குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/தலைமையரை





5


தலைமையுரை

ஈரோடு சைவர் மாநாடு — 24-4-53



“கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான்
அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே.”

சித்தாந்த சைவப் பெருமக்களே! தாய்மார்களே! மறைத்திரு ஞானியாரடிகளின் அருள் உள்ளத்தில் அரும்பி அன்பர்கள் உள்ளத்தில் மலர்ந்து தொண்டர்தம் தொண்டின் திறத்தால் பல்லாண்டுகளாகத் தென் தமிழ்நாட்டில் தெய்வ மணத்தை வழங்கிவருகின்ற சைவ சித்தாந்த சமாஜத்தின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள வண்ணப் பணித்து வா வென்று வான்கருணை செய்த ஈரோடை அப்பரின் இணையடிகளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம். இத்தகு இன்பப் பேற்றை நமக்கு அளித்த அருள்நெறித் திருக்கூட்டத் தொண்டர்களுக்கு நமது நெஞ்சம் கலந்த வாழ்த்து.

தமிழகம் தெய்வ மணம் கமழும் திருநாடு. இறை மணம் கமழும் இன்பத் திருநாடு, சாத்திரத்திலும் உயர் ஞானத்திலும் சிறந்து விளங்கும் பெருமை செந்தமிழ் நாட்டிற்கே உரியது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி அன்று தொட்டே அவர்களது வாழ்க்கையில் சமய வாழ்வு இடம்பெற்றிருந்தது. அறிவுக் கண் கொண்டு இப் பரந்துபட்ட உலகியலைக் காண்கின்ற பேறுபெற்ற பொழுது-அகலமும் ஆழமும் அளவிடப் பெறாத நீலத் திரைக் கடல்-காலம் தவறினும் தான் தவறாது எழுந்து நல்லொளி பரப்பி ஞாலத்தை வாழ்விக்கும் ஞாயிறு - வானுயர் தோற்றமென்ன மலை இவை போன்ற இயற்கையின் மதிப்பிட முடியாத அமைப்புகளைக் கண்டு வியந்தனர். உலகியலில் ஓர் ஒழுங்கு ஒரு முறைபிறழாத நிகழ்ச்சி முதலியன அமைந்து கிடப்பதனைக் கண்டனர். இத்தகு அமைதிகளைக் கண்டு இவை தம்மை அமைத்துக் கொடுப்பதற்குரியது மனித எல்லைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தனர். அந்த ஒன்று பேரறிவும், பேராற்றலும் உடையது என்ற முடிவுக்கு வந்தனர். அப்பொருள் அப்பாலுக்கப்பாலாய் இருந்தும் ஊனாகவும், உயிராகவும், உயிர்ப்பாகவும் இருப்பதை உணர்ந்தனர். இத்தகு நிலையில் காட்சியளிக்கின்ற அந்தப் பொருளை எங்ஙனம் சிற்றறிவுடைய உயிர்கள் வாழ்த்த முடியும். இதனை நமது மணிவாசகப் பெருமானார்,

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே.”

என்று அருளிய திருப்பாடலால் அறியலாம்.

தமிழர் சமயத்தில் ஆண்டான் அடிமைத் திறம் மிகச் சிறந்தது. இன்று அடிமையென்ற சொல் மக்களினத்தால் வெறுக்கப்படுகிறது. ஆனால் அடிமை என்ற சொல் அவ்வளவு தீயதல்ல. அடிமைத் தனத்தில் உள்ள நன்மை தீமைகளை அடிமையாக ஆட்படும் இடத்தைப் பொறுத்தது. சின்னாட் பல்பிணி வாழ்க்கைக்காகச் சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய இறக்கும் தன்மையை இயல்பிலேயே பெற்ற மக்களிடம் அடிமைப்படுவதில் இகழ்ச்சி உண்டு. தீமையும் கூட உண்டு. ஆனால் வரம்பில் ஆற்றலும் இணையில் இன்பமும் உடைய பிறவா யாக்கைப் பெரியோனிடத்தில் அடிமைப்படுவது சாலவும் நன்மையுடைத்து. அடிமைப் படாததால் தீமைகூட விளையலாம். இத்தகு அடிமைத் திறத்தை நினைந்து நினைந்து வரவேற்றார்கள் தமிழ்ச் சான்றோர்கள். அருள் மொழி மணிவாசகப் பெருமானார் அருளிய திருவாசகத்திலே அடிமை வேண்டி வேண்டிக் கேட்கப்படுகிறது. தேசீய கவிதை முழக்கி விடுதலை முரசு கொட்டிய தேசீயக் கவிஞர் பாரதியாரும்,

