்டைகள். இங்ஙனம் சமயங்களின் வரலாறு வளர்ந்தது; வளர்ந்து வந்து கொண்டிருந்தது. இனி எதிர்வரும் காலத்திலாவது சமயம் அதனுடைய தொடக்க கால இலட்சியமாகிய மனித நேயத்தினைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். ஒரே கடவுள்; ஒரே குலம்; ஒரே உலகம்! ஒரே அரசு! என்ற திசைநோக்கி வையகத்தை இயக்க, வழி நடத்தச் சமயம் முன் வரவேண்டும்.
மனித குலம் வரலாற்றுப் போக்கில் கண்ட தனிச் சிறப்புடைய கொள்கை, கடவுட் கொள்கையேயாம். கடவுட் கொள்கையின் தோற்றத்திற்குப் பல்வேறு அடிப்படைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, பயத்தின் அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தோன்றியது என்பது. இந்த அடிப்படை அவ்வளவு சிறப்புடையதன்று. ஏனெனில் பயத்தைவிட மிகப் பெரிய தீமை வேறொன்றில்லை. பயம் மனிதனின் ஆற்றலை அழிக்கும். ஆதலால், பயத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, கடவுளை நாடினால் விளையக் கூடிய பயன் பெரிதாக இல்லை. எதிர் விளைவுதான் மிகுதி. கடவுள் அறிவுப் பொருள்; வாலறிவு; தனக்குவமையில்லாதது; வரம்பிலாற்றல் உடையது; அளவிலா இன்பமுடையது எனத் தேறி, சிற்றறிவு, சிறு தொழில், சிறு பொழுதின்பங்களில் சிக்கித் துன்புற்ற மனிதகுலம் தனது அறிவை, ஆற்றலை விரிவாக்கிக் கொள்ளக் கடவுளைத் தேடிக் கண்டது பிறிதோர் அடிப்படை இஃது அறிவியல் சார்ந்த முறை. இங்கனம் உலகத்தில் ஆயிரக் கணக்கான சமயங்கள் தோன்றின. அவற்றுல் பல மறைந்து போயின. இன்று உயிர்ப்போடு உள்ள சமயங்கள் இந்து, இசுலாமியம், கிறித்துவம், பௌத்தம் முதலியவாகும்.
இந்தச் சமயங்கள் தம்முள் ஒத்துப் போகவில்லை. என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஒத்துப் போகவும் இயலாது. மனிதனின் ஆன்மா தன்முனைப்போடு ஆவேசப்படும் இடமெல்லாம் வேற்றுமைகளே கால் கொள்ளும், இஃது இயற்கையின் நியதி. சமயங்களிடையே வேற்றுமை என்பது வேண்டும் என்றே கற்பிக்கப் பெறுபவையல்ல. ஒவ்வொரு சமய நெறியும் அது தோன்றிய காலம், நாடு, சமுதாயச் சூழல்கள், குறிப்பாகச் சமயநெறியைக் கண்டவர்கள் வாழ்ந்த சூழ்நிலை முதலியவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்க இயலாது. ஆதலால், வேற்றுமைகள் இருக்கின்றன. அன்று காலமும் தூரமும் வெல்லப்படாநிலையில் வேற்றுமைகள் நீடித்திருக்கலாம். இன்று உடனிருந்து கலந்து பேசித் தீர்வு காண்பதற்குரிய சூழல்கள் உருவாகிவிட்டன. ஆதலால், பல்வேறு சமய நெறிகளையும் ஆய்வு செய்து தேர்ந்து, தெளிந்து முடிவு காணக்கூடிய வாய்ப்புகள் பெருகி வளர்ந்து விட்டன. சிந்தையில் தெளிவு காணும் முயற்சி தேவை. ஆயினும் பல்வேறு சமய அமைப்புகள் நொடிப் பொழுதில் ஒன்றாகிவிடா! அப்படி ஒன்றாக்க முயற்சி செய்வதும் நல்லதல்ல. “ஒன்று” என்ற கருத்தும் உணர்வும் முதலில் வளரவேண்டும். அவரவரும் தம்தம் சமயத்தினைச் சார்ந்தொழுகும் மனப்போக்கு வரவேற்கத்தக்கது. அதே போழ்து, மற்றச் சமயங்களிடத்தில் நன்மதிப்பீட்டு உணர்வுகளைக் காண்பிக்க வேண்டும். இஃது இன்றைய உடனடியான தேவை.
இன்றைய உலகச் சமயங்களில் பெரியவைகளாகத் திகழ்வன இசுலாமியம், கிறித்துவம், பௌத்தம், இந்து சமயம் ஆகியனவாம். “இந்து சமயம் என்ற ஒரு சமயம் இயல்பாக இல்லை. இந்தியாவில் தோன்றி வளர்ந்த சமயங்கள் பலப்பல. இவையெல்லாவற்றையும் தனித்தனியே குறிப்பிட இயலாத இசுலாமிய அரசு, இந்தியாவில் தோன்றிய சமயங்களை யெல்லாம் இந்து சமயம் என்று சொல்லிவிட்டது. ஆங்கிலேய அரசும் இந்த நடைமுறையை மேற்கொண்டது. இந்தியன் என்ற பெயரைப்போல இந்து என்பதும் பொதுப் பெயரே. இந்து என்ற ஒரு பெயர் எந்தச் சமயத்தையும் குறிக்காது; குறிக்க இயலாது. இந்திய மண்ணில் தோன்றிய சமயங்கள் நூற்றுக்கணக்கானவை. அவற்றுள் ஒவ்வொரு சமயத்திற்குள்ளும் உட்பிரிவுகள் ஏராளம். இந்தியாவில் தலைசிறந்த சமயங்கள் இரண்டு. ஒன்று வைணவம்; பிறிதொன்று சைவம். வைணவத்தின் பிரிவுகள் 2; சைவத்தின் பிரிவுகள் 6 என்பது மரபு. இவை அகச் சமயங்கள், பின் அகப்புறச் சமயங்கள், புறச் சமயங்கள், புறப்புறச் சமயங்கள் என்றெல்லாம் சாத்திரங்கள் கூறுகின்றன. இந்தச் சமயங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் நுண்ணிய அனுபவங்களின் வழிவந்தவை. இந்து சமயங்களில் ஒன்று சித்தாந்தம் சைவசித்தாந்தம் என்று கூறுவர்.
சைவசித்தாந்தச் சமயச் சிந்தனைகள் தோன்றிப் பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. “இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மேம்பட்டது என்பதில் ஐயமில்லை” என்றார் ஜி. யூ. போப். சௌடி பாதிரிப் பெருமகனாரும் “சைவசித்தாந்தம் இந்தியச் சிந்தனைகளினதும் உணர்வினதும் சிகரம்” என்று புகழ்ந்துள்ளார். ஆயினும் தத்துவ விளக்க அடிப்படையில் முதன் முதலாக ஒரு முழுச் சொல் தோன்றியது 13ஆம் நூற்றாண்டில்தான். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மப் பல்லவன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் “நான் ஒரு சைவசித்தாந்த” என்ற வசனம் காணப்படுவதாகத் தெரிகிறது. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்டார்தான் இதனைச் சிவஞான போத நூல் மூலம் முறைப்படுத்தினார். தமிழகம் பல்வேறு சமயத் தாக்கங்களுக்கு ஆளாக நேரிட்டதை உணர்ந்த மெய்கண்டார், சமயங்களின் தத்துவக் கலப்பு ஏற்படாமல் தடுத்துப் பாதுகாக்கவே ‘சிவஞான போதம்’ இயற்றினார். அப்படியிருந்தும் சைவத்தில் ஸ்மார்த்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டது.
