குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12/புராணங்களைப் புதுப்பிப்போம்


19


புராணங்களைப் புதுப்பிப்போம்

(மார்ச்சு - 93)


புராணம் என்ற சொல்லுக்குப் பொருள் பழைய வரலாறு என்பதாகும். தமிழ் மக்களுடைய வாழ்க்கை, நாகரிகத் தடத்தில் நடைபோடத் தொடங்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பல நல்ல கருத்துக்கள் - நீதி சமுதாய நீதி ஆகியவையும் சம்யத் தத்துவங்களும் தமிழ் மக்கள் வாழ்வியலின் ஆக்கமேயாம். பல திருமேனி வழிபாடு முதலினவும் கூட வாழ்வியலைக்களமாகக் கொண்டே தோன்றின. காலப்போக்கில் இந்த உண்மைகளுக்குப் புனிதத் தன்மைகொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நீதிகளும் தத்துவங்களாக்கப்பட்டன.

வாழ்வியல் உண்மைகள் தத்துவ வடிவம் பெற்ற நிலையில் பொது மக்களிடமிருந்து விலகிவிட்டன. இந்தச் சூழ்நிலையில் உயர்ந்த தத்துவங்களைப் பொதுமக்களுக் கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்துத் தோன்றியது. அதனால் மக்களின் கல்வித் தரத்திற்கு ஏற்பத் தத்துவங்களுக்கு, புராண வடிவங்கள் தரப்பெற்றன. புராண வடிவம் பெற்ற காலம் பொது மக்களிடம் வாழ்வாங்கு வாழும் விருப்பமும் தத்துவச் சிந்தனையும் அருகி வந்த காலம். புராணங்களிலிருந்து உண்மைகளை அறிந்துகொள்வதற்குப் பதிலாக அதிகமான பாத்திரங்களையும் பாத்திரங்களின் நிகழ்வுகளையுமே புரிந்து கொண்டார்கள். இதனால் புனைவுகளிடத்தில் மக்களின் புலன்கள் நின்றன. புனைவுகளைக் கடந்த தத்துவத்தைத் தொட இயலவில்லை. அவ்வழி சடங்குகளும் தோன்றின. காலப்போக்கில் வாழ்க்கையில் சின்ன சின்னச் செயல்களையே செய்து பழகிப்போனதால் செயற்கரிய செய்தலுக்குரிய எண்ணமும் உறுதியும் இல்லாமல் போய் விட்டது. நாயன்மார்கள் செய்த காரியங்கள் அற்புதங்களாகியதோடன்றி நம்மனோர்க்கு எட்டாதவை என்ற கருத்தும் தோன்றிவிட்டது.

பல புராணங்களின் கரு, வாழ்வியல் உண்மைகளை விளக்கும் தத்துவச் சிந்தனைகளைப் பாத்திரங்கள் வழி எளிதாக்குவதேயாம். ஆயினும் புராணங்கள் அனைத்துக்கும் இத்தகுதி உண்டெனக் கூற இயலாது. சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் மிகச் சிறப்புடையது. பெரியபுராணம் அற்புதமான ஒரு காப்பியம். சமுதாய மாற்றத்திற்குரிய வழியைக் காட்டிய காப்பியம். கடவுள், வாழ்த்துப் பொருள் மட்டுமல்ல; வாழ்வுப் பொருள் என்று காட்டிய இலக்கியம். பக்தி செய்தல், பாடுதல் ஆகியவற்றினும் கைத்திருத்தொண்டு செய்தல் சிறப்பு என்று உணர்த்திய காப்பியம். சாதி வேற்றுமைகளைக் கடந்த ஒருமை நலத்தை உணர்த்திய காப்பியம். சாதிகளை மறந்து சமய அடிப்படையில் ஒருமையை நிலைநாட்டிய காப்பியம். கடவுள், மனைகள் தோறும் நடமாடிய வரலாற்றை உருக்கமாகக் கூறும் காப்பியம். பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள். குறிக்கோளுக்காகப் போராடியவர்கள்; புகழ் பெற்றவர்கள்; நம்மனோர்க்கு சிறந்த வழிகாட்டிகள். மக்கள் சமுதாயத்தை மிகவும் அருமையுடையதாகிய குறிக்கோள் சார்ந்த வாழ்க்கை நடத்தத் தூண்டி வழி நடத்துவதில் பெரியபுராணம் சிறந்து விளங்குகிறது.