“பூமியில் எவர்க்குமினி அடிமைசெய்யோம்-பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்”

என்று கூறுகின்றார். சமய வாழ்வில் கூறப்படும் அடிமை குற்றேவலுக்காக அல்ல. எண்ணத்தால் அடிமை.

தமிழர்கள் வாழ்வில் நீதி பொருந்தியிருந்தது. நேர்மை நிலவியிருந்தது. அன்பு மலர்ந்திருந்தது. அறவுணர்வு மண்டியிருந்தது. அவர்கள் மறந்தும் கூட தீயன செய்ததில்லை. செய்ய நினைத்ததுமில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் அகமும் புறமும் ஒத்திருந்தது. சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டிருந்தன. பிறர்நலம் பேணுகின்ற பெருமனம் பெற்றிருந்தார்கள். காரணம் கடவுட்பற்று, கடவுள் நம்பிக்கை. சென்ற சென்ற இடத்திலெல்லாம் சென்று பற்றுகின்ற அறிவைத் தீதினரின்றும் விலக்கி நன்மையின் கண் உய்ப்பது சமயம். விலங்கு நீர்மை பொருந்திய பொல்லாத புல்லிய உணர்ச்சிகளினின்றும் விலக்கி, பூரண மனிதப் பண்பை நல்கி அருள் உள்ளத்தைக் கொடுப்பது சமயம்! மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும் பண்பைக் கொடுப்பது சமயம்! ஏன்? “காக்கை குருவி எங்கள் சாதி” என்ற பேருணர்வைக் கொடுப்பதும் சமயமே? வாழ்க்கையை வளம் படுத்துவது நல்லெண்ணங்கள். தனி மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்துவது சிந்தனையும் செயலுமாம். சமுதாயத்தைச் சீர்படுத்துவது தனி மனிதனது ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை. தனி மனிதனது ஒழுக்கம் குலையுமானால் சமுதாயம் குலைந்துவிடும். அதனால் குற்றங்கள் நிறைந்து கொலைகள் பெருகும். உறுப்பாலே மக்கள்; வாழ்க்கையாலே விலங்குகள் என்றாகிவிடுவர். எனவே நாட்டின் நல்வாழ்வு, சமுதாயத்தின் சிறப்பு எல்லாவற்றிற்கும் அடிப்படை தனி மனிதனின் ஒழுக்கம் பொருந்திய வாழ்வுதான். அப்படியானால் வேண்டுவது ஒழுக்கம்தானே! அது இருந்தால் போதாதா? என்று சிலர் கேட்கலாம். சமயச் சார்போடு வளர்கின்ற ஒழுக்கம்தான் நிலைத்து நிற்கும். சமயச் சார்பற்ற-கடவுள் நம்பிக்கையற்றவர்களின் ஒழுக்கம் என்றும் நிலைத்திருக்காது. குறிப்பாகச் சமயச்சார்பற்றவர்களின் ஒழுக்க நெறி ஊற்றில்லா ஒடை போன்றது; வேரில்லா மரம் போன்றது என்று கூறிவிடலாம். அதாவது வாழ்க்கையின் தேவை நிறைந்திருக்கிற வரையில்-இன்பம் பொருந்தியிருக்கின்ற அளவில் சமயச் சார்பற்றவர்களின் ஒழுக்கம் நிலைபெற்றிருக்கும். ஆனால் தேவை நிறைவு பெறாதபோது, வாழ்க்கையில் துன்பப் புயல் சுழன்றடிக்கின்றபோது, துன்பச் சுழலினின்றும் விடுதலை பெற்றுத் தேவையை நிறைவு செய்துகொண்டு இன்பத்திற் பொருந்தி வாழ்வதற்காகத் தாம் கொண்ட ஒழுக்க நெறியினின்றும் நழுவுவர். அப்படி நழுவ நேரிடும் காலத்துச் சிலகால வாழ்வுக்கு நீதியையும் நேர்மையையும் பலிகொடுக்காதே. அநீதிக்குத் தண்டனை தரத் தலைவன் ஒருவன் உளன் என்று உணர்த்தி நல்வாழ்வில் நிலைக்கச் செய்வது சமயம். எனவே வாழ்க்கையில் ஒழுக்கம் உறுதிபெறச் சமய வாழ்வு வேண்டியிருக்கிறது.