சைவசித்தாந்த சமயம் தெளிவான அடிப்படையுடையது; நம்பிக்கைக்குரியது; நல்வாழ்க்கைக்குரியது; மனிதகுலச் சிக்கல்களுக்கும் துன்பங்களுக்கும் தெளிவான தீர்வு காட்டுவது, சைவசித்தாந்த சமயம் மூன்று பொருள்கள் என்றும் உள்ளவை என்று அறுதியிட்டுக் கூறுகிறது. அவையாவன முறையே, இறை, உயிர், தளை என்பன. இவற்றைப் பதி, பசு, பாசம் என்றும் கூறுவர். உலகின் பல்வேறு சமயங்கள் கடவுளுண்மையில் வேறுபட்டதைப் போலவே கடவுள் ஆன்மா என்ற இடங்களிலும் வேறுபடுகின்றன; பல சமயங்கள், கடவுள் ஆன்மாவைப் படைத்தன என்று கூறுகின்றன. இந்து சமயத்தின் உட்பிரிவிலேயே ‘நானே கடவுள்’ என்று கூறும் ஒரு சமயமும் உண்டு. இவையெல்லாம் வாழ்வியலை ஆராய்ந்தறிந்தால் மெய்ப் பொருளறிவுத் துறையில் தத்துவத் தெளிவில் நிற்றல் அரிது. கடவுள் உயிர்களைப் படைத்தார் என்ற கொள்கை நிலைபெறல் யாங்ஙனம்? கடவுள் பூரணப் பொருள். கடவுள் உயிர்களைப் படைத்திருந்தால் உயிர்களுக்கு அறியாமை எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்ற வினாக்களுக்கு விடை கூறவேண்டிவரும். செழுந்தமிழ் வழக்காகிய சைவசித்தாந்த மரபுப்படி கடவுள் ஒருவர். அவர் ஞானத்தின் வடிவம்; போற்றல் உடையவர், உயிர்கள்பால் கருணை கொண்டவர்; ஆணவத்தில் கிடந்த உயிருக்கு அறிகருவிகளையும் செயற் கருவிகளையும் பொருத்தி உபகரித்து நுகர்பொருள்களையும் அளித்து வாழ்க்கையில் ஈடுபடுத்துகிறார்.
சித்தாந்தச் செந்நெறியில் கடவுள் சிவம் என்று அழைக்கப்படுகிறார். சிவத்தோடு சம்பந்தம் உடையது சைவமாயிற்று. சிவம் என்ற சொல் அல்லது பெயர் சங்க இலக்கியங்களில் வழங்கப்பெறவில்லை. ஆனால் சிவபிரானின் மிகப்பெரிய அருட்செயலாகிய வானவர் வாழ அமுதம் ஈந்து தாம் நஞ்சுண்ட செய்தியை நினைவூட்டும் வகையில்
“நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே”
(புறம்-61)
என்று அதியமானை ஔவையார் பாராட்டுகிறார். சிவனை அரன் என்றும் சிவன் என்றும் போற்றி வழிபடுகின்றனர். சிவன் உயிர்களின் கட்டுக்களை நீக்குபவன்; உலகம் சிவனிடத்திலேயே ஒடுங்குகிறது என்ற பொருளில் அரன் என்று அழைக்கின்றனர். சிவன் ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமாக, விளங்குவதால் சிவன் என்று போற்றுகின்றனர்.
உயிர்கள் என்றும் உள்ளவை. உயிர்கள் பலப்பல. மாயையினின்றும் உயிர்களுக்கு உடல்கள் (தனு), கருவிகள் (கரணம்), உலகங்கள் (புவனம்), அவை அனுபவித்தற்குரிய பொருள்கள் போகம்) முதலியவற்றை வழங்கியருள மாயையினைத் தமது சிற்சத்தியின் மூலமாக இயக்கிப் படி முறையில் 36 தத்துவங்களை அமைத்து உதவிசெய்தருளுகின்றான் இறைவன். இந்த வகையில் மாயை உயிருக்குப் போகத்தைத் தந்தாலும் உயிரைத் தளைப்படுத்துவதே என்று சித்தாந்தம் கூறுகிறது. மாயை என்பது ஒரு நுண்பொருள்; கண்ணுக்குப் புலனாகாத நுண்பொருள். இந்த நுண் பொருளிலிருந்தே உலகம் தோன்றுகிறது. உயிர்களின் அறிகருவிகளும் அகநிலைக் கருவிகளும் மாயையினின்றே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த மாயையும் நிலையானது; எங்கணும் நிறைந்திருப்பது; இந்த மாயை உலகத்திற்கு வித்துப் போன்றது. ஐம்பெரும் பூதங்கள் மாயையினின்றே தோன்றுகின்றன. உயிர்களில் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய உளத் தத்துவங்களும் மாயையிலிருந்து உற்பத்தியாகின்றன என்பதும் அறியத்தக்கது.
உயிர்கள் அறிவித்தால் அறியுத்தன்மையன; சார்ந்ததன் வண்ணம் ஆம் இயல்பின. இயல்பாகவே ஆன்மா ஆணவத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆணவப் பிணிப்பால் அறியாமையிற் கிடக்கும் ஆன்மாவுக்கு-உயிருக்கு மாயையின் துணையால் பொறி புலன்களைத் தந்து ஆட்கொண்டருள் கின்றான் இறைவன். உயிர்கள் புலன்களாலும் பொறிகளாலும் நுகர்வன நுகர்ந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து அவ்வழிச் செல்களும் செய்கின்றன. செயல்களைச் செய்யும் பொழுது உயிருக்குள்ள உணர்வு நிலை, நுகரும் பொழுதுள்ள மனப்பாங்கு நிலை முதலியனவே வினைகளாகி அந்த வினைகளை - அந்தச் செயல்களின் பயன்களைச் செய்த உயிர்களே அனுபவிக்க வேண்டும் என்ற நியதியாகி-விதியாகி உயிர்களின் ஊழாகி உயிர்களைச் சார்கின்றன. விதி என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் ஒவ்வொரு முயற்சிக்கும் ஏற்ற பயன் நிச்சயம் கிடைக்கும் என்பதுதான். விதி -கொச்சைப் படுத்தக்கூடிய ஒரு தத்துவம் அல்ல. ஆனால் நடைமுறையில் விதி கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் மனிதன் எதையும் செய்யலாம்; எப்படியும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து ஊழல்களுக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கும் வன்முறைச் செயல்களுக்கும் இரையாகி, அழிந்துகொண்டிருக்கிறது இந்த மானுடம். செய்வினைகளும் நுகரும்பொழுது கொள்ளும் எண்ணத் தடங்களுமே ஊழ் என்று பெயர் பெறுகின்றன. செய்யும் செயல்களையும் நுகரும் நுகர்ச்சியையும் தற்சார் பின்றியும் தற்சார்பான பயன்களின் மீது வேட்கையின்றியும் இயற்றினால் - நுகர்ந்தால் ஊழ் முகிழ்க்காது - உருக் கொள்ளாது. உயிர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம்-இன்ப அன்பில் தங்கலாம்.
ஆணவம் இருளனையது இல்லை, இல்லை; ஆணவம் இருளைவிடக் கொடியது. இருள் தன்பாற்பட்ட பொருள்களை மறைக்கும். ஆனால் இருள் உயிர்கள் பார்வையிலிருந்து தப்பாது மறையாது. ஆனால் ஆணவம் உயிர்களின் அறிவையும் மறைக்கிறது. தன்னையும் மறைத்துக் கொள்கிறது. ஆதலால் மறைவாக இருந்து துன்பம் செய்யும் ஆணவமே கொடிது.
ஆணவம் இயல்பாகவே உயிரைப்பற்றி நிற்பது. உயிர்கள்மீது ஆணவத்தின் தாக்கம் இருக்கும் பொழுது, உயிர் அறிவு இழந்து சிறுமையுற்று முடங்கிக் கிடக்கிறது. முடங்கிய நிலையிலிருக்கிறது உயிர் கடவுட் சார்பை உணர்ந்து, கடவுளைச் சார்ந்து ஒழுகத் தலைப்படும்பொழுது ஆணவம் செயலற்று விடுகிறது, ஒளியின் முன்னே இருள் செயலற்றுப் போவது போல.
