குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/மனம் ஒரு மாளிகை




6


மனம் ஒரு மாளிகை

பேரின்பம்


“தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே-ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!”

-திருஅருட்பா

தன்னை அறிதல் என்றால் என்ன? தன்னை அறிந்து கொள்வது எப்படி தன்னை அறிந்து கொள்வதால் பயன் உண்டா? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்போமானால், கேட்டும் புலன் வழி போகாது திரிகரணங்களையும் அடக்கி நின்றோமானால் ஆங்கு-தன்னை யறிந்தின்பமுறுவது தானே சித்திக்கும்.

- “நான் யார்? என் ஞானங்கள் யார்?’ எனக் கேட்போமானால் தன்னை அறிந்து இன்பமுறலாம்,’ தன்னை அறிவது என்பது நம் மனத்துக்குள்ளேயேயிருக்கும் சோதியை (பரம்பொருளை) உணர்வது ஆகும். தன்னை அறிந்தால் பிறவியை ஒழித்துப் பேரின்பம் பெறலாம்.

தன்னையும் இன்னார், இனையன் என்று எண்ணாமலும் சிந்திக்காமலும் இருந்தும், அஞ்ஞானக்கோரை மண்டித் தரிசாகக் கிடந்தாலும், புலன் வழி ஏகி, மனம் போன போக்கில் சென்றால் ஆங்குச் சிற்றின்பங்களும், “பெருந்துன்பங்களுமே” விளையும். ஒரு முடிவுடைய இன்பங்களும், முடிவிலாத் துன்பங்களும்தான் மிஞ்சும்.

இச்சிற்றின்பங்களும் அளவீடற்ற இடுக்கண்களும் அடுக்கடுக்காக வந்து புதை சேற்றில் ஆழ்த்தும்.

இன்னும் ஒவ்வொரு பொழுதும் மலமொடு எழுந்திருந்து பசி, நித்திரை, யாத்திரை, பிழைத்து, பித்த உலகத்தில் பித்தனாக ஆகி, மதம் கொண்ட யானையைப் போன்று ஆசை என்ற வலையில் வீழ்ந்தும் கல்வி என்னும் பலகடல் பிழைத்தும்; பொறாமை என்ற பேயால் ஆட்டு விக்கப்பட்டும்; செல்வம், வறுமை, அறிவு இவைகளில் தேனில் விழுந்த ஈயாக மயங்கி, வாது பேசி, ஆறுகோடி மாயா சக்திகள் ஊடே பிழைத்தும, நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியும், உறவு சுற்றம், நட்பு என்னும் அலைகடலில் வீழ்ந்தும், சமயம், மதம், சாத்திரம், கோத்திரம், விரதம் இவைகளில் மயங்கியும், ஐம்பூதங்களின் அல்லலில் சிக்கியும், இன்னும் பல அளவீடற்ற மாயையின் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி வீணே விழலுக்கு இறைத்த நீர் போல பிறந்து, பிறந்து, இறந்து, இறந்து பவக்கடல் ஏறாது. பிறவிக்கரை காணாது நீந்திக் கொண்டேயிருக்க வேண்டியதுதான், தன்னையறிந்து இன்பமுறாத வரையில்.

தன்னை அறிந்து இன்பமுறுவதாவது ‘பேரின்பம்’ எனப்படும். இப் பேரின்பத்திற்கு முதலும் முடிவும் இல்லை. பேரின்பத்தை அனுபவிக்குங் காலத்துச் சலிப்பில்லை, வெறுப்பில்லை, கசப்பில்லை. தன்னை அறிய ஆங்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்கள் தன்னை அறிந்த மாத்திரத்திலேயே நிர்மலமாகி விடும். எல்லாமும் தானேயாகி பேரின்பத்தோடே தன்மயமாதல்.

இப்புன்புலால் யாக்கை புரையோடிக் கனியுமாறு, கண்ணார நீர் மல்கி, கசிந்துருகி, உள்ளம் நெக்குருகி, நாயினேன், பேயினேன், வன்மனத்தேன் என அரற்றி தான் என்ற அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து ‘நெகிழ்ந்து, நெகிழ்ந்து, சிந்தித்து, சிந்திக்கும் பொருளும், சிந்திக்கும் திறனும் ஒரே தன்மையாகி முயற்சி செய்து, நொந்து நொந்து, அழுது, புலம்பி, அரற்றி, எவ்விதத்தாலும் சலனம் அடையாது. நிலைகுலையாது, தாயையே நினைந்து அழும் சேய் போல ஒரே குறிக்கோளாக நம் மனதை உள்முகமாக நிறுத்தி ஒருமைப் படுத்தித் துய்மை செய்தோமானால் ஆங்குத் தோன்றும் உள்ளொளியை (சோதியை)க் கண்டு, அதாவது ‘தன்னை’ அறிந்து இன்ப முறலாம்’.

இப்பேரின்பத்திற்கு ஒரு வரையறையில்லை. இதனால் தான் தன்னை அறிந்து இன்பமுற்றவர்கள், “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றனர்.

‘ஒருநாமம், ஓர்உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி, நாம்-தெள்ளேணம் கொட்டாமோ”

— திருவாசகம்

என்ற மணிவாசகரின் மணிவாக்காலும் இதை உய்த் துணரலாம்.

‘உன்னையே நீ அறிவாய்’-என்றார் கிரேக்க நாட்டுப் பேரறிஞரான சாக்ரட்டீஸ். ஆகவே நம்மையே நாம் நன்கு அறிந்தோமானால் நடப்பது யாவும் நலமே பயன் என்னவாக இருக்கும் எனச் சிந்திக்க வேண்டா.

நம்மை நாம் அறிந்து கொள்ளாத போதுதான் பலனைப் பற்றி ஏங்கி, எவ்வாறு வழி தவறிய ஒருவன் திகைப்பானோ அவ்வாறு இவ் உலகாயதத்தில் தவிக்க வேண்டி உள்ளது. இவ்விதம் தவிப்பதால் தடுமாற்றமும், தடுமாற்றத்தில் மனம் அமைதியிழந்து தன்னை அறியாமல் விழலுக்கு நீர் இறைத்து எட்டிக் காயாகத் தனக்கும் பயனின்றி, பிறருக்கும் பயனின்றிக் கெடுகின்றனர் என்பதைத் திருமூலர் திருவாக்கால் அறியலாம்.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”.

— திருமந்திரம்

தன்னை அறிந்தால் பிறிதொன்றால் ஆங்கு யாதொரு தீமையும் இல்லை. இதனால்தான் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும் புலவர் புறநானூற்றில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா"-என்றார்.

தன்னை அறிவதே ஞானத்தின் இறுதி நிலையாகும். தன்னை அறிந்தால் ஆங்கு தன்னுள்ளே ஈசனைக் காணலாம்.

‘தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே”

— திருமந்திரம்

என்ற திருமூலர் வாக்காலும்,

“தேடிக் கண்டு கொண்டேன்-தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்”

— தேவாரம்

என்ற அப்பரடிகள் வாக்காலும் அறியக் காண்கிறோம். இக்கருத்தையே உணர்ந்த தாயுமானவரும்,

“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம்-அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”

என்று தாமும் பரமும் ஒன்றாகிய நிலையை எடுத்தியம்புகின்றார்.

தன்னை அறிந்து இன்பமுற்றவர்கள் கூற்றுவனுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பதைத் திருமந்திரத்தால் அறியலாம்.

“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை.—"

எனத் திருநாவுக்கரசர் கூறுவதுபோல் தன்னை அறிந்தால் ஆங்குத் தன் மனத்துள்ளே மறைந்துள்ள ஈசனைக் காணலாம்.

“விறகில் தீயினன் பாவிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

— தேவாரம்

மனம், வாக்கு, காயத்தால் வல்வினைகள் ஆரம்ப மாகும். வல்வினை ஆரம்பமாகிய போது பிறவி உண்டாகும். பிறவி தொடரும்போது பாவ, புண்ணியங்கள் வந்து சேரும். இதையே பிறவி வாசனை என்பார்கள். மனம், வாக்கு காயம், நேர் நிற்கில் பிறவியில்லாப் பெருநிலையை அடைவர்.