இந்த உண்மையைப் பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். அவர்களது வாழ்க்கையில் சமயப் பண்பியல்புகள் கலந்து படிந்திருந்தன. அவர்கள் தம் சிந்தனையிலும் செயலிலும் கடவுட் பற்றும் நம்பிக்கையும் கலந்திருந்தது. அவர்களுடைய தனி வாழ்வு பொது வாழ்வு ஆகிய இரண்டிலும் சமயப் பண்பாடு முதலிடம் பெற்றி ருந்தது. அவர்களுடைய வாழ்க்கையில் வழிபாட்டுணர்ச்சி வளர்ந்து வளம் பெற்றிருந்தது. வாழ்த்துகின்ற கலையன்றி வசைபாடும் கலையை அறியார். விண்ணை அளந்து காட்டுகின்ற-துன்பம் துடைத்து நல்லின்பம் நல்குகின்ற எண்ணற்ற ஆலயங்கள் தமிழகத்தில் எழுந்தன. எழுச்சிக்கு அடிப்படை பண்டைப் பெருமக்களது சமய வாழ்வும் வழிபாட்டுணர்ச்சியும்தான். தமிழகம் கண்ட சமய நிலையங்கள் இரண்டு வகையின. ஒன்று ஆலயங்கள், பிறிதொன்று மடாலயங்கள். ஆலயங்கள் வழிபாட்டு நிலையங்கள். பண்புகள் பல்கி-பக்தி உணர்ச்சி வளரத் துணை செய்பவை ஆலயங்கள். உணர்ச்சிக்குத் தூண்டுகோல்-காவலிடம் ஆலயங்கள். நல்லறிவு கொளுத்தித் தெளிவான உள்ளம் தந்து நல்லுணர்வை நல்கி, கொள்கையைப் பரப்பிக் காக்கும் காவல் நிலையங்கள் மடாலயங்கள். ஒன்று உணர்ச்சியை உண்டாக்கி வளர்த்துக் காக்க, இது மடாலயங்களின் தொண்டு. நல்லுணர்ச்சியைப் பக்தியாக மாற்றி வழிபாட்டிற் கலந்து இன்புறச் செய்வது. இவை ஆலயங்களின் தொண்டு. இவ்விரு வகை நிலையங்களையும் கண்டு அன்பு பேணி அருளுள்ளம் கொண்டு அறம் பல வளர்த்துக் களிப்புடன் வாழ்ந்த பெருமை பண்டைத் தமிழினத்திற்கு உண்டு. ஒரு சில ஆண்டுகளாகத் தமிழினத்தின் வாழ்வை இருட்சூழல் கவ்வியுள்ளது. கிப்ஸன் சொன்னபடி இவ்வுலகுபற்றிய அறிவு மிக மேம்பட்டுள்ளது. மற்றொரு மீளா உலகைப் பற்றிய அறிவு குறைந்து வருகிறது. சிறப்பாக வாழ்க்கையோடியைந்த சமயப் பண்பு அருகி வந்து விட்டது. வாழ்க்கை வேறு சமயம் வேறு; சடங்கு வேறு என்ற புல்லிய உணர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டனர். இதனால் இதயம் மடிந்தது. எலும்புடம்பு இருக்கிறது. நெஞ்சம் தோய்ந்த சமய வாழ்வு குறைந்து வரலாயிற்று.