உயிர் கடவுட் சார்புணர்ந்த நிலையில், கடவுளை கடவுளின் திருவடிகளை நெஞ்சத்தில் வைத்து வழிபாடு செய்ய-நிலையான உறவுகொள்ள விரும்பிய விருப்பத்தின் விளைவாகவே கடவுள் திருவுருவங்கள் பலப்பல கொண்டருளினான். திருவுருவ வழிபாடு தொடங்கிய நிலையில் மக்கள் கூடிவாழத் தலைப்பட்டனர். ஊர்கள் தோன்றின. வீதிகள் நடுவே திருக்கோயில்கள் எழுந்தன. திருக்கோயிலை மையமாகக் கொண்டு சமுதாயம் வாழத் தொடங்கியது. திருக்கோயில் வழிபாட்டினைச் சிறப்புற நிகழ்த்த விரும்பிய விருப்பத்தின் விளைவாகப் பூசிக்கும் முறைகள் அடங்கிய சிவாகமங்கள் தோன்றின. சிவாகமங்கள் சிவசக்தி அருளியது என்ற நம்பிக்கை உண்டு. சிவாகமங்கள் இறைவனை நமக்கு எளிதில் அனுபவிக்கத் தருவன. நமது மூதாதையரில் சிலர் தம்மைச் சிவ வழிபாட்டுக்கென்றே அர்ப்பணித்துக்கொண்டு முப்போதும் திருமேனி தீண்டுபவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் சிவாச்சாரியார்கள். அவர்கள் உயிர்களுக்கு மேகம்போல் நின்று விளங்கி உதவி செய்பவர்கள். திருக்கோயில் வழிபாட்டுடன் சிற்பம், இசை முதலிய அறுபத்துநான்கு கலைகளும் வளர்ந்தன. இத்தகு சிவநெறியை ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பேணிக்காத்தனர் திருமுறை ஆசிரியர்கள். இன்றளவும் சிவாகமும் திருமுறைகளும் செந்தமிழையும் சிவநெயியையும் பேணி வளர்த்துக் காத்துவந்துள்ளன.
இன்றுள்ள நாமும் இவைகளைப் பாதுகாத்து தலைமுறைக்குக் கொடுக்கவேண்டியது நமது கடமை. நமது சமயவரலாற்று மரபுப்படி நாம் சமயத் தொண்டுகளைச் சமுதாய உணர்வுடன் செய்து வரவேண்டும். உயிர் உய்யும் பொருட்டுச் செய்யப் பெறுவது வழிபாடு. உயிர் உய்யும் முயற்சிகளில் ஈடுபடும்பொழுது அம்முயற்சிகளுக்கு இடையூறின்றிப் பாதுகாப்புத் தருவது சமுதாயம் சார்ந்த தொண்டு. அகப்பூசையில் சிவத்தை அனுபவிப்பதே சிறந்த வழிபாடு! ஐம்புலன் அற அனுபவித்தல் என்று திருவாசகம் கூறும். புறத்தேயும் திருமேனியில் சிவத்தைக்கண்டு வழிபடுதல் பொறிகளின் சேட்டையினின்று நீங்கிப் பத்திமையடைந்து உயிர்கள் நிலைபெற்றிருக்கவேயாம். இத்தகு உயர்நிலைக்கு மனிதன் வளர்ந்துவர முதலில் மனித உள்ளம்-அதாவது மனித நேயம் பெறவேண்டும். சமுதாய அன்பும் கடமையுணர்வும் உருவமும் நிழலும் ஒத்தன.
“நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையினாற் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆரூரா என்னென்றே அலறா நில்லே!”
-திருநாவுக்கரசர்
என்ற அப்பரடிகளின் அடிச்சுவட்டில் உழவாரமும், திருத் தொண்டும் செய்து பேணிப்பாதுகாக்கவேண்டும். நாளும் திருக்கோயில் பூசனைகள் சிறப்புற நடைபெற ஏற்பாடுசெய்ய வேண்டும். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டும். சிவகாமமும் செந்தமிழும் தழுவிய ஒரு குலத்தைக் காணவேண்டும். மனித நேயத்தைப் போற்றிப் பேணவேண்டும்.
“வான்முகில் வழாஅது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்க ளோங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்!”
-கந்தபுராணம்.
கச்சியப்ப சிவாச்சாரியாரின் இந்தப் பாடல் பலகாலும் எண்ணத்தக்கது. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். ஓதவேண்டும், சைவத்தின் இலட்சியம் இந்தப் பாடலில் வகுத்தும் தொகுத்தும் கூறப்பட்டுள்ளது. “நீரின்றமையாது உலகு” என்பது திருக்குறள். ஆதலால் முதலில் மழை வளத்தைப் பெற்றுத் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்ளவேண்டும். முற்காலத்தில் நிறைய மழை பெய்தது. இறைவனின் திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் மழைவளம் தரும் மரக்காடுகளின் நடுவே இருந்தன. கடம்பவனம், அரசவனம் என்ற பெயர்களை நோக்குக. தலவிருட்சம் என்று ஒரு குறிப்பிட்ட மரத்தைப் போற்றுதல் பழைய மரபு. காலஞ் செல்லச்செல்ல தல விருட்சங்களையும் திருக்குளங்களையும் (தீர்த்தம்) பேணத் தவறிவிட்டோம். அதன் காரணமாக மழைக்குறைவு ஏற்பட்டுள்ளது. தலவிருட்சங்களைப் பல நூறாயிரக் கணக்கில் காடுகளாகப் பேணி வளர்க்க வேண்டும். மழைவளம், மண்ணின் வளம் கொழிக்கத் துணை செய்யும். உண்பன தின்பன தாராளமாகக்கிடைக்கும். அரசுகள் நெறிமுறைகளின்படி அரசு செய்யவேண்டும். “குறைவிலா துயிர்கள் வாழ்க!” இந்த ஆணை சோஷலிசம் தழுவிய ஆணை! ஒவ்வொருவரும் தாம் நுகர விரும்புவன வற்றையெல்லாம் நுகர்ந்து யாதொரு குறையுமின்றி வாழ்தல்: நான்மறைகளும் வளர்தல். அறநெறிகள் வளர்தல் வேண்டும். நல்லதவம் ஆகிய வேள்வி வளம் மல்கும்படி இயற்றுதல். நீதித்தன்மை பொருந்திய சைவம் உலகில் விளங்குக, நீதி என்பது என்ன? மனிதர்கள் அறத்தினையே வழிகாட்டியாகக் கொண்டு வாழ்தல். நீதி சார்ந்த வாழ்க்கை உயிர் வாழ்வு சட்டங்களால் கிடைக்காது. சிறைச்சாலைகளுக்குச் செல்லாமல் இருக்கவேண்டுமானால் தவிர்க்கலாம். ஆனால் மானம்-வெட்கம் என்ற கருத்துக்கள் தோன்றுவது சமயச் சூழலில்தான் என்பதை மறவாமல் நினைவிற்கொள்ள வேண்டும்.
“சீர்வாழி தெய்வ சிகாமணி சீரருணை
ஊர்வாழி வாழி உலகெல்லாம்-கார்வாழி
சித்தமிழ்த மான சிவாகமம் வாழி,செழு
முத்தமிழும் வாழி முறை.”
உலகின் பாகங்கள் இணைக்கப்படுவதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்றது தமிழ், ஆம்! யாவரும் கேளிர், ஆம்! யாவரும் கேளிர்! ஆம் யாவரும் கேளிர்! இந்தச் சொற்றொடரே இன்றைய உலகின் மந்திரமொழி!
இன்று இந்தியாவைக் கிரகணம் பற்றிக்கொண் டிருக்கிறது. சாதி மதச் சண்டைகளில் சிக்கி, இந்தியா சீரழிந்துகொண்டு வருகிறது. இன்றைய இந்தியாவில் தீமை வளர்கிறது! ஆம்! தீமை தீமையே. ஆயிரம் சமாதானம் கூறினாலும் பேதங்கள் பிரிவுகள் தீமையே. இந்தியாவின் சமயச் சார்பற்ற-சம வாய்ப்புடைய சமுதாய அமைப்பை நோக்கிச் செல்லும் நடைப் பயணத்தினூடே ஊடுருவும் தீமை, நன்மையுள் செயற்படும் தீமையாகும். நன்மையும் நன்மையாகவே நடைபெறவேண்டும். நன்மையினூடே தீமை ஊடுருவுமானால் அல்லது எதிர்விளைவாகத் தீமை தோன்றுமானால் நன்மையும் நன்மையாகாது. நன்மையாகக் கருதப்பெறும் ஒன்றும் காலப்போக்கில் தீமையாகவே முடியும். தீமை-பிரிவினைத் தீமை-ஒதுக்கி ஒதுங்கும் தீமை மனிதனின் பகையாகும். இத்தீமையை எதிர்த்துப் போராடுதல் மனிதனின் பிறப்புரிமையும் கடமையுமாகும். முதலில் மனிதன் தற்சார்பான தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றாக வேண்டும். பின் சமுதாயச் சூழலில் அமைந்துள்ள தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் மனிதன் நிறைநலம் வாய்ந்த மனிதனாவான்.