“அனைத்துலகும் ஆய நின்னை
ஐம்புலன்கள் காண்கிலா”

- என்பதாலும்,

“இரந்து இரந்து, உருக என் மனத்துள்ளே
எழுகின்ற சோதியே”

என்ற திருவாசகத்தாலும் “தன்னை யறிந்தின்ப முற்றோர்” நிலையை உணரலாம்.

தன்னை அறிந்து இன்பமுற்றோர்களுக்கு இருவேறு பட்ட தன்மைகளே ஆங்கு இல்லை. இப்புன்புலால் யாக்கையில் உயிர் புணர்ந்து கொண்டிருக்கும் போதே எது எதுவோ அது அதுவேயாகி அருட்சோதியில் கலத்தலே தன்னையறிந் தின்பமுறுதல் ஆகும்.

“தன்னை யறிந்திருந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”

— திருமந்திரம்

அவனருளாலே அவன் ‘தாள்’ வணங்கி, கிடைத்தற்கரிய இம்மானுட உடலைப் பேரின்பத்திற்காகவே பயன்படுத்தி “தன்னையறிந்தின்பமுற்று” பேரின்ப வாழ்வினை நிறைவுடைய வாழ்வினைப் பெற்றுப் பேரின்பத்தை அடைந்து மகிழ்வோமாக,


நீதியே கடவுள்

மதம் என்ற சொல், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கொள்கை என்ற பொருளிலேயே வழங்கப் பெறுகிறது. “எழுவகை மதமே உடன்படன் மறுத்தல்” என்பது நன்னூல் நூற்பா. மனித உலகம் தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க காலத்தில் அஃதாவது காட்டு வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்தில், கொள்கைகளை உருவாக்கும் உணர்வினைப் பெற்றது. மனம் போன போக்கில் வாழ்ந்த மனிதர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

இரண்டு தற்போக்குக் கொண்ட மனிதர்களிடையே மோதல் ஏற்படத்தானே செய்யும்! மனிதர்களிடையே ஏற்பட்ட இந்த மோதல்களைத் தவிர்க்கவே கொள்கைகள் உருவாயின; ஒழுங்கு முறைகள் பிறந்தன; ஒழுக்க நெறிகள் எழுந்தன. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கோ, மற்றை மன்பதைக்கோ உரிமை பேசமாட்டான், பேசவும் முடியாது என்று கருதியது அன்றைய மன்பதை,

ஆதலால் முதற் கொள்கை, மனிதனை மையமாகக் கொண்டு எழாமல், மனிதனையும் விஞ்சிய கடவுளை மையமாகக் கொண்டு பிறந்தது. முதற்கொள்கை கடவுளை மையமாகக் கொண்டே பிறந்ததால், இன்று பல்வேறு கொள்கைகள் தோன்றி வளர்ந்திருப்பினும் மதம் என்ற சொல் கடவுட் சார்புடைய கொள்கையை மட்டுமே குறிக்கிறது.

ஒரு மனிதன், பிறிதொரு மனிதனின் நலத்தைக் கைப்பற்றாததே அறம். ஒரு மனிதனின் நலம் பிறிதொரு மனிதனின் நலத்தோடு மோதாமல் ஒதுங்கி வளர்வதே நேர்மை. ஒரு மனிதன் பிறிதொரு மனிதனின் உரிமைகளை உணர்வுகளை மதித்து நடப்பதே சிறந்த மத ஒழுக்கம். இதுவே மதநெறியின் தொடக்க காலச் சீரிய இயல்பு.

காலப் போக்கில், மதம் மனிதர்களின் உரிமைகளுக்கு அரண் செய்வதற்கு மாறாக, வன்முறையாளர்களுக்கே கை கொடுத்தது. இதன் விளைவாகச் சாதிகள் தோன்றின; பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மலிந்தன.

எல்லார்க்கும் பொதுவாம் மன்றுள் நடமாடும் இறைவன் திருமுன்னும், சாதியே ஆட்சி செய்தது; இன்னும் ஆட்சி செய்கிறது. சுரண்டும் மனப்பான்மையுடைய பொருள் வன்முறையாளர்களின் ஆட்சியே நடந்தது; நடந்து கொண்டிருக்கிறது. “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்” என்ற கோட்பாட்டு அறிவுரை இன்றைய மத உலகத்தில் செரிக்கவில்லை.

“எல்லா உலகுக்கும் அம்மையப்பரே அம்மையப்பர்” என்ற நெறிக்கும் மதவியலாருக்கும் நெடுந்தொலைவு இருக்கிறது. கோயில்களுக்கும் குடிசைகளுக்கும் இடையே நீண்ட துரம் உள்ளது. சாதி வன்கண் மனப்பான்மையுடை யோர்களும், பலருடைய வயிற்றிலடித்துப் பழியுடை வழியே பொருள் திரட்டியவர்களும், ஈரம் என்ற ஒன்று நெஞ்சில் இல்லா மதவாதிகளும் ஒப்புடன்படிக்கை செய்துகொண்டு ஏழைகளின் வாழ்வைக் கூற்றெனக் குடித்து வருகின்றனர். இளைய மன்பதையினர் இதனை நினைந்து நினைந்து நெஞ்சுருகித் தூய புரட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; மன்பதை நலனுக்குற்ற மத நெறியைக் காண வேண்டும்.

மதம் கடவுளுக்காகத் தோன்றியதன்று. மதத்தின் மையம் கடவுள் உணர்வேயாம். ஆனாலும், மதம் மனிதனை, அறிவால், உணர்வால் வளர்த்துக் கடவுள் தன்மை யுடையவனாய் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டது. மனிதன் தனமையினால் விலங்குமல்லன்; ஆனால் மனிதனுமல்லன.

மனிதன் தன்னிடம் இயல்பாய் அமைந்துள்ள விலங்குத் தன்மைகளினின்று விலகி மனிதத் தன்மைகளைப் பெற்று வளர்ந்து பின் தெய்வத் தன்மைகளையும் பெற்று விளங்குதல் வேண்டும்.

விலங்குத் தன்மையாவது, இன்ப துன்ப உணர்வுகளுக்கு அடங்கி ஆட்பட்டு அழிதல், மனிதத் தன்மையாவது இன்ப துன்ப உணர்வுகளுக்கு உட்பட்டு-ஆயினும் எதிர்த்துப் போராடித் துன்பங்களில் மட்டும் வெற்றி பெற்று இன்பமாக்கிக் கொள்ளுதல், தெய்வத் தன்மையாவது இன்ப துன்ப உணர்வுகளை வெற்றி பெற்று, உணர்வுகளைக் கடந்த-என்றும் எப்பொழுதும் துன்பம் தலைகாட்டாத இன்ப அன்பில் திளைத்து, இன்புற்று, மகிழ்ந்து வாழ்தலில் வெளிப்படுவது. இஃதே மதத்தின் குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கும் இன்றைய மதத்திற்கும் நெடுந்தொலைவு ஏற்பட்டிருப்பதை நாமனைவரும் உணர வேண்டும்.

பலநூறு ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தின் ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர், ஓருலகம் பற்றிப் பேசினர். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்கிறது புறநானூறு: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிறது வள்ளுவம். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்கிறது திருமந்திரம்.

இங்ஙனம் மனித உலகத்தை ஓருலகமாக எடுத்துக் கூறிய தமிழக மதச்சூழலின் குரலும். தமிழக மதநெறியின் ஒழுக்கமும் உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். இறைவழிபாட்டிற்குச் சாதி முறைகள் குறுக்கே நிற்கக்கூடாது. தந்தை தாயாரைத் தீண்டி, மெய்தொட்டுப் பயின்று மகிழ்வதைத் தடைசெய்ய எவருக்கு உரிமை உண்டு?