தமிழினத்தின் தனிமைப் பண்பு சமரச நோக்கு. தமிழ்கண்ட உன்னத உயர்மொழி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதாம். இடையில் இந்த நிலை மாறியது. சமய வாழ்வில் சாதி முதலிய புல்லிய உணர்ச்சிகள் தோன்றி வளர்ந்தன. அகவுணர்வைப் போற்றிக் காத்துக் கொள்வதற் காகக் கையாளப் பெற்ற சமயச் சடங்குகள் சடங்குகளாகவே காட்சியளித்தன. நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்வு இல்லாமற் போய்விட்டது. புறம் வளர்ந்தது. அகம் தேய்ந்தது. அதனால் தமிழகம் மிகத் தாழ்ந்துவிட்டது. தாழ்ந்தமைக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள். தமிழ் நாட்டிற் பிறந்தாரனைவரும் தமிழர்கள். பாதிக்கு மேற்பட்ட மக்கள் சைவத்திருநெறி நின்று ஒழுகுகின்ற பேறு பெற்றவர்கள். ஏனைய மதக்களில் பெரும் பகுதியினர் வைணவக் கொள்கையினர். ஒரு சிலர் பிற சமய மக்களும் உண்டு. இங்ஙனம் வாழ்ந்த நூற்றுக்கணக்கான சைவக் கொள்கையினர் பிற மதம் புகுந்து கொண்டேயிருந்தனர். ஆயிரக்கணக்கான ஆலயங்களிலிருந்தும் நூற்றுக் கணக்கான மடாலயங்களிலிருந்தும் இவை தமக்கு மூன்றரை கோடி ரூபாய் வருமானம் இருந்தும் பிற மதம் புகுகின்ற சகோதரர்களைத் தடுக்கவில்லை. தடுக்க நினைக்கவும் இல்லை. இதனால் இவற்றிற்கு விளைந்த கேடு எண்ணும் தரத்ததா? பிற மதத்தினர் தம் மதப் பிரசாதத்திற்காக சைவத் திருநெறியின் கொள்கைகளைச் சிறப்பாக உருவ வழிபாட்டுக் கொள்கையினை எள்ளி நகைத்துப் பேசிவந்தனர். ஏனென்று கேட்பார் இல்லை. இதனையொட்டி நம்மவரினும் பலர் சமய வாழ்வினையும், வழிபாட்டினையும் இழித்து எள்ளிப் பேசத் தலைப்பட்டனர். இவ்வியக்கம் சாதி ஒழிப்பியக்கமாகத் தோன்றி சமய ஒழிப்பியக்கமாக மாறிவிட்டது. மூலை முடுக்குகளில் எல்லாம் நாத்திகம் பரப்பப் பெற்றது. சிறந்த இலட்சிய நெறியினின்று வாழ்ந்த பெருமக்களின் வரலாற்றினை இன்பத் தமிழில் பக்திச் சுவை நனி சொட்டச்சொட்ட பாடித்தந்த சேக்கிழார் பெருமான் எள்ளப் பெற்றார். அவர் தம் திருநூல் எரிக்கு இரையாக்கப்பட்ட வேண்டுமென்று பேசப்பெற்றது. அது போலவே ஊனினை உருக்கி உயிரையும் உருக்கி உலப்பிலா ஆனந்தத்தைக் கொடுக்கும் அருமைத் திருவாசகத்திற்கும் எரியிட வேண்டுமென்று ஆர்ப்பரித்தார்கள். தமிழ் நாட்டின் ஒரு சில ஆலயங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமையின் காரணமாக தகாத செயல்களையும் செய்யத் தலைப்பட்டனர். செய்தும்விட்டனர். எனினும் கவலைப்படுவார் யாருமில்லாத கதியற்ற நிலை சைவத்துக்கு இருந்து கொண்டிருந்தது. இந்த நிலை இன்றும் மாறவில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றும் பிற சமயத்தினரின் சமயப் பரப்பு வேலை துரிதமாக, நடந்து கொண்டிருக்கிறது. நாத்திகர்களும் பெருகி உருவங்களை உடைப்பதும் திருமுறைகளைத் தீயில் இடுவதும் எங்கள் இலட்சியம் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். நாடாளும் அரசோ மதச் சார்பற்ற அரசு என்ற பேரில் இருக்கிறது. ஆதலால் இவை தம்மை எதிர்த்து நிற்பதில் அது நேரடியாகத் தலையிட முடியாது. இந்த நிலை சமயப்பற்றுள்ள ஒவ்வொருவருக்கும், சமயச் சான்றோர்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும் ஒரு சோதனை. இது கடைசி நேரம். இனியும் உறங்கினால் கடமையினின்று தவறியவர்கள் ஆகிவிடுவோம். இடம் பொருள் ஏவல் இருந்தும் இழக்கமுடியாத கொள்கையினை இழந்துவிட்டோம் என்ற பழிச் சொல்லுக்கு உரியவர்கள் ஆகிவிடுவோம். அன்புடைய பெருமக்களே! இதனைச் சிந்தனையில் பதித்துக்கொண்டு செயலில் இறங்குவோமாக! நமக்குத் தெரிந்த ஒரு சில ஆக்க வேலை முறைகளையும் குறிப்பிட ஆசைப்படுகின்றோம்.