பெரிய புராணத்தில் பாத்திரங்களாக வரும் அடியார்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்களே! நிகழ்ச்சிகளை, படிப்போர் உளம் கொளக் கூறுவதில், சில பல புனைந்துரைகள் இருக்கலாம். ஆயினும் நாயன்மார்கள் வாழ்க்கை, வரலாறு என்பதை மறுக்கவும் இயலாது; மறக்கவும் கூடாது. பெரியபுராண அடியார்களிடம் குறிக்கோள் இருந்தது. அக்குறிகோளுக்காக உழைத்தார்கள். உறுதியுடன் உழைத்தார்கள், ஓயாது உழைத்தார்கள். அதனால் வெற்றியும் பெற்றார்கள். கடவுட் காட்சியும் அவர்களுக்குக் கிடைத்தது.

இன்று நம்மனோரிடம் அவர்கள்பால் இருந்த குறிக்கோள் சார்ந்த வாழ்க்கையும் இல்லை; உறுதியும் இல்லை; உழைப்பும் கிடையாது. அதனால், அந்த அடியார்களுடைய வாழ்க்கை நமக்கு அருமையானதாக - எட்டாக் கனியாகத் தெரிகிறது. நாம் அந்த வரலாறுகளைப் படிப்பதோடு சரி! அந்த அடியார்களுடைய வாழ்க்கையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்திட - பணி செய்திட விரும்பி முயன்றால் நம்முடைய வாழ்க்கையில் பல அரிய பணிகள் செய்யலாம். அப்படி யாரும் முயற்சி செய்யாமையினால் புராணங்கள் - கதை, கற்பனை, பொய், அவசியமில்லாதவை என்று சொல்லும் அளவுக்குச் சிலர் வந்துவிட்டனர். நாம் மீண்டும் புராணங்களைப் புதுப்பிக்க வேண்டும், அடியார்கள் செய்த பணிகளை அவர்களுடைய அடிச்சுவட்டில் செய்ய வேண்டும். அடியார்கள் இந்த மண்ணகம் சிறப்புறச் செய்து காட்டிய பணிகளைச் செய்யவேண்டும்.

சேக்கிழார் பெரியபுராணத்தில் வரும் பணிகளைச் செய்தால் நல்ல வீடுகள் விளங்கித் தோன்றும் பலரும் ஒத்திசைந்து வாழும் சமுதாய அமைப்புத் தோன்றும்; வேற்றுமைகள் குறையும். அன்பின்வழி உறவுமலரும்; ஒப்புரவு நெறி கால்கொள்ளும்; இந்த மண்ணகம் விண்ணகமாகும்.

நமது முன்னோர் சிறந்த முறையில் சமுதாய அமைப்பைக் கண்டு வளர்த்தனர். பாதுகாத்தனர். ஊர் என்ற அமைப்பு அழகுற அமைந்தது. நடுவூரில் திருக்கோயில்! திருக்கோயில்கள் எடுப்பதற்கு முன்பு திருக்குளங்கள் அமைந்தார்கள். திருக்குளங்கள் திருக்கோயிலுக்குச்செல்வோர் துய்மை செய்து கொள்ளப் பயன்பட்டன. அந்த ஊரில் நிலத்தடி நீரைப் பராமரித்துக் கொள்ளவும் துணைபுரிந்தன. இயற்கை வளத்தையும் சூழ்நிலையையும் திருக்குளங்கள் பராமரித்தன. திருக்குளம் அமைத்த பிறகு தல விருட்சங்கள் நட்டனர். தல விருட்சங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல. காடு களைப்போல வைத்து வளர்ந்தனர். அரசவனம், கடம்பவனம் என்ற வழக்குகளை உற்று நோக்குக. திருக்குளம் அமைத்துத் தல விருட்சங்கள் வைத்த பிறகுதான் திருக்கோயில் எடுத்தனர். திருக்கோயில் பலரும் வழிபடும் திருத்தலம். திருக்கோயில்கள் கடவுளை எழுந்தருளச் செய்வதற்காக மட்டும் தோன்றியவையல்ல திருக்கோயில் கடவுள் தலைமையில் சமுதாயம் கூடி வழிபாடு நிகழ்த்துவதுடன் நட்பில் கலந்து பேசி மகிழ்ந்து உறவாட வேண்டும் என்பதும் குறிக்கோள்.