நந்தம் திருக்கோயில்களில் உள்ள திருமேனிகளை எல்லா நாட்டினரும், எல்லா மொழியினரும், பலரும் நீரும் பூவுமிட்டுத் தொட்டு மகிழ்ந்து வழிபாடு செய்யும் உரிமை வேண்டும்; அன்றைக்கே இந்த உரிமை மலரும் நாளிலேயே மதம் மன்பதை மதமாகும். அதுவரையில் கோயில் “மதமாகவே” இருக்கும்.

உலகுக்கு முதல்வன் தலைவன் கடவுள். மனித உலகம் இன்புற்று மகிழ்ந்து வாழ இந்த உலகில் எத்துணையோ கோடி இன்பங்களை வைத்திருக்கிறான் இறைவன், “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாரதியும் பாடினா னன்றோ!

இன்பங்களைத் துய்த்து மகிழ்வதில் மேடு ஏன்? பள்ளம் ஏன்? ஏழை ஏன்? பணக்காரன் ஏன்? இறைவன் இந்த வேறுபாடுகளைத் தோற்றுவிக்கவில்லை.

எல்லா உலகமும், எல்லா உயிர்களும் “இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன்” என்ற தாயுமானாரின் கோட்பாடு எங்கே? எல்லாருடைய இன்பத்தையும் நாமே சூறையாடிக் கொண்டு தாமின்புறுதலிலேயே தலை நாட்டமுடையோர் கையில் சிக்கியிருக்கும் மதம் எங்கே?

‘பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுதல்’ மதத்தின் ஒழுக்கம்; மதத்தின் கொள்கை உண்மையான மதம் உலகில் கால் கொள்ளுமாயின் போர் ஏது? பற்றுக்கோடல் ஏது? இன்றைய மன்பதை உலகத்தில் மதம், காரணங்களாகக் கால் கொண்டிருக்கிறதே தவிர, ஒழுக்கங்களாகக் கால் கொள்ளவில்லை.

இன்றைய மனித உலகத்திற்குத் தேவை மிக உயர்ந்த புதுமையும் பொதுமையும் உடைய மதத்தின் கொள்கையே. உயிரினத்திற்குக் கொல்லாமை அன்பு காட்டி, வாழவைக்கும் மன்பதையின் இன்ப மகிழ்ச்சியே மதத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். மன்பதையை, நேர்மை, அறம் ஆகிய அரண்களால் காக்கின்ற மதமே தேவை. அதனாலன்றோ அப்பரடிகளும் கடவுளை “நீதியே” என்று கூறி வாழ்த்தினார்.

சமயப் பல்கலைக் கழகங்கள்

ழங்காலம் முதலே மனிதனுக்குத் தன் வாழ்வில் ஒழுங்கு, அமைதி, நீதி, இன்பம், அன்பு ஆகியவை இருத்தல் வேண்டுமென்ற ஆர்வம் அவனை அறியாமலேயே அவனுள் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் தூண்டுதலே சமயமாக மலர்ந்தது.

சமயம்-மனிதனின் உள்ளத்தைச் சமைத்துப் பக்குவப் படுத்துவது. அவனுடைய வாழ்வில் நிகழும் ஆவேச உணர்வு, பரபரப்பு உணர்வு, பிறருக்குத் துன்பம் இழைக்கும் தீய உணர்வு ஆகியவற்றை அடக்கி அவனை நல்வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்துவது சமயம். மற்றவர்க்குப் பயன்படுமாறு வாழ்பவனே-பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்பவனே முதிர்ந்த சமய வாழ்வு உடையவனாவான்.

நம்முடைய சமய வாழ்க்கைக்காகச் சென்றகாலத் தலைமுறை திருக்குறளைத் தந்தது. திருமுறைகளைத் தந்தது. எல்லாம் தந்தது. தராதது ஒன்றும் இல்லை. மனிதனது படைக்கும் ஆற்றலினால் ஒரு தலைமுறைக்கும் மற்றொரு தலைமுறைக்கும் தொடர்ச்சி உண்டாகிறது. நிகழ்காலத் தலைமுறையினராகிய நாம் என்ன செய்துகொண் டிருக்கிறோம். வரும் தலைமுறையினருக்கு நாம் என்ன படைத்துக் கொடுக்கப் போகிறோம் என்று சிந்தித்தல் வேண்டும்.

சமய வாழ்க்கைக்கு நம் ஐம்பொறிகளைப் பக்குவப் படுத்தல் வேண்டும். ஐம்பொறிகள் மனிதனுக்குத் துணையும் செய்யும்; துன்பமும் செய்யும். சந்தர்ப்பம் பார்த்து, இப் பொறிகள் நம்மைத் துன்பப்படுத்தும்.

நம் பொறிகளைப் பக்குவப்படுத்துமுன் நம்மை அறிதல் வேண்டும். நம்மை இயக்கும் தலைவனை அறிதல் வேண்டும். மனிதன் தன்னை அறிய முடியாத நிலையில் இருக்கிறான். “இருகை யானையை ஒத்திருந்தது என் உள்ளக் கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே” என்றார் மணிவாசகர். யானை தன் உருவைத் திரும்பிப் பார்க்க இயலாதது. நாமும் அப்படித்தான் இருக்கிறோம். அது மட்டுமன்றி யானை தன்னைச் செலுத்தும் பாகனையும் உணராது. நாமும் அவ்வாறே. நான் யார்? என் உள்ளம் யார்? என்று மணிவாசகர் அறிந்தாற்போல் அறிதல் வேண்டும். “மக்களே போல்வர் கயவர்” என்றார் திருவள்ளுவர். நாம் மனித உருவில் விலங்குகளாக வாழ்கிறோம். நம் வாழ்வைத் திரும்பிப் பார்த்தல் வேண்டும்.

நாம் அறியாமையில் இருக்கிறோம்; இருளில் இருக்கிறோம் என்று அறிந்தால். அறிவு தேவை; ஒளி தேவை என்ற உணர்வு தோன்றும்; நோயை அறிந்தவனுக்கு மருந்து தேவை என்ற உணர்வு தோன்றுவது போல, இந்த உணர்வு தோன்றியபோதே மனிதனுக்குச் சமய வாழ்வின் தேவையும் அருமையும் புலப்படுகின்றன. இந்த உணர்வு நிலைத்திருக்க வேண்டும். இந்த உணர்வு தோன்றிய பின்னரும் சிலர் பழைய விலங்கு நிலைக்குத் திரும்பி விடுவதுண்டு. இதில் மிக விழிப்பாக இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

நாம் பிறர்க்குத் துன்பம் செய்யாதிருந்தால் பிறர் நமக்குத் துன்பம் செய்யார். அதுவே சமய வாழ்வின் அடிப்படை. உலகில் துன்பத்தை எதிர்த்துப் போரிட மனிதன் கண்ட நெறி சமயநெறி, சமய நெறியில் நின்று வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொண்டால் துன்பம் வராது.

நல்ல சமய வாழ்வு உள்ள நாட்டில் சட்ட புத்தகங்களுக்கு வேலையில்லை. வேத புத்தகங்கள் செல்வாக்கு இழந்த நாட்டில் வேந்தனும் கொடிய அரசியல் நடந்த வேண்டி இருக்கும். இப்பொழுது சமயம் சமுதாயத்தின் ஒரு பகுதியாகத் தான் கருதப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். சமுதாயம் முழுவதிலும் சமயம் ஊடுருவி நிற்றல் வேண்டும்.

நாம் புதுமையை விரும்புகிறோம். பழைமை தீயதன்று. இறைவனைப் “பழையோன்,” “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்” என்கிறோம். பழைய அடிப்படையை மாற்றாமல் புதுமையை மேற்கொள்கிறோம். பழைய கோவிலைப் புதுப்பித்துக் குட நீராட்டு விழா செய்வது போல சமய சமுதாயத்தையும் புதுப்பிக்கும் நல்ல தொண்டினை நாம் செய்தல் வேண்டும். நாம் சமய வழிப்பட்ட சமுதாய வரலாற்றின் புதிய அத்தியாயத்தை எழுத வேண்டும்.