இன்றைய உலகம், மதங்களின் பெயரால் கெட்ட போரிடும் உலமாக மாறி வருகிறது. ஆனால் உண்மையில் நோக்கினால், உண்மையான மத நெறியும் மக்கள் மன்றத்திற்கு அறிமுகப்படுத்தப்பெறவில்லை. மதங்கள் தாம் தோன்றிய இடத்திலிருந்து பலகாத தூரம் விலகிவிட்டன. ஏன்? "தன்னுடைய கடவுளையே விழுங்கி ஏப்பமிட்டுவிடும் நிலைக்கு மதங்கள் வந்துவிட்டன” என்று லியோ டால்ஸ்டாய் கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
மனிதகுலம் தோன்றி வளர்ந்த வகையிலும் வாழ்வியல் அமைப்பிலும் ஒரே குலமாகத்தான் காட்சியளிக்கிறது. நாடு - மொழி - மதம் ஆகியன மனிதனின் படைப்புக்கள்! மனிதனின் படைப்புக் காரணமாக வேற்றுமைகள் தோன்றுவது உண்மை. ஆயினும் மனித குலத்தை உணர்வு நிலையிலும் ஒழுக்க நிலையிலும் ஓர் அணியாக இணைக்கும் நோக்கத்திலேயே நாடு, மொழி, மதங்கள் தோன்றின. ஆனால் அவை வரலாற்றுப் போக்கில் எதிர் விளைவைத் தந்துள்ளன. இந்தப் பூமண்டலத்தில் இனக்கலப்பு இல்லாது வாழும் இனம் எதுவும் இல்லை. உணர்வுக் கலப்பு-கலைக் கலப்புகுருதிக் கலைப்பு இன்ன பிற கலப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வந்த இஸ்லாமியர்கள் இந்திய மயமானார்கள் என்பதே வரலாற்று உண்மை. இந்தியாவைத் தங்கள் தாய் நாடாக அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்தியாவிலேயே இந்தியப் பெண்களை மணந்துகொண்டு வாழத் தலைப்பட்டனர். எல்லாரும் ஒரே உடன்பிறப்பினராய் வாழவேண்டும். என்ற கொள்கையை வலியுறுத்தவே கம்பன்,
“குகனொடும் ஐவ ரானோம்
முன்புபின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவ ரானோம்
எம்உழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய
நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல்அரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை”2
என்று பாடுகின்றான்.
எல்லா உலகமும்-எல்லா உலகின்கண் வாழும் மக்களும் ஒரு குலமே! ஓரினமே என்ற கருத்தினை,
- “எல்லா உலகமும் ஆனாய் நீயே”3
என்ற அப்பரடிகள் பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது. “எவன் கடவுள் படைப்பில் உள்ள மக்கள் அனைவரையும் தன் பிள்ளைகளைப் போலக் கருதுகிறானோ அப்பொழுதே அவன் சூபியாவான்”[3] என்பது இஸ்லாமிய-மூதுரை. அருட்டிரு விவேகானந்தர், “இராமகிருஷ்ண ஆசிரமங்களில் முஸல்மான் பாலகர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களுடைய மதத்தையே கற்பிக்கவேண்டும்”[4] என்று எழுதியுள்ளார்.
மானுடம் தன்னுடைய வாழ்க்கைப் போக்கில் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு வழிப்பட்ட காலம் பொற்காலம் என்று கருதத்தக்கது. தன்னிச்சையாக சமூக அமைப்பில்லாமல் நாகரிகமற்ற நிலையில் வாழ்ந்த மனிதகுலத்திற்கு நாகரிகத்தையும் சமூக வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தியதே கடவுள் நம்பிக்கைதான்! உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அடிப்படையில் கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்ந்துள்ளது. இந்த வியத்தகு உலகின் நிகழ்வுகளில் ஏதோ ஓர் ஒழுங்கு (Order) முறைபிறழாத நிகழ்ச்சி (Consistency) இருப்பதைக்கண்டு அத்தகு அமைப்பிற்கு மனிதனைவிட மேம்பட்டது ஒன்று காரணமாய் அமைதல்வேண்டும். அது கடவுளையன்றி வேறு யாராக இருத்தல் கூடும்? என்று கேட்டார் சிசரோ. கடவுளின் அளப்பரிய அறிவையும் ஆற்றலையும் கண்டவர்கள், அத்தகு அறிவையும் ஆற்றலையும் பெறுதலுக்கு வாயிலாகக் கடவுளை நாடினர். மிகவும் வளர்ச்சி குறைந்த மக்கள், பயத்தின் அடிப்படையிலேயே கடவுளை நம்பினார். ஆனால் உண்மையில் பயத்துக்கும் கடவுளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிக!
மாந்தர் இனம் வாழ்க்கைப் போக்கில் அவாவி நின்ற பண்புகளின் அடிப்படையில் கடவுளைக் கண்டது. கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடியவர்கள் பெரும்பாலும் குணம்-பண்பு அடிப்படையில்தான் பாடியுள்ளார்கள்.
- “நன்றுடையானைத் தீயதில்லானை”6
என்று கடவுளைத் திருஞானசம்பந்தர் போற்றிப் பாடியுள்ளார். “நன்றுடையான்” என்று உடன்பாட்டு முறையில் கூறினாலே போதும்! ஏன் எதிர்மறை நிலையிலும் “தீயதில்லான்” என்ற கூற வேண்டும்? நன்று என்பது குறைவில்லாத்தன்மை உடையது. நிறைவு என்பது எது? குறைவே இல்லாதது. இன்பம் என்பது எது? துன்பக் கலப்பே இல்லாததுவே இன்பம். குறைரு இல்லாததுவே இன்பம். குறைவு இல்லாத ஒன்றே நிறைவு! தீமையின் கலப்பே யில்லாத ஒன்றே நன்மை! முழுமையான நன்மை மக்கள் பழக்க வாசனையின் காரணமாகத் தீமை கலந்த ஒன்றையும் நன்மையென்று கருதும் கருத்திலிருந்து விலக்கிக் காட்டவே “நன்றுடையான்” என்று கூறியதுடன் அமையாது “தீயதில்லான்” என்றும் கூறினார். தீமையின் கலப்பில்லாத நன்மை எதுவொ அதுவே நன்றாம். அத்தகு நன்மை நலம் சார்ந்த கடவுள் எங்கும் உள்ளார். அவருக்கு ஏன் திருக்கோயில், மசூதி, சர்ச்சு முதலியன?
மனிதகுல வரலாற்றில் காலமும் தூரமும் அதிகமானதைப் போலவே, காலப் போக்கில் ஒவ்வொரு இன மக்களும் அடுத்த இனமக்களுக்கிடையே நீண்டஅகலமான இடைவெளியை உண்டாக்கிக்கொண்டனர். அதனால் மொழிகள் பலவாயின; பல்வேறு சமயங்களாயின; ஆயினும் மூர்க்கர்கள், பைத்தியக்காரர்கள், பிழைப்பு நடத்துகிறவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் கடவுள் ஒருவரே என்று நம்பினார்கள். மாணிக்கவாசகர் சிவநெறிச் சார்பினர். சிவபக்தர். அவர்,
“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி!”[5]
என்றார். மாணிக்கவாசகர் வாழ்ந்த தமிழ்நாட்டில் கடவுளைச் “சிவன்” என்று அழைக்கின்றனர். ஆனால் அந்தச் சிவன் உலகமாந்தருக்கு “இறைவனாக விளங்குகின்றான் என்பது விளக்கம். முன்னையது பழக்கத்தால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்; பின்னையது உலகப் பொதுப் பெயர். எந்நாடு என்பதில் தென்னாடும் அடங்கியது. எந்நாட்டிற்கும் இறைவனாக இருப்பவனைத் தென்னாட்டு மக்கள் “சிவன்" என்று அழைப்பது மொழிவழக்கேயாம். பொருள் வேறல்ல என்பது உணர்க. உலகிற்குக் கடவுள் ஒருவரே. அந்தக் கடவுளுக்கு உருவம் இல்லை. பெயருமில்லை. ஆனால், உலகமாந்தர் அவனுக்கு எண்ணற்ற பெயர்களைச் சூட்டி அழைக்கின்றனர். ஏன்? “பித்தன்” என்ற பெயரைக்கூடச் சூட்டி அழைக்கின்றனர். “ஈசுவரன் ஒருவரே. அந்த ஒருவரைத்தான் இராமர், அல்லா என்றெல்லாம் அழைக்கின்றனர். அந்த ஒரே ஒரு கடவுள்தான் உலகத்தைத் தாங்குகிறார். அவருக்கு அடுத்து இரண்டாமவர்கூடக் கிடையாது” என்றார் கபீர். மசூதியிலும் திருக்கோயிலிலும் இருந்தருள் செய்பவர் ஒரே கடவுள்தான் என்பது கபீரின் வாக்கு.
“சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்ற பெயர் படைத்தார்க்கு எப்பெயர் ஒவ்வாதோ?”9
என்பார் அருட்பிரகாச வள்ளலார். இந்துக்களால் “பிரம்மம்” எனவும் சொராஸ்திரியரால் “அஹ-சா மஸ்தா” எனவும் பௌத்தர்களால் “புத்தர்” எனவும் யூதர்களால் “எகோவா” எனவும் கிறிஸ்துவர்களால்- “பரமண்டலத்தில் உள்ள தந்தை” எனவும் வழங்கப்படுகின்ற தெய்வம், உங்களது மேலான எண்ணம் நிறைவேறும்படி உங்களுக்கு வலிமையைத் தருவதாக”[6] என்று விவேகானந்தர் வாழ்த்தும் பாங்கினை அறிக “அல்லா” என்ற சொல் முஸ்லீம் மதத்தையும் “இராமர்” என்ற சொல் ஹிந்து மதத்தையும் மட்டும்தான் குறிக்கும் என்றால் அப்படிச் சொல்பவர்களிடமிருந்து தூரவிலகி நிற்கவே விரும்பு” என்றார் கபீர்[7] ஏன்? “எல்லா ஒன்றே” என்ற தன் கருத்துக்கு ஒத்துவராதவரிடம் கபீர் கண்டிப்பாகவே இருக்கிறார். எல்லா மதங்களிலும் பேசப்படும் கடவுள் ஒருவரே என்பது அனுபவம். அனுபவத்தில் உணர்ந்த உண்மை. ஆனால் வேற்றுமைகளையே பன்னிப் பன்னிப் பேசுபவர்கள் சமயக் கணக்கர்கள், கடுதாசிகளில் எழுதியதை ஒப்பிக்கும் புலிகள். அனுபவ ஞானிகள் சொல்லும் “ஒன்றே” என்ற உண்மை சிக்கலைத் தீர்ப்பது. கடுதாசிப் புலிகளே சிக்கலை உண்டாக்குகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை தோன்றி வளர்ந்து பலநூறு ஆண்டுகள் கழித்தே மதங்கள் தோன்றியிருக்க வேண்டும். மதங்கள் தத்துவ வளர்ச்சியில்-மெய்ப் பொருள், அறிவு அடிப்படையில் தோன்றின. இத்தகு மதங்கள் மெய்ப் பொருளியலை விளக்கவே தொடக்கத்தில் பயன்பட்டன. காலப்போக்கில் குழு மனப்பான்மையால் மதத்தின் பெயரால் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவேண்டும் என்ற எண்ணமும் மதத்தைச் சார்ந்தவர்களிடையே தோன்றி வளர்ந்தது. மேலும் மேலும் மதங்களுக்கே உரிய நெகிழ்ச்சித் தன்மை, மனிதநேயம் முதலிய உயரிய தன்மைகளிலிருந்து விலகி, இறுக்கமான மனப்பான்மையைப் பெற்றுக் கொடுமையான தன்மையுடையனவாக மதபீடங்கள் தோன்றின. மத பீடங்கள் மதங்களைக் குறுகிய எல்லைக் குட்படுத்தி வேற்றுமைகளை வளர்த்து மக்களுக்கிடையில் பரஸ்பர குரோதப் புத்திகளை வளர்த்துச் சண்டைகளை உருவாக்கின் கடவுள்களுக்கிடையே உருவாக்கிக் காட்டின. அவ்வழி பொருளாதார ஆதிபத்திய ஆசைகள் வளர்ந்து, மத பீடங்களுக்குள்ளேயும் அரசைச் சார்ந்தும்கூடச் சண்டைகள் தோன்றின. உலக வரலாற்றில் மதங்களின் பேரால் மதபீடங்கள் நிகழ்த்திய கொடுமைகள்-சண்டைகள் எழுதிக் காட்ட முடியாத அளவுக்கு அதிகமானவை. இங்கிலாந்தில் நடந்த ரோஜாப்பூச் சண்டைகளும் தமிழ்நாட்டில் அப்பரடிகள் மீது ஏற்பட்ட தாக்குதல்களும் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் தீ வைக்கப்பெற்ற நிகழ்ச்சியும் மனிதகுலம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்ச்சிகளே! ஆயினும் இவை மக்களின் பேரால் மத பீடங்கள் நடத்தியவையாகும். இவை சமயச்சார்பற்று ஒழுகத் தெரியாத அரசுகள் நடத்தியவை. மதத் தத்துவங்களுக்கும் இந்தப் போர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆனால் பழியைச் சுமந்துகொண்டவை மதங்களே யாகும். பல சமயங்களில், அரசுகள் சமயச் சார்பின்மையை நடுநிலையை விட்டுப் பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து நலம் செய்ய மறந்துள்ளன. சாதி, மதம், கட்சிகள் பார்த்து, வேற்றுமை பாராட்டி, அரசுகள் நலம் செய்தவன் காரணமாகவும் மதங்களுக்கிடையே அழுக்காறும் அழுக்காற்றின் வழிப்பட்ட போட்டிகளும் வளர்கின்றன.
இன்று இந்திய அரசுகள் சாதனைகளையும் மதங்களையும் வளர்த்துக்கொண்டு வருகின்றன. இதனால் அண்மைக் காலமாக இந்தியாவில் சாதி மதச் சண்டைகள் அதிகரித்து வருகின்றன என்பதை எவரும் மறுத்தல் இயலாது. மறத்தலும் இயலாது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்புத் தருதல் என்பது வேறு. அவர்களுக்கென்று தனிச் சலுகைகள் தருதல் என்பது வேறு. இன்று இந்தியாவில் சாதி மதச் சண்டைகள் வளர அரசுகளே காரணம் என்பதை நினைவிற்கொள்க. அரசுகளின் போக்கு மாறாதுபோனால் இந்திய ஒருமைப்பாடு நிலைகுலையும்.
மதங்களின் தோற்றம்தான் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது உண்மையே யானாலும் அந்த மதங்களுக்கிடையே ஒருமை நலம் கண்டன. மதங்கள் வேற்றுமைப் படுத்தினாலும் ஒருமை நலம் கண்டன. மதங்கள் வேற்றுமைப் படுத்தினாலும் ஒருமைப்பாட்டுக்குரிய எண்ணங்களை அறவே புறக்கணித்துவிடவில்லை. அவற்றுக்குள் ஒருமைப்பாட்டு நிலையும் காணப்படுகிறது. “மாந்த ராகிய நீங்கள் எல்லோரும் ஒரு குலத்தவரானர். உங்களைப் போற்றிப் பாதுக்காப்பவன் ஒரே ஆண்டவன்.12 என்று முகம்மதிய மதம் கூறுகிறது.“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டு அல்லால்
மாறுபடுங் கருத்தில்லை.”13
என்று தாயுமானவர் விளக்குகின்றார். அருட்டிரு விவேகானந்தர் “உலகில் மதங்கள் பல வழிபாட்டு முறைகளும் பலப்பல. என்னும் அடிப்படையில் அவை ஒன்றே!14” என்று கூறியுள்ளமையை ஓர்க! உணர்க! சீக்கிய மதத்தைக்கண்ட குருநானக் “ஹிந்து என்பதும் முஸ்லீம் என்பதும் இல்லை”15என்று அருளிய உரையை உணர்க; உணர்ந்து ஒழுகுக!
- “வணங்கும் துறைகள் பல பல ஆக்கி”16
என்றார் நம்மாழ்வார். இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தவே சீக்கிய மதத்தைக் கண்டார் குருநானக், அருட்பிரகாச வள்ளலார், “சன்மார்க்கம்” என்ற பெயரில் புதிய சமயமே கண்டார்.
“அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆநந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும் எச்சார்பு மாகியுயிர்க் கிதம்புரிதல் வேண்டும் - எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்கள் எல்லாம் தவிர்ந்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்”17
என்ற திருப்பாடல் சன்மார்க்க நெறி விளக்கும் திருப்பாடல். இன்று சீக்கியர்களும் சன்மார்க்க சங்கத்தினரும் என்ன செய்கிறார்கள்? அவர்களும் பழக்க வாசனையால் சார்புகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.