தமிழ்நாட்டில் திருவாரூர் ஒரு பெரிய திருத்தலம். இத்திருத்தலத்தின் பழைமை குறித்து அப்பரடிகள் “முன்னோ? பின்னோ?” என்று ஒரு பதிகம் அருளிச் செய்துள்ளார். அப்பதிகத்தில் கடையூழிக் காலத்தில் ஒருவனாக நின்றது முன்னோ அல்லது பின்னோ? திருவாரூரைத் திருக்கோயிலாகக் கொண்டு எழுந்தருளியது முன்னோ அல்லது பின்னோ? மாதொருபாகன் ஆனது முன்னோ அல்லது பின்னோ? என்று வினா - விடையாகப் பாடியுள்ளார். சுத்தரமூர்த்தி நாயனாருடைய வாழ்க்கை வரலாறு திருவாரூரை மையமாகக் கொண்டே இயங்கியது. திருவாரூர் வீதிகள் பரவை நாச்சியாரிடம் தூது சென்ற சிவபெருமானின் திருவடிப் போதுகள் தோய்ந்த பெருமை யுடையவை. திருவாரூர் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பெற்ற திருத்தலம். அறுபத்து மூவரில் திருவாரூரை இடமாகக் கொண்டவர்கள் பலர்.

திருவாரூர் பசுவின் கன்றுக்காகத் தன் மகன் மீது தேரூரச் செய்து நீதி வழங்கிய மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர். திருவாரூர் தண்டியடிகள், நமிநந்தியடிகள், விறன் மிண்டநாயனார், செருத்துணை நாயனார், சுழற்சிங்க நாயனார் இருந்து இன்ப அன்பு நிலை பொருந்தி இருந்த ஊர். நமிநந்தியடிகள் வரலாற்றினால்தான் இறைவன் “திருவாரூப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று சுந்தரரைச் சொல்ல வைத்தார். உயர் சைவ நெறியுடன் “தாழ்வெனும் தன்மையை” உலகிற்கு - நம்பியாரூரர் மூலம் உணர்த்திய பெருமை திருவாரூருக்கே உண்டு. சேக்கிழார் இயற்றியருளிய பெரிரயபுராணத்திற்கு முதல் நூலாகிய திருத்தொண்டத் தொகையை நம்பியாரூரர் திருவாரூரில் தான் பாடியருளினார். திருவாரூரின் பங்குனித் திருவிழா, திருமுறைகளின் சிறப்பாக இடம் பெற்ற திருவிழா! இங்ஙனம் பல்வேறு சிறப்புக்களையுடையது திருவாரூர்.

திருவாரூரிடையே திரு ஆரூர் அறநெறி என்று ஒரு சந்நிதி. திரு ஆரூர் மூலத்தானத் திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்திலேயே திரு ஆரூர் அறநெறி இருக்கிறது. இந்தச் சந்நிதியில்தான் புகழ்மிக்க நமிநந்தி அடிகள் நீரினால் திருவிளக்கேற்றினார். மேலும் பரவையுண் மண்டளி என்ற திருக்கோயிலும் இங்கு இருக்கிறது.

திருவாரூர்த் தேர் அழகானது. திருவாரூர்த் தேரோட்டம் புகழ்பெற்றது. திருவாரூர்த் திருக்குளம் 18 ஏக்கர் - 22367 ச.அடி பரப்பளவுடைய மிகப் பெரிய திருக்குளம். திருக்குளத்தின் பெயர் கமலாலயம். இத்திருக்குளம் வற்றியதே இல்லை என்பர்.

கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கு முன்பு, திருவாரூரில் தண்டியடிகள் என்று ஒரு நாயனார் வாழ்ந்தார். இவர் பிறவியிலேயே கண்களை இழந்தவர். இவர் காலத்தில் திருவாரூர்த் திருக்கோயில் திருக்குளமாகிய கமலாலயம், சமூக நாகரிகம் தெரியாதவர்களால், திருக்குளத்தின் பயன்பாடு அறியாதவர்களால் குப்பைகள் கொட்டப்பட்டுத் தூர்ந்து போயிற்று என்ற செய்தி தண்டியடிகள் கவனத்திற்கு வந்தது. உடனே தண்டியடிகள் கவலைக்குரியவராகித் திருக்குளத் தூர் எடுக்க ஒரு மனப்பட்டார். கமலாலயத்திற்கு வந்தார். துரர் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு கம்பை நட்டார். கரையில் ஒரு கம்பை நட்டார்; அந்த இரண்டு கம்புகளுக்கிடையே ஒரு கயிற்றைக் கட்டினார். பின் அந்தக் கயிற்றின் துணை கொண்டு, கமலாலயத் திருக்குளத்துத் தூர்வையை அள்ளிக் கரையின் கொட்டினார். தண்டியடிகளின் உறுதிப்பாடான ஓயா உழைப்பை இறைவன் கண்டு உவந்து, சோழ அரசினிடம் தண்டியடிகள் கருத்தையறிந்து முடித்து வைக்கும்படி அருளிச் செய்தார். கமலாலயம் தூர்வையெடுத்துத் தூய்மை செய்யப் பெற்றது.

இன்று தமிழ்நாட்டில் பல திருக்குளங்கள் தூர்ந்து போய் உள்ளன; அல்லது தூய்மைக் கேடு அடைந்துள்ளன. திருக்குளங்களுக்குத் தண்ணீர் வரும் வரத்துக் கால்கள் தூர்ந்து போய் உள்ளன. பல இடங்களில் வரத்துக் கால்கள்-போக்கு வாய்க்கால்கள் தூர்ந்து போய் உள்ளன; ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளன. பொது நலத்தைக் கெடுத்து வாழும் மனோநிலை தமிழரைப் பற்றியது, அண்மைக் காலத்திலேயேயாம். இதனால், சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன; திருக்குளங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இது வருந்தத் தக்கது.

மயிலை, கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளத்தில் தண்ணீரே இல்லை. இத்தனைக்கும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தண்ணீர் கொண்டுவந்து நிரப்ப முயற்சி செய்தார். அதற்கும் எதிர்ப்பு வந்தது. தமிழ்நாட்டின் பல திருக்கோயில் திருக்குளங்களுக்கும் இதே நிலைதான். குறிப்பாக மதுரை மீனாட்சி யம்மன் திருக்கோயில் பொற்றாமரைக் குளம் வறண்டு கிடக்கின்றது. கமலாலயத்திற்கு வரும் தண்ணிருடன் வீடுகளின் கழிவு நீர் கலக்கிறது. கமலாலயமே தூய்மையாகப் பேணப்பெறவில்லை. பொதுச் சுகாதார உணர்வு நமது மக்களுக்கு என்று வருமோ?

இந்த அவலநிலையை நீக்க ஏன் தண்டியடிகள் நாயனார் அடிச்சுவட்டில் திருக்குளப் பணி செய்யக்கூடாது? இந்த அடிப்படையில் புராண வரலாற்றுக்குப் புத்துயிர்ப்புத் தரலாம் என்பது எண்ணம். எதிர்வரும் 21-3-93ல் தண்டியடிகள் நாயனார் திருநாள் வருகிறது. ஆயத்தமாகுங்கள்! அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில் திருக்குளங்களைத் தூய்மை செய்வோம்! திருக்குளங்களுக்குத் தண்ணீர்வரும் வரத்துக்கால்களை ஆழப்படுத்துவோம்! கரை எடுத்துக் கட்டுவோம்! துய்மை செய்வோம்! திருக்குளங்களைத் துய்மை செய்வோம்!

இந்தப் பணியைச் செய்வதன் மூலம் திருக்கோயில் உள்ள ஊரில் சுற்றுப்புறச்சூழல் காப்பாற்றப்பெறும். குறிப்பாகக் காற்றில் ஈரத்தன்மை இருக்கும்; நிலத்தடி நீர் பரமாரிக்கப்பெறும். நல்ல பணி! தவறாமல் செய்வேண்டிய பணி.

அனைவரும் பங்கேற்க வேண்டும்!