மறைமலை அடிகள், திரு.வி.க, கா.சு. பிள்ளை போன்றவர்களால் தொடங்கப் பெற்ற சமுதாயப் பணி இடையில் தளர்ச்சி அடைந்தது. இத்தலைமுறையில் நாம் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய பயணத்தின் எல்லை நெடுந்தூரத்தில் இருக்கிறது. தளராது நடந்து செல்லுதல் வேண்டும். சமுதாயத்தில் இடைக்காலத்தில் வந்து கலந்துள்ள தீய, நஞ்சு உணர்வுகளை மாற்ற வேண்டும்.

கோயிலைத் தழுவிய குடும்பங்களும், குடும்பங்களைத் தழுவிய கோவிலும் அமைகிற சமுதாயத்தை உருவாக்குவதே நம் பணியின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். இத்திருத் தொண்டில் முயலும்போது பல இன்னல்கள் ஏற்படலாம். அவற்றிற்கெல்லாம் தளராமல் வெற்றி காணும்வரை உழைக்க வேண்டும். இந்து சமயம் இந்த நல்ல தொண்டு புரிவதற்கான வழி வகைகளைச் சிந்தித்துச் செயலாற்ற முற்படும் என்று நம்புகிறோம். நம் பணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு அடையாளமாக நம் சமயத் தலைவர்கள் எல்லோரும் ஓர் அமைப்பின் கீழ் ஒன்றுபட வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

திருமடங்கள் தமிழகத்தின் தத்துவப் பல்கலைக்கழகங்களாகத் திகழத் திருவருள்தான் துணை செய்ய வேண்டும்.

இந்து சமயம்

ந்து சமயம் என்று தோன்றியது என்று கூற முடியாத காலப் பழமையுடையது. கடவுள் உண்டு; அது ஞானப் பொருள்; உயிர் உண்டு. அது அறியாமையின் பாற்பட்டது; ஆனாலும் அறிவுப் பொருளாதற்குரிய தகுதியுடையது. உயிர் அறியாமையினின்று விலகி ஞானத்தை அடைதலே வாழ்க்கையின் நோக்கம் என்ற மையக் கருத்தைச் சுற்றி வட்டமிட்டு வளர்ந்து வந்துள்ள பல நெறிகளை இணைப்பாகக் கொண்டது இந்து சமயம்.

இந்து சமயம் இந்திய நாட்டின் மாபெரும் சமயம்; மொழிகளைக் கடந்த சமயம்; இனங்களைக் கடந்த சமயம். ஆனாலும் பாய்ந்தோடுகிற ஆறு பாய்ந்து செல்லும் நிலப்பரப்புக்களிளெல்லாம் வளம் உண்டாக்குதல்போல இந்து சமயம் இந்திய நாட்டில் பேசப் பெறும் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் வளம் சேர்த்திருக்கிறது.

இவ்வளவு பெருமை பெற்ற இந்து சமயமாயினும் காலத்தின் விளைவான சலிப்புகளிலிருந்து உயிர்ப்புடன் காப்பாற்றிக் கொள்வதற்கான கொள்கை ஆக்கங்கள்கோட்பாடுகளில் புதுப்பிப்புகள் இந்து சமயத்தில் தேவையான அளவு நடைபெறவில்லை. அது மட்டுமின்றி சில நன்னெறிகள்-மனிதர்களின் தன்னலத்தால்-உருமாறி தீநெறிகளாகி உள்ளன. அதனால் இந்து சமயம் தனது உயிர்ப்பு நிலையை இழக்காவிடினும், ஆக்கரீதியான வள்ரச்சியைப் பெறமுடியவில்லை யென்பது மறுக்க முடியாத உண்மை.

ஒழுங்கினைக் காப்போம்!

பொதுவாக உடல் மூச்சினை இடையீடின்றி உயிர்த்தல் போல நெஞ்சு இறைவன் நாமத்தை இடையீடின்றி எண்ணிக் கொண்டேயிருத்தல் வேண்டும். இதுவே சமய நெறி நிற்போரின் உயர்சீலம். அடுத்து, குறைந்தது நாளொன்றுக்கு மூன்று வேளை வணங்க வேண்டும். காலை, உச்சிப்பொழுது, மாலை இறைவனை வணங்க வேண்டுமென்பது நியதி; மரபு.

இந்த வழிபாட்டு முறையை இன்றைக்கு இந்துக்களில் பின்பற்றுபவர்கள், விரல் விட்டு எண்ணத்தக்க எண்ணிக்கை யினரேயாவர். நாள்தோறும் ஆலயம் தொழுவது நமது ஆன்றோர் மரபு. ஆனால் இன்று நாள்தோறும் ஆலயத்திற்குச் செல்பவர் எண்ணிக்கை இந்து சமய மக்கள் தொகையை நோக்க மிகக் குறைவு. பொதுவாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திருவிழாவிற்குத் திருவிழா திருக்கோயிலுக்குச் செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். இந்தக் குறை நீங்கச் சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வார வழிபாட்டு இயக்கங்கள் அறிமுகப்படுத்தப் பெற்றன.

வார வழிபாடு என்ற சொல் திருமுறை வழக்குச் சொல். அதாவது அன்பினால் செய்யும் வழிபாடு வார வழிபாடாகும். ஆனால் அது நடைமுறையில் வாரத்துக்கொருமுறை செய்யும் வழிபாடாயிற்று. இந்த வார வழிபாட்டு முறையிலும் போதிய ஒழுங்குகள் அமையவில்லை. ஊர்தோறும் கோயில்தோறும் வாரவழிபாடு நிகழும் கிழமைகள் வேறுபடுகின்றன.

ஆதலால் பொதுவாக இந்துக்கள் அனைவருக்கும் உகந்ததாகிய வெள்ளிக்கிழமையை வார வழிபாட்டு நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல்; எல்லா ஊர்களிலும் வெள்ளிக் கிழமையன்றே வார வழிபாடு நிகழும். வார வழிபாடு நிகழ்த்த வேண்டிய காலம் மாலை ஆறு மணிக்கு என்ற நியதியை மேற்கொள்ளுதல். எல்லா ஊர்களிலும் வெள்ளிக் கிழமைதோறும் மாலை ஆறு மணிக்குக் கூடி வழிபாடு செய்வதென்ற ஒழுங்கு முறையைக் காப்பாற்ற வேண்டும். கிழமையும் குறித்த நேரமும் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்காகவும் மாறக்கூடாது. இந்துக்களாகப் பிறந்த யாவரும் நாடு முழுவதும் நிகழும் இந்த வார வழிபாட்டில் தவறாது கலந்து கொள்வதைக் கடமையாகக் கொண்டு ஒழுகி ஒழுங்கைக் காப்பாற்றுவோமாக.

நமது வழிபாட்டில் நம்முடைய ஆன்றோர்கள் கடைப் பிடித்தொழுகிய சில மரபுகளைக் கடைப்பிடித்தொழுக வேண்டும். திருக்கோயிலுக்கு வார வழிபாட்டுக்கு வருவோர் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக ஒழுங்கமைதியாக வழி பாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைப் பின் தள்ளி ஒருவர் முன் போதல் உலகியலில் வேண்டுமானால் தற்காலிகமான பயன்களைத் தரலாம். ஆனாலும் தீது, சமய வாழ்க்கையில் எல்லாம் வல்ல இறைவன் சந்நிதியில் ஒருவரைப் பின் தள்ளி ஒருவர் முந்துதல் அறமன்று, அருள் நெறியும் அன்று. அப்பரடிகள் தமக்கு முன் வந்தவர்கள் பின் தாம் திருக்கோயிலுக்குள் புகுவதாகக் கூறியுள்ளார்.

“போதோடு நீர்சுமந் தேத்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்”

என்பது அப்பரடிகள் திருப்பாடல். ஆதலால் திருக்கோயில் வழிபாட்டில் வார வழிபாட்டில் கலந்து கொள்பவர் பலர் வந்து வரிசையில் ஒழுங்கமைதியுடன் நின்று சென்று வழிபாட்டை நிகழ்த்தும் ஒழுங்கு முறையைக் காப்பாற்ற வேண்டும்.

உறவினை வளர்ப்போம்!

இந்து சமூகம் மொழிகளைக் கடந்து இனங்களைக் கடந்து வளர்ந்துள்ள ஒரு சமூகம். இயற்கையான மொழி, இன வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்த மொழி, இன வேறுபாடுகள் மாறுபாடுகளாக முரண்பாடுகளாக உருவம் கொள்ளக் கூடாது. ஆதலால், இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய மொழிகளின்பால் வெறுப்புணர்ச்சி காட்டாது, இந்திய மொழிகள் பலவற்றைக் கற்க முயல வேண்டும். மொழிகளில் வெறுப்புக் காட்டுதல் அறிவுக்குத் தடை விதித்துக் கொள்வதாகும். இதை விட மனித குலத்துக்குப் பெரிய தற்கொலை எதுவும் இல்லை. தமிழில் பக்தியுணர்வை அள்ளி வழங்கும் திருவாசகத்தை அனுபவிப்போர் தெலுங்கில் உள்ள தியாகேசரின் பக்திக் கீர்த்தனைகளை, இந்தியில் உள்ள மீராவின் பக்திக் கீர்த்தனைகளைக் கற்கவும் கேட்கவும் முயலுதல் வேண்டும். இதனால் இதயம் விரியும், பண்பாடு வளரும்.

வாழ்க்கையின் நிலையாமைகளைப் பட்டினத்தார் பாடல்களில் படிக்கும் நாம் கபீர்தாசரின் அருள்மொழிகளைக் கற்றால் சிந்தனையின் இழையோட்டச் சிறப்புகளை உணரலாம். அப்பரடிகள், வள்ளற் பெருமான் ஆகியோரின் பழைமைக்கு உயிருட்டும் புதுமை நல ஆக்கக் கருத்துக்களை கன்னட நாட்டு பசவேசரின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஆதலால், இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமய அடிப்படையில் இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் அனைவரிடமும் உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்து சமூகத்தை வாழ்விக்கும் உயரிய நெறி. உடனடியான தேவையும் கூட. ஆதலால் இந்து சமூகத்தினரிடையில் இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்து உறவினை வளர்ப்போம்.

நம்முடைய நல்லூழின்மையின் காரணமாக இந்து சமூகத்தில் இயற்கையான இன, மொழி வேறுபாடுகள் மட்டுமல்லாமல் செயற்கையான சாதி வேற்றுமைகள் வளர்ந்துள்ளன. இந்தச் சாதி வேற்றுமைகள் தொடக்க காலத்தில் தொழில் வழிதான் அமைந்தன. ஆனால் காலப்போக்கில் இந்தச் சாதி வேற்றுமைகள் பிறப்பின் வழியதாக அமைந்துவிட்டன. தொழிலியல் அடிப்படையில் அமையும் வேறுபாடுகள் மாறுபாடுகளை முரண்பாடுகளை உண்டாக்காது; மிகப் பெரிய உயர்வு தாழ்வுகளையும் தோற்றுவிக்காது. தொழிலியற் பகுப்பு முறையில் பெருமைகள், மேற்கொள்ளப்படும் தொழிலின் அடிப்படையிலேயே அமையும்; பிறப்பில் அமையாது.

ஆனால் நடைமுறையில் இந்து சமூகத்தில் சாதிகள் பிறப்பின் அடிப்படையிலேயே அமைந்து செயற்படுகிறது. இரண்டு சாதியினர்க்கிடையில் மலைக்கும் மடுவுக்கு மிடையேயுள்ள மாறுபாடுகள் ஏன்? முற்றிய நஞ்சாகத் தீண்டாமையே உருப்பெற்று விட்டதே! இங்ஙனம் பிறப்பின் அடிப்படையில் சாதி வேறுபாடுகள் வளரத் தொடங்கியவுடன் இந்து சமூகத்தினரிடையில் வெறுப்பும் பகையும் ஆரோக்கியமில்லாத போட்டா போட்டிகளும் வளரத் தொடங்கிவிட்டன. காலப்போக்கில் பழக்கத்தின் காரணமாகக் குடும்பங்களிடையே கூட, இந்த நிலைமைகள் பரவிக் கால் கொண்டன. இந்த வேற்றுமைகளின் காரணமாகவே இந்து சமூகத்தினிடத்தில் பரஸ்பர நம்பிக்கை குறைந்துநல்லெண்ணங்கள் குறைந்து அவநம்பிக்கை மேலிட்டு எரிச்சலூட்டும் பிரச்சாரங்களும், பகை மூட்டும் இயக்கங்களும் தோன்றலாயின. இவற்றின் விளைவாகக் கோடானு கோடி மக்கள் மதமாற்றத்திற்கு ஆளாயினர். நம்முடைய இந்து சமூக வரலாற்றில் நிகழ்ந்த இந்தத் தீய விளைவுகளை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுதல் கூடாது.

ஆதலால், நம்முடைய இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் ஒருகுலமாகி, ஒரு குடும்ப உணர்வில் அன்பினைப் பெருக்கி, உறவினை வளர்ப்போமாக, நம் முடைய சமூகத்தில் பலரோடும் கூடிப் பழகி இதயத்தினை வளர்த்துக் கொள்வோமாக.

இன்று நம்முடைய சமூகத்தில் பரவியுள்ள ஒரு தீமை உறவின்வழி அன்பு காட்டுவது. இது தீது, ஒரு பொழுதும் நாட்டுக்கும் சமூகத்திற்கும் இஃது ஆக்கம் தராது. அன்பின் வழி உறவுவழித் தோன்றும் அன்பு உறவுக்குரிய காரணங்கள் மாறுபடும்பொழுது, குறையும்; வற்றும். ஏன் முரண்பாடுகளாகக் கூட உருமாறி விடுகின்றன.

நம்முடைய சமூகத்தில் நாள்தோறும் ஏற்படும் மன முறிவுகள் அளப்பில. சாலை விபத்துக்களைச் செய்தியாக்குவதைப் போல மனமுறிவுகளைச் செய்தியாக்கினால் சிந்தனை கலங்கும். சிலர் மனமுறிவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யாமல் சாமர்த்தியமாகச் சமாளிக்க முயலுகின்றனர். வேறுசிலர், மனமுறிவுகளையே வெற்றி தோல்விகள் ஆக்குகின்றனர். எது எப்படியாயினும் மனமுறிவுகள் வரவேற்கத்தக்கன அல்ல.

ஆதலால், மனமுறிவுகள் தோன்றுதலுக்குரிய சூழல்களையே தவிர்த்திடுதல் வேண்டும். அதற்கு ஒரே வழி அன்புதான். அன்பிற்குத் தடையாய் இருப்பன தன்னலமும், தன்முனைப்புமேயாம். தீமையைக் கூட ஒறுத்தலின் மூலம் ஒரு பொழுதும் மாற்ற இயலாது. தீமையுடையாரையும் கூட உவந்து, கலந்து பேசி மாற்றுதலின் மூலமே நிலையான அடிப்படையில் தீமை மாறும்.

ஆனால் நன்மையில்லாதார் ஒருவர் தீமையை அந்தத் தீமையின் காரணமாகவே தாம் நன்மையுடையார் போல் காட்டிக் கொள்ளும் தீய பழக்கம்தால்தான் மனித உறவுகள் பாதிக்கின்றன. ஆதலால், எந்தக் காரணத்தையும் மனத்திற்கொள்ளாமல் அன்பு காட்ட வேண்டும். அன்பு காட்டுவதே குறிக்கோள்.

அன்பின்வழி சிலரிடத்தில் உறவு வளரலாம். சிலரிடத்தில் உறவு வளராமல் நிற்கலாம். ஆனால், அடிப்படையான அன்பு இருப்பதால் உறவு வளராது போனாலும் பகை தோன்றாது. தீமையும் தோன்றாது. ஆதலால் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமய அடிப்படையில் இந்துக்களாக வாழ்வோர் அனைவரிடமும் எந்தவித வேறுபாடும் பாராட்டாமல் அன்பாகக் கலந்து பேசிப் பழகவேண்டும். உண்ணும் பொழுதுகூட உறவு கலந்து உண்ணச் சொன்னாரே தாயுமானவர்.