வைணவ சீலாராகத் திகழ்ந்த இராமானந்தர் சமுதாயத்தில் பல்வேறு பட்டோரின் ஒத்துழைப்புடன் ஒரு புதிய மதத்தையே தோற்றுவிக்க முயன்றார். இராமானந்தருடைய முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா ஒரு புதிய பொலிவுடன் விளங்கும் வாய்ப்புப் பெற்றிருக்கும். அண்ணல் காந்தியடிகள் “சொந்த சமயத்தில் விருப்பமும் மற்ற சமயங்களிடத்தில் காட்டும் மதிப்புணர்வுமே சமயச்சார்பற்ற தன்மை”18 என்று விளக்கினார். சமயங்களுக்கிடையில் ஒருமை நலம் காணும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பது உண்மை. ஒருமை நலம் கண்டு அனுபவிக்க இயலாத நிலையில், மனித குலத்தின் நல்வாழ்வு கருதிச் சமயப் பொறுமையை மேற்கொள்ளுதல் வேண்டும். இந்த நூற்றாண்டிற்குச் சமயப்பொறை தவிர்க்க இயலாதது. ஆனால் வரவர இந்திய மக்கள் பாரபட்சமற்ற திறனாய்வை அணுகுமுறையை இழந்து வருகின்றனர். இன்று இந்திய மக்களுக்குள்ள பெரிய பலவீனம் இதுவே. அக்பர் சமயப் பொறையுடையவர் மட்டுமல்லர். எல்லாச் சமயங்களையும் மதித்துப் போற்றியவர். சிவபக்தியில் சிறந்து விளங்கிய மூன்றாம் குலோத்துங்கசோழன் ஜைனப் பள்ளிகளுக்கு இறையிலியாக நிலங்கள் வழங்கியுள்ளான் என்பது வரலாறு. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் கிறிஸ்துவ சமயத்தை அன்புடன் ஆதரித்து வந்தார். அல்லா பண்டிகைக்கு எல்லா தர்காக்களுக்கும் சரபோஜி மன்னர் செல்லும் பழக்கம் இருந்தமையை அறிக.
காலப்போக்கில் மனிதகுலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவுகளால் பற்றாக்குறை நிறைந்த சமுதாய அமைப்பும் உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை நிலையும் அமைந்த சூழ்நிலையில் மாந்தருக்கிடையில் இருந்த இனக்கங்கள் இல்லாதொழிந்தன. பரஸ்பரச் சார்புகள் அற்றுப்போய் எங்கும் சொத்தின் அடிப்படையில் சண்டைகள் நிகழ்ந்தன. இந்தச் சூழ்நிலையை மதத் தலைவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதிக்க சக்திகளின்பாற் சார்ந்து நின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களுக்கிடையில் வெறுப்புணர்வு வளர்க்கப்பெற்றது. ஆதிக்கம் செய்தோர் எல்லாருக்கும் சமவாய்ப்பு அளிக்கத் தவறியது; குறிப்பிட்ட சிலருக்கே உரியதாக அறிவுக்குத் தடை விதித்தது ஆகிய செயல் முறைகள் மதங்களுக்கிடையில் சண்டைகள் கலகங்கள் தோன்ற இடம் கொடுத்தன. அதுபோல இந்து மதம் போன்ற சில மதங்கள் ஏன்? எல்லா மதங்களுமே கூட மக்களுக்கிடையில் உயர்சாதி அமைப்பை அங்கீகரித்து அவர்களுக்கே சமூகத் தகுதிகளைக் கொடுத்து வந்ததால் ஒடுக்கப்பட்ட மக்கள் புதிய மதங்களைக் காணவும் அல்லது தகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மதம் மாறவும் தலைப்பட்டனர். இன்றளவுகூட இந்து சமயத்தில் சாதிகளைச் சார்ந்த மனப்பான்மை மாறவில்லை. இனி மாறும் என்ற நம்பிக்கைகூட இல்லை. ஏன்? சாதிகளை ஒழிக்கப் புறப்பட்டவர்கள் கூடச் சாதிச்சேற்றில் அவர்களை அறியாமல் சிக்கிக் கொண்டு எழுந்திருக்க முடியாமல் தவிக்கின்றனர். அதுமட்டுமல்ல. பலநூறு ஆண்டுகளாக வெறுத்து ஒதுக்கப் பெற்று வந்த சாதிகள் இன்று சமூக, அரசியல் ரீதியான அங்கீகாரம் பெற்றுவிட்டன என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். இன்று மதவெறுப்பு, சாதி வெறுப்பு முதலியன மதங்களின் அடிப்படையில் தோன்றவில்லை; சமூக பொருளாதார ஆதிபத்தியங்கள் அடிப்படையிலேயே மதப் போர்வையில் நடத்தப்பெறுகின்றன. இதன் காரணமாக உரிமைப் போராட்டங்கள் என்று தொடங்கிக் காலப்போக்கில் வெறுப்பாகவும் பகையாகவும் வந்துள்ளது. உலக வரலாறு எப்படி இருந்தாலும் நமது நாடு பல்வேறு சமயங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்து வளர்ந்த நாடு; பேணிய நாடு, பிற்காலச் சோழ அரசன் ஆதி இராசேந்திரன் என்பவன் குறுகிய மதக் கொள்கைகளை ஆதரித்ததை மக்கள் விரும்பவில்லை. மக்கள் இதற்கு உடன்படாமல் எதிர்த்துப் போராடினார்கள். ‘கிருமி கண்ட’ என்று வெறுத்து ஒதுக்கப்பட்டான். கல்லால் அடித்துக் கொல்லப்பட்டான் என்று நீலகண்ட சாத்திரிகள் எழுதுகின்றனர். யூதர்கள் இயேசுவைத் தள்ளிவிட்டனர். ஆனால் சாக்கியரை ஏற்று நாயன்மாராக்கியது நமது நாடு. நமது நாட்டு மக்களிடத்தில் மீண்டும் சமயப் பொறைப் பண்பு வளர்தல் வேண்டும்.
சமயப்பொறை என்றால் அவரவர் சமய மரபுகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்பதில்லை. தன்னுடைய சமயத்தில் ஈடுபாடும் விருப்பமும் காட்டுதலும் பிற சமயங்களிடத்தில் மதிப்புக் காட்டுதலுமே வேண்டற்பாலது. இன்று பொதுவாக நோக்கின் தமக்குரிய சமய நெறிகளில் விருப்பார்வம் காட்டாமல் பேணி வளர்க்கும் பணிகளில் ஈடுபடாமல் விளம்பரத்துக்காகப் பாதுகாப்பு என்ற ஆலவட்டத்தில் சமய வெறுப்பு இயக்கச் சங்கங்களை நடத்துவது விரும்பத்தக்கதல்ல. அண்ணல் காந்தியடிகள் ஒரு இந்துவாகவே வாழ்ந்தார். “நான் ஒரு இந்து” என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார். அதேபோழ்து மற்ற மதங்களிடத்தில் அளவிறந்த மதிப்பு வைத்திருந்தார் என்பதை மறத்தல் கூடுமா? யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் பெருமான் சைவநெறிக் காப்பாளராக வாழ்ந்தார்; பணி செய்தார். அதேபோழ்து அவர் கிறிஸ்துவ மதத்து வேத நூலாகிய பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த பெருந்தகைமையை மறத்தலும் கூடுமோ? மறத்தல் கூடாது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து இஸ்லாம் கிறிஸ்துவ சமயங்கள் பெரிய சமயங்கள். கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களை மேற்கொண்டு ஒழுகுபவர்கள் அந்நியர்களல்லர். இந்திய மண்ணில் பிறந்தவர்கள்; இந்திய மண்ணுக்கு உரிமையுடையவர்கள்; இந்தியர்கள் என்பதை மறந்துவிடுதல் நன்றன்று. இந்த மதங்களையெல்லாம் ஆழ்ந்து கற்ற சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலை நாம் ஏற்று அவ்வழியில் நடத்தல் நல்லது. விவேகானந்தர், “என்னுடைய அனுபவமாவது இதுதான்! இந்தச் சமத்துவ நிலைக்கு ஒரு கணிசமான அளவிலே எப்பொழுதேனும் எந்தச் சமயமேனும் அணுகிவந்தது என்றால் அது இஸ்லாம் ஒன்றேதான்” என்று கூறும் அனுபவவாக்கு எண்ணத்தக்கது. ஆம்! பலநூறு ஆண்டுகளாக இந்து மதம் பலகோடி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக வைத்திருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேசியவர்களை இந்து மதம் வெளியிலே தள்ளியது. இந்து மதத்தில் சாதிமுறைகளை தீண்டாமையை எதிர்த்துப் போராடிய மகான்கள் எண்ணற்றவர்கள் தலைமுறை தலைமுறையாகப் போராடி வந்திருக்கிறார்கள். இந்துமத பீடங்கள் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. சிவாஜி காலம் முதல் காஞ்சி ஜயேந்திரர் காலம் வரையில் மாற்றமில்லை. தமிழர் பார்ப்பனர் என்று இனம் பிரித்துப் பேசுகின்றனர். சராசரிப் பொதுமக்கள் நலனுக்கு மாறாகவே செய்கின்றனர்; காலத்தின் சூழ்நிலை கருதிப் பரந்த மனப்பான்மை உள்ளதுபோலக் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. விவேகானந்தரையும் நாராயண குருவையும் அப்பரடிகள் அருட்பிரகாச வள்ளலாரையும் ஏற்றுக்கொள்ளாத இவர்கள் எப்படிச் சராசரி மனிதர்களை ஏற்றுக்கொள்வார்கள்? எதிர்பார்ப்பது தான் மதியினம்.