1. நல்லன பெருகி அல்லன மறைய வேண்டுமானால் அதற்குரிய சாதனம் நல்லனவற்றைப் பற்றிப் பன்னிப் பன்னிப் பேசுதலும் பரவுதலும் ஆம். முதலில் சமயச் சார்புடைய அனைவர் மாட்டும் நெஞ்சந் தோய்ந்த சமய வாழ்க்கையை மலரச் செய்ய வேண்டும். வாழ்க்கையோடு ஒன்றுபட்ட சமயந்தான் நல்ல பயனைத் தரும். எனவே ஒவ்வொருவர் வாழ்விலும் பூரண பக்தி உணர்ச்சியை வளர்க்க வேண்டும். வீடுகளில், வீதிகளில், மன்றங்களில், ஆலயங்களில் எங்கும் தெய்வத் திருமறைத் தமிழ் முழக்கத்தை எழுப்ப வேண்டும். நாள் தவறினும் நாழிகை தவறினும் தான் தவறாத முறையில் திருமுறைகளை ஓதுகின்ற பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு இயக்கங்கள், பொதுப் பிரார்த்தனைகள் முதலியவற்றைத் தோற்றி வளர்க்க வேண்டும். இவை நம்மவர்பால் நடக்க வேண்டியவை.

2. சமய வாழ்வு வாழ்கின்ற பெருமக்களிடத்தும், சமய நிலையங்களிடத்தும் சாதி மனப்பான்மையை வளரவிடக் கூடாது. உண்மைச் சமயத்திற்கு சாதி உடன்பட்டதல்ல; புறம்பானது என்று தெளிவாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்து விடுவது ஒன்றாலேயே பெரும் பகுதியான மக்கள் சமய வாழ்வுக்கு வந்துவிடுவர்.

3. சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி. அதுதான் தமிழைப் பற்றியது. எங்கும் தமிழார்வம் தலையெடுத்து வளர்கிறது. தமிழன்பு பெருகிவருகிறது. தமிழன்பில் திளைக்கின்ற பல அன்பர்கள் திருக்கோயில்களில் தமிழுக்கு இடமில்லை என்ற ஒரு காரணத்தால் திருக்கோயில் வழிபாட்டுணர்ச்சிக்கு மாறுபடுகின்றனர். திருக்கோயில்களில் தமிழுக்கு இடம் தருதல் தவறானதாகாது. வேண்டுமானால் பழக்கமெனும் பாசிபடிந்த உள்ளங்கள் தவறானதாக நினைக்கலாம். மேற்பரப்பில் காட்சியளிக்கும் பாசியை நீக்கிப்-பார்த்தால் அந்தப் பாசி இடையில் படர்ந்தது வேர் ஊன்றாத பாசி. இயற்கையிலேயே தண்ணீர் தெளிவுதான். அது போலவே பண்டுதொட்டே ஆலயங்களில் தமிழ் முழக்கம் கேட்கப் பெற்றதுதான். ஏன் நலிவுற்ற காலத்து நல்லுணர்வு கொளுத்திச் சைவம் பரப்பி நானிலத்தைக் காத்த நால்வர் பெருமக்கள் இன்பத் தமிழில்தானே பாடினார்கள். எனவே சமய நிலையங்கள் தமிழைப் புறக்கணித்துத் தவறானதோர் செயலை விளைவித்து விட வேண்டாமென்று குறிப்பிட ஆசைப்படுகின்றோம். விரைவில் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் அனைத்திலும் தமிழில் அர்ச்சனை செய்கின்ற பழக்கத்தைக் கையாள முன்வர வேண்டும். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனம் மாறும். அவர்கள் தமிழன்போடு சமயப்பற்றிலும் சிறந்து விளங்குவார்கள்.