ஆதலால், இந்து சமூகத்தினில் உறவு கலந்து பழகுதற்குரிய வாய்ப்புகளைத் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும். அவ்வழி அன்பினைக் காட்ட வேண்டும்; அன்பினைப் பெற வேண்டும். அவ்வழி இந்து சமயத்தின் உயர் கொள்கையாகிய “ஒன்றே குலம்” என்ற உயரிய கொள்கை நடைமுறைப் படுத்தப்பெற வேண்டும். அப்படியானால் ஆசாரங்கள் என்ன ஆவது? என்று சிலர் கேட்கலாம். ஆசாரமுடையவரிடம் பழகுவதன் மூலம் மற்றவரும் ஆசாரமுடையவராக மாறி வளர்வார்கள். சீலமுடையாருடன் சீலமில்லாதவர் பழகுவதன் மூலம் சீலம் பெறுவர். இதுவே நடைமுறை உண்மை. ஆதலால், இந்து சமூகத்தினிடத்தில் உறவினை வளர்ப்போம்!

உதவிகள் செய்வோம்!

மனித குலத்தின் உயிர்நிலை ஒருவருக்கொருவர் உதவி செய்தலில்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்க் குலத்தில் இயல்பாகவுள்ள வேறுபாடுகள் கூட உயிர்க் குலத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தேவையான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்ளத்தான் போலும். இயற்கையில் ஒன்று புளிக்கிறது; ஒன்று காரமாக இருக்கிறது. தோற்றத்தில் வேறுபாடுகள்! செயல் முறையில் பயன்படுவதில் ஒருமைப்பாடு; உயிர்க்குலத்தின் ஆக்கம், வாழ்வு இதுதானே உண்மை! உதவியென்ற அடிப்படையில் தான் வேளாண்மை நடைபெறுகிறது. தொழிலுலகம் செயற்படுகிறது.

ஆனால், காலப்போக்கில் உதவியென்ற இந்த மனப்பான்மை அருகி, நாட்டில் ஏழ்மையும் வறுமையும் வளர்ந்து விட்டன. இந்து சமூகத்தில் மிக அதிகமான மக்கள் வறுமையிலும், ஏழ்மையிலும் உழல்கின்றனர். இந்து சமூக மக்கள் மதமாற்றங்களுக்கு ஆளானதற்கு மிக முக்கியமான காரணம் வறுமையும், ஏழ்மையுமே எனபதை எளிதில் மறந்து விட முடியாது. இன்றும் ஓர் இந்துவுக்குச் சமய அடிப்படையில் சமூக அடிப்படையில் உத்தரவாதமில்லை என்ற மனவேதனை நிறைந்த உண்மையை நாம் உணர்ந்து, செயற்படும் நாளே இந்து சமூகத்தில் பொன்னாள்!

ஆதலால் ஒவ்வொரு இந்துவும், இந்து சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் மனப் பான்மையில் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உதவி இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுதல் கூடாது. உரிமை, கடமை என்ற அடிப்படையில் தோன்ற வேண்டும். இந்த உதவி அற உணர்ச்சியில் மட்டும் நடைபெறக் கூடாது. முறையான ஆக்க ரீதியான உதவியாக அமைய வேண்டும்.

ஆதலால், ஒவ்வொரு இந்துவும் தம்முடைய வருவாயில் ஒரு குறிப்பிட்ட நியாயமான விழுக்காட்டு நிதியைச் சமூகப் பாதுகாப்பு நிதிக்கு மனமுவந்து தர வேண்டும். அந்த நிதி இந்து சமூகத்தில் நலிந்தவர்களுடைய மேம்பாட்டுக்கு ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தப் பெறல் வேண்டும்.

இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழத்தக்க வகையில் வளர்க்கப் பெறுதல் வேண்டும். இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழத்தக்கவகையில் வளர்க்கப் பெறுதல் வேண்டும். இந்து சமூகத்தின் மேம்பாட்டுக்குத் தொண்டு செய்தல்-உதவி செய்தல் இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் தலையாய கடமை என்பதை உணர வேண்டும். இந்து சமூகத்தில் எந்தவொரு மனிதன் நலிவுற்றாலும் காலப்போக்கில் இந்து சமூகத்தின் மொத்த உருவமும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். ஆதலால், இந்து சமூகத்திற்கு உதவிகளைச் செய்து அதனை வாழ்விக்க முன் வரவேண்டும். ஆதலால் உதவிகள் செய்வோம்!

“ஒழுங்கினைக் காப்போம்!
உறவினை வளர்ப்போம்!
உதவிகள் செய்வோம்!”

என்ற இந்த மூன்று கோட்பாடுகளையும் சிந்தனையாலும் செயலாலும், அக நிலையிலும் புறநிலையிலும் ஒவ்வொருவரும், நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கோட்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இந்து சமூகத்தினர் பக்தியில் சிறப்பர்; ஞானத்தினைப் பெறுவர்; உறவிற் கலந்து ஒருகுலமாக வாழ்வர். இந்துக்கள் அனைவரும் இன்புற்று வாழ்வர், நாம் அனைவரும் சிறந்த இலட்சியத்தினை அடைந்து மகிழ்வோம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


அவர்களைத் தேருங்கள்

நாம் வணங்கும் இறைவன் காலத்தை வென்றவன். ஆதலால் “காலகாலன்” என்பர். அப்படியானால் என்ன பொருள்? இறைவனுக்குக் சாதல் பிறத்தல் இல்லையென்று சிலர் கூறுவர். அதாவது, ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை யென்பர். இதுதான் காலத்தை வென்றவன் என்பதற்குப் பொருள் என்றால் நாமும்கூடக் காலத்தை வென்றவர்கள் தாம்.

சைவ சித்தாந்த சமய நெறியின்படி உயிர்கள் என்றும் உள்ளவை. அவைகளுக்கும் பிறப்பில்லை. இறப்பில்லை. உயிர்கள் உடல்தாங்கி உலா வருதலையே பிறப்பு என்கிறோம். உயிர்கள் உடலை இழத்தலை “இறப்பு” என்றும், புதிய உடல் பெறுதலைப் “பிறப்பு” என்றும் கூறுகிறோம். சைவத்தின்படி உயிர்களுக்கு முத்தி நிலையிலும்கூட அழிவில்லை. இறைவனுங்கூட உயிர்களை ஆட்கொள்வான் வேண்டி, பல திருமேனிகளை எடுக்கிறான், பல பெயர்களைப் பெறுகிறான். ஆதலால், இறைவன் காலத்தை வென்றவன் என்பதற்குப் பொருள் பிறப்பில்லாதவன்இறப்பில்லாதவன் என்பது மட்டுமாக இருக்கமுடியாது. அந்தத் தகுதி நமக்குத்தான் இருக்கிறதே. ஏன்? நம்மை அலைக்கழிக்கும் ஆணவத்திற்குங்கூட அந்தத் தகுதி உண்டு. அப்படியானால் காலத்தை வென்றவன் என்பதற்கு என்ன பொருள்? இறைவன் காலத்தை வென்றவன் என்பதற்குரிய பொருளை மாணிக்கவாசகர், மிக அருமையாக விளக்குகிறார். “முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என்ற திருப்பாடல் காலத்தை வென்றமைக்கு இலக்கணம். ஆம். காலம் சுழல்கிறது. சுழன்று கொண்டேயிருக்கிறது. காலத்தின் தேவைகள் மாறுகின்றன; மாற்றம் உலக இயற்கை, மாறாதது தேங்கும்; மூப்படையும்; முதுமையடையும்; பாழ்படும்.

இறைவனைப் பொறுத்தவரையில் தேக்கமில்லை. அவன் காலத்தினும் கடிதாக விரைந்து தொழிற்படுகின்றான். அவன் உயர்ந்து அருமையாகப் பூசனைகள் பெறுவதும் உண்டு.

அவனே உயிர்களை நோக்கிப் பள்ளங் கால்மடையாக இறங்கி வந்தருளிச் செருப்படியைப் பெறுதலும் உண்டு.

இறைவனுக்கு வரன்முறைகள், சம்பிரதாயங்கள், சட்டதிட்டங்கள் இல்லை. இறைவனுக்கு ஒரே நோக்கு உயிர்களை ஆட்கொள்ள வேண்டும் என்பதே இந்த நோக்கத் திற்காக இறைவன் செய்யாத செயல் ஏதேனும் உண்டா? இறைவன் ஆட்கொண்டருளுவதற்காக உயிர்களின் நிலைநோக்கிப் பெறும் கோலங்கள் புதுமைக் கோலங்கள். அதனால் எந்த ஒரு காலத்துச் சமுதாயமும் அவனைக் கண்டு ஒதுங்காமலும், அவனால் ஒதுக்கப் பெறாமலும் ஆட் கொள்ளப்படும் கருணையைப் பார்க்கிறோம். இத்தகைய உயர் அருள் நெறியை நோன்பாக, சீலமாகக் கொள்ள வேண்டுமென்பதே சமயநெறி. இறைவன் திருவிளையாட்டில் அவனடைந்த முத்திரைகள் யாதுமில்லை. ஆனால், உலகச் சமுதாயத்தின் வாழ்க்கையில் அவன் பதித்த முத்திரைகள் பலப்பல உண்டு.

காலம், நம்மைப் பொறுத்தவரையில் புவியீர்ப்பு ஆற்றலைவிட வெகுவேகமாக இருந்து வீழ்த்துகிறது. காலத்தின் அருமை புரிவதில்லை. நாம் குறிப்பிடுவது இரண்டு பொருளிலுமேதான். ஒன்று காலத்தை அளக்கும் விநாடிகளின் அருமை. வினாடிகளைக் காப்பாற்றுவதும் கடமை தான். ஆனால் வினாடிகளைக் காப்பாற்றுவதன் உட்பொருள் என்ன?

அந்தந்தக் காலத்தின் அருமைப்பாடுகளை அறிந்து உணர்ந்து படிப்பினைகளை ஏற்றுக் காலம் நம்மைக் கட்டுப்படுத்தாமல், காலத்தை நாம் கட்டுப்படுத்தும் அளவுக்கு வளரவேண்டும்.

கட்டுப்படுத்துதல் ஆணையினாலன்று அறிவினால், அன்பினால், உணர்வினால் என்பதை மறத்தல் கூடாது. கால வெள்ளத்தில் ஆணைகள் சிதறும். ஆணைகளுக்குரிய அரசுகள் நிலைபெற்றன அல்ல. அதனால் அறிவில், அன்பில், அருளில் வைத்து வாழ்வியலை அரவணைத்து ஆற்றுப்படுத்திக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். காலத்தின் படிப்பினைகளை அலட்சியம் செய்யக்கூடாது. ஒரு சிலர் வாழ்வது இருபதாம் நூற்றாண்டில், ஆனால் அவர்களுடைய சிந்தனை கற்காலத்தில் இருக்கிறது. இத்தகையோர் தீண்டாமைக்கு நியாயம் கற்பிப்பர். சாதி வேற்றுமைகளுக்குச் சாத்திரம் காட்டுவர். உழவர் பெருங்குடி மக்கள் உயர்வதை ஏற்கும் மனம் இருக்காது. அவர்கள் மற்றவர்களைப்போல் உடுத்துதலைக்கூட விரும்பமாட்டார்கள். ஆனால் இவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்பவர்கள். இல்லை-இல்லை; அவர்களுடைய உடல் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறது. அவர்களுடைய உணர்வுகள் வழி, கற்காலத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் காலத்தை வென்றவர்கள் அல்லர், வெல்லவும் மாட்டார்கள்.

நம்முடைய மொழி, காலத்தை வென்று விளங்க வேண்டும். நம்முடைய இனம், காலத்தை வென்று விளங்கவேண்டும். நம்முடைய சமயம், காலத்தை வென்று விளங்க வேண்டும். இவையே இதுவரையில் நம்மை இயக்கிய உந்து சக்திகள்.

நம்முடைய மொழி, செழித்து வளரவேண்டும். புத்தம் புதிய கலைகளைப் பெற்று விளங்கவேண்டும். அன்றாடம் நம்முடைய வாழ்வைத் துண்டி வளர்க்கும் புத்தம் புதிய சிந்தனையை வாரி வழங்குவதாக விளங்க வேண்டும். அன்னைமொழி, உலக மொழியாக விளங்க வேண்டும். உலகம் அதற்கு உரிமையாக வேண்டும், தமிழன்னை பெற்றிருக்கும் எண்ணற்ற இலக்கியச் செல்வங்கள் உலகோர்க்குப் பொதுமையாக வேண்டும். இதுவே நமது விழைவு.

மனிதகுலம் ஒன்றேயாகும். அதில் நமக்கு எட்டுணையும் ஐயமில்லை. மனிதகுலத்தை ஒரு குலமாகக் கருதி அன்பு காட்ட எந்த ஒன்றும் தடையாக இருக்கக் கூடாது. இது நமது அசைக்க முடியாத நம்பிக்கை. இல்லை...இயன்ற வரையில் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி வெற்றி தோல்விகளைக் கண்டு பலபட்டறை என்ற பெயருக்குக்கூட ஆளானோம். இந்த ஒரே காரணத்தினாலேயே நமக்கென்று ஒரு கூட்டத்தை நாம் உருவாக்கி வைத்துக்கொள்ள முடியவில்லை. நடு நிலைக்கு நாட்டில் வரவேற்பு அவ்வளவு தான். ஆயினும், நாம் இனவழி அன்பை வரவேற்கின்றோம். ஏற்றுப் போற்றுகின்றோம். இது என்ன முரண்பாடு என்று சிலர் கேட்கலாம். முரண்பாடு இல்லை என்பது நமது கருத்து. ஒரு மனிதன் உலக மனிதனாக வளர்ந்து உயரலாம்; வளர்ந்து உயர வேண்டும். ஆனால் அந்த வளர்ச்சி படிப்படியாகத்தான். கடமைப்பட்டுள்ள சூழலில் உள்ள மனித சமூகத்திற்கு அன்பு காட்டாமல் உயர முடியாது; வளர முடியாது. அங்ஙனம் சொல்வது பிழை. ஆனால் இனவழிப்பட்ட அன்பில் சிறைப்படுத்திக் கொண்டு, மற்ற இனத்தை வெறுப்பதை அல்லது அன்புகாட்ட மறுப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏற்றுக் கொண்டதும் இல்லை. நாம் மனப்பூர்வமாகத் தமிழினத்தை நேசிக்கிறோம். தமிழினத்தை முன்னேற்ற விரும்புகின்றோம். தமிழினம் பிறிதோரினத்திற்கு அடிமைப் படலாகாது, என்பதில் அளவற்ற அக்கறை காட்டுகிறோம்.

இது நமது பிறப்பில் குறையாக அமைந்தது. இது தவறு என்றால், இந்தத் தவற்றைத் தொடர்ந்து செய்கின்ற பேறு நமக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால் மறந்துங்கூட வேறு எந்த இனத்தின் மீதும் நாம் வெறுப்புக் கொண்டதில்லை. கொள்ளவும் மாட்டோம். இன்னும் தெளிவாகச் சொன்னால் குறுகிய இனவட்டத்திலிருப்பவர் பலர் இன்று இனப்பற்றில்லாதவர்கள் போல நடிக்கின்றனர். நாடும் அவர்களை நம்பத்தான் செய்கிறது. நாளேடுகள் அப்படித்தான் காட்டுகின்றன.

மொழி, இனம் இரண்டிற்கும் அடுத்து இன்றியமையாதது சமயம், பெரும்பாலும் இனவழி, மொழிவழி வந்தமைவது. நம்முடைய சமயத்தைப் பொறுத்தவரை இன்று இதே நிலைதான். நம்முடைய சமயமாகிய சைவ சித்தாந்தச் செந்நெறியில் நமக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. ஆனாலும், இந்து சமயத்தை நாம் ஏற்றுக் கொள்ளத் தயங்கவில்லை. அது போலவே நாம் கிறித்தவத்தைப் போற்றவோ, இசுலாமியத்தை ஏற்றிப் பாராட்டவோ என்றுமே தயங்கியதில்லை. ஆனாலும், நம்முடைய சமயம் சைவ சித்தாந்த செந்நெறியேயென்பதும், அது உலகப் பொதுநெறியாக வளர வேண்டும் என்பதும் நம்முடைய விழுமிய நோக்கம்.

இந்த நோக்கங்களை மையமாகக் கொண்டுதான் பயணம் நடைபெற்று வந்திருக்கிறது. நோக்கங்களுக் கிசைந்தவாறு நட்புகளும் உறவுகளும் அமைந்தன. அமையும். ஆனாலும் நம்முடைய சமுதாயம் காலத்தை வென்று விளங்க விரும்புவதில்லை. மொழி, இனம், சமயம் மூன்று துறையிலுமே இந்தக் குறையிருக்கிறது.

மொழித்துறை ஓரளவு விழிப்படைந்திருக்கிறது. ஆனாலும் காலத்தின் தேவைக்கும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் ஈடுகொடுப்பதாக இல்லை.

இனப்பற்று சென்ற காலத்திற்கு இப்போது பரவாயில்லை. அவ்வளவுதான். தமிழினம் இன்னமும் தம்முள் முரணி மோதிக் கொண்டிருக்கிறது. இனவழிப்பட்ட அன்பை வளர்த்துக் கொள்ளக் கொள்கைகள் கோட்பாடுகள் தடையாக இருக்கக் கூடாது. இது வேறு உலகம், அது வேறு உலகம். மண்ணிலிருந்து விண்ணுலகத்தை எண்ணிப் பார்ப்பார்கள். நட்பு உலகத்திற்கும் கொள்கை உலகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைக் குறைக்கக் கூடாதா? அன்பின் வழி கொள்கை மாற்றங்களை உருவாக்க முடியும். கொள்கை வளரும். பகைவழி ஒரு பொழுதும் முடியாது. ஆதலால், இனவழிப்பட்ட அன்பும் செழித்து வளரவில்லை. ஒரு தமிழன் இன்னொரு தமிழனை வெறுத்துப் பகை கொண்டு ஏசுவதைக் கேட்கின்றோம். அவன் வாழ்க்கைக் குட்பட்டு சூழ்ந்து தீமை செய்வதைக் காண்கின்றோமே! பகுத்தறிவுவாதிகளின் அமைப்புங்கூட உடைந்துவிட்டதே. இனவழி அன்பு என்று பேசத் தொடங்கிய ஐம்பதாண்டுகளுக்குள் எத்தனை உடைசல்கள். எண்ணிக்காட்ட வேண்டுமா? இல்லை. எண்ணிக்காட்ட இதயம் கல்லாக இல்லை. இனவழிப்பட்ட அன்புக்கு, உறவுக்கு நம்முடைய தலைமுறையில் வாழ்ந்த அமரர் பேரறிஞர் அண்ணா ஒரு விழுமிய எடுத்துக்காட்டு.

ஆதலால், இனவழி அன்பும் முழுமையாக வளர்ந்து விடவில்லை. நாமேகூட இனவழி அன்பைப் பலரிடத்தில் பெற முடியவில்லை. ஆனால், அவர்கள் இன வழிப்பட்ட அமைப்புக்களில் விளங்குகின்றனர். இந்த முரண்பாடு ஏன்? தமிழினம்- கொள்கை, கோட்பாடு, கட்சி, சமயம் இவற்றை மறந்து இனவழிப்பட்ட அன்பைக் காட்டக் கற்றுக் கொள்ள வேண்டும், வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இனவழிப்பட்ட அன்பில் தமிழினம் வளர்வது மற்ற இனங்களின் வளர்ச்சிக்கு எதிராக அல்ல. எந்த ஒரு இனமும் பிறிதோரினத்தைத் தாழ்த்தி வளர்ந்துவிட முடியாது. அப்படி வளரும் வளர்ச்சியும் நிலையானதல்ல. அமுக்கப்படுகிற இனம் என்றாவது ஒரு நாள் எழுந்தே தீரும். அப்பொழுது அமுக்கிய இனத்தின் வரலாறு துன்பமாக முடியும்.

ஆதலால், தமிழினம் இந்திய இனங்களோடு ஒருங்கிணைந்து வாழ விரும்புகிறது. உலக இனங்களோடு உறவு கொள்ள விரும்புகிறது.

ஓருலக அமைப்பிற்குத் தமிழினம் என்றும் துணை நிற்கும். ஆனால், தமிழினத்தின் தன்மையை அஃது என்றும் இழக்காது. இழக்கக் கூடாது.

தமிழர் தம் அறிவில் பூத்துத் தோன்றியதே சைவ சித்தாந்தச் செந்நெறி. உலகச் சமயங்கள் உயர்வுடையன. ஆயினும் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவர்கள் சைவசித்தாந்தமே உலகச் சமய நெறிகளில் உயர்வுடையதாக இருப்பதை அறிவர். எந்த ஒரு காரணத்தினாலாவது உலகம் இதை அறிந்துகொள்ள மறுத்தால், அறிந்தும் எற்றுக் கொள்ள மறுத்தால் அது உலகத்திற்கு இழப்பேயாகும்.

ஆனால் தமிழகத்திலேயே கூட சித்தாந்தச் செந்நெறி தனித் தன்மையை இழந்து கலப்படமாகி உருவம் இழந்திருக்கிறது.

எந்த நோக்கங்களுக்காக நம்முடைய பணிகள் தொடங்கப் பெற்றனவோ அந்த பணிகளில் நாம் இன்னும் முழுமையான வெற்றியை அடையவில்லை. தேக்கத்தில் இயக்க உணர்வை உண்டாக்க முடிந்தது; அவ்வளவுதான். தமிழகம் எதையும் எளிதில் ஏற்றுச் செயற்படுத்தாமல் வாளாயிருந்ததால் எல்லைகளை இழந்திருக்கிறது. இனவழி மக்களை இழந்திருக்கிறது. இது ஆண்டாண்டுக் காலமாக வளர்ந்து வந்திருக்கிற நோய், வள்ளுவரை ஈன்றெடுத்த நாடு, திருநாவுக்கரசரை ஈன்று புகழ்பெற்ற நாடு, வள்ளலாரைப் பெற்ற நாடு எவ்வளவு இழப்புகளை அடைந்திருக்கிறது? அந்த இழப்புகள் இன்னும் தொடர்கின்றன.

நாம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்விகளைச் சந்திக்கிறோம்; இகழ்ச்சிகளை ஏற்றுக் கொள்ள என்றும் தயங்கியதில்லை. ஆனால், இனம், மொழி, நமது சமயம் ஆகியவற்றுக்கு இழப்புகள் ஏற்படும் பொழுது உயிர் துடிக்கிறது. நமக்குப்பின் வருபவர்கள், நம்மைச் சேர்ந்தவர்கள் இந்த உயிர்த் துடிப்பைப் புரிந்துகொண்டு செயற்பட்டால் அதுவே நமக்கு மகிழ்ச்சி.

அன்புகூர்ந்து சாதனைகளைச் செய்யத் துணியுங்கள். நம்முடைய இயக்கத்திற்கு-கொள்கைக்கு மேட்டுக் குடியினர் ஆதரவு கிடைக்காது. செல்வச் சீமான்களின் ஆதரவு கிடைக்காது. இவர்கள் சமரசத்திற்கு, சமதர்மத்திற்கு உடன்படாதவர்கள். இங்ஙனம் உடன்படாதவர்கள் எண்ணிக்கையில் சிலரே. ஆனாலும் வலிமையான முகாம். நம்முடைய கொள்கைகளை இதயத்தில் ஏந்தித் துணை நிற்க வேண்டியவர்கள், சாதாரணமானவர்கள், கிராமங்களில் வாழ்பவர்கள். அவர்களைத் தேடுங்கள் அவர்களிடத்தில் மொழி உணர்ச்சியைத் துண்டுங்கள். இனப்பற்றை வளருங்கள். சமய வாழ்க்கையை மலரச் செய்யுங்கள்.