மேலும் இந்து இஸ்லாமிய உறவுகள் பற்றி விவேகானந்தர் கூறும் செய்திகள் நம்முடைய கவனத்திற்குரியன. “என் உறுதியான நம்பிக்கையாவது இதுவேயாம். கிரியாம்சையிலே மிளிர்கின்ற இஸ்லாம் மதத்தின் உதவியின்றி வேதாந்த வாதக் கொள்கைகள் (அவை எவ்வளவு நேர்த்தியாக எவ்வளவு ஆச்சரியமாக இருந்தபோதிலும்) மனித இனமாகின்ற பெருந்தொகையினருக்கு முற்றிலும் பிரயோஜனை மற்றவையாகும். வேதங்களோ பைபிளோ குர்-ஆனோ பெறாத மண்டலமொன்றுக்கு மனித இனத்தை அழைத்துச் செல்ல நாம் விரும்புகின்றோம். ஆனாலும் வேதங்களையும் பைபிளையும் குர்ஆனையும் சமரசப்படுத்தியமைப்பதின் மூலமே இது செய்யப்படவேண்டும். ஏகதத்துவமாகின்ற அந்த ஒரு சமய தர்மம் உள்ளதே அதனுடைய பல் வேறான வெளித்தோற்றங்களேயாம். உலகத்துச் சமயங்கள் எல்லாம் என்பதை மனித இனத்தவருக்குப் போதிக்க வேண்டும்”20 என்று கூறும் அறிவுரையை இன்றைய மனித உலகம் குறிப்பாக இந்தியா உணரவேண்டும். இன்றைய இந்திய சமூகம் நிழலின் பின் செல்லத்துடிக்கிறது. இது அறவே ஆகாது! ஆகாது! ஒளியின் பின் செல்லவேண்டும். இத்தகு அறிவுரைகள் இயக்க வடிவம்பெற இராமானந்தர், நானக், ஞானேசுவரர், நாமதேவர், சைதன்யர் முதலிய அருளாளர்கள் முயன்றனர். இந்து சமயம்-இஸ்லாமியம் ஆகிய இரு மதங்களின் கொள்கைகளையும் கலந்த ஓர் இயக்கம் உருவாக்கினர்.
மதங்களின் இலட்சியம் ஆண்டவனைக் காண்பதாகவே இருக்கவேண்டும். ஆண்டவன் ஒருவனையே வழிபடவேண்டும். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு இலட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் உறுதியாக நிற்பாராயின் மதம் பற்றிய சச்சரவுகளெல்லாம் மறைந்துவிடும். மதம் வாழ்க்கை முறை. அதனால் மதம் இலட்சியமாக முடியாது. இலட்சியம் என்பது வாழ்க்கையின் குறிக்கோள். இன்றைய இந்தியன் எதை இலட்சியமாக எடுத்துக்கொள்ளவேண்டும்? எண்ணிப்பாருங்கள்!
இன்று இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் பலகோடி பேர்; நாளும் வறுமையில் நைந்து வாழ்கின்றனர் பலகோடி பேர்; பல நூறாயிரம் இளைஞர்களுக்கு வேலை இல்லை, சாதிப் புன்மைகள் நீங்கியபாடு இல்லை. இந்த அவலங்களை எதிர்த்துப் போராடி வலிமையும் வளமும் உடைய பொலிவான இந்தியாவை உருவாக்குவது மட்டுமே இந்தியாவின் இலட்சியமாக இருக்கமுடியும்; இருக்க வேண்டும் இந்தியாவின் இலட்சியமாக வேறு இருத்தல் இயலாது. கூடாது.
சாந்தியும் சமாதானமும் நிலவாத வாழ்க்கையில் மானுடம் என்ன செய்ய இயலும்? இதனாலன்றோ நடையில் உயர்ந்த நாயகனாகிய இராமன் “யாரோடும் பகை கொள்ளா” நெறியைப் போற்றினான். இன்றோ இராமன் பெயரில் பகை, கலகம், துப்பாக்கிச் சூடுகள். இது அவசியந் தானா? அல்லது நியாயந்தானா? தவிர்க்க இயலாததா? தவிர்க்கக்கூடாததா? உலகில் அமைதியைப் பரப்பிப் பிணக்குகளைப் போக்கிச் சமாதானம் செய்பவர் பாக்கியவான்கள் என்று கிறித்தவம் போதிக்கிறது. இறைவா! நான் உன் அன்பு விதையை விதைப்போனாகுக!
இந்தியாவில் உள்ள பெரிய சமயங்கள் மூன்று; அவற்றுள்ளும் பெரிய சமயங்கள் இரண்டு. ஒன்று இந்துமதம், பிறிதொன்று இஸ்லாம். இந்த இரு சமயங்களைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை அதிகம். இந்த இரு சமயங்களிடையிலும், சமயங்களைச் சார்ந்த மக்களிடையிலும் நிலவும் நல்லிணக்கத்தில்தான் இந்தியாவின் வலிமை அமைந்திருக்கிறது என்பது விவேகானந்தரின் கருத்து. “நமது தாய்நாட்டுக்கு இந்துமதம், இஸ்லாம் ஆகிய இரு பெருஞ் சமயத்திட்டங்களின் கூடுதலே வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் ஒரேயோர் உய்யும் வகையாய் உள்ளது.”21 என்று அருளியுள்ளமையை ஓர்க.
இந்திய ஒருமைப்பாடும் மனிதகுல ஒருமைப்பாடும் ஆன்மநேய ஒருமைப்பாடும் இன்றியமையாதன. ஒருமைப்பாடு உளதாய வாழ்க்கை உருவாக மக்கள் சில நல்ல மரபுகளைப் பின்பற்றவேண்டும். மதம் என்பது வாழ்வதற்குரிய - வாழ்ந்துகாட்டுதற் குரிய சாதனம். மதம் என்பது ஆன்ம அனுபவத்திற்கு மட்டுமே உரியது. மதம் என்பது பிரசாரத்திற்கு உரியது அல்ல. பிரசாரம் என்பதே விரும்பத்தக்க ஒன்றல்ல. அதுவும் பிரசாரத்தையே வாழ்க்கைத் தொழிலாகக் கொள்வது வெறுத்து ஒதுக்கவேண்டிய ஒன்று. முன்னர்க் கூறியது போல, பெருமன்னன் அசோகன் பிரசாரப் போர் வேண்டாம் என்றார். பிரசாரப் போருக்குப் பயமும் குரோதமுமே காரணம். அல்லது துணை பிரசாரப் போர் மனிதகுலத்திற்கு நேரக்கூடிய அபாயங்களையே அதிகரிக்கச் செய்கிறது. பிரசாரம் பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடித் தரக் கூடியதல்ல. இது தெளிவாகப் புலனாகிறது என்பது சிந்தனையாளர் கருத்துக்கள். இன்று உடனடியாகப் பிரசாரப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மத சம்பந்தப்பட்ட சிந்தனைகள் அனுபவங்கள் அந்தந்த வழிபாட்டு நிறுவன வளாகங்களுக்குள்ளேயே பரிமாறிக்கொள்ளப் படுதல் வேண்டும். ஆன்மா நோக்கிச்செல்லும் பயணத்திற்குப் புறத்தே ஆரவாரம் ஏன்? ஆன்ம அனுபவங்கள் எல்லாச் சமயங்களிலும் உண்டு. அவைகளைக் கற்றும் கேட்டும் அறியும் முயற்சி தேவை.