4. இனி சமயத்தை வளர்ப்பதற்குரிய வழி, வீடு தோறும் செல்வதுதான். சமயச் சான்றோர்களும், சமயத் தொண்டர்களும் வீடுகள் தோறும் நுழைந்து பரிவாகப் பேசி வீட்டில் நாள் தவறாது வழிபாடு அல்லது பிரார்த்தனை குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செய்யும்படித் தூண்ட வேண்டும். இங்ஙனம் செய்வதால் வீடுகளில் சமயம் விளக்கம்பெறும். வீடுகள் திருந்தினால் நிச்சயமாக நாடு திருந்தும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இத்தொண்டினை யாரும் மேற்கொள்ளலாம். பொருட்செலவற்ற மிகச் சுலபமான தொண்டு. ஆனால் பெரும் பயன் விளைகின்ற பெரும் தொண்டு. வீடுதோறும் சமய விளக்கம் காண முயல்வோமாக!

எத்தனையோ ஆண்களாக தமிழினத்தின் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்களாக ஒதுக்குப்புறத்தில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நன் மணம் இல்லை. வளமும் இல்லை. இப்பகுதியினரில் பலர்தான் பிற மதம் புகுந்தவர்கள். இன்னும் ஒரு சிலரே எஞ்சியிருக்கின்றனர். அவர்களையும்கூட புத்தர்களாக ஆக்கப் பாடுபடுகின்றார் ஒருவர். அதே காலத்தில் இந்தியப் பேரரசு அவர்களுக்கு எல்லா வகுப்பினரோடும் உடனிருந்து வாழ்வதற்குரிய உரிமையைச் சட்ட ரீதியாக வழங்கியுள்ளது. அவர்கள் அடியெடுத்து வைக்கக் கூடாதென்றிருந்த ஆலயங்களில் அச்சமின்றி நுழைய உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் நமது பழக்கத்தை மாற்றிக் கொண்டு சேரிகள்தோறும் நுழைந்து பரிவோடு அவர்களை அணுகி அவர்களது துன்பம் துடைத்து அவர்களது உணர்ச்சியிலும் வாழ்விலும் சமயத்தைக் கலக்க வேண்டும். இந்தப் பணியால் இரண்டு நன்மை விளைகிறது. ஒன்று சமயத் தொண்டு, மற்றொன்று சமூகத் தொண்டு. இத்தகு பணியால் தமிழினமே உயர வழியுண்டு. ஒவ்வொரு சேரியிலும் என்று பிரார்த்தனை ஒலி எழுகிறதோ அன்றே சமயத்தின் நன்னாள்.

இந்த நூற்றாண்டை மேடை நூற்றாண்டென்று சொல்லிவிடலாம். எதற்கெடுத்தாலும் மேடைச் சொற் பொழிவு, அலங்காரமான நடையில் ஒரு சில மணி நேரங்கள் பேசினால் மக்களை ஈர்த்துக் கவர்ந்துவிடலாம், என்ற நம்பிக்கை வளர்ந்துள்ள காலம் இது. அப்படியே நடந்து வருவதையும் நாம் அறிவோம். எனவே நாமும் சிறந்த சமயச் சொற்பொழிவாளர்களைத் தயாராக்க வேண்டும். அவர்களின் சொல்லாற்றலைப் பெருக்க வேண்டும். மூலை மூடுக்களிலெல்லாம் நின்று சமய வாழ்வின் நல்லியல்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மாறுபட்டவர்களின் மாறான பேச்சுக்களை உண்மையை எடுத்துக் காட்டுவதின் மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சமயத் தொண்டர்கள் மேடையோடன்றி வாழ்க்கையிலும் பண்பட்டவராயிருத்தல் வேண்டும். இத்தகு தொண்டர்கள் ஒரு சிலரை நாட்டிலே உலவவிடுவேமானால் பெரிதும் நன்மை உண்டு.

சமயத் தத்துவங்களை விளக்குகின்ற முறையில் இனிய எளிய தமிழில் அடிக்கடி சிறு நூல்கள் வெளியிட வேண்டும். அவைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்பட வேண்டும். நூல்கள் விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளினின்றும் எழுதல் கூடாது. குறிப்பாக உருவ வழிபாட்டு முறைகள் தத்துவங்கள், சமயச் சார்பில் உள்ள புறச் சாதனங்கள், சமய நூல்கள், புராணங்கள் முதலியவற்றைப் பற்றிய உண்மைக் கருத்துக்களை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டிய கடமை நமக்குண்டு. இக் கடமையினின்றும் தவறி விடுவோமானால் ஒன்றை மற்றொன்றாகப் பேசுகின்ற கூட்டம் பெருகி உண்மை அருகிவிடலாம். சமய அறிஞர்கள், சமயப் பற்றுள்ள படித்த இளைஞர்கள் இம்முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்தத் திருத் தொண்டினால் இன்று மக்களிடையே பரவியுள்ள மாறுபட்ட கருத்துக்களை மாற்றிவிடலாமென்று நம்புகின்றோம்.

அன்புடைப் பெருமக்களே! பணிகள் பலவற்றைப் பாங்குறத் தீட்டிக் காட்டலாம். எனினும் அனைத்தும் செயல் முறைக்கு வரவேண்டுமே. எனவே விரிவஞ்சி விடுக்க ஆசைப்படுகின்றோம். சமயத் தலைவர்கள் அனைவரும் இந்த இறுதியான கட்டத்தில் ஒன்றுபடவேண்டும். ஒவ்வொருவர் தனி வாழ்விலும் சமயத் தொண்டு நல்ல இடம் பெற வேண்டும். இங்ஙனம் ஒன்றுபட்டு நல்ல ஈடுபாட்டுணர்ச்சியோடு பணி செய்வோமானால் எண்ணிய பயனைப் பெறுவதற்கு யாதும் ஐயமில்லை. ஒன்றுபடவும், தொண்டுகளில் ஈடுபடவும் ஆண்டவன் திருவருள் துணை செய்யு மென்று நம்புகின்றோம்.

இந்த முயற்சியின் சின்னம் தான் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூடம். திருக்கூட்டத்தின் அருள் முழக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கேட்கப் பெறுகிறது. நூற்றுக்கணக்கான அன்பர்கள் தம்மையும், தம் வாழ்வையும் மறந்து இத்திருத்தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நமது இதயம் கலந்த வாழ்த்து. கடந்த மூன்றாண்டுகளாகச் சைவசித்தாந்த சமாஜத்தினரோடு கலந்து உறவாடுகின்ற இன்பப்பேறு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த உறவு முறை இடையீடுபடாது வளரும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டத்தினர் மேற்கொண்டுள்ள பெரும் பணிகளுக்குச் சமாஜத்தினர் பக்கபலமாக இருந்து வருகின்றனர் தொண்டர் குலம் அனைத்தும் ஒன்று என்ற உண்மையை அருள்நெறித் திருக்கூட்டத்தினரும், சமாஜத்தினரும் மெய்ப்பித்து வருகின்றனர். இத்தகு பேரன்பு படைத்த சமாஜத்தினர்க்கு நமது உளம் கலந்த வாழ்த்து. மீண்டும் ஒருமுறை சமயவாழ்வுடையார் அனைவரும் ஒன்றுபடவும் அருள்பாலித்துத் திருத்தொண்டின் நெறிபேணி வளர்க்கத் துணை செய்யும் வண்ணம் ஈரோடையப்பரின் இணையடிகளைச் சிந்திக்கின்றோம்! அன்பர்களது அன்பு பொருந்திய, ஆர்வம் நிறைந்த ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்!

வாழ்க தமிழ்!

வளர்க அருள்நெறி!