சார்புகள் எந்தச் சூழ்நிலையிலும் அந்நியத் தன்மையை உருவாக்க அனுமதித்தல் ஆகாது. இறைவன் சார்பற்றவன். அளவற்ற அருளாளனாகிய இறைவன் எல்லா உலகமுமாக இருப்பவன். இறைவனுக்கு நாடு ஏது? சமயம் ஏது? சாதி ஏது? இறைவனுக்கு உலகமே பணிக்களம். வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவன் கடவுள்.
இன்றுள்ள சூழ்நிலையில் மனிதகுல ஒருமைப் பாட்டைக் காண்பதையே மதங்களின் உயர் நோக்கமாகக் கொள்ளவேண்டும். இவர் கடவுள் அவரே கடவுள் என்றும் விரும்பும் வம்புத் தன்மையுடைய இரண்டாட்டு விவாதங்களை ஒழித்திட முன்வரவேண்டும். மதங்களைச் சார்ந்த பீடங்கள் இந்த நிலைக்கு வராவிடின் உலகமாந்தர் இதயம் படைத்த மாந்தர் அறிவாளிகள் ஒன்றைச் செய்ய முன்வர வேண்டும். அந்த ஒன்றை உடனடியாகச் செய்ய முன்வர வேண்டும். அந்த ஒன்றுதான் புதிய மதம் ஒன்றை உருவாக்குவது. விஞ்ஞானத்திற்கு அடுத்துச் செய்யவேண்டிய பெரிய பணி இதுவேயாம். அந்தப் புதிய மதம் இன்றுள்ள உலக மக்களின் உயிர்த்துடிப்பான கொள்கைகளின் கூட்டமைப்பாக அமையலாம். இந்து மதத்தின் உயர் தத்துவமும் இஸ்லாமியத்தன் கடவுள் நம்பிக்கையும் கிறித்தவத்தின் தொண்டுணர்வும் பௌத்தத்தின் உயிரிரக்கமும் சமணத்தின் அகிம்சையும் ஒருங்கிணைந்ததாக அமையலாம். இந்தப் பணியைச் செய்யவேண்டிய தருணம் இதுவே. பல்வேறு மதக் கலாச்சாரங்களுக்கிடையே இணைப்பு ஏற்படவேண்டிய தேவையை இன்று உள்ளதுபோல் வேறு எப்போதும் அதிகமாக உணர்ந்ததில்லை. விஞ்ஞானச் சாதனங்கள் பூதபௌதீக உலகங்களை மிகமிக நெருக்கமாகக்கொண்டு வந்துவிட்டன. செவிக்கும் வாய்க்கும் ஓர் உடம்பில் எவ்வளவு தூரமோ அவ்வளவுதான் இன்றைய உலக இடைவெளி என்று தொலைபேசி செய்துவிட்டது; தொலைக்காட்சியின் சாதனையும் அப்படித்தான். அதுமட்டுமின்றி இன்று இந்த உலகை ஒரு நாளில் வலம் வரமுடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் மனித நெஞ்சங்கள் இணைக்கப் பெறவில்லை. மனித நெஞ்சங்களை இணைக்கும் பொறுப் புடைய மதங்கள் அந்தப் பணியைச் செய்யத் தவறியது மட்டுமன்றி அதற்கு நேர் எதிர்த் திசையில் மக்களிடையே அந்நியத் தன்மையை வளர்த்து வெறுப்பை, பகையை வளர்த்து இந்த உலகத்தை கெட்டப் போரிடும் உலகமாக ஆக்குவது வருந்தத்தக்க செயல். அதுமட்டுமல்ல. கண்டிக்கத் தக்கதும் கூட மனிதகுலத்தை வெறுப்பில் ஆழ்த்திக் கலகம் செய்யும் மதங்கள் எதற்காக? இதற்கு மதங்களின்றியே வாழ்ந்துவிட்டுப் போகலாமே!
மனிதகுலத்தின் இன்றையத் தேவை என்ன ? இன்றையத் தேவை மனிதத்துவமும் தயாவுணர்ச்சியுமே யாகும். வேதம், குர்ஆன், புராணம், சாஸ்திரங்கள் யாவும் இப்பொழுது-சிறிது காலத்திற்கு அமைதியுற்றுக் கிடக்கட்டும். பிரத்யட்ச பகவான் ஆகிய தயை, பிரேமை ஆகியவற்றின் பூஜையானது நாட்டிலே நடைபெறட்டும். பேதபுத்தியே பந்தமாகும். அபேதபுத்தியே முத்தியாகும்.....அஞ்சற்க! அஞ்சற்க! மனிதர்களாய் இருப்பீர்களாக! கிருமிகளாய் அல்ல! இந்து முஸ்லிம் கிறித்தவர் உள்ளிட்ட சகல ஜாதிப் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்வீராக. சமய தர்மத்திலே எது சர்வ ஜனப் பொருத்தமாகவும் சாதாரணமாகவும் உள்ளதோ அதையே போதிப்பீராக!”[8] என்ற விவேகானந்தரின் அறிவுரை இன்று உலகமாந்தர் அனைவரும் ஏற்று ஒழுகவேண்டிய ஒன்று.
நமது தாய்நாட்டின் ஒருமைப்பாட்டை மனிதகுல ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதே இன்றுள்ள ஒரே குறிக்கோள். இந்தியாவைக் குழப்பங்களிலிருந்து மீட்க வேண்டும். இன, சாதி மதப்போராட்டங்களைத் தவிர்ப்போம்! அறவே விலக்குவோம். இந்தியாவை வலிமையும் வளமும் உடைய நாடாக அமைப்பதற்குரிய உழைப்புப் போரில் ஈடுபடுவோம்! இந்துவின் மூளை, இஸ்லாமிய உடல், கிறித்தவ இதயம் பெற்றுக் கிளம்பிடுவோம்! உரமான நோக்கமும் உயர்வான உள்ளமும் கொண்டு இந்தப் புண்ணிய யாத்திரையை நாம் தொடங்கிவிட்டோம் பயணம் நீண்டதாக அமையலாம். ஆனால் இலக்கை அடையும் வகையில் நமது பயணம் தொடர்க!
ஒன்றுசேர்ந்து நம்மைக் காத்துக்கொள்வோம்!
ஒன்றுசேர்ந்து உண்போம்!
ஒன்றுசேர்ந்து வீரியம் பெறுவோம்!
ஒன்றுசேர்ந்து அறிவொளி பெறுவோம்!
எவரையும் வெறுக்காமல் இருப்போம்!
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!
“திருவருள்”, இதழ்-நவம்பர்-90
அடிக்குறிப்புகள்
1. டால்ஸ்டாய் கட்டுரைகள் “வாழ்வும் மதமும்” பக். 78
2. கம்பராமாயணம்
3. திருநாவுக்கரசர் தேவாரம்-ஆறாம் திருமுறை பா. 386.
4. இஸ்லாம்-சர்வோதயப் பிரசுரம் பக். 69
5. விவேகானந்தர் ஞானதீபம் சுடர்-10. பக். 258
6. திருஞானசம்பந்தர் தேவாரம்
7. திருவாசகம்
8. கபீர் அருள்வாக்கு முன்னுரை பக். 11
9. திருவருட்பா ஆறாந்திருமுறை-அனுபவமாலை 69
10. விவேகானந்தர் ஞானதீபம் சுடர் 1 பக். 23
11. கபீர் அருள் வாக்கு, முன்னுரை பக். 25
12. இஸ்லாம் சர்வோதயப் பிரசுரம் பக். 24
13. தாயுமானவர் பாடல்-கல்லாலின். 25
14. விவேகானந்தர் ஞானதீபம் சுடர் 6 பக். 305
15. உலக மதங்கள் பக். 57
16. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்-இயற்பா திருவிருத்தம் 97
17. திருவருட்பா-ஆறாந்திருமுறை - ஆன்ம தரிசனம் 8
18. சோழர்கள் II கே. ஏ. நீலகண்டசாஸ்திரி பக். 844
19. விவேகானந்தர் ஞானதீபம் 10 பக். 304
20. விவேகானந்தர் ஞானதீபம் சுடர் 10 - பக், 305
22. விவேகானந்தர் ஞானதீபம் கடர் 10 - பக், 